Sunday 20 July 2014

அல்லாஹ்வின் மகன்!(?) -7

       மனிதர்களை அல்லாஹ் எவ்வாறு உருவாக்குகிறான் என்பதையும் கடந்த பகுதியில் பார்த்தோம். அதாவது மனித உடலை அல்லாஹ்(!) உருவாக்கும் முறையையும் அதனுடன் உயிர் எவ்வாறு இணைக்கப்படுகிறது என்பதையும் கவனித்தோம். தந்தை யார் என்பதைத் தவிர ஈஸாவின் உருவாக்கம் அதிலிருந்து எவ்விதத்திலும் மாறுபடவில்லை. ஈஸா, ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரத்தமும் சதையும் கொண்டதொரு சராசரி மனிதராக வாழ்ந்தார் என்பதை கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒப்புக் கொள்கின்றன.

    நடைமுறை வாழ்வில் இந்த ஆன்மா, ஆத்மா போன்றவைகளைப் நாம் பார்த்ததில்லை. நான் அறிந்ததெல்லாம் நம் கண்முன்னே வாழும் மனிதர்களையும் மற்ற உயிரினங்களை மட்டுமே. அதை உடலென்றும் ஆத்மாவென்றும் பிரித்துப் பார்ப்பதில்லை. எந்த உயிரினமாயினும் சூழலை எதிர்த்துப் போரடும் தன்மையுள்ளவரை வாழ்கிறது அவ்வாறு முடியாமல் போகும் பொழுது அழிந்து, மாற்றத்திற்குள்ளாகிறது.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி, சொட்டு, சொட்டாக கருப்பையில் ஊற்றப்படும் விந்து இரத்தக்கட்டி-சதைக்கட்டி என்ற நிலைகளைக் கடந்த பின்னர், அல்லாஹ்வால் அதனுள் உயிர் ஊதப்படுகிறது. பின்னர் முழுவளர்ச்சிபெற்ற குழந்தையாக தாயின் கருவறையிலிருந்து வெளியாகிறது.

ஈஸா என்பவரின் கரு, மரியமின் கர்பப்பையில் எவ்வாறு உருவானது என்பதுதான் இங்கு விவாதத்திற்குரியது. பரிசுத்த ஆவி என்பவர் மரியமின் தனிமையிலிருந்த மரியமின் பெண்ணுருப்பில் ஊதியதால் ஈஸாவின் கரு உருவானதாகக் குர்ஆன் கூறுகிறது. இந்த பரிசுத்த ஆவி என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் ஜிப்ரீல்(காப்ரியேல்) என்பதாக உருவகப்படுத்துகின்றனர்.  இதற்குக் குர்ஆனில் ஆதரமில்லை என்பதையும் குர்ஆன் ஈஸாவின் பிறப்பை ஆதமுடன் ஒப்பிடுவதையும், அது தவறான ஒப்பீடு என்பதையும் முன்னமே பார்த்தோம். மீண்டும் ஒரு முறை இதுவரை பார்த்தவற்றை நினைவுபடுத்திக் கொள்வோம்.

  •   ஈஸா பற்றிய குர்ஆனின் செய்திகளிலும், குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்களின் திருவிளையாடல்களையும் அதனால் விளையும் முரண்பாடுகளையும் கவனித்தோம்.
  •    குர்ஆன் ஈஸாவின் பிறப்பை ஆதமுடன் ஒப்பிடுகிறது; ‘குன்’ என்ற கட்டளையால் உருவானவர் என்கிறது. இது ஒரு தவறான ஒப்பீடு, மேலும் ஆதாமும் ஈஸாவும் குன் என்ற கட்டளையால் உருவானவர்கள் அல்ல என்பதற்கு குர்ஆன் கூறும் செய்திகளே ஆதாரமாக இருக்கிறது.
  •     ஆதாமை களிமண்ணால் அல்லாஹ் தனது இரு கைகளைக் கொண்டு வடிமைத்து, அதை சில காலம்(முஸ்லீம் 5089) உலரவிட்டு, மலக்குகளுடன் கலந்தாலோசித்து அதன் பிறகு உயிரை ஊதினான். ஈஸாவின் நிலை அப்படியல்ல. குறைந்த பட்சம் மரியமிடம் களிமண்ணைக் காண்பித்திருந்தால் கூட பரவாயில்லை.
  •    ஆதாம் தாயின் வயிற்றில் பிறந்தவர் அல்ல; திறந்தவெளியில் உருவாக்கப்பட்டவர். ஈஸா, பரிசுத்த ஆவியால் ஊதப்பட்டு, மரியமின் கருப்பையில் உருவானதாகக் குர்ஆன் கூறுகிறது.
  •     ஆதாம் வளர்ந்த முழுமனிதராகப் படைக்கப்பட்டதாகக் குர்ஆன் கூறுகிறது. ஈஸா கருவாக, சிசுவாக, குழந்தையாக, சிறுவனாக, இளைஞனாக வளர்ந்தவர்.


இஸ்லாமிய நம்பிக்கையிலிருந்து கிறிஸ்த நம்பிக்கை சற்று மாறுபடுகிறது. அதாவது இயேசு மரியாளின் கருப்பையில் வளர்ந்திருந்தாலும் அதில் மரியாளின் உயிரணு, மரபணு சினைமுட்டை என்ற பங்களிப்புகள் எதுவுமில்லை என்பதுதான்.

கிறிஸ்தவத்தில் இந்த நம்பிக்கை ஏன்?

மரியாளின் பங்களிப்பு இருப்பதாகக் கொண்டால், அவர்களது நம்பிக்கைப்படி ஆதிபாவத்தின் தொடர்ச்சியால் இயேசு பாவியாகிவிடுவார். எனவே மரியாளின் பங்களிப்பை மறுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. ஆனால் இஸ்லாமிற்கு அப்படியொரு கட்டாயம் இல்லை! மரியமின் பங்களிப்பை இஸ்லாமியர்கள் மறுக்கவில்லை!

மரியாளின் வயிற்றில் உருவான கருவைப்பற்றி பைபிள் என்ன கூறுகிறது?
மத்தேயு 1:18-21
18. கிறிஸ்துவின் தாய் மரியாள். இயேசுவின் பிறப்பு இப்படி நிகழ்ந்தது. மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவர்கள் திருமணத்திற்கு முன்பே மரியாள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரியாள் கருவுற்றிருந்தாள்.

19. மரியாளின் கணவனாகிய யோசேப்பு மிகவும் நல்லவன். மக்களின் முன்னிலையில் மரியாளை அவன் அவமதிக்க விரும்பவில்லை. எனவே யோசேப்பு மரியாளை இரகசியமாகத் தள்ளிவிட நினைத்தான்.

20. யோசேப்பு இந்த இந்த சிந்தனையாயிருக்கும் பொழுது கர்த்தருடைய தூதன் யோசேப்பின் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, மரியாளை உன் மனைவியாக ஏற்றுக் கொள்ளத் தயங்காதே. அவள் கருவிலிருக்கும் குழந்தை பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.

21. அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடு. அவர் தனது மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்” என்றான்.
என்று கூறி ஒரு ’மிக்சர்’ தட்டை யோசேப்பின் கையில் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டன். அதற்குமேல் அவரும் எதுவும் பேசவில்லை. இதில் மரியமின் மரியாளின் வாக்குமூலம், யோசேப்பு கண்ட இந்தக் கனவு இவைகளைத்தவிர மரியாளின் கர்பத்திற்கான இந்நிகழ்சிக்கு மூன்றாவது சாட்சி வேறில்லை. இதை இத்தனை இரகசியமாகச் செய்யவேண்டியதன் அவசியமென்ன?  


இக்கட்டுரையில், இயேசு சிலுவையில் அறையப்பட்டது தொடர்பாக குர்ஆனின் குழப்பத்தை டேவிட்வுட் என்பவர் மிகத்திறமையாக விமர்சித்திருந்தார்.  இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் தொடரில் இக்கட்டுரையைத் தழுவி நானும் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரையின் இறுதியில் டேவிட்வுட் இவ்வாறு ஒரு கேள்வியை எழுப்புகிறார்.

”..ஏன் அல்லா யாரையும் ஏமாற்றாமல், இயேசுவை அப்படியே எல்லாருக்கும் முன்பாக தன் அளவில் உயர்த்திக்கொள்ளவில்லை? இப்படி இயேசுவை எடுத்துக்கொண்டு இருந்தால், இப்படி பல மக்களை ஏமாற்றவேண்டிய அவசியமே இருந்திருக்காதே?..”

இது மிக நியாயமான கேள்வி, இதை மறுப்பது முறையற்றது. நாமும் இங்கு அப்படியொரு கேள்வியை  முன்வைப்போம்!

கர்த்தர்/அல்லாஹ், மரியாளைத் தனது அற்புதத்தை நிகழ்த்துவதற்காக தேர்தெடுத்திருப்பதாக அனைத்து மக்களின் முன்பாக வெளிப்படையாக தெரிவித்திருக்கலாமே? அப்படிச் செய்திருந்தால் பல மக்கள் எளிதாகத் தெளிவடைந்திருப்பார்களே?
கடவுளின் ஒரு பகுதி நேரடியாகவே மரியமின் கருப்பைக்குள் சென்றுவிட்டது. பிறக்க இருக்கும் குழந்தையில் மரியாளின் பங்களிப்புக் கூட எதுமில்லை என்பதையும் வெளிப்படையாக எல்லொருமறிய அறிவித்திருக்கலமே?

நம்பிக்கையாளர்களிடமிருந்து பதில் வருமென்று நம்புவோமாக! (இன்ஷா அல்லாஹ்!)
ரூஹுல் குத்தூஸ் என்ற பரிசுத்த ஆவி என்பவர் யார்?

லூக்கா 1:26-35 வரையுள்ள வசனங்கள் கேப்ரியேலையும் பரிசுத்த ஆவியையும் மிகத் தெளிவாகவே வேறுபடுத்திக் காட்டுகிறது.

26,27 எலிசபெத் கருவுற்ற ஆறாம் மாதத்தில் தேவன் காபிரியேல் என்னும் தூதனை கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் பட்டணத்தில் வாழ்ந்த கன்னிப் பெண்ணிடம் அனுப்பினார். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு என்ற மனிதனை மணம்புரிவதற்கு அவள் நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் பெயர் மரியாள்.
28. தூதன் அவளிடம் வந்து, “கர்த்தர் உன்னோடிருக்கிறார். அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறார்” என்றான்.
....
34. மரியாள் தூதனை நோக்கி, ”இது எப்படி நடக்கும்? எனக்குத் திருமணம் ஆகவில்லையே!” என்றாள்.
35. தூதன் மரியாளிடம், “பரிசுத்த ஆவியானவர் உன்னிடம் வருவார். உன்னதமான தேவனின் ஆற்றல் உன்னை மூடிக்கொள்ளும். குழந்தை பரிசுத்தமுள்ளதாக இருக்கும். அவர் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்படுவார்.

நாம் முன்பே கவனித்த குர்ஆன் வசனங்களை மீண்டும் கவனிப்போம்,
3.45. "மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!
19:17 அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.
18. "நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார்.
19. "நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'' என்று அவர் கூறினார்.
19:20,21 வசனங்களிலிருக்கும் அடைப்புக் குறிகளை நீக்கினால்,
20. "எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?'' என்று கேட்டார்.
19:21 "அப்படித் தான்'' என்று கூறினான். "இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்குச் சான்றாகவும், நம் அருளாகவும் ஆக்குவோம். இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளை' எனவும் உமது இறைவன் கூறினான்''
19:22 பின்னர் கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார்.

கிறிஸ்தவமும் இஸ்லாமும் இயேசு/ஈஸா விஷயத்தில் ஏறக்குறைய ஒன்றிற்கொன்று நெருக்கமாக இருக்கிறது. ரூஹுல் குத்தூஸ் என்பது யாரென்ற குழப்பத்தைத் தவிர. கிறிஸ்தவத்தைப் பொருத்தவரையில் பரிசுத்த ஆவியும் கேப்ரியேலும் வேறுவேறு கதாபாத்திரங்கள் என்பதை உறுதியாகச் சொல்கிறது. கிறிஸ்தவ நம்பிக்கைப்படி இயேசுவின் உருவாக்கத்தில், மரியாளுக்கு செய்தியை அறிவித்து தயார் செய்ததைத் தவிர, கேப்ரியேலின் பங்கு எதுவுமில்லை.

இஸ்லாமைப் பொருத்த வரையில் பரிசுத்த ஆவி என்ற சொல்லே அந்நியமானது. பரிசுத்த ஆவி என்ற பதம், குறிப்பாக ஈஸாவின் உருவாக்கம் பற்றி கூறப்படும் பொழுது மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பைபிளின் செய்திகளை அரைகுறையாக அறிந்த அல்லாஹ்(முஹம்மது), தான் என்ன சொல்கிறோம் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளும் மனநிலையின்றி, பைபிளில் கூறப்படும் பரிசுத்த ஆவியை அப்படியே குர்ஆனுக்குள் நுழைத்துவிட்டார். செய்வதறியாது திகைத்த முல்லாக்களும் ஜிப்ரீலைப் பரிசுத்த ஆவியாக மாற்றிவிட்டனர். (அல்லாஹ்வோ, பரிசுத்த ஆவியோ அல்லது ஜிப்ரீலோ வந்து மறுக்கப் போகிறார்களா என்ன?!)

முல்லாக்களின் விருப்பப்படியே நாமும் தொடர்வோம்.

குர்ஆன் 19:17 அல்லாஹ் தனது உயிரை அதாவது ஜிப்ரீலை மனிதவடிவில் மரியமிடம் அனுப்பியதாகக் கூறுகிறான். முல்லாக்களின் வாதப்படி, நாம் முந்தைய பகுதிகளில் கவனித்த மரியமின் வெட்கத்தலத்தில் ஊதி அவரை கர்பமாக்கியது அல்லாஹ்வின் பரிசுத்த உயிரான ஜிப்ரீல்தான்.

இஸ்லாமிய மற்றும் முல்லாக்களின் விளக்கத்தின்படி, மலக்குகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் தன்மை கிடையாது. மனிதர்களைப் போன்றோ அல்லது ஜின்களைப்போன்றோ அல்லது வேறு உயிரினங்களைப் போன்றோ மலக்குகள் பாலுணர்வால் உந்தப்பட்டு, தனது இணையுடன் இணைந்து இனப்பொருக்கம் செய்யும் தன்மை கிடையாது. இன்று வரை அல்லாஹ் எத்தனை எண்ணிக்கையில் படைத்தானோ அதே எண்ணிக்கையில்தான் இன்றும் நீடிக்கிறது. எனவே அல்லாஹ்வின் உயிர் எனப்படும் ஜிப்ரீல் என்ற மலக்கினால் இவ்விஷயத்தில் தனிப்பட்டமுறையில் எந்த ஆணியையும் பிடுங்க முடியாது. எனவே அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்ததை மரியமின் வெட்கத்தலத்தின் வழியாக உள்ளே செலுத்தியிருக்கிறது. எனவே மரியமின் கருப்பையில் வளர்ந்தது அல்லாவின் வாரிசுதான்.

அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரீல் கொண்டுவந்தது என்ன?

415. குளோனிங்சாத்தியமே!
ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை வெறும் வரலாறாக மட்டும் திருக்குர்ஆன் கூறாமல் இது ஓர் அத்தாட்சியாக உள்ளது' என்றும்கூறி, இது குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது.
மனிதர்கள் முயற்சி செய்தால், இது சாத்தியமாகும் என்பது இல்லாவிட்டால் இதைச் சிந்திக்கத்தூண்டுவதில் பொருள்இருக்காது.
இன்றைய நவீன உலகில் உயிரினங்களின் உயிரணுவுக்கு மாற்றாக மரபணுவைப் பயன்படுத்தி உயிரினங்களை உண்டாக்கலாம் என்று கண்டு பிடித்துள்ளனர்.
உதாரணமாக ஓர் ஆடு குட்டி போட்டால் அந்தக்குட்டி எல்லா வகையிலும் தாயைப் போலவோ, அக்குட்டி உருவாவதற்குக் காரணமாக கிடாவைப்போலவோ இருப்பதில்லை. சில விஷயங்கள் தாயை ஒத்ததாகவும், சில விஷயங்கள் தந்தையை ஒத்ததாகவும் இருக்கும். சில சமயங்களில் பெற்றோருக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத தோற்றத்திலும் இருக்கும்.
ஆனால் ஓர் ஆட்டின் மரபணுமூலம் உருவாக்கப்படும் குட்டியானது, அந்த மரபணுக்குச் சொந்தமானஆடு அல்லது கிடாவை எல்லா வகையிலும் ஒத்ததாக இருக்கும். இவ்வாறு மரபணு மூலம் இனஉற்பத்தி செய்வதற்குக் குளோனிங் எனப்படுகின்றது.
மரபணுவில் உருவாக்கப்படும் குட்டி, அச்சு அசலாகப்பிறப்பதற்குரிய காரணத்தையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். ஆணுடைய உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையும் இணைந்து கரு உருவாகி வளரும்போது அதில் அதற்கான மரபணுக்கள் தோன்றுகின்றன.
இரண்டும் கலந்த ஒரு கலவையாக மரபணு அங்கே புதிதாக உருவாவதால் அது பெற்றோரை எல்லா வகையிலும் ஒத்ததாக இருப்பதில்லை. அதேசமயம், உயிரினங்களின் உடல் முழுவதும் ஒவ்வொரு தசையிலும் மரபணுக்கள் வியாபித்துள்ளன. சிறிய அளவு தசையை எடுத்து அதிலிருந்து மரபணுவை மட்டும் பிரிக்கின்றனர். இந்தமரபணு 25 வயதுடைய ஒருவனின் மரபணு என்றால் அந்த மரபணுவின் வயதும் 25 தான். இதன் காரணமாகத்தான் யாருடைய மரபணுவிலிருந்து குழந்தை உருவாக்கப்படுகின்றதோ அவரைப் போலவே அச்சு அசலாக இருக்கிறது.
ஆணுடைய உயிரணுவையும், பெண்ணுடைய கருமுட்டையையும் சோதனைக் குழாயில் வைத்து வளர்க்கிறார்கள்.  இரண்டும் கலந்து புதிய மரபணுக்கள் அதில் உருவாகியிருக்கும்.  குறிப்பிட்ட காலம்வரை குழாயில் வளர்த்து, அதில் உருவானமரபணுவை நீக்கிவிட்டு, யாரை குளோனிங் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவருடைய மரபணுவை அந்த இடத்தில் வைக்கிறார்கள். இதன் பிறகு சோதனைக் குழாயில் வளர்த்ததை பெண்ணின் கருவறையில் வைத்து கருவளர்ச்சி ஏற்படுகின்றது. சாதாரண குழந்தையைப் பெற்றெடுப்பது போல் அக்குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது.
மனிதனிடம் இது சோதித்துப் பார்த்து நிரூபிக்கப்படாவிட்டாலும் ஆடு, எருமை, பன்றி போன்ற உயிரினங்களில் இதைச் சோதித்து விஞ்ஞானிகள் வெற்றிகண்டிருக்கிறார்கள்.
மனிதனைப் பொறுத்தவரை அவனைக் குளோனிங் செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். 25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொறுத்தவரை அதன் வயது 25 ஆகும். எனவே 25 வயதுடையவனின் அறிவும் சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
இந்த விபரங்களைக் கவனத்தில் வைத்து, ஈஸா நபியின் பிறப்பு பற்றிக் குர்ஆன் கூறுவதைச் சிந்தித்துப் பார்ப்போம்.
தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால்,  ஆகு என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் ஒரு வானவரை மனிதவடிவில் அனுப்பி, அந்த வானவர்,  ஈஸாவின் நபியின் தாயாரான மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட ஒரு மரபணுவை அந்த வானவர் மர்யம் (அலை) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என்பதையும், எந்த முறையில் குழந்தை உருவாவதாக இருந்தாலும் முடிவில் தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகின்றது. அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய விஷயம், ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே பேசியதாகவும் இதில் கூறப்படுகின்றது. தந்தையில்லாமல் பிறந்ததால் அற்புதம் என்ற அடிப்படையில் பிறந்தவுடன் சில வார்த்தைகளைப் பேசிவிட்டு அதன் பிறகு குழந்தைத்தன்மையுடையவராக அவர் இருந்திருப்பார் என்று நினைக்கலாம். இது தவறாகும். ஏனெனில்,  அவர் குழந்தையாக இருக்கும்போது பேசினார் என்பதுடன் அவரை அப்போதே இறைத்தூதராகவும் ஆக்கியதாக இங்கு கூறப்படுகிறது.
இறைத்தூதர் என்றால், இறைச் செய்திகளைச் சரியாக விளங்க வேண்டும், அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை அறிவோம்.
பிறந்தவுடனேயே ஈஸா நபியவர்கள் பேசியதுடன், இறைச்செய்திகளை விளங்கி, மக்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு முதிர்ச்சி உடையவர்களாக இருந்தது மனிதக் குளோனிங்பற்றிய விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்ததாக இருக்கின்றது.

எப்படியாவது, எதையாவது கூறி குர்ஆனுக்குள் அறிவியலைப் புகுத்தி, கல்லாவை நிறைந்துவிட வேண்டுமென்ற அவரது ஆர்வத்தில் வெளிப்பட்டிருப்பது அறியாமைதான்.  நிச்சயமாக அவரது விசிலடிச்சான் குஞ்சுகள் நிறைய திரைப்படங்களைப் பார்ப்பவர்களாக இருக்க வேண்டும்.

மரபணுக்களில் பதிந்துள்ள தகவல்கள் மூலமே ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பு, அழகு, தலைமுடி, கண், தோலின் நிறம், பரம்பரையாக உடலில் ஏற்படும் நோய்கள் போன்றவை அமைகின்றன.

மரபணு மாற்றத்தால் பிறக்கும் குழந்தை, பிரதியெடுக்கப்பட்டவரின் முழு அறிவையும் பெற்றிருக்கும் என்றால், நன்கு அனுபவம் பெற்ற அறுவை சிகிச்சை மருத்துவரின் மரபணுவினால் உருவான குழந்தையை வேறு சூழலில் வளர்த்தாலும் அறுவைசிகிச்சை வல்லுநராக உருவாகுமா?

பரம்பரையாகக் கடத்தப்படும் பண்புகளும் அனுபவத்தினால் கிடைக்கும் அறிவும் வேறுவேறானவை. குளோனிங் மூலம் பிரதியெடுத்தல் என்பது தன்மைகளையும் பண்புகளையுமே! நினைவுகளையல்ல!

அண்ணன் பீஜே கொடுத்திருக்கும் இந்த விளக்கத்தின்படி, ஒரு ஆணின் விந்தணு மற்றும் பெண்ணின் கருமுட்டையை கொண்டு ஒரு கரு உருவாக்கப்பட வேண்டும். அதன் பின்னர் மரபணு மாற்றம் செய்து புதிய நபரைப் பிரதியெடுக்க வேண்டும். இதன் பொருள் மரியமின் கருமுட்டையில், ஒரு ஆணின் உயிரணு செலுத்தப்பட்டு அதன் பிறகு, மரபணு மாற்றம் செய்ய்பட்டிருக்கிறது. அல்லது கருவை உருவாக்கி, மரபணு மாற்றம் செய்த பின்னர் அக்கரு மரியமின் கருப்பையில் வைக்கப்பட்டிருக்கிறது. எப்படி நோக்கினாலும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் பங்களிப்பு இங்கு இருக்கிறது.

ஈஸா ஆணாகப் பிறக்க வேண்டுமென்றால் X-Y குரோமோசோம்கள் இணைய வேண்டும்; ஈஸா பிறந்தவுடனேயே தெளிவாகப் பேசி பிரச்சாரம் செய்யவேண்டுமென்றால் அறிவு முதிர்ச்சிபெற்றவரின் மரபணுவைப் பிரதியெடுக்க வேண்டும்; எனவே அப்படிப்பட்ட ஒருவரின் மரபணு தேவைப்படுகிறது; மதநம்பிக்கைப்படி, மரியமும் தவறானவரில்லை.

ஈஸாவின் உருவாக்கத்தில் பங்கு பெற்றவர்கள் யார்? அல்லாஹ்வின் வாக்குமூலத்தைப் பாருங்கள்,

4:171. வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையாவார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! மூவர் எனக் கூறாதீர்கள்!..
அல்லாஹ் பிதா, மகன், பரிசுத்த ஆவி என்ற மூன்றாக இல்லை; ஒருவனாகத்தான் இருக்கிறான்; அந்த ஒருவனின் உயிராக ஈஸா இருக்கிறார். இதுதான் இவ்வசனத்தின் நேரடிப்பொருள். இதன் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி ஈஸாவை, அல்லாஹ் தனது உயிரென்பதை ஒப்புக் கொள்கிறான். ஆனால் முஹம்மதால் இதை ஒப்புக் கொள்ளமுடியவில்லை. அதனால்தான்,

குர்ஆன் 6:101
வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்?

அவன் எந்தப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளாத நிலையில் அவனுக்கு எப்படி மகன் இருக்க முடியும்? கேள்வியை எழுப்பி தனது மறுப்பை பதிவு செய்கிறார். (இதிலிருக்கும் மொழிபெயர்ப்புக் குழப்பத்தை முன்பே கவனித்துவிட்டோம்.)

ஈஸாவை அல்லாஹ்வின் மகனாக ஒப்புக் கொள்வதில் முஹம்மதிற்கு என்ன வருத்தம்?

தொடரும்...தஜ்ஜால்.