Monday 19 December 2016

முஹம்மதியம் கற்பிக்கும் பெண்ணுரிமை!


திருமணம் மற்றும் மணவிலக்கு போன்றவற்றில் முஹம்மதியப் பெண்களின் நிலை என்னவென்பதை கடந்த பதிவுகளில் கவனித்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சிலவற்றைக் காண்போம்.




முஹம்மதியம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற விமர்சனங்களை முன்வைக்கப்படும் பொழுதெல்லாம் நமது முஃமின்கள் துள்ளிக் குதித்து மறுப்புகளை எழுதுவது வழக்கம். அவை அனைத்திலும் குறிப்பாக ஒரு சில வாதங்கள் தவறாமல் இடம்பிடிப்பதைக் காணலாம்.

அன்றைய பாகன் அரேபியர்கள்,
பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர்.
அவர்கள் பெண்களை அடிமைகளாக நடத்தினர்.
பெண்களுக்கு சொத்துரிமைகளை வழங்கவில்லை.
பெண்களை ஒரு போகப் பொருளாக கருதினர்.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் எங்கள் கண்மணி நாயகம் முடிவுகட்டி, பெண்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்தார். அதுமட்டுமல்ல பெண்களுக்கு கல்வி, திருமணம், விவாகரத்து, பாகப்பிரினை என  உரிமைகளை வாரிவழங்கியிருக்கிறார் எங்கள் கண்மணி நாயகம் என்று புல்லரிக்க கதைப்பார்கள். கடந்த பதிவில் பகிர்ந்து கொள்ளவேண்டிய மேலு சில செய்திகள் இருப்பதால் முதலில் மணவிலக்குபற்றி கவனித்து விடுவோம். 

முதலில் மணவிலக்கு உரிமைபற்றிய முஃமின்களின் புல்லரிப்புகளிலிருந்து மேலும் சில அரிப்புகள்….

பெண்ணுரிமை பேணிய பெருமைமிகு இஸ்லாம்
…கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றும், கணவனே கண்கண்ட தெய்வம் என்றும், பத்தாம் பசலித்தனமாக பதிவிரதத் தத்துவம் பூவையர்க்குப் போதிக்கப்பட்டு வந்தமையால் கணவன் எத்துனை கொடியவனாக இருந்தாலும் அவனுடைய சித்திரவதைகள் எல்லாம் தாங்கி சித்தம் குலைந்து தவிர்க்கும் நிலை பல்வேறு மதங்களில் நிலவி வந்தபோது தகுதியற்ற கணவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் குல்உ என்ற உரிமையை உலகிற்கு அறிமுகம் செய்ததே உன்னத மார்க்கம் இஸ்லாம் அல்லவா?...

அதிரை எக்ஸ்பிரஸ்
கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன் என்ற ஆணாதிக்கச் சிந்தனைக்கு சாவுமணியத்து, ஆண்-பெண் இருபாலரும் சமம், ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர உரிமையுடையவர்கள் என்ற உன்னதக் கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய அழகிய மார்க்கம் இஸ்லாம்…

எது பெண்ணுரிமை?
…"ஆயிரம் காலத்துப் பயிர்" என்றும் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது" என்றும் பேசும் பிற மதத் திருமணக் கோட்பாடுகளை முற்றிலும் உடைத்துத் தகர்க்கும் இஸ்லாம், திருமணத்தை "ஒரு வாழ்க்கை ஒப்பந்தம்" என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது! திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்டுள்ள ஒரு பெண்ணின் சம்மதம் என்பதை, திருமணத்திற்குரிய முக்கிய சாராம்சமாக நபி(ஸல்) அவர்கள் ஆக்கியுள்ளார்கள்…

இஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..?
…’அலை எப்போது ஓய்வது… தலை எப்போது முழுகுவது' என்ற ரீதியில் காத்துக் கிடக்காமல், 'வாழப் பிடிக்கவில்லையா? அதற்கான காரணங்கள் சரியானதுதானா? அல்லது காரணமே சொல்லக்கூட விருப்பமில்லையா? நீ பிரிந்துவிடலாம்' என்று முந்திய விவாகத்தை ரத்து செய்து, பிடிக்காத வாழ்விலிருந்து பெண்களையும் விடுதலையடைய வைக்கும் மார்க்கம் இஸ்லாம்! 'கணவன்-மனைவி' என்ற உறவு பிரிக்க முடியாத பந்தமல்ல. எனவே திருமணமான ஒரே மாதமாக இருந்தாலும், ஒரே நாளாக இருந்தாலும், ஏன்... அந்த மறுநிமிடமாகவே இருந்தாலும், அந்த விவாகரத்து உரிமை இஸ்லாமியப் பெண்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது…
முஹம்மதியத்தில் மணவிலக்கு விரைவானது; இதைத்தான் முத்தலாக் என்று மிக எளிமைப்படுத்தியும் வைத்திருக்கின்றனர். முத்தலாக் முறையினால் முஹம்மதியப் பெண்களின் வாழ்க்கை பாதிப்புள்ளாகிறது; ஒரு சில வினாடிகளில் நடுத்தெருவிற்கு வந்துவிடுகிறார்களே என்று வினவினால்,

முத்தலாக் மூலம் பெண்களின் உரிமைகளை இஸ்லாம் பறிப்பது ஏன்?
விவாகரத்துச் செய்த பின் அதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களின் உரிமை பாதிக்கப்படுவது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தலாக் என்னும் விவாகரத்து முறையினால் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்ற உண்மையை அறியலாம்…

தலாக்கும் பொதுசிவில் சட்டமும்
பீ. ஜைனுல் ஆபிதீன்
…விவாகரத்துச் சட்டம் எளிமையாக்கப்பட்டிருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை. பின்வரும் வழிகாட்டுதலை இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது.
முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும்.
அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும்.
அதுவும் பயன் தராதபோது இலேசாக அடித்துத் திருத்த வேண்டும்.
விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.
இதன் பிறகும் இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு 4:35 வசனம் வழிகாட்டுகிறது.
இந்த நான்கு நடவடிக்கைகள் மூலமும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை. இந்நிலையில் வேறு வழியின்றி விவாகரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.

இன்று நடைமுறைகளில் இருக்கும் குடும்ப நீதிமன்றங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்ட நடைமுறைகளும் முதலில் கலந்தாய்வுகள் மூலம் இணையர்களுக்கிடையே நிலவும் கருத்துவேறுபாட்டை களைந்து, அவர்களை மீண்டும் மணவில் இணைக்க முற்படுகிறது. வேறுவழியில்லாத சூழலில் மணவிலக்கை அனுமதிக்கிறது என்று கூறினால்,

தலாக்கும் பொதுசிவில் சட்டமும்
பீ. ஜைனுல் ஆபிதீன்
முஸ்லிம்களாகிய நாங்கள் உரத்துச் சொல்கிறோம். நெஞ்சுயர்த்தி சொல்கிறோம்:
அற்புதமான விவாகரத்துச் சட்டம் இஸ்லாத்தில் வழங்கப்பட்டு இருக்கும் போது அதை ரத்து செய்து விவாக ரத்துக்காக நீதிமன்றங்களுக்கு ஆண்டுக்கணக்கில் அலைய நாங்கள் தயாராக இல்லை.

என்று இப்படி முன்னுக்குப்பின் முரணாக பேசிக் கொண்டிருப்பார்கள். இதுதான் முஹம்மதியத்திற்கு இருக்கும் தனிச் சிறப்பு. முத்தலாக் பற்றியும் அதன் நடைமுறைகளில் முல்லாக்களின் செய்யும் தகிடுதத்தங்களைப் பற்றியும் நாம் கடந்த பதிவுகளில் தேவையான அளவிற்கு கவனித்தோம். எனவே திரும்பவும் அதைப்பற்றி விவாதிக்க அவசியமில்லையென நினைக்கிறேன். முஹம்மதியத்தில் மணவிலக்கு மிக துரிதமானதுதான்; அதை எவரும் மறுக்க முடியாது.

முஹம்மதியத்தில் மணவிலக்கு விரைவுபடுத்தப்பட்டிருப்பது ஏன்?

பொதுவாகவே இன்று உலகெங்கிலும் மணவிலக்கு அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக நமது நாட்டிலும் அதன் சதவீதம் அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது.  இதற்கு மிக முக்கிய கரணம், நமது சமூகம் பொருளாதாரத்தில் பெரிய மாறுதல்களை சந்திக்கத் துவங்கியிருக்கிறது. குறிப்பாக நகரமயமாதல், பணப்புழக்கம் அதிகரிப்பு, நுகர்வுக் கலாசாரம் என நாளுக்குநாள் மாறிக் கொண்டே இருக்கிறது. இவைகளால் நட்பு, குடும்பப் பிணைப்பு போன்றவைகள் விடைபெற துவங்கிவிட்டன; தனிநபர் ஒழுக்கம் என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது. சமுதாயப் பிணைப்புகளின் தளர்வு உறவு சார்ந்த பிரச்சினைகளில் முடிகிறது; குடும்ப நல நீதிமன்றங்களை நாடவேண்டிய சூழலும் ஏற்படுகிறது. முறையான மணவிலக்கைப் பெற கால தாமதமும் ஏற்படுகிறது.

மணவிலக்குப் பெறுவதற்கு அவரவர் நம்பிக்கைகளுக்கேற்ப இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act )1955;  இஸ்லாமிய திருமண ரத்துச் சட்டம் (Dissolution of Muslim Marriages Act, 1939); கிறிஸ்தவர்கள் இந்திய மணவிலக்குச் சட்டம் (Indian Divorce Act, 1869); சாதி மற்றும் மத மறுப்பு திருமணம் செய்தவர்கள் சிறப்புச் சட்டம் (Special Marriage Act, 1954) என விதவிதமாக இருக்கிறது. ஆனால் இவற்றில் நம்முடைய முஹம்மது கற்பித்த ’முத்தலாக்’ மட்டுமே உடனடியாக மணவிலக்கை வழங்குகிறது.

இன்றைய நாகரீக அவசர உலகிற்கு தேவையான சட்டங்களை எங்களது கண்ணுமணி முஹம்மது 1400 ஆண்டுகளுக்கு முன்னமே அறிவித்துவிட்டார் என்று முன்னறிவிப்பு விரும்பிகள் வேண்டுமானால் சுயசொறிதலில் ஈடுபட்டுககொள்ளலாம்.

பொதுவாக மணவிலக்கிற்கு மிகப் பெரும் காரணியாக இருப்பது புரிதலற்ற தன்மைதான். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு உண்மையான அன்பைப் பரிமாறும் பொழுது அங்கு கருத்துவேறுபாடுகள் தானாக விலகிப்போகும். (உணர்ச்சிவசப்பட வேண்டாம்...!) இந்த அன்பைபற்றிதான் இலக்கியங்களில் காதலாக உருகிஉருகி எழுதிவைத்திருக்கின்றனர். இவர்களில் ஒருகூட்டம் கடவுளையே காதலித்தது. அதாவது கடவுளைத் தாயாக, குழந்தையாக, நண்பனாக, காதலியாக பாவித்து விதவிதமாக காதலெனும் அன்பை செலுத்தி வழிபட்ட முறைகளை நாம் இந்திய இறையியலிலும் காணலாம்.

கடவுளை அமைதியாக வழிபடுதலை சாந்த பாவமென்றும்; குழந்தையாக பாவித்து வழிபடுதலை வாட்சல்ய பாவமென்றும்; எஜமானனாக பாவித்து வழிபடுதலை தாசிய பாவமென்றும்; நண்பனாக பாவித்து வழிபடுதலை சிநேக பாவமென்றும்; காதலியாக பாவித்து வழிபடுதலை மதுர பாவமென்றும் கூறுவர்.

ஆண்டாள், மீரா போன்ற கதாபாத்திரம் மதுர பாவத்திற்கும்; பாரதியாரின் கண்ணன் பாடல்களை மேற்கண்ட பாவங்களுடன் குரு சிஷ்ய பாவத்திற்கும் உதாரணமாகச் சொல்லலாம். பைபிளில் வரும் உன்னதப்பாட்டும்கூட ஒருவகை பாவனைதான். முஹம்மதியத்தில் ஸூஃபி பிரிவில் இத்தகைய வழிபாட்டு முறை அதாவது கடவுளிடத்தில் அன்பு செலுத்தி வழிபடும் இருக்கிறது. ஆனால் மற்ற முஹம்மதியப்பிரிவுகள் ஸூஃபிக்களை மறைகழன்றவர்களென ஒதுக்கித் தள்ளிவிட்டன. முஹம்மது கற்பித்த வழிபாட்டில் மட்டுமல்ல  வாழ்வியலிலும் ஆண்டான் அடிமை முறைதான். அவர் போதித்த குடும்பயியலில்(?)  மேலோங்கி நிற்பது காமம் மட்டுமே. இதில் ஆண்களின் இச்சையை தணிக்கப் பயன்படும் உடைமையே பெண் என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைப் பொருளுணர்ந்து வாசித்த எவராலும் கூறமுடியும்!

உதாரணத்திற்கு ஒரு சில செய்திகளை மட்டும் பார்க்கலாம். முஹம்மதியம் பெண்களை ஆணின் உடைமைகளில் ஒன்றாகவே கருதுகிறதென்பதை முன்பே பலமுறை விவாதித்திருக்கிறோம் இருப்பினும் எளிமையான புரிதலுக்காக,

குர்ஆன் 2:223
உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்!...

குர்ஆன் 4:34
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! …

திர்மிதி 1163
Sayyidina Talq ibn Ali (RA) reported that Allahs Messenger (SAW) said, When a man calls his wife to satisfy his urge then she must go to him even if she is at the stove.

குர்ஆனின் எந்த ஒரு இடத்திலும் கணவனனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பு செலுத்தி வாழ வேண்டுமென்ற போதனைகளையோ அறிவுறுத்தல்களையோ காணவே முடியாது. மாறாக பெண்களை அடக்கியாள வேண்டும்; மறுக்கும் பொழுது அவர்களை எவ்வாறு கையாள வேண்டும்; எப்படி அடிக்க வேண்டும்; எங்கு அடிக்கக் கூடாது; மனைவியர்களின் எண்ணிக்கையை எவ்வாறு அதிகரிப்பது, எண்ணிக்கையை எவ்வாறு கட்டுக்குள் வைப்பது, மேலும்  அடிமைப் பெண்களுடன் கூடி இன்பம் தூய்பதற்கும், அதனால் விளையும் குற்ற உணர்வைக் களைவதற்கான நியாயங்களையும் இன்னும் பலவிதமான அறிவுறுத்தல்களையும் சலுகளைகளையும் ஆண்களுக்கு வாரி வழங்கியிருக்கிறது.

குர்ஆன் 2:187
… அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருந்தது அல்லாஹ்வுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள்!...

குர்ஆன் 4:24
உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும்(wal-muḥ'ṣanātu) (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை(ujūrahunna) கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தி யடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

இது அண்ணன் பீஜே அவர்களின் மொழிபெயர்ப்பு. மேற்கண்ட குர்ஆன் 4:24–ம் வசனத்தில் ”மணமுடிக்க”, ”மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர்”, ”திருமணம் செய்வது” மற்றும் “திருமணத்தின் மூலம்” என்றெல்லாம் அண்ணன் பீஜே திருகிச் சொருகியிருப்பதற்கும் குர்ஆனின் அரபி மூலத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை! குறிப்பாக  ”திருமணம் செய்வது உங்களுக்கு”, “நிர்ணயம் செய்த பின்” என்று திருமணத்தைக் குறிப்பிடும் எவ்விதமான வார்த்தைகளும் குறிப்பிட்ட இந்த வசனத்தில் இல்லை! திருமணத்தை அல்லது இணையரைக் குறிப்பிடுவதற்கு அரபியில் சரியான சொல், “Zawaj” என்பதாகும். இப்பதம்  குர்ஆன் 33:37-ம் வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (இதைப்பற்றி முன்பு ஒரு முறை நாம் கவனித்ததாக நினைவு.) அடைப்புக்குறிகளுக்குள் இருப்பவற்றைப்பற்றி எழுதி எழுதி எனக்கு அலுப்பாக இருப்பதால் அவற்றைப்பற்றி மேற்கொண்டு எதுவும் கூறவிரும்பவில்லை.

wal-muḥ'ṣanātu என்ற பதத்தை ”ஈமான் இறைநம்பிக்கை கொண்ட அடிமைகளல்லாத பெண்கள்”, “சுதந்தரமுள்ள முஸ்லிம் பெண்களை”, ”சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை”, “believing women”, “free believing women” என்றெல்லாம் மொழிபெயர்த்திருக்கின்றனர். உண்மையில் ”wal-muḥ'ṣanātu” என்பதன் நேரடிப் பொருள் கற்புள்ள பெண்கள் என்பதே.

அப்படியானால் இவ்வசனத்தில்,
”…மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து தேடிக் கொள்ளலாம். அவர்களில் யாரிடம் இன்பம் அனுபவிக்கிறார்களோ அவர்களுக்குரிய வெகுமதிகளை(ujūrahunna) கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடவேண்டும்…”
என்று குறிப்பிடப்படுவது என்ன?

’முத்ஆ’ எனப்படும் தற்காலிக உறவுமுறையைப் பற்றியே இங்கு குறிப்பிடப்படுகிறது என்பது சந்தேகத்திற்கு இடமிடன்றி சொல்லலாம். (விபச்சாரம் என்று கூறுவதற்கு பதிலாக தற்காலிக உறவு என்று குறிப்பிடுகிறேன்.) மேலும் ”ujūrahunna” என்பதை ’வெகுமதிஅல்லது ’கூலிஎன்று கூறுவதே சரியாக இருக்கும்.  ’முத்ஆஎன்ற தற்காலிக உறவுமுறையை, திருமணம் என்று திரித்துப் புகுத்துவதன் மூலம் கூலியை ’மஹ்ர்என்று மாற்ற முயற்றிவிட்டனர். முஹம்மதுவும் அவரது சமூத்தைச் சேர்ந்த ஆண்களும், பலதாரமணம், முத்ஆ எனப்படும் தற்காலிக உறவுமுறை, அடிமைப் பெண்களுடன் சல்லாபம் என்று பெண்ணினத்தின் மீது காமத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். அவர்கள் தாராள பாலுறவுச் சமூக இருந்திருக்கின்றனர் என்பதையே இத்தகைய பாலுறவு அனுமதிகள் காண்பிக்கிறது. எனவேதான் முஹம்மதியம் திருமண உறவை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.  இணையர்கள் தங்களுக்குள் நிலைநிறுத்த வேண்டிய அன்பையும், ஆதரவையும்பற்றி எதுவும் போதிக்கவில்லை. இப்பதிவின் துவக்கத்தில் திருமணம்பற்றிய முஃமின்களின் புல்லரிப்புகளை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். கடந்த பதிவில் கூறியதுபோல முஹம்மதியத் திருமணமுறை முழுக்க முழுக்க வியாபரம்தான்! எனவே  அத்தகையதொரு சமூகத்தில் மணவிலக்குகளும் மிக எளிமையாக இருப்பதில் ஆச்சரியப்படுபடுவதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் அடுத்தடுத்த இணைகளை நாடிச் செல்வதற்கு மணவிலக்குகள் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதால் அதை மிக எளிமைப்படுத்திவைத்திருந்தனர்.

எனது வாதத்திற்கு உதவியாக இன்னொன்றையும் இங்கு குறிப்பிடுகிறேன். முஹம்மதியத்தில் பால்குடி உறவு என்றொரு விதிமுறைகளைப்பற்றியும், பாலூட்டுவதற்கான காலவரைமுறைகளைப் பற்றி குர்ஆன் கூறுவதையும் அறிந்திருப்பீர்கள்.

அதென்ன பால்குடி உறவு? குழந்தைக்குப் பாலூட்டுவதைபற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் கற்பித்துதான் மனிதகுலம் அறிந்து கொண்டதா?

குழந்தையின் தாய் அல்லாதவர்களால் தாய்ப்பாலுட்டி வளர்க்கப்பட்டவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுமுறைகளை பால்குடி உறவுகள் என்கின்றனர். நம்முடைய முஹம்மதுகூட ஹலீமா என்ற பால்குடித் தாயால் வளர்க்கப்பட்டவர் என்பது உங்களுக்குத் தெரியும். நமது இந்தியக் கலாச்சாரத்திற்கு மிக அந்நியமாக இருக்கும் இத்தகைய உறவுகள், குர்ஆனில் சட்டமியற்றி நெறிப்படுத்துமளவிற்கு அன்றைய அரேபியாவில் மிகுந்து காணப்பட்டிருக்கிறது.

குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்கள் பால்கொடுக்க பிறரை நாடியது ஏன்?

முஹம்மதியத்தைப் பொறுத்தவரையில் குழந்தைகள், ஆணின் அதாவது தந்தையின் உடைமை. நிலையற்ற திருமண உறவுகள், துரித மணவிலக்குகள், தற்காலிக உறவான முத்ஆ போன்றவற்றினால் உருவாகும் குழந்தைகளை ஆண்களையே வந்தடைந்தன. குழந்தைகளை பாலூட்டுவதற்கும் பராமரிப்பிற்கும் அவர்கள் செவிலித் தாய்மார்களை அணுகினர்.

எனது இந்தக் கருத்தை இரண்டு விதமாக முஃமின்கள் மறுக்கலாம்.

அன்றைய அரேபிய செல்வந்தர்களிடம்   குழந்தைகளை பராமரிப்பிற்காக செவிலியர்களிடம் ஒப்படைப்பது வழக்கிலிருந்தது.

அரேபியாவில் செல்வச் சீமாட்டியாக இருந்த முஹம்மதின் முதல் மனைவி கதீஜா அம்மையார் அவரது குழந்தைகளை தாய்பாலூட்டி பராமரிக்க யாரிடம் ஒப்படைத்தார்? என்ற கேள்விக்கு பதிலளித்தால் நலம். மேலும் முஹம்மதின் தாய் ஆமீனா செல்வந்தர் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

குழந்தைகளை பாலூட்டி, சீராட்டி முழுநேரமும் பராமரித்துக் கொண்டிருந்தால் கணவனுடன் செலவிடும் (வேறெங்கு? படுக்கையில்தான்..!) நேரம் குறைந்து போகுமென்றும், நிறைய குழந்தைகளை உற்பத்தி செய்ய ஏதுவாக தாய்ப்பாலூட்ட செவியர்களை நியமித்துக் கொண்டனர்.

இதற்கு பதிலளிக்க பெரிய ஆய்வுகளெல்லாம் தேவையில்லை.  ஆமீனா மற்றும் கதீஜா இந்த இருவரையே எடுத்துக் கொள்வோம். வயதான காலத்திலும் கதீஜா முஹம்மதுவுடன் இணைந்து காஸிம், ஜைனப், ருக்கையா, உம்மு குல்ஸூம், ஃபாத்திமா, அப்துல்லா என்று ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். மீண்டும் அதே கேள்விதான் கதீஜா ஏன் செவிலித் தாய்மார்களை நாடவில்லை?

முஹம்மது பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே அவரது தந்தை அப்துல்லாஹ் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். கணவனில்லாத பெண்ணான ஆமீனா எதற்காக இருக்கும் ஒரே ஆதரவான குழந்தையான முஹம்மதையும் (அப்பொழுது அவரது பெயர் முஹம்மதல்ல!)  ஹலீமாவிடம் ஏன் ஒப்படைக்க வேண்டும்? ஆமீனா…. …?

முஹம்மதிற்கு அவரது தாயாரின் மீது பெரிதாக நல்ல கருத்து ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. பின் வரும் ஹதீஸை கவனியுங்கள்.

முஸ்லீம் 1776
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். அவன் அனுமதி வழங்கவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திக்க அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாவமன்னிப்பு கோருவதற்குக்கூட அல்லாஹ் அனுமதிக்கவில்லையாம்! அவர் அப்படியென்ன தவறு செய்தார்?
மீண்டும் பழைய கேள்வி ஆமீனா எதற்காக முஹம்மதை செவிலித்தாயிடம் ஒப்படைக்க வேண்டும்?
நாம் எடுத்துக் கொண்ட தலைப்பைவிட்டு விலகுவதாக தோன்றுவதல் இதை இத்துடன் நிறுத்திக் கொள்வோம்!

தாராளப் பாலுறவுமுறை அன்றைய அரேபியாவில் இருந்ததென்பதை ஆயிஷா அறிவிப்பதாகக் கூறும் ஒரு ஹதீஸ் விளக்குகிறது. சற்று பெரிய ஹதீஸ்தான் வேறுவழியில்லை படித்து விடுங்கள்.
புகாரி 5127
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
அறியாமைக் காலத்தில் நான்கு வகைத் திருமணங்கள் நடைபெற்றன:
முதல் வகை:
இன்று மக்களிடையே வழக்கிலுள்ள திருமணத்தைப் போன்றதாகும்: ஒருவர் மற்றொருவரின் பொறுப்பிலுள்ள ஒரு பெண்ணையோ அல்லது அவரின் மகளையோ பெண் பேசி 'மஹ்ர்' (விவாகக் கொடை) கொடுத்து மணந்து கொள்வார்.
இரண்டாம் வகைத் திருமணம்:
ஒருவர் தம் மனைவியிடம், 'நீ உன் மாதவிடாயிருந்து தூய்மையடைந்தவுடன் இன்ன பிரமுகருக்குக் தூதனுப்பி (அவர் மூலம் கருத்தரித்துக் கொள்வதற்காக) அவருடன் உடலுறவு கொள்ளக் கேட்டுக்கொள்!' என்று கூறிவிட்டு, அவளுடன் உடலுறவு கொள்ளாமல் அவளைவிட்டு அந்தக் கணவர் விலம் இருப்பார். அவள் உடலுறவுகொள்ளக் கேட்டுக்கொண்ட அந்த மனிதர் மூலம் அவள் கருவுற்றிருப்பது தெரிகிறவரை கணவர் அவளை ஒருபோதும் தீண்டமாட்டார். அந்தப் பிரமுகர் மூலம் அவள் கருத்தரித்துவிட்டாளெனத் தெரியவந்தால், விரும்பும்போது அவளுடைய கணவர் அவளுடன் உடலுறவு கொள்வார். குலச் சிறப்புமிக்க குழந்தை பிறக்க வேண்டுமென்ற (அற்ப) ஆர்வத்தினாலேயே இப்படிச் செய்து வந்தனர். இந்தத் திருமணத்திற்கு 'நிகாஹுல் இஸ்திப்ளாஉ' (விரும்பிப் பெறும் உடலுறவுத் திருமணம்) என்று பெயர்.
மூன்றாம் வகைத் திருமணம்:
பத்துப்பேருக்குக் குறைவான ஒரு குழுவினர் ஓரிடத்தில் ஒன்றுகூடி அவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். அவள் கருத்தரித்து பிரசவமாம் சில நாள்கள் கழியும்போது, அவர்கள் அனைவரையும் அவள் தம்மிடம் வரச் சொல்வாள். அவர்களில் எவரும் மறுக்க முடியாது. அனைவரும் அவளிடம் ஒன்று கூடுவார்கள். அப்போது அவர்களிடம் 'நீங்கள் செய்தது உங்களுக்கே தெரியும். (இப்போது) எனக்குக் குழந்தை பிறந்துவிட்டது'' என்று கூறிவிட்டு (அவர்களில் ஒருவரை நோக்கி) 'இவன் உங்கள் மகன், இன்னாரே!'' என்றே விரும்பிய ஒருவரின் பெயரைi அவள் குறிப்பிடுவாள். அவ்வாறே குழந்தை அந்த நபருடன் இணையும். அவரால் அதனை மறுக்க முடியாது.
நான்காம் வகைத் திருமணம்:
நிறைய மக்கள் (ஓரிடத்தில்) ஒன்று கூடி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்வார்கள். தன்னிடம் வரும் யாரையும் அவள் தடுக்கமாட்டாள்.
இந்தப் பெண்கள் விலைமாதுகள் ஆவர். அவர்கள் தங்களின் வீட்டு வாசலில் பல அடையாளக் கொடிகளை நட்டு வைத்திருந்தனர். அவர்களை விரும்பியவர்கள் அங்கே செல்வார்கள். இந்தப் பெண்களில் ஒருத்திக்குக் கருத்தரித்து குழந்தை பிறந்தால், அவளுடன் உடலுறவு கொண்ட அனைவரும் அவளுக்காக ஒன்றுகூட்டப்படுவார்கள். அங்க அடையாளங்களை வைத்து தந்தை - பிள்ளையைக் கண்டறியும் நிபுணர்களை அழைத்து வருவார்கள். தாம் (தந்தையெனக்) கருதிய ஒருவனுடன் அந்தக்குழந்தையை அந்த நிபுணர்கள் இணைத்துவிடுவார்கள். அந்தக் குழந்தை அந்தத் தந்தையிடம் சேர்க்கப்பட்டு 'அவரின் மகன்' என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டு வந்தது. (அவன் தன் குழந்தையல்ல என்று) அவனால் மறுக்கமுடியாது.
சத்திய(மார்க்க)த்துடன் முஹம்மத்(ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது இன்று மக்களின் வழக்கிலுள்ள (முதல் வகைத்) திருமணத்தைத் தவிர அறியாமைக் காலத் திருமணங்கள் அனைத்தையும் தகர்த்துவிட்டார்கள்.

முஹம்மது எப்பொழுது தடுத்தார்? எப்படித் தடுத்தார்?

ஒரு பதிலையும் உங்களால் பெற முடியாது!

அவர்கள் தடுத்தார், தகர்த்தார் என்று கூறினால் நீங்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

வாதத்திற்காக முஹம்மது தடை செய்தார் என்றே வைத்துக் கொள்வோம். அவர் அவ்வாறு செய்யும்வரை இத்திருமணமுறைகள் அன்று வழக்கிலிருந்திருக்கிறது எப்படி மறுக்க முடியும்?

இம்முறைகளில் பிறந்தவர்கள் தீர்வு பால்குடித் தாய்மார்கள் மட்டுமே. கண்மணி நாயகம் முஹம்மது அவர்கள், அன்று பாகன் அரேபியர் வழக்கிலிருந்த நடைமுறைகளை மானே தேனே பொன்மானே சேர்த்து இல்லாத அல்லாஹ்வின் பெயரால் கூறிக் கொண்டார்.

அன்றைய அரேபியா ஒரு தாராளப் பாலுறவுச் சமூகமாக இருந்திருக்கிறென்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.  குர்ஆன் போதிக்கும் கணவன் – மனைவி உறவில், உண்மையான அன்போ, காதலோ அல்லது பாசமோ இல்லை; அங்கு முதன்மைப்படுவது காமம் மட்டுமே. பெண் என்பவள் ஆணின் அடிமை; அவன் விரும்பியபொழுதெல்லாம் இன்பத்தை வழங்கும் ஒரு உடைமை. அதை விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் அவளுக்கென்று தனிப்பட்ட உணர்வுகள் கிடையாது என்று முஹம்மது கருதியிருக்கிறார். உதாரணத்திற்கு ஒரேயொரு ஹதீஸை மட்டும் கவனிப்போம்

புகாரி 3781
அனஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தார்கள். அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள். ஸஅத் இப்னு ரபீஉ அவர்கள் அதிக செல்வமுடையவராக இருந்தார்கள். - ஸஅத்(ரலி), 'அன்சாரிகள், நான் அவர்களில் அதிக செல்வமுடையவன் என்று அறிந்திருக்கின்றனர். என் செல்வததை எனக்கும் உங்களுக்குமிடையே இரண்டு பாதிகளாகப் பங்கிட்டு (கொடுத்து) விடுவேன். எனக்கு இரண்டு மனைவியர் உள்ளனர். அவர்களில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்தவளைப் பாருங்கள். நான் அவளை விவாகரத்துச் செய்து விடுகிறேன். அவள் ஹலால் (இத்தா முடிந்து பிறரை மணந்து கொள்ளத் தகுதியுடையவள்) ஆனதும் அவளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்" என்று (தம் முஹாஜிர் சகோதரரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபிடம்) கூறினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டார் விஷயத்தில் அருள் வளம் வழங்கட்டும்" என்று கூறி (கடைவீதி சென்று)விட்டார்கள்…

இந்த ஹதீஸைவிட, ஒரு கணவன் – மனைவி உறவை கேவலப்படுத்துவது எப்படியென்று தெரிந்தால் கூறுங்கள். முளைகெட்ட முல்லாக்களும், முஃமின்களும் இந்த ஹதீஸ் கூறும் கேடுகெட்ட சிந்தனையை தியாகம் என்றுகூறி புல்லரித்துக் கொண்டிருக்கின்றனர். குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் மட்டுமல்ல அன்றைய அரேபிய இலக்கியங்களிலும் இதே நிலையைக் காணலாம். கற்பனைக் கதைகளாயிருப்பினும் கலீபா ஹாரூல் அல் ரஷீத் காலத்தைச் சேர்ந்த ”1001 இரவுகள்” வாசித்தால் அன்றைய அரேபியாபியக் கலாச்சாரத்தையும் அங்கு நிலவிய காமக் களியாட்டங்களையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.  எதைப்பற்றியும் கவலைப்படாமல் முஹம்மதியத் திருமணங்கள் வெற்று வியாபார ஒப்பந்தங்களாகிப் போனதும் மணவிலக்குகள் துரிதகதியில் அரங்கேறுவதும் இதனால்தான்.

முஹம்மதியம் வழங்கும் பெண்ணுரிமைகளில் அடுத்தது. திருமணத்திற்கான உரிமை பெண்களிடமே இருக்கிறது. அதாவது பெண்ணின் சம்மதமில்லாமல் திருமணம் செய்ய முடியாதென்ற நிலை.

குர்ஆன் 4:19
இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.

அப்படியானால் ஒரு முஹம்மதியப் பெண் தனது விருப்பத்திற்கேற்ப தனது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கலாமா? அல்லது காதல் திருமணத்தை முஹம்மதியம் ஏற்றுக் கொள்கிறதா?
தொடரும்…


தஜ்ஜால்.