அன்பார்ந்த அண்ணன் பீ.ஜை. அவர்களுக்கு
உங்களின் தம்பியருள் ஒருவனாகிய லூஸிஃபரின் பகிரங்கக் கடிதம். தாங்கள் தமிழகத்தில்
கடந்த பல ஆண்டுகளாகச் செய்துவரும் காமெடிகளையும், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற
நகைச்சுவை காட்சிகளையும் கண்டு இருவாய்களாலும் சிரித்து மகிழ்பவர்களில் நானும்
ஒருவன். இன்னும் பல ஆண்டுகள் இவ்வுலகில் தாங்கள் வாழ்ந்து, தங்களின் பேச்சுகள்
மற்றும் செயல்களால் எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பீர்கள் என்று
நம்பிக்கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன். அதற்காகவே தாங்கள் பல ஆண்டுகள்
நோய்நொடியற்று வாழவேண்டுமென்று வாழ்த்தி இக்கடிதத்தைத் தொடருகிறேன்.
தங்களின் சமீபத்திய காமெடி ஒன்று பில்லி –சூனியம் – ஏவல் - மோசடி
பற்றியது. உங்களுக்கு சூனியம் வைக்கக் கூறி சவால் விட்டு, அதற்காக ஐம்பது இலட்சம்
ரூபாய்களை பரிசளிப்பதாகவும் அறிவித்திருக்கிறீர்கள். அதனை அகோரி மணிகண்டன்
என்பவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். உங்களுடைய ஆன்லைன்பிஜே யில் உள்ள அறிவிப்பு
இப்படி சொல்கிறது.
“பில்லி, சூனியம், ஏவல் எல்லாம் மோசடிகளும், கண்கட்டுவித்தைகளுமே
தவிர வேரொன்ருமில்லை என்று பிரச்சாரம் செய்ததோடு எனக்கு வைப்பீர்களேயானால் 50 இலட்சம்
ரூபாய் பரிசாக வழங்குவதாகவும், அதற்க்கு தேவையான பொருட்களையும் தருவதாக
அறிவித்ததையடுத்து திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன் என்பவர் தான் சூனியம்
வைப்பதாக அறிவித்திருக்கிறார்.[2]”
இந்த அறிவிப்பில் ‘கண்கட்டுவித்தைகளுமே’
என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? மந்திரத்தையா? அல்லது மெஸ்மரிஸம்-
ஹிப்னாட்டிஸம் என்ற அறிவியல் கலையையா?
மந்திரத்தை நீங்கள் ஏற்கவில்லை. மெஸ்மரிஸம்
- ஹிப்னாட்டிஸத்தை நீங்கள் ஏற்கிறீர்கள் என்றுதானே பொருள். மெஸ்மரிஸம் மூலமாக
மனோவசியம் செய்து ஒருவரை, உண்மையல்லாத கற்பனைகளையும் நம்பவைக்க முடியும்
என்பதையும், தற்கொலைக்குக்கூட தூண்ட முடியும் என்பதையும் தாங்கள் மறுக்கிறீர்களா?
இந்த சவாலின் மூலமாக தாங்கள் பாதி
நாத்திகர் ஆகவிட்டீர்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எப்படி
என்கிறீர்களா? விளக்குகிறேன்.
இந்திய தத்துவ மரபில் அவைதீக
தத்துவங்களான சார்வாகம், பௌத்தம், ஜைனம் அகியனவும், வைதீக தத்துவங்களான சாங்கியம்,
வைசேஷிகம் ஆகியனவும் இறைவனை, அவனின் இருப்பை மறுக்கும் தத்துவ மரபுகளாக,
2500ஆண்டுகளுக்கும் மேலாக செழித்து வளர்ந்து வந்திருக்கின்றன. நிச்சயமாக
இத்தத்துவங்கள் பற்றி, நீங்கள் படித்து பட்டம் பெற்ற அரபுக்கல்லூரிகளிலும்
சொல்லித்தந்திருக்க மாட்டார்கள்.
இதனை நீங்கள் அறிந்திருந்தால், இத்தத்துவமரபில்
வார்த்தெடுத்து வந்த இன்றைய இந்திய நாத்திகர்களைப்போல நீங்களும் ஆகியிருப்பீர்கள்.
இன்றைய தமிழக நாத்திகர்கள், பில்லி –சூனியம் – ஏவல் - மோசடி போன்றவற்றை செய்யும் மந்திரவாதிகள்,
சாமியார்கள், சோதிடர்கள் மற்றும் குறிசொல்பவர்கள், கடவுளின் பெயரால் அற்புதங்கள்
செய்பவர்கள், தாங்களே கடவுளின் அவதாரம் என்று மோடிவித்தை காட்டுபவர்கள், காசேதான்
கடவுளடா என்பதை மனதில் வைத்துக்கொண்டு, கடவுள் உண்டு என்று பிரச்சரம் செய்பவர்கள்
ஆகிய அனைவரையுமே சவாலுக்கு அழைப்பவர்களாக இருக்கிறார்கள். அலகிட்டுக்கொள்ளுதல்,
தீமிதித்தல் ஆகியவற்றையும், மேற்சொன்னவர்கள் செய்துகாட்டும் தந்திர வித்தைகளையும்
சொய்துகாட்டி மக்களுக்கு அறிவு விளக்கப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். தாங்கள்
இப்பொழுதுதான் இவற்றின் முற்பகுதி பிரச்சாரத்திற்கு அடியெடுத்து
வைத்திருக்கிறீர்கள். ஆகவேதான் நீங்கள் பாதி நாத்திகர் ஆகவிட்டீர்கள் என்று
முன்னர் குறிப்பிட்டேன்.
அகோரி மணிகண்டன் பாவம்? எதற்கு
ஆசைப்பட்டாரோ? தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மரணம் என்பது நிச்சயமான
ஒன்று என்பதும், இந்த உலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் அழிவது நிச்சயம் என்பதும்
யாவரும் அறிந்ததே. இதனை, இன்று நேற்று அல்ல. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே
கௌதமபுத்தர் சொல்லிச்சென்றுவிட்டார்.
அதுபோலவே ஒருமனிதனின் மரணம் எப்பொழுது
நிகழும் என்பதை இறைவனே அறிவான், மனிதனால் அறிய முடியாது என்பது
இறைவன் மீது நம்பிக்கைகொண்ட அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கும் ஒரு கோட்பாடு. ஆனால்
உங்களுக்கு மட்டும் இந்த இந்தக் கோட்பாடு பொருந்தாது என்பதை உணர்த்திவிட்டீர்கள்.
எப்படி என்கிறீர்களா? அகோரி மணிகண்டனுடன் செய்து கொண்ட
ஒப்பந்த காலத்திலிருந்து 48 நாட்களுக்கு
தாங்களுக்கு மரணமே நிகழாது என்பதை எப்படி உத்திரவாதப்படுத்திக்கொள்கிறீர்கள்?
அல்லாவிடத்திருந்து இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தங்களுக்கு மட்டும்
மரணமில்லை என்று தனியாகச் செய்தி எதுவும் வந்ததா? அல்லது அல்லாஹ்விற்கு நிகராக
நீங்களும் ஆகிவிட்டீர்களா? மரணத்தை வென்று விட்டீர்களா? அவ்வாறானால் ஷிர்க் (இணை
வைத்தல்) என்னும் மாபெரும்பாவத்தை நீங்கள் செய்தவராகிவிடுவீர்கள்.
அதுமட்டுமல்ல, இந்த சவாலின் மூலம்
இன்னுமொரு சிக்கலையும் உங்களுக்கு நீங்களே உண்டாக்கிக் கொண்டு விட்டீர்கள் என்பதை
தாங்கள் உணரவில்லையா? ஆம், தாங்களின் எதிரிகளும், மற்றும் தங்களின் மரணத்தை
ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் நண்பனாக நடித்துக்கொண்டு
சந்தர்ப்பத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் நயவஞ்சகர்களும் இந்த சவாலைத்
தங்களுக்குச் சாதகமாகத் பயன்படுத்த முடியும் என்பதைத் தாங்கள் எப்படி
உணராமற்போனீர்கள். இந்த கால கட்டத்தில் மேற்கூறப்பட்டவர்களால் சாதாரண மனிதனுக்கு
ஏற்படுவதுபோல் தங்களுக்கு மரணம் எற்பட்டாலும் கூட அது பில்லி – சூனியத்தால்
வந்ததுதான் என்றுகூறி இந்த மூடநம்பிக்கை மக்களை நம்பவைத்துவிட முடியுமே! தமிழகத்தில் சில மடலாயங்களில் அவ்வாறு நிகழ்ந்ததாகப்
பேசப்படுவதும் உண்டு. இதையெல்லாம் தாங்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா?
மாந்ரீகம், பில்லி-சூனியம் ஆகியவற்றைப் பொய் என்று நிரூபிக்க தாங்கள் எடுதுள்ள
முயற்சிக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், இங்கே உங்களுக்கு ஒரு சவாலை
நாங்கள் முன்வைக்கிறோம்.
பில்லி – சூனியத்தை நிரூபிக்க முடியுமா, என்று சவால்விட்ட
பி.ஜைனுல்ஆபிதீன் ஆகிய உங்களுக்கும், பில்லி – சூனியத்தை
நிரூபித்து காட்டுகிறேன் என்று அந்த சவாலை ஏற்றுக்கொண்ட அரியமங்களம் அகோரி
மணிகண்டனுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. இருவருமே
விளம்பரத்திற்காக செய்வதாகவே எங்களுக்குப் படுகிறது.
பேய், பூதம்,
பிசாசு, குட்டிச்சாத்தான் முதலிய இல்லாத தேவதைகளை இருப்பதாக நம்பிக்கொண்டு
அவற்றிற்கு மந்திரம் சொல்லி, படையலிட்டு, வணக்க வழிபாடுகளை நடத்தி தங்களின்
பிரார்த்தனைகளை, நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என்று மணிகண்டன் போன்றவர்கள் நம்புகிறார்கள் அல்லது மற்றவர்களை நம்ப
வைக்கிறார்கள்.
நீங்களோ,
அவையெல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய பேயாக, மிகப்பெரிய பூதமாக, மிகப்பெரிய
பிசாசாக, மிகப்பெரிய குட்டிச்சாத்தானாக இறைவனை – அல்லாஹ்வை
இருப்பதாக நம்பிக்கொண்டு, கற்பனைசெய்து கொண்டு அவற்றிற்கு மந்திரம் சொல்லி, வணக்க
வழிபாட்டுத் தொழுகைகளை நடத்தி தங்களின் பிரார்த்தனைகளை, நிறைவேற்றிக்
கொள்ளமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லது மற்றவர்களை நம்ப வைக்கிறீர்கள்.
ஆகவே எங்களைப் பொருத்தவரையில் இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கமாகத்தான்
இருக்கின்றீர்கள்.
இப்பொழுது
உங்களுக்கு ஒரு சவாலை நாங்கள் முன்வைக்கிறோம். நீங்கள் மிகச்சிறந்த நம்பிக்கையாளர்
என்பதையும், தாங்கள் தொழும் இறைவனே உண்மையானவன் என்பதையும் ஒரு பேச்சுக்காக
நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இன்னும்
ஓராண்டுக்குள் உங்களது பிரார்த்தனையால் இந்தியமக்களை, (அல்லது) தமிழ்நாட்டு மக்களை, (அல்லது) தமிழகத்தின் ஏதேனும் ஒரு
மாவட்டத்து மக்களை, அல்லது தலைநகர் சென்னையில் வாழும் மக்களை மட்டுமாவது முழுக்க
முழுக்க முஸ்லிம்களாக மாற்றிக்காட்டுங்கள்.
இதை
நிகழ்த்திக் காட்டுவீர்களானால், உங்களின் இறைவன் உண்மையானவன் என்பதையும், உங்களின்
நம்பிக்கையும் பிரார்த்தனையும் உண்மையானவை என்பதையும் ஏற்கிறோம். அவ்வாறு
நிகழாவிட்டால் உங்கள் இறைவன் பொய்யானவன் என்பதையும், உங்களின் நம்பிக்கையும்
பிரார்த்தனையும் போலியானவை என்பதையம் நீங்கள் ஏற்க வேண்டிவரும். இதையே சவாலாக
ஏற்று ஓப்புதல் அளியுங்கள் போதும். இது தவிர வேறு விவாதங்களோ, விதண்டாவாதங்களோ தேவையில்லை.
அகோரி
மணிகண்டனுக்கு இருக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும், தெளிவும் உங்களிடம்
எதிர்பார்க்கலாமா?
லூஸிஃபர்,