Wednesday, 11 December 2013

திரைக்குப் பின்னால்...! பகுதி -2

நாம் கடந்த பகுதியில் பார்த்த புகாரி ஹதீஸ்  4795, ”பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால்”... என்கிறது.

இஸ்லாமிய வழக்கில், இது ‘ஹிஜாப்' என்றும் நம்நாட்டில் நிகாப், பர்தா, புர்கா துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுவதாகக் கூறுகின்றனர்.

அதென்ன ஹிஜாப், பர்தா?


   

புர்கா                                   ஹிஜாப்                                   நிகாப்


குர்ஆன் 33:53 இப்படிக் கூறுகிறது,

 ”..அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்..” (...wa-idhā sa-altumūhunna matāʿan fasalūhunna min warāi ḥijābin...) என்கிறது. அதாவது, வீட்டுவாயிலில் தொங்கவிடப்படும் திரையைத்தான் இங்கு ஹிஜாப் என்று குறிப்பிடப்படுகிறது. புகாரி 4791-ம் நமக்கு இதே பொருளைத்தான் கூறுகிறது. ஹிஜாப் என்ற சொல் குர்ஆனில் மேலும் சில இடங்களில் (7:46; 17:45; 38:32; 42:51) திரை என்ற சொல்லைத், தடுப்புச் சுவர், திரை என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளனர். எந்த இடத்திலும் முல்லாக்கள் கூறுவது போல தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ஆடை என்று பொருள்கொள்ளவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஹிஜாப் என்றால் திரை என்பதுதான் நேரடிப்பொருள். பெண்கள் என்ற இறைச்சியை  தலைமுதல் கால்வரை மூடிமறைத்துக் கொள்ளும் முறையென்று எங்கே இருக்கிறது?  

குர்ஆன் 33:59
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது...
பீஜே மொழிபெயர்ப்பு

பெண்கள், தலையின் மீது ஒரு துண்டுத் துணியை அணிவது, கி.மு 13-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடரும் வழக்கமாகும். அசிரியர்கள், தங்களது உயர்குல பெண்களை திரையால் தங்களது தலைகளை மறத்துக் கொள்ளவும், விபச்சாரிகள், அவ்வாறு தலைகளை மறைத்துக் கொள்ள தடையையும் அவர்கள் விதித்திருந்தனர். இதன் பாதிப்புகளை ஐரோப்பிய, பாரசீக, நாகரீகங்களிலும், யூத, கிருஸ்தவ நம்பிக்கைகளிலும் காணலாம்.


    ஆதியாகமம் 24:65
     ... அதற்கு அவன், “அவர்தான் என் எஜமானனின் மகன்” என்று பதில்         சொன்னான். அவள் தன் முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டாள்.

1.கொரிந்தியர் 11:4 – 6
தீர்க்கதரிசனம் சொல்கிறவனோ அல்லது பிரார்த்திக்கிறவனோ தலையை மூடியிருந்தால் அது அவன் தலைக்கு இழுக்கைத் தரும்.
5. தீர்க்கதரிசனம் சொல்கிறவளும் பிரார்த்தனை செய்கிறவளும் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தலையை மூடியிராவிட்டால் அது அவள் தலைக்கு இழுக்கைத் தரும் தலை மயிரை மழித்துக் கொண்டவளுக்கு அவள் ஒப்பாவாள்.
6. ஒரு பெண் தனது தலையை மூடியிராவிட்டால் (முக்காடு போடாவிட்டால்) அவள் தலை மயிரை மழிப்பதற்கு ஒப்பாகும். தலை மயிரை குறைப்பதோ, மழிப்பதோ பெண்ணுக்கு இழிவைத் தரும். எனவே அவள் தனது மூடியிருக்க வேண்டும்.


தலையில் முக்காடு அணியும் வழக்கம் வடஇந்தியக் கலாச்சாரத்திலும் காணமுடியும். இந்த வழக்கம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தொற்றியிருக்கலாம். 

ஆப்ரஹாமிய மதங்கள் பிற நாகரீகங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தி; உள்ளூர் மக்கள் இரண்டாம்தர குடிமக்களக்கிய நிகழ்வுகளை வரலாற்றில் காணமுடியும்.  அவர்கள், தலையில் முக்காடு அணியாத உள்ளூர் பெண்களை நாகரீகமற்றவர்களாக வரையறை செய்தனர். கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு மிரட்டல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பிய உள்ளூர் பெண்கள், வேறுவழியின்றி தங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களின் நாகரீகங்களைப் பின்பற்றத் துவங்கினர். பின்வரும் குர்ஆன் வசனமும் இதை ஆதரிக்கிறது.

குர்ஆன் 33:59 முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுகிறதா?
...அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திரமானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும்; அப்பொழுது அவர்கள்(பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள்;...
இக்பால் மதனி மொழிபெயர்ப்பு

...அவர்கள் தங்களுடைய மேலாடைகளைத் தங்க(ளுடைய தலையிலிருந்து முகங்க)ளின் மீது தொங்கவிடுமாறு நீர் கூறுவீராக! இது அவர்கள் (கண்ணியமானவர்களென) அறியப்படுவதற்கு மிக நெருக்கமானதாகும். அப்பொழுது அவர்கள் நோவினை செய்யப்படமாட்டார்கள்....
கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்ப்பு

குர்ஆன் 33:59-ன் ஒலி மற்றும் மொழிபெயர்ப்பைக் காண்போம்.
...l-nabiyu (நபியே) qul (சொல்வீராக) li-azwājika (உங்கள் மனைவியர்களிடமும்) wabanātika (புதல்விகளிடமும்) wanisāi l-mu'minīna (நம்பிக்கை கொண்ட பெண்களிடமும்)  yud'nīna (தொங்க விடுமாறு) ʿalayhinna min (தங்களுடைய) jalābībihinna(புற ஆடைகளின் மீது) dhālika (அது) adnā (மிக ஏற்றது) an yuʿ'rafna (இது அவர்கள்  அறியப்படுவதற்கு) falā yu'dhayna (துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கு)...

புறஆடைகளின் மீது தொங்கவிடுவதால் துன்புறுத்தல்களிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதே இதன் கருத்து. எதை தொங்க விடவேண்டும் என்ற எவ்விதமான குறிப்புமில்லை. மேலும் இந்த வசனத்தில், குர்ஆன் மொழிபெயர்பாளர்களும், விரிவுரையாளர்களும் குறிப்பிடுவதைப் போன்று தலை, முடி, முந்தானை அல்லது  முக்காடு  என்ற சொற்கள் எதுவும் இடம்பெறல்லை.

இஸ்லாமியர்கள் கூறும் ஹிஜாப் நடைமுறைகள் :
ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையிலும், தளர்வான ஆடைகளால் உடலின் பரிமாணங்கள் தெரியாதவாறு மறைத்திருக்க வேண்டும் என்பதே இன்றைய விதியாகும் என்கிறது வஹாபியத் தரப்பு.

"சீரழிவுக்கு பெண்களின் முகமே ஆரம்பப் புள்ளி" என்று கருதும் மற்றொரு தரப்பான ஆப்கான் மற்றும் தமிழக தாலீபான்களும், பொறுப்பற்று ஊர்சுற்றித்திரியும் தப்லீக்வாதிகளும், முகம் உட்பட முழுவுடலும் கட்டாயமாக மறைக்கப்பட வேண்டுமென்று வாதிடுகின்றனர். அவ்வாறே அவர்கள் தங்களது இல்லப்பெண்களுக்கு, கூடுதலாக கையுறை மற்றும் காலுறைகளை அணிவித்து, மூடி மூட்டையாகக் கட்டியும் வைத்துவிட்டனர்.



   



இது பெண்களை அவமதிக்கும் கேடுகெட்ட பைத்தியக்காரத்தனம் என்ற விமர்சனங்கள் எழும்பொழுது, இஸ்லாம் முகம், கை மற்றும் கால்களை மூடி மறைக்கச் சொல்லவில்லை என்று நழுவும் வஹாபிய தரப்பு, அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாமென்று ’அந்தர் பல்டி’ அடிக்கிறது. ஆக எப்படி நோக்கினாலும் இஸ்லாமியப் பெண்கள், நடமாடும் கூடாரங்களிலிருந்து விடுதலையளிக்க முல்லாக்கள் தயாரில்லை.

முல்லாக்கள், இஸ்லாமியப் பெண்களை மூட்டைகட்டி வைப்பதற்கு குர்ஆன் 24 அத்தியாயத்தின் 31–ஆம் வசனத்தை மிக முக்கியமான ஆதரமாகக் காண்பிக்கின்றனர். இவ்வசனம், பெண்கள் தங்கள் உடலின் எந்தப் பகுதியை மறைக்க வேண்டுமென்பதையும், எந்தப் பகுதியை வெளிப்படுத்தலாம் என்பதையும் வரையறை செய்வதாக அவர்கள் கருதுகின்றனர். பெண்கள் தங்களது உடலை மறைக்கக் கூறுவதாக முல்லாக்கள் சுட்டிக்காட்டும் பகுதியை முதலில் காண்போம்.

குர்ஆன் 24:31,
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். ...
பீஜே மொழிபெயர்ப்பு
இதிலும் முல்லாக்களின் திருவிளையாடல்கள் உள்ளன. குர்ஆன் 24:31-ன் ”...Wal yadhribna bi khumurihinna ala juyubihinna...” என்ற சொற்றொடர் எப்படி உருமாறுகிறது என்பதை கவனிப்போம்

... தம் வெட்கத்தலங்களைப் பேணிக் கொள்ள வேண்டும்; தம் அலங்காரத்தை – அதிலிருந்து (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர (மற்றவற்றை) அவர்கள் வெளியாக்கக் கூடாது; தம் முன்றானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை) மறைத்துக் கொள்ள வேண்டும்.
கே.ஏ நிஜாமுத்தீன் மன்பயீ மொழிபெயர்ப்பு

தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக் கூடியவைகளைத் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின் மீது போட்டு (தலை, கழுத்து நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்.
இக்பால் மதனி மொழிபெயர்ப்பு
நாம் பார்த்த இந்த மூன்று மொழிபெயர்ப்புகளில், கே.ஏ நிஜாமுத்தீன் மன்பயீ மற்றும் இக்பால் மதனியின் மொழிபெயர்ப்பும் ஓரளவிற்கு ஒன்றுடன் ஒன்று பொருந்தி வருகிறது.
khumurihinna ala juyubihinna” என்பது எதைக் குறிக்கிறது?

கிமார்’ என்ற சொல் எதைக் குறிப்பிடுகிறது என்ற குழப்பம் குர்ஆன் விரிவுரையாளர்களுக்கிடையே இருந்துள்ளது. இதைப்பற்றி பீஜே குழுவினர் கூறுவதை கவனிப்போம்,

...கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை என்ற கருத்து தவறானது. தலையை மறைக்கும் துணி என்பதே இதன் சரியான பொருள். இவ்வாறே அரபு அகராதி நூற்களிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது.

அல்முஃஜமுல் வசீத் மற்றும் லிசானுல் அரப் ஆகிய அகராதி நூற்களில் பெண்களின் ’கிமார்’ என்பது அவர்கள் தங்களுடைய தலையை மறைத்துக் கொள்ளும் துணிக்குச் சொல்லப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கிமார் என்பதற்கு தனது நூலான ஃபத்ஹுல் பாரியில் அது ஆண்கள் அணியும் தலைப்பாகையைப் போன்றது எனக் கூறுகிறார். அதாவது ஆண்கள் தங்களது தலையை மறைக்க தலைப்பாகையைப் பயன்படுத்துவது போல் பெண்கள் தங்களது தலையை மறைக்க கிமாரைப் பயன்படுத்துவார்கள் என்று கூறுகிறார். தலைப்பாகை என்பது முகத்தை மறைக்கும் ஆடையல்ல. எனவே கிமார் என்பது முகத்திரை அல்ல. தலைத்துணி தான் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது...

’கிமார்’ என்றால் என்னவென்பதில் குழப்பம் இல்லையெனில் இப்படியொரு விளக்கெண்ணெய் விளக்கத்தை இவர்களே எழுதவேண்டிய அவசியமில்லை.  தலையில் அணியக்கூடிய துணியே ’கிமார்’ என்று பொழிப்புரை கூறிக் கொண்டே ”தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.என்கின்றனர். பீஜே, சொல்வதைப்போல முக்காடுகளை மார்பின்மீது போட்டுக்கொண்டால் தலையை எதைக் கொண்டு மறைப்பதாம்?(!) இப்படி இவர் உளறிக் கொட்டக் காரணம் ’கிமார்’ என்றால் முக்காடு அல்ல என்பதால்தான். கே.ஏ நிஜாமுத்தீன் மன்பயீ மற்றும் இக்பால் மதனியும் “கிமார்” என்பதை முந்தானை என்கின்றனர். மேலும் பீஜே தரப்பு கூறும் இந்த விளக்கம் புகாரி கூறும் ஹதீஸுக்கு எதிரானது.

புகாரி 4758
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் தங்கள் மார்புக்கு மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டுக் கொள்ளட்டும்!' எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.

இந்த ஹதீஸிலும் குழப்பம் இருக்கிறது ’துப்பட்டா’ ‘மார்பு’ போன்ற சொல் குறிப்பிட்ட குர்ஆன் 24:31 வசனத்தில் கிடையாது. அன்றைய பெண்கள் எதை மறைத்துக் கொண்டார்கள் என்பதை அறிந்துகொள்ள இந்த ஹதீஸையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

”கிமார்(khimar)” மறை, மூடு என்று பொருள் கொள்ளலாம். மறைக்க  உதவும் எந்த பொருளும் ”கிமார்”- தான். நாம் அணியும் ஆடை, கதவு, ஜன்னல்களில் தொங்கும் திரைகளும் ”கிமார்”-தான். முந்தானை என்றோ முக்காடு என்றோ சிறப்பாக பொருள்கொள்ள முடியாது. முந்தானை அல்லது தலையை மூடும் துணியைக் குறிக்கும் எந்த சொல்லையும்  இங்கு பயன்படுத்தப்படவேயில்லை!

குர்ஆனில் தூய அரபிமொழியினால் எழுதப்படவில்லை என்பதும் பிறமொழிச் சொற்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதும் மொழி ஆய்வாளர்களின் குற்றச்சாட்டு. சானாவில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால குர்ஆனையும், குர்ஆனிலுள்ள சிரியாக் மற்றும் அராமிக்  மொழிக்கலப்பைபற்றி ஆய்வுசெய்த ஜெர்மன் ஆய்வாளர், ’khimar’ என்பதை சிரிய மொழியில் ’chimar’ என்பதாகக் கொண்டால் இடுப்புவார் (belt) என்றும் juyubihinna என்பதை இடுப்புப் பகுதியையும் குறிப்பிடுவதாகக் பொருள் கூறுகிறார்.

’wa-l-yadrib-na bi-khumuri-hinna `ala juyubi-hinna’ எனபதை ”இடுப்புவாரை அவர்கள் இடுப்பைச் சுற்றி அணிந்துகொள்ளாட்டும்” என்று பொருள் விளக்குகிறார். அதாவது கிருஸ்தவ துறவிகள் இடுப்பில் அணியும் கயிற்றைப்போன்றது என்று பொருள் விளக்கிகிறார்.


பீஜே மட்டுமல்ல பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் ’Juyubihinna’ என்பதை மார்பு என்றே மொழிபெயர்த்துள்ளனர். மார்பைக் குறிக்க அரபியில் Nahd அல்லது Sadr என்பார்கள்.   ‘Juyub’ என்பதன் நேரடிப் பொருள் பெண்களின் மார்பு அல்ல; மேற்சட்டை அல்லது மேற்சட்டையிலுள்ள திறப்பு (pocket - சட்டைப்பை) என்பதுதான். கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயீ மற்றும் இக்பால் மதனி ”juyubihinna” என்பதை மேல்சட்டை என்றே பொழிபெயர்த்துள்ளதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். 

மார்பு என்பதை மறைமுகமாக குறிப்பிட்டிருக்கலாம் என்றும் சிலர் வாதிடலாம்.  பெண்களின் அங்கங்களை நேரடியாக வர்ணனை செய்வதில் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எந்த தயக்கமும் கிடையாது.

எடுத்துக்காட்டாக,

சொர்க்கவாசிகளுக்கு அல்லாஹ் வழங்க இருக்கும் பெண்களைப்பற்றி கூறும் பொழுது...

குர் ஆன் 78:33
(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) நெஞ்சு நிமிர்ந்த கன்னிகளும்
அ.கா.அப்துல் ஹமீது பாகவி மொழிபெயர்ப்பு

(மனைவிகளாக) மார்பகங்கள் உயர்ந்த சமவயதுடைய கன்னிகைகளும் (இருப்பர்)
இக்பால் மதனி மொழிபெயர்ப்பு


...சம வயதுடைய கட்டழகியரும்,..
பீஜே மொழிபெயர்ப்பு

என்கிறது. வழக்கம் போல பீஜே ’முக்கியமான’ வார்த்தைகளைத் தனது மொழிபெயர்ப்பில் மறைத்துவிட்டார். இவர்கள், குர்ஆனில் இருப்பதை மறைத்தும் இல்லாததை திணித்தும் அப்பாவி மக்களை ஏமாற்றுவதன் மூலம், தங்களது கடவுளின் மானத்தைக் காப்பாற்ற நினைக்கிறனர். குர்ஆன் தெளிவானது, நன்கு விளக்கப்பட்ட புத்தகமென்று தன்னைத் தானே சான்றிதழ் வழங்கிக் கொள்வதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாதத்திற்காக, பீஜே போன்ற முல்லாக்கள் சொல்வது போல ’Juyubihinna’ என்பதை மார்பு என்றே வைத்துக் கொண்டாலும் மார்பையும் மறைக்கக் கூறுவதாகத்தான் பொருள் விளங்க முடியும். தலை முதல் கால்வரை முழுவதையும் மறைக்க வேண்டுமென்று பொருள் கொள்ள முடியாது.

ஆடை அணிவதில் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப்பற்றி குர்ஆன் கூறும்பொழுது,

குர்ஆன் 24:60
திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

நாம் குர்ஆனின் 24:60 ஐயும் இணைத்துப் பார்த்தால் பெண்கள், தங்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை துணியால் சுற்றிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று பொருள் கொள்ள முடியாது. அரேபிய போன்ற பாலைவனப் பகுதியில் வெப்பம் மிகுந்த நேரங்களில் ஓய்வெடுக்கும் பொழுது, ஆண்களும் பெண்களும் மேலாடைகளைக் களைந்திருப்பது வழக்கத்திலிருந்திருக்கிறது. அதைப்பற்றி குர்ஆன் கூறுகிறது.

குர்ஆன் 24:58
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை...

அவ்வாறு ஆடைகளைக் களைந்துள்ள ஒரு வேளையில்தான் திடீரெனெ வீட்டிற்குள் நுழைந்த முஹம்மது தனது மருமகள் ஜைனப்பை ஏடாகூடமான ஒரு கோலத்தில் பார்க்க நேர்ந்ததும், தனக்கேற்பட்ட தனது தனிப்பட்ட விகாரமான அனுபவங்களையெல்லாம் அல்லாஹ்வின் சட்டங்களாக, கட்டளைகளாக வழக்கம்போல குர்ஆனுக்குள் நுழைக்க வேண்டிருந்தது.

இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் மேற்கண்ட குர்ஆன் 24:58 கூறப்பட்டதற்கு , முஹம்மதிற்கேற்பட்ட தனிப்பட்ட அனுபங்களே காரணமாக அமைந்திருக்கிறது.

குர்ஆன் 24:27
 நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.

24:28 அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! "திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மூலம், முஹம்மது யாரிடம் எவற்றை மறைக்கச் சொன்னார், எதற்காக மறைக்கச் சொன்னார் என்பவைகளை நாம் கடந்த பகுதியில் பார்த்தோம்.

அடுத்தது பெண்கள் தங்களது உடலில் எந்தெந்த பகுதிகளை யார் யாருக்கெல்லாம் வெளிப்படுத்தலாம் என்பதற்கான குர்ஆன் கூறும் அனுமதிகள்.

குர்ஆன் 24:31
..அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். ...

...walā yub'dīna (வெளிப்படுத்த வேண்டாம்) zīnatahunna (அலங்காரத்தை) illā (தவிர) mā ẓahara (வெளிப்படையாக இருப்பவைகள்) min'hā(அதனின்றும்)...

இங்கே ஜீனத்' என்ற மூலச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஜீனத் என்றால் அலங்காரம் என்பது பொருள் என்று ஒரு தரப்பும் இயற்கையான உடல் அழகைக் குறிப்பதாக மறுதரப்பும் கூறுகின்றது. அழகோ அல்லது அழகலங்காரமோ எதுவாயினும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் மாறுபடுகிறது. உதாரணத்திற்கு மார்பை மறைக்க கூடுதலாக முந்தானைகளை அணிவது நமது அண்டை மாநிலமான கேரளாவில் மாறுபடுகிறது. பெண்கள் மேலாடை அணியாமல் இருப்பது இன்றும் சில நாகரீகங்களில் இருக்கிறது. அவ்வாறிருப்பதை அவர்கள்  ஒரு பொருட்டாக நினைப்பதுமில்லை. பொதுவாக உடைகள் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், புவியியல் சூழலுக்கும், காலத்திற்கும், நாகரீகத்திற்கும் ஏற்ப வேறுபடுகிறது.

வெளிப்படையானவைகள் எவை?

இதற்கு விளக்கம் கூறுவதாகப் புகுந்த முல்லாக்கள், பெண்களை மூடிவைக்கப்பட வேண்டிய இறைச்சியாகக் கருதிவிட்டனர். அதன் விளைவே இன்று நாம் காணும் இந்த நடமாடும் கூடாரம்! குர்ஆன் பல இடங்களில் வெட்கத் தலங்களைப்பற்றி பேசுகிறது. ஒருவேளை அவைகளை மூடிவைக்க கூறியிருக்கலாம் என்று வாதிடலாம். வெட்கத்தலங்கள் என்பன எவை?  வெட்கத்தலங்கள் விவகாரம் ஆதாம் தம்பதிகள் துவக்கி வைத்த குழப்பம். எனவே அங்கிருந்தே வருவோம்.

குர்ஆன் 20:121
அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர்...


ஆதாமும் அவரது துணையும் எவற்றையெல்லாம் வெட்கத் தலங்களாக கருதி மறைத்தனர்? நாம் இப்படியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்!  வெட்கத்தலங்கள் பற்றி குர்ஆனிடம் எந்த வரையறையும் இல்லை.

குர்ஆன் 7:26
ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக...

உடை என்பது முழுக்க முழுக்க மனிதனின் வாய்ப்புதான் எனபதை விளக்க இந்த குர்ஆன் வசனமே போதுமானது.  அதனால்தான் எதையும் குறிப்பிட்டுக் கூறாமல் ”தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை” என்று பொதுவாகக் கடந்து செல்கிறது. உண்மையில், பர்தா-புர்கா-ஹிஜாப் என்ற பெயரில் பெண்களை தலைமுதல் கால்வரை மூடிக்கொள்ளுமாறு குர்ஆன் அறிவுறுத்தவில்லை. ஜைனபுடனான தனது திருமண(வலீமா) விருந்தில், தனது தோழர்களின் செய்கையால் கடுப்பான முஹம்மது, தனது மனைவியரை திரைக்குள் மறைந்திருக்க உத்தரவிட்டார். அதையே காரணமாக் கொண்டு மற்ற பெண்களின் மீதும் திரையை திணிப்பது அர்த்தமற்றது.

இஸ்லாமிய அறிஞர்களின் ஆணாதிக்க சிந்தனை, பெண்களை அடிமைபடுத்தி தங்களது முழுகட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள ஏதுவாக குர்ஆனின் பொருளைத் திரித்து மொழிபெயர்க்கச் செய்துள்ளது. குர்ஆன் எதையும் குறிப்பிட்டுக் கூறாததால், ”குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ”யும் உள்ளது” என்று அல்லாஹ்விற்கே வஹீயை இறக்குகின்றனர். ஹதீஸ்களை கையிலெடுத்துக் கொண்டு அப்பாவி முஸ்லீம்களை தங்கள் விருப்பம் போல் ஆட்டுவிக்கின்றனர். குர்ஆன் விளக்கமானது (3:138), பேரொளி நிறைந்த சான்று (4:175), பேரொளியும் தெளிவும் நிறைந்தது (5:15), விரிவாக்கப்பட்டது, பூர்த்தியானது (6:66,115,116 18:54) தெளிவான ஆதாரம் கொண்ட நேர்வழி (45:20), எளிமையானது (54: 17, 22, 32, 40) என்ற குர்ஆனின் முனங்கலை இவர்கள் பொருட்படுத்துவதாக இல்லை!

மதவியாபாரிகளின் ”புர்கா போடும் புரட்சி” என்ற பீற்றலுக்கு பின்னால் மறைந்திருப்பது, திருமணச் சந்தையில் தங்களது பிள்ளைகள் விலைபோகமல், மற்றவர்களால் எங்கே நாம் அவமானப்பட்டு விடுவோமோ என்ற, ஒவ்வொரு அப்பாவி முஸ்லீம் பெற்றோர்களின் அச்சம் மட்டுமே!  இதைப்போன்ற மறைமுக மற்றும் நேரடி அச்சுத்தல்களின் மூலம் அப்பாவி மக்களை சமுதாயமாக ஒன்றிணைத்து தங்களது அரசியல் இலாபங்களுக்காக பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றனர்.  இதன் மூலம் முல்லாக்கள் பெற்ற அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்கள் என்னவென்பதை நீங்களே அறிவீர்கள்.

’பர்தா’ முறையின் வாயிலாக முல்லாக்கள், தங்களது பெண்களை அறிவற்றவர்களாகவும், தங்களது உடலால் ஆண்களைத் தவறான வழிக்கு கொண்டு செல்பவர்களாகவும், ஆண்கள் அனைவருமே அடக்க முடியாத காமவெறி பிடித்து அலையும் மிருகங்களாகவும் சித்தரிக்கின்றனர். வரலாற்றின் சக்கரங்களை பின்னோக்கி இழுக்கும் இவர்களின் செயல், முன்னேறிய ஒரு நாகரீக சமுதாயத்திற்கு அவமானமே!

’புர்கா-பர்தா’ என்ற திரைக்குப் பின்னால் மறைந்திருப்பது ஆதிக்க வெறிகொண்ட மத அடிப்படைவாதிகளின் ஆணாதிக்க சிந்தனையும், காமவெறி பிடித்த இந்தக் கயவர்களின் கொடூர முகமும்தான்!



தஜ்ஜால்

Facebook Comments

12 கருத்துரைகள்:

சிந்திக்கமாட்டார்களா said...

அருமை. முஸ்லீம் பெண்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்

சிந்திக்கமாட்டார்களா said...

அருமை. முஸ்லீம் பெண்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்

நாட்டு வேங்கை said...

புர்கா-பர்தா’ என்ற திரைக்குப் பின்னால் மறைந்திருப்பது ஆதிக்க வெறிகொண்ட மத அடிப்படைவாதிகளின் ஆணாதிக்க சிந்தனையும், காமவெறி பிடித்த இந்தக் கயவர்களின் கொடூர முகமும்தான்!

இறுதியாக தாங்கள் கணித்திருக்கும் முடிவுதான் உண்மை.

அதுசரி தஜ்ஜால் அவர்களே, இந்தப்படங்களை எல்லாம் எங்கிருந்து எடுக்கிறீர்கள். மிகவும் பொருத்தமாக இருக்கிறதே. மூடைகளுடன் மூடையாக புர்காபோட்டு மூடிவைக்கப்பட்டுள்ள பெண்ணின் படம் அருமையான தேர்வு.

C.Sugumar said...

ஆண்கள் கழுத்து முதல் கணுக்கால் வரை மழங்கை அல்லது மணிக்கட்டு வரை துணியால் மூடிக் கொள்கின்றனா். பெண்கள் எப்படித்தான் உடை அணிய வேண்டும் என்பதற்கு ஆண்கள் எவ்வளவு அணிவது கௌரவமோ அதுபோல் அணிய வேண்டும். வயிறு முதுகு கழுத்து தொியாமல் இறுக்கமாக இல்லாமல் தளா்வாக கண்ணாடி போன்று உடலை காட்டுவதாக இல்லாமல் இருக்கக் கூடிய சுடிதாா் போன்றவைகளே பொருத்தமானதாக இருக்கும். உழைக்கும் முஸ்லீம் பெண்கள் எப்படி உடை அணியலாம். பா்தா ... எல்லாம் மேல் தட்டு உயா் வருவாய் பிாிவினருக்கு சாிப்பட்டு வரலாம்.ஆனால் குறை வருவாய் பிாிவினருக்கு ......

SAGODHARAN said...

இஸ்லாமியர்கள் மத்தியில் பேசப்படும் பிரபல மார்க்க அறிஞர் முஹமத் மார்மடியூக் பிக்தால் தனது 1927 ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்த்திய சொற்பொழிவில் பர்தா பற்றிய விமர்சனத்தை குறிப்பிடும்போது "இஸ்லாத்தின் பலமாகவும்,புத்துயிராகவும் விளங்கியது முஸ்லிம் குடியானவர்களின் குடிசையாகும் .அங்கிருந்துதான் புதிய ரத்தமுடையோர் ஆட்சி பீடம் ஏறினர்;அங்கிருந்தே புதிய ரத்தமுடையோர் ஆட்சி ராணுவத்திற்க்கும் வந்தனர்;பர்தா முறையை கடைபிடித்த மக்களீடயே இருந்து அல்ல.கந்தலாகிவிட்டபெருமையின் சின்னம் மறைவதே நலம்.என்று கூறி அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளார். மேலும் கூறுகையில் "நமது இறைத்தூதரின் தெளிவான உத்தரவின்படி (!) பெண்களுக்கு கல்வி போதனை புரியுங்கள்.பின்னர் காலப்போக்கில் இஸ்லாமிய தொடர்பற்ற பர்தா முறை தானாகவே மறைந்து போவதைக்கான்பீர்கள்!...... இதை நான் கூறவில்லை அவருடய வார்த்தைகள்தான் இது தெரியாமல் PJ போன்ற இஸ்லாமிய வியாபாரிகள் அடிக்கடி ஒரு பாதிரியார் இஸ்லாத்துக்கு வந்து அக்கு வேறு ஆணி வேறாக விளக்கம் அளித்ததை சிலாகித்து கூறும்போது மேற்கண்ட பிக்தாளின் பெயரயே பெருமை அடித்து பிரச்சாரம் செய்வார்கள்!,(இனிமேல் PJ வகாயாராக்கள் அவரின் பெயரை கூறாமல் இருக்கவும் ஏனெனில் அந்தாளு ஒரு லண்டன் ஷைத்தான்). இவருடைய போதனைகளுக்கு காயிதே மில்லத் உட்பட பாராட்டுமழை பொழிந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது அறியவும்.

Ant said...

//சம வயதுடைய கட்டழகியரும்// அய்யயோ அப்ப அல்லாவின் துாதருக்கு வயதான பாட்டிதான் சுவனத்தில் கிடைக்குமா?

Ant said...

குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ:

//நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். "உங்களுக்கு இதை யார் சொன்னார்?'' என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த பதில்தான் இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. "அனைத்தையும் அறிந்த, நன்றாகவே அறிந்த அல்லாஹ்தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான்'' என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விடை. அதாவது "உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொருவரிடம் சொல்லி விட்டார் // நான் ஒரு கமுக்க செய்தியை நண்பனிடம் மட்டுமே சொல்கிறேன் அந்த செய்தி இப்போது நண்பனைத் தவிர வேறு யாரிடமும் சொல்லாத நிலையில் என்னை அடைந்தால் உடனடியாக அறிந்து கொள்ளலாம் அதை நண்பன்தான் கூறியிருக்க முடியுமென்று. இதையா பேராற்றல் மிக்கவன் கண்டு சொன்னான் அப்ப சபியாவின் கணவன் மறைத்து வைத்தவற்றை கண்டு அறிந்து சொல்ல முடியாமல் சித்தரவதை செய்து அறைகுறையாக செல்வத்தை பெற்று முழுமையாக அவர் ‌மனைவியை அடைய வைத்த அல்லாவின் மகிமையே மகிமை.

தஜ்ஜால் said...

வாருங்கள் முஹம்மது சாதிக்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

தஜ்ஜால் said...

வாருங்கள் சுகுமார்,

ஆடையென்பது அவரவர் விருப்பத் தேர்வுதான் இதுதான் எங்களது நிலை. அது புர்காவானாலும் சரி நீச்சலுடையாயினும் சரி. தனக்கு என்ன தேவையென்பதை அணிபவர்கள் முடிவு செய்யட்டுமே!

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,

குர் ஆனில் இல்லாத வஹீ ஹதீஸ்களில் இல்லாத வஹீ என்றெல்லாம் சொல்லவில்லையானால் வியாபாரம் எப்பாடி நடக்கும்? சிந்திப்பவர்களுக்கு இதில் அத்தாட்சிகள் உண்டு.

தஜ்ஜால் said...

வாருங்கள் சகோதரன்,

பீஜே எதைத்தான் முழுமையாகத் தெரிந்து பேசியிருக்கிறார்? குர்ஆனுக்கும் ஹதீஸிற்குமே மாற்றி மாற்றி பொருள் கூறக்கூடியவர். Marmaduke Pickthall விஷயத்தில் கேட்கவா வேண்டும்!

lakshmi said...

katturai remba nalla irunthuchu. how to type in tamil nu yenakku theriyala. muttal thanamana fartha system pathi ivlo theliva sonnathukku remba thanks. thodarga ungal sevai