Thursday 27 February 2014

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -35


போர்க்களத்தில்  வானவர்கள்.…!

பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தையும் பலவிதமான உயிரினங்களையும் "குன்" (ஆகுக!) எனும் ஒற்றை சொல்லில் உருவாக்கி, தன் கட்டளையின் கீழ் வைத்தும் நிர்வகிப்பதாக கூறிக் கொள்பவன் நிச்சயமாக  வல்லமைமிக்கவனாகவும், நம் அனைவரின் கற்பனைக்கு எட்டாத அளவு ஞானம் உள்ளவனாக இருக்க வேண்டும். அத்தகைய சர்வ வல்லமைமிக்க ஆற்றல் தன்னால் படைக்கப்பட்ட படைப்பினத்தில் இருந்த ஒரு மிகச்சிறிய அற்ப மனித   கூட்டத்தை கட்டுப்படுத்த அல்லது அழிக்கபோர்வியூகம் அமைத்து, கையில் வாள் ஏந்திய  மலக்குகளை  குதிரையில் ஏற்றி, முஹம்மது நபிக்கு ஆதரவாக போரிட போர்க்களங்களில் இறக்கினான்.


புகாரி ஹதீஸ் -4118
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

புகாரி ஹதீஸ் -2813
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 4 அல்லது 5ஆம் ஆண்டில் நடந்த) அகழ் போரின் போது (போரின் முடிந்து) திரும்பி வந்து ஆயுதங்களை கீழே வைத்து விட்டு குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) தமது தலையை புழுதி மூடியிருக்க வந்தார்கள். நபி (ஸல்) அவர்களை நோக்கி நீங்கள் ஆயுதத்தை கீழே வைத்து விட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை கீழே வைக்கவில்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் எங்கே (போர் புரியப்) போகிறீர்கள் என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் இதோ இங்கே ! என்று பனூ குறைழா ( என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்கும் இடம்) நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதரும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்
(புகாரி 2813,4117,4118).

அசூரர்களை அழிக்க கடவுளர்களும், தேவர்களும் பலவிதமான சிறப்பு ஆயுதங்களுடன் போரிட்டதாக கூறும் இந்துமத புராண கட்டுக்கதைகளை விட சிறுபிள்ளைத்தனமானது. ஏனெனில் அவைகளில் காண்பிக்கப்படும் அசூரர்கள் பலவிதமான மாயசக்தி கொண்டவர்கள், அவர்களது கடவுளர்களுடன் நேரடியாக போரில் ஈடுபடும் அளவுக்கு வல்லமையுடையவர்கள்.   அசூரர்கள் எனப்படுபவர்கள்  சராசரி மனிதர்களில்லை.

அசூரர்களை ஏமாற்றவும் அவர்களுடன் சண்டையிடவும்  இந்துமதக் கடவுள்கள் மாறுவேடத்தில் வரவேண்டியதாக இருந்ததென்கிறது இந்துமதக் கதைகள். உதாரணத்திற்கு அசூரர்களை மயக்கி, ஏமாற்ற விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தாராம்.மோகினியின் அழகில் மயங்கிய சிவன், அது விஷ்ணு என்ற உண்மை புரியாமல் மயங்கிய சிவன் வழியெங்கும் இந்திரியத்தை  சிதறடித்தவாறு ஓடினானாம்! இப்படிப் போகிறது இந்துமதக் கதைகள். அசூரர்களை அழிக்க இந்துமதக் கடவுளர்கள் எத்தனை சிரமங்களைச் சாந்திக்க வேண்டியிருந்தது என்பதை விளக்கவே இதைக் கூறுகிறேன். ஆனால் முஹம்மதை எதிர்த்தவர்கள் மிகச் சாதரண மனிதர்களே! அதற்கே அல்லாஹ்விற்கு வானிலிருந்து வானவர் படையை இறக்க வேண்டியிருந்தது. (கடவுளர்களின் நிலைமை சற்று சிரமமாகத்த்தான் இருக்கிறது)

நபி (ஸல்) அவர்களின் எதிரிகள் அபூஜஹல் மற்றும் அவனுடய கூட்டத்தினரை பலவாறு சபிக்கறான். சவால் விடுகிறான். உடன்படிக்கை செய்து கொள்கிறான் (குர் ஆன் 8:56,57,58,61, 9:4). வேறு வழியில்லாமல் போருக்கு வியூகம் வகுக்கிறான் (குர் ஆன் 4:101, 102, 103, 104, 8:60). ஆயிரக்கணக்கில் மலக்குகளை அனுப்பி வாளெடுத்து போர் புரிய வைக்கிறான் (குர் ஆன் 3:124, 125, 8:9).

உங்களுடைய ரப்பிடத்தில் நீங்கள் பாதுகாவல் தேடிய பொழுது தொடர்ந்து அணிவகுத்து முன்னே) வரும்படியான ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு நிச்சயமாக நான் உதவி செய்பவனாக இருக்கிறேன் என்று  உங்களுக்கு அவன் பதிலளித்தான்.
(குர்ஆன் 8: 9)
உம்முடைய ரப்பு மலக்குகளிடம், நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். எனவே முஃமின்களை நீங்கள் உறுதிப்படுத்தங்கள். காஃபிரானவர்களின் இதயங்களில் திகிலை விரைவில் போடுவேன்; ஆகவே கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள் அவர்களிலிருந்து ஒவ்வொரு கணுவையும்  வெட்டுங்கள் என்று அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)
(குர்ஆன் 8:12)

(பத்ருப்போரில்) அவர்களை நீங்கள் வெட்டவில்லை எனினும் அல்லாஹ் வெட்டினான். (மண்னை அவர்களின் மீது) நீர் எறிந்த போது (அதை நபியே) நீர் எறியவில்லை எனினும் அல்லாஹ் எறிந்தான்
(குர் ஆன் 8:17)

1000 அல்லது 3000 அல்லது 5000 போர் அடையாளம் உள்ள மலக்குகளை அல்லாஹ் அனுப்பியதாகவும் ஹதீஸ்களிலும் காணப்படுகிறது


புகாரி ஹதீஸ் -3995
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், இதோ ஜிப்ரீல்! போர்த்தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.

முஹம்மது நபி  அவர்களின் எதிரிகள் எவ்வித சிறப்பு சக்திகளும் இல்லாத நாகரீகமறியாத மிகச் சாதாரண மனிதர்கள்சில ஆயிரங்களில் மட்டுமே எண்ணிக்கை கொண்டவர்கள். அவர்களிடம், வாள், அம்பு, ஈட்டி, கற்களைத் தவிர எந்த சிறப்பு ஆயுதங்களும் கிடையாது. குதிரைகள், ஒட்டகங்களைத் தவிர எந்த வாகன வசதியும் கிடையாது. மேலும் இன்று இஸ்லாமுக்கு எதிராக உள்ளவர்களின் எண்ணிக்கையில் மிக சொற்பமானவர்கள். இன்றுள்ளது போல எவ்வித தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியும் அவர்களுக்கு கிடையாது

எதிரிகளுடன் போர் புரிய உற்சாகப்படுத்துகிறான்,

தங்களுடைய சத்தியங்களை முறித்து (நம்) ரஸூலை (ஊரைவிட்டு) வெளியேற்ற எண்ணிய கூட்டத்தாரிடம் நீங்கள் போர் புரிய வேண்டமா? அவர்கள் (தாம்) முதன் முறையாக உங்களிடம் (போரைத்) துவக்கினர்; அவர்களுக்கு அஞ்சுகறீர்களா? அல்லாஹ்–அவனே அஞ்சுவதற்கு மிகத் தகுதியானவன்- நீங்கள் (உண்மையான) முஃமின்களாக இருந்தால்.
(குர் ஆன் 9:13)

புஹாரி ஹதீஸ் :   3992       
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, உங்களிடையே பத்ருப் போரில் கலந்து கொண்டவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள் என்றோ அல்லது அதுபோன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல் (அலை) அவர்கள், இவ்வாறு தான் வானவர்களில் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்) என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப் போரில் கலந்து கொண்டவரான ரிஃபஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரகீ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் பின் ரிஃபஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

போர் புரிய வராதவர்களை எச்சரிக்கிறான் (குர் ஆன் 9:39,81,83,90,93–97), சபிக்கிறான் (குர் ஆன் 8:16, 9:94–97).  வெற்றி பெற்றவுடன் மகிழ்ச்சியால் திளைக்கிறான். போரில் கைப்பற்றிய பெண்கள் மற்றும் இதர பொருட்களை பங்கு பிரித்து தருகிறான் (குர் ஆன் 48:15). முஹம்மது நபி  அவர்களின் படை புறமுதுகிட்டால் எச்சரிக்கிறான், சபிக்கிறான்.

(அல்லாஹ்வின்) ரஸூல் உங்களுக்கு பின்னாலிருந்ருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க எவர்பக்கமும் நீங்கள் திரும்பிப்பார்க்காமல் விரண்டோடிக் கொண்டிருந்ததை (நினைத்துப்பாருங்கள்) எனவே (நீங்கள் ரஸூலுக்கு கொடுத்த) துக்கத்திற்கு பகரமாக (தோல்வி எனும்) துக்கத்தை உங்களுக்கு பிரதிபலனாகக் கொடுத்தான்…
(குர் ஆன் 3:153)


முஹம்மது நபி  அவர்களின் மனைவியருக்கிடையே ஏற்படும் சக்களத்தி சண்டையை பஞ்சாயத்து செய்கிறான். யாரும் எந்த கேள்வியும்  கேட்கக் கூடாதென்பதற்காக நபியே உம்மை படைக்கவில்லையென்றால் இந்த பிரபஞ்சத்தையே படைத்திருக்க மாட்டேனென்றும், நீரே இறுதித் தூதர் என்றும் பாதுகாப்பளிக்கிறான். யாராவது உயிர், ரூஹ் என சிக்கலான கேள்வியை கேட்டால், வஹி வரும் வேளையில் இது போன்ற கேள்விகள் வஹியை தடுத்து விடும் தேவையற்ற வீண் கேள்விகளால் உங்களது முன்னோர்கள் அழிந்ததைப் போன்று நீங்களும் அழிய வேண்டாம் என எச்சரிக்கிறான். (குர்ஆன் 2:108). போர்க்களங்களுக்கு மலக்குகளை  அனுப்புவதற்கு முன்பாகவே ஒரு இரவில், நபியை விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் சென்றனாம்.

Thursday 20 February 2014

இரும்பு இறக்கப்பட்டதா?முதலில் குர்ஆனிலிருந்து சில அறிவியல்(!) வசனங்கள்

குர் ஆன் 7:26.
Yābanī ādama qad anzalnā ʿalaykum libāsan yuwārī sawātikum warīshan..
ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம்...

குர் ஆன் 39:6
...wa-anzala lakum mina l-anʿāmi thamāniyata azwājin..
.... கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான்...
குர்ஆன் வசனங்களில் வரும் ’anzalnā’ என்ற சொல்லில் பெரும் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய முன்னறிவிப்பு மறைந்துள்ளதை இஸ்லாமிய அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதைப் பார்ப்பதற்குமுன், அவர்கள் தரும் விளக்கத்தை மேற்கண்ட வசனங்களுக்குப் பொருத்திப் பார்க்கலாம்.

(பலியிடத்தக்க) கால்நடைகளும், மனிதர்களை அலங்கரிக்கும் ஆடைகளும், தராசு போன்ற கருவிகளும்  பூமியிலே உருவானதல்ல என்பதை விஞ்ஞானிகள் தக்க காரணத்துடன் விளக்கியுள்ளனர். இவைகளை இம்மண்ணிலிருந்தே நாம் பெற்றுக்கொள்வதால் குர்ஆன் கூறுவது நமக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஒவ்வொரு பொருட்களும் உருவாவதற்கு, அதற்கேற்ற சூழல் இருக்க வேண்டும். கால்நடைகளும், மனிதர் அணிவதற்குத் தகுந்த ஆடைகளும், தராசு போன்ற கருவிகள் பூமில் உருவாக வாய்ப்பின்றி இருந்தது.  ஆனால் இன்றும் இவைகள் மனிதர்களின் பயன்படுத்திக் கொண்டிருப்பவைகள். ஆடைகளையும்  தராசுகளையும் மனிதர்களால் உருவாக்க முடியாது; இவை எங்கிருந்து வந்தன? யாரால் உருவாக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் மனித இனம் இன்றும் தவித்துக் கொண்டிருக்கிறது.

விலங்குகள், ஊர்வன, பறப்பன, புழு, பூச்சிகள், கிருமிகள், நுண்ணுயிர்கள்.... போன்ற பலவைகயான உயிரினங்கள் பூமியிலே உருவானவைகள். ஆனால் பலியிடத்தக்க  பலியிடத்தக்க எட்டு ஜோடி கால்நடைகள் பூமியில் உருவானவைகள் அல்ல! அதென்ன எட்டு ஜோடி என்கிறீர்களா? வெள்ளாடு, செம்பறியாடு, மாடு, ஒட்டகம், எருமை, கழுதை, கோவேறு கழுதை, குதிரை போன்றவைகளாம். இவைகளும், ஆண்களுக்கு, கோவணம் முதல் கோட்சூட் வரையிலும் பெண்களுக்கு புர்கா முதல் பிகினி வரையிலான உடைகள் பூமியில் உருவானவைகள் அல்ல. இவைகள் எங்கிருந்து வந்தது என்பதிலும் மனிதர்கள் இன்றுவரை குழப்பதிலேயே இருந்தனர். வேறு எங்கிருந்தாவது இறக்கியிருக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இதற்கான பதிலை, 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த  முஹம்மது பின் அப்துல்லா என்ற பல்துறை வல்லுநர் வழியாக அல்லாஹ் அறிவித்திருக்கிறான். இவைகள் இப்பூமியில் உற்பத்தியாகவில்லை, மேலேயிருந்துதான் இறக்கப்பட்டது என்பதை அற்புதமாக அறிவித்திருப்பதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.

இறங்கியது.. இறங்கியது... என்கிறீர்களே எங்கே இறங்கியது என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இதற்கென்று சிறப்பு ஆய்வுகள் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு ஆடை விற்பனை நிலையங்களுக்குச் செல்பவர்கள் அங்கு, விற்பனைக்குத் தேவையான சரக்கு வாகனங்களிலிருந்து இறக்கப்படுவதை கவனித்திருக்கலாம். இந்த இறக்குதலைத்தான் குர்ஆனும் குறிப்பிடுகிறது. இதுபோன்ற அரிய உண்மைகளைக் கூறுவதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.

குர் ஆன் 57:25
...wa-anzalnā maʿahumu l-kitāba wal-mīzāna liyaqūma l-nāsu bil-qis'ṭi. wa-anzalnā l-ḥadīda fīhi basun shadīdun wamanāfiʿu lilnnāsi...
..அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலைநாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும், மக்களுக்குப் பயன்களும் உள்ளன...

குர்ஆன் 57:25 வரும் wa-anzalnā (இறக்கினோம்) என்ற சொல் (இங்கே, இங்கே, இங்கே)அறிவியலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் முன்பு பார்த்த 7:26, 39:6 போன்ற வசனங்களில் வரும்  ’anzalnā’-க்களை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர்.  இது முல்லாக்களின் ஓரவஞ்சனை, இது அவர்கள் குர்ஆனுக்கு செய்யும் பச்சை (சிவப்பு, மஞ்சள் பிங்க்) துரோகம் என்று குற்றம்சாட்டுகிறேன். எனவேதான் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யத் தவறியதை, என்னால் முடிந்த அளவிற்கு நிறைவேற்ற, குறிப்பிட்ட அந்த குர்ஆன் வசனங்களுக்குள்  அறிவியலை(!) ஏற்றியிருக்கிறேன். (இந்த இடத்தில் நீங்கள்,  ஜஸாக்கல்லாஹ் ஹைர் என்று சொல்லவேண்டும்!)

குர்ஆன் 57:25-ல் அறிவியல் இருக்கிறதா?

இரும்பு மட்டுமல்ல தனிமவரிசை அட்டவணையிலுள்ள அனைத்து தனிமங்களும் பெருவெடிப்பிற்குப் பிறகு உருவானவைகள்தான்.  சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் எனும் கன ஹைட்ரஜன் வாயுவின் மையக்கரு உருவாகி இருக்க வேண்டும் எனவும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக்கரு உருவாகி இருக்க வேண்டும் என்றும் அவைகளிலிருந்து ``லிதியம் மற்றும் ``பெரில்லியம் போன்றவற்றின் தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும் எனவும் ஹாக்கிங் கூறுகிறார்.

ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியமாக இணைகிறது,  ஹீலியம் வாயு கனமான கார்பன், நியான், ஆக்ஸிஜன், சிலிகான் ஆக மாற்றமடைகின்றன. சிலிகான் இரும்பாக மாற்றம் பெறுகிறது. பெருவெடிப்பிற்குப் பின்னர் தோன்றிய சூரியன்கள் (நட்சத்திரங்கள்) மாபெரும் அதிவெப்ப செம்பூதங்களாக(Red giant) இருந்தன. அதன் பின்னர் சிறிது காலத்துக்குப் பின்னர் பெரும் சூப்பர்நோவாக்களாக வெடித்துச் சிதறின. சூப்பர் நோவாக்களாக வெடித்துச் சிதறிய இந்த சூரியன்களே இன்று இருக்கும் சூரியன் மற்றும் பூமி போன்ற கிரகங்களின் அடிப்படை செங்கற்களாகவும் ஏன் உயிர் தோன்றவும் இன்றியமையாத அடிப்படை செங்கற்களாக இருக்கும் தனிமங்களை உருவாக்கித் தந்தன என்று ஆய்வு கூறுகிறது.4.567 பில்லியன் வருடங்களுக்கு  முன் நிகழ்ந்த சூரிய நெபுலாவிலிருந்து, நாம் வாழும் இப் புவி மற்றும் இதர கோள்கள் தோன்றின. இளகிய நிலையிலிருந்த பூமியினுள், நெபுலக்களின் சிதறல்கள், எரிகற்கள், விண்கற்கள் போன்றவைகள் புதைந்தது. பூமியில் மிக அரிதாக காணப்படும் தங்கம் போன்ற உலோகங்ளும் இவ்வாறு வந்தவைகளே .
நமது சூரியக்குடும்பம் மட்டுமே இது நடந்த ஒரே இடம் அல்ல. அண்டத்தில் ஏறத்தாழ நமக்குத் தெரிந்து 200 பில்லியனுக்கும் மேற்பட்ட சூரியன்களும் அதைச் சுற்றி கிரகங்கள் இருக்கின்றன. இத்தனை கிரகங்களிலும் ஏராளமான அதிக எடை கொண்ட உலோகப் படிவங்கள் இருக்கின்றன. இரும்பு, சூரியக் குடும்பத்தில் மிகப் பரவலாகக் காணப்படுகிறது.  அண்டத்தில் பத்தாவது அதிகமாகக் கிடைக்கும் தனிமம் என்று கணக்கிடப்படுகிறது.இரும்பு, எப்பொழுதிலிருந்து, யாரால் மனிதர்களிடையே பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பெற்றதென்று குறிப்பாக வரையறுக்க இயலாது. பண்டைய எகிப்தியர்கள் இரும்பை வானிலிருந்து வந்த உலோகம் என்று அழைத்திருக்கின்றனர். இதன் பொருள் எரிகற்களில் காணப்படும் தனித்த இரும்புத்தாதுவை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்பதுதான்.  இதே கருத்தில் மெசபடோமியர்களும் இருந்திருக்கின்றனர்.  எனவே குர்ஆன் 57:25-ல் அறிவியல் முன்னறிவிப்பு எதுவுமில்லை; பண்டைய கால நம்பிக்கைகளையே அது பிரதிபளிக்கிறது. மேலும், முஹம்மது ஆங்காங்கே தான் கேட்ட கேள்விப்பட்ட செய்திகளையெல்லாம் அல்லாஹ் என்ற கடவுளின் பெயரால் அளந்துவிட்டிருக்கிறார் என்பதையும் நிரூபிக்கிறது.

குர்ஆன் 7:26-ல் வரும் anzalnā வை ’அருளினோம்’ என்று மொழிபெயர்த்து குர்ஆனின் உளறலை சரிகாண முயற்சித்ததன் மூலம், பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் தங்களது இயலாமையை ஒப்புக்கொண்டு விட்டனர் என்ற முடிவிற்கே நாம் வரவேண்டியுள்ளது. குர்ஆனிலுள்ள கால்நடைகள், உணவு, ஆடை, தண்ணீர், தண்டனை, தராசு புத்தகம் என்று பல இடங்களில்  anzalnā (இறக்கினோம்) என்ற சொல் பயன்படுள்ளது; இவைகளும் வானிலிருந்து இறக்கப்பட்டவைகளா என்ற கேள்வியை கண்டுகொள்ளாமல், இரும்பைமட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அறிஞர்களைக் காண பரிதாபமாகத்தான் இருக்கிறது.தஜ்ஜால்

Wednesday 12 February 2014

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் -34

சந்திரனும் பிளந்து விட்டது…!

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது நபி, நபித்துவத்தை  நிருபிக்கும் விதமாக சந்திரனை இரண்டாக பிளந்து அற்புதம் நிகழ்த்தினார். இரண்டாக பிளந்த  சந்திரனின் ஒரு பகுதி மலையின் மேல் பகுதியிலும் மற்றொரு கீழ் இந்த பகுதியிலும் சென்றதை முஹம்மது நபி  அவர்களுடைய தோழர்களும் கண்டனர்புஹாரி ஹதீஸ் :   3637       
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது.
மக்காவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். ஆகவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாகநபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.

புஹாரி ஹதீஸ் -4864
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று சொன்னார்கள்.

இச் சம்பவத்தை அல்லாஹ்வும் குர்ஆனில் சாட்சி கூறுகிறான்.

(நியாயத் தீர்ப்புக்குரிய அந்த) நாள்  நெருங்கிவிட்டது, சந்திரனும் பிளந்துவிட்டது

எந்த ஓர் அத்தாட்சியை அவர்கள் பார்த்தாலும் (அதனை) புறக்கணித்து விடுகின்றனர் (இது நாள் தோறும்) நடந்துவரும் சூனியம் என்று கூறுகின்றனர்.
(குர்ஆன்   54: 1-2)

இது ஒரு முரண்பாடான செய்தியாகும்முதலாவது இது குர்ஆனுக்கு முரண்படுகிறது. இரண்டாவதாக வானவியலுடன் முரண்படுகிறது

நான் (அவனால்) ரஸூலாக அனுப்பப்பட்ட ஒரு மனிதரே தவிர வேறாக இருக்கிறேனா? என்று கூறுவீராக.
(குர்ஆன் 17: 93)

நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர்தாம்;…
(குர்ஆன் 13:7)

புஹாரி ஹதீஸ் :4981  
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.       
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒவ்வோரு இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப் பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான்

மற்ற நபிமார்கள் அற்புதங்கள் நிகழ்த்தியிருந்தாலும் தன்னுடைய அற்புதமாக குர்ஆனை மட்டுமே உறுதியாக முன்வைத்தார். எனவே முஹம்மது நபி அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறுவது குர்ஆனுக்கு எதிரானது.

இரண்டாது முரண்பாடு வானவியலுடன்,

சந்திரன் இரண்டாக பிளந்து விழுவது மிகப் பெரும் வானியல் அற்புதம், ஆதாரம். அத்தகைய ஒரு நிகழ்ச்சியை மக்காவில் மட்டுமல்லாமல், உலகின் பெரும்பாலான மக்கள் நிச்சயமாக கண்டிருக்க வேண்டும் அல்லது அதன் தாக்கத்தை உணர்ந்திருக்க முடியும். ஏனெனில் பூமியைச் சுற்றிவரும் சந்திரன் இரண்டு பகுதியாக பிளந்தால், அது புவியின் இயக்கத்தில் பெரும் மாறுதலை  ஏற்படுத்திருக்கும். இந்த அற்புத நிகழ்ச்சிக்கு, இவர்களின் வாய்மொழி மட்டுமே சாட்சிநம்பிக்கையான ஒரு சிறு ஆதாரம் கூட உலகின் எந்த பகுதியிலிருந்தும் இல்லை. பல நாடுகளில்  சூரிய, சந்திர கிரகணங்களையும் பற்றி குறிப்புகள் நிறைய காணப்படுகிறது. நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு  பருவகால மாற்றங்களையும், ஜோதிடங்களையும் கூறியவர்கள், சந்திரன் இரண்டாக பிளந்த அற்புதத்தைப் பற்றி எதுவும் ஏன் கூறவில்லை?

இதற்கு முஸ்லீம்களின் பதில்,

இந்தியாவை ஆண்ட அரசர் ஒருவர் சந்திரன் இரண்டாக பிளந்த நிகழ்ச்சியைக் கண்டு, அரேபியாவில் புதிதாக ஒரு தூதர் தோன்றி விட்டதாக உணர்ந்து, மக்காவிற்கு தனது மகனை அனுப்பியதாகவும், முஸ்லீமாக மதம் மாறிய அவர் இந்தியாவிற்கு திரும்பும் வழியில் ஏமனில் இறந்ததாக  கூறுகிறார்கள். இதுவும் முஸ்லீம்களால் உருவாக்கப்பட்ட கதை. முஹம்மது நபி தன் வாழ்நாளில் எந்த ஒரு இந்திய அரசரையும் சந்தித்ததாக எந்தவிதமான ஆதாரமும் இல்லை. மேலும் உலகில் உள்ள மற்ற எவருடைய கண்களுக்கும் தென்படாமல் ஒரே ஒரு இந்திய அரசர் மட்டும் பார்த்ததாக கூறுவது சரியான வேடிக்கை.

மேலும் இந்திய அரசர் பார்த்ததாக வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், அந்த வானவியல் நிகழ்ச்சி, புதிய தூதர் அரேபியாவில் தோன்றியுள்ளார் என்று எவ்வாறு குறிப்பிடும்? இவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும், முஸ்லீம்கள் சந்திரன் இரண்டாக பிளந்து மீண்டும் முழுதாக தோன்றியது என்று வாதிடுகின்றனர். சந்திரனைப்பற்றி, நாசா வெளியிட்ட புகைப்படங்களில் காணப்படும் செங்குத்தான வெடிப்புகளை ஆதாரமாக முன்வைக்கின்றனர். அவைகளைப் பார்த்தால் எவரும் தயக்கமின்றி, குர்ஆன் கூறுவது சரிதான் என்று ஒப்புக் கொள்வார்கள்.

உண்மையில் அவைகள் Lunar Rilles, பல கிலோமீட்டர்கள் அகலமும் நூற்றுக்கணகான கிலோ மீட்டர்கள் நீளமும் கொண்டவைகள். இவை சந்திரனின் பல இடங்களில் இத்தகைய வெடிப்புகள் காணப்படுகிறது. இதே போன்ற அமைப்புகள்செவ்வாய், வெள்ளி மற்றும் துணை கிரகங்களிலும் காணப்படுகிறது. இது இயற்கையாக ஏற்படும் அமைப்புகள்.

 சந்திரனில் பிளவுகள் இருக்கிறதா என்பதல்ல கேள்வி. முஹம்மது நபி சந்திரனை இருகூறுகளாகப் பிளந்து பின்னர் அதனை இணைத்தாரா? என்பதுதான் கேள்வி.


பிளந்தது சந்திரன் தானா? சந்திரனை பிளந்ததோடு அற்புதம் நிறைவடையவில்லை, அடுத்தது வானிலிருந்து வந்த வானவர்கள் நிகழ்த்திய அற்புதம்.