Friday 20 July 2018

கொலைகார மதங்கள்-1

கடந்த ரமலான் மாதத்தில் ஈமாந்தாரியாக வேஷமிட வேண்டிய சூழல். இஃப்தார்–நோன்பு துறப்பதற்காக பள்ளிவாசலுக்கு முஃமின் நண்பர்களுடன் செல்வது வாடிக்கையாக இருந்தது. இம்முறை என்னுடன் இருந்த நண்பர்கள் அனைவரும், கேரளாவின் வெவ்வேறு பாகங்களிலிருந்து வந்தவர்கள்; அவர்கள், பிற மதநம்பிக்கைகளை, வழிபாடுகளை விமர்சித்தோ கேலி செய்தோ நான் பார்த்ததில்லை. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருமே இனிமையான, அமைதியான குணம் படைத்தவர்கள். அவர்களது சகிப்புத்தன்மைக்கு ஒரேயொரு உதாரணம் மட்டும் சொல்லிவிடுகிறேன். ஒரு முறை, பெந்தகோஸ்த் சபையினர் நற்செய்திக் கூட்டங்ககளில் செய்யும் அற்புதங்கள்(!) அடங்கிய பகடி காணொளியை வாட்ஸ்அப்பில் நான் பகிர்ந்த பொழுது,
 
“நிங்களு எந்தினா ஈ வேண்டாத பணினச் செய்யுனு? அவர் எந்தோச் செய்திட்டு போகட்டே… அது அவர விசுவாசம்; நிங்களு எந்தினா களியாக்குனு?”
 
-- என்று  என்னைக் கடிந்து கொண்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அத்தகைய புனித ஆத்மாக்கள் எனது மலையாள முஃமின் நண்பர்கள். அதேவேளையில் முஹம்மதியர்கள் என்ற உயர்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். எல்லோருக்கும் வெவ்வேறு வயது; சுமார் 18 லிருந்து 70 வயது வரை இருக்கும். வெவ்வேறு வயதினர் எப்படி ஒரே குழுவாக இருக்க முடியுமென்று ஆச்சரியப்பட வேண்டாம்; எல்லாம் ஈமான் செய்யும் வேலை.
 
எங்களது இருப்பிடத்திற்கும் பள்ளிவாசலுக்கும் சற்று தொலைவு. எனவே எனது வாகனத்தில் எல்லோரும் இஃப்தாருக்கு செல்வதும் வழிநெடுகிலும், எதையாவது எதையாவது பேசிக் கொண்டு வருவது வழக்கம். பெரும்பாலும் அவை அலுவல வேலை தொடர்பான உரையாடல்களாத்தான் இருக்கும். அன்று பள்ளிவாசலிலிருந்து வரும்வழியில் ஒரு உணவகத்திற்கு தேநீர் அருந்தச் சென்றிருந்தோம்.  பெரிதாக கூட்டம் எதுவுமில்லை. நான் வாகனத்தை பாதுகாப்பான ஒரு இடத்தில் நிறுத்தி வருவதற்குள், நண்பர்கள் ஏதோ ஒரு உரையாடலை துவங்கியிருந்தனர். எனவே நான் சற்று தாமதமாக அதில் இணைந்து கவனிக்கத் துவங்கினேன். எங்களில் வயதில் முதியவர்; முஹம்மதிய சட்ட திட்டங்களை நன்கு பயின்றவர்,
 
“ஃபைசல்ண்ட குடும்ப செலவு ஒக்க பள்ளிக்காரு ஏற்றெடுத்து; ம்.. ஒன்னாந் தர பெற (வீடு) கட்டி கொடுத்துக்கினு…!” என்றார்  விழிகளை அகல விரித்து பெருமையாக.
 
எங்கள் அலுவலகத்தில்  ஃபைசல் என்ற பெயரில் இருவர் இருக்கின்றனர். அவர்களிலில் யாருக்கு பள்ளிவாசல் நிர்வாகம் வீடுகட்டிக் கொடுத்திருக்கிறது? எதற்காக அவ்வாறு செய்ய வேண்டும்? என்று எண்ணங்கள் ஓட,
 
“ஏது ஃபைசல்?” என்றேன்
 
கேள்வியைப் புரிந்து கொண்ட அவர், சிரித்துக் கொண்டே,
 
“இது நாட்டிலுள்ள வேற ஆளு!” என்றார்
 
ஏதாவது ஏழ்மையானதொரு குடும்பத்திற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உதவியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு,
 
“எவிட…?” என்றேன்.
 
“திரூர்லு…!”
 
மதப் பெருமைகளைப் பேசாமல் இவர்களால் இருக்கவே முடியாது நான் அமைதியாக இருந்தேன். அப்பொழுது எங்களில் வயதில் இளையவர்,
 
அங்ஙெனத்தன்னச் செய்யனம்!” என்றார் சற்று கோபமாக,
 
எனக்குப் புரியவில்லை. ஏதோ வசதியற்ற குடும்பத்திற்கு உதவியிருக்கிறார்கள்;  ஒரு நல்ல விஷயத்திற்கு இவனெதற்கு இப்படியொரு மோசமான ரியாக்ஸனைக் கொடுக்கினே என்று மனதில் நினைத்து கொண்டு புருவத்தை சுருக்கியவாறு அவனைப் பார்த்தேன். அதற்குள் முதியவர்,
அவன வெட்டி நுறுக்கி…!” என்றவாறு கைகளால் வெட்டுவது போலக் காண்பித்தார்.
 
“இல்லங்ஙில் பேடி விட்டுப் போகும்..!”  என்றார் இளையவர் சற்று ஆக்ரோஷமாக,
 
“அவனெ அங்ஙென வெட்டி வெட்டி நுறுக்கி” என்று மீண்டும் கைகளை கொத்துக்கறி வெட்டுவது போல செய்து காண்பித்து சிரித்தார்.
 
“அதென்ன சரி…! அவருகெக்க அங்ஙெனத்தன்ன வேணம்; அங்ஙெனத்தென்னச் செய்யனம்; ஜோசப் மாஷ்டர கையின வெட்டியது அவன் செய்த தெட்றினு கிட்டிய  ஷிக்ஷையானு…! நம்மள அல்லாஹ்வினையும் ரசூலையும் களிப்பிச்சங்கில் வெறுத விடோ? காணிச்சு கொடுத்தில்லே… …? என்று குரூரமாகப் புன்னகைத்தார் இன்னொருவர்.
“… …!?”
 
“இதினெக்க NDF-கார சம்மதிக்கனம்; மிடுக்கம்மாரானு! என்று கூறி எல்லோரும் புன்னகைத்துக் கொண்டனர். அதற்குள் உணவகப் பணியாள் தேநீர் பரிமாற எங்களருகில் வரவே, அந்த உரையாடல் அத்துடன் நின்றுவிட்டது. மதம் சம்பந்தப்பட்ட ஏதோ கொலை விவகாரம் என்பது மட்டும் புரிந்தது.
அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதை என்னால் ஓரளவிற்குத்தான் யூகிக்க முடிந்த. ஜோசப் மாஸ்டர் கையை வெட்டியை விவகாரம் கேள்விப்பட்டிருக்கிறேன். துண்டு துண்டாக வெட்டப்பட்டது யார்?  எங்களைப் போன்று முர்தத் எவரையாவது கொன்று விட்டனரா? கொலையும் செய்துவிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவியும் செய்கின்றனரா? என்னுள் பலவிதமான குழப்பம். ஆனால் நிச்சயமாக இது மதம் சம்பந்தப்பட்ட கொலை விவகாரம் என்பது மட்டும் புரிந்தது. அவர்களிடம் மேலும் துருவித் துருவி நான் கேட்க விரும்பவில்லை.
 
எத்தனை அமைதியான மனிதர்கள்; எல்லோரிடமும் மிக அன்பாகப் பழகக் கூடியவர்கள்; மதச் சார்பின்மையைப் பற்றி எனக்கே வகுப்பெடுத்தவர்கள் ஆனால் இவர்களுக்குள் இப்படியொரு மிருகமா? என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எங்கோ… யாரோ… செய்த கொலையை, இவர்கள் இங்கு அமர்ந்து கொண்டு ஆதரிப்பதற்கு ஒரே காரணம் மதம் மட்டும்தான்.
 
உடன்பிறவா சகோதரன் ஃபாரூக்கின் முகம் நினைவில் வந்து போனது. அவனை இந்த மதவாதிகள் துடிக்கத் துடிக்க கொலை செய்த பொழுது வெளியில் சமாதானம் பேசிக் கொண்டு, இப்படித்தானே தங்களுக்குள் ஆதரவு கூறி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ‘முர்தத்’களை அதாவது முஹம்மதிய மதநம்பிக்கைகளைக் கைவிடுபவர்களை கொலை செய்யுமாறு குர்ஆனும் ஹதீஸ்களும் வலியுறுத்துவது நமக்கு நன்கு தெரிந்த செய்திதான்.
பொதுவாகவே முஹம்மதியத்தை மறுப்பவர்கள் மீது குர்ஆனும் ஹதீஸ்களும் வன்மத்தைக் கட்டவிழ்த்து விடுகிறது. அதைப்பற்றிக் கூறும் பொழுது,
 
குர்ஆன் 5:33:
கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் (fasādan) செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.
 
-- இவ்வசனத்தைப்பற்றி பலமுறை பலராலும் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. நானும் விமர்சித்திருக்கிறேன். ஆயினும் இதை  அவ்வளவு எளிதில் என்னால் கடக்க முடியவில்லை. காரணம், முஃமின்கள் கொடுக்கும் விதவிதமான சப்பைக்கட்டுகள் மட்டுமே. முஃமின்கள் தரப்பில் இவ்வசனத்திற்கு தரப்படும் விளக்கங்களை சுருக்கமாக இப்படி வகைப்படுத்தலாம்.
 
இது வன்முறையை ஊக்குவிக்கவில்லை மாறாக குற்றவியல் சட்டத்தைப் பற்றிப் பேசுகிறது. அதாவது கொலை, திருட்டு, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் மூலம் பொது அமைதியைக் குலைக்கும் நபர்களைத் தண்டிப்பது பற்றியே குறிப்பிடுகிறது.
 
தண்டனை வழங்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு மட்டுமே இருக்கிறது சட்டத்தை தனிநபர் கையிலெடுக்க முடியாது.
 
குர்ஆனின் வேறு சில வசனங்களை மேற்கோள் காண்பித்து, ஒருவர் முஸ்லிம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காகப் படுகொலை செய்வதற்கு அனுமதியில்லை. இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது இஸ்லாமிய அரசின் கடமையாகும்.
 
“…எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான்…” என்று குர்ஆனின் 5:32-ம் வசனத்தை மேற்கோள் காண்பிப்பது.
 
முதலில், குற்றவியல் தண்டனைச் சட்டம் என்ற வாதத்தை கவனிப்போம். திருட்டு, கொலை, கொள்ளை, விபச்சாரம், கள்ளத் தொடர்பு என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தண்டனை முறைகளை குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் இந்த சிலுவையில் அறைதல், மாறுகால் மாறுகை வாங்குதல் தண்டனை குறிப்பாக எந்த குற்றத்திற்கானது?
 
அதைத்தானே பூமியில் குழப்பம் விளைவித்து அதன் அமைதியைக் குலைப்பவர்களுக்கான தண்டனையென்று குர்ஆன் கூறிவிட்டதே என்பார்கள்.
 
அதென்ன fasādan-குழப்பம்?
 
பூமியில் என்று குர்ஆன் குறிப்பிடுவது சமுதாயத்தில் என்று எடுத்துக் கொள்வோம். சமுதாயத்திற்குள் குழப்பம் ஏற்படுவதற்கு ஏற்படுவதற்குக் காரணங்கள் இருக்கிறது.
 
பசி, பஞ்சம், வறுமை, இயற்கைப் பேரிடர் போன்றவைகளாலும் சமுதாயத்தின் அமைதி குலையும். அப்பொழுது யாரைப் பிடித்து சிலுவையில் அடிப்பது? யாருடைய கையையும் காலையும் துண்டிப்பது? இந்தக் குழப்பத்திற்கு, உலகை நிர்வகிப்பவனாக கூறிக் கொள்ளும் அல்லாஹ்வை பிடித்து சிலுவையில் அடிக்கலாம் என்பது எனது கருத்து. ஆனால் இது முஃமின்களுக்குப் பிடிக்காது.
 
அதிகார மையத்தில் குழப்பம் ஏற்படும் பொழுதும், ஆட்சியாளர்களுக்கு எதிரான கருத்துகள் நிலைபெறும் பொழுதும்  சமுதாயத்தில் குழப்பமான நிலை ஏற்படும். அப்பொழுது அதற்குக் காரணமானவர்களைப் பிடித்து மாறுகால் மாறுகை வாங்கிவிடலாமா? இவர்கள் கூறும் விளக்கத்தின்படி, அண்மையில் அதிகார வர்கத்தின் நிலைப்பாட்டிற்கு எதிராக தூத்துக்குடியில் திரண்ட மக்களில்,  பதிமூன்று உயிர்களைக் கொன்றது சரியென்று கூறுலாம். என்ன… குறிபார்த்து துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதற்குப் பதிலாக, சிலுவையிலறைந்தோ மாறுகால், மாறுகை வாங்கியோ கொன்றிருந்தால் குர்ஆன் கூறும் சட்டத்தை அப்படியே நிறைவேற்றிய நன்மையாவது நமது ஆட்சியாளர்களுக்குக் கிடைத்திருக்கும். அல்லாஹ்வின் அன்பைப் பெறும் நல்லதொரு வாய்ப்பை இவர்கள் தவறுவிட்டுள்ளனர்.
 
குர்ஆன் 5:33 கூறுவது, கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் செயல்களினால் ஏற்படும் குழப்பமல்ல! எனவே விளக்கம் என்ற பெயரில் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் என்று நீட்டி முழக்கிக் கொண்டிருப்பதில் பொருளில்லை.
 
fasādan என்பதன் பொருள் என்ன?
 
அழித்தல், கட்டளைக்கு மாறுபடல், இணங்க மறுத்தல், அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கும் ஒழுங்கமைப்பைச் சீர்குலைத்தல் என்று பலவிதமான பொருட்களில் fasādan என்ற பதத்தைப் பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் குர்ஆன் பயன்படுத்தியிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் அல்லாஹ்வுடன் இணங்கிப் போகாத எல்லாவிதமான செயல்களுமே fasādan-குழப்பம்தான். உதாரணத்திற்கு இரண்டு குர்ஆன் வசனங்களைக் காண்போம்.
2:11. "பூமியில் குழப்பம்(tuf'sidū) செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது "நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.
 
16:88 (நம்மை) மறுத்து, அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர் குழப்பம்(yuf'sidūna) செய்து வந்ததன் காரணமாக வேதனைக்கு மேல் வேதனையை அவர்களுக்கு அதிகமாக்குவோம்.
 
அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க மறுப்பதால் இங்கு fasādan-குழப்பம் ஏற்படுகிறது. எனவே குர்ஆன் 5:33-ல் குறிப்பிடப்படும் குழப்பம் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க மறுத்தல் என்பதுதான். முஹம்மதுவின் தலையாய போதனை தன்னை அல்லாஹ்வின் தூதன் என்று கூறிக் கொண்டது மட்டுமே! அவரது கருத்தை மறுதலித்தவர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொல்லச் சொல்லுகிறது. இவ்வளவுதான் இதற்குமேல் இதில் விவாதிக்க எதுவுமில்லை!
இரண்டு கேள்விகள்,
 
1. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் செய்தல் என்றால் என்ன?
2. தண்டனையைச் செயல்படுத்துவது யார்?
 
அல்லாஹ்வுடன் எப்படிப் போர் புரிய முடியும்? நிச்சயமாக முடியாது! ஏனென்றால் அல்லாஹ்வுடன் தொடர்பில் இருந்தது முஹம்மது மட்டும்தான். வேண்டுமானால் அவர்கள் இருவரும் போர் மட்டுமென்ன காதல், கலவியென எதை வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். அது அவர்களது தனிப்பட்ட விஷயமென நாமும் விலகிடலாம். நான் முன்பு கூறியதுபோல முஹம்மதின் கோரிக்கையை மறுத்து அல்லாஹ்வின் பெயரால் அவர் விட்ட சரடுகளுடன் நம்மால் கருத்துப் போர் புரிய முடியும். அதைத்தான் இங்கு போர் என்று குறிப்பிடுகின்றனர். முஹம்மதுவுடன் கருத்துப் போர் புரிந்தவர்களை எவ்வாறு அன்பாக, தனது  வாள்முனையில் வருடி, அரவணைத்துச் சென்றார் என்பதை நாம் முன்பே பலமுறை விவாதித்திருக்கிறோம். முஹம்மதுவின் அடிமைகளும் அவருக்குச் சற்றும் சளைத்தவர்களல்ல; அவர்களின் அன்பைப்பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன்.
 
தண்டனைகளை தீர்ப்பளித்து நிறைவேற்றும் பொறுப்பு யாரச் சார்ந்தது?
 
ஆட்சியாளர் மட்டுமே தண்டனைகளைத் தீர்ப்பளித்து செயல்படுத்த வேண்டுமென்று குர் ஆனின் எங்குமே கூறப்படவில்லை. முஹம்மதுவிற்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தால் யார் வேண்டுமானாலும் தண்டனையைச் செயல்படுத்தலாமென்று அபூதாவூத் 4348, 4349 கூறுகிறது. நடைமுறை உதாரணங்களுடன் இதை பார்ப்போம். பங்களாதேசத்தில் முஹம்மதியத்திற்கு எதிராக கருத்தை இணையத்தில் பரப்பியதற்காகக் கொல்லப்பட்ட Asif Mohiuddin, Ahmed Rajib Haider, Sunnyur Rahaman, Avijit Roy, Washiqur Rahman, Ananta Bijoy Das, Niloy Chakroborty மற்றும் இன்னும் பலரும் தனிநபர்கள் மற்றும் மதவாத, அடிப்படைவாதக் குழுக்களால்தான் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரிய, ஈராக் போன்ற நாடுகளில் தண்டனைகளை அடிப்படைவாத குழுக்களே நிறைவேற்றுகின்றன! நாம் இதைப் போன்ற செய்திகளைக் குறிப்பிடும் பொழுது முஃமின்களிலிருந்து ஒரு கூட்டம் கிளர்ந்தெழுந்து, யாரோ எங்கோ செய்த தவறுகளுக்கு ஒட்டு மொத்த சமுதாயத்தையே குற்றம் சொல்வது என்ன நியாயம் என்கின்றது.
 
இதையே இவர்கள் எத்தனை காலத்திற்குத்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்? முஹம்மதிய மதவாதக் குழுக்கள் என்பது வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள் அல்ல! இவர்கள் கூறும் மதத்தை துய்மையாக அதன் உண்மை வடிவில், செயல்படுத்த முயற்சிக்கும் தன்னலமற்ற அமைப்புகள். இன்னொரு உதாரணத்தைத் தருகிறேன்.
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி ஆப்கானிஸ்தான்-காபூல் நகரில் முஃமின்களால் பிரான்ஸ் நாட்டுத் தூதரகத்தில் பணிபுரிந்துவந்த ஃபர்குந்தா (Farkhunda) என்ற 27 வயது இளம்பெண் கொல்லப்பட்டாள். காரணம், தான் பயிற்றுவிக்கும் மதரஸாவில், ஒரு முல்லாவுடன் மதம் தொடர்பாக எதையோ விவாதித்திருக்கிறார். அந்த முல்லா வெளியில் என்ன கூறினாரோ தெரியவில்லை. ஆனால் ஃபர்குந்தா குர்ஆனை எரித்து அவமானப் படுத்து விட்டார் என்ற செய்தி காபூல் நகரம் முழுவதும் பரவுகிறது. அவர் பணி புரியுமிடத்திற்கு வெளியே கூடிய பெரும் கும்பல் கூடி அந்த இளம்பெண்ணைக் கொலை செய்ய முயற்சிக்கிறது; அங்கிருந்த சொற்ப எண்ணிக்கைக் காவலர்களால் வெறிபிடித்த கூட்டத்தைக் கட்டுபடுத்த முடியவில்லை. உண்மையென்னவெனில் அவள் தண்டிக்கப்பட வேண்டுமென்றே காவலர்களும் விரும்பிருக்கின்றனர். பெயரளவிற்கு வன்முறையைத் தடுக்க முயற்சிப்பதைப் போல பாவனை செய்துவிட்டு கண்டுகொள்ளாமல் ஒதுங்கிவிட்டனர். வெறிகொண்ட கும்பல் அவள்மீது கோரத்தாண்டம் ஆடியது. அந்த அப்பாவிப் பெண் மதவெறி ஓநாய்களின் கோரப் பற்களுப் பலியானாள். இதில் மிக வேதனையான செய்தி ஃபர்குந்தா குர்ஆனை எரிக்கவில்லை என்பதுதான்.
 
அதிக விவரங்களுக் கீழுள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.
 
 
முஃமின்கள் பெரும்பான்மையாக இருக்குமிடங்களில், மதநிந்தனையின் எதிர்விளைவு எப்படியிருக்கும் என்று இன்பதற்கு ஃபர்குந்தாவின் படுகொலை மிகச் சிறந்த உதாரணம். கொலைகாரகளில் சிலர் தண்டிக்கப்பட்டனர். ஆனால் எதுவும் அந்த அபலைப்பெண்ணின் மரணத்தை ஈடுசெய்ய முடியாது.
 
இப்படுகொலையை ஆப்கான் மக்கள் எல்லோருமே ஆதரிக்கவில்லை என்பது உண்மை. அவர்கள் இக்கொலையைக் கண்டித்தனர்; வெகுண்டு எழுந்தனர்; ஊர்வலம் சென்றனர் என்பதெல்லாம் சரிதான். அதற்கு ஒரே காரணம் ஃபர்குந்தா குர்ஆனை எரிக்கவில்லை என்ற உண்மை தெளிவுபடுத்தப்பட்டதால்தான். ஒருவேளை ஃபர்குந்தா குர்ஆனை எரித்திருந்தால், மதவெறியர்களின் செயல் வெகுஜன முஹம்மதியர்களால் நியாயப்படுத்தப்பட்டிருக்கும். ஆஃப்கான் மட்டுமல்ல ஒட்டுமொத்த முஹம்மதிய உலகமும் இப்படுகொலையைக் கொண்டாடியிருக்கும்! அதுதான் இஸ்லாம்! அப்பொது யார் தீர்ப்பளிக்க வேண்டும், யார் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்ற சடங்கு சம்பிரதாயங்களெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றாது! சட்டங்கள் என்பதும் அதற்கு தண்டனை அரசுதான் வழங்க வேண்டும் என்பதும் அதிகாரத்திலுள்ளோர் கையும் களவுமாக மாட்டும்போது மட்டுமே இவர்கள் சொல்லும் பம்மாத்துகள். இந்த குள்ள நரிகள் ஒன்று திரண்டு தாஈங்களே அடித்து, எரித்து,  வெட்டிக் கொன்றதே வரலாறு.
 
அந்த இளம் பெண் கொலை செய்யப்படும் காட்சியை கவனியுங்கள் எத்தனை குரூரம், வெறித்தனம். அந்த கும்பலுக்கும் அவளுக்கு அப்படியென்ன விரோதம்? ஒன்றுமில்லை!  நாம் இதில் கவனிக்க வேண்டியது, ஏன் இவர்கள் இப்படி? இதன் ஆணிவேர் எங்கிருக்கிறது? என்பதைத்தான். இக்கேள்விகளுக்கு ஒரே பதில் முஹம்மதுவின் கேடுகெட்ட போதனைகள்!
 
தண்டனையை ஒரு முஹம்மதிய அரசுதான் வழங்க வேண்டுமென்று இவர்கள் முன்வைக்கும் வாதங்களை இவர்களே கேலிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதையே இப்படுகொலைகள் நமக்கு உணர்த்துகின்றன.  இதுபோன்ற ஒவ்வொரு படுகொலையின் பொழுதும் சம்பிரதாயமாக கண்டன அறிக்கைகளையும் செய்திகளை வெளியிடுவதுடன் நம்முடைய அரசியல் மற்றும் ஊடகங்களின் பணி நிறைவடைந்து விடுகிறது. இஸ்லாமி ஊடகங்கள் ஒருவரிகூட எழுதாமல் தங்களின் ஆதரவு அரிப்புகளை கள்ள மௌனத்துடன் தீர்த்துக் கொள்கிறது.
 
முஹம்மதியர்கள் மட்டுமல்ல அரசியல் மற்றும் ஊடகங்களில் எத்தனை பேர் இக்கொலைகளை உளமாறக் கண்டித்திருக்கின்றனர்? ஊடகங்களில் எத்தனை இதன் வேர்களைத் தேடிச் சென்றிருக்கிறது?  அல்லது இவற்றை வெளிப்படுத்த முயற்சிக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவளித்திருக்கிறது? மதங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை முன்னுரிமை?
 
உண்மையைச் சொல்லுவதென்றால் இவர்களிடமிருந்து வரும் கண்டன அறிக்கைகளில் கொலையைக் கண்டிப்பதைவிட எப்பாடுபட்டாவது குறிப்பிட்ட மதத்தின் மீது விழுகின்ற அவச் சொல்லை நீக்கும் பதட்டம் மட்டுமே அதிகமாகக் காணப்படுகிறது.
 
இனி, “ஒருவர் முஸ்லிம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காகப் படுகொலை செய்வதற்கு அனுமதியில்லை. இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது இஸ்லாமிய அரசின் கடமையாகும்” என்ற வாதத்தை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை காரணம் அனைத்தையும் ஃபர்குந்தாவின் படுகொலை தவிடு பொடியாக்கிவிட்டது.
 
மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களைப் பற்றி குர்ஆனின் சொல்லாடல்களை சுருக்கமாகத்  தருகிறேன் விரிவாகப் படிக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட எண்களுடைய குர்ஆன் வசனங்களைப் தேடிப் படித்துக் கொள்ளவும். என் மீது எரிச்சலிலும், புகைச்சலிலுமிருக்கும் முஃமின்களின் மனம் குளிர வைப்பதும் எனது கடமை. அவர்களுக்காகவும்  இந்தக் குளு குளு குர்ஆன் வசனங்கள்… …
 
 • உலகவாழ்வில் பேராசை கொண்டவர்கள் 2:96
 • நஷ்டவாளிகள் 2:121
 • கூச்சல் கூப்பாடுகளைத் தவிர வேறெதுவும் தெரியாதவர்கள் 2:171,
 • செவிடர்கள், ஊமையர்கள் குருடர்கள் 2:171
 • குரங்குகள், பன்றிகள் 5:60,
 • குரங்குகள் 7:166
 • நாய்கள் 7:176
 • கேவலமான கால்நடைகள் 8:22
 • மிகக் கெட்ட மிருகங்கள் 8:55
 • அசுத்தமானவர்கள் 9:28
 • மிருகங்கள், மிருகங்களைவிடக் கீழானவர்கள் 25:44
 • பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் மூழ்கிக் கிடப்பவர்கள் 38:2
 • அநியாயக்காரர்கள் 62:5
 • சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் 63:4
 • படைப்புகளில் மகா கெட்டவர்கள் 98:6
 
இதற்கு மேலும் முஃமின்களின் சப்பைக்கட்டுகளை விவாதிக்க வேண்டிய அவசியமில்லையென நினைக்கிறேன். குர்ஆனை மட்டுமே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டவர்களால் ஒரு பொழுதும் மாற்று நம்பிக்கையில் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவே முடியாது! கூடாது என்பதையே இக் குளுகுளு வசனங்கள் கூறுகின்றன. மாற்று நம்பிக்கையாளருக்கே இந்த கதியெனில் குறிப்பாக எங்களைப் போன்ற முஹம்மதிய மதத்தைக் கைவிட்ட முர்தத்களின் நிலை அந்த சமுதாயத்திற்குள் எப்படியிருக்கும், என்னவாகும்? என்பதை உங்களது கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நான் இப்படியெல்லாம் எழுதினால், உடனே “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்றொரு புண்ணாக்கு வசனத்தை தூக்கிக் கொண்டு சில காரியக் கோமாளிகள் வரலாம். எனக்கு நேரமில்லாத்தால் அதைப்பற்றி வேறொரு பதிவில் விளக்குகிறேன்.
 
கொலைகார மதங்கள் என்றொரு தலைப்பை வைத்துவிட்டு, ஒரேயொரு மதத்தைமட்டும் விமர்சித்துக் கொண்டிருக்கிறானே, திரூரில் நிகழ்ந்த கொலையைப்பற்றி துவங்கி எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருக்கிறானே இவனென்ன “லூஸா” என்று உங்கள் மனதின் ஓரத்தில் எழும் குரல் எனக்குக் கேட்காமலில்லை!.
 
தொடரும்…
தஜ்ஜால்
+++++++++++++++++++++++
கொலைகார மதங்கள்-2
++++++++++++++++++++++++++
Coming soon
++++++++++++++++++++