Thursday 3 December 2015

பைஅத் ரிள்வானும் பைத்தியக்கார கடவுளும்!



ஹிஜ்ரி  ஆறாம் ஆண்டு உம்ரா வழிபாடு செய்வதற்காக முஹம்மது தனது தோழர்களுடன் மக்காவிற்கு செல்கிறார். அல்லாஹ்விற்கு  பலியிட ஒட்டகங்களையும், அவரது தோழர்கள் 700 பேர் இருந்ததாக அஹ்மத் ஹதீஸும், 1400 பேர் இருந்ததாக புகாரி ஹதீஸூம் கூறுகிறது. நாம் இரண்டு ஹதீஸ்களுக்கும் பொதுவாக 1050 பேர்கள் இருந்ததாக வைத்துக் கொள்வோம். இப்பொழுது உங்கள் மனதில் இப்படியொரு கேள்வி எழலாம், அல்லாஹ்விற்கு பலியிட 1050 மனிதர்களையா முஹம்மது அழைத்துவந்தார்? 

ஆமாம்..!  என்றுதான் சொல்லுவேன்!

அல்லாஹ்விற்காக(!) முஹம்மது நிகழ்த்திய போர்களைப்பற்றி சற்று சிந்தித்து பாருங்கள். அல்லாஹ்விற்கு மனித இரத்தவாடையின் மீதிருக்கும் மோகம் என்னவென்பது புரியும்!

ஆனால் முஹம்மது இந்தப் பயணத்தை ஒரு புனிதப் பயணமென்றே கூறிக் கொண்டார். அதாவது ஒருவர் தனது மறுமை வாழ்விற்காக நன்மைகளைச் சேர்க்க இதர வழிபாடுகள் செய்வதப் போன்று உம்ராவும் ஒரு வழிபாடு என்று கூறியதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். முஹம்மது தனது மறுமை வாழ்வு சிறக்க வழிபாடு செய்யட்டும் தவறில்லை அது அவரது நம்பிக்கை. ஆனால் அதை  1050பேர் புடைசூழ சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமா?
சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் இருக்கிறது!

முஹம்மது, மக்கா குறைஷிகளை ஆழம் பார்ப்பதற்காக, கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகளில் சிலர்  அறுத்து, கிராஷையும் கொலை செய்யவும் முனைந்தனர். அதற்குள் அங்கிருந்த பனூ கினானா கிளையைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ய முயன்றவர்களைத் தடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததுடன், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை, முஹம்மதுவிடம் பாதுகாப்பாக திருப்பி அனுப்பினர்.

உடனே முஹம்மது, ஊரறிந்த முரடரான  உமரை மக்காவுக்கு அனுப்புவதற்காக அழைத்தார்கள். அதற்கு உமர், "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது கொண்டிருக்கின்ற விரோதத்தையும் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மானை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்'' என்று  சமர்த்தியமாகப் பேசி நழுவிவிட்டார்.

வேறுவழியில்லாமல், முஹம்மது உஸ்மானை அழைத்து, "நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம்' என்று குறைஷிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மானிடம் சொல்லி அனுப்புகிறார்.

மக்கா சென்ற உஸ்மான், அபூசுஃப்யானையும் குறைஷிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, தான் வந்த நோக்கத்தைத் தெரிவிக்கிறார். அதற்குக் குறைஷிகள், "நீ தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்'' என்று உஸ்மானிடம் கூறினார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதர் தவாஃப் செய்கின்ற வரை நான் தவாஃப் செய்யப் போவதில்லை'' என்று பதிலளிக்கிறார். தொடரும் பேச்சுவார்த்தைகள் உஸ்மான் திரும்பிச் செல்வதற்குக் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கால தாமதம் முஹம்மதிடம்  வேறு மாதிரியான தகவலாகச் சென்றடைகின்றது. உஸ்மான் கொல்லப்பட்டு விட்டதாக தவறான செய்தி முஹம்மதுவின் கூட்டத்தினரைச் சென்றடைகிறது. இரத்தவாடையை நுகர  ஏதாவது காரணம் கிடைக்காதா என்று காத்திருந்தவர்களுக்கு  இந்தத் தகவல் ஆறுதலை அளித்தது. முஹம்மதுவும் அவரது, தோழர்களும் கடுமையான கோபத்திற்கும் கொந்தளிப்பிற்கும் உள்ளாகின்றார்கள். அவர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து போரிடுவதற்கு ஆயத்தமானார்கள். அப்படிப் போராடினால் அது சாதாரணமாக போராட்டமாக இருக்காது, மக்காவினுள்ளே போராடுவதாக இருந்தால் மக்கத்து குறைஷிகளும். இறுதிவரை போராடுவார்கள். இலகுவாக பணிந்துவிட மாட்டார்கள். எனவே, அழிவு இரு புறமும் மிகப் பயங்கரமானதாக இருக்கும். இந்த வகையில் மரணம் உறுதியாகி விட்டாலும்கூட புறமுதுகுக் காட்டி ஓடக்கூடாது என்ற கருத்தில் முஹம்மது தனது அடியாட்கள் அனைவரிடமும் பைஅத்(உறுதி மொழி)செய்கிறார்கள். ஒரு மரத்தடியில் நபி(ஸல்)அவர்கள் உட்கார்ந்து, தம் வலக் கையைச் சுட்டிக் காட்டி, "இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டினார்கள். பிறகு, " (இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார். அதன் பின்  ஒவ்வொருவராக அனைவரும் வந்து பைஅத் செய்தனர். இது இஸ்லாமிய வரலாற்றில் "பைஅத்துர் ரிள்வான்"என சொல்லப்படுகிறது.

புஹாரி 4169.
யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அறிவித்தார்.
நான், ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம், 'ஹுதைபிய்யா தினத்தன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்" என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், 'மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்" என்று பதிலளித்தார்கள்..

முஸ்லீம் 3793
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சலமா (ரலி) அவர்களிடம், "ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(வீர) மரணத்திற்கு(த் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதி மொழியளித்தோம்)" என்று பதிலளித்தார்கள்.

உடன்படிக்கையானது தன்னிடம் செய்த உடன்படிக்கையாகும் என்று இரத்தவாடையை நுகர அல்லாஹ்வும் மூக்கைத் தீட்டிக் கொண்டு உற்சாக வசனங்களை இறக்குகிறான்.

குர்ஆன் 48:10
உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

முஹம்மதுவும் அவரது அல்லாஹ்வும் இரத்தவாடைக்காக காத்திருந்த பொழுது, ஒரு திடுக்கிடும் செய்தி வந்து சேர்கிறது. அதாவது, உஸ்மான் கொல்லப்படவில்லை என்ற சரியான தகவல் அவர்களை வந்தடைகிறது. வேறுவழியில்லாமல் விருந்தை வேறொரு நாளுக்கு வைத்துக் கொள்வோமென்று சமாதான நடவடிக்கைக்கு முஹம்மது செல்கிறார்.

உஸ்மான் கொல்லப்பட்டதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்பது முஹம்மதுவிற்குத் தெரியாது. காரணம் அவர் ஒரு சாதாரண மனிதர்; தனது மருமகன் உஸ்மான் கொலை செய்யப்பட்டுவிட்டாரே என ஆத்திரம் கொள்வதில் நியாயம் இருக்கிறது.

ஆனால் அல்லாஹ் என்ன செய்திருக்க வேண்டும்?

”அட... அரை லூஸுகளே உஸ்மான் கொல்லப்படவில்லை! உயிருடன்தான் இருக்கிறார். தேவையில்லாமல் துள்ளிக் குதிக்காதீர்கள்” என்றல்லவா அறிவுறுத்தி குர்ஆன் வசனங்களை இறக்கியிருக்க வேண்டும்?

எதார்த்த உண்மை புரியாமல், உளறிக் கொட்டிய அல்லாஹ்வை, பைத்தியக்காரன் என்று அழைக்காமல் வேறெப்படி அழைக்க முடியும்?


தஜ்ஜால்