Monday, 4 February 2013

இஸ்லாத்தைக் கடந்த சுவடுகள்-19
வேதவெளிப்பாடு

சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகள்,  ஜிப்ரீல் என்ற வானவர் மூலமாக குர் ஆனின் வசனங்கள் சிறிது சிறிதாக முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. அவ்வாறு அருளப்பட்ட வசனங்களின் முழுமையான தொகுப்பு குர்ஆன். 

புகாரி ஹதீஸ் : 0003         
ஆயிஷா (ரலி) அவர்கள்  கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. (எனவே) அவர்கள் ஹிரா குகையில் தனித்திருந்து தம் வீட்டாரிடம் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுவந்தார்கள். அதற்காக (பலநாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி அவர்களிடம் வந்து, துவீராக என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள் வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டு விட்டு ஓதுவீராக என்றார் அப்போதும் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்றார். அப்போதும் நான் ஓதத்தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக அவனே மனிதனை அலக் (அட்டை போன்று ஒட்டிப் பிடித்துத் தொங்கும்) நிலையிலிருந்து படைத்தான். ஓதுவீராக உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி எனும் இறைவசனங்களை (96:1-5) அவர் ஓதினார். (தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்„) பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குப் போர்த்திவிடுங்கள் எனக்குப் போர்த்திவிடுங்கள் என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள் (சிரமப் படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள் வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள் விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள் சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை) என்று (ஆறுதல்) சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றர்கள். -வரக்கா அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ்  நாடிய அளவிற்கு ஹீப்ரு  மொழியி(லிருந்து அரபு மொழியி)ல் எழுதுவார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.- அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே உங்கள் புதல்வர் (முஹம்மத்) இடம் அவர் கூறுவதைக் கேளுங்கள் என்றார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், என் சகோதரர் மகனே நீங்கள் என்ன பார்த்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள். (இதைக் கேட்ட) வரக்கா, (நீர் கண்ட) இவர்தாம், (இறைத்தூதர்) மூசாவிடம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, (மகனே) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்? என்று கேட்க, வரக்கா, ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுவப்பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன் என்று சொன்னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் இராமல் இறந்துவிட்டார். (அந்த முதல் வஹீயுடன்) வேத அறிவிப்பு (சிறிது காலம்) நின்றுபோயிற்று.

இவ்வாறாக அவ்வப்போது தேவைகளுக்கேற்ப தீர்ப்புகளாகவும், அனுமதிகளாகவும், விதிமுறைகளாகவும் எச்சரிக்கைகளாகவும் குர்ஆன் வசனங்கள் வஹீயாக  வெளிப்பட்டது.

முஹம்மது நபியிடம் கொண்டு வரப்பட்டது இறைவனின் கட்டளைகள்தான் என்பதற்கும் செய்திகளைக் கொண்டு வந்தவர் இறைவனின் தூதர்தான் என்பதற்கும் உள்ள ஆதாரங்கள் என்ன?
குர்ஆனின் வசனங்கள் நேடியாக மனிதர்களை வந்து அடையவில்லை. அல்லாஹ் கூறியதாக ஜிப்ரீல் என்ற வானவர் தன்னிடம் கூறியதாக முஹம்மது நபி கூறிக் கொண்டார். ஜிப்ரீலும் முஹம்மது நபியும் உரையாடியதை நேரடியாக கண்களால் கண்டவர்கள் ஒருவருமில்லை.

Ibn Ishaq’s Sirat Rasul Allah, translated by Alfred Guillaume: The Life of Mohammed, OUP Karachi, Page.106-153)

          இத்தகைய திடீர்த் தோற்றங்களினாலும், அசரீரீ குரல்களினாலும் மிகுந்த மனக் குழப்பமடைந்து, வாழ்நாளின் ஏனைய பகுதிகளையெல்லாம் மெக்கா நகரின் முட்டாளாக கழிக்க விரும்பாத முஹம்மது, மலை உச்சியிலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொள்ள எண்ணினார்:
"இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகிலேயே நான் மிகவும் வெறுத்ததெல்லாம் இது போன்றதொரு ஆவேச நிலையடையும் கவிஞன் அல்லது ஆவியின் ஆளுமைக்குட்பட்ட மனிதனையே. இனி நாசமாய்ப் போவேனாக என்று நினைத்துக் கொண்டேன். ஜின்னால் பீடிக்கப்பட்டவன் அல்லது பைத்தியக்கார கவிஞனென்று என்னை குரைஷிகள் ஏளனம் செய்ய அனுமதிக்க மாட்டேன்! மலைஉச்சியிலிருந்து வீழ்ந்து எனது உயிரைத் துறப்பேன், இந்தத் துயரநிலையிலிருந்து விடுதலை பெறுவேன்

          முஹம்மது கூறுகின்றார்: "ஆகவே, இந்த முடிவை நிறைவேற்றும் வண்ணம் நான் மேலே செல்லலானேன். அப்போது பாதிவழியில், வானிலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது. 'ஓ முஹம்மதுவே! நீரே அல்லாஹ்வின் தூதர், நான்தான் ஜிப்ரீல்" என்றது." அங்கேயே நான் நின்று கொண்டிருந்தேன், முன்னேயும் செல்லாமல் பின்னேயும் போகாமல். அந்த நேரத்தில் கதீஜா தன்னுடைய ஆட்களை மெக்கா நகருக்கு வெளியே அனுப்பி என்னைத் தேடிப் பிடித்து அழைத்து வருமாறு கூறியிருந்தார். இந்நிலையில், அவர் (ஜிப்ரீல்) என்னிடமிருந்து விலகினார், நானும் அவரிடமிருந்து மீண்டேன்"

          இத்தகைய 'வஹீ வெளிப்பாடுகள்' அடிக்கடி தொடர்ந்து ஏற்பட ஆரம்பித்த நிலையில், கதீஜாதான் அவரை ஆறுதல்படுத்தி, அவருக்கு ஏற்படும் வஹீ வெளிப்பாடு நிலைகளைப் பொறுத்துக் கொள்ளும் மனஉறுதியை முஹம்மதுவுக்கு வழங்கினார். இதையெல்லாம் விடவும் (கதீஜாவின்) முக்கியமானதொரு பங்களிப்பு என்னவென்றால், முஹம்மதுவுக்கே தமக்கு ஏற்படும் இந்த வஹீ குறித்த சந்தேகங்கள் இருந்த நேரத்தில், கதீஜா அவருக்கு தெம்பை ஊட்டி தன்னம்பிக்கை கொள்ளச் செய்தார்.
          கதீஜா, முஹம்மதுவுக்கு நம்பிக்கையூட்டியவிதம் இவ்வாறிருந்தது. (முதல் வஹிக்குப் பிறகு) முஹம்மது வீடு திரும்பியபோது கதீஜாவிடம் கூறினார்: "கவியான அல்லது ஜின் பீடித்த நான் நாசமாய்ப் போவேனாக!". ஆனால் கதீஜாவோ, "அபுல் காசிமே அல்லாஹ்விடம் நான் தஞ்சமடைகின்றேன்! உமது நிலை அவ்வாறிருக்க வாய்ப்பில்லை. அல்லாஹ் உம்மை அந்த நிலைக்குத் தள்ள மாட்டான். உமது நேர்மை, நம்பகத்தன்மை, நற்பண்புகள், காருண்யம் ஆகியவற்றை அல்லாஹ் அறிவான். உண்மையிலேயே நீங்கள் எதையாவது கண்டிருக்கக் கூடும்" என்று கூறினார். அதற்கு மும்மது, "ஆம், நான் எதையோ கண்டது நிஜம்தான்" என்று பதிலளித்தார்.

          அடுத்தமுறை மும்மதுவுக்குள் அசரீரீ கேட்கும்போது தம்மிடம் சொல்லுமாறும், பின்னர் அது ஜிப்ரீலா அல்லது வேறு ஏதாவது வழக்கமான ஜின்னா என்று முடிவு செய்வோம் என்றும் அவர் மும்மதுவைக் கேட்டுக் கொண்டார்.
          அப்படியே மறுமுறை மும்மதுவுக்கு ஜிப்ரீல் காட்சி தந்தவுடன் "இதோ ஜிப்ரீல் வந்துவிட்டார்" என்று கதீஜாவை உடனே அழைத்தார்.  "எழுந்திருங்கள் !" என்று அவரை எழுப்பிய கதீஜா, "எழுந்து என் இடதுதொடைப் பக்கம் அமர்வீராக" என்று சொல்ல, அப்படியே அமர்ந்தார் முகம்மது. "என்ன இன்னும் அவரைக் காண்கிறீர்களா?" என்று கேட்க "ஆம்" என்றார் முகம்மது. "சரி, இப்போது வலதுதொடைப் பக்கம் வந்து அமர்வீராக!" என்று சொல்லி "இன்னும் உள்ளாரா?" என்று கேட்க "ஆம்" என்று பதில் சொன்னார் மும்மது.

          பின்னர் அவரைத் தம் மடியிலேயே வந்து அமர்ந்து கொள்ளுமாறு கதீஜா கேட்டுக்கொள்ள மும்மதுவும் அப்படியே செய்தார். மடியில் அமர்ந்து கொண்ட பின்னரும் ஜிப்ரீலைத் தொடர்ந்து காண்பதாகச் சொன்னவுடன், கதீஜா ஆடையை விலக்கினார். தம் அழகை வெளிக்காட்டி "இப்போது (ஜிப்ரீலைக்) காண்கிறீர்களா?" என்று கேட்க "இல்லை" என்றார் முகம்மது. "மகிழ்ச்சி கொள்ளுங்கள்  நீங்கள் கண்டது ஜிப்ரீலையே, சைத்தானை அல்ல!" என்று உறுதி செய்தார் கதீஜா.
          இதைத் தொடர்ந்து வர்ணிக்கும் இபின் இஷாக் இது குறித்து இரண்டம் நிலை ஹதீஸையும் சேர்த்துச் சொல்கிறார். அதன்படி கதீஜா நபியவர்களை உறவு கொள்ள அழைத்ததாகவும், அதைக் காண விரும்பாத ஜிப்ரீல் உடனே விலகிச் சென்றதாகவும்  அதைக் கேட்ட கதீஜா "இது உண்மையில் ஜிப்ரீலேயன்றி சைத்தானில்லை" என்று அறிவிக்கிறார் என அந்த ஹதீஸ் கூறுகிறது.

          அக்கால நம்பிக்கைப்படி, மும்மது கண்டது இச்சை மிகுந்த கெட்ட ஜின்னாய் இருக்குமாயின் அது கதீஜாவுடன் உறவு கொள்வதைக்  கண்டு களித்திருக்கும் என்றும், உலகவாழ்வை விரும்பாத ஜிப்ரீலுக்கு இக்காட்சியில் விருப்பமில்லாததால் நகர்ந்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

          தனது மனைவி நடத்திய இந்தச் சோதனையின் மூலம் தாம் கண்டது ஜிப்ரீலையா என்ற முஹம்மதின் சந்தேகம் தீர்ந்தது. இதன்மூலம் தாமே இறைவனின் தூதர் என்று நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடங்கிய முகம்மது அதன் பின்னர் தொடர்ந்து ஜிப்ரீலின் மூலம் வெளிப்பட்ட செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினார். இவை உதவியாளர்களால் தொகுக்கப்பட்டுப் பின்னர் குர்ஆன் என்ற வேத புத்தகமானது.
புகாரி ஹதீஸ் :  3217      
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கின்றார் என்று கூறினார்கள். நான், வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு - அவர் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (அல்லாஹ்வின் தூதரே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள் என்று கூறுனேன். ஆயிஷா (ரலி) அவர்கள் நீங்கள் என்று நபி (ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.
முஹம்மது நபி அவர்களின் வாக்குமூலத்தைத் தவிர வேறு ஆதரங்கள் ஒன்றுமில்லை…! இறைவன் தன்னுடைய கட்டளைகளை இன்றுவரை மனிதர்களுக்கு இப்படியோரு வலுவான சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலேயே கூறுவது ஏனென்று புரியவில்லை. சரி, வஹீ எப்படியெல்லாம் வெளிப்பட்டது

புகாரி ஹதீஸ் :  3215       
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், தங்களுக்கு வஹீ (வேத வெளிப்பாடு) எப்படி வருகின்றது என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அவையெல்லாம் (இப்படித்தான்) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார். அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்துக் கொண்ட நிலையில் அவர் என்னை விட்டுப் பிரிந்து விடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான சிரமம் தரக் கூடியதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக் கொள்வேன் என்று பதிலளித்தார்கள்.
ஆக, இன்றை சாமியார்களின் அருள்வாக்கு கூறும் முறையில்தான் குர்ஆன் வசனங்கள் வெளியாகியுள்ளது. இந்த அருள்வாக்கு முறையை அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மாபெரும் அற்புதம் என்கிறார் முஹம்மது நபி.

முஸ்லீம் ஹதீஸ் :217,   அத்தியாயம்: 1, பாடம்: 1.70
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
"அற்புதங்கள் வழங்கப்படாத நபிமார்கள் இல்லை. அவ்வற்புதங்களைக் கண்ணுற்ற மனிதர்கள் (நபிமார்கள் கூறியவற்றை) நம்பினர். அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பான வஹீயைத்தான் எனக்கான அற்புதமாக வழங்கப் பட்டிருக்கிறேன். …

அருள்வாக்கு சாமியார்கள் தங்களது சொந்த சரக்குகளை கடவுளின் பெயரில் அவிழ்த்து விடுவது நாம் தெளிவாக அறிந்த உண்மை. அருள்வாக்கு கூறுபவர்களுக்கும் முஹம்மது நபியின் "வஹீ"க்கும் உள்ள வேறுபாட்டை அறிய விரும்பினேன்.  சில குர்ஆன் வசனங்களையும் அதன் பின்னணிகளையும் ஆய்வு செய்ததில் நான் உணர்ந்து கொண்டவைகளைக் கூறுகிறேன்.

Facebook Comments

4 கருத்துரைகள்:

Ant said...

சாமியர்களின் வாக்கு மூலம் ஏறக்குறைய நபியவர்களின் அணுபவத்துடன் ஒத்து போவது தெளிவாகிறது. இலட்சக்கணக்கான நபிகள் என்பது நமமூர் சாமியர்யாடிகளை தான் குறிப்பிடுகிறது. ”அப்போது வரக்கா நபி” என்பது இதை உறுதிபடுத்துகிறது. அருள்வாக்கு சாமியர்கள் கடவுளின் சாமியின் வாக்கை தெரிவிப்பதாக கூறுவதற்க்கும் வித்தியாசம் ஒனறே ஒன்று தான். அருள்வாக்கில் பக்தர்கள் (?) கேள்விக்கு மட்டுமே வழக்கமாக சாமி பேட்டியளித்து ஆசிர்வதிக்கிறார் இங்கு சாமி யாரும் கேட்காமலே தன்னை பற்றி தொடர்ந்து கூறிவருகிறார். அருள்வாக்கில் அதிக நேரம் தங்கள் பெறும் அணுபவம் இருப்பதில்லை என்பதை அதனை தவறான வழியில் பயன்படுத்தான சாமி (கொண்டாடிகள்) யாடிகள் தெரிவிக்கின்றனர். நாம் எதை அருள் வாக்கு என்கிறோமே அதுவே வஹி என்பது தெளிவு. நபிகளும் ஏராளம் எனவே சிறு தெய்வ வழிபாடே முகம்மது வழிபாடு. காரணம் ஒவ்வொரு சமுகத்தாருக்காக இந்த அருள் வாக்கு ஏற்பட்டாக வசனங்கள் உள்ளதே ஆதாரம். என்ன அல்லா சாமி கொஞ்சம் (அதிகமாகவே) அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிவிட்டதால் மற்ற சாமிகளின் அருள் வாக்கு சொல்லாததாகிவி்ட்டது. தங்கள் கட்டுரைகள் உரிய ஆதாரத்துடன் உள்ளதால் ”தாவா”வாதிகள் உங்களிடம் வாதம் செய்ய வருவதில்லை.

தஜ்ஜால் said...

வாருங்கள் ANT,
நமது உள்ளூர் சாமியாடிகளுக்கும் முஹம்மதிற்கும் அளவில்தான் வேறுபாடு அடிப்படை ஒன்றுதான். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

சிவப்புகுதிரை said...

அருமை தஜ்ஜால் அவர்களே..மூஃமின்கள் கல்லை வனங்காதீர்கள் என்று சொல்லுகின்றார்கள் ஆனால் இவர்கள் மட்டும் அஷ்வத் கல்லுக்கு முத்தம் கொடுகின்றார்கள்.கோமியத்தில் என்ன மருந்து இருக்கின்றது என்று இந்துக்களிடம் சண்டைக்கு போவார்கள் ஆனால் ஒட்டக மூத்திரத்தை மட்டும் முகமது நபி குடிக்க சொன்னாரு என்று குடிக்க சொல்லுவார்கள்..அவர்களுக்கு ஒரு நியாயம் இன்னொருனனுக்கு இன்னொரு நியாயம் ..

Iniyavaniniyavan Iniyavan said...

அருள் வாக்கு என்பது அப்பட்டமான புளுகுமூட்டை என்பது அதை ஓதுபவர்களுக்கே தெரிந்தும்,ஏற்க மறுப்பதற்கு மறுமை என்ற மடமை வாழ்க்கையை அச்சுருத்தி வைத்திருப்பது ஒரு காரணமாகும்.