Tuesday 24 March 2015

ஒரு மரணம் சில கேள்விகள் - 9



நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

முஹம்மதின் உடல்நிலை குறித்த செய்தி நகரெங்கும் பரவியது. முஹம்மதின் இல்லத்தைச் சுற்றி மக்கள் குவிந்தனர். அவர்களில் சிலர் அங்கேயே கூடாரம் அமைத்துத் தங்கிவிட்டனர்.  



எல்லோர் மனதிலும் முஹம்மது உடல் நலம் பெற்று திரும்ப வேண்டுமென்ற வேண்டுதல்கள் ஒருபக்கம் இருந்தாலும், அதைவிட மிகப் பெரிய கேள்வி ஒன்று அழுத்திக் கொண்டிருந்தது.  அதை வெளியில் சொல்ல எவருக்கும் துணிவில்லை.

முஹம்மதிற்குப் பிறகு அடுத்த தலைவர் யார்?

அந்தக் கூட்டத்திற்கு நடுவே சில அப்பாவி நம்பிக்கையாளர்களும், எளிய மனிதர்களும் இருந்தனர். அவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் பொருட்படுத்துவதற்கு எவருமில்லை.

அந்தக் கூட்டத்திற்கு சற்றேறகுறைய இறுதியில், ஆங்காங்கே ஒட்டுகள் போடப்பட்ட தடிமானான துணிகளால், சுமார் ஆறடி நீளத்திற்கு ஒரு கழியைக் கொண்டு நடுவில் உயர்த்தி, நான்கு புறமும் சிறிய கழிகளைக் கொண்டு இழுத்துக் கட்டிய ஒரு சிறிய கூடாரம். தரையில் ஈச்சமர ஓலைப் பாய். இப்ன் ஷியா* கைகளை மடக்கி தலைக்குக் கொடுத்தவாறு படுத்திருக்க, அருகில் இப்ன் சுன்னா* நின்று கொண்டிருந்தான். இருவருக்கும் ஏறக்குறைய முப்பது வயதிற்குள் இருக்கலாம்; திடகாத்திரமான உடல்வாகு; இருவரும் முஹம்மதின் படையில் கடைநிலை வீரர்கள் அவர்கள் மனதிலும் இதே கேள்விதான்.  அடுத்த என்ன நிகழப் போகிறதோ என்ற ஆர்வமிகுதியால் மற்றவர்களைப் போல அவர்களும் அமைத்து அங்கேயே தங்கியிருந்தனர்.

“இப்ன் சுன்னா… அல்லாஹ்வின் தூதரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏதும் தெரிகிறதா?” என்றான் இப்ன் ஷியா.

“அல்லாஹ்வின் தூதரை, அலீயும் அப்பாஸும் எப்படி அழைத்து சென்றனர் என்பதைப்பற்றி நீ கேள்விப்படவே இல்லையா?” இது இப்ன் சுன்னா.

“அப்பாஸும் அலீயும் அன்னை ஆயிஷாவின் வீட்டிற்கு அழைத்து சென்றனர் என்பது தெரியும்! மற்ற விபரங்கள் தெரியாது..!”

”இப்படி சுருண்டு படுத்திருந்தால்.. எப்படித் தெரியும்…?”  என்று இப்ன் ஷியாவைக் காலால் உதைத்தவாறு தொடர்ந்தான்.

“ரசூலுல்லாஹ்வினால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியவில்லையாம். அவரது உடல் நிலையில் சொல்லிக்கொள்ளும்படியான பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை”

“தூதர் கடைசியாக, தொழுகைக்கு வரும் பொழுது ஆடையில் ஆங்காங்கே ஈரவட்டங்கள் இருந்ததைக் கவனித்தாயா?” என்று விவகாரமான கேள்வியை எழுப்பினான் இப்ன் ஷியா

“ஆமாம், அதற்கென்ன...?”

“அனைத்து மனைவியர்களிடமும் நீதமாக இருக்கிறேனென்று அவர்களிடமும் வீடுகூடியிருப்பார் இப்பொழுது எழுந்திருக்கக்கூட முடியாமல் படுக்கையில் விழுந்து விட்டார்!”

”... ...!?”

”உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது தாம்பத்திய உறவிலிருந்து அவர் சற்று விலகியிருந்திருக்கலாம்...!”

”உனக்குத் தெரியாது ’நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது' (புகாரி 268) என அனஸ் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்”

இப்ன் ஷியா வாய்விட்டு சிரித்தவாறு,

“முப்பது பேர்களுடைய சக்தி இருந்தால் ஆடைகளில் எதற்காக சிந்தவேண்டும்...?”

“முனாஃபிக்குடன் சேர்ந்து நீயும் அவனைப் போலவே கேலி பேசுகிறாய்!”

“அடுத்த தலைவர் யாராக இருக்கும்...?” என்றான் பேச்சை மாற்றினான் இப்ன் ஷியா.

 “தாவூது நபிக்குப் பிறகு அவரது மகன் ஸுலைமான் நபி ஆட்சிக்கு வந்தார். ஆட்சியாளர்கள் வாரிசுரிமை அடிப்படையில் பதவிக்கு வருவதென்பது அல்லாஹ் கற்பித்த (Q 27:16) வழிமுறை!”

“அப்படி எவருமில்லை இல்லையென்பதுதானே இங்கு குழப்பமே!” என்று கால்களை நன்றாக நீட்டியவாறு படுத்துக் கொண்டான் இப்ன் ஷியா.

“அவரது நெருங்கிய உறவினர்களில் எவராவது தலைமைப் பொறுப்பிற்கு வரலாம் அதுதானே  நடைமுறையில் இருப்பது”

“வாரிசு உரிமை அடிப்படையிலா…?”

“யாரைச் சொல்கிறாய்..?”

“அலீ பின் அபிதாலிப்!” என்றான் இப்ன் சுன்னா

”அலீயா…?” எழுந்து உட்கார்ந்து கொண்டான் இப்ன் ஷியா.

”மூஸாவிற்கு ஹாரூனைப் போன்றவர் அலீ! தபூக் போருக்குச் செல்லும் பொழுதுகூட 'மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? என்று கேட்டிருக்கிறார் (புகாரி 4416, முஸ்லீம் 4776). இதன் பொருள் என்ன? அல்லாஹ்வின் தூதருக்காக உயிரையே கொடுக்கத் துணிந்தவர், சரியான நேரத்தில் உதவக் கூடியவர். நமது அடுத்த தலைவர் அவர்தான்!” என்றான் இப்ன் சுன்னா உற்சாகமாக!

“ரஸூல்லாஹ்வின் நெருங்கிய நண்பர் அபூபக்ர்தான் அதற்குத் தகுதியுடையவர்! ’உன் தந்தை அவர்களையும் உன் சகோதரரையும் என்னிடம் அழைத்துவா. நான் மடல் ஒன்றை எழுதித்தருகிறேன். ஏனென்றால், எவரும் ஆசைப்படவோ, "நானே தகுதியானவன்" என்று யாரும் சொல்லிவிடவோகூடும் என நான் அஞ்சுகிறேன். அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறைநம்பிக்கையாளர்களும் மறுத்துவிடுவர்’ என்று அன்னை ஆயிஷாவிடம் சொல்லியிருக்கிறாராம்” (முஸ்லீம் 4757) என்றான் இப்ன் ஷியா.

“இது உனக்கு எப்படித் தெரியும்...?”

”அப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்…!” என்று இப்ன் சுன்னா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, ஒட்டகம் உறுமும் சப்தம் கேட்க இருவரும் அமைதியானர்கள்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க, கூடாரத்திற்குள் சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு வாட்டசாட்டமான இளைஞன் நுழைந்தான்.

அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே,

“அல்லாஹ்வின் தூதருக்கு நெருங்கிய தோழரென்று அபூபக்ர் மட்டுமல்ல மனிதர்களில்  எவருமே அப்படிக் கிடையாது.   நெருங்கிய நண்பர் மட்டுமே ரஸூலுல்லாஹ்விற்குப் பிறகு ஆட்சியாளர் ஆகவேண்டுமென்றால், அல்லாஹ்வைத்தான் (முஸ்லீம் 4753) ஆட்சியாளராக அறிவிக்க வேண்டும்!” என்றான்.

“வா… அப்து முனாஃபிக்…! உனக்கு எப்பொழுதுமே விளையாட்டுதான். உன்னுடைய கேலிப் பேச்சு எவர் காதிலாவது விழுந்து விபரீதமாகிவிடப் போகிறது. ” என்றான் இப்ன் சுன்னா.

அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறைநம்பிக்கையாளர்களும் மறுத்துவிடுவர்’ என்று அன்னை ஆயிஷாவிடம், அல்லாஹ்வின் தூதர் சொல்லியிருக்கிறாராம் அதைப்பற்றிதான் பேசிக் கொண்டிருந்தோம்!”

”என்னது….??? கலீபாவாக அபூபக்ரைத் தவிர வேறெவரையும் அல்லாஹ்வும் இறைநம்பிக்கையாளர்களும் மறுத்துவிடுவர்’ என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக ஆயிஷா கூறினாரா…?”  என்று கூறி வாய்விட்டு சிரித்தான்

“ஆமாம்…!”

“ஆயிஷாவின் வார்த்தைகளை எப்படி நம்ப முடியும்?” என்றான் அப்து முனாஃபிக்.

“அவர் பொய்யரா என்ன?” என்று அவசரமாக மறுத்தான் இப்ன் ஷியா.

“ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் அல்லாஹ்வின் தூதரிடத்திலிருந்து கம்ர்(khamr) என்ற போதை பொருளின் துர்நாற்றாம் வீசுவதாகப் பொய்யுரைத்து மாட்டிக் கொண்டவர்கள் (புகாரி 679, 4912); இவர்களது இழிசெயலைக் கண்டித்துதான் குர்ஆன் (66:1-4) வசனங்கள் வெளியாகியிருக்கிறது; இந்தப் பிரச்சினையால் அல்லாஹ்வின் தூதர் தனது அனைத்து மனைவியர்களை விவாகரத்துவரை சென்றது; ஒரு மாதம்வரை மனைவியர்களிடமிருந்து கோபித்துக் கொண்டும் விலகியிருந்தார். ஆயிஷா பகிரங்கமாக பொய் சொல்லக் கூடியவர் என்பது தெரிந்தும் அவரது வார்த்தைகளை எப்படி நம்புகிறாய்?”

”அறிவு கெட்ட அப்து முனாஃபிகே... எங்களிடம் பேசுவதைப் போல மற்றவர்களிடமும் பேசினால் உன் கழுத்தின் மேல் உனது தலை இருக்காது” என்றான் இப்ன் ஷியா.

“சரி அதைப்பற்றி பிறகு பேசலாம்! நமக்கு இன்றைய காலை உணவு இதுதான்!” என்றவாறுஅப்து முனாஃபிக் தனது மூட்டையிலிருந்த நன்கு கனிந்த பேரீச்சம் கனிகளைக் கொட்டினான். மூவரும் வட்டமாக அமர்ந்து கொண்டனர். இப்ன் சுன்னா தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் துருத்தியைக் கொண்டுவந்து வசதியாக அருகில் வைத்துக் கொண்டான்.

”ரஸூலுல்லாஹ்வின் நெருங்கிய நண்பர் அபூபக்ர்தான்” என்றான் இப்ன் ஷியா மறுபடியும்.

அடேய் முட்டாள் பயலே..! ’செல்வத்தாலும் தோழமையாலும் எனக்குப் பேருபகாரம் செய்தவர் அபூபக்ர் அவர்கள்தான். நான்  உற்ற நண்பராக ஆக்கிக்கொள்வதாக இருந்தால், அபூபக்ரையே உற்ற நண்பராக ஆக்கிக்கொண்டிருப்பேன்; எனினும், இஸ்லாமிய சகோதரத்துவமே போதுமானதாகும். கவனியுங்கள்! நான் ஒவ்வொரு நண்பனின் நட்பிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் இறைவனுக்கு மட்டுமே உற்ற தோழனாக இருக்க விரும்புகிறேன். உங்கள் தோழர் ஆகிய நான் அல்லாஹ்வின் உற்ற தோழன் ஆவேன்’ (முஸ்லீம் 4748, 4753), என்று சொல்லியிருக்கும் போது அபூபக்ர் எப்படி உற்ற நண்பராவார்…?” என்றான் அப்து முனாஃபிக்.

”கடைத் தெருக்களில் என்ன பேசிக் கொண்கிறார்கள்” என்றான் இப்ன் சுன்னா.

“முன்பே அலீயிடம் இறுதி விருப்பத்தை தெரிவித்திருப்பதாக சிலர் பேசிக் கொண்டனர்!” என்றான் அப்து முனாஃபிக்.

இவ்வீட்டாராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் விரும்புகிறான்" (குர்ஆன் 33:33) என்ற வசனம் பொதுவாக அல்லாஹ்வின் தூதரது குடும்பத்தையே குறிப்பிடுகிறது இதில் அலீ பின் அபிதாலீப் - ஃபாத்திமா மட்டுமல்ல அல்லாஹ்வின் தூதரது மனைவியர்களையும் அவரது மாமனார்களான அபூபக்ரையும் உமரையும் குறிப்பிடுமே?” என்று அவசரமாக மறுத்தான் இப்ன் ஷியா.

”பெண்களின் அறிவில் குறைபாடு இருக்கிறது (முஸ்லீம் 132) தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது (புகாரி 4425) என்று அல்லாஹ்வின் தூதரே சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்ல, ’ஒரு பெண் ஓர் ஆணுடன் குறிப்பிட்ட சில காலம் இருப்பாள். பின்னர் அவளை அவன் மணவிலக்குச் செய்துவிட்டால், அவள் தன் தந்தையிடமோ அல்லது தன் குடும்பத்தாரிடமோ திரும்பிச் சென்றுவிடுவாள். நபியவர்களுடைய குடும்பத்தார் அவர்களுடைய மூல உறவினரும் அவர்களுக்குப்பின் தர்மம் பெறுவது தடை செய்யப்பட்ட அவர்களுடைய தந்தை வழி உறவினர்களுமே ஆவர்கள்(முஸ்லீம் 4783) அதனால் நீ சொல்வதைபோல இடையில்வந்த உறவுகளை கணக்கிலெடுத்துக் கொள்ளமுடியாது!” என்றான் அப்து முனாஃபிக்.

“சரியாகச் சொன்னாய் முனாஃபிக்..!” இப்ன் சுன்னா முகத்தில் மகிழ்சி பொங்கியது.

“ஆனால் அல்லாஹ்வின் தூதர் அன்னை ஆயிஷாவிடம் இறுதி விருப்பம் கூறியிருக்கிறாரே அதன் படி நோக்கினால் அபூபக்ர்தான் அடுத்த ஆட்சித் தலைவர்!” என்றான் இப்ன் ஷியா.

”நீ ஒரு அவசரக்காரன், அரஃபா பேருரையில், சொத்துரிமை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது சொத்துரிமையை பாகப்பிரிவினை சட்டத்தின் மூலம் அல்லாஹ் வழங்கி விட்டான். எனவே சொத்துரிமை பெறுபவருக்கு இனி மரண சாசனம் இல்லை (இப்னுமாஜா 2705) ..உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;...(குர்ஆன் 2:282)  என்பது குர்ஆனின் வார்த்தைகள். அந்தரங்கமான நேரத்தில் ஆயிஷாவிடம் கூறியதை வேறு சாட்சிகள் இல்ல்லாமல் எப்படி ஏற்க முடியும்? தான் மற்றவர்களுக்குக் கற்பித்துக் கூறியதை அல்லாஹ்வின் தூதர் மீறுவாரா? நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியாது! அப்படி அவர் இறுதி விருப்பம் கூறுவதாக இருந்தால் தகுந்த சாட்சிகளின் முன்னிலையில்தான் சொல்வார். அதுமட்டுமல்ல, அல்லாஹ்வின் தூதர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். அல்லாஹ்விடமிருந்து வஹீ வந்து அவரது முடிவு மாறலாம் அல்லது ரஸூலுல்லாஹ் இப்பிரச்சினைக்கு வேறு ஏதேனும் தீர்வைச் சொல்லலாம் அதற்குள் எல்லோரும் பதவிவெறி பிடித்து ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது சரியில்லை!” என்றான் அப்து முனாஃபிக்.

“இறுதியாகக் கூறினாயே இது மிகச் சரியானது…!” என்றனர் மற்ற இருவரும்.

பேசிக் கொண்டே மூவரும்  பேரீச்சங்கனிகளில் பெரும்பகுதியை தங்களது வயிற்றுக்குள் தள்ளியிருந்தனர்.

“நான் சற்று வெளியில் சென்று இயற்கைக் கடன்களை நிறைவேற்றிவிட்டு வருகிறேன்” என்றவாறு கூடாரத்திற்கு அருகிக் கிடந்த கற்கள் சிலவற்றை பொறுக்கி  தொலைவான இடத்தை நோக்கி நடந்தான் அப்து முனாஃபிக்.
“இரு.. நானும் வருகிறேன்!” என்று இப்ன் ஷியாவும் அவனுடன் இணைந்து கொண்டான். இப்ன் ஷியாவை நோக்கி,

”தூதரது உடல்நிலையை எப்படி இருக்கிறதென்பதை இன்று நேரில் சென்று பார்த்துவிடுவோம்!” என்றான் அப்து முனாஃபிக்

”அந்த பெரும் கூட்டத்திற்குள் நாம் எப்படி செல்வது...? நம்மை எவரும் மதிக்கக்கூட மாட்டார்கள்!”

”அங்கு என்ன நடக்கிறது என்பதை காண்பதற்காகத்தான் செல்கிறோம்! அவர்கள் நம்மை மதித்க்கவில்லையெனினும் நிச்சயமாகத் துறத்திவிடமாட்டார்கள்!”

”நாம் விரைவாகச் செல்லவேண்டும்!” என்றான் இப்ன் ஷியா

இருவரும் ஆளுக்கொரு பாறைக்குப் பின்னால் கழிப்பிடங்களைத் தேடிக் கொண்டனர்.

+++++++++



அன்றைய முற்பகல் வேளையில் மூவரும் பள்ளிவாசலை அடைந்தனர். எதிர்பார்த்ததைப் போலவே கூட்டம் அதிகமாகவே இருந்தது.

“தொழுகை நேரம் துவங்குவதற்குள் நாம் உள்ளே நுழைந்துவிடவேண்டும்” என்று கிசுகிசுத்தான் முனாஃபிக்.

அவர்கள் இருவரும் சரியென்பதைப் போல தலையசைத்தனர்.

“நான் முதலில் செல்கிறேன் என்னைப் பின்பற்றி நீங்களும் வந்துவிடுங்கள்!” என்றான் முனாஃபிக்.

முனாஃபிக் மெல்ல கூட்டத்திற்குள் தலைய நுழைத்தான். வியர்வை நாற்றமும், குளிக்காமல் வாசனைத் திரவியங்களை மட்டும் தேய்த்துக் கொள்பவர்களால் உருவான புதிய நாற்றமும் கூட்டணி அமைத்துக் கொண்டு அவனை திணறச் செய்தது.

தலையைவெளியே உருவினான். கண்களை உருட்டி, தலையைக் குலுக்கிக்கொண்டு செம்மறி ஆடு போல உறுமிக் கொண்டு,

”சிறிது கூட மனிதாபிமானம் இல்லாதவர்கள்!” என்றான்

“ஏன்... என்ன ஆயிற்று” என்றான் இப்ன் சுன்னா

”நாற்றம் தாங்க முடியவில்லை! மூச்சு திணறியே இறந்து விடுவேன் போலிருக்கிறது..!” என்றான் முனாஃபிக்

”இன்று வியாழக் கிழமை! அப்படித்தான் இருக்கும் ஒரு வாரமாக எவரும் குளித்திருக்க மாட்டார்கள். ஒருவேளை நாளை ஜும்ஆவிற்கு குளிப்பார்கள் என்று நினைக்கிறேன்!” என்றான்

”இது எனக்குத் தெரியாதா..?” என்றான் முனாஃபிக்

“பிறகு...?”

“நேற்று அவர்கள் என்னனென்ன சப்பிட்டார்கள் என்பதை எல்லோருக்கும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்றான்

வாயைக் கைகளால் மூடிக் கொண்டு சத்தமில்லாமல் சிரித்தனர்.

”நெரிசல் மிகுந்த கூட்டத்திற்குள் இந்த வேலையைச் செய்பவர்களை என்ன செய்தாலும் தகும். எதற்கெல்லாமோ புதிதுபுதிதாக சட்டம் இயற்றிக் கொண்டிருப்பவர்கள் இதற்கொரு தீர்வைச் சொல்லியிருக்கலாம்!” என்றான் முனாஃபிக்.

”இப்பொழுது அல்லாஹ்வின் தூதர் இருக்கும் நிலையில் அதற்கெல்லாம் நேரமில்லை! எப்படியாவது உள்ளே நுழைந்து விடு!” என்றான் இப்ன் சுன்னா.

மூச்சை பிடித்துக் கொண்டு, முனாஃபிக் லாகவமாக வளைந்து, நெளிந்து, கூட்டத்தை பிளந்து கொண்டு ஏறக்குறையை முன்வரிசைக்கே சென்று உமரின் அருகில் நின்றுகொண்டான். பின்வரிசையில் மற்ற இருவரும் வந்து இணைந்து கொண்டனர். 



”நான் மக்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!” வீட்டிற்குள்ளிருந்து முஹம்மதின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது,

“இந்த நிலையில் எப்படி உபதேசம் செய்வீர்கள்?” என்ற ஆயிஷாவின் குரல் கேட்டது.

”வாய் திறக்கப்படாத ஏழு தோல்பை தண்ணீரை என் மீது ஊற்றுங்கள்!” என்றார் முஹம்மது.

“எல்லோரும் வாருங்கள் அல்லாஹ்வின் தூதரை அந்தக் கல்தொட்டியில் உட்காரவைத்து தண்ணீரை ஊற்றுவோம்!” இது ஆயிஷா

தண்ணீர் ஊற்றும் சபதம் கேட்டுக் கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் ,
“ம்ம்... போதும்… போதும்..!” என்ற முஹம்மதின் பலகீனமான குரல் கேட்டது.

”நான் சென்று உங்களை அழைத்துச் செல்வதற்கு யாரையாவது வரச் சொல்கிறேன்” என்ற ஆயிஷாவின் குரல் கேட்டது.

“வேண்டாம்! இங்கிருந்தே குரல் கொடு… திரைக்கு பின்னால் நின்று பேசு!” 

இப்ன் சுன்னா, ”அல்லாஹ்வின் தூதருக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை போலிருக்கிறது” என்று இப்ன் ஷியாவின் காதில் கிசுகிசுத்தான்.

”அல்லாஹ்வின் தூதரை அழைத்துச் செல்வதற்கு வாருங்கள்” என்ற ஹஃப்ஸாவின் குரல் திரைக்குப் பின்னாலிருந்து ஒலித்தது.

அப்து முனாஃபிக் செல்ல முயன்றான் அதற்குள் வேறு இரண்டு ஸஹாபாக்கள் திரையைக் கடந்து சென்றுவிட்டனர். மயான அமைதி நிலவிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஒரு துணியால் தலையை இறுக்கிக் கட்டிய நிலையில் கைத்தாங்கலாக முஹம்மது அழைத்து வரப்பட்டார். முஹம்மது என்ன சொல்லபோகிறாரோ என்ற ஆர்வம் ஒவ்வொருவரது முகத்திலும் தெறித்துக் கொண்டிருந்தது.

வாருங்கள்.  நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்” என்றார் முஹம்மது.

கூட்டத்திற்குள் மெதுவாக சலசலப்பு துவங்கியது. உமர் திருதிருவென்று விழித்தவாறு கூட்டத்தினரைக் கவனித்துக் கொண்டிருந்தார். திடீரென சலசலப்பு அதிகமாகியது.

"எலும்பையும் மைக்கூட்டையும்  கொண்டுவாருங்கள். உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பின்னர் குறிப்பிட்ட அந்த விஷயங்களில் ஒருபோதும் நீங்கள் வழிதவறவேமாட்டீர்கள்"

அப்போது உமர்,

 'நபி(ஸல்) அவர்களுக்கு வேதனை மிகைத்துவிட்டது உங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே. இறைவேதமே நமக்குப் போதும்” என்றார்.

 அதற்குள் கூட்டத்தில் சிலர்,

"அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத்தில் உளறுகிறாரா?அவர்களிடமே விளக்கம் கேளுங்கள்" என்றனர்.

மக்கள் உரத்த குரலில் ஒருவருக்கொருவர் சச்சரவிட்டுக் கொண்டனர். யார் என்ன பேசுகிறார்கள் என்றே கேட்கமுடியவில்லை. 

“உமரே! அல்லாஹ்வின் தூதர் சொல்வது உங்களுக்குக் கேட்கவில்லையா” 
என்ற பெண்களின் குரலும் திரைக்குப் பின்னாலிருந்து ஒலிக்கத் துவங்கியது.

”அடப்பாவிகளா! நான் பலவீனத்தில் உளறுகிறேனா?” என்ற முஹம்மதின் வேதனைக்குரல், அந்த சச்சரவில் எவர் காதுகளையும் அடையவேயில்லை.

இன்னொரு கூட்டம்,

நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம் கொண்டுவந்து கொடுங்கள். உங்களக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறிட மாட்டீர்கள்'” என்றனர்.

”உமர் சொல்வது சரிதான்! நம்மிடம் குர்ஆன் இருக்கிறது! அதுவே போதும்!” என்று மேலும் உரத்த குரலில் சப்தமிட்டுக் கொண்டிருந்தது இன்னொரு கூட்டம்.

இருதரப்பும் மாறிமாறி சப்தமிட்டு சச்சரவை அதிகரிக்க முஹம்மது தலையைப் பிடித்துக் கொண்டார்.

’வாரிசுரிமை குழப்பத்திற்கு இனி நான் என்னதான் தீர்வு சொன்னாலும்  இவர்கள் கேட்கமாட்டார்கள். உமர் மிகச் சரியாக காய் நகர்த்தி விட்டான்!’ என்று மனதில் நினைத்துக் கொண்டார் முஹம்மது.

“அல்லாஹ்வின் தூதர் மீண்டும் நோய்வாய்ப்படுகிறார்” என்ற குரல் கேட்க கூட்டம் அமைதியானது.

என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த மரணசாசனம் எழுதும் பணியை விட நான் இப்போதுள்ள நிலையே இருப்பது சிறந்தது” என்றார் முஹம்மது.

உமரின் உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றி மறைந்ததை அப்து முனாஃபிக் கவனிக்கத் தவறவில்லை. கூட்டம் மீண்டும் அமைதியானது. மெல்லிய குரலில் முஹம்மது தொடர்ந்தார்.

”நான் உங்களுக்கு வேறு சில விஷயங்களைச் சொல்கிறேன். அரபு தீபகற்பத்திலிருந்து இணை வைப்பவர்களை வெளியேற்றுங்கள். தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்து வந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்" (புகாரி 53, 3168 4431, 5669 & முஸ்லீம் 3364, 3365).

முஹம்மதால் தொடர்ந்து பேசமுடியவில்லை.

“நான் ஓவ்வெடுக்க விரும்புகிறேன்” என்றார்.

முன்வரிசையில் நின்று கொண்டிருந்த அப்து முனாஃபிக் விரைந்து சென்று முஹம்மதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். இன்னொரு ஸஹாபியும் உதவிக்குவர வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

திரையைக் கடந்து உள்ளே சென்றனர். அவரை எங்கு படுக்கவைப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஆயிஷாவும், ஹஃப்ஸாவும் விரைந்து வந்து முஹம்மதைப் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்.  அந்தப் பெண்களின் முகத்தில் மிகப்பெரும் வெற்றியை ஈட்டிய நிறைவு தெரிந்தது.

முனாஃபிக் வெளியில் வந்தான். கூட்டம் சலசலப்புடன் கலைந்து கொண்டிருந்தது. கும்பலை விலக்கிக் கொண்டு ஒரு வெற்றிப் புன்னகையுடன் விரைவாக வெளியேறினார் உமர்.

இப்ன் சுன்னாவும் இப்ன் ஷியாவும் முனாஃபிக்குடன் இணைந்து கொண்டனர்.

“என்ன இது.. இப்படி ஆகிவிட்டதே?” என்றான் இப்ன் ஷியா

“இங்கு வேண்டாம்! நாம் நமது கூடாரத்திற்கு சென்று விடுவோம்” என்று கிசுகிசுத்தான் முனாஃபிக்.

மூவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் கூடாரத்தை அடைந்தனர்.

”என்ன இவர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர்” என்று மவுனத்தைக் கலைத்தான் இப்ன் சுன்னா.

“இதுதான் இவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படும் இலட்சணமா?” என்று வெறுப்பை உமிழ்ந்தான் இப்ன் ஷியா.


”…தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்;… என்ற குர்ஆன் (59:7)  வசனம்   கனீமத்துப் பொருட்களைப் பங்கீடு செய்வதைப்பற்றி மட்டுமே பேசுகிறது என்று நினைத்துவிட்டனர் என்னவோ?” என்றான் இப்ன் சுன்னா.

அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை (53:3) என்கிறது குர்ஆன் வசனம். இன்று அல்லாஹ்வின் தூதர் மரணசாசனம் எழுதித் தரவேண்டுமென்ற மிக முக்கியமான விருப்பம்கூட அல்லாஹ்வின் கட்டளை என்று கூறலாம். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றவிடாமல் முற்றிலுமாகத் தடுத்துவிட்ட உமர் போன்ற ஆட்கள் உண்மையான முஃமின்களா?” என்றான் அப்து முனாஃபிக்.

“… …!?”

 “அல்லாஹ்.. வஹீ… குர்ஆன் என்று சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் அதிகாரத்திற்காகத்தானா?”

“நாங்கள் ஏற்கெனவே குழம்பிப் போயிருக்கிறோம் இதில் நீ வேறா…?” என்றான் இப்ன் ஷியா.

“அல்லாஹ்வின் தூதர் தான் விரும்பியதை செயல்படுத்தியிருக்கலாமே… அவர் ஏன் அவ்வாறு செய்யவில்லை?” என்றான் இப்ன் சுன்னா.

“மரணசாசனம் எழுதப் போகிறேன் என்று சொன்னதற்கு இவர்கள் செய்த சச்சரவைக் கண்ட பிறகு அவரால் எப்படி எழுத முடியும். ஒருவேளை அவர் அப்படிச் செய்திருந்தால் எழுதியிருந்தால் அங்கு இரத்த ஆறு ஓடியிருக்கும்! போதக்குறைக்கு அல்லாஹ்வின் தூதர் நோயின் வேதனையில் உளறுவதாக அவர் முன்னிலையிலேயே சொல்கின்றனர். தனது வார்த்தைகளுக்கு கிடைத்த மரியாதையை எண்ணி அகமகிழ்ந்து அமைதியாகியிருப்பார்” என்றான் முனாஃபிக்.

”சரி… அவரது வீட்டிற்குள் சென்றாயே அவரது மனைவிர்களின் நிலையைக் கவனித்தாயா…?” என்றான் இப்ன் சுன்னா.

“அல்லாஹ்வின் தூதருக்கு உதவி செய்யச் சென்றதற்கு அதுவும் ஒரு காரணம். ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் வெற்றிக்களிப்பில் இருப்பதைப் போலத் தோன்றியது!” என்றன்

“இனி அலீயின் கதி…?”

தொடரும்…

தஜ்ஜால்.

Friday 13 March 2015

ஒரு மரணம் சில கேள்விகள் - 8




“அல்லாஹ் அக்பர்..!

 அல்லாஹ்... அக்பர்...!”

என்ற பிலாலின் குரலால் மதீனா நகரின் அதிகாலை அமைதியைக் கிழிந்து கொடிருந்தது.  இரவில் நிழ்த்திய விளையாடுகள் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை தொழுகைக்கான அழைப்பு ஒலிப்பைதைக்கூட அறியாதவாராக ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.

நேரம் கடந்து கொண்டிருந்தது…

“ஆயிஷ்... எழுந்திரு...!  ஃப்ஜ்ரு தொழுகைக்கான பாங்கு சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது...!” என்றவாறு அரக்கப்பறக்க காதுகளை மூடியவாறு எழுந்தார்.
ஆயிஷா ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.

”ஆயிஷ் சீக்கிரம் எழுந்திரு... இல்லையென்றால் ஷைத்தான் உன் காதுகளில் சிறுநீர் கழித்துவிடுவான்” (புகாரி 1144)

“அவனுக்கு சிறுநீர் கழிக்க வேறு இடமே இல்லையா?” மீண்டும் சுருண்டு படுத்துத் கொண்டார்.

“ம்ம்... சீக்கிரம் ஆகட்டும்” என்றார் முஹம்மது.

முனங்கிக் கொண்டே எழுந்த ஆயிஷா இவரும் குளிப்பதற்கான தயாரிப்புகளைச் செய்தார். முஹம்மது தனது மர்மஉறுப்பை நன்றாகத் தேய்த்துக் கழுவினார்; மூக்கை மூன்று சிந்தினார்; அவரது மூக்கின் துளைகளில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஷைத்தான் அலறியடித்துக் கொண்டு வெளியேறினான். (முஸ்லீம் 403) பின்னர் ஒளு என்ற சடங்கை முறையாக செய்து முடித்தார். ஆயிஷாவும், தனது மூக்கிலிருந்த ஷைத்தானை விரட்டியடித்தார்; அவரும் சடங்குகளை நிறைவேற்ற, பின்னர் ஒரே பாத்திரத்திலலிருந்து நீரை அள்ளி இருவரும் ஒன்றாகவே குளித்தனர்.

ஆயிஷா, தனது கணவருக்கு உடையை அணிவித்துக் கொண்டிருந்த பொழுது, அப்படியே இறுக்க அணைத்துக் கொண்டார்.

“ம்ம்.. விடுங்கள் இப்பொழுதான் கடமையான குளிப்பை நிறைவேற்றியிருக்கிறோம்... மறுபடியுமா...?” என்று செல்லமாக சிணுங்கினார்.
ஆயிஷாவின் தலையைப் பற்றி நெற்றியில் முத்தமிட்டார். 

”என்னாவோ தெரியவில்லை உன்னைக் காணும்பொழுதெல்லாம் நான் என்னையே மறந்து போகிறேன்”

”என்ன இருந்தாலும் உங்களுக்குப் பிரியமானவர் தாடைகள் சிவந்த அந்தக்  குறைஷிக் கிழவிதானே?”(புகாரி 3821)

“இல்லையென்று சொல்லவில்லை. அல்லாஹ் எனக்கு செய்த மிகப்பெரிய அருட்கொடை நீ தான். ஏனெனில் உன்னுடன் அல்லாமல் வேறெந்தப் பெண்ணின் ஆடைகளுக்குள் நான் இருக்கும் போதும் எனக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டதில்லை (புகாரி 3775).”

ஆயிஷாவின் முகத்தில் பெருமையும், கர்வமும் சிருங்காரமும்  வழிந்தோடியது.
”வெளியில் மக்கள் நடமாடும் ஓசை கேட்கிறது, தொழுகைக்காக வந்து கொண்டிருக்கின்றனர் போலிருக்கிறது” என்று முஹம்மதை மேலும் இறுக்கிக் கொண்டார். 

“ஆயிஷ்…! வாசனைத் திரவியம் இருக்கிறதா...?” என்றார்.

“எனது தந்தையார் அன்பளிப்பாக கொடுத்த கஸ்தூரி கலந்த வாசனைத் திரவியம் இருக்கிறது. அதை பூசி விடட்டுமா?”

“ம்ம்... கொண்டுவா...” 

ஆயிஷா விலகிச் சென்றார். வாசனைத்திரவியத்தை முஹம்மதிற்கு தேய்த்துவிடும் பொழுது அவரது உடையில் ஆங்காங்கே கறைகள் தென்படுவதைக் கவனித்தார்.

“இருங்கள் இதோ...வந்துவிடுகிறேன்...!” 

“என்ன...!”

“உங்கள் ஆடைகளில் ’அது’ கறைகளை உண்டாக்கியிருக்கிறது. சுத்தம் செய்து தருகிறேன்” 

”... ...!?”

“இப்படி எல்லாவற்றையும் வெளியிலேயே சிந்திவிட்டால் என் வயிற்றி ஒரு பூச்சி புழு எப்படி உண்டாகும்...?”

முஹம்மது அசடு வழிய சிரித்தார்.

’குறைந்தபட்சம் ஈஸா நபிக்கு வழங்கப்பட்டதை போல இறந்தவைகளை எழுப்பும் ஆற்றலை அல்லாஹ்விடமிருந்து இவரும் பெற்றிருக்கலாம்…’ என்று மனதில் எண்ணியவாறு தண்ணீரை எடுக்கச் சென்றார்.

ஒரு பாத்திரத்தில் நீரைக் கொண்டுவந்து கறைகள் தென்பட்ட இடங்களையெல்லாம் சுத்தம் செய்தார். முஹம்மதின் ஆடையில் ஆங்காங்கே வட்டவட்டமாகத் தெரிந்தது (புகாரி 229-232).

”மக்கள் தொழுகைக்காக வந்து எனக்காக காத்திருக்கின்றனர் போலிருக்கிறது…” என்றவாறு வீட்டின் திரையை விலக்கி அவசரமாக வெளியேறினார்.

++++++

அன்று மதியம் ஒரு சவஅடக்க கலந்து கொண்டு, பகீஉ கல்லறையியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். தலைவலிப்பதைப் போலத் தோன்ற தனது கைகளால் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டார். தொடர்ந்து வலி அதிகரிக்கத் துவங்கியது.

“அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குத் தலைவலிக்கிறதா…?” என்றார் அருகிலிருந்த அவரது தோழர்.

’ஆம்’ என்பதைப் போல தலையசைத்து சைகை செய்தார்.

”தங்களது உடலும் அதிக வெப்பமாக இருப்பதைப் போலத் தோன்றுகிறது. உங்கள் உடலிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை என்னால் நன்றாக உணரமுடிகிறது” என்றனர் இன்னொரு தோழர்.

“நரகத்திலிருந்து வெளியாகும் வெப்பம் அல்லாஹ்வின் தூதரையும் விட்டுவைக்கவில்லை போலிருக்கிறது” என்றனர் வருத்தத்துடன்.

சோர்ந்து போன நிலையில் ஆயிஷாவின் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கே ஆயிஷா, 

”என் தலையே…!' என்று தனது தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.  இதென்ன ஒற்றுமை…இவளுக்கும் தலைவலியா…? என்று எண்ணியவாறு,

நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் பாவமன்னிப்புக் கோரி உனக்காக பிரார்த்திப்பேன்” என்றார்

“அது… என்றால்… எது?”

”இறப்பு…!”

அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் விரைவில் இறந்து போய்விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்துவிட்டால் அந்த நாளின் இறுதியிலேயே என்னுடைய இல்லத்தில், நீங்கள் உங்களுடைய துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள்” என்றார் கோபமாக.

இல்லை… உனக்கு ஒன்றும் ஆகாது; நான்தான் இப்போது 'என் தலைவலியே!' என்று சொல்ல வேண்டியுள்ளது. உண்மையில் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன்”(புகாரி 5666). என்று சமாளித்தார்.

”மதிப்பு வைத்திருப்பதெல்லாம் இருக்கட்டும், நான் கூறியதை நினைவில் வைத்திருக்கிறீர்களா…?”

“ம்ம்… நினைவிருக்கிறது…!” என்றார் உணர்ச்சியே இல்லாமல்

“… …”

“ஆயிஷ் … உண்மையிலேயே எனக்கு தலைவலியும் காய்ச்சலும்  இருக்கிறது நான் ஓவ்வெடுக்க விரும்பிகிறேன்” என்றார் முஹம்மது.

“அன்பளிப்பாக வந்த உணவு தயாராக இருக்கிறது, சாப்பிட்ட பிறகு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் ஆயிஷா.

அன்று மாலை மற்ற மனைவிகளில் இல்லங்களுக்கும் சென்றுவந்தார். நாட்கள் கடந்தது. தவறாமல் முறை வைத்து ஒவ்வொரு மனைவியின் வீட்டிற்கும் சென்று வந்தார்.  எந்த மனைவியியரின் வீட்டிற்குச் சென்றாலும்  அவருக்கு ஆயிஷாவின் நினைவுதான். எப்பொழுது ஆயிஷாவின் வீட்டிற்குச் செல்ல வேண்டிய நாள் வருமென்று ஏங்கித் தவித்தார்(புகாரி 4830 ).  அவரது உடல் நிலை குறித்த செய்திகள் மதீனா முழுவதுமே பரவத்துவங்கியது.



ஒவ்வொரு நாளும் அவரது நிலைமை மோசமடைந்து கொண்டே வந்தது. தலைவலியில் துவங்கியது காய்ச்சல், உடல்வலி என்று நாளொரு நோய் பொழுதொரு வலியுமாக விரிவடைந்து, அவரால் எழுந்து நடப்பதற்குக்கூட முடியாமல் போனது.  வழக்கம் போல முஹம்மதைச் சந்திக்க இப்ன் அப்பாஸும், அலீயும் வந்திருந்தனர் வந்திருந்தனர். பரஸ்பர நலவிசாரிப்புகளுக்குப் பின்னர் அலீயை நோக்கி,

 “அலீ... நான் ஆயிஷாவின் வீட்டில் தங்கி சிகிச்சை பெறவே விரும்புகிறேன்”

“மனைவியரிடையே நீதம் செலுத்துமாறு அல்லாஹ் கூறியிருக்கிறனே?”

”மனைவியர்கள் அனைவரது வீட்டிற்கும் சென்று வருவதற்கு எனக்கு ஆசைதான். ஆனால் என்னால் முடியவில்லை” என்றார்

அலீ அமைதியாக முஹம்மதையே கவனித்துக் கொண்டிருந்தார். 

”மற்ற மனைவியர்கள் மறுப்பேதும் தெரிவிக்கவில்லையா...?”

“நான் அவர்கள் எல்லோரிடமும் பேசி சம்மதம் வாங்கிவிட்டேன். தயவு செய்து என்னை ஆயிஷாவின் வீட்டிற்கு அழைத்து செல்” என்றார்.

முஹம்மதின் நிலைமையை உணர்ந்த அலீயும் அப்பாஸும் அவரை எழுந்திருக்கச் செய்தனர். எழுந்து நின்றவர் நிற்க முடியாமல் மீண்டும் படுக்கையில் துவண்டு விழுந்தார்.

“அல்லாஹ்வின் தூதரே இந்த நிலையில் அங்கு செல்ல வேண்டுமா...? தேவையான மருத்துவத்தை இங்கேயே செய்யலாமே...!” என்றார் அலீ.

இல்லை என்பதைப் போலத் தலையசைத்து...

“நீ இன்னும் மனதில் எதையோ நினைத்துக் கொண்டிருக்கிறாய்...”

“இல்லை..! என் மனதில் அப்படி எதுவுமில்லை. உங்கள் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஓய்வு அவசியம் என்பதற்காகவே சொன்னேன்” என்றார்

“அலீ... நீ எனக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்திருக்கிறாய் இந்த ஒரு உதவியையும் செய்...! நான் ஆயிஷாவின் வீட்டிற்கு சென்று அங்கேயே சிகிச்சை செய்து கொள்கிறேன். என்னை எப்படியாவது ஆயிஷாவின் வீட்டில் சேர்த்து விடு” என்றார்.

“சரி... அல்லாஹ்வின் தூதரே...! உங்கள் விருப்பப்படியே செய்கிறேன். நீங்கள் எனது தோளையும் அப்பாஸ் அவர்களின் தோளையும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் உங்களை அங்கு சேர்த்து விடுகிறோம்” என்றார்.

முஹம்மதுவை மீண்டும் எழுந்திருக்கச் செய்து தங்களது தோள்களை பற்றிப் பிடிக்குமாறு செய்தனர். அவரை நோக்கி,

“வாருங்கள் போகலாம்” என்றார்.

முஹம்மதால் ஒரு அடியைக் கூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் தளர்ந்து பின்னிக் கொண்டிருந்தது.

”என்னால் அடியெடுத்து வைக்க முடியவில்லை...!” என்றார் பரிதாபமாக.

அலீயின் மனதில் வேதனை.  தனக்கு நினைவு நினைவு தெரிந்த நாளிலிருந்து முஹம்மதை நிழல்போல பின் தொடர்பவர். தனது உலகமே முஹம்மதுதான் என்றிருந்தவர். 

எப்படியாவது ஆயிஷாவின் வீட்டில் சேர்த்துவிடுவோம் என்பதைப் போல அப்பாஸை நோக்கினார். அலீயும் அப்பாஸும் மெதுவாக நடக்கத் துவங்கினார்கள். முஹம்மதின் கால்கள் தரையில் கோடு போடுவதை போல இழுத்துக் கொண்டே சென்றது (புகாரி 2588).

ஆயிஷாவின் வீட்டை அடைந்தனர். அலீயைக் கண்டதும் ஆயிஷா வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். முஹம்மதுவும் அதை கவனிக்கத் தவறவில்லை. அதைப்பற்றிக் கவலைப்படாத அலீ, முஹம்மதைப் படுக்கையில் படுக்க வைத்து அவரிடமிருந்து விடை பெற்றார்.

”ஆயிஷா... இங்கே வா..!” என்றார் முஹம்மது

“ம்ம்... சொல்லுங்கள்..” என்றவாறு அவரது அருகில் அமர்ந்தார் ஆயிஷா.

“நீ ... எதற்காக அலீயிடம் இவ்வாறு நடந்து கொள்கிறாய்?”

“என்னைத் தலாக் செய்துவிட்டு, உங்களை வேறொரு திருமணம் செய்து கொள்ளுமாறு ஆலோசனை சொன்னவர்தானே அவர்!”

“அதை இன்னும் நீ மறக்கவில்லையா...?”

“எப்படி மறக்க முடியும்..?”

“அலீயைப்பற்றி உனக்குத் தெரியாதா... அவன் மிகவும் நல்லவன் எனக்காக தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவன். நல்ல அறிவாளி... திறைமைசாலி...” என்று சொல்லிக் கொண்டிருந்த பொழுது எரிச்சலாக இடைமறித்து,

“அவர்... புகழ் பாடுவதற்காகத்தான் இங்கு வந்தீர்களா...?"

“கோபித்துக் கொள்ளாதே ஆயிஷா... எனது உடல் நிலை இப்படியிருக்கும் பொழுது நீங்கள் அனைனைவரும் உங்களுக்கிடையே நிலவும் கருத்துவேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டாமா...?” என்றார்.

“இதைப்பற்றி நாம் பிறகு பேசலாம். இப்பொழுது நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள்” என்றார் ஆயிஷா.

இவர்களை எப்படி ஒன்றினைப்பது?

முஹம்மதிற்கு என்னசெய்வதென்றே புரியவில்லை. இவர்களது இந்த மோதல் போக்கு பெரும் ஆபத்தில் முடிந்துவிடுமே என்று அஞ்சினார். மீண்டும் ஆயிஷாவிடம் பேசுவதற்கு முயற்சித்த பொழுது,

“காய்ச்சலால் உங்கள் உடல் மிகவும் கொதிக்கிறது, தண்ணீரால் அந்த வெப்பத்தை குறைக்கிறேன்” என்றவாறு எழுந்து சென்றார்.

ஆயிஷா, முஹம்மதின் தலையில் கணமான துணியைக் சுற்றி, இறுக்கிக்கட்டி அதில் நீரை அளவாக ஊற்றினார். அவரது காய்ச்சல் சிறிது குறைய, களைப்பில் அப்படியே உறங்கிப்போனார்.

ஆயிஷா தனது அடிமைப் பெண்ணை நோக்கி,

”அல்லாஹ்வின் தூதரை நன்கு கவனித்துக் கொள், நான் எனது தந்தையாரின் வீடுவரை சென்று வருகிறேன்” என்றார்.

சரியென்பதை போல அந்தப் பெண் தலையசைக்க, தலைமற்றும் முகத்தை மூடியவாறு ஆயிஷா வேகமாக வெளியேறினார். வெளியில் புழுதிக் காற்று வீசிக் கொண்டிருந்தது.
+++++



அலீ தனது வீட்டிற்குள் நுழைந்தார். கரகரவென்று கற்கள் உராயும் சப்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. தனது முகத்தை மூடியிருந்த துணியை அகற்றியவாறு,

“ஃபாத்திமா...! என்று அன்பாக குரல் கொடுத்தார்.

திருக்கையில் கோதுமைமாவு அறைத்துக் கொண்டிருந்த ஃபாத்திமா அதை அப்படியே போட்டவாறு தனது கணவரிடம் வந்தார். அலீயின் முகத்தில் தவழும் சோகத்தை கவனித்தார்.

“அல்லாஹ்வின் தூதரை சந்தித்தீர்களா...?” என்றார்

“ம்ம்... சந்தித்தேன் அவரது உடல் நிலை என்னை மிகவும் வேதனைப்படுத்துகிறது. அவர் நம்மைவிட்டுச் சென்றுவிடுவாரோ என்று அஞ்சுகிறேன்!”

ஃபாத்திமாவின் கண்களில் நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

“அழதே என் அன்பே. நீ அழுவது அவரது வேதனையை இன்னும் அதிகரிக்கவே செய்யும்” என்றார் அலீ.

”அனுமதி கொடுங்கள்... நான் இப்பொழுதே சென்று அவரைப் பார்த்து வருகிறேன்”

“... ...!”

“எந்த வீட்டில் இருக்கிறார்...?”

“ஆயிஷா..!”

“அங்கேயா...?” என்றார் புருவத்தை சுழித்தவாறு.

“ஆமாம்... அவர் மிகவும் வற்புறுத்திக் கேட்டதால் நான்தான் அவரை அங்கு அழைத்துச் சென்றேன்!”

உடனே தந்தையைக் காணவேண்டுமென்ற ஃபாத்திமாவின் வேகம் குறையத் துவங்கியது.

“அபூபக்கரின் மகள் உங்களிடம் மரியாதையாக நடந்து கொண்டாரா...?”

“... ...” 

பதில் பேசவில்லை அமைதியாக இருந்தார். அதன் பொருள் ஃபாத்திமாவிற்குத் தெரியும்.

“அழதே ஃபாத்திமா...! அல்லாஹ்வின் தூதருக்காக நாம் அமைதியாக இருப்போம். அல்லாஹ்தான் நாடியதை செய்கிறான்” என்று தனது மனைவியை ஆறுதலாக அணைத்துக் கொண்டார்.

அவர்களின் முகத்தில் இயலாமையின் இறுக்கம் வலுவாக நிலவிக் கொண்டிருந்தது.
+++++



அபூபக்கரின் இல்லத்திற்குள் வேகமாக நுழைந்தார் ஆயிஷா. வீட்டு வாயிலில் நின்று கொண்டிருந்த அபூபக்ர்,

“மெதுவாக... ஏன் இத்தனை வேகம்...?” என்றார்

“உங்களது நண்பரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே வருகிறது. நீங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்...? என்றார் ஆயிஷா.

”சற்று பொறுமையாக இரு ஆயிஷா! என்ன நடந்துவிட்டதென்று இப்படி பதட்டப்படுகிறாய்...?” என்றவாறு இருவரும் வீட்டிற்குள் நுழந்தனர்.

“அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரை சந்தித்து தனிமையில் உரையாடியிருக்கிறார். இதை அறிந்த பின்னர் பதட்டப்படாமல் எப்படி இருக்க முடியும்?” என்று தொப்பென்று கீழே அமர்ந்தார்.

“சரி... அல்லாஹ்வின் தூதரது உடல் நிலை எப்படி இருக்கிறது...?” என்று அபூபக்கரும் அருகில் அமர்ந்து கொண்டார்.

”அதைத்தான் முன்பே சொன்னேனே...! சொல்லிக் கொள்ளும்படி இல்லை...!” என்றார் இறுக்கமாக.

”நீ அவரை சந்தித்தாயா...?”

“சந்திப்பதா...? இப்பொழுது அவர் எனது வீட்டில்தான் இருக்கிறார்!”

“அல்லாஹ்வின் தூதர், இன்று உனது இல்லத்திற்கு வரும் நாள் இல்லையே...?”

“சக்களாத்திகளின் சம்மதத்துடன் இனி என் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுவதாக இருக்கிறார். அப்பாஸ் மற்றும் அந்த மனிதரின் உதவியுடன் எனது இல்லத்திற்கு வந்து விட்டார்” (புகாரி 2588)

“அந்த மனிதரா... எந்த மனிதர்..?” 

“அவர் பெயரைச் சொல்வதற்குக்கூட எனக்கு விருப்பமில்லை..!” என்றார் கோபமாக,

”சரி... அவர் வஸியத்து(இறுதி விருப்பம்) கூறினாரா...?”

“இல்லை...!”

”நீ அவருக்கு நினைவூட்டியிருக்கலாமே...?”

”அவர் முழுக்க முழுக்க எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார். நானும் அதைப்பற்றி தொடர்ந்து வற்புறுத்துகிறேன், மனிதர் வாயைத் திறந்து சொல்லமாட்டேன் என்கிறார்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, குதிரையில் குழம்பொலி கேட்க இருவரும் அமைதியானார்கள்.




“அஸ்ஸலாமு அலைக்கும்..!” என்றவாறு வீட்டிற்குள் நுழைந்தார் உமர்.

”வாருங்கள் கத்தபின் மகனே...!” என்றார் அபூபக்ர்

ஆயிஷா முகத்தை மூடிக் கொண்டு திரை மறைவிற்குள் சென்றார்.

“ஆயிஷா நீ இங்குதான் இருக்கிறாயா...? நான் அல்லாஹ்வின் தூதரை சந்திக்கச் சென்றிருந்தேன் அவர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததால் தொல்லை கொடுக்க வேண்டாமென்று திரும்பிவிட்டேன்” என்றார்.

“... ...” 

பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் ஆயிஷா

“இன்னும் நமக்குச் சாதகமான பதில் நமக்குக் கிடைக்கவில்லை!” என்றார் அபூபக்ர்

“அல்லாஹ்வின் தூதரை அலீ பின் அபூதாலிப் சந்தித்து உரையாடியதாக செய்தி வந்ததுள்ளது!” என்றார் உமர்.

”அவருடன் என்ன பேசினார் என்பது தெரிந்ததா...?” என்றார் ஆயிஷா ஆர்வமாக,

“வழக்கமான நலம் விசாரிப்புதானாம்...!”

ஆயிஷாவிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சு வெளியேறியது.

“மகளே ஆயிஷா... அரசியல் விவகாரங்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். இப்பொழுது உனது கவனம் தூதரின் உடல் நலனில் மட்டும்தான் இருக்க வேண்டும்..!”

“... ...!?”

“என்ன புரிந்ததா...?” என்றார் அபூபக்ர்

சரியென்பதைப் போல தலையசைத்தார் ஆயிஷா.

”அவர் எழுவதற்குள் நான் திரும்பிச் செல்லவேண்டும்...” என்று திரைமறைவிலிருந்து வெளியே வந்தார்.

“துணைக்கு யாரையாவது அனுப்பட்டுமா...?”

“வேண்டாம்... நான் பார்த்துக் கொள்கிறேன்”

“ஆயிஷா..! வெளியில் புழுதிக் காற்று இன்னும் குறையவில்லை” என்றார் அபூபக்ர்

தலை மற்றும் முகத்தை நன்றாக மூடியவாறு வெளியேறினார் ஆயிஷா.

“அலீ பின் அபூதாலிப்பிற்கு வஸியத்து செய்துவிட்டதாகவும், அடுத்த தலைமைப் பொறுப்பிற்கு அவர்தான் வரவேண்டுமென்றும் புதிதாக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது” என்றார் உமர்.

“ம்ம்.. நானும் கேள்விப்பட்டேன். கடந்த ஹஜ்ஜின் போது அலீயைச் சுட்டிக் காண்பித்துவிட்டதாக ஒரு குர்ஆன் வசனத்தையும் குறிப்பிடுகின்றனர். அதன் பிறகே , ...இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்...(5:3) என்ற குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டதாக வேறு கூறிக் கொண்டிருக்கின்றனர்”

“ஆமாம்...! அதேபோல, ஒரு நாள் காலையில் நபி  அவர்கள் ஒட்டகச் சேணத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கறுப்புநிற கம்பளிப் போர்வை அணிந்து கொண்டு புறப்பட்டார்கள். அப்போது ஹசன் பின் அலீ  வந்தார்கள். உடனே நபி அவர்கள் ஹசன் அவர்களை  நுழைத்துக் கொண்டார்கள்; பிறகு ஹுசைன் அவர்கள் வந்தபோது அவர்களும் நபி அவர்களுடன் நுழைந்துகொண்டார்கள்; பிறகு ஃபாத்திமா அவர்கள் வந்தபோது, அவர்களையும் நுழைத்துக்கொண்டார்கள். பிறகு அலீ வந்தபோது அவர்களையும் போர்வைக்குள் நுழைத்துக்கொண்டார்களாம். பிறகு, "இவ்வீட்டாராகிய உங்களைவிட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் விரும்புகிறான்" (33:33) எனும் இறைவசனத்தை ஓதிக் காட்டினார்களாம்” (முஸ்லீம் 4807)

”இதெல்லாம் எப்பொழுது நடந்தது..? உங்களுக்குச் சொன்னது யார்?” என்றார் உமர்

“என் மகள் ஆயிஷாதான் கூறினாள்”

“நாம் எல்லோருமே அல்லாஹ்வின் தூதருடன் எல்லா நேரத்திலும் இருப்பதில்லை. ஏதாவது இடைவெளியில் ஏடாகூடமாக நடந்துவிடுகிறது. முதலில் நாம் இதை ஒழுங்குபடுத்த வேண்டும்!”

“அந்த ஹஜ்ஜில் அல்லாஹ்வின் தூதருக்கு அருகிலேயேதான் நானும் இருந்தேன். இதையெப்படி கவனிக்காமல் இருப்பேன்..? அல்லாஹ்வின் தூதர் ஹஜ்ஜில் இருந்த பொழுது மக்களுக்காக தொடர்ந்து உரையாற்றிக் கொண்டுதான் இருந்தார். எப்பொழுது சொல்லியிருப்பார்? ஒன்றுமே புரியவில்லை!”

“... ...!” அபூபக்ர் அமைதியாக இருந்தார். உமர் தொடர்ந்து,

”குர்ஆனில் சட்டங்கள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்றுதானே! நீங்கள் குறிப்பிடும்(5:3) குர்ஆன் வசனத்திற்குப் பின்னரும் அல்லாஹ்வின் தூதருக்கு  பாகப்பிரிவினை பற்றிய கட்டளைகள் உட்பட நிறைய இறைச்செய்திகள்  வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தக் கட்டளைகளையெல்லாம் எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது?”

“... ...?”

“ஒருவேளை அந்த அந்த அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் நாம் அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இனி நிகழ இருப்பதை நம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர உங்களது ஒத்துழைப்பு மிக அவசியம்!” என்றார் உமர்


தொடரும்…
தஜ்ஜால்.