Thursday 14 February 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்- 20


மனைவியின் மீது சந்தேகமும் வேதவெளிப்பாடும்


ஆயிஷா  அவர்களையும் வேறொரு ஆணுடன் இணைத்து புனையப்பட்ட செய்தி... (புகாரி 2661, 3388, 4141, 4750, 4757) (பெரிய ஹதீஸ்தான் வேறுவழியில்லை…!)

புகாரி ஹதீஸ் -2661
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.


...நபி (ஸல்)அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தெட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன், அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. ஆகவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பி விட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தெலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (ஆகவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், இன்னாலில் லாஹி இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள், மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப்பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் பின் பை பின் ஹலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்று விடும் போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகின்ற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும் போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிதுமின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களையும் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வஹீ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன் என்று அவர்கள் கூறினார்கள்.  அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்களோ  அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள் என்று கூறினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா என்று கேட்டார்கள். அதற்கு பரீரா (ரலி) தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார், வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும், அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை என்று பதில் கூறினார்.

….அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன். சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும் போது என் தாய் தந்தையர் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும் ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று கூறிவிட்டு ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில் அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கின்றான் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம் அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம் அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தாயார், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். ஆகவே அல்லாஹ்வின் மீதாணயைக! நீங்கள் மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்து போய் அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நான் தங்களிடம் சொன்னால். .....நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்..... நீங்கள் அதை நம்பப் போவதில்லை, நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை (யஃகூப் (அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது) (இதை) சகித்துக் கொள்வதே நல்லது நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும். (குர்ஆன் 12-83) பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும் திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்தவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே - வேதவெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவன் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை வீட்டிலிருந்த எவரும் வெளியே செல்லவுமில்லை, அதற்குள் அல்லாஹ் நபி (ஸல்) அவர்கள் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்து விட்டான். உடனே (வேத வெளிப்பாடு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தெடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்து விட்டான் என்று கூறினார்கள். என் தாயார் அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல் என்று கூறினார்கள். நான் மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன் என்றேன்.

ஆயிஷாவின் மீதான இந்தக் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டிற்கு முஹம்மது நபியின் மருமகன் அலீ பின் அபூதாலிப் அவர்களின் முடிவு வேறுவிதமாக இருந்துள்ளதாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

புகாரி ஹதீஸ் :4142
இப்னு ஷிஹாப்(முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது.

அலீ (ரலி) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியவர்களில் ஒருவர் என்று உங்களுக்கு செய்தி கிடைத்ததா என என்னிடம் வலீத் பின் அப்தில் மலிக் கேட்டார். நான், இல்லை (அலீ-ரலி-அவர்கள் அவ்வாறு கூறவில்லை.) மாறாக, தம் விஷயத்தில் அலீ (ரலி) அவர்கள் மௌனம் சாதித்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் தங்களிடம் தெரிவித்தார்கள் என்று உங்கள் குலத்ததைச் சேர்ந்த அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம் கூறினர் என்று பதிலளித்தேன். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் (மற்ற அறிவிப்பாளர்கள் இன்னும் இது பற்றி அதிக விளக்கம் கேட்டபோது) அவர்கள் பதிலளிக்கவில்லை. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்காத முஸல்லிமன் - அலீ - ரலி - அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள் என்ற வார்த்தையையே வலீத் அவர்களுக்கு ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பதிலாகக் கூறினார்கள். (வேறெதையும் அதிகபட்சமாகக் கூறவில்லை).
(ஆயிஷாவின் மீது கூறப்பட்ட கள்ளத் தொடர்பு குற்றச்சாட்டை அலீ அவர்கள் மறுக்கவில்லை. மேலும் ஆயிஷாவை விவாகரத்து செய்ய முஹம்மது நபி ஆலோசனை செய்த பொழுதும் அலீ அதைத் தடுக்க விரும்பவில்லை. நான்,  தேடலின் ஆரம்பத்தில் கூறியதை நினைபடுத்திக் கொள்ளுங்கள். தனது மருமகனான அலீ அவர்களை எதிர்த்து போர்க்களம் சென்ற ஆயிஷவின் செயலுக்கு அடிப்படைக் காரணம் இதுதானா?)
 முஹம்மது நபி  அவர்களின் தோழர்கள் மனைவி ஜைனப், பணிப்பெண் பரீரா  இன்னும் பலர் ஆயிஷா  அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை, அகில உலகத்திற்கே அருட்கொடையாக வந்த நபி  அவர்களுக்கு தன் காதல் மனைவி ஆயிஷா  அவர்கள் மீது ஏன் இல்லாமல் போனது?. தன்னுடைய ரசூல்(தூதர்) தவறான முடிவை எடுக்க போகிறார் என்பதை இவ்வளவு சாட்சியங்கள் கிடைத்த பிறகே அல்லாஹ்விற்கும் தெரிகிறது

24:11 நிச்சயமாக எவர்கள் (நபியின் மனைவியான ஆயிஷா மீது) அவதூறைக் கொண்டுவந்தார்களோ அவர்களும் உங்களில் ஒருகூட்டத்தினர்தாம்; (வ்வாறு நேர்ந்த)தை உங்களுக்கு தீமை என்று நீங்கள் எண்ண வேண்டாம். எனினும் (இறுதியில்) அது உங்களுக்கு நன்மைதான்; (அவதூறு சொன்ன) அவர்களிலிருந்து ஒவ்வொரு மனிதனுக்கும் பாவத்திலிருந்து அவன் சம்பாதித்தது (தண்டனை) உண்டு; அவர்களிலிருந்து எவன் இதனுடைய பெரும் பங்கை சுமந்து கொண்டானோ அவனுக்கு மகத்தான வேதனை உண்டு.
 
24: 12 இதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் தங்களுடைய மனங்களில் நல்லதையே எண்ணி, இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?

24: 13 இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அவ்வாறு சாட்சிகளைக் கொண்டுவராத பொழுது அவர்கள்தாம் பொய்யர்கள்.

24: 16  அதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது இதனை நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (யா அல்லாஹ்) நீ மகாத் தூய்மையானவன் இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?

மற்றவர்களை நோக்கி “இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?“, "இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?” என்று கேட்கும் அல்லாஹ், இந்த அவதூறு செய்தியை உண்மையென நம்பி விவாகரத்து வரை சென்ற முஹம்மது நபியை அல்லவா முதலில் கேட்டிருக்க வேண்டும்

முஹம்மது நபி மனைவியின் மீது சந்தேக குணமுடையவர் என்பதை சில ஹதீஸ்கள் உறுதி செய்கிறது

புகாரி ஹதீஸ் -5102
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறிவிட்டது போல் தோன்றியது. அந்த மனிதர் அங்கு இருந்ததை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், இவர் என் (பால்குடி) சகோதரர் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (பிள்ளைப் பால் அருந்தியிருந்தால்) தான் என்று சொன்னார்கள்
புகாரி ஹதீஸ் :  3330       
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்த பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டார்கள்.”

 ஊரார் ஆயிரம் குற்றச்சாட்டுகளைக் கூறினாலும், ஆயிஷாவின் மீது முதன்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டியவர் யார்?  முஹம்மது நபியா? இல்லை மதீனா வாசிகளா?

ஆயிஷாவின் மீது அவதூறு கூறப்பட்ட நிகழ்ச்சி தொடர்பான ஹதீஸ் பலவிதமான கேள்விகளை தூண்டுகிறது.

     ஆயிஷா இயற்கைத் தேவைகளுக்காக சென்றுள்ளார் என்பது படையினர் தெளிவாகவே அறிவார்கள். தங்களின் உயிருக்கும் மேலான தலைவரின் காதல் மனைவி தன்னுடைய தேவைகளை முடித்து திரும்பி விட்டாரா என்று உறுதி செய்ய மாட்டார்களா  ?

  படைவீரர்கள் கவனக் குறைவுடன் செயல்பட்டனர் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம். படைபரிவாரங்கள் மதீனா சென்றடையும் வரை, முஹம்மது நபி  அவர்கள் தன்னால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அழைத்து வரப்பட்ட மனைவியின் மீது கவனம் செலுத்த அளவிற்கு கவனக்குறைவை ஏற்படுத்தியது எது?

  ஒரு படை தன் பரிவரங்களுடனும், போரில் கைப்பற்றப்பட்ட  600 அடிமைகள், 2000 ஒட்டகங்கள், 5000 கால்நடைகள் இன்னும் ஏராளமான ஆயுதங்களுடன்  உள்ள முகாம் இடம் மாற தேவைப்படும் கால அவகாசம் மிக அதிகம். ஆயிஷா அவ்வளவு காலம் கடத்தியது ஏன்?

   மேலும்  இரவு தங்குவதற்காகவே படைமுகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஆயிஷா தற்செயலாக படையினரை தவறவிட்டதாக கூறுவது முரண்படுகிறது.

  அல்லாஹ்வும், முஹம்மது நபி  அவர்களும் உண்மையை உணர ஒரு மாதகாலம் கடத்தியது எதற்காக?

இவைகளுக்கு சுருக்கமான பதில்கள்

    நபிக்கு, ஆயிஷாவின் நினைவின்றி போனதற்கு  காரணம் புதிதாக கைப்பற்றப்பட்ட பெண்  ஜுவாரியா மீது ஏற்பட்ட மோகம்.

    ஜுவாரியாவின் பக்கம் சாய்ந்துவிட்டார் என்று நபியின் மீது ஆயிஷா கொண்ட கோபம். ஏனென்றால் நபி – ஜுவாரியா சந்திப்பை ஆயிஷா முதலிலிருந்தே விரும்பவில்லை
 
    ஆயிஷாவின் கற்பின் மீது, நபி  கொண்ட சந்தேகம்.

    ஆயிஷாவின் மாதவிலக்கை வைத்து, அவரது பத்தினி தனத்தைப் பற்றி முடிவெடுக்க.

தஜ்ஜால்

Facebook Comments

6 கருத்துரைகள்:

Unknown said...

நல்ல சிந்தனை;
|| ஆயிஷாவின் மாதவிலக்கை வைத்து, அவரது பத்தினி தனத்தைப் பற்றி முடிவெடுக்க.|| மறுப்பது கடினம் தான்

தஜ்ஜால் said...

வாருங்கள் MeMes,
முஹம்மதின் வசதிக்கேற்ப அல்லாஹ் வஹீயை இறக்குவான். முஹம்மது, அரபிகளை மட்டுமல்ல அல்லாஹ்வையும் அடிமைப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

Ant said...

ஆயிஷா மிகச்சிறுமி என்பது தெளிவாகிறது அவருக்கு வயதை மீறிய உறவு முகம்மது வழி இருக்கையில் அவர் வழி தவறி செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். ஊரார் கதை கட்டியதற்க்கு காரணம் இவர்கள் மற்ற பிரிவு பெண்களை நடத்திய விதம்தான் காரணமாக அமையும். தங்களை போலவே மற்றவர்களும் (அடிமைப் பெண்களை / போர்கைதிகளை) அனுபவிப்பதுபோல் அனுபவித்திருக்கலாம் என்ற முகமதுவின் அசைக்க முடியாத நம்பிக்கைத்தான் காரணம் என்று தெரிகிறது. அலி மவுணம் மட்டும் சாதிக்கவில்லை ஏராளமாக பெண்கள் உள்ளதான் கைகழுவ ஆலோசனை கூறியுள்ளது தெளிவு. //அ(வ்வாறு நேர்ந்த)தை உங்களுக்கு தீமை என்று நீங்கள் எண்ண வேண்டாம். எனினும் (இறுதியில்) அது உங்களுக்கு நன்மைதான்; (அவதூறு சொன்ன) அவர்களிலிருந்து ஒவ்வொரு மனிதனுக்கும் பாவத்திலிருந்து அவன் சம்பாதித்தது (தண்டனை) உண்டு// அவ்பெயரால் எப்படி நன்மை அவதுாறு செய்தவர்களுக்கு கிடைக்கும் தண்டனை இவர்களுக்கு நன்மையும் ஆக முடியாது என்பது எமது நிலை.

Ant said...

//முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ...இது பகிரங்கமான அவதூறு என்று சொல்லி இருக்க வேண்டாமா?// தங்கள் அறியாது குறித்து உறுதியாக தெரியாதது குறித்து அவர்கள் எதுவும் கூறமுடியாது என்பதை அறிந்ததால் மட்டுமின்றி எதிர்க்குழுக்கள் கையில் கிட்டி வந்திருந்தால் என்ன நிலை ஏற்றபட்டிருக்க கூடும் என்பது தெரிந்திருந்ததால் தான் கூறவில்லை என்பது அல்லாவுக்கு தெரியவில்லை.

//இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அவ்வாறு சாட்சிகளைக் கொண்டுவராத பொழுது அவர்கள்தாம் பொய்யர்கள்.// அதாவது பொய் சாட்சி
களை உடனே உருவாக்கி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தனது சகாக்கள் தவறிவிட்டனர் என்று முகமது அல்லாவின் துணையோடு அறிவித்து விட்டார். ஓரு மாதம் கழித்து நற்சான்று அளிக்கு அல்லா ஏன் 4 சாட்சிகளை இந்த சம்பவத்திற்க்கு வைத்து தனது துாதரை காப்பாற்றவில்லை என்ற கேள்வி எழுகிறது?
// அதனை நீங்கள் கேள்விப்பட்ட பொழுது இதனை நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (யா அல்லாஹ்) நீ மகாத் தூய்மையானவன் இது கடுமையான அவதூறு என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?// பத்ரு போரில் தனது படையயை அனுப்பி உதவிய அல்லா தனது துதரின் மனைவியை அவரின் கூட்டத்தினரே அவதுாறு செய்வதில் இருந்து நிகழ்ச்சி நடைபெறாமல் காப்பாற்றியிருக்லாம். எல்லாம் வல்ல இறைவானான அல்லாவே அணைத்தும் அறிந்தவன் என்பதாலேயே இந்த கேள்வியும் எழுகிறது. இறுதியாக கட்டுரையின் இறுதியில் உள்ள ஒருமாத காலத்திற்க்கு பின் அல்லா மற்றும் முகமதுவின் முடிவு அந்தகாலத்தில் இருந்த அறிவில் அறிவுவினால் வேறு வழியின்றி காத்திருக்க வேண்டியதாயிற்று. முகமது மட்டுமல்ல அவரது கூட்டமும் சந்தேகித்தது ஆனால் அல்லா தனது துாதரை (தலையை) கண்டிப்பதை விட்டு அவரை பின்பற்றியவர்களை சாடுவது பாவம் ஒருபக்கம் பழிஒருபக்கம் தான். ஒரு கேள்வி எழுகிறது இந்த சம்பவத்திற்க்கு பின்னராவது பிற குழு பெண்களிடம் நாகரீகமாக நடந்து கொண்டனரா? இந்த அவதுாறு சாத்தானின் செயல் என்றால் அவரை வழிபட்டால் தவறில்லை.

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,
இந்த நிகழ்வின் இருளில் மறைந்த ரகசியங்களை. "மர்ம இரவு" என்ற தலைப்பில் விவாதித்திருப்பதையும் பாருங்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Ant said...

தூதரின் மனைவி அவர் கூறிய ரகசியத்தை வெளியிட்டார் என்தற்க்காக அதை உடனே அறிவித்து காத்தார் (விளைவு என்ன என்பது தெரியாது) ஆனால் இங்கு ஏன் ஒரு மாதம் காத்திருந்தார்? அனைத்தும் அறிந்தவனுக்கே உறுதிபடுத்திக் கொள்ள ஒருமாதம் தேவைப்பட்டதா? என்பதை சிந்தித்தால் வஹியின் மீது ஐயம் கொள்வதை தவிர்க்க இயலாது.