Sunday 6 March 2016

ஸிஹ்ரும் ஷிர்க்கும்! -4

கடந்த பதிவில் நாம் பார்த்தைப் போன்று முஹம்மது ஜின் ஓட்டியதாகக் கூறும்  இன்னொரு செய்தியும் இருக்கிறது.

ஒருமுறை முஹம்மதுவிடம், ஒரு பெண் பைத்தியம் பிடித்த ஒரு குழந்தையை கொண்டு வந்து காட்டினார். அக்குழந்தையைத் தமது கையில் எடுத்த முஹம்மது 'அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்! அல்லாஹ்வின் விரோதியே வெளியே செல்! நான் அல்லாஹ்வுடைய தூதர்!' என்று கூறினார்கள். குழந்தை குணமடைந்தது. இந்நிகழ்வு அஹ்மது, ஹாகிம், பைஹகீ போன்ற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஜின்–ஷைத்தன்கள் மனிதர்களின் மீது இறங்கி அவர்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்டுவிக்கும் என்று கூறுவது  ஹதீஸ்கள் தானே என்று உங்களுக்கும் தோன்றலாம். அப்படியானால் சில குர்ஆன் வசனங்களை முன்வைக்கிறேன்.  இதற்கு என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

குர்ஆன் 26:221, 222
ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?  இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.

குர்ஆன் 41:25
இவர்களுக்குத் தோழர்களை(quranāa) நியமித்துள்ளோம். இவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவர்கள் அழகாக்கிக் காட்டுகின்றனர். எனவே இவர்களுக்கு முன் சென்று விட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களில் உள்ள (தீய) கூட்டங்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் கட்டளை உறுதியாகிவிட்டது. இவர்கள் இழப்பை அடைந்தோராகி விட்டனர்.

குர்ஆன் 50:27
"எங்கள் இறைவா! நான் இவனை வழிகெடுக்கவில்லை. இவனே தொலைவான வழி கேட்டில் இருந்தான்'' என்று அவனது கூட்டாளி (qarīnuhu)(யான ஷைத்தான்) கூறுவான்.

குர்ஆன் 37: 51,52,53
"எனக்கு ஒரு நண்பன்(qarīnun) இருந்தான். நீயும் (மறுமையை) நம்புவோரில் ஒருவனா? நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும் போது நாம் கூலி கொடுக்கப்படுவோமா?'' என்று (என்னிடம் கேட்டான்) என அவர்களில் ஒருவர் கூறுவார்.

ஷைத்தான் என்ற ஜின்கள் மனிதனின் மீது இறங்கின்றன அவை தங்களின்(அல்லாஹ்வின்!?) விருப்பதிற்கேற்ப மனிதர்களை ஆட்டுவிக்கின்றன என்பதற்கு  குர்ஆன் வசனங்ளும் ஹதீஸ்களும்  போதுமான சாட்சிகளாக இருக்கின்றன.  

பாரம்பரிய சுன்னத் ஜமாஅத்தினர் ஜின் இருக்கிறது என்பார்கள்; ஜின்கள் மனிதனை ஆட்டுவிக்கும் என்பார்கள்; தேவையேற்பட்டால் அதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்வோம் என்றும் கூறுகின்றனர். அவர்கள் யாருடனும் எந்த வம்பிற்கும் செல்வதில்லை. தாங்கள் உண்டு தங்கள் நம்பிக்கையுண்டு என்று இருப்பவர்கள்.

இன்னொரு வகை முஃமின்கள் உண்டு. அவர்களிடம் ஜின்கள் பற்றி வேறொரு கருத்தும் இருக்கிறது. நாம் அதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.

….களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதன் உடம்பு களி மண்ணாக இல்லை, இரத்தமும் தசையுமாகவே உள்ளது. அதேசமயம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும் (Minerals) மனித  உடலில் உள்ளது. இது போலவே நெருப்புச் சுடரிலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் நெருப்பு சுவாலையாக இருப்பதில்லை. ஆனால் நெருப்பின் பண்பான வெப்ப ஆற்றலைக் (Plasma-Radiant energy) கொண்டுள்ளார்கள். …


மனிதர்களைப்போல் மூன்று நிலைகளில் (3 டைமேன்சன்) இல்லாமல் நான்காவது நிலையான பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும். இடம், காலம் வெளி, இவர்களுக்கு பொருட்டல்ல!...

இன்று பேசப்படும் ஏலியன்கள், என்னும் வேற்று கிரகவாசிகள் இஸ்லாம் கூறும் ஜின்களே! ஜின்கள் நம்மோடு நம் பூமியிலும் வசிக்கின்றன, பிரபஞ்ச பெருவெளியிலும் வாழ்கின்றன. நம் கண்களால் இவைகளைக்  காண முடியாது. ஆனால் அவைகளால் நம்மை பார்க்க முடியும். ஜின் என்ற அரபிச் சொல்லுக்கு மறைக்கப்பட்ட என்ற பொருள்.

இந்த பிளாஸ்மா உயிர்கள்தான் மனிதர்களிடையே நாய், பூனை, கழுதை, பாம்பு போன்ற தோற்றங்களில் உருமாறி வந்தனவா? மனிதர்களுக்குள் புகுந்து அவர்களது எண்ணங்களை ஆட்கொண்டு தங்கள் விருப்பம் போல ஆட்டுவிக்கின்றனவா? அல்லது மனித உருவில் தோன்றி மனிதர்களை வழிகெடுக்கின்றனவா? அல்லது இந்த பிளாஸ்மா உயிரிகளைத்தான் முஹம்மது,  எச்சில் துப்பி, 'அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்!” என்று மிரட்டி வெளியேற்றினாரா?

குர்ஆனுக்கு விளக்கத்தை சொல்வதற்கு முன் அது குர்ஆனின் மற்ற செய்திகளுடன் பொருந்துகிறதா? இல்லையா? என்பதையெல்லாம் கவனிக்காமல் மனதில் தோன்றுவதையெல்லாம் விளக்கம் என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர்.

தமிழக முஸ்லீம்களில் இன்னொரு பிரிவு இருக்கிறது  அவர்கள், குர்ஆன் ஹதீஸ் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், இதைப்பற்றி அண்ணன் பீஜே கூறியுள்ளது என்ன? என்பார்கள்.  அவர்களுக்காக, 

……. ஒரு மனிதனின் உடம்பில் ஜின் இருக்கின்றது என்றால் அந்த மனிதனுக்கு மனித உள்ளம், ஜின் உள்ளம் என்று இரண்டு உள்ளங்கள் இருப்பதாக ஆகின்றது.  அதிலும் இரவில் ஜின் உள்ளத்தைக் கொண்டு தொழுகின்றான், பகலில் தெரியாது என்று கூறுகிறான் என்றெல்லாம் கூறுவது இரண்டு உள்ளங்கள் அவனிடம் இருக்கின்றது என்று தான் அர்த்தம்.

ஆனால் இவ்வாறு இரண்டு உள்ளங்கள் யாருக்கும் இருக்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 33:4)……

இஸ்லாமிய அறிஞர்கள் மட்டத்தில், தர்க்க ரீதியான வாதங்களுக்கு  இப்ன் தைமிய்யா (CE 1263)  புகழ் பெற்றவர்.  அன்றைய மக்களின் நம்பிக்கை எவ்வறிருந்தது என்பதை  அறிய The Jinn (Demons - Abridged, Annotated and Translated by Dr. Abu Ameenah Bilal Philips) என்ற அவரது கட்டுரையில் காணலாம். அதில் ”ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான் (புகாரி 3281) என்ற செய்தியை  மேற்கோள் காண்பித்து. மனிதனுக்குள் ஜின்கள் ஊடுரும் என்கிறார்.

ஆனால் ”மனிதர்களுக்கு இரண்டு உள்ளம் இல்லையென்ற குர்ஆன்(33:4) வசனத்தை அடிப்படையாகக் கொண்டு ”ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு, மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்  அண்ணன் பீஜே. அப்படியானால் நாம் கண்ட குர்ஆன் வசனங்களில் சொல்லப்படும் வழிகெடுத்த, வழிகெடுத்துக் கொண்டிருக்கும், வழிகெடுக்கப்போகும் கூட்டாளி-நண்பன்-Qareen யார்? இந்த Qareen எப்படி வழிகெடுப்பான்?  

தூதர் முஹம்மதைத் தவித்து வேறு சிலரிடமும் ஷைத்தான் நேரில் தோன்றியதாகக் கூறும் சில செய்திகள் குர்ஆன் ஹதீஸ்களில் காணப்படுகிறது. வழிப்பறிக் கொள்ளை முயற்சியில் உருவான ’பத்ரு’ சண்டைக் களத்தில் குரைஷிகளிடம் சென்ற ஷைத்தான்,

குர்ஆன் 8:48
ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! "இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்'' எனவும் கூறினான். இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த போது பின் வாங்கினான். "உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்'' என்று கூறினான்.

அதாவது, பத்ரு களத்தில் மோதல் துவங்குவதற்குமுன், முஹம்மதின் எதிரிப்படையான குரைஷியர்களின் எண்ணிக்கையை அல்லாஹ் ’கிரபிக்ஸ்’ செய்து குறைத்துக் காண்பித்து, ஏமாற்றிக் கொண்டிருந்த அதேவேளையில் வேளையில், குரைஷியர்களிடம் சென்ற ஷைத்தான், அவர்களை உற்சமூட்டினான் என்றும் சண்டையில் அவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட பொழுது பின்வாங்கி ஓடிவிட்டான் என்கிறது மேற்கண்ட குர்ஆன் வசனம். குரைஷிகள் ஷைத்தானை நம்பியதால்தான் ஏமாற்றத்திற்கு ஆளாயினர் என்கிறான் அல்லாஹ்!

ஒருமுறை அபூஹுரைராவை ரமளானுடைய ஸகாத் (உணவுப்) பொருட்களுக்கு காவலாக இருந்த பொழுது தொடர்ந்து மூன்று நாட்கள் அவற்றைத் திருட ஷைத்தான் வந்ததானாம். (ஜின்களின் ’உணவு’ ஸகாத்தில் இருந்ததா?) அபூஹுரைரா அவனை கையும் களவுமாக பிடித்த பொழுது, ஷைத்தானாகிய தனது தொல்லைகளிலிருந்து தப்பிக்க ஆயத்துல் குர்ஷியை ஒதிக் கொள்ள அவனே அறிவுறுத்தியதாகவும் புகாரி ஹதீஸ் கூறுகிறது. 

ஷைத்தான்கள் மனிதனின் சிந்தனைக்குள் நுழைந்து அவனை ஆட்டுவிக்கின்றன என்பதைக் கூறும் ஹதீஸ்கள்

புகாரி 1232
'உங்களில் ஒருவர் தொழத் தயாரானால் அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே இரண்டு ஸஜ்தாச் செய்யட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

புகாரி 3276
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, 'இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், 'உன் இறைவனைப் படைத்தவர் யார்?' என்று கேட்கிறான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஷைத்தானால் மனித உள்ளத்திற்குள் நுழைந்து அவரது எண்ணங்களை ஆட்டுவிக்க முடியும் என்பதற்கு ஆதாரமாக ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.   ஜின்கள் பற்றிய த.த.ஜவின் புத்தகம் இவ்வாறு விளக்கம் கூறுகிறது.

தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால அழைப்பதும் நன்மையான காரியங்களை புறக்கணிக்குமாரு(று) ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும்.  அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்கு கட்டுப்பட்டவர்கள் தீமையை செய்துவிடுகிறார்கள் அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.

ஆனால் இவ்விளக்குத்திற்கு நேர் எதிராக அண்ணன் பீஜே இரண்டு உள்ளம் இருக்க முடியாது என்கிறார்.  ஷைத்தான் மனிதனுக்குள் நுழையாமல் அவனது சிந்தனையை, உள்ளத்தை எப்படி தங்களது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகின்றன?  ஷைத்தான், அண்ணன் பீஜேவிற்குள் புகுந்து(!) கொண்டு முன்னுக்குப்பின் முரணாக விளக்கம் சொல்ல வைக்கிறான் என்று நினைக்கிறேன்.!

ஷைத்தான்களுக்கு கூச்ச உணர்வு அதிகமாகிவிட்டதோ என்னவோ தெரியவில்லை, அன்றைய காலத்தில் பலவிதமாக நேரிலும் உருமாறியும் அரேபியப் பகுதிகளில் தோன்றிய ஷைத்தான்கள் இப்பொழுது எவர் முன்பாகவும் வருவதில்லை.  அப்படியொன்று இருக்கிறதா? என்று எண்ணத் தோன்றுகிறது. கடந்த  1400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஜின் இனம் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருக்கின்றன.  என்ன காரணம்?

ஷைத்தான்கள் மனிதர்கள் மீது இறங்குகின்றன, இறக்கப்படுகிறது, Qareen-களாக இணைக்கப்படுகிறது என்றெல்லாம் கூறும் குர்ஆன் வசனங்களை என்ன செய்வது?

இதற்கு, ஜின்கள் மறைந்திருந்து மனிதர்களை வழி கெடுக்கின்றன என்ற ஒரேஒரு பதில் மட்டுமே இருக்கிறது. அதாவது அவைகள் மறைந்திருந்து பேசலாம், மாயக்காட்சிகளை மனிதர்களது கண்களில் தோன்றச் செய்யலாம். அல்லது மனிதர்களுக்குள் நுழைந்து அவர்களது சிந்தனைகளை ஆட்டுவிக்கலாம். ஆனால் இவையெல்லாமே மனநலபாதிப்பின் விளைவுகள் என்கிறார் அண்ணன் பீஜே!

…மனிதனிடம் இரண்டு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.  இதற்கு மாற்றமாக அந்த மனிதன் கூறுவதால் இது ஏமாற்று வேலையாக இருக்கலாம்.  மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர் இவ்வாறு நடிக்கலாம்.
அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவர் மனநோய்க்கு ஆளாகியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.  திருமணம் அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருப்பவர்கள் அதை நேரடியாக வீட்டில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.  இது, ஹிஸ்டீரியா என்ற ஒருவகை மன நோயாகும்.

மனநோயில் பலவகைகள் இருக்கிறது. நான் அன்றாடாம் காணும் மனநோயால் பதிக்கப்பட்டவர்கள் செய்வது என்ன? அவர்கள் தனியே அமர்ந்து கொண்டு சிரிப்பார்கள், அழுவார்கள், அவர்கள் எதிரில் யாரோ இருப்பதைப் போன்று தீவிரமாக உரையாடுவார்கள், விவாதம் செய்வார்கள், எதையாவது கொடுப்பாவர்கள், வாங்குவார்கள் இப்படி தினமும் ஒருவரையாவது நாம் காணலாம். இதற்குக் காரணம் அவர்களிடம் யாரோ இருப்பதைப் போன்றும், தங்களுடன் பேசுவதை போன்றும், சண்டையிடுவதைப் போன்றும் தோன்றுவதால்தான்.

அண்மையில், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த கியுல்செஹ்ரா போபோகுலோவா என்ற  39 வயதுப் பெண், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது பெண் குழந்தையை கவனித்துக் கொள்ளும் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து தலையை கத்தியால் துண்டாக வெட்டி அதை எடுத்துக் கொண்டு மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றார். போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.



குழந்தையை கொலை செய்தீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் சிரித்துக் கொண்டே கூறுகையில், அல்லாஹ் தான் அந்த குழந்தையை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் என்றார்.

தூதர் முஹம்மதுவும் இப்படித்தானே கூறினார், இதேபோலத்தானே செய்து கொண்டிருந்தார்?  (இப்படி ’பொசுக்’குன்னு ஒரு கேள்வியைக் கேட்டா ஒரு மனுஷன் என்னத்த சொல்ல முடியும்?)

அவர் கூறிக் கொண்டிருந்ததில் ஒரு சிலவற்றை மட்டும் காண்போம். தனது காதுகளில் மணியடிப்பதைப் போன்ற ஓசை கேட்கிறது என்றார்; தன்னிடம் இதுவரை எவருமே பார்த்திராத, பார்க்க வாய்ப்பில்லாத, ஜிப்ரீல் என்ற ஒருவர் பேசுவதாகக் கூறினார்; யாரோ (அல்லாஹ்) பேசுவது தனக்கு கேட்பதாகக் கூறினார்; கண்களுக்கு ஏதேதோ காட்சிகள் தெரிவதாகக் கூறினார். தன்னை ஏற்காத அனைவரையும் கொன்றொழிக்கும்படி அல்லாஹ் ஆணையிட்டிருப்பதாகக் கூறிக் கொண்டார். அதை நிறைவேற்றவும் செய்தார். இது தெளிந்த மனநிலையா?

முஹம்மதிற்கு முதன் முதலில் வஹீ(!) வந்த பொழுது,   அவர் தன்னை ஏதேனும் கெட்ட ஜீன் பீடித்திருக்கும் அதனால் தனக்கு குழப்பம் ஏற்படுவதாகவும் பைத்தியம் பிடித்திருக்கலாமென்றும் நம்பினார். அவரது துணைவியரான கதீஜா அதிபயங்கரமான சோதனைகள் செய்து, முஹம்மதை இறுக்கி அணைத்து ‘உம்மா’ கொடுத்தது ஷைத்தான் அல்ல என்பதை நிரூபித்து(!), முஹம்மதிற்கு உற்சாகமூட்டினார் என்கிறது இப்ன் இஸ்ஹாக்.

நாம்முடன் எப்பொழுதுமே Qareen என்ற ’ஜின்’ இருப்பதாகவும், நாம் எங்கு சென்றாலும், உறங்கும் பொழுதும், எழுந்திருக்கும் பொழுதும், கழிப்பிடத்திற்குச் செல்லும் பொழுதும், குளிக்கும் பொழுதும், ஆடை மாற்றும் பொழுதும், சாப்பிடும் பொழுதும், அலுவலகத்திற்குச் செல்லும் பொழுதும், துணையுடன் இருக்கும் அந்தரங்கமான வேளைகளிலும்கூட நம்மைவிட்டு விலகாமல் நம்முடனே இருந்து கொண்டு நமது செயல்களைக் கண்காணித்தும், இடையூறு செய்தும், வழிகெடுக்கவும் காத்திருக்கின்றன என்பதை  உறுதியாக நம்பிக்கொண்டு,  அல்லாஹ்வே என்னைக் காப்பாற்று என்று முணுமுணுத்துக் கொண்டிருப்பது மனநிலை பாதிப்பாகத் தெரியவில்லையா? ஜின்கள் மனிதர்களைத் தாக்கும் என்ற பாகன் அரேபியர்களின் மூட நம்பிக்கைகளை இஸ்லாம் என்ற பெயரில் விற்பனை செய்திருக்கிறார்.

இன்னொரு உதாரணத்தையும் கூறமுடியும்; பின் வரும் குர்ஆன் வசனத்தைக் கவனியுங்கள்.

குர்ஆன் 113:1-5
அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

அதென்ன பொறாமைக்காரர்களின் தீங்கு?

புகாரி 5740
அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள், 'கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே' என்று கூறினார்கள். மேலும், பச்சைகுத்துவதைத் தடை செய்தார்கள்.

முஸ்லீம் 4405
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
கண்ணேறு உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் ஒன்று வெல்ல முடியுமானால், கண்ணேறு அதை வென்றிருக்கும். (கண்ணேறுக்குக் காரணமான) உங்களிடம் குளித்துக் கொள்ளுமாறு கோரப்பட்டால் குளித்துக்கொள் ளுங்கள்.

பொறமை கொண்டு ஒருவரை பார்ப்பதால் அவருக்கு கண்ணேறு(கண் திருஷ்டி)  ஏற்படுகிறது, அதனால் பொறமைக்குள்ளாகும் மனிதர்  பாதிக்கப்படுவது உண்மைதான் என்கிறார் முஹம்மது. அது எப்படி மனிதனை பாதிக்கும்? 

சூனியத்தைப்பற்றிய அண்ணன் பீஜே அவர்களின் விளக்கத்திலிருந்து,

'ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது எவ்வித சாதனங்களையும் பயன்படுத்தாமல் உடல் அளவிலோ, உள்ளத்திலோ பாதிப்பு ஏற்படுத்த முடியும்' என்ற நம்பிக்கை அறியாத மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்கையுடையோர் கனிசமான எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்….

ஸிஹ்ர், ஜின் பீடித்தல், பைத்தியம் போன்ற இடையூறுகள் செய்வதில் ஜின் – ஷைத்தான் என்ற கண்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்றின் பங்களிப்பு இருப்பதாக கூறுவதைக்கூட அண்ணன் பீஜே அவர்களின் தர்க்க  அடிப்படையில் ’ஜின்’ என்ற ’சாதனம்’ இருப்பதால்  சரியென்று ஒப்புக்கொள்ள ஒரு காரணம் இருக்கிறது.  இந்த கண்ணேறு உண்மையாவது எப்படி? பொறாமை கொண்டு புலம்பிக் கொண்டிருந்தால் அது எதிராளியை பாதிக்குமா? ஸிஹ்ர் உண்மையில்லை என்றால் கண்ணேறு மட்டும் எப்படி உண்மையாகும்?

சூனியத்தில் புறச்சாதனங்கள் எதுவும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க இயலாமல் ஜோசியத்துக்கு முதலில் தாவினார்கள். அடுத்து கண்டிதிருஷ்டிக்கு தாவியுள்ளார்கள்.
….
நம்மால் வெளிப்படையாக அறிந்து கொள்ள முடியாத அம்சம் சூனியத்தில் இருக்கின்றது என இவர்களால் அடித்துச் சொல்ல முடியவில்லை. இருக்கலாம் என்று யூகம் தான் செய்ய முடிகின்றது. இந்த யூகத்துக்கு வலு சேர்க்க கண்ணேறு தொடர்பான ஹதீஸை இழுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

கண்ணேறு தொடர்பான ஹதீஸ்கள் பற்றி விரைவில் நாம் தெளிவான விளக்கத்தைத் தர இருக்கின்றோம்.  ….

இதை எழுதிய தம்பி அப்பாஸ் அலீ எதிர்க் கட்சிக்குத் தாவிவிட்டதால் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக இந்த கண்திருஷ்டி –கண்ணேறு தொடர்பான ஹதீஸ்கள் கவனிப்பாரின்றி அநாதைகளாக இருக்கிறது. அருள்கூர்ந்து அண்ணன் பீஜேவும் அவரது அல்லக்கை முல்லாக்களும் ஒன்றுகூடி விரைவில் ஒரு முடிவிற்கு வரவேண்டும்! மூட நம்பிக்கைகள் இஸ்லாமின் பரம்பரைச் சொத்து என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!

இம்மை, மறுமை வாழ்க்கைக்கு மட்டுமல்ல பகுத்தறிவிற்கும் ஏற்புடைய ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! அதை எப்படி மூடநம்பிக்கை மதம் என்று சொல்லாம்? என்று சிலர் கொதித்து எழலாம் எனவே, நாம் அண்ணன் பீஜேவின் விளக்கத்திற்கு வருவோம்.

…மனிதனிடம் இரண்டு உள்ளங்களை ஏற்படுத்தவில்லை என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.  இதற்கு மாற்றமாக அந்த மனிதன் கூறுவதால் இது ஏமாற்று வேலையாக இருக்கலாம்.  மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர் இவ்வாறு நடிக்கலாம்.
அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவர் மனநோய்க்கு ஆளாகியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.  திருமணம் அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருப்பவர்கள் அதை நேரடியாக வீட்டில் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.  இது, ஹிஸ்டீரியா என்ற ஒருவகை மன நோயாகும்.

அந்நபர் மற்றவர்களைப் பற்றி தகவல்களைக் கூறுவதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். ஆச்சரியப்படுவதற்கு இதுவெல்லாம் அபார சக்தி கிடையாது.  மறைமுகமான முறையில் தகவல்களை அறிந்துகொண்டு யார் வேண்டுமானாலும் இவ்வாறு நடித்து மற்றவர்களை ஏமாற்ற முடியும்.

ஹிஸ்டீரியா, மனநோய் என்றெல்லாம் வகைப்படுத்துவதற்கு மார்க்கத்தில் அதாவது குர்ஆன் ஹதீஸ்களில் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?

மற்றவர்களுக்கு பொழிப்புரை கூறுவதற்கு முன், முஹம்மதின் செயல் ஏன்  ஏமாற்று வேலையாக இருக்கலாம்;  மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர் இவ்வாறு நடித்திருக்கலாம்; மற்றவர்களைப் பற்றி தகவல்களைக் கூறுவதைப் பார்த்து இவர்கள் இறைவேதம், அற்புதம் அபாரம் என்றெல்லாம் ஆச்சரியப்படாமல்,  ஆச்சரியப்படுவதற்கு இதுவெல்லாம் அபார சக்தி கிடையாது,  மறைமுகமான முறையில் தகவல்களை அறிந்துகொண்டு அல்லாஹ் கூறியதாக ஆட்டுக்குட்டி கூறியதாக நடித்து மற்றவர்களை ஏமாற்றியிருக்கலாம் அல்லது அவர் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் அவர் மனநோய்க்கு ஆளாகியிருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.  இதைச் செய்தார்களா?

அண்ணன் பீஜே கூறுவது பகுத்தறிவு வாதம்! இன்றைய அறிவியல் வளர்ச்சியால் ஏற்பட்ட வாதம்! இஸ்லாமிய மதநம்பிக்கைகளின் அடிப்படையிலான வாதம் அல்ல! மதங்களுக்கும் பகுத்தறிவிற்கு தொடர்பு கிடையாது. குறிப்பாக இஸ்லாமிற்கும் பகுத்தறிவிற்கும் சம்பந்தமே இல்லை! மதத்திற்குள் அறிவியலையோ அல்லது பகுத்தறிவையோ கொண்டுவந்தால் ஒட்டு மொத்த மதத்தையும் புறக்கணிக்க வேண்டிவரும். மதத்திற்குள் பகுத்தறிவு சிந்தனையை நுழைத்தால், மதநம்பிக்கை அழிந்து போகும். அண்ணன் பீஜே அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். (இது  ஒருவகையில் நமக்கு சாதகம்தான்!)  அதனால்தான் அவரால் குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸ்களிலும் எண்ணற்ற முரண்பாடுகளைக் காணமுடிகிறது. விளைவு, புதிதுபுதிதாக மொழிபெயர்ப்புகளும் விளக்கங்களும் வியாக்கியானங்களும் தொடர்கதையாகிவிட்டது. ஒன்று அவர் மதவாதியாக இருக்கலாம் அல்லது முழுமையான பகுத்தறிவுவாதியாக மாறவேண்டும். இரண்டிற்கும் நடுவில் புதிய வழியைக் காண முயற்சிப்பதால் அவரும் குழம்பி ஈமான்தாரிகளையும் குழப்பிக் கொண்டிருக்கிறார். விளவு ஒரு காலத்தில் மூடுமந்திரமாக இருந்த இஸ்லாமிய நூல்கள் வீதிக்கு வந்துவிட்டன.

பாரம்பரிய சுன்னத் ஜமாஅத்தினர், ஜின் இருக்கிறது என்பார்கள், ஜின் இறங்கும், ஜின்கள் மனிதர்களுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யும், ஸிஹ்ர் ஜின்னின் உதவியோடு செய்யப்படுகிறது என்றெல்லாம் நம்புவது ஏன்? அவர்களுகென்ன அறிவியல் தெரியாதா?

பகுத்தறிவு வந்தால் மதம் அழிந்து போகும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் பாரம்பரிய சுன்னத் ஜமாஅத்தினர் பீஜே போன்றவர்களை மதத்திற்குள் இருந்து அதை அழிப்பவர்கள் என்கிறார்கள்.


நாம் அண்ணன் பீஜேவின் விளக்கத்தைத் தொடர்வோம். மனம் என்று குர்ஆன் எதைக் குறிப்பிடுகிறது என்பதை நினைவில் கொண்டுதான் அண்ணன் பீஜே பேசுகிறாரா? என்பது விளங்கவில்லை. குர்ஆனைப் பொருத்தவரையில் மனம் என்பது மார்பெலும்புகளுக்கு மத்தியில் பொதிந்திருக்கும் இதயம்; மூளையில் பதிந்திருக்கும் செய்திகளும் அல்லது அனுபவங்களும் அல்ல.

குர்ஆன் 2:007
அவர்களது உள்ளங்களிலும்(qulūbihim), செவியிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். அவர்களின் பார்வைகளில் திரை உள்ளது. அவர்களுக்குக் கடும் வேதனையுமுண்டு.

ق ل ب இந்த மூலச் சொல் குர் ஆனில் 168 இடங்களில் வருகிறது இதில் 132 இடங்களில் qalb-இதயம் என்ற பொருளில் பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் ’qalb-இதயம்’ என்று கூற முயற்சிப்பது மனித சிந்தனை மையத்தைதான் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் மனித அது உடலில் எங்கு இருக்கிறது? என்ற கேள்விக்கு குர்ஆனும் ஹதீஸ்களும் பழங்கால நம்பிக்கையைப் பதிலாகக் கூறி சருக்கி விழுகின்றன.

 தூதர் முஹம்மதின் ஆட்கள், எதிரிப்படைகளைக் கண்டு அச்சத்தால் நடுங்கியதைப் பற்றிக் கூறும் பொழுது,

குர்ஆன் 33:10
அவர்கள் உங்கள் மேற்புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப்புறத்திலிருந்தும் வந்த போது, பார்வைகள் நிலை குத்தி, இதயங்கள்(l-qulūbu) தொண்டைக் குழிகளை அடைத்து,..

அதிர்ச்சியால் இதயத்துடிப்பு அதிகரித்து தொண்டைகுழியில் அடைப்பதைப் போன்று தோன்றும். சிந்தனை மையம் எப்படித் தொண்டைக் குழியை அடைக்கும்?


சிந்திப்பது இதயமா? மூளையா?

…அரபு மொழியில் கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையக் குறிக்கவும், இதயத்தைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூளை தான் எல்லாக் காரியங்கைளயும் நிகழ்த்துகிறது என்பைதக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறன், மூளை, இதயம் ஆகிய அர்த்தங்கள் இச்சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரபு அகராதி என்னவேண்டுமானாலும் சொல்லட்டும், அதையெல்லாம் குர்ஆனுக்குள் புகுத்த முடியுமா? நிச்சயம் முடியாது! காரணம் குர்ஆனுக்கு  சரியான பொருள் தூதர் முஹம்மவிடமிருந்து மட்டும்தான் தேடவேண்டும். ஒருவேளை அவர் எந்த விளக்கத்தையும் கொடுத்திருக்கவில்லையெனில்,  அவர் அல்லாஹ்வின் கட்டளையைத் (Q4:63) தவறவிட்டிருக்கிறார் என்பது பொருள்.   

அகராதிகள் என்பது காலத்திற்குக் காலம் பயன்பாட்டிற்கேற்ப புதியபொருள்களுடன் மாறக் கூடியவைகள் அதைக் கொண்டு குர்ஆனுக்குப் பொருள் கூறுவது முறையல்ல.  மேலும், முஹம்மதின் மரணத்திற்கு பின் 500 ஆண்டுகளுக்குப் பிறகு (CE 1232 – CE 1311) எழுதப்பட்ட ஒரு அகராதியை குர்ஆனுக்குள் நுழைப்பது அயோக்கியத்தனமானது.

சிந்திப்பது இதயமா? மூளையா?
..ஆனால், இதயத்தில் தான் சிந்தைன மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்கைள மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப்பட்டு நம் காலம் வரை வந்து சேர்ந்திருக்காது…

அல்லாஹ்வை கேவலாமாக, இழிவாகச் சித்தரிப்பது எப்படி என்பதை அண்ணன் பீஜேவிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.  ”இதயத்தில் தான் சிந்தைன மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்களாம்” அதாவது குர்ஆனைப் பாதுக்காப்பதற்கு அல்லாஹ்விற்கு வேறுவழிதெரியாமல் அம்மக்களை ஏமாற்றியிருக்கிறான்; அங்கிருந்த பெரும்பான்மை மக்களின் தவறான கருத்தை மறுக்கவும், அதை எதிர்த்து உண்மையை நிலை நிறுத்தும் துணிச்சலில்லாத கோழைத்தனம் நிறைந்தவன் என்கிறார். முஃமின்கள் சிந்திக்கட்டும்!

அகராதி என்றால் என்ன?
அகரவரிசைப்படி சொற்களை அமைத்து அதற்கான பொருள் அல்லது அதற்கு சமமான பதத்தை வேறு மொழியில் கூறும் நூல். ஒரு பதத்திற்கு பொருள் வழக்கிலிருந்துலிருந்து பெறப்படுகிறது மாறாக வானிலிருந்து குதித்து வருவதில்லை.

“அரபு மொழியில் கல்ப்- qalb என்ற சொல்லுக்கு சிந்திக்கும் திறன், மூளை, இதயம் என்ற பொருள் இருக்கும் பொழுது, குர்ஆன் சொல்வதை மட்டும் அன்றைய மக்கள் எப்படி எதிர்க்க முடியும்? அன்றைய பாகன் அரேபியர்கள் தங்களது வழக்கத்திற்கு மாறாக இருப்பதாகக் கூறி முஹம்மதின் போதனைகளை எதிர்த்தனர். ஆனால் அங்கு நிகழ்ந்தது என்ன? வாளின் முனையில் அவர்களுக்கு போதிய பாடம் புகுத்தப்படவில்லையா?

அதுமட்டுமல்ல ”இதயத்தில் தான் சிந்தைன மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில்” மூளையில்தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் இருப்பதாக  நடைமுறைக் கருத்திற்கு எதிராக ஒரு அகராதி எப்படிப் பொருள் கூறமுடியும்?

நம்முடைய மிக எதார்த்தமான கேள்வி என்னவென்றால், நாம் கடந்த பதில் பார்த்த ‘ஸஜ்தா’ என்ற பதத்தின் பொருளுக்காக முஹம்மதின் முந்தைய காலத்திற்கும் சென்றவர்,  பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட அரபு அகராதிகளிலும் அரபு இலக்கியங்களிலும் ’கல்ப்' என்ற பதத்திற்கு  ’மூளை’ என்ற நேரடியான பொருள் இருக்கும் பொழுது ’உள்ளம்’ என்று எதற்காக மொழிபெயர்க்க வேண்டும்?

முஸ்லீம் 261
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர் களைப் பிடித்துப் படுக்கவைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள்…..
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.

புகாரி1636
அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்காவில் இருக்கும்போது எனது (வீட்டுக்) கூரை திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறஙகி எனது நெஞ்சைப் பிளந்தார். …

அவர் அவ்வாறு ’கல்ப்' என்பதை  ’மூளை’  என மொழிபெயர்த்தால் அது பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுடன் நேரடியாக முரண்படும்! எதார்த்த உண்மைக்கு முரணாக இருக்கிறது என்று இன்னும் பல ஹதீஸ்களை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும்!




தனது நெஞ்சத்தைக் கிழித்துக் காண்பித்த ஒரு குரங்கைப்பற்றி இந்துமத இதிகாசம் இன்றும் சொல்லிக் கொண்டிருப்பதையும், இயேசுவின் இதயத்தில் முற்கள் சுற்றப்பட்ட ஓவியங்களையும் அறிவீர்கள்.  மேற்கண்ட அறிவியல் இஸ்லாமியரின் பங்கு! மூடத்தனத்தில் மதவாதிகள் ஒருவருக்கொருவர் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல!

தொடரும்…

தஜ்ஜால்

Facebook Comments

28 கருத்துரைகள்:

Unknown said...

சகோதரர் தஜ்ஜால் அல்லாஹ் விர்கு யதிராக நீங்கள் பேசுவது நிழலுடன் யுத்தம் செய்வது போன்றது. மறைவான வற்றை நம்புவது தான் இசுலாம். விண்டிலர் கண்டிலர் கண்டிலர் விண்டிலர் யென்ற தத்துவம் தான் இசுலாம். வெறும் அரசியல் காரணங்களை சர்சையாக்கினால் யெந்த பயனும் இல்லை. மார்கத்திலுல்ல நல்ல வைகளை மட்டும் யெடுத்து குழப்பமானதை விட்டால் அல்லாஹ் ஒன்றும் கோபி த்து கொள்ள மாட்டான். பயனில்லா வாழ்க்கை கு உங்கள் சக்தியெல்லம் வீன் விரயம் செய்வது பரிதாபம் தான்.

நந்தன் said...

குர்ஆன் 38:41, 42
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! "ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும் என்னைத் தீண்டி விட்டான்'' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, "உமது காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!'' (எனக் கூறினோம்).

அய்யா ஈசாவே,
மேலுள்ள குர்ஆன் வசனத்திற்கு சரியான விளக்கத்தை கூறுவீர்களா?

நந்தன் said...

ka der

பயனில்லா வாழக்கை என்று எதைக்கூறுகிறீர்கள்?

சாகித் said...

தஜ்ஜால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நாங்கள் இதயத்தால்தான் சிந்திப்போம். உங்களுக்கு இதயமே இல்லைபோலும். அதனால் பகுத்தறிகிறீர்கள்.

Unknown said...

இந்த வெப்சைட் பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால் அல்லது கடவுள் மறுப்பு கொள்கை யென்று நீங்கள் நினைத்தால் அல்லது இந்த உலக வாழ்க்கை யே பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால்...உங்கள் மன ஓட்டத்திற்கு விட்டு விடுகிறேன்.

தஜ்ஜால் said...

வாங்க Ka Der,

தங்களின் வருகைக்கும் அறிவுறுத்தலுக்கும் மிக்க நன்றிகள்!

// அல்லாஹ் விர்கு யதிராக நீங்கள் பேசுவது நிழலுடன் யுத்தம் செய்வது போன்றது.// உண்மையைச் சொன்னால் அதைவிட மோசமானது! தனித்து செயல்படவில்லையெனினும் நிழல் என்றொன்று இருக்கிறதே?

// மறைவான வற்றை நம்புவது தான் இசுலாம். விண்டிலர் கண்டிலர் கண்டிலர் விண்டிலர் யென்ற தத்துவம் தான் இசுலாம். // இப்படியொரு தத்துவம் இஸ்லாமில் இருக்கிறதா என்ன? மதப் புரோகிதர்கள் முட்டுச் சந்தில் சிக்கிக் கொள்ளும் பொழுது கூறும் அர்த்தமற்ற இந்த வார்த்தைகளை இன்னும் எத்தனை காலத்திற்கு நம்பிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?

//வெறும் அரசியல் காரணங்களை சர்சையாக்கினால் யெந்த பயனும் இல்லை. // அரசியல் காரணமா? இதுபோன்று அர்த்தமற்ற யூகங்களை கைவிடுவது முஃமின்களுக்கு நல்லது. மதத்தால் வயிறுவளர்க்கும் கூட்டத்தின் மயக்கத்திலிருந்து வெளியே வாருங்கள்!

//மார்கத்திலுல்ல நல்ல வைகளை மட்டும் யெடுத்து குழப்பமானதை விட்டால் அல்லாஹ் ஒன்றும் கோபி த்து கொள்ள மாட்டான்.// நல்லது! மார்க்கத்தில் குழப்பமானவைகள் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்கள்! அதை அப்படியேவிடுவது கோழைத்தனம்! எதிர்கொண்டு தெளிவைத் தேடுங்கள் உண்மை புரியும்!

//பயனில்லா வாழ்க்கை கு உங்கள் சக்தியெல்லம் வீன் விரயம் செய்வது பரிதாபம் தான்.// மற்றவர்களின் வாழ்க்கை பயனில்லையென்ற முடிவை அடைந்தது எவ்வாறு? முஹம்மது கூறிய பயனுள்ள(?!) வாழ்க்கையைப்பற்றி கூறுங்கள் பரிதாப நிலையில் இருப்பது யாரென்று புரிய வைக்கிறோம்!

//இந்த வெப்சைட் பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால் // நாங்கள் அவ்வாறு நினைக்கவில்லை!

//அல்லது கடவுள் மறுப்பு கொள்கை யென்று நீங்கள் நினைத்தால் //கடவுள் மறுப்பு கொள்கைதான்!

//அல்லது இந்த உலக வாழ்க்கை யே பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால் உங்கள் மன ஓட்டத்திற்கு விட்டு விடுகிறேன்.// நான் அவ்வாறு நினைக்கவில்லை! (இவரது ”நினைத்தல்” கொஞ்சம் அதிகம்தான்)

யா அல்லாஹ்! இந்த முஃமின்கள் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்வதை கைவிட்டுவிட்டு, பதிவு தொடர்பான சிந்தனைகள் அல்லது கேள்விகள் கேட்பதற்கு தேவையான அறிவையும், மன உறுதியையும், தைரியத்தையும் நீதான் அவர்களுக்கு வழங்கி அருள் புரியவேண்டும்! (ஆமீன்!)

தஜ்ஜால் said...

வாங்க நந்தன்,

நீங்கள் என்னதான் கேட்டாலும் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வராது! பதிவை விமர்சித்து கேள்விகள் கேளுங்கள் என்று கூறியதற்கே விழிக்கின்றனர்!!! பதில் அவர்களிடமிருந்தா…? ம்ம்ம்……

தஜ்ஜால் said...

வாங்க சாகித்,

//தஜ்ஜால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நாங்கள் இதயத்தால்தான் சிந்திப்போம். உங்களுக்கு இதயமே இல்லைபோலும். அதனால் பகுத்தறிகிறீர்கள்.//

அதென்னவோ தெரியவில்லை நம்முடைய இதயங்கள் சிந்திப்பதே இல்லை! முஃமின்களின் இதயத்தை மட்டும் சிந்திக்குமாறு அல்லாஹ்(?) வடிமைத்திருக்கிறானோ என்னவோ?

Unknown said...

வினை அடங்கிவிட்டால்..எதிர்வினை தானாக அடங்கும்...
நேரம் பற்றி பேசுபவர்கள் இதையும் சற்று சிந்திக்கலாம்..
மனம் புண்படுதல் என்ற வார்தை வஹி வருவது போல் இஸ்லாத்தைப் பற்றி விமர்சிக்கும் போது மட்டுமே வருவதே வேதனை..
பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழும் பகுதியில் சமீப காலமாக நடக்கும் விரும்பத்தகாத செயல்களின் விளைவே என்னைப் போன்றவர்கள் இத்தலத்தில் உலவுவதும் தஜ்ஜால் போன்றவர்கள் எழுதுவதும்..
நாம் வாழும் பூமி இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல... இதைப் புரிந்து கொண்டால் போதும்...
விஷச்செடிக்கும் இடம் கொடுத்த இறைவனின் கருணை உங்களிடமோ உங்களை படைத்ததாக சொல்லும் அல்லாவிடமோ இல்லாமல் போனது தான் வேதனை...
ஆமாம் இஸ்லாம் என்னும் ஈரமில்லாப் பாறையின் மேல் தஜ்ஜால் போன்றவர்கள் எறும்பாக ஊருவது உண்மை தான்..விளைவு சிறிதாயினும்
அவரது நோக்கம் மிகவும் உயர்ந்தது

Unknown said...

ஜனாப் தஜ்ஜால் அவர்களே... ஒரு முல்லாவை விட அதிகமாக இசுலாத்தை பற்றி அதிகமாக தெரிந்து வைத்து உள்ளீர்கள் ஆராய்ச்சி செய்கிரீர்கல்.பன்னெடுங்காலமாக பலகோடி பேர்களால் உயிராய் மதித்துப் போட்ருகின்ற ஒரு பெரு மகனை பற்றி இவ்வளவு இழிவாக யெழுதுவதர்கு அவர் உங்களுக்கு செய்த தீங்கு யென்ன?அல்லது இசுலாம் உங்களுக்கு செய்த தீங்கு யென்ன? இல்லை வேறு யெந்த இலாபத்தை யெதிர்பார்த்து இதை யெழுதுகிரீர்கல்?

Unknown said...

Avar solrathathane yeluthrom avara patri yenga iliva yeluthurom. sari kutram ilatha manithan ivulagil ilai. munmadiri yendru iraivanal potrapattavarum 100% nalavar ilainu sola varar thajjal avlothan

குட்டிபிசாசு said...

அன்பின் தஜ்ஜால்,

//மூடத்தனத்தில் மதவாதிகள் ஒருவருக்கொருவர் சிறிதும் சளைத்தவர்கள் அல்ல!//

உண்மை தான்.

குட்டிபிசாசு said...

உளுத்துப்போயிக்கொன்டிருக்கும் மதங்களுக்கு விஞ்ஞான முறையில் இட்டுக்கட்டுவது மதவாதிகளுக்கு ஒன்றும் புதிதல்ல.

தஜ்ஜால் said...

வாங்க Bala Murugan,

தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்!

தஜ்ஜால் said...

வாங்க Ka Der,

//ஜனாப் தஜ்ஜால் அவர்களே... ஒரு முல்லாவை விட அதிகமாக இசுலாத்தை பற்றி அதிகமாக தெரிந்து வைத்து உள்ளீர்கள் ஆராய்ச்சி செய்கிரீர்கல்.// அதென்ன முல்லாவைவிட?

//பன்னெடுங்காலமாக பலகோடி பேர்களால் உயிராய் மதித்துப் போட்ருகின்ற ஒரு பெரு மகனை பற்றி இவ்வளவு இழிவாக யெழுதுவதர்கு அவர் உங்களுக்கு செய்த தீங்கு யென்ன?// அன்றைய யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், பாகன் அரேபியர்களுக்கும் பெருமகனாருக்கும் என்ன தகராறு? அவர்களது மத நம்பிக்கைகளை உங்களது பெருமகன் இழிவாக விமர்சித்தது அவர்களுடன் சண்டையிட்டு கொன்றொழிக்குமளவிற்கு அவர்கள் செய்த தீங்கு என்ன?

உங்கள் பெருமகனை இழிவாக இங்கு எவரும் எழுதவில்லை. குர்ஆன்– ஹதீஸ்கள்-தஃப்ஸீர்கள்-ஆலீம்கள் கொடுத்துள்ள விளக்கங்களின் அடிப்படையில் கேள்விகளை எழுப்புகிறோம் அது உங்களுக்கு இழிவாகத் தெரிந்தால் நீங்கள் வரவேண்டிய இடம் இதுவல்ல!

//அல்லது இசுலாம் உங்களுக்கு செய்த தீங்கு யென்ன?// இஸ்லாம் உட்பட மதங்கள் அனைத்துமே மனிதநேயத்தின் எதிரிகள்! சமுதாயத்திலிருந்து வேருடன் பிடிங்கியெறிப்பட வேண்டியவைகள்!

தஜ்ஜால் said...

வாங்க குட்டிப்பிசாசு,

தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்!

//உளுத்துப்போயிக்கொன்டிருக்கும் மதங்களுக்கு விஞ்ஞான முறையில் இட்டுக்கட்டுவது மதவாதிகளுக்கு ஒன்றும் புதிதல்ல.// சரியாகச் சொன்னீர்கள். தங்களது உளுத்துப் போன நம்பிக்கைகளை விஞ்ஞானத்தில் முட்டுக் கொடுத்து நிறுத்தப் பார்க்கிறார்கள்!

COFFEE & TEA said...

யாருங்க அது ப்லாஸ்மா பற்றி எழுதிய மூமீன். ஒளிக்கே அதிகபட்ச வேகம் இருக்கிறது. ப்லாஸ்மா என்பது பொருள்தான். அது ஒளியைவிட மெதுவாகத்தான் நகர முடியும். என்ன தைரியத்தில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? முஸ்லிம்களெல்லாம் முட்டாள்கள் என்று இவர்களே முடிவு செய்து விட்டனரா?

தஜ்ஜால் said...

வாங்க COFFEE & TEA,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

அட நீங்கள் வேற ஜின்களுக்கும் இன்னும் நிறைய விளக்கங்கள் இருக்கு. ஜின்கள் என்பது பாக்டீரியா, வைரஸ் மாதிரி நுண்ணுயிர் சொல்லிக்கிட்டு திரியற கோஷ்டிகளும் இருக்கும்!

// என்ன தைரியத்தில் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? // அல்லாஹ்(முஹம்மது)வுக்காக எதைச் செய்தாலும் தப்பில்லை, இதற்காக் கூடுதல் ஹூரிகள் வழங்கப்படலாம்.

//முஸ்லிம்களெல்லாம் முட்டாள்கள் என்று இவர்களே முடிவு செய்து விட்டனரா?// இதை தனியாக வேறு சொல்லவேண்டுமா?

Unknown said...

plasma ozhiyavida methuva vantha yena varelalena yena coffee tee. saithan yentha roobathula varvan athan kelvi?

Anonymous said...

அன்புள்ள நண்பருக்கு,
உங்கள் blog ஐ தொடர்ந்து படிப்பவன் நான். அதன் விளைவாக என் நெருங்கிய நண்பர் பற்றிய விபரத்தை பகிர இதை எழுதுகிறேன்.
நான் 60 வயதை கடந்தவன். கடவுள் நம்பிக்கை அற்றவன். எனது நெருங்கிய நண்பர் ஒருவர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவர். உயர் கல்வி கற்றவர். உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றபின் சிறப்பான ‘retired’ வாழ்க்கை வாழ்ந்து வருபவர். அவர் பிள்ளைகள் அமெரிக்காவில் மேல் படிப்பு படித்து மிக உயர் நிலையில் அங்கேயே சிறப்பான வாழ்க்கை வாழ்பவர்கள். நண்பரும் அவர் துணைவியாரும் அங்கும் இங்குமாக வாழ்ந்து வருகின்றனர். நண்பர் கல்லூரியில் படிக்கும் போதே மதநம்பிக்கையை கைவிட்டவர். என்னைப் போன்ற மிகச் சிலருக்குத்தான் அவர் பற்றிய இந்த விபரம் தெரியும். நிரம்ப நூல்கள் படித்து, அதன் விளைவாக எல்லா மதங்கள் குறித்த அறிவும் அவருக்கு உண்டு. இஸ்லாம் பற்றிய கூடுதல் அறிவு அவருக்கு உண்டு. மத நூல்களை தமிழ், ஆங்கிலம் வழியாக படித்தவர். அவருக்கு ’கடவுள்’ என்ற கருத்தாக்கம் ஒரு கற்பனை என்ற புரிதல் ஏற்பட்டவுடன், கடவுளை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்ட மதச் சடங்குகள், நடைமுறைகள், தொழுகை, நோன்பு போன்றவற்றை கை விட்டவர். அவருடன் அன்றாடம் விவாதம் செய்ததன் பலனாக நானும் என்னை நாத்திகனாக உணர்ந்து கொண்டுவிட்டேன். ஆனால் நான் பிறப்பால் இந்து என்ற காரணத்தால் என்னை ஒரு நாத்திகன் என்று தெரியப்படுத்திக் கொண்டதால் எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. ஏற்பட போவதும் இல்லை.ஆனால் அவர் அவ்வாறு செய்ய இயலாமல் தவிப்பது என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
உங்கள் கட்டுரையை படிக்கும் போது நீங்கள் தொழுகைக்கும் செல்வதாகவும் கூறுகிறீர்கள். மதம் குறித்து ஆய்வு செய்து blog ல் துணிச்சலுடன் பதிவும் செய்கிறீர்கள். இவ்வளவு ஆழமாக மத விமர்சனம் செய்வது எவ்வாறு சாத்தியமாகிறது? இந்த இரட்டை நிலை வாழ்க்கை முறை உங்களுக்கு சிரமமாக இல்லையா? மனம் ஏற்றுக் கொள்கிறதா? எனது நண்பர் தன்னை நாத்திகராக உணர்ந்தபின் பொய்மையாக தொழுகை, நோன்பு போன்ற மத நடவடிக்கைகளை ஒப்புக்காக கூட செய்ய முடியவில்லை எனக் கூறுவார். அறிவு மறுக்கும் எந்த செயலையும் செய்ய முடியவில்லை எனவும் கூறுவார். அவர் தொழுகை போன்றவற்றை கை கழுவி பல ஆண்டுகள் சென்று விட்டன. அதே நேரத்தில் வெளிப்படையாக விமர்சனமும் செய்ய மாட்டார். எழுபது வயதை நெருங்கும் அவர் பிற்காலத்தில் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை. உங்களைப் போன்றவர்களுக்கு மத அடிப்படைவாதிகளால் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது? அல்லது எவ்வாறு சமாளிப்பீர்கள்/ ? ஒரு “ex muslim’ எவ்வாறு இப்பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியும்? குறிப்பாக இறுதி நாட்களை எவ்வாறு சந்திப்பது? இது போன்ற தகவல்களை இணையத்தில் தருவதன் மூலம் மத நம்பிக்கையை கைவிட்டு “தெளிவு” பெற்றவர்கள் வெளிப்படையாக, சுதந்திரமாக செயல்பட உதவும் என எண்ணுகிறேன். அப்படிபட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதாகத்தான் தெரிகிறது. எனவே இது பற்றியும் எழுதுங்களேன்! நன்றி !

Unknown said...

Thajjal solvathai pola nanum Friday tholugaiku poven. veru vazhi ilai. nengal solvathu pol nangal nathegargal yendru uraka oorku solamudiathu... uyir payam, samuthayathin meethu payam, kudumba payam ipdi ayiram irkirathu. Anaal yennai irai nambikai atrravanaga matume yenathu veetil nan kaati kolven.sila per vayathu 60 anavudan nathegathin paal povargal yenendral marana payam. periayarthasan yennum abdulla irapatharku mun muslimaga maarinar atharku avar Donna karanam. " oru velai marumai yendra ondru irnthuvittal yena seivathu" . yelame oru anumanam than sagum pothu kadavulukum samuthayathirkum thannai nallavarkalaga silar kaati kolvargal. Thajjal ungal santhegathirku tharga reethiyaga pathil alipaar

தஜ்ஜால் said...

வாங்க ஐயா,

தங்களைப் போன்ற சான்றோர்கள் எங்களது blog ஐ தொடர்ந்து படிப்பதாகக் கூறுவதும், பாரட்டுவதும் மகிச்சியளிக்கிறது. இதை எங்களது தொடர் பயணத்திற்கான உந்துதலாக எடுத்துக் கொள்கிறேன் மிக்க நன்றி!

முதலில் என்னைப்பற்றி உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்,
இந்த இரட்டை நிலை வாழ்க்கை முறை உங்களுக்கு சிரமமாக இல்லையா? மனம் ஏற்றுக் கொள்கிறதா?

இயற்பெயரில் இருக்கும் பொழுது வெளிப்படயாக செயலாற்ற முடியாத கோழையாக இருப்பதை மனம் ஏற்றுக் கொள்வதில்லை. இரட்டை நிலை வாழ்க்கை ஆரம்பத்தில் பெரும் உறுத்தல்தான். அதனால் வீடு, உறவுவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வட்டத்திற்கு என்னை வெளிப்படுத்திவிட்டேன்.

என் துணைவியாரிடம் இதைப் பகிந்து கொண்ட பொழுது பெரும் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது. நான் முன்பே சொன்னது போல அவர் ஆலீம் பட்டம் பெற்றவர். ஒரு சூழலில் பிரிவதென்ற நிலை எட்டியது. ஆனால் இன்று அவர் என்னை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறார். அவர் அவர் வழியில் நான் எனது வழியில் அன்பு ஒன்றே இருவரையும் இணைக்கிறது.

வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைகளை தவிர்த்துவிடுவேன் வேறுவழியில்லாத நேரங்களில், நண்பர்களுடன் ஒரு சிலவேளைகளில் செல்வதுண்டு.

உண்மையில் இஸ்லாம் என்பது மதமல்ல, அது ஒரு இராணுவ அரசியல் அமைப்புக் கொள்கை. அதிலிருந்து வெளியேறுபவர்களை அது துரோகிகளாகக் காண்கிறது. அவர்களிடம் நேரடியாக மோதுவது விவேகமற்றது. ஷியாVsசன்னி மோதல்கள், அஹ்மதியாக்கள்Vsமற்ற பிரிவுகள்மோதல், அடிபணிந்தோர்Vsமற்ற பிரிவுகள்மோதல்களுக்குக் காரணம் பெரும்பாண்மைக் குழுக்கள் மற்றவர்களை துரோகிகளாகக் கருதுவதால்தான். அதிலும் எங்களைப் போன்றவர்களை அத்தனை எளிதாக விட்டுவிடமாட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன் கடையநல்லூரில் துராப்ஷா என்பவரை தஜ்ஜால் என்பதாக தவறாக அடையாளம் கண்டனர், அவர் குற்றமற்றவர் என்பது தெரிந்தும் அவரை பெரும் இன்னலுக்கு ஆளாக்கினர். ஒரு எதார்த்தமான கேள்விக்கு தக்கலை ரஸூல் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இதுதான் இஸ்லாமின் எதார்த்த முகம்!

எங்களது தலைகள் இன்னமும் தப்பிக் கொண்டிருப்பது நாங்கள் இந்தியாவில் இருப்பதால்தான். ஆயினும், தலைதான் தப்பியிருக்கிறதே தவிர நண்பர் ஜாவித் நஸீம் சொல்வதைப் போல மற்ற விதத்தில் உயிரை எடுத்துவிடுவார்கள். அவர்களை எதிர்த்துப் போராடுமளவிற்கு வலுப்பெற்றவுடன் நிச்சயமாக என்னை வெளிப்படுத்துவேன்.

//இவ்வளவு ஆழமாக மத விமர்சனம் செய்வது எவ்வாறு சாத்தியமாகிறது?//

அடிப்படையான சில செய்திகள் தவிர துவக்கத்தில் மதத்தைப்பற்றி பெரிதாக எதுவுமே எனக்குத் தெரியாது. இதில் ஏதோ ஒரு பெரிய குழப்பம் இருக்கிறது என்றுமட்டும் தோன்றியது. கேள்விகள் புதிதுபுதிதாக கிளம்பியதால் நான்கு ஆண்டுகள் தொடர் வாசிப்பில் இருந்தேன். (இன்றும் அப்படித்தான் இருக்கிறேன்) மதநம்பிக்கையை கைவிட முடியாத சூழலில் நான் தோற்று இஸ்லாம் வெற்றிபெறவேண்டுமென்று எண்ணிக் கொள்வேன். ஒரு தருணத்தில் நாத்தீகமே சரியென்ற நிலையை அடைந்தேன். ஒவ்வொரு ஆதாரங்களையும் நேரடியாகக் கண்களில் கண்டால் ஒழிய நம்புவதில்லை என்று உறுதியுடன் தேடினேன். கிடைத்தவைகளை சேகரித்தேன். இஸ்லாமிய ஆலீம்களுடம் இருக்கும் நட்பின் காரணமாக செய்திகளின் உண்மைத் தன்மையை அறிவது எளிதாக இருக்கிறது.

தஜ்ஜால் said...



// எனது நண்பர் தன்னை நாத்திகராக உணர்ந்தபின் பொய்மையாக தொழுகை, நோன்பு போன்ற மத நடவடிக்கைகளை ஒப்புக்காக கூட செய்ய முடியவில்லை எனக் கூறுவார்.//
அவர் சொல்வது சரிதான். இரகசியம் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நான் நாடகமாடிக் கொண்டிருக்கிறேன். இதுதான் இருவருக்குமுள்ள வேறுபாடு!

//உங்களைப் போன்றவர்களுக்கு மத அடிப்படைவாதிகளால் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது? அல்லது எவ்வாறு சமாளிப்பீர்கள்/ ? ஒரு “ex muslim’ எவ்வாறு இப்பிரச்சினைகளை எதிர் கொள்ள முடியும்? குறிப்பாக இறுதி நாட்களை எவ்வாறு சந்திப்பது?//

“ex muslim’ என்பவர் குடும்பத்தில் ஒற்றை மனிதர். அவருக்கு மிகப் பெரும்பாலும் குடும்பத்தின் ஆதரவு இருக்காது இந்நிலையில் திருமணம்,மற்றும் மரணம் இரு நிகழ்வுகளை எதிர்கொள்வதில் . “ex muslim’களுக்கு மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஒரு செயல்படும் அமைப்பாக “ex muslim’ கள் ஒன்று கூடாதவரையிலும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வில்லாமல் தனிமனித பிரச்சினையாகவே இருக்கும் ஒரு அமைப்பாக திரளும் பொழுது, ஒத்த கொள்கையுடைய மனிதநேய அமைப்புகளின் உதவியைப் பெறலாம் இதனால் பாதுகாப்பு மற்றும் மரணம் தொடர்பான நிகழ்வுகளுக்கு தீர்வு கிடைக்கும். “ex muslim’ கிடையே நிகழும் தொடர் கலந்தாய்வுகள் பாதுகாப்பு உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்கும். “ex muslim’ என்றில்லாமல் அனைத்து நாத்தீக சிந்தனையாளர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சிறிய அளவிளான சந்திப்பு விரைவில் நடக்க இருக்கிறது.

முதல் கட்டமாக, இதற்கென ஒரு இணையதளம் துவங்குவதும் அதன் மூலம் எல்லோரையும் ஒன்றிணைக்கும் பணியை துவங்க இருக்கிறோம்.

ஆனந்த் சாகர் said...

//உண்மையில் இஸ்லாம் என்பது மதமல்ல, அது ஒரு இராணுவ அரசியல் அமைப்புக் கொள்கை. அதிலிருந்து வெளியேறுபவர்களை அது துரோகிகளாகக் காண்கிறது. //

இஸ்லாத்தை ராணுவம் என்ற அமைப்போடு ஒப்பிடுவது ஜாகிர் நாயக் செய்யும் உளறல் தனமான பொய் பிரச்சாரம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெறவேண்டும், அல்லது பணியின்போதே விருப்ப ஓய்வு பெறலாம். இது இஸ்லாத்தில் இருக்கிறதா? இஸ்லாம் என்பது வெறும் பாசிசம். அது முழுக்க முழுக்க பேட்டை ரவுடித்தனமான தனி நபர் வழிபாட்டு அமைப்பு(cult). ராணுவம் என்ற அமைப்புக்கும் cult என்ற அமைப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

ஆனந்த் சாகர் said...

//ex muslim’ என்றில்லாமல் அனைத்து நாத்தீக சிந்தனையாளர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.//

முன்னாள் முஸ்லிம்கள் நாத்திகர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் வேறு எந்த மதத்தையும் பின்பற்றலாம் அல்லது agnostic ஆக இருக்கலாம். அது அவரவர் விருப்பம், சுதந்திரம். அப்படி மாறியவர்களையும் நீங்கள் புறக்கணிக்காமல் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். பொதுவாக எல்லா மதங்களும் மனித இனத்திற்கு நன்மையைவிட தீமையையே அதிகம் விளைவிக்கின்றன, அவர்களின் வளர்ச்சியை தடுக்கின்றன. இருப்பினும் இஸ்லாம் மட்டுமே பயங்கரவாதம் எனும் மிகப்பெரும் அபாயத்தை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ளதால் எல்லாவகை மனிதர்களோடும் கூட்டு சேர்ந்து முதலில் அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே அனைவரையும் ஒன்றிணையுங்கள். அப்படி செய்வதே மிகப்பெரும் பலத்தை தரும்.

நந்தன் said...

@ ka Der
//இந்த வெப்சைட் பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால் அல்லது கடவுள் மறுப்பு கொள்கை யென்று நீங்கள் நினைத்தால் அல்லது இந்த உலக வாழ்க்கை யே பயனில்லை யென்று நீங்கள் நினைத்தால்...உங்கள் மன ஓட்டத்திற்கு விட்டு விடுகிறேன்.//

என்னைப்போன்று இந்து மதத்திலிருந்து வந்த ஆயிரக்கணக்கான நாத்திகர்கள் இந்த தளத்தினை படித்து இசுலாத்தப்பற்றி தெரிந்துகொள்கிறோம். அதனை பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து நீங்கள் கணக்கிட்டுக்கொள்ளலாம்.
பொதுவாக இசுலாமியத்தளங்களின் தர்க்கரீதியான கேள்விகளைக் கேட்டால் பதில் சொல்வதில்லை. கேள்விகளையும் வெளிப்படையாக பதிப்பதில்லை. இருட்டடிப்புச் செய்துவிடுகின்றனர். இத்தளம்போன்று வெளிப்படையாக உடனுக்குடன் கேள்விகளை வெளியிடும் தைரியம் உள்ள ஒரு இசுலாமியத்தளத்தைக் காட்ட முடியுமா? இத்தளம் வெளிப்படையாக ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி எழுதுவதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதுபோல இதில் கருத்துக்களை கூறும் இசுலாமியர்கள் மறுப்போ மறுப்புக்கான ஆதாரங்களையோ முன்வைக்காமல் வெட்டி கதைப்பதைத்தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை. மறுப்புக்கான ஆதாரங்கள் இல்லாததாலும் இத்தளம் சரியான ஆதாரங்களைத் தருவதாலும் இது உலகில் அமைதியை நிலைநாட்ட விரும்பும் ஒவ்வொருவருக்கும் குறிப்பாக இசுலாத்தைவிட்டு வெளியேறிவர்களுக்கு தமது கருத்தை உறுதிப்படுத்திக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Dr.Anburaj said...

உண்மையில் இஸ்லாம் என்பது மதமல்ல, அது ஒரு இராணுவ அரசியல் அமைப்புக் கொள்கை. அதிலிருந்து வெளியேறுபவர்களை அது துரோகிகளாகக் காண்கிறது. //

இஸ்லாத்தை ராணுவம் என்ற அமைப்போடு ஒப்பிடுவது ஜாகிர் நாயக் செய்யும் உளறல் தனமான பொய் பிரச்சாரம். ராணுவத்திலிருந்து ஓய்வு பெறவேண்டும், அல்லது பணியின்போதே விருப்ப ஓய்வு பெறலாம். இது இஸ்லாத்தில் இருக்கிறதா? இஸ்லாம் என்பது வெறும் பாசிசம். அது முழுக்க முழுக்க பேட்டை ரவுடித்தனமான தனி நபர் வழிபாட்டு அமைப்பு(cult). ராணுவம் என்ற அமைப்புக்கும் cult என்ற அமைப்புக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. Despondency is not religion, whatever else it may be.
Seeds
The seed is put in the ground,
and earth and air and water are placed around it.
Does the seed become the earth;
or the air, or the water?
No. It becomes a plant,
it develops after the law of its own growth,
assimilates the air, the earth, and the water,
converts them into plant substance,
and grows into a plant.
Similar is the case with religion.
—Swami Vivekananda

Please compare

Anonymous said...

நானும் ஒரு முன்னால் முஸ்லிம்தான் ஆரம்பத்தில் இத்தளத்திலிருந்து ஒரு சில கேள்விகளை என் நண்பர்களிடம் கேட்கலானேன் அதற்கே நான் எதிர்கொன்ட இன்னல்கள் அதிகம். 20 வருட நட்பு என்னை அடிக்க துனிந்தது எனக்கு பேசி வைத்திருந்த பெண் வீட்டாரிடம் கூறி திருமனம் நின்றது. அன்று இல்லாத ஒன்றுக்காக நான் ஏன் என் நிம்மதியயும் சந்தோசத்தையும் இழக்க வேண்டும் எண்று நானும் முஸ்லீம்தான் என்ற முகமூடியோடு அலைகிரேன். வெள்ளிகிழமை ஜும்மாக்கு போரேன் என்று சொல்லிவிட்டு race course போய் free wifi useபன்னிக்கிட்டு இருப்பேன் நானும் உங்க ஊர்தான் தோழரே.