எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 3
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக்கின் பதிவு: ஹிட்லரின்
வெறியாட்டத்திற்கு பின்னால் சொல்லப்படாத இரகசியங்கள்.
முதலில் நாம் சில அடிப்படை புரிதல்களை விளங்கிக்
கொள்ள வேண்டும். மதநம்பிக்கை என்பது எந்த பரிசீலனைக்கும் உட்படாமல் அதுவே சரி என்றும்,
எக்காலத்திலும், எந்த விதத்திலும், அதில் எவ்வித மாறுதலுக்கும் இடமில்லை என்று உறுதியாக
நம்புவது. ஆனால் அறிவியல் இவ்வாறல்ல, அதற்கு சான்றுகள் மட்டுமே முக்கியம். முதலில்
செய்யப்பட்ட முடிவுக்கு மாற்றமாக நிகழ்காலத்தில் சான்றுகள் கிடைத்தால் தயக்கமே இல்லாமல்
முந்திய முடிவிலிருந்து புதிய முடிவுக்கு அறிவியல் மாறிக் கொள்ளும். இது முரண்பாடல்ல,
அறிவியலின் வளர்ச்சி. இயங்கியல் அடிப்படையில் சொன்னால் முரண்பாடு இல்லாமல் வளர்ச்சி
இல்லை. தொடக்க அறிவியல் பூமி தட்டை என்று சொன்னது, பின்னர் பூமி உருண்டை என்றும், அதன்
பின்னர் துருவங்களில் சற்றே தட்டையான உருண்டை என்றும் அந்த முடிவுகள் மாற்றப்பட்டது.
இதை முரண்பாடு என்று கொள்வதும், அறிவியல் தவறு என்று கொள்வதும் பிழையானவைகள், புரிதலற்றவைகள்.
ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் மதத்தை அதன் வேதங்களை எப்படி நம்புகிறார்களோ,
அந்தப்படியே நாமும் அறிவியலை நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். அறிவியல் முடிவுகள்
மாறும் இயல்புடையவை. ஆனால் அந்த மாறுதல்களுக்கும் சான்றுகள், ஆதாரங்கள் வேண்டும்.
இந்த அடிப்படையில் பரிணாமவியலைப் பார்த்தால், டார்வின்
பரிணாமவியலுக்கு பருண்மையான தொடக்கத்தைக் கொடுத்தார். அதிலிருந்து பலரின் பங்களிப்புகளோடு
அது தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. பரிணாமவியல் டார்வினிலிருந்து தொடங்கவும்
இல்லை, டார்வினோடு முற்றுப் பெறவும் இல்லை. பருண்மையான தொடக்கம் என்பதன் பொருள் அவருக்கு
முனே சிலர் பரிணாமவியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தாலும், டார்வின்
ஒரு கோட்பாடாக முன்வைக்கும் அளவுக்கு ஆய்வுகளைச் செய்ததும் முடிவுகளைக் கண்டடைந்ததும்
ஆகும். மட்டுமல்லாது, அவரின் ஒவ்வொரு முடிவுகளும் எந்த மாறுதல்களுக்கும் இடமில்லாத
அறுதிகளும் அல்ல. ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் தங்களின் தூதர்களை எப்படி
நம்புகிறார்களோ, அந்தப்படியே நாமும் நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். டார்வின்
கடவுளோ தூதரோ அல்லர். அவர் ஓர் அறிவியலாளர் மட்டுமே. அவரின் அறிவியல் முடிவுகள் கிடைக்கும்
சான்றுகளின் அடிப்படையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தேறுபவைகள்
நிற்கும் அல்லாதவைகள் தள்ளப்படும்.
இந்த அடிப்படையை விலக்கி விட்டு, அறிவியலுக்கு முரணான
பார்வையில் அறிவியலை அணுகினால் அது நேர்மையற்றதாக இருக்கும் அல்லது மதவாதமாக இருக்கும்.
எதிர்க்குரல் எழுப்பும் நண்பர் ஆஷிக்கின் குரலும் மதவாதக் குரல் தான். ஆனால் சற்றே
அறிவியல் முலாம் பூசப்பட்டிருக்கிறது.
தான் வாழ்ந்த காலத்திலும் அதன் பின்னர் பல நூற்றாண்டுகள்
வரையிலும் மாபெரும் அறிஞராக அறிவியலாளராக மதிக்கப்பட்டவர் அரிஸ்டாட்டில். ஏன் இப்போதும்
கூட அவருக்கு அந்த மரியாதை உண்டு. அவர் தன்னுடைய ஆய்வின் விளைவாக புவியை மையமாகக் கொண்டே
ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கண்டுபிடிப்பை வெளியிட்டார். இந்தக் கண்டுபிடிப்பு
15ம் நூற்றாண்டின் கோபர்நிகஸ் காலம் வரை செல்வாக்குடன் இருந்தது.
சில பத்தாண்டுகளுக்கு முன் தன் சொந்த குடும்பத்தினர் 16 பேரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்றான் ஜெயப்பிரகாஷ் என்பவன். அவன் பிடிபட்டபோது அதற்கு அவன் கூறிய காரணம் நூறாவது நாள் படம் பார்த்தது தான் என்பது.
இந்த இரண்டையும் நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்? எனக்கு தெரியாது. ஆனால், இந்த இரண்டையும் ஒன்றிணைத்தால் அது நண்பர் எதிர்க்குரல் ஆஷிக்கின் பதிவை ஒத்திருக்கும் என்பது மட்டும் உறுதி. இனி கட்டுரைக்குத் திரும்புவோம்.
அவர் கட்டுரையின் தொடக்கமே அதிரடியாய் இருக்கிறது.
டார்வினின் பரிணாமக் கொள்கை தான் இனவெறிக்கு வித்திட்டது என்கிறார். இனவெறிக்கும் பரிணாமக்
கொள்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் பரிணாமக் கொள்கையைக் கூறி ஹிட்லர் தன்னை நியாய்ப்படுத்திக்
கொள்ள முயன்றார். 16 பேரைக் கொன்ற ஜெயப்பிரகாஷ் போல. ஒரு மனித இனத்தை விட இன்னொரு மனித
இனம் மேம்பட்டது என்பதை பரிணாமத்தை ஏற்பவர்கள் நம்ப(!) வேண்டும் என்று கட்டளையிடுகிறார்.
அறிவியலை நம்புபவர்கள், அரிஸ்டாட்டிலை மதிப்பவர்கள் இன்றும் புவி தான் மையம் என்று
தான் கூற வேண்டும் என்று பாடம் எடுக்கிறார்.
முதலாளித்துவம் வளர்ந்த பிறகு தான் தேசிய இனம் எனும்
கொள்கையும், அதனடிப்படையில் இனவெறியும் தோன்றின. நிலப்பிரபுத்துவ காலங்களிலெல்லாம்
இனப்பாகுபாடு பெரிய அளவில் இல்லை. அந்த காலகட்டங்களில் உலகமெங்கும் இருந்த அரசுகளை
மக்கள் இனம் எனும் அடிப்படையில் எந்த மன்னனையும் எதிர்க்கவோ ஆதரிக்கவோ செய்ததாக வரலாறு
இல்லை. அரேபிய முகம்மதின் தோன்றல்கள் துருக்கியை ஆண்டபோது இன அடிப்படையில் எந்த எதிர்ப்பும்
தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஐரோப்பிய இனம், ஆப்பிரிக்க இனம், மங்கோலிய இனம் என்பதெல்லாம்
தோற்றவேறுபாடுகளைக் கொண்டு அறிதலுக்காக பிரிக்கப்பட்ட அறிவியல் பகுப்புகள். இது நண்பர்
ஆஷிக் கூறும் இனத்தில் சேராது. ஆனால் இன மேம்பாடு குறித்து விதந்தோத நண்பர் எடுத்துக்
கொண்ட ஹிட்லர் கொன்றழித்த கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஹிட்லரின் இனமான அதே ஐரோப்பிய
இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது நண்பருக்கு ஏன் மறந்து போனது? பரிணாமக் கொள்கையால் உந்தப்பட்டு
ஹிட்லர் இனவெறி கொண்டிருந்தால் ஆப்பிரிக்க கருப்பர்களை அல்லவா அவர் கொன்றழித்திருக்க
வேண்டும். தன் சொந்த ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களான ஜெர்மன் கம்யூனிஸ்டுகளையும்,
ஜெர்மன் யூதர்களையும் ஏன் ஹிட்லர் கொன்றழித்தார்? ஹிட்லர் கூறிய தூய ஆரியவாதம் என்பது
ஜெர்மானிய உயர்வெண்ணத்திலிருந்து தோன்றியது. கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஜெர்மானியர்கள்
அல்லர், ஜெர்மனின் உயர்வுக்கு எதிரானவர்கள் என்று காரணம் காட்டியே அழிக்கப்பட்டனர்.
இது தேசியவாதமா? பரிணாமவாதமா? நண்பர் ஆஷிக் பதில் கூறுவாரா? ஆக ஹிட்லரின் இனவெறிக்கும்
பரிணாமத்துக்கும் எந்தவித ஒட்டும் இல்லை. ஜெயப்பிரகாஷ் சொல்லிவிட்டான் என்பதற்காக கதை
எழுதிய மணிவண்ணனை குற்றம் சொல்வது எந்த விதத்தில் சரி நண்பரே?
ஹிட்லரையும் டார்வினையும் பசை போட்டு ஒட்டுவதற்கு
நண்பர் ஆஷிக் பயன்படுத்தியவை என்ன? The Preservation of Favoured Races in the
Struggle for Life எனும் டார்வின் நூலின் தலைப்பு. Struggle for Survival அல்லது
survival of fitness. இவைகளைத் தவிர ஏனையவை எல்லாம் நண்பர் ஆஷிக்கின் சொந்த கற்பனைகள்
அல்லது மண்டபத்தில் யாரோ ஏற்கனவே எழுதியிருந்ததன் மொழிபெயர்ப்பு திரித்தல்கள். இவைகளைக்
கொண்டு அவர் கூறுவது என்ன? “வாழ்க்கைப் போராட்டத்தில் முன்னேறிய இனங்களின் பாதுகாப்பு”
இந்த சொற்றொடரில் இனவெறியைப் பிழிந்தெடுக்க முடியுமா? அல்லது, தகுதியுடயவை நீடிக்கும்
என்பதில் இனவெறி கருக் கொண்டிருக்கிறதா?
முதலில் டார்வின் பயன்படுத்திய இனம் எனும் சொல்லின்
பொருளும், நண்பர் ஆஷிக் பயன்படுத்தியிருக்கும் இனம் எனும் சொல்லின் பொருளும் வேறு வேறானது.
டார்வின் பயன்படுத்தியது காக்கோசிய இனம், நீக்ராய்டு இனம், மங்கலாய்டு இனம் எனும் அறிவியல்
சார்ந்த அதாவது தோற்றப்பாகுபாட்டில் மனிதனைப் பிரிக்கும் இனங்கள். அந்த அடிப்படையில்
காக்கோசிய (ஐரோப்பிய) இனம் நீக்ராய்டு (ஆப்பிரிக்க) இனத்தைவிட காலத்தால் பிற்பட்டது,
புதிய பரிணமிப்பு. அதாவது நீக்ரய்டுகளை விட துருவப்பனியின் தாக்கத்தால் தோற்றத்தில்
மாற்றம் பெற்று புதிய தகவமைப்புகளுடன் கூடியவன் காக்கோசிய மனிதன். ஆனால் நீக்ராய்டைவிட
முன்னேறியவனா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதே பதில். ஏனென்றால் அறிவியல் கூறும் இனம்
என்பது, டார்வின் கூறும் இனம் என்பது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. அறிவை அடிப்படையாகக்
கொண்டதல்ல. இந்த வேறுபாடு நண்பருக்கு தற்செயலாக தெரியாமல் போனதா? அல்லது தான் எழுத
நினைப்பதை எழுதுவதற்கு தெரியாததாய் காட்டிக் கொள்வதுதான் வசதி என்று கருதினாரா?
தகுதியுடையவை நீடிக்கும் என்பதின் பொருள் என்ன? இந்த
சொற்றொடர் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. மதவாதிகளின் திரித்தலுக்கும் ஏதுவாக
இருக்கிறது. பரிணாமத்தை மறுப்பதற்கு தமிழகத்தின் மெகாஸ்டார் மதவாத அறிஞர் ஒருவர் ஒரு
கேள்வியை எழுப்பினார். பலமானவை வாழும் என்பது தானே டார்வின் கோட்பாடு, புலியை விட ஆடு
பலவீனமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அரசு தேசிய விலங்காக அறிவித்து பாதுகாப்பை
வழங்கிக் கொண்டிருந்தும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஆனால் மனிதன்
சகட்டுமேனிக்கு ஆடுகளை கொன்று தின்று கொண்டிருக்கிறான். ஆனால் ஆடுகளின் எண்ணிக்கை கூடிக்
கொண்டே போகிறது. டார்வின் கொள்கை பொய் என்பதற்கு இது கண்முன்னே இருக்கும் ஆதாரம், என்று
புளகமடைய வைக்கிறார் அந்த அறிஞர்(!). இது சரியா? வாழ்க்கைப் போராட்டத்தில் நீடித்து
உலகில் நிற்பதற்கு தகுதி வேண்டும். பூமியில் தோன்றி தொன்னூறு விழுக்காடு உயிரினங்கள்
அழிந்து போயிருக்கின்றன. அவற்றுள் மிகப்பலமானதாக கருதப்படும் டினோசர்களும் அடக்கம்.
தோராயமாக மூன்றுகோடி ஆண்டுகள் பூமியை ஆக்கிரமித்திருந்த டினோசர்களுக்கு இல்லாத தகுதி
தற்போது ஆடுகளுக்கு இருக்கிறதா? ஆம். நீடிக்கும் தகுதி என்பது தன் சொந்த வலிமையினாலோ
புற வலிமைகளினாலோ தன்னை காத்துக் கொண்டு இனப்பெருக்கம் மூலம் தன் இனத்தையும் காத்துக்
கொள்வது. ஆடுகளை மனிதன் உணவாகக் கொள்வதால் மனிதர்களால் ஆடு பாதுகாக்கப்படுகிறது. அதுபோல
புலிகளை வேட்டையாடுவது கௌரவம் என்று கருதப்பட்டதால் நிலப்பிரபுத்துவ கால குறு மன்னர்களால்
அதிகமதிகம் கொன்று தீர்க்கப்பட்டன. இன்று இந்தியப் புலிகள் அரசின் பாதுகாப்பில் தங்களின்
தகுதியை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பலவீனமான ஆடுகள் பெருகுகின்றன என்பதோடு வரையாடுகளையும்
ஒப்பு நோக்க வேண்டும். வெள்ளாடும் செம்மரியும் மட்டும் தான் ஆடுகளா? இந்த ஆடுகள் மட்டும்
தான் எண்ணிக்கையில் பெருகுகின்றன. ஆனால் வரையாடுகள். அதை மனிதன் உணவாக கொள்வதில்லை.
தமிழக அரசின் பாதுகாப்பில் இருந்தாலும் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. வரையாடுகளும்
பலவீனமானவை தானே அவை ஏன் எண்ணிக்கையில் கூடவில்லை?
மதவாதிகளுக்கு எப்போதுமே உண்மை தேவையில்லை. தங்களின்
மூட நம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்க உண்மை போன்ற திரித்தல்களே தேவை. இவைகளை ஏன்
கூறிகிறேன் என்றால், நண்பர் ஆஷிக் கூறும் டார்வின் குறைந்த இனம் எனக் கூறிய ஆப்பிரிக்க
மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். அப்படி என்றால் பரிணாமம் தவறு
தானே. எனும் கருத்தும் அந்த வகைப்பட்டதே என்பதற்காகத்தான். தாழ்ந்த இனம் என்றதும் அறிவில்
குறைபாடானவர்கள், கற்றுக் கொள்ளும் பண்பில் குறைபாடானவர்கள் என்று கற்பிதம் செய்து
கொண்டு டார்வின் நபி பொருத்தமில்லாதவற்றை கூறிவிட்டார். எனவே, அவர் ஏக இறைவனான அல்லாவின்
தூதர் அல்ல என்று கூறினால் சிரிக்க மட்டும் தான் முடியும். கவனிக்கவும், பரிணாமம் எப்போதோ
டார்வினைக் கடந்து விட்டது.
இன்றைக்கு இருக்கும் மனித இனமான க்ரோமாக்னன், அதற்கு
முந்திய நியாண்டர்தால் உட்பட 20க்கும் மேற்பட்ட மனித இனங்கள் பூமியில் வாழ்ந்திருக்கின்றன.
அந்த இனங்களெல்லாம் எப்படி அழிந்தன? க்ரோமாக்னன் இனத்திலேயே ஆஸ்திரேலிய, நியூசிலாந்து
பழங்குடிகள் முற்றாக எப்படி துடைக்கப்பட்டார்கள் என்பது நாம் வாழும் காலத்தில் இருக்கும்
இரத்த வரலாறு. அமெரிக்க செவ்விந்தியர்கள், லத்தின் அமெரிக்க மயன்கள் எப்படி கொன்றழிக்கப்பட்டார்கள்.
ஏன் இன்றும் தமிழகத்தின் கோண்டுகள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. இவைகளுக்கெல்லாம்
என்ன காரணம்? முதலாளித்துவ இனவெறியா? டார்வினின் இனம் குறித்த ஆய்வுகளா? நண்பர் ஆஷிக்
தேடல் கொண்டவராக இருந்தால் வரலாறுகளில் பார்வையை பதிக்கட்டும் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன.
தங்களைப் போன்ற தொழில்நுட்ப அறிவை இன்னும் பெற்றிருக்கவில்லை எனும் ஒற்றை காரணத்தின்
மேல் நின்று ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் எவ்வளவு மக்களை எவ்வளவு இனங்களை சூரையாடியிருக்கின்றன
என்பது புரியவரும்.
ஒரு ஹிட்லரோடு ஏன் நண்பர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று அமெரிக்கா ஒருபக்கம் இஸ்லாமிய மதவெறிக்கு தூபம் போட்டும் மறுபக்கம் முஸ்லீம்களை
பயங்கரவாதிகளாக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி பலனடைவது கூட டார்வின் கூற்றிலிருந்து
கிளைத்தது தான் என்று கூட நண்பர் கட்டுரை தீட்டிக் கொள்ளலாம். ஆனால் அவைகளில் உண்மை
இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையா?
நண்பர் ஆஷிக்கின் இந்த கட்டுரை முழுவதுக்குமான அடிப்படை
சர் ஆர்தர் கீத் என்பவரின் ஒரு மேற்கோளிலிருந்து தான் கிளைத்திருக்கிறது. அதாவது ஹிட்லர்
பரிணாமக் கொள்கையை ஆதரித்ததால் தான் யூத இனப்படுகொலைகளைச் செய்தார் என்று ஹிட்லரின்
செயல்பாடு குறித்து கீத் கூறுவதாக இருக்கிறது அந்த மேற்கோள். பரிணாமவியலின் தன்மைகள்
குறித்து ஆராயும் போது தனிப்பட்ட சிலரின் கருத்துகளோ செயல்களோ எந்த அளவுக்கு முக்கியப்படும்?
ஹிட்லரின் கொலைக்களத்துக்கும் பரிணாமவியலுக்கும் தொடர்பில்லை என்று மேலே விளக்கப்பட்டிருக்கிறது.
நண்பர் ஆஷிக் ஆழமாக இதை விளக்க முன்வரும்போது மேலும் ஆழமாக நாம் மறுக்கலாம். இப்போதைக்கு
அதே ஆர்தர் கீத் என்பவரின் அதே “evolution and ethics” நூலிலிருந்து ஒரு மேற்கோள் மட்டும்
போதும் எனக் கருதுகிறேன். ஹிட்லர் ஒருபோதும் பரிணாமக் கொள்கையை நிரூபிப்பதற்காக தான்
யூதக் கொலைகளை செய்வதாக கூறிக் கொண்டதில்லை. மாறாக, கடவுள் தனக்கு இட்ட பனியை தான்
செய்வதாகத் தான் கூறியிருக்கிறார். அந்த நூலின் மூன்றாவது அத்தியாயமான The
Behavior of Germany Considered from an Evolutionary Point of View in 1942 என்பதில்
இப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது, “to discuss the question of why Providence
created different races, but rather to recognize that it punishes those who
disregard its work of creation” அதாவது, “படைப்பு, தன்னை அவமதிப்பவர்களை தண்டிப்பது,
கடவுள் ஏன் வெவ்வேறு இனங்களைப் படைக்க வேண்டுமென்ற கேள்வியை விவாதிக்கும் பொழுது ஓரளவிற்கு
புரிந்து கொள்ளலாம்” இதற்கு நண்பர் ஆஷிக் என்ன பதில் கூற முற்படுவார் என்பதைக் காண
ஆவலாக உள்ளேன்.
இதுபோன்ற பரிணாமத்திற்கு எதிரான தொடர் கட்டுரைகளை
நண்பர் எழுதுவதன் நோக்கம் பரிணாமக் கொள்கை தவறு படைப்புக் கொள்கையே சரி என்பது தான்.
இதை அக்கட்டுரைகளை முடிக்கும் முத்தாய்ப்புகளில் காணலாம். ஆனாலும் எப்படி சரி என்பதை
மட்டும் நண்பர் ஆஷிக் உட்பட எந்த மதவாதியும் கூறுவதே இல்லை. எனவே இந்தக் கட்டுரைக்கும்
இனி வரப்போகும் கட்டுரைக்குமான ஆதாரக் கேள்வி இது தான். பரிணாமத்தை நுணுகுங்கள் தப்பில்லை.
அதில் தவறுகளும் உண்டு, எந்த அறிவியலாளரும் இதை மறுக்கப் போவதில்லை. ஆனால் அப்படி நுணுகி
அறிவியலாளர்களால் தவறு என ஒப்புக் கொண்டு ஒதுக்கப்பட்டவைகளுக்கு அலங்காரம் செய்து உங்கள்
மூட நம்பிக்கைகளுக்கு மணம் முடிக்க எண்ணாதீர்கள். பரிணாமக் கொள்கை தவறு என்பதற்கு சிறு
சான்று கிடைத்தாலும் அவைகளை பரிசீலிப்பதற்கு அதை ஏற்கும் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள்.
எனவே, படைப்புக் கொள்கை தான் சரி என்பதற்கான ஆதாரங்களை தாருங்கள். எவ்வளவு அற்ப சான்றாக
இருந்தாலும் அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சரியா தவறா என ஆராய்ந்து பார்க்க
நான் ஆயத்தமாக இருக்கிறேன். இந்த ஆதாரக் கேள்வி இத்தொடரில் இனி வரவிருக்கும் அத்தனை
கட்டுரைகளிலும் தொடரும். பதில் வருமா?
செங்கொடி
4 கருத்துரைகள்:
அருமை தோழரே மூட நம்பிக்கைக்கு எதிரான வாதங்கள் வரவேற்கத்தக்கது ஆனால் மதவாதிகளால் அதை ஜீரணிக்க முடியாமல் வேறு வழியின்றி பரிணாமத்தையும் டார்வினையும் துணைக்கு அழைத்துச் செல்கின்றனர்.மத வியாபாரத்தையும் பார்க்க வேண்டுமல்லவா...????
நல்ல பதிவு,
உண்மைகளைத் திரித்து, மறைத்துதான், தங்களது நம்பிக்கைகளை மதவாதிகள் காப்பாற்ற வேண்டியுள்ளது என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டீர்கள்
மதநம்பிக்கை என்பது எந்த பரிசீலனைக்கும் உட்படாமல் அதுவே சரி என்றும், எக்காலத்திலும், எந்த விதத்திலும், அதில் எவ்வித மாறுதலுக்கும் இடமில்லை என்று உறுதியாக நம்புவது. ஆனால் அறிவியல் இவ்வாறல்ல, அதற்கு சான்றுகள் மட்டுமே முக்கியம். முதலில் செய்யப்பட்ட முடிவுக்கு மாற்றமாக நிகழ்காலத்தில் சான்றுகள் கிடைத்தால் தயக்கமே இல்லாமல் முந்திய முடிவிலிருந்து புதிய முடிவுக்கு அறிவியல் மாறிக் கொள்ளும். இது முரண்பாடல்ல, அறிவியலின் வளர்ச்சி. இயங்கியல் அடிப்படையில் சொன்னால் முரண்பாடு இல்லாமல் வளர்ச்சி இல்லை. தொடக்க அறிவியல் பூமி தட்டை என்று சொன்னது, பின்னர் பூமி உருண்டை என்றும்,
சுவாமி விவேகானந்தர் இக்கருத்தை ஆதரிக்கின்றார். Universal religion and its realisation எனற் கட்டுரையை தாங்கள் வெளியிடலாம்.newageislam என்ற வலைதளம் எனது வேண்டுகோளை ஏற்று வெளியிட்டுள்ளது
மதவாதிகலுக்குஏதுநேர்மை நன்பரே
Post a Comment