Thursday 27 October 2016

’தலாக்’ எனும் மணவிலக்கு!

அண்மையில் நான் சென்ற அனைத்து முஹம்மதியர்களின் இல்லங்களிலும் கண்டது இந்தப் படிவத்தையும், கூடவே,
”ஃபார்ம்ல கையெழுத்து போட்டுக் கொடுத்தாச்சா?” என்ற விசாரிப்புகளைத்தான்!

”எங்கள் வீட்டிலிருக்கும் எந்த பெண்ணுக்கும் இப்படிவத்தில் ஒப்புதலளிக்க விருப்பமில்லை!” என்றேன்.

“கையெழுத்துப் போடவில்லையா?” என்று அதிர்ந்தனர்

“ஆமாம்! அது மட்டுமில்லை படிவத்திற்கு எதிராக குரல்கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர்” என்றேன்.

உண்மை நிலை இதுதான்!

முஹம்மதிய மதநம்பிக்கைகளில் ஊறித் திளைக்கும் எனது இணையருக்கூட ” All India Muslim Personal Law Board” தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் இப்படிவத்தில் கையெழுத்திட விருப்பமில்லை என்பது மட்டுமல்ல; முடியாது என உறுதியாக மறுத்துவிட்டார். அவர் முஹம்மதியக் கல்வியில் ஆலீமா பட்டம் பெற்றவர் என்பதை முன்னமே உங்களிடம் கூறியிருப்பதாக நினைவு!

இப்பொழுது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தலாக் விவகாரத்தைப்பற்றி முஹம்மதிய ஆண்களிடம் பேசும்பொழுதெல்லாம், போர்பிரகடணம் அறிவிக்கப்பட்டதைப் போன்ற பதட்டம் தொற்றிக் கொள்வதையும் காண முடிந்தது. விரல் அசைக்காதவர், அசைக்கின்றவர், ஹதீஸை ஏற்றவர்கள், ஏற்காதவர்கள் என ஏறக்குறைய அனைத்துப் பிரிவுகளும் சிறப்புச் சொற்பொழிவுகள், ஆலோசனைக்கூட்டம் என முஹம்மதிய அமைப்புகள் அலைபாய்கின்றன. (எனக்கும் அழைப்பு வந்ததென்பது வேறு விஷயம்!)

காரணம், மத்தியில் இருப்பது ப.ஜ.க அரசு!

"தலாக்' விவாகரத்து முறையால் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கை பாழாவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அவர்களது உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது முஃமின்களிடைய இன்னும் பதட்டத்தை அதிகரித்துவிட்டது.

ஆளும் மத்திய அரசும், ஊடகங்களும், இந்த “தலாக்” என்ற மணவிலக்கு முறைமட்டுமே முஹம்மதியப் பெண்களைப் பெரும்பாதிபிற்குள்ளாக்குவதைப் போன்று சித்தரிக்கின்றனர். சிலர் ’தலாக்’ முறையை இரத்து செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகளை வைக்கின்றனர். ‘தலாக்’ என்றால் ‘மணவிலக்கு’ ஆர்வக் கோளாறில் மணவிலக்குமுறையையே நிறுத்திவிடுவார்கள் போலிருக்கிறது. இவர்களது அறியாமையைக் கண்டு அழுவதா அல்லது சிரிப்பதா எனப் புரியவில்லை. அவ்வப்பொழுது மதவெறியர்கள் ஒருவருக்கொருவர் மாற்று நம்பிக்கைகளைச் சீண்டுவது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுவதும், பின்னர் ஒன்றுமேயில்லாததைப் போல மறைந்து போவது நமக்கு வாடிக்கையான ஒன்றுதான். அவ்வப்பொழுது ஏதாவது பரபரப்பு இருந்தால்தானே ஒரு திரைக்கதைகூட சுவையுள்ளதாக இருக்கும்? மதவெறிமட்டுமே பின்னணியாக் கொண்ட அரசாங்கத்திற்கு…?

”UCC”எனப்படும் பொது சிவில் சட்டம் தேவையா எனில், எனது பதில், ”ஆம்..! மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் தேவையே…!”

“இப்படியென்று இந்தியாவில் சாத்தியமா?” என்றால்

“கேடுகெட்ட இன்றைய அரசியலமைப்பில் அது சாத்தியமில்லை!”

இத்துடன் இவ்விவகாரத்தை நாம் முடித்துக் கொள்ள முடியும். ஆனால், பெண்களை அடிமைகளாக்கும் குர்ஆனின் சட்டதிட்டங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் முஹம்மதின் முட்டாள்தனங்களையும், மதவாதிகளின் கோரமுகங்களை வெளிப்படுத்துவது இன்று அவசியமாகிறது.
 
இவ்விவகாரத்தைப்பற்றி அனைத்து ஊடகங்களிலும் இன்னும் விவாதிக்கப்படுவதால் பின்னணியைப்பற்றி விரிவாகச் சொல்லத் தேவையில்லையென நினைக்கிறேன். முஹம்மதிய இல்லங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களுக்கான அப்படிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முதல் இரண்டு உறுதிமொழி,
1.   நாம் இஸ்லாமிய ஷரீயத்தின் அனைத்து சட்ட திட்டங்களை குறிப்பாக நிக்காஹ், தலாக், குலா, பஸ்க், மற்றும் வாரிசுரிமை போன்ற அனைத்து சட்டங்களையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம், இதில் எவ்வித மாற்றத்தையும் அல்லது விட்டுக்கொடுப்பதையும் முழுமையாக எதிர்க்கிறோம்
2.   நம் இந்திய நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் தம் மதத்தின் பிரகாரம் செயல்படுத்த முழுமையான சுதந்திரம் இந்திய சாசனத்தில் இடம் இருக்கிறது, ஆகையால் நாம் எந்த விதத்திலும் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
இதற்குள், நிக்காஹ் மற்றும் வாரிசுரிமையை எதற்காக நுழைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை; வரும்முன் காப்போம் திட்டமா? அல்லது முஹம்மதியப் பெண்மணிகளின் ஏமாற்றுவதற்காகவா?மணவிலக்கு பற்றி முஹம்மதியம் என்ன கூறுகிறது?
தலாக் பொதுவிவாதத்தில் இருக்கிறது! அதைக் கவனிப்பதற்கு முன்னால்,  
முஹம்மதியர்களிடையே இருக்கும் குலா, ஃபஸ்க் மற்றும்  ஈலாஉ, ளிஹார் என்று  வேறு சில வழக்குகளைப்பற்றி சுருக்கமாக கவிப்போம்.

குலா என்றால் என்ன?
’குலா’ அல்லது ’குல்உ’ என்பது கணவன் மனைவியைத் தலாக் சொல்வதற்குப் பதிலாக மனைவி தன்னுடைய கணவனை விட்டு பிரிவது பயன்படுத்தக்கூடிய வார்த்தையாகும். இதற்கு தமிழில் கழற்றிவிடுதல் என்று பொருளாகும். குலா செய்யும் போது கணவனை விட்டு பிரிவதற்கு காரணத்தை மனைவி  சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஃபஸ்க் என்றால் என்ன?
ஃபஸ்க் என்பது ஏறக்குறைய குலா’வைப் போன்றதுதான். சுன்னத் ஜமாஅத் காரர்களின் இணையதள விளக்கம்.
பருவமெய்திய அறிவுள்ள மனைவி, கணவன் உடலுறவு கொள்ளும் முன் தவணை வைக்கப்படாத தன்னுடைய மஹ்ரைக் கேட்கும்போது அவன் அதனைக் கொடுக்க இயலாதவனாக இருந்தால் அல்லது குடியிருக்க வீடு அல்லது உடையில் தாழ்ந்ததையாவது அல்லது உணவு கொடுக்க இயலாதவனாக இருந்தால் அவனுடைய நிகாஹை ஃபஸ்கு செய்வது கூடும். (தடித்த எழுத்துக்களில் அடிக்கோடிட்ட வார்த்தைகளை கவனத்தில் கொள்ளவும்!)

ளிஹார் என்றால் என்ன?
ளிஹார் என்பது மனைவியை தாய்க்கு ஒப்பிடுவது. இதற்கான விளக்கம் குர்ஆனிலிருந்து,
குர்ஆன் 58:3
'எனவே எவரேனும் தங்கள் மனைவிகளைத் (தம்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், (தம் மனைவியர் அந்தத் தாயைப்போல் மஹ்ரம் ஆகிவிடுவார். பின்னர்) அக்கூற்றிலிருந்து திரும்பி (மீண்டும் மனைவியருடன் சேர்ந்து கொள்ள விரும்பி) னால் அவ்விருவரும் ஒருவரையொருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்துக்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (என்று) இதன்மூலம் நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாக இருக்கிறான்.
என்ன இது..? என்று விழிக்க வேண்டாம். மனைவியை, தாயாருக்கு இணையாக ஒப்பிட்டு விலக்கி வைப்பது இந்தியக் கலாச்சாரத்தில் கிடையாது; புதிதாக இருக்கிறது! அன்றைய அறியாமைக் காலத்து அரேபியர் வழக்கு என்பது முல்லாக்களின் விளக்கம்.

ஈலாஉ  என்றால் என்ன?
ஈலாஉ என்றால் ’சத்தியம் செய்வது’ அதாவது ஒரு குறிப்பிட்ட தவணைவரை உடலுறவு கொள்ளமாட்டேன் என மனைவிடம் சத்தியம் செய்வது.

குர்ஆன் 2:226
தமது மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது. அவர்கள் (சத்தியத்தை) திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
இம்முறைகளெல்லாம் எதற்காக?
மனைவிகளை மிரட்டி அடக்கிவைப்பதற்காக கணவர்களுக்கு குர்ஆன் அனுமதிக்கும் வழிமுறைகள். தலாக்கைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என நீங்கள் நினைப்பது புரிகிறது. எனவே அதைப்பற்றி எனது கருத்துக்களைச் சொல்லுவதற்குமுன் முஹம்மதிய அறிஞர்கள் தரும் விளக்கங்களை கவனிப்போம்!

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி  (இஸ்லாம்கல்வி.காம்)
தலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்துவிடும். அதன் பின் அவர்கள் மீண்டும் சேரவே முடியாது என்ற தப்பான எண்ணம் முஸ்லிம்களில் பலரிடம் உள்ளது. இது தவறான நம்பிக்கையாகும்.

அபூ முஹை (இஸ்லாம்கல்வி.காம்)
இஸ்லாமிய வழக்கில் கணவன் மனைவியை விவாகரத்து செய்வதையே ”தலாக்என்ற வார்த்தை குறிக்கும். தலாக் என்றால் ‘விடுவித்தல் ‘கட்டவிழ்த்து விடுதல்என்பது பொருளாகும். தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று சந்தர்ப்பங்கள் – வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தலாக் கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டம்.
…. முதல் இரண்டு தடவைகள் கூறும் தலாக் பற்றி 2:228, 229 ஆகிய வசனங்களில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருபவன் ”உன்னை தலாக் – விவாகரத்து செய்து விட்டேன்என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும். இதனால் திருமண பந்தம் – ஒப்பந்தம் முற்றாக முறிந்து விடாது. அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.

ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்)
…ஒருவன் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறான். குடும்ப வாழ்வில் பிரச்சனை வந்து இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்போது தன் மனைவியை விவாகரத்து செய்வதற்காக உறுதி எடுத்து விவாகரத்து செய்கிறான். - உன்னை தலாக் விட்டுவிட்டேன் - உன்னை விவாகரத்து செய்து விட்டேன் - என்று எந்த மொழியில் கூறினாலும் உடன் அது விவாகரத்தாகி விடும்.
இப்படி தலாக் விட்டவுடன் திருமண ஒப்பந்தம் முழுவதுமாக முறிந்து விடாது. தலாக் விடப்பட்டப் பெண் இவனுடைய மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை தன் கணவனுக்காக - அவன் தன்னை மீண்டும் அழைத்துக் கொள்வான் - என்ற நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும்..

பீ. ஜைனுல் ஆபிதீன்
…'உன்னை விவாகரத்துச் செய்கிறேன்' என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டுவிடும். இதற்கென எவ்விதச்சடங்குகளும் இல்லை. ஆனால் இவ்வாறு விவாகரத்துச் செய்திட மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன…

குர்ஆன் என்ன சொல்கிறது?
குர்ஆன் 2:227
விவாக ரத்துச் செய்வதில் அவர்கள் உறுதியாக இருந்தால் அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
குர்ஆன் 2:228
விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்.

இந்த காத்திருப்பு காலம் எதற்காக?
அபூ முஹை (இஸ்லாம்கல்வி.காம்)
…முதல் இரண்டு தலாக்கின் நோக்கங்கள்:- 1. கணவன் சமாதானம் ஆகிவிடுவான் எனக் காத்திருப்பது. 2. கர்ப்பம் உண்டாகியிருக்கிறாளா என்பதை உறுதி செய்வது…

ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்)
 இத்தாவின் நோக்கங்கள் இரண்டு.
ஒன்று - கணவன் மீண்டும் அழைப்பான் என்று எதிர்பார்த்திருப்பது. இரண்டு - அவள் கர்ப்பம் தரித்திருக்கிறாளா.. என்று நோக்குவது.

குர்ஆன் 2:228
… அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை…
குர்ஆன் 65:1
நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்!..
இந்த விஷயத்தில் குர்ஆனுக்கு கூச்சமெல்லாம் கிடையாது. நெற்றியடிதான்! கர்பப்பைக்கு  சான்றிதழ் தேவை; அதை உறுதி செய்வதற்கேற்ப மணவிலாக்கு செய்யவேண்டும்  அவ்வளவுதான். குர்ஆன் சொல்வதையெல்லாம் அப்படியே திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்க முல்லாக்கள் எதற்கு? ஆங்காங்கே மானே, தேனே, பொன்மானெ என்று போட்டு ’ஜிகினா’ வேலை காண்பிப்பதற்குத்தானே முல்லாக்கள் இருக்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் சிந்தப்பதே இல்லை!

இவ்வாறு முஹம்மதிய கணவர்கள், தங்களது மனைவியர்களை அறிவுரைகூறி(வேறென்ன…? ஏசிப்பேசி)யும், அடித்தும்,  படுக்கையிலிருந்து விலக்கி வைத்தும் (Q 4:34)   இறுதியாக, செத்து செத்து விளையாடலாம் என்பது போல மணவிலக்கு செய்து விளையாடிக் கொண்டிருக்கலாம். இந்த மூன்று தவணைகளிலும் மனைவி-பெண் என்ற உணர்வற்ற உயிரினம், அனைத்தையும் சகித்துக் கொண்டு கண்ணாளன் வருவான் திரும்ப அழைத்துச் செல்வான் எனக் காத்திருக்க வேண்டும். இத்தகைய மணவிலக்குகளுக்கு மூன்று வாய்ப்புகளை குர்ஆன் அனுமதிக்கிறது. இவ்வாறு திரும்ப அழைத்துக் கொள்ளும் மணவிலக்கு முறையை “ரஜயீ தலாக்” என அழைக்கிறார்கள். அவ்வாறு ரஜயீ தலாக்கிலிருந்து கணவனால் திரும்ப அழைக்கப்படும் பொழுது…

ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்)
…மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை தன் கணவனுக்காக - அவன் தன்னை மீண்டும் அழைத்துக் கொள்வான் - என்ற நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். இந்த காலக் கட்டங்களில் கணவன் மனம் திருந்தி மனைவி தனக்கு வேண்டும் என்பதை உணர்ந்து அவளை அழைத்துக் கொள்ள விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம் அதை மறுக்கும் உரிமை மனைவிக்கு இல்லை. இதை நாம் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவது வசனம் சொல்கிறது.
இந்த விளக்கத்தில் நான், தடித்த எழுத்துக்களில் அடிக்கோடிட்ட இடங்களை கவனியுங்கள். இது அப்பட்டமான பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் வாக்கியங்கள். இது முல்லாக்களின் விளக்கம்தானே குர்ஆன் அப்படிச் சொல்கிறதா? என்று மறுதலிக்க முடியும்! எனவே நாம் குர்ஆனைக் கவனிப்போம். அண்ணன் பீஜே அவர்களின் மொழிபெயர்ப்பிலிருந்து,
குர்ஆன் 2:228
இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அதாவது பெண்களுக்கு கடமைகளும் உரிமைகளும் இருக்கின்றன, இருப்பினும் ஆண், பெண்களைவிட உயர்வான். எனவே அவன் ’தலாக்’ கூறி தள்ளிவைத்தாலும், திரும்ப அழைத்தாலும் அவனுக்கு அடிபணிந்து இருக்க வேண்டும். இதைத்தான் ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்) வழிமொழிகிறார்.

குர்ஆன் அவ்வாறெல்லாம் சொல்லவில்லை: பெண்கள் விரும்பினால் ’குலா’ முறையில் மணவிலக்கு பெறலாம்; இதற்குக் காரணம்கூட சொல்ல வேண்டிய அவசியமில்லையென என் மீது பாயலாம். ’குலா’பற்றி பிறகு சொல்கிறேன்.

இதில், ”இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால்...” என்றுதானே வருகிறது அதாவது கணவன் - மனைவி என்ற இருவர் நல்லிணக்கத்தை விரும்பினால் என்றுதானே பொருள் விளங்க முடியும் இதில் என்ன தவறிருக்கிறது என்று தோன்றலாம். அடுத்துவரும் ”…கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்…”  வாக்கியத்துடன் இணைத்து, சற்று கருத்தூண்றிக் கவனித்தால் மொழிபெயர்ப்பிலுள்ள குழப்பம் புரியும். இதை எளிமையாக்க குர்ஆன் 2:228ற்கு வேறு சில  மொழிபெயர்ப்புகளைப் பார்க்கலாம்.

இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம்
அவர்களின் கணவர்கள் (முன்னிருந்த) உறவைச் சரிப்படுத்திக்கொள்ள விரும்பினால், இத்தவணைக்குள் அவர்களை மீண்டும் மனைவியாக்கிக் கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன; பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல! ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒரு படி உயர்வு உண்டு. இன்னும் அல்லாஹ் (அனைவர்மீதும்) பேராற்றலுடையோனும், நுண்ணறிவுடையோனுமாய் இருக்கின்றான்.

அப்துல் ஹமீது பாகவி
தவிர ("ரஜயி"யான தலாக்குக் கூறப்பட்ட) பெண்களின் கணவர்கள் பின்னும் (சேர்ந்து வாழக்கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள கணவர்கள் மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர்பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவனும், நுண்ணறிவு உடையவனுமாக இருக்கின்றான்.

டாக்டர் முஹம்மது ஜான்
…ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
அதாவது ”பெண்களின் கணவர்கள்” என்று மொழிபெயர்க்க வேண்டிய இடத்தில், அண்ணன் பீஜே அவர்கள் ”இருவரும்” என்று மொழியாக்கம் செய்திருக்கிறார். உண்மையில் இவ்விடத்தில் குர்ஆன் ”arādū –  விரும்பினால்” எனக் குறிப்பிடுகிறது. யார் விரும்பினால்? இந்த குர் ஆன் வசனம் முழுவதுமே ஆணின் அதிகார வரம்பைப்பற்றிப் பேசுகிறது. மேலும் இவ்வாக்கியத்தின் துவக்கத்தில் குறிப்பிடப்படும் ”wabuʿūlatuhunna- அவர்களின் கணவர்கள்” என்ற பதத்துடன் இணைத்துப் பொருளாக்கம் செய்ய வேண்டும். இதைத்தான் அண்ணன் பிஜே அல்லாத மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்திருக்கின்றனர். ஆனால் அண்ணனுக்கும் மற்றவர்களுக்குமுள்ள வேறுபாட்டை கவனிக்க மறுப்பது சரியல்ல! அவர் குர்ஆனின் ஆசிரியருக்கே அரபி கற்றுக் கொடுப்பவர் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட அவ்வசனத்தில் தொடர்ந்து வருபவை முழுக்க முழுக்க பெண்ணடிமைத்தனத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் வாக்கியங்களாகும். இதைத்தான் நமது ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்) அவர்கள் “…கணவன் மனம் திருந்தி மனைவி தனக்கு வேண்டும் என்பதை உணர்ந்து அவளை அழைத்துக் கொள்ள விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம் அதை மறுக்கும் உரிமை மனைவிக்கு இல்லை…” என விளக்கமளிக்கிறார்.

இதை நமது அண்ணன் பீஜே அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? குர்ஆன்  பெண்ணடிமைத்தைப் போதிக்கிறது எனக் கூறிக் எப்படி வியாபாரம் செய்ய முடியும்? இதைப்பற்றி நீங்கள் மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும். குர்ஆனை முழுவதுமாகத் திருத்தம் செய்ய முடியாது; முரட்டுத்தனமாக கூச்சலிடும் வசனங்களில் ஆங்காங்கே அதன் வீரியத்தை குறைத்து மொழியாக்கம் செய்து வியாபாரத்தை விரைவுபடுத்திட நினைக்கிறார். ஒரு மதவியாபாரி என்ற நிலையிலிருந்து சிந்தித்தால் அவர்களது வருத்தமும், வேதனையும் உங்களுக்குப் புரியும். (உங்களது விசும்பல் சப்தத்தை என்னால் உணர முடிகிறது. உணர்ச்சி வசப்பட வேண்டாம். கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள். என்ன… செய்வது…?) அவரது பிரச்சனை அவருக்கு!

 நாம் 'தலாக்' விவாதத்தைத் தொடர்வோம்.
தொடரும்…
தஜ்ஜால்

Wednesday 19 October 2016

அனாதைகளும் பலதார மணமும்!

அண்மையில் ஊடகங்களில் பரப்பரப்பாக விவாதிக்கப்பட்ட செய்திகளில் ஒன்று ’முத்தலாக்’ என்ற முஹம்மதிய விகாரத்து முறை. ஏறக்குறைய அனைத்து தொலைக்காட்சிகளில் முத்தலாக் பற்றிய சர்ச்சைகள் விவாதங்கள் நடைபெற்றது. மிகப் பெரும்பாலும் இது போன்ற விவாத நிகழ்ச்சிகள் சடங்குகள் போலத்தான் இருக்கிறது. காரணம், குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சிகளில் அவர்கள் தரப்பில் தீர்வை அடைவதற்காகவாது இதைப் போன்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை! அதிலும் குறிப்பாக மதநம்பிக்கைகள் விவாதத்திற்குள்ளாகும் பொழுது, ஊடகங்களின் நிலை மிகக் கேவலமாக இருக்கிறது. பரபரப்பை விற்பனை செய்பவர்களிடம் இதற்குமேல் எதிர்பார்க்கக் கூடாது.

முத்தலாக் பற்றிய ஒரு செய்தித் தொலைக்காட்சி விவாதத்தில்(?) பங்கேற்ற ஒரு நபர் முஹம்மதியம், ஆண்களுக்கு அனுமதிக்கும் பலதாரமணத்தின் மீதும் விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால் அங்கு நிலவிய களேபரத்தில் எவரும் அவரது கருத்தைச் சீண்டவில்லை. வழக்கமான சம்பிரதாய போல அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அவரவர் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பளித்து, தங்களது தரப்பிலிருந்து எவ்விதமான கருத்தையும் முன்வைக்காமல் அத்தொலைக்காட்சி தன்னைப் பாதுகாத்துக் கொண்டது. அனைத்து ஊடகத்தின் நிலைப்பாடும் இப்படித்தான் இருக்கிறது. காரணம் நடுநிலையென்பார்கள். (அதென்ன நடுநிலை?) முதுகெலும்பில்லாதனம் என்று சொல்வதைத்  தவிர, எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.

சரி… விஷயத்திற்கு வருகிறேன்…!

அந்த நபர் பலதாரமணம் பற்றி குறிப்பிட்ட பொழுது எனது நினைவில் குர்ஆனின் 4:3 வந்து போனது. பலமுறை பலராலும் விவாதிக்கப்பட்ட அந்த வசனம், அனாதைகளைப் பற்றி பேசத் துவங்கி பலதார திருமணத்தையும், அடிமைப் பெண்களுடனான உறவை ஆதரித்தும் முடியும். முதலில் ஒரு பழைய மொழிபெயர்ப்பைக் மொழிபெயர்ப்பைக் காண்போம். எளிமையான புரிதலுக்காக அடைப்புக் குறிகளுக்குள் இருப்பவற்றை சிவப்பு வண்ணத்தில் தருகிறேன்.

குர்ஆன் 4:3
அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில், உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம். (அவ்வாறு பலரைத் திருமணம் புரிந்தால், அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு) நீங்கள் நீதமாக நடக்க முடியாதெனப் பயந்தால், ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்(அடிமைப்) பெண்ணையே, (திருமணம் செய்து) கொள்ள வேண்டியது. நீங்கள் பேதம் பாராட்டமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.
அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (பதிப்பு 1961)

ஏறக்குறைய மொழிபெயர்ப்பு வாக்கியங்களுக்கு இணையாக அடைப்புக் குறிகளுக்குள் இவர்களது இடைச் சொருகல் இருக்கிறதென்று வருத்தப்பட வேண்டாம். குர்ஆனின் தர்ஜமாவின் அடைப்புக் குறிகளை நீக்குவதற்கென்றே அவதாரம் கொண்டுள்ளதாக அறியப்படும் அண்ணன் பீஜே அவர்களின் மொழிபெயர்ப்பு.

குர்ஆன் 4:3
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்393 உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்!106 (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை107 (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.

இந்தக் குர்ஆன் வசனம் என்ன சொல்கிறது?

அனாதைகளைப் பாராமரிக்கும் ஒரு முஹம்மதிய நம்பிக்கையாளர், தனது பொறுப்பிலிருக்கும் அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளமாட்டாரென தனக்குத் தானே அஞ்சினால், அவர், தனக்குப் பிடித்த வேறு ஒரு பெண்ணை அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களை (நான்கு?) மணந்து கொள்ளலாம் அல்லது அடிமைப் பெண்களுடன் உறவு கொள்வதைப் பரிந்துரைக்கிறது.

தனது நேர்மையை, தனக்குத் தானே சந்தேகிக்குமளவிற்கு தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ளும் நபரால் தொடர்ந்து அந்தத் தவறைச் செய்ய முடியுமா?

நிச்சயமாக முடியாது! அவ்வாறு செய்துவிட்டார் எனில் அவர் அஞ்சி நடுங்கியதாகக் கூறுவதில் உண்மையில்லை.

பெண்கள், அனாதைகளைப் பராமரிக்கலாமா?

பெண் பராமரிப்பாளருக்கான சட்டங்கள் என்ன?

அனாதைகளுக்கும் பலதார மணத்திற்கும் என்னதான் தொடர்பு?

இதனால் அந்த அனாதைகள் பெறும் நீதி என்ன?

இப்படி இன்னும் நிறைய நிறைய கேள்விகள் உருவாகும். இதற்கான பதில் இந்த வசனத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த குர்ஆனிலும் நிச்சயமாகக் கிடையாது. நாம் விமர்சனங்களை முன்வைத்தால், குர்ஆன் மொழிபெயர்ப்பில் குறைபாடு உள்ளது, அரபியை அதாவது அரபு மொழியிலுள்ள குர்ஆனை அப்படியே மொழிபெயர்க்க இயலாது; காரணம் அதன் மொழிநடை இதர மொழிகளால் எட்டிப் பிடிக்க இயலாத உயரத்திலுள்ளது, இதுவே குர்ஆன் இறைவேதமென்பதற்கு சாட்சி என்று சுயசொறிதலில் ஈடுபடுவார்கள்.

ஒரு வாதத்திற்காக, அரபி அல்லாத மற்ற மொழி பேசுபவர்களால் குர்ஆனைப் புரிந்து கொள்ளவே முடியாது என்றே வைத்துக் கொள்வோம். இதன் பொருள், சிறு வயது முதல் தங்களது மரணம் வரை அரபிமொழியையும் முஹம்மதியச் சட்டங்களையும் கற்பதற்கும் கற்பிப்பதற்கு செலவிட்டுக் கொண்டிருக்கும் இதர மொழியைத் தாய்மொழியாக் கொண்ட முஹம்மதிய அறிஞர்களாலும், குர்ஆனை இன்றும் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான்.

தாய் மொழி அல்லது வேறொரு மொழியின் உதவியுடன்தான் இன்னொரு மொழியைக் கற்கமுடியும் என்பது மிக இயல்பான உண்மை. உதாரணத்திற்கு, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஹம்மதிய சிறார்களுக்கு, அரபியை கற்பிக்கையில் ”ஸமா” என்ற அரபி சொல்லுக்கு , தமிழில் “வானம்” என்று எழுதியும்,  வானத்தின் படங்களைக்  காண்பித்தும் கற்பித்துக் கொடுக்கிறார்கள்.

அவ்வாறல்லாமல் நேரடியாக அரபு மொழியைக் கற்க முடியுமா?

முடியாது!

அதற்கு வேறொரு வழியிருக்கிறது.

முஃமின்கள் தங்களது குழந்தைகள் பிறந்தவுடன் அரேபியப் பாலைவனத்தில் வீசியெறிந்துவிடவேண்டும் அல்லது அல்லாஹ்விடம் அழுது புலம்பி துஆ கேட்டு எல்லோரையும் அரபிகளாப்  பிறக்கச் செய்து குர்ஆனைப் புரிந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவை அவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவோம்.

நாம் என்னதான் கூறினாலும் குர்ஆனை அதன் உண்மையான பொருளுக்கு எவராலும் மொழிபெயர்க்க முடியாதென்ற தங்களது வாதத்தை ஒருபொழுதும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.

இவர்களுக்கும் அதாவது நமது முல்லாக்களுக்கு அரபி சரியாகப் புரியவில்லை. ஆனால், அரபியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கும், இன்னும் சரியாகச் சொல்வதென்றால், முஹம்மதின் காலத்தில் வாழ்ந்தவர்களும்கூட புரியவில்லை எனில் என்னவென்று சொல்வது? பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்…

புகாரி 2494
உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும் மூன்றாக, நான்கு நான்காக மண முடித்துக் கொள்ளுங்கள் (4:3) என்னும் இறை வசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்க மளித்தார்கள்:
என் சகோதரி மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கின்ற - அவருடைய செல்வத்தில் கூட்டாக இருக்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளது காப்பாளர் அவளது மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் - அவளை மணமுடித்துக் கொள்ள விரும்புகிறார் என்னும் நிலையிலிருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணமுடித்துக் கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மண முடித்துக் கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. பிறகு, (இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும்) மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் கோருகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்களுடைய விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்ற சட்டங்களையும் நினைவு படுத்துகின்றான். (அதாவது,) எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, மேலும், எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லையோ அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவுபடுத்துகின்றான்) என்னும் (4:127) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
மேலும், இவ்வேதத்தில் (முன் பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்ற சட்டங்களையும்... என்று அல்லாஹ் கூறியிருப்பது, அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால்..... என்னும் (4:3) இறைவசனத்தைக் குறிப்பதாகும். மேலும், 4:127ம் இறைவசனத்தில், மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லையோ என்று கூறியிருப்பது, உங்களில் ஒரு காப்பாளர் தன் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும் போது அவளை விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். (செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும் போது) அந்த(அநாதை)ப் பெண்களை மணமுடித்துக் கொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் நீதியான முறையிலே தவிர மணமுடித்துக் கொள்ளலாகாது என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

ஹதீஸை வாசித்த பின்னர், மற்ற கேள்விகளைவிட, அனாதைகளுக்கும் பலதார மணத்திற்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி இன்னும் வலுப் பெற்றிருக்கும்!

ஹதீஸைத் திரும்பத் திரும்ப வாசித்தாலும் ஒன்றும் விளங்காது. இருப்பினும் இந்த ஹதீஸ் வாயிலாக ஆயிஷா கூற முயற்சிப்பதாக நான் கருதுவது,

தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை மஹ்ர் விஷயத்தில் ஏமாற்றுபவர்களைக் குறித்தே இவ்வசனம் பேசுகிறது.

குர்ஆன் 4:127, அழகும், செல்வமும் இல்லாத அநாதைப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்பாதவர்களைக் குறித்துப் பேசுகிறது.

ஆயிஷா குறிப்படும் குர்ஆன் 4:127 வசனத்தையும் கவனித்துவிடுவோம். அண்ணன் பீஜே அவர்களின் மொழிபெயர்ப்பிலிருந்து…

குர்ஆன் 4:127
பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். "அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்'' எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக்108 கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.129 நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.


இதில், குர்ஆன் 4:127-ற்கு ஆயிஷா விளக்கம் கொடுப்பதைப் போல “…மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லையோ என்று கூறியிருப்பது…” என்ற வாக்கிய அமைப்பு அல்லது அத்தகைய பொருள்படும் வார்த்தைகள் ஏதேனும் இருக்கிறதா?

இப்பொழுது இரண்டு வசனங்களையும் இணைத்து பார்த்தால் என்ன விளங்குகிறது?

முதலில் நாம் முவைத்த கேள்விகளுக்கு ஏதேனும் பதில் இருக்கிறதா?

ஒரு வெங்காயமுமில்லை…!

அனாதைகள் பற்றி செய்தி இன்னுமொரு வசனத்தில் இருக்கிறது. அதையும் பார்த்துவிடுவோம்.

குர்ஆன் 4:6
அனாதைகளைச் சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் கொடுத்து விடுங்கள்! வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகிவிடுவர் எனப் பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அநாதைச் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமாக (பராமரிப்பதற்குரிய கூலி என்ற அடிப்படையில்) சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும் போது அவர்கள் விஷயத்தில் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.

இவ்வசனத்திற்கு விளக்கம்…

புகாரி 2212
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"(அவ்வநாதைகளின் சொத்துக்களுக்குக் காப்பாளராகப் பொறுப்பேற்றவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும்! அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளட்டும்!" என்ற (திருக்குர்ஆன் 04:06) இறை வசனம், அநாதைகளை (நிர்வகித்து, அவர்களின் செல்வத்தை)ப் பராமரிக்கும் காப்பாளர்களின் விஷயத்தில் அருளப்பட்டது. அவர் ஏழையாக இருந்தால் நியாயமான முறையில் (தம் உழைப்பிற்குக் கூலியாக) அனாதைகளின் பொருளை உண்ணலாம்.

அனாதைகளின் உடமைகளை நிர்வகிப்பதை பற்றி இந்த வசனம் சொல்கிறது. ஆனால் குர்ஆன் 4:3-ம் வசனத்திலிருந்து உருவாகும் கேள்விகளுக்கான பதிலோ அல்லது நாம் முன்பு கவனித்த புகாரி 2494-ல் ஆயிஷா கூறும் கருத்திற்கான சான்றுகளோ இல்லை. நாம் இப்படிக் குர்ஆனை முட்டுச் சந்தில் நிற்க வைத்தால், பதிலளிக்கிறோம் பேர்வழியென முஃமின்கள் இணைப்புகளை வாரி வழங்குவார்கள். அவர்களுக்கு அந்த சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. ஆன்லைன் பீஜே-வின் 393-வது குர்ஆன் விளக்கம்.

… … …

அண்ணன் பீஜே அவர்களின் குர்ஆன் விளக்கவுரைகளை வாசித்து விட்டீர்களா?

ஆன்லைன் பீஜேவின் இணைப்பிற்குச் செல்ல முடியாதவர்களுக்காகவும், எத்தனை முறைதான் இதை வாசிப்பது என்று நொந்து போனவர்களுக்காகவும் அண்ணன் பீஜே அவர்கள் கற்பிக்கும் நீதியிலிருந்து… மன்னிக்கவும்! விளக்கத்திலிருந்து சுருக்கமாக…

…பொதுவாக மனிதன் தனது பொறுப்பில் உள்ளவர்களுக்குத் தன்னையும் அறியாமல் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான்.  நாம் தானே இவளைப் பராமரிக்கிறோம் என்ற எண்ணத்தின் காரணமாக இப்படி நடந்து கொள்கிறான். இந்தப் பலவீனத்தைத்தான் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகிறான்…
இரண்டு, மூன்று, நான்கு பெண்களை மணந்து கொள்ள அனுமதியிருக்கும் போது உங்கள் பொறுப்பில் நம்பி ஒப்படைக்கப்பட்ட அனாதைப் பெண்களை ஏன் ஏமாற்றி மணந்து கொள்கிறீர்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது
இது குர்ஆன் 4:03-ற்கு முற்றிலும் தவறான விளக்கம். காரணம் அனாதைப் பெண்களின் விஷயத்தில், மனிதர்கள் தங்களையும் அறியாமல் தவறு செய்வதாகவோ அல்லது உரிய மஹ்ர் கொடுக்கமல் ஏமாற்றித் திருமணம் செய்துகொள்ள முயற்சித்தனர் என்றோ குர்ஆன் கூறவில்லை; மாறாக நீதியுடன் நடந்துகொள்ளத் தவறிவிடுவோமோ என அஞ்சி நடுங்குபவர்களைப்பற்றியே பேசுகிறது.

வாததிற்காக, 'அனாதைகளிடம் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று அஞ்சினால்' என்பது எல்லா வகையான அநியாயத்தையும் உள்ளடக்கிய சொல்லாகும் என்ற அண்ணன் பீஜே அவர்களின் விளக்கத்தை அப்படியே ஏற்றுக் கொள்வோம்.  அவ்வாறு , அனைத்து வகையான நீதிகளிலிருந்தும் தவறிவிடுவோமோ என்று அஞ்சக் கூடிய ஒருவனால் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதை அண்ணன் பீஜே அவர்களும் உணந்திருக்கிறார். அதனால்தான் குர்ஆனின் உளறலைச் சரிகாண விளக்கம் என்ற பெயரில் ”உங்கள் பொறுப்பில் உள்ள அனாதைகளை அவர்களுக்குத் தகுதியான இடங்களில் மணமுடித்துவையுங்கள்!” என்ற தனது கைச்சரக்கையும் உள்ளே நுழைத்திருக்கிறார்.

நீங்கள் வேறு பெண்களை மணந்து கொள்ளுங்கள் என்ற கருத்து இதனுள் அடங்கியுள்ளது. இதை 4:127 வசனத்திலிருந்து அறியலாம்.
குர்ஆன் 4:127 அப்படி ஏதேனும் இருக்கிறதா? நான் கூறுவதில் நம்பிக்கையில்லை எனில், எதற்கும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.

தனது பொறுப்பில் இருப்பதைப் பயன்படுத்தி அவளை வலுக்கட்டாயமாக மணந்து கொள்ளும் அநியாயமும் நடக்க வாய்ப்புள்ளது.

எளிமையான புரிதலுக்காக நாம் முன்பு கவனித்த புகாரி 2494 ஹதீஸில் ஆயிஷா கொடுத்த விளக்கத்தை மீண்டும் இங்கு தருகிறேன்.

“…மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லையோ என்று கூறியிருப்பது…”

இந்த இரண்டு கருத்துக்களும் குறிப்பிட்ட அந்த குர்ஆன் வசனத்தில் இல்லையென்பது மட்டுமல்ல ஆயிஷா மற்றும் அண்ணனின் விளக்கங்கள் ஒன்றிற்கொன்று நேரெதிராது என்பதுதான் வேடிக்கை. தவறு செய்துவிடுவோமோ என்று அஞ்சி நடுங்குவதாக குர்ஆன் கூறிய பின்னரும் வலுக்கட்டாயமாக மணந்து கொள்ளும் அநியாயமும் நடக்க வாய்ப்புள்ளது,  என்ற அண்ணனின் விளக்கங்கள் அர்த்தமற்றது.

மீண்டும் குர்ஆன் 4:3
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு, ஒரு முஃமினின் பொறுப்பில் சில அனாதைகளைப் பெண்கள் இருப்பதாகவும், அந்தப் பெண்களுக்கு உடமையாக சிறிது செல்வம் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். தான் அப்பெண்கள் விஷயத்தில் நீதி தவறிவிடுவோமோ என்று தினமும் அச்சம் கொள்கிறார். அதாவது, புகாரி 2494-ஆயிஷா கூறுவதைப் போல உரிய மஹ்ர் கொடுக்காமல் அனாதைப் பெண்களை திருமணம் செய்து விடுவோமோ என பயந்து நடுங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

என்ன செய்வதென்று புரியாத நிலையில், முல்லாவின் உதவியை நாடுகிறார். முல்லாவும், அவருக்கு (முல்லாவுக்கு பிடித்தமான அல்ல! உதவிதேடி வந்தவருக்குப்) பிடித்த வேறு பெண்களை திருமணம் செய்து கொள்ள குர்ஆனின் வழிகாட்டுதல்படி அறிவுறுத்துகிறார். முஃமினும் ஒவ்வொன்றாக, இரண்டிரண்டாக, மும்மூன்றாக நான்கு நான்காக திருமணம் செய்து, தனது நியாயவிலைக் கடை அட்டையில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறார்.

கேள்வி என்னவென்றால்?

அனாதைப் பெண்களுக்கே மஹ்ர் கொடுக்க தயங்குபவர், அவருக்குப் பிடித்தமான வேறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள, உரிய மஹ்ர் எவ்வாறு கொடுப்பர்?  அவர்களுக்கு மஹ்ர் கொடுக்க வேண்டாமா?

அவர் வேறு பெண்களை உரிய மஹ்ர் கொடுத்தோ அல்லது கொடுக்காமலோ திருமணங்கள் செய்து கொள்வதால் அனாதைப் பெண்கள் பெற்ற நீதி, நேர்மை, நியாயம் என்ன?

அந்த அனாதைப் பெண்களை என்ன செய்வது?

இதற்கான பதில் குர்ஆனில் கிடையாது. அப்படியானால் அநாதைகளுக்கும் பலதாரமணத்திற்கும் என்னதான் தொடர்பு?

அனாதைப் பெண்கள் விஷயத்தில் அநீதி இழைத்துவிடுவோம் என அச்சம் கொள்ளும் முஃமின்களுக்கு மட்டும்தான் பலதார மணத்திற்கான அனுமதி என்று பொருள் விளங்க வாய்ப்பிருக்கிறதா?

”அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்.
என்ற வாக்கியத்தை வாசிக்கும் எவரும் அனாதைகளுக்கும், பலதாரமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதுவது மிக இயல்பான ஒன்று. இது முரண்பாடற்ற ஒரே வாக்கியம் எனில், அனாதைப் பெண்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபடாத மற்ற ஈமான்தாரிகளுக்கு தங்களுக்குப் பிடித்த வேறு பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக திருமணம் செய்து கொள்ள அனுமதியில்லை என்ற முடிவிற்கு மட்டுமே வரமுடியும். ஆனால் அனாதைப் பெண்கள் பெற்ற நீதியென்ன, அவர்களது திருமண விவாரத்தில் குர்ஆனின் நிலைப்பாடு என்னவென்பது தனி விவாதமாகும்.


இந்த விளக்கத்தை முல்லாக்களாலும் முஃமின்களாலும் ஏற்க முடியாது. ஆண்ககளுக்கான பலதாரண திருமண உரிமை மாநாடு, போராட்டம், பேரணி, தொலைக்காட்சிகளில் தொடர் பயான் என்று இப்பொழுதே கிளம்பிவிடுவார்கள்.

அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்…”, என்பதையும் ”உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்.” என்பதையும், அனாதை பெண்களுக்கான நீதியையும் இணைத்துப் பொருள் விளங்க, அன்றைய முல்லாக்களாலும் முடியவில்லை என்பதை புகாரி 2494 நமக்கு தெளிவாக அறிவிக்கின்றது.

இந்த வசனத்திற்குள் பலதாரமணத்தைப்பற்றிய விவாதத்தை நுழைத்தால், அனாதைப் பெண்களின் நிலை பற்றிய குர்ஆனின் நிலைப்பாடு இன்னும் கேலிக்குரியதாகிவிடும்.

ஒரே காலத்தில் நமது முஃமின்கள் அதிக பட்சமாக நான்கு பெண்களுடன் இல்லற வாழ்க்கை நடத்தலாம் என்பது முல்லாக்களின் முடிவு. கவனிக்கவும் குர்ஆனின் முடிவல்ல. நமது கண்மணி நாயகம் முஹம்மது உட்பட அவரது கைத்தடிகளும் அன்றை பாகன் அரபிகளும் எண்ணற்ற பெண்களுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுட்டிருந்தனர். இதைக் கண்டு எரிச்சலுற்ற அல்லாஹ், இவர்களைக் கட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இத்தகைய மனைவி உச்ச வரம்பு சட்டம் பிறப்பித்தான் என்பது முல்லாக்களின் விளக்கம்.

சரி… இதற்கும் அனாதைகளுக்கான நீதிக்கும் என்ன தொடர்பு?

ஒரே வாக்கியத்தில், தெளிவற்ற நிலையில் தொடர்பற்ற இருவேறு செய்திகள். அதனால்தான், எத்தனை விளக்கம் கொடுத்தாலும் இவ்வசனங்கள் திரும்பத் திரும்ப, முட்டுச் சந்தில் போய் சிக்கிக் கொள்கிறது.

அதுமட்டுமல்லாது அன்றைய குர்ஆன் விரிவுரையாளர்கள் கொடுத்திருக்கும் விளக்கங்களில் அனாதைப் பெண்களுக்கு எவ்விதமான நீதியும் காணப்படவில்லை அண்ணன் பீஜே அவர்களும் உணர்ந்திருக்க வேண்டும். எனவேதான் தனது குர்ஆன் விரிவுரையின் 393-வது விளக்கத்திற்கு “அனாதைகளுக்கு நீதியும் பலதாரமணமும்” என்ற தலைப்பைச் சூட்டியிருக்கிறார். குறிப்பிட்ட அவரது விளக்கத்திலும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில், அனாதைப் பெண்களுக்கு எவ்விதமான நீதியையும் கூற முடியவில்லை என்பதை முன்பே கவனித்தோம். உண்மையென்னவெனில் குர்ஆனின் தெளிவற்ற, முழுமையற்றத் தன்மையை மறைக்க, மழுப்ப இவர்களால் இயலவில்லை.

குறிப்பிட்ட அந்த வசனத்தில் இருப்பது ஒன்றிற்கொன்று தொடர்பற்ற இரண்டு செய்திகள் என்ற உண்மையை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் அன்றைய முல்லாக்கள் சப்பைக்கட்டுகளைக் கொடுத்து அடக்கி வாசித்திருக்கின்றனர் என்பது தனிச் செய்தி. (இதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது? என்று முஃமின்கள் அறைக்கூவல் விடுக்கக் கூடும்!).

குர்ஆன் 4:3-ல் கூறப்படும் அநாதைகளுக்கும் பலதாரமணத்திற்கும் என்னதான் தொடர்பு?

அவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நீதி என்ன?

Allah knows the best!

தஜ்ஜால்

பின்குறிப்பு:

முத்தலாக் பற்றி நிறைய வாசித்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள் எனவே அதைப்பற்றி இங்கு எதுவும் கூறவில்லை. பலதாரமணத்தைப்பற்றி இன்னொரு பதிவில் மீண்டும் விரிவாக விவாதிக்கலாம்.