Sunday 27 October 2019

கொலைகார மதங்கள்-2

அடுத்தடுத்த பணிச் சுமைகளால் தொடர்ந்து எழுத முடியவில்லை. நீ...ஈஈஈண்ட... இடைவெளிக்கு மீண்டும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்ட, கேரளாவின் திரூர் பகுதியைச் சேர்ந்த ஃபைசலின் கதைக்குச் செல்வோம்.
ஃபைசலின் குடும்பத்திற்கு பள்ளிவாசல் நிர்வாகம் எதற்காக உதவ வேண்டும்?
விபின் - வயது 30. தினக்கூலி தொழிலாளி; திரூர் பகுதி சங்பரிவாரத்தின் முக்கிய நபர்; RSS அமைப்பின் ஒரு முக்கிய செயல்பாட்டாளர். ஆகஸ்ட் 24, 2017, காலை 7 மணிக்கு அவர் வீட்டிலிருந்து தனது அன்றாட அலுவல்களைக் கவனிக்க வெளியில் சென்றவர், சிறிது நேரத்தில் அதாவது அன்று காலை சுமார் 7.30 திருப்பனங்காடு பஞ்சாயத்து BP அங்காடியின் சாலை ஓரத்தில், ஆழமான வெட்டுக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டு, திரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவமனை அறிவிக்கிறது. அவர் மீது நிகழ்தப்பட்ட கொலைத் தாக்குதல்  நிகழ்ந்த இடம் அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் மட்டுமே இருக்கும் என்கின்றனர்.
விசாரணையில் SDPIக்கு இக்கொலையில் தொடர்பிருப்பதாகவும், சுமார் ஆறு நபர் கொண்ட கும்பல் இதில் ஈடுபபட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் காவல் தரப்பு கூறியது. கடந்த 2018 பிப்ரவரி 22ம் தேதி கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் அப்துல் லத்தீஃப் என்பவர் பெருந்தல்மன்னா பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். நாம் இக்கொலைகளின் பின்னணிகளைப் பார்க்கலாம்.
சரி, விபினுக்கும் SDPIக்கும் என்ன பகைமை?
அனில்குமார் (வயது 30) சவுதி அரேபியா-ரியாத்தில் பணி புரிந்து
கொண்டிருந்தவர். அங்கு முஹம்மதிய போதனைகளால் ஈர்க்கப்பட்டு, மதம் மாறி தனது பெயரை ஃபைசல் என்றும் மாற்றிக் கொள்கிறார். ஆண்டு விடுமுறையில் 2016 ஆகஸ்ட் மாதம் திரூர் திரும்புகிறார். தனது குடும்பம் மற்றும் உறவினர்களிடமும் முஹம்மதியத்தின் அருமை பெருமைகளையும் குர்ஆனின் மகத்துவத்தையும்  கூறி பரப்புரைகளிலும் ஈடுபடுவதுடன், குடும்பத்தினருக்கு குர்ஆனைக் கற்றுக் கொடுக்கவும் செய்கிறார். இப்படி மதம் மாறுவது ஃபைசலின் குடும்பத்தினருக்கு புதிதல்ல காரணம் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே நகரில் வசித்து வரும் அவரது உறவினரும் தனது குடும்பத்துடன் முஹம்மதிய மதத்தைத் தழுவியுள்ளார்.
ஃபைசலுக்கு அவரது சகோதரியின் கணவர் வினோத்தின் உருவத்தில் எதிர்ப்பு கிளம்பியது. மதமாற்றத்தை, முஹம்மதிய மதப் பரவலைத் தடுப்பதாகக் கூறி உள்ளூர் RSS-சங்பரிவார் கூட்டமும் களத்தில் குதித்ததுஃபைசல் என்ற அனில்குமாரிடம் இந்து தர்மத்தின் அருமை பெருமைகளைக்கூறி  திரும்பவும் தாய் மதம் திரும்புமாறு வலியுறுத்தியதுடன் தவறும்பட்சத்தில் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல்களையும் விடுகிறது. அவர்களது மிரட்டல்களைப் பெரிதாகப் பொருட்படுத்தாத ஃபைசல் தனது குடும்பத்தினரிடம் பரப்புரையில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுகிறார். விடுமுறை முடிவதற்கு சில நாட்கள் இருக்கையில், அவரது  மனைவி ப்ரியா, பத்து வயதிற்கு உட்பட்ட அவரது மூன்று குழந்தைகளும் முஹம்மதியத்தை ஏற்கின்றனர்இது இப்படியே தொடர்ந்தால் மேலும் குடும்ப உறுப்பினர்கள் பலர் முஹம்மதியத்திற்கு மாறிவிடும் அபாயமிருப்பதாக ஃபைசலின் மைத்துனர் வினோத் அச்சம் கொள்கிறார்.

2016 நவம்பர் 19ம் தேதி, ஃபைசல் சவுதி அரேபியா திரும்பிச் செல்வதற்கு முந்தைய தினம், அவரது உறவினர் ஒருவரை அழைத்து வருவதற்காக தனது வீட்டிலிருந்து தானூர் இரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் 16 பேர் கொண்ட சங்பரிவார கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். கொலை நிகழ்ந்த இடத்திற்கும் ஃபைசலின் வீட்டிற்கும் சுமார் 500மீட்டர் தொலைவுதான் இருக்கும் என்கிறனர். முஹம்மதியர்களின் கடுமையான கண்டனத்திற்குப் பிறகு முக்கியக் குற்றவாளிகளாக ஃபைசலின் மைத்துனர் வினோத், திரூர் பகுதி RSSன் முக்கிய பிரமுகர்களான மததில் நாராயணன்(47), விபின் (30) உட்பட 16  BJP/RSS உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது. இதில் மததில் நாராயணன் 1998ம் ஆண்டு இதேபோல மதம் மாறிய யாஸீர் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையானவர் என்பதும் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் விபின் நிபந்தனை பிணையில் வெளிவந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஃபைசலின் மதமாற்றம் நீண்ட காலமாக முஹம்மதிய மதத்தைப்பற்றி படித்து முழுவதுமாக அறிந்துகொண்டு யாருடைய வற்புறுத்தலுமின்றி, முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் நிகழ்ந்ததாக, அவரது தந்தை, அனந்தக்கிருஷ்னன் கூறுகிறார்ஃபைசலின் மரணத்திற்குப் பிறகு அவரது தாய் மீனாக்ஷி, தந்தை அனந்தக்கிருஷ்னன், சகோதரிகள் இருவர், மற்றொரு மைத்துனர் என 13 பேரும் முஹம்மதியத்தைத் தழுவிவிட்டனர்.
ஃபைசல்(அனில்குமார்), விபின், வினோத், நாராயணன், அப்துல் லத்தீப் இவர்களுக்குள் தனிப்பட்டமுறையில் எந்தவிதமான பகைமையும் இல்லை மத நம்பிக்கைகளைத் தவிர!
தனிப்பட்ட மனிதர்களின் செயல்களுக்கு மதத்தை எப்படி குறைகூற முடியும், முஹம்மதிய மதம்தான் வன்முறையை போதிக்கிறது ஆனால் எங்களது இந்து மதம் அப்படியில்லை அது அன்பின் மறு உருவம் என்றும் சிலர் வரலாம். அடிப்படையில் இத்தகைய வாதேமே முரண்பாடனது. விவாதமுறையில் இத்தகைய கோரிக்கையை No true Scotsman fallacy என்பார்கள். மேலும் இவைகளை நாம் தனிநபர்களின் குற்றச் செயல்களாகக் காணமுடியாது. ஏனெனில் அதற்கான தரவுகள் எதுமில்லை. மாறாக மதவெறி மட்டுமே இவ்விவகாரங்களில் முதன்மைப்படுகிறது. உதாரணத்திற்கு, அண்மையில் சற்றேறக் குறைய வட இந்தியா முழுக்க சங்பரிவார கும்பல்களால் பரவ விடப்பட்ட மாட்டு மதவெறியை மட்டும் கவனிப்போம்.
பசு மாட்டை வைத்து வன்முறையில் இறங்குவது கலகம் செய்வது இந்தமதவெறியர்களுக்கு புதிதல்ல! இதன் துவக்கப்புள்ளி பள்ளிகூட வரலாற்று புத்தகங்களில் இன்றும் கூட புல்லரிக்க கற்பித்துக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் CE1857-ல் நிகழ்ந்த சிப்பாய் கலகம்தான். இது பின்னாளில், பாலகங்காதர திலகன் போன்ற இந்துமத மதவெறியர்களால் தேசபக்தி என்ற பெயரில் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட்டது. நான் இவ்வாறு குறிப்பிடுவதால் பசுப் பாதுகாவலர்களுக்கும் தேசபக்தர்களுக்கும் என் மீது கோபம் வரலாம். அவர்களுக்காக பாலகங்காதர திலகனைப்பற்றி இன்னொன்றையும் குறிப்பிடுகிறேன். 1890-ல் புலமணி பாய் என்ற பதினோரு வயது சிறுமி தன்னைவிட வயதில் மிகவும் முதிர்ந்த அவரது கணவரால் உடலுறவு கொள்ளப்படும் பொழுது இறந்து போகிறார். CE1891-ல் அப்போதிருந்த பிரிட்டிஷ் அரசு, பெண்களின் திருமணவயதை 10லிருந்து 12 ஆக உயர்த்த சட்டம் கொண்டுவர முயன்றது; அப்பொழுது அதை எதிர்த்துக் குரல் கொடுத்த பாலகங்காதர திலகன், ஆளும் ஆங்கிலேய-கிருஸ்தவ அரசாங்கத்திற்கு இந்துமத உரிமைகளில் தலையிட அதிகாரமில்லை என்றார். பாலகங்காதர திலகனை இவ்வாறு பேசவைத்தது பெண்கள் பருவமடைந்தவுடனேயே திருமணம் செய்து கொடுத்திட வேண்டுமென்ற மத சாஸ்திரங்களால் ஊட்டப்பட்ட வெறியைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?
அவர் தனது தொடர் பிரச்சாரங்களின் மூலம் 1880-1890களில் தேசபக்தி என்ற பெயரில் இந்து மதவெறியை மாற்று நம்பிக்கையுடையவர்களுக்கு எதிராக குறிப்பாக முஹம்மதியர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டார். முஹம்மதியர்களின் முஹ்ரம் ஊர்வலங்களுக்கு எதிராக, வீடுகளுக்குள்ளிருந்த விநாயகன் வழிபாட்டை வீதிகளுக்குக் கொண்டு வந்தார்.
அதுமட்டுமல்ல, 1893-ல் பக்ரீத் பண்டிகையின் பொழுது மாடுகளை அறுத்ததாகக் கூறி ஏற்பட்ட கலவரத்தில், இந்த பசுப் பாதுகாவலர்களால் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். மும்பையில் நிகழ்ந்த கலவரத்தில் பாலகங்காதர திலகனின் பங்கை மறுக்க முடியாது. பின்னர் இது 1909, 1911, 1912, 1916, 1917, 1928, 1966, 2002, 2010, 2012, 2014, 2015, 2016, 2017 என ஒவ்வொரு ஆண்டும் தொடர்நிகழ்வானது. மாடுகளைப் பாதுகாப்பதாகக்கூறி மனிதர்களைப் பலியிட்டனர். சங்பரிவார குழுக்கள் அதிகாரத்திற்கு வந்தபின், 2015ம் ஆண்டு ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஹரியானா, குஜராத், கர்நாடகா என பாகுபாடின்றி அனைத்து மாநிலங்களிலும் பசுப் பாதுகாவலர்கள் என்ற இந்துமத வெறியர்களும், அவர்கள் ஆதரவு அரசுகளும் முஹம்மதியர்கள் மற்றும் தலித் மக்கள் மீதும் கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
பாலகங்காதர திலகனின் செயலை அன்றைய சூழலைக் கருத்தில் கொண்டே காணவேண்டுமென்று சிலர் கூறுகின்றனர்.
அப்படியென்ன சூழல்-தேவை?
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான சூழல்; அதற்கெதிராக மக்களைத் திரட்டும் தேவை! (சில) முஹம்மதியர்களுக்கும் அன்றைய அரசாங்கத்திற்கும் இடையிலிருந்த நல்லுறவு, பாலகங்காதர திலகனை முஸ்லீம்களுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியதென்கின்றனர்.
அவ்வறெனில், தேபக்தி என்ற பெயரில் ஹிட்லர் நிகழ்த்திய வெறியாட்டங்கள் சரியானதே! தேசபக்தி என்ற பெயரில் இன்றும் சங்பரிவார கும்பல் செய்யல்படுத்தும் பல செயல்களையும் நாம் சரிகாண நேரிடும். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் அன்றைய முஹம்மதியர்களில் சிலர் கொண்டிருந்த நல்லுறவே பாலகங்காதரனை முஹம்மதியர்களுக்கெதிராக சிந்திக்கவும் செயல்படவும் தூண்டியதெனில், காலம்காலமாக ஆட்சியாளர்களுடன் மட்டுமே நெருக்கமாக உறவுபாரட்டிவரும் பிராமணர்களுக்கு எதிராக நம்முடைய பாலகங்காதரனுக்கு ஏன் கோபம் வரவில்லை?
பள்ளி மாணவனாக இருந்த பாலகங்காதரனிடம், பள்ளிவளாக தரையில் குப்பையாக சிதறிக்கிடந்த வேர்க்கடலையின் தோல்களை அகற்றுமாறு கேட்டுக் கொண்ட ஆசிரியரிடம், ”அவற்றை நான் எறியவில்லை; என்னால் அதை சுத்தப்படுத்த முடியாதுஎன்று வீரமாக மறுமொழி கூறியதாக பெருமையாகக் கூறுவர். ஆனால் இன்று விநாயக சதுர்த்தி என்ற பெயரில் (சமுதாயத்) தெருவெங்கும் அவர் வீசியெறிந்த (வன்முறைக்) குப்பைகளை நீக்கப் போவது யார்?
எனது நோக்கம் பாலகங்காதரனை விமர்சிப்பதல்ல ஆனால் சமுதாய அமைதியைக் குலைக்கும் செயல்களின் ஆணிவேர்களை அடையாளம் காண வேண்டியதும் நமது கடமையாகும்.
++++++++++++++++++++++