Friday 19 December 2014

குர்ஆன் கூறும் அறிவியல் : வேற்று கிரக உயிரினங்கள்!-3



“அஸ்ஸலாமு அலைக்கும்... “

“சகோதர சகோதரிகளே கேள்வி-பதில் நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கிறது. யார் யாருக்கெல்லாம் டோக்கன் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டும்தான் கேள்வி கேட்க முடியும். ஒருத்தர் ஒரு கேள்விமட்டும் கேட்கலாம். துணைக் கேள்விகளுக்கு அனுமதி கிடையாது” என்று உதவியாளர் ஒருவர் விதிமுறைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

“மைக்க... கொஞ்சம் ஆஃப் பண்ணச் சொல்லு...” என்றேன்.

‘கிளிக்’ என்று மைக் ஆஃப் செய்யப்பட்டது

”ஏம்ப்பா... இந்துக்களுக்கும், கிறிஸ்டியன்களுக்கும் எத்தனை டோக்கன் கொடுத்திருக்கீங்க, எல்லாம் கரெக்டாதானே செஞ்சிருக்கீங்க?” இது நான்.

“மொத்தம் 10 டொக்கன்தான் குடுத்திருக்கோம், மஃரிப் தொழுகை இருக்க்றதால சீக்கிரமாக முடிச்சிறலாம்.  எல்லாம் நம்ப ஆளுகதான்ணே... விவகாரமா ஒன்னும் இருக்காது...!”

“சரி... மைக்க ஆன் பண்ணு ஆரம்பிக்கலாம்!”

“அஸ்ஸலாமு அலைக்கும்!  சகோதர சகோதரிகளே. இந்த பயான் சம்பந்தமான உங்க கேள்விகள கேட்கலாம்!”

கூட்டம் சிறிது சலசலத்து பின் அமைதியானது.

“எல்லோருக்கும் வணக்கம்! என் பேர் பிச்சாண்டி. குர்ஆன்ல நிறைய அறிவியல் முன்னறிவிப்புகள் இருக்குன்னு சொலறாங்க. அதையெல்லாம் எங்கள மாதிரி மாற்று மதத்த சேர்ந்தவங்க எப்படி தெரிஞ்சிக்கிறது?”

“சகோதரர் ஒரு அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறார். அவர் என்ன கேட்கிறார்னா... குர்ஆன்ல நிறைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருக்குது அத மாற்று மதத்தைச் சேர்ந்தவங்க எப்படி தெரிஞ்சிக்கிறதுனு கேட்கிறாரு... அது ரொம்ப சிம்பிளானது... நீங்க எங்க இணையதளத்தில இலவசமாகவே படிச்சி தெரிஞ்சிக்கலாம் அல்லது நாங்க வெளியிட்டிருக்கிற (டுபாக்)குர்ஆனும் அறிவியலும்கிற புடிச்சு தெரிஞ்சிக்கலாம். சகோதரர் பிச்சாண்டிக்கு  அந்த புத்தகத்தோட பிரதி ஒன்னு கொடுத்திருங்க..."



“அஸ்ஸலாமு அலைக்கும்! என் பேர் ராபியா. உங்க பயான் ரொம்ப சிறப்பா இருந்திச்சு...அல்லாஹ் உங்களுக்கு எல்லா நலனையும் கொடுக்க துஆ செய்யறேன்...”

“மைக்க சரியா வைச்சு பேசுங்க...!”

“வேற கிரகத்தில உயிரினங்கள் இருக்கும்னு சொன்னீங்களே... அங்கே இருக்கிறவங்களும் அல்லாஹ்வைத்தான் வணங்குவாங்களா? அவங்களுக்கும் இதே குர்ஆன் தானா?”


“வேற்று கிரகத்திலிருக்கிறவங்களுக்கும் அல்லாஹ்வை வணங்குவாங்களா, ஆவங்களுக்கும் இதே குர்ஆன்தானான்னு சகோதரி ராபியாகேட்கறாங்க... அகில உலகத்திற்கும் ரஹ்மத்தாக குர்ஆனை அருளியிருப்பதாக அல்லாஹ் சொல்கிறான். ’கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்...’ என்று குர் ஆன் 10:66 சொல்கிறது. எனவே வேறகிரகங்களில் உயிரினங்கள் இருந்தால் அவர்களுக்கும் இதுதான் வழிகாட்டி. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பியிருப்பதாக அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான். இதன் அடிப்படையில பார்த்தோம்னா அவர்களுக்கும் அல்லாஹ் மட்டுமே இறைவனாக இருக்க முடியும்!”



”அஸ்ஸலாமு அலைக்கும், என் பேர் அல்லாஹ் பிச்சை, நான் குஞ்சாண்டியூர்ல இருந்து வர்றேன். குர்ஆன்ல நவீன அறியலைப்பற்றி சொல்லியிருக்குனு நீங்க கொடுத்த விளக்கம் ரொம்ப ஸூப்பரா இருந்துச்சு...”

“ரொம்ப சந்தோஷம் நீங்க கேட்க விரும்பறதசீக்கிறமாக கேளுங்க நிறைய பேர் கேள்விகேட்க காத்துக்கிட்டிருக்காங்க...”

”சரி... வானத்தில உயிர்னங்கள் இருக்கிறத குர்ஆன் குறிப்பிடுறதா சொன்னீங்க, நம்ம ரஸூல்ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவங்க மிஹ்ராஜ் பயணம் போனப்ப பார்த்த வானமும் நீங்க குறிப்பிடுற வானமும் ஒன்னுதானா?”

”க்ளிக்” மைக் நிறுத்தப்பட்டது. அருகிலிருக்கும் உதவியாளரிடம்,

“டேய்...  தம்பி... இங்கே வா... டொக்களை சரியான ஆட்களுக்குத்தான் குடுத்தியா?” என்றேன்

“ஆமாண்ணே... கரெக்ட்டாதான் கொடுத்தோம். எப்படி சொதப்பினாங்கன்னு தெரியலை நான் போய் பார்க்கறேன்!” என்றான்

“போ சிக்கிரம் போய்ப் பாரு நான் எதையாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்!”
“க்ளிக்” மீண்டும் மைக் ’ஆன்’ செய்யப்பட்டது.

“சகோதரர் என்ன கேட்கிறார்னா... ரஸூல் ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவங்க மிஹ்ராஜ் போன போது பார்த்ததாகக் கூறப்படும் வானத்தைப்பத்தி கேட்கிறார்”

“நான் அப்படிக் கேட்கல..” என்று சொல்லும் அல்லாஹ் பிச்சையின் குரலை யாரும் பொருட்படுத்துவதாக இல்லை.

“ரஸூல் ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவங்க சென்ற மிஹ்ராஜ் பயணம் ஆத்மரீதியான பயணம்தான்கிறத விஷயத்தை நீங்க மொதல்ல ஒரு விளங்கிக்கறனும். அழைச்சிக்கிட்டு போகற மாதிரியும், அங்கே வானங்கள் இருக்கிற மாதிரியும், அதற்குக் கதவுகளும் காவலாளிகளும் இருக்கிற மாதிரியும் காட்சிகள் காண்பிக்கப்பட்டது. அந்த வானமும், குர்ஆன் நேரடியாகக் குறிப்பிடுற வானமும் ஒன்னு கிடையாது. நாம அடுத்த கேள்விக்குப் போகலாம்!”

”எல்லோருக்கும் வணக்கம். என்பேர் பிச்சாண்டி. குர்ஆன் 71:15 அல்லாஹ் ஏழு வானங்களை அடுக்கடுக்காக படைத்திருப்பதைப்பற்றி சொல்லறதை, நிறைய இஸ்லாமிய அறிஞர்கள், வளி மண்டல அடுக்குகளைக் குறிப்பிடுறதாக சொல்லி, படம் வரைஞ்சு பாகங்களைக் கூட குறிச்சிருந்தாங்க. ஆனால் நீங்க சொல்லற வானம் இப்போ வேறுமாதிரியாக இருக்கே?”




நான் சிரித்துக் கொண்டே சுற்றும்முற்றும் பார்த்தேன் உதவியாளர்கள், ஒன்றுமே நடக்காததைப் போன்று கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதைப் போன்று பாவனை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருவனை அருகில் வருமாறு கண்களால் சைகை செய்தவாறு,

”சகோதரர் பிச்சாண்டி, குர்ஆன் குறிப்பிடும் ஏழு வானத்தைப்பற்றி கேட்கிறார். அவரது கேள்விக்குப் போவதற்கு முன்னால். வானத்தைப்பற்றி குர்ஆன் என்ன சொல்துங்கிற நாம பார்க்கனும்.

அல்லாஹ் வானத்தைப்பற்றி சொல்லும் போது, ஏழு வானம் என்று மட்டும் சொல்லவில்ல. அதன் பணிகளை, திருப்பித்தரும் வானம், பாதுகாக்கப்பட்ட முகடு என்று கூறுகிறான். அதன் கட்டமைப்பற்றிச் சொல்லும் போது, வானத்தைப் படைப்பது பெரிய பணி என்பதாகவும், தூண்களின்றி நிறுவியிருப்பதாகவும், பூமியின் மேல் விழாதவாறு தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் சொல்கிறான்”

உதவியாளர் அருகில் வந்தான். மைக்கை கைகளால் மூடியவாறு அவனிடம்,
“கேள்விகள் ஏண்டா இப்படி ஏடாகூடமா வருது? டோக்கன்களை ஒழுங்காத்தான் குடுத்திருக்கீங்களா?” என்று கிசுகிசுத்தேன்.

தெரியலைண்ணே ஏதோ தப்பு நடந்திருக்கும்னு தோணுது. டோக்கன்கள் கைமாறியிருக்கலாம். புரோகிராம சீக்கிரம் முடிச்சிறலாம்” என்றான்.

”சரி போய் ஏதாவது செய்” என்றவாறு நிகழ்ச்சியை மீண்டும் தொடர தயாரானேன்.

”இதை நாம் எப்படி விளங்கிக்கிறது என்பதுதான் முக்கியமானது.  சூரியனிலிருந்து வரும் கடும் வெப்பத்தையும், புறஊதாக் கதிர்களையும் தடுப்பது வானம்தான். இதைத்தான் அல்லாஹ், பாதுகாக்கும் முகடாக வானம் இருப்பதாகச் சொல்கிறான். பூமியிலிருந்து மேலே ஆவியாகி செல்லும் தண்ணீர் திரும்பவும் மழையாக பொழிகிறது; அதேபோல ஒலி-ஒளி அலைகளும் வானில் பட்டு திரும்பவும் பூமிக்கே திரும்புகிறது இதை திருப்பித்தரும் வானம் என்று குறிப்பிடுகிறான். இப்படி ஒவ்வொரு இடத்திலும் வானத்தைப்பற்றி விதவிதமாகக் குறிப்பிடுகிறான்.

பன்மையில அதாவது, நிறைய என்று சொல்வதற்கு அரேபிய வழக்கில் 7, 70, 70000 என்று சொல்வாங்க. குர்ஆன் இங்கு ஏழு வானம்னு சொல்லறது எண்ணற கேலக்ஸிகளைத்தான்னு நம்ம புரிஞ்சுக்கனும்!”

பிச்சாண்டியின் முகத்தில் தெறித்த எரிச்சலை என்னால் உணற முடிந்தது. அவர் எழுந்து திரும்பவும் ஏதோ கேட்க முயற்சிப்பதை நல்லவேளையாக உதவியாளர் ஒருவர் ’அன்பாக’ அடக்கிவிட்டார். துணைக் கேள்விகளுக்கு அனுமதியில்லைன்னு முன்னமே அறிவிக்கிறது எத்தனை உதவியாக இருக்கிறது!

மாஷா அல்லாஹ்!

நாலு காசு பார்க்கறதுக்கு எத்தனை கப்ஸா விடவேண்டியிருக்கு?  இன்னைக்கு அல்லாஹ்விற்கு இரண்டு ரக்ஆத் சுக்ரியாநஃபில் தொழுது அல்லாஹ்விற்கு நன்றி சொல்லயாகணும் என்று எண்ணிக் கொண்டேன். 



“அஸ்ஸலாமு அலைக்கும்! ஐயா என் பேர் முருகானந்தம். நான் சேலத்தில இருந்து வர்றேன். வானத்தில உயினங்களை படைத்திருப்பதாக குர்ஆன் குறிப்பிடறதாகச் சொன்னீங்க. வாதத்திற்கு அது உண்மையின்னு வைத்துக் கொண்டாலும், வேற்று கிரகங்களில் உயினங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, வானத்தில் உயிரினங்கள் இருப்பதாகக் குர்ஆன் கூறுவது தவறுதானே?”

ஷைத்தான் சடைபின்ன ஆரம்பிச்சிட்டான் போலிருக்கு! நான் அல்லாஹ்கிட்ட பாதுகாப்பு கேட்கிறதா இல்லை ஷைத்தான் கிட்ட பாதுகாவல் தேடறதா? இவனுக்கு என்ன பதிலச் சொல்லறது?

“சகோதரர் முருகானந்தம் முதலில் நாம ஒன்றை விளங்கிக் கொள்ளனும். குர்ஆன் கடவுளோட வார்த்தைகள் அதில் முரண்பாடு இருக்காதுன்னுங்கிற விஷயத்தில நாம தெளிவா இருக்கனும் இங்கே வானம்கிறது கேலக்ஸிகளைக் குறிப்பிடுறதாக நான் முதலிலேயே சொன்னேன். அந்த கேலக்ஸிகளுக்குளேதான் சூரியன்களும் கிரகங்களும் இருக்குது. 

நீங்க உங்களை அறிமுகப்படுத்தும் போது சேலத்தில் இருந்து வருவதாகச் சொன்னீங்க. உதாரணத்திற்கு சொல்கிறேன், நான் சேலம் அம்மாபேட்டை ஆறாவது வீதியில் ஒன்பதாம் நம்பர் வீட்டிலிருந்து வருகிறேன்னு சொல்லலை. யாரும் அப்படி தங்களை அறிமுகப்படுத்தவும் மாட்டாங்க. அதைப்போலதான் இதுவும். சில விஷயங்களை கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும் நாம்தான் அதைப் சரியாகப் புரிஞ்சிக்கனும்!”



”என் பேர் ANTony.  அல்லாஹ் உயிரினங்களை எங்கே பரவச் செய்திருக்கிறான் வானங்களிலா அல்லது பூமியைப் போன்ற கோள்களிலா என்பதை தெளிவாகச் சொல்லனும். வானங்களில் உயிரினங்களைப் பரவச் செய்திருக்கிறான் என்றால் நீங்க கொடுக்கும் விளக்கத்தின்படி, கேலக்ஸி முழுவதும் உயிரினங்கள் பரவியிருக்குனு பொருள்வரும். கேலக்ஸிகளுக்குள் சூரியனைவிட மிகப் பெரிய red giant superகளும் இருக்கலாம். அதற்குள்ளும் உயினங்கள் இருப்பதாக பொருள் கொள்ள வேண்டிவரும்.  கேலக்ஸிகளை உள்ளடக்கிய, எண்ணற்ற பேரண்டங்கள் இருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. இவைகள் அல்லாமல் அல்லாஹ்வும் அவனது உதவியாளர்களும், இறந்த நபிமார்கள் வசிக்கும் வானங்களும், சொர்க்கம் நரகம் இருப்பதாகக் கூறப்படும் வானமும் இருக்கிறது. அதனால் வானம் என்று குர்ஆன் எதைக் குறிப்பிடுகிறது என்பதற்கு தெளிவான விளக்கம் தரவேண்டும்”



இது கேள்வியில்ல... Rivet!  இப்ப எப்படித் தப்பிக்கிறது… கலங்காதே... நோ அழக்கூடாது… தைரியமாக இருக்கனும் முகத்தை துடைச்சுக்க… சும்மா சிரிச்சு வை… ஐய்யோ நான் என்ன பதிலச் சொல்லுவேன்…



”சகோதரர் ANTony இஸ்லாமிய எதிர்ப்பு ஊடகங்களை வாசிப்பவர் என்று நினைக்கிறேன்…”

திடீரென்று  உதவியாளர் என்னை நோக்கி ஓடிவந்து காதில் “அண்ணே மேல தொடரவேண்டாம் நம்ம மானம் போயிரும் ஏதவது சொல்லி தப்பிச்சிருங்க…” என்று கிசுகிசுத்தான்.

“சீக்கிரமா… மஃரிப் பாங்க சொல்லு... அதுவரை ஏதாவது சொல்லிவைக்கிறேன்” என்று கிசுகிசுத்தவாறு கூட்டத்தை நோக்கி,

”சகோதரர் ANTony-யைப் பாருங்க குர்ஆனை ஆய்வு நோக்கோடு வாசித்திருக்கிறார் என்பது அவரது கேள்வியிலிருந்து புரிகிறது. முஸ்லீகளான நாம் ஒரு நாளும் அதைப் பொருளணர்ந்து வாசிப்பதில்லை. இதுபோன்ற விஷயங்களை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும்.

ANTony நீங்க குர்ஆனை ஆய்வு செய்திருக்கலாம், ஆனால் தவறாகப் புரிஞ்சிருக்கீங்க! குற்றம் சொல்லனும்கிற நோக்கத்தோட அணுகினால் அதிலிருக்கும் உயர்ந்த தத்துவங்கள் உங்களுக்குப் புலப்படாது… உங்க கேள்வியைப் பார்ப்பதற்கு முன்னால் வேறு சில விஷயங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. குர்ஆன் கருவின் வளர்ச்சியைப்பற்றி மிகத் தெளிவாகச் சொல்கிறது. அலக் என்ற சொல் மிகத்துள்ளியமாக ஆரம்ப நிலைக் கருவின் அமைப்பை விவரிக்கிறது. அது மட்டுமல்ல தொடர்ந்து கருவின் வெவ்வேறு நிலைகளையும் கூறுகிறது.” 

நான் எனது கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இல்லாத அறிவியலை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். இதோ மஃரிப் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

”குர்ஆன் 2:259-ல் ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியைக் கூறிவிட்டு உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம் என்று கூறுகிறது. மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களிலெல்லாம் ஒரு முன்னறிவிப்போ, அறிவியல் உண்மைகளோ, அதுபற்றிய குறிப்புகளோ புதைந்து கிடப்பதைத் திருக்குர்ஆனில் பரவலாகக் காணலாம்.

இந்நிகழ்ச்சியில் இருப்பதாக இறைவன் கூறும் அந்த அத்தாட்சி எது?

உணவும், தண்ணீரும் இருந்த இடத்திற்கு அருகில்தான் கழுதையின் உடலும் கிடந்தது. அப்படியிருந்தும் கழுதைமக்கிப் போகின்றது. அதேசமயம் உணவும் நீரும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது. குளிர்பதனப் பெட்டியைப் போன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும்பாதுகாப்புக் கவசத்தை ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கின்றது.”

கூட்டம் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தது.

”இப்படி நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி குர்ஆன் முன்னறிவிப்புச் செய்கிறது. இவ்வாறு குர்ஆன் கூறும் ஒவ்வொரு சான்றுகளையும் இன்றுவரை எந்த அறிவியல் அறிஞர்களாலும் மறுக்க முடியவில்லை. எனவே வானத்தைப்பற்றி குர்ஆன் கூறுவதில் தவறு இருக்காது இருக்கமுடியாது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இப்பிரபஞ்சத்தையே படைத்தவன் கூற்றி எப்படித் தவறு இருக்க முடியும்.

நாம் சகோதரர் ANTony-யின் கேள்விக்கு வருவோம்...

கேலக்ஸி என்பது கோள்கள், நட்சத்திரங்கள் ரெட் ஜெயண்ட் சூப்பர் எனப்படும் செம்பூதங்கள் என்று பலவற்றையும் உள்ளடக்கியது.  உதாரணத்திற்கு சூரியனில் உயிரினங்கள் வாழமுடியாது காரணம் அதன் வெப்பம். இந்த செம்பூதங்கள் சூரியன் கோள்களென்று அனைத்தையும் விழுங்கக் கூடியவைகள். எனவே உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்பது நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கே தெரியும் போது இத்தனையும் படைத்த இறைவனுக்குத் தெரியாதா? அப்படியானால் அவனது வார்த்தைகளான குர்ஆன் எப்படி தவறான பொருளைத் தரும்? இப்படித்தான் நீங்கள் சிந்திக்க வேண்டும்!

அப்படியானல் இதை எப்படி விளங்குவது?

உயிரினங்கள் எங்கெல்லாம் இருப்பதாகக் கண்டறிப்படுகிறதோ அந்த இடங்களையே இவ்வசனம் குறிப்பிடுகிறது என்று விளங்கிக் கொள்ளவேண்டும்…”

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது

“அல்லாஹ் அக்பர்.. ” என்று பாங்கு ஒலிக்கத் துவங்கியது
”தொழுகைக்கு நேரமாகிவிட்டது நிகழ்ச்சியை இத்துடன் முடித்துக் கொள்கிறோம். சகோதரர் ANTony, உங்கள் கேள்விக்கான அதிகப்படியான விளக்கங்களை எங்கள் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்!”

கூட்டம் கலையத் துவங்கியதால் ஏற்பட்ட சலசலப்பில் ANTonyயின் குரல் எடுபடவேயில்லை.

இனிமேல்  ஒத்திகை பார்க்காம கேள்வி-பதில் நிகழ்ச்சிக்கு வரவேகூடாது. கேள்வி கேட்கறவங்களை இண்டர்வியூ பண்ணாம அனுமதிக்கவும் கூடாது. கேள்வி கேட்கறது சுலபம். பதில் சொல்லிப்பாருங்க அப்பத் தெரியும் அதோட கஷ்டம் என்னாங்கிறது!

என்ன... நான் சொல்லறது சரிதானே.?


தஜ்ஜால்(ஸல், அலை, ரலி, ரஹ்)

Thursday 11 December 2014

குர்ஆன் கூறும் அறிவியல் : வேற்று கிரக உயிரினங்கள்!-2



வேற்றுகிரக உயிரினங்களைப்பற்றி குர்ஆன் முன்னறிவிப்பு செய்திருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்!

இஸ்லாமிய வானவியல் அறிஞர்கள், ”Rabbi al alameen(1:2)”,  "sabʿa samāwātin (65:12)",  "Dabbatun(42:29)"   இப்படி மூன்றே வாக்கியங்களில் மாபெரும் அறிவியல் பேருண்மையை கண்டறிந்ததுடன்,  இந்த முன்னறிவிப்பின் மூலம் குர்ஆனை இறைவேதமென்றும் நிரூபித்துவிட்டனர்.
ஜஸாக்கல்லாஹ்!

என்னது... முன்னறிவிப்புச் செய்யவில்லையா?

நீங்கள், இஸ்லாமிய அறிவியல் அறிஞர்கள் கொடுக்கும் ஆய்வு முடிவுகளை குர்ஆனின் அடிப்படையில் அணுகியிருந்தால், அவர்கள் முன்வைக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்துகொண்டிருக்கலாம். குர்ஆனின் அடிப்படையில் குர்ஆனை ஆய்வு செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

குர்ஆனை ஆய்வு செய்வதை அல்லாஹ் எப்பொழுதுமே விரும்புகிறான். 

குர்ஆன் 4:82
இந்தக் குர் ஆனை அவர்கள் ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக இது இருந்தால், இதில் அநேக முரண்பாடுகளைக் அவர்கள் கண்டிருப்பார்கள்.
ஈமான்தாரிகளான நாம், உடனே நடுநிலையாக ஆய்வு செய்கிறேன் பேர்வழியென்று கிளம்பி விடக்கூடாது.  இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதுமே குர்ஆனை ஆய்வு செய்யும் பொழுது, முதலில் நாம் என்ன முடிவிற்கு வர இருக்கிறோம் என்பதை மிகத் தெளிவாக முடிவுசெய்திட வேண்டும். அதாவது குர்ஆனில் எந்த விதமான முரண்பாடுகளோ உளறல்களோ இருக்காது என்ற முடிவுடன் மட்டுமே குர்ஆனை ஆய்வு செய்ய வேண்டும். இதைத்தான் மேற்கண்ட  வசனத்தில், ”இந்தக் குர்ஆனை அவர்கள் ஆய்ந்துணர வேண்டாமா?” அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, பதில் ”அல்லாஹ்விடமிருந்து வந்ததே”   என்று மட்டுமே இருக்கவேண்டுமென்பதையும் அழுத்தம் திருத்தமாகக் கோடிட்டுக் கண்பித்திருக்கிறான். இதுவே குர்ஆனை ஆய்வு செய்யும் முறையாகும். 

இந்த ஆய்வுகளை நாம் எப்படிச் செய்ய வேண்டும்?

குர்ஆனில் வேற்று கிரக உயிரினங்கள் பற்றிய முன்னறிப்பு இருக்கிறது என்று கூறி, நமக்கு நாமே புல்லரித்துக் கொள்வதுடன் ஈமாந்தாரிகளைப் புல்லரிக்கச் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த முன்முடிவுடனேயே இந்த ஆய்வைத் துவக்கியிருக்கிறோம். எனவே நமது கவனம் அதன் மீது மட்டுமே இருக்க வேண்டும். அங்குமிங்கும் அலைபாய விடக்கூடாது. 

குறிப்பாக இது போன்ற ஆய்வுகள் செய்யும் பொழுது கூடுதல் கவனம் தேவை. ஏனெனில் அல்லாஹ்வின் தொல்லை இதுபோன்ற நேரங்களில் அதிகமாக இருக்கும்.  என்னடா இவன் அல்லாஹ்வின் தொல்லை என்று குழப்புகிறானே என்று குழம்ப வேண்டாம்.

...நோயையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக்கூடாது. கெட்டகாரியத்தை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது என்று மரியாதை நிமித்தமாகவே அவ்வாறு அய்யூப் நபி கூறினார்கள். அது போல் பைத்தியத்தை அல்லாஹ்தான் ஏற்படுத்தினாலும் அந்தத் தீமை ஷைத்தானுடன் சேர்க்கப்பட்டுள்ளது.
ஷைத்தான் இருப்பதை அல்லாஹ் பல இடங்களில் உறுதி செய்கிறான். ஆனால் அவனால் எந்தவிதமான கெடுதலும் செய்ய முடியாதென்பதும், எல்லாவிதமான கெடுதல்களும் அல்லாஹ்வினால் மட்டுமே உருவாகிறது, ஒரு மரியாதை நிமித்தமாகவே அந்தக் கெடுதல்கள் ஷைத்தானுடன் இணைத்துச் சொல்லப்படுகிறது என்பதே மண்ணடி மகா சன்னிதானம் பீஜே அவர்கள் கொடுத்த விளக்கத்தை முன்பே கவனித்தோம். 

குர்ஆன் 4:78
...அவர்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் "இது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்று கூறுகின்றனர். அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் "இது உம்மால் தான் ஏற்பட்டது'' என்று கூறுகின்றனர். "அனைத்தும் அல்லாஹ் விடமிருந்தே'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! இந்தச் சமுதாயத்திற்கு என்ன நேர்ந்தது? எந்தச் செய்தியையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லையே!

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், முழுக்கமுழுக்க குர்ஆனின் அடிப்படையிலேயே அந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்; அவரது விளக்கத்தில் எந்தத் தவறுமில்லை என்பதையே குர்ஆன் 4:78 நமக்கு நினைவூட்டுகிறது. எனவே, அல்லாஹ்வின் தொல்லைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புப் பெற்றுக் கொள்ள அல்லாஹ்விடம் துஆ செய்தவர்களாக ஆய்வைத் துவங்க வேண்டும். 

முதலில் Rabbi al alameen என்ற வாக்கியம் வேற்றுகிரக உயிரினங்களின் இருப்பை எப்படி நிறுவுகிறது என்பதை கவனிப்போம்.

Dr. ஷப்பீர் அலீ சொல்வது :
குர்ஆன், பல பூமிகள் இருப்பதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிடுகிறது, ஏனெனில், குர்ஆனில் முதல் அத்தியாமே ”அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” கூறுகிறது. உண்மையில், ’பிரபஞ்சங்கள்’ என்ற பன்மைச் சொல்லை, இங்கு ’அல்-ஆலமீன்’ என்று கூறுகிறது. 

மனிதர்களோ அல்லது எந்த விதமான உயிரினங்களும் இல்லாத இடத்தில் அல்லாஹ், ”நான்தான் rabbi al alameen”, நான்தான் rabbi al alameen” என்று சொல்லிக் கொண்டிருக்க அவன் என்ன ’லூஸா’? என்று சொல்லாமல் சொல்கிறார் Dr. ஷப்பீர் அலீ.  

......
"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" (1:1)
உலகங்களை உருவாக்கிப் பரிபாலித்துவரும் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (1:1)
திருக்குர்ஆனின் 6666 வசனங்களில் முதன்மையான இவ்வசனமே வியப்புக்குரிய வசனம். இவ்வசனத்தில் 'ஆலமீன்' என்கிற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். 'ஆலம்' என்றால் உலகம். ஆலமீன் என்றால் உலகங்கள் என்று பொருள். அன்று, 'நம் பூமி என்கிற இந்த உலகம் தவிர இன்னும் நிறைய உலகங்கள் உண்டா? என்று அப்போதே உலகம் கேள்வி கேட்டு, மானிட உலகம், ஜின்களின் உலகம், மலக்குகளின் உலகம், பிராணிகளின் உலகம், தாவரங்களின் உலகம் என்று பதில் சொல்லி சமாதானமாகிக் கொண்டது. .....

நான்தான் rabbi al alameen” என்று அல்லாஹ் கூறுவதற்கு அங்கு உயிரினங்கள் கட்டாயமாக இருக்க வேண்டுமா என்ன? வானங்கள், பூமிகள், மலைகள்கூட சிந்திக்கும் திறன்கொண்டவைகளாக இருக்கிறது. அவ்வளவு ஏன் நிழல்கள்கூட அல்லாஹ்வின் மகத்தும் அறிந்து அல்லாஹ்விற்கு ஸுஜுது செய்வதாக குர்ஆன் கூறுகிறதே என்று நீங்கள் கேட்கலாம். 

குர்ஆன் 33:72
வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன்வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அநீதி இழைப்பவனாகவும், அறியாதவனாகவும் இருக்கிறான்.

குர்ஆன்13:15.
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

குர்ஆன் 16: 48
 அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அவர்கள் பார்க்கவில்லையா? அதன் நிழல் வலம் மற்றும் இடப்புறங்களில் சாய்ந்து அல்லாஹ்வுக்கு விழுந்து பணிகின்றன.

வானங்களும், பூமியும் மலைகளும் சிந்தித்துச் செயல்படக்கூடியவை என்பதே மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் நமக்குக் கூறும் செய்திகள்.  இப்பொழுது இஸ்லாமிய அறிவியல் வல்லுநர்களின் rabbi al alameen என்ற விளக்கம் வழுவிழந்து விட்டதாகத் தோன்றலாம். இது போன்ற வேளைகளில் மனம்தளராமல் ஹதீஸ்களுக்குள்ளோ, தப்ஸீர்களுக்குள்ளோ நுழைந்து விடவேண்டும்.

இப்ன் கதீர், தபரி போன்றவர்கள் alameen என்ற பதத்திற்கு என்ன விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதைப்பார்க்க வேண்டும்.

இப்ன் கதீர் தரும் விளக்கம் :
Al-` Alamin is plural for ` Alam, which encompasses everything in existence except Allah. The word `Alam is itself a plural word, having no singular form. The ` Alamin are different creations that exist in the heavens and the earth, on land and at sea. Every generation of creation is called an ` Alam. Al-Farra` and Abu ` Ubayd said, " ’Alam’ includes all that has a mind, the Jinns, mankind, the angels and the devils, but not the animals. ''
தபரி தரும் விளக்கம் :
Alamin is the plural of alam, Which is itself collective noun like ‘mankind’, ‘group’, or ‘army’... alam is noun for the different kinds of communities-each kind is an ‘alam’. The members of each generation of each kind are the ‘alam’ of that generation and that time. Mankind is an ‘alam’ and aa the people of a period of time are the ‘alam’ of the time. Jinn are an ‘alam’ and so on with the other species of creation; each species is the ‘alam’ of its time.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தலைமுறையிலும் வாழ்ந்த, ஜின்களின் மனிதர்களை, இதர உயிரினங்களையும் தான் இந்த ‘அல்-ஆலமீன்’ என்ற சொல் குறிப்பிடுகிறது என்று எழுதி  வைத்திருக்கின்றனர். (இதையெல்லாம் சொல்லி மூளைகெட்ட தப்லீக் ஜமாத்காரர்களுக்குகூட பயான் செய்ய முடியாது. இதில் நாத்தீகர்களை எப்படி சமாளிக்க முடியும்?) இது தஃப்ஸீர் எழுதியவர்களின் சொந்தக் கருத்து, இட்டுக்கட்டப்பட்டது, அறிவிப்பாளர்கள் வரிசையில் கோணல் இருக்கிறது, மிகவும் பலவீனமானது, குர்ஆனுக்கு முரண்பட்டவைகள்!

’Rabbi al alameen’ என்ற வாக்கியம் நமக்கு சருக்கலை ஏற்படுத்திவிட்டது என்பதற்காக மனம் தளரக்கூடாது. "Dabbatun மற்றும் sabʿa samāwātin” நமக்கு நிச்சயமாக உதவும்!   

ரஹ்மத் ராஜகுமாரன் என்னதான் சொல்லவருகிறார் என்பதைப் பார்க்கலாம்.

... வேற்றுலகம் என்பது சாத்தியமா? அங்கு வாழும் மக்கள் நம்மை விட அறிவில் முதிர்ச்சியானவர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டே திருக்குர்ஆனைத் திறந்தால்,
'(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா சிருஷ்டித்திருக்கின்றோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும்(ṭarāiqa) நாமே சிருஷ்டித்தோம் (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ சிருஷ்டிகள் இருக்கின்றன. இவைகளைச் சிருஷ்டித்திருப்பதுடன்) இச்சிருஷ்டிக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்' (23:17)
மேற்கண்ட வசனத்தில் நம்மை மாதிரி வேறு படைப்பினங்களும் உள்ளன. அந்த படைப்பினங்களுக்குத் தேவையானதையும் படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். இந்த வசனத்தில் நம்மை மாதிரியே வேறு படைப்பினம் என்று கூறிய வசனத்தில் நம்மை மாதிரியே வேறு படைப்பினம் என்று கூறிய அல்லாஹ் அடுத்த வசனத்தில் நம் பூமியை 7 பூமி என்று கூறுகிறான்.
'அவனே 7 வானங்களையும், பூமியிலும் அதே போன்றும் படைத்தான்.' (65:12).
இதைப் பார்க்கும் போது நாம் வாழும் பூமியைப் போன்ற வேறு பூமிகளும் இருக்கின்றன என்று எண்ணத் தோன்றுகிறது.

அடைப்புக் குறிகளுக்கிடையே, குர்ஆன் வசனம் எங்கே இருக்கிறது என்பதைத் தேடிப் படிக்க வேண்டியதாக இருக்கிறது. குர்ஆனுக்கு இப்படியும் அடைப்புக் குறிகளை இடமுடியுமா என்று நம்மை வியக்க வைக்கிறார். ரஹ்மத் ராஜகுமாரன் மிகப் பெரிய அறிஞர்தான் சந்தேகமே இல்லை!

அந்தக் குர்ஆன் வசனம் என்னவென்பது எனக்கே மறந்து போய்விட்டது. 

குர்ஆன் 23:17
உங்களுக்கு மேலே ஏழு வழிகளைப் (ṭarāiqa) படைத்துள்ளோம். இப்படைப்பு பற்றி நாம் கவனமற்று இருக்கவில்லை.
பீஜே மொழிபெயர்ப்பு

ரஹ்மத் ராஜகுமாரன் குறிப்பிடும் இந்த குர்ஆன் 23:17 வசனத்தில் ஏழு வானம் என்று மொழிபெயர்த்திருப்பது மற்ற குர்ஆன் வசனங்களைக் கருத்தில் கொண்டு வானம் என்பதாக பொழிபெயர்த்திருக்கிறார்கள். ’ṭarāiqa’ என்றால் வழி, பாதை என்பதுதான் நேரடிப் பொருள். வானங்களில் உயிரினம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ரஹ்மத் ராஜகுமாரன் முயற்சிப்பதை சுவனப்பிரியன் என்ற அறிவியல் அறிஞர் எப்படி வழிமொழிகிறார் என்பதைப் பார்க்கலாம். 


'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்து நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

அறிஞர் சுவனப்பிரியன் போன்ற அறிஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அறிவியலுக்குள் குர்ஆனை மிகத் திறமையாக நுழைத்திருக்கிறார்.  ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அறிஞர் சுவனப்பிரியன் அவர்களின் கருத்தைப் பிரதிபளிக்கும் Answering Christianity தளத்தின் ALIENS IN THE QURAN என்ற ஆய்வுக் கட்டுரையிலிருந்து மீண்டும்...

In Sura 42, Verse 29 (42:29) of the Quran, we are told, "Among His (God's) signs is the creation of the heavens and the earth,and the living creatures that He has scattered through them :and He has power to gather them together when He wills." Before proceeding further, a point or two must be noted. The word "sama",translated "heavens", is also the Arabic for "sky".
குர்ஆன் 42:29
வானங்களையும் (l-samāwāti), பூமியையும் (wal-arḍi) படைத்திருப்பதும் உயிரினங்களை (dābbatin) அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை.

வானத்தில்தான் நட்சத்திரங்களும், இதர கோள்களும் இருப்பதாகவும், அவற்றில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாவும் அறிவியல் கூறுகிறது. வானங்களில் உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதாக மேற்கண்ட குர்ஆன் வசனம் உறுதிபடக் கூறுகிறது. இரண்டையும் இணைத்துப் பாருங்கள் குர்ஆனின் முன்னறிவிப்பு எளிதாகப் புரியும்!

அன்பான சகோதரர்களே அல்லாஹ்வின் அடியார்களே குர்ஆனின் அறிவியல் முன்னறிவிப்புகளை கண்டு மெய்சிலிர்த்து ஒரே புல்லரிப்பாக இருக்கிறது. எனது ஜிப்பாவிலிருக்கும் Steel wire brush-க்கு சிறிது நேரம் வேலை கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன்.

ஆக சகோதரர்களே நண்பர்களே அல்லாஹ் ஸுபஹால்லஹுத்தாலா நமக்கு எல்லாவித நவீன அறிவியல் உண்மைகளையும் அடங்கியதாக குர்ஆனை நமக்குக் கொடுத்திருக்குகிறான். ஆகையினால் குர்ஆனின் அறிவியல் உண்மைகளால் நாங்கள் புல்லரித்துக் கொண்டும் இருக்குகிறோம். யாரெல்லம் தங்களுக்கும் இதுபோல புல்லரிக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ அவர்களுக்கும் குர்ஆனைக் கொண்டு புல்லரிக்கும் முறையை எடுத்துச் சொல்லி அவர்களையும் புல்லரிக்க வைக்க இருக்கிறோம். அதற்காக ஒரு புல்லரிப்பு மாதரஸாவைத் துவங்க அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டவனாக எனது உரையை நிறைவு செய்கிறேன். 

அல்லாஹ் ஸுபஹால்லஹுத்தாலா நமக்கு புல்லரிக்கும் பாக்கியத்தை இம்மையிலும் மறுமையிலும் எருமையிலும் வழங்குவானாக!

ஆமீன்!

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்!

இத்துடன் இந்த பயான் நிறைவு பெறுகிறது.  அடுத்தது கேள்வி-பதில் நிகழ்ச்சி; பயான் தொடர்பான உங்களது சந்தேகங்களுக்கு பதிலளிக்க இருக்கிறேன். அதற்கு முன்னதாக உங்களிடம், துண்டு, பக்கெட்டுகளை ஏந்தி வரும் சகோதரர்களிடம், புல்லரிப்பு வளர்ச்சிக்காகவும், Steel wire brush வாங்குவதற்காகவும் உங்களால் இயலவில்லை என்றாலும் தாரளமாக ஹதியா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 


தஜ்ஜால்(ஸல், அலை, ரலி, ரஹ்)