Monday, 7 November 2016

’தலாக்’ எனும் மணவிலக்கு! - 2


தலாக் விவகாரத்தினால் ஏற்பட்ட விவாவாதங்கள், ”UCC”எனப்படும் பொது சிவில் சட்டம் தேவையா? எனும் அளவிற்கு சென்று விட்டது.


பொது சிவில் சட்டம் தேவையில்லை எனவும், இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை எனவும் முஹம்மதியர்களுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கின்றன. நான் கடந்த பகுதியில் கூறியதுபோல முஹம்மதியர்கள், கலந்தாய்வுகள், ஆலோசனைகள், விவாதங்கள், போராட்ட அறிவிப்புகள் என தங்களத் தாங்களே முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.




பாலாஜி சீனிவாசன் என்ற வழக்குரைஞர், முத்தலாக் மூலம் முஹம்மதியப் பெண்களை விவாகரத்து செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டுமென்று ஒரு பொதுநல வழக்கை பாதிக்கப்பட்ட ஷயாரா பானு என்ற பெண்மணியின் பெயரிலேயே தொடுத்த பிறகே இவ்விவகாரம் பொதுவெளியில் விவாதத்திற்கு வருகிறது; மத்திய அரசும் தனது கருத்தைத் தெரிவிக்கிறது.

மத்திய அரசின் நிலைப்பட்டைப்பற்றி அண்ணன் பீஜே கூறுகையில்,
மத்திய அரசின் கருத்தைக் கேட்காமலே இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையில் நின்று அப்பெண்களுக்கு நியாயம் வழங்க வழி இருந்தும் நீதிமன்றங்கள் மத்திய அரசிடம் கருத்து கேட்டது அறிவீனமாகும்.
இதன்படி மத்திய அரசும் பின்வரும் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
”தலாக் நடைமுறையை, மத நம்பிக்கையின் ஒரு பகுதியாகக் கருத வேண்டியதில்லை. தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலாருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டமே பிரதானமாகத் திகழும், இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாது.”

மூன்று தலாக் பிரச்சனைக்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டால் அது பற்றி மட்டும் கருத்து சொல்லாமல் ஒட்டு மொத்த தலாக் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது மடத்தனமானதாக உள்ளது.

சரி..!

ஒரே நேரத்தில் ‘தலாக், தலாக், தலாக்’ என மும்முறை கூறி ஒரு கணவன் தனது மனைவியை மணவிலக்குச் செய்ய முஹம்மதியம் அனுமதிக்கிறதா?

அண்மையில் நிகழ்ந்த ஒரு தலாக் பற்றி அவர்களது பெயர்களைக் குறிப்பிடாமல் சுருக்கமாகக் கூறுகிறேன்.

அவர்கள், பிழைப்பிற்காக ஊட்டியிலிருந்து சென்னையின் தாம்பரம்பகுதிக்குக் குடிபெயர்ந்தவர்கள். சுமார் பத்திற்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பம் அது.  அவர்களது மகன்களில் ஒருவர் கணிணி உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கப் பணிகளில் ஈடுபட்டு வருபவர். அவரது மனைவி கேரளாவின் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர். சிறுகச் சிறுக தொழிலில் மேம்பட்ட அவர் தனது மனைவி குழந்தைகளுடன் புதுமனையும் புகுந்தார்; கணவன்-மனைவி என இருவரும் இணைந்து புதுமனை புகுவிழாவை சிறப்பாக நிறைவேற்றினர். அடுத்த ஓரிரு நாட்களில் மனைவியை ஓய்விற்காக அவரது இல்லத்திற்கு அதாவது கேரளாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வெளியில் சென்றவர், வீட்டிற்குத் திரும்பி வரும் பொழுது இருவருக்கும் உறவினரான ஒரு முதியவருடன் வந்திருக்கிறார். அம்முதியவர் மற்றும் அவரது மாமனார் முன்னிலையில், தனது மனைவியை நோக்கி ‘தலாக், தலாக், தலாக்’ என மும்முறை கூறிவிட்டு சடாரென வெளியேறிவிட்டார். மனைவி உட்பட சாட்சியாக நிறுத்தப்பட்ட அம்முதியவருக்குக்கூட தான் எதற்காக அழைத்துவரப்பட்டிருக்கிறோம் என்பது இவர் தலாக் கூறும்வரை தெரியவில்லையென்பதுதான் இங்கு உச்சகட்ட வேடிக்கை.

பின் நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்கள் மற்றும் அங்கிருக்கும் ஜமாஅத்துகளின் வழிகாட்டுதல்களின்படி, முஹம்மதிய ஷரீஅத் சட்டப்படி விவாகரத்து நிகழ்ந்துவிட்டதாக இருதரப்பும் ஒப்புக் கொண்டது. அடுத்த ஒரு மாதத்தில் அந்த நபர் வேறொரு பெண்ணை திருமணமும் செய்து கொண்டார். மணவிலக்குச் செய்யப்பட்ட மனைவியின் பாதுகாப்பிலிருந்த குழந்தைகளையும் அவர் தனதாக்கிக் கொள்ள முயன்றதால் குழந்தைகளுக்காக இவ்விவகாரம் இப்பொழுது நீதிமன்றத்தில் இருக்கிறது. இதுமட்டுமல்ல இதைப் போல இன்னும் எண்ணற்ற உதாரணங்களை முஹம்மதியர்களின் எதார்த்த வாழ்க்கையிலிருந்தே காண்பிக்க முடியும்.

இன்றும் மிகப் பெரும்பாலான முஹம்மதிய மணவிலக்குகள், ஒரே நேரத்தில் ‘தலாக், தலாக், தலாக்’ என மும்முறையே கூறி நிகழ்கிறது. தங்களது சமூகத்தில் மணவிலக்கு முறை மிக எளிமையாக இருந்த பொழுதிலும், மணவிலக்குகள் மற்ற சமூகங்களைவிடக் குறைவாகவே நிகழ்வதாக முல்லாக்கள் புள்ளிவிபரங்களை அடுக்குவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அதற்கு மிக முக்கய காரணம் பெண்களே! பொதுவாகவே எந்தப் பெண்ணும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மணவிலக்கை நாடுவதில்லை. காரணம் சமூகம், கலாச்சாரம் மற்றும்  பொருளாதாரம் அவர்களது முடிவில் பெரும்பங்கு வகிக்கிறது. இதற்கு முஹம்மதியப் பெண்களும் விதிவிலக்கு அல்ல! வரதட்சனை, கணவன் மற்றும் அவனது உறவினர்களால் ஏற்படும் மன உளைச்சல்கள், பலதாரமணம் செய்யும் கணவன் என பல வேதனைகள் இருப்பினும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு காலத்தைக் கழிக்கின்றனர்.

மற்ற சமூகங்களை ஒப்பிடுகையில் முஹம்மதியப் பெண்கள் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகமிக பின்தங்கியுள்ளனர்; மிகப் பெரும்பாலும் குடும்பத்தினரால் அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது; தடைகளை மீறி கல்வியைப் பெற்றவர்களால் அதைக் கொண்டு பொளீட்டுவதற்கு மேலும் ஏராளமான தடைகளைக் கடக்கவேண்டியுள்ளது. இந்நிலையில் தங்களது அனைத்து தேவைகளுக்கும் அவர்கள் ஆண்களை சார்ந்தே இருக்கவேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல முஹம்மதியச் சட்டப்படி குழந்தைகள் கணவனின் உடைமை; அவன் விட்டுக் கொடுத்தால் மட்டுமே குழந்தைகள் தாயிடம் இருக்க முடியும். மிகப்பெரும்பாலான முஹம்மதிய பெண்கள் மணவிலக்கை அஞ்சுவதற்கு இதுவே மிக முக்கியக் காரணம்.

மிஹ்ராப் விளக்குகள்
Basheer Ahmed usmani
ஆகவே, கணவன் மனைவியின் மீது மூன்று தலாக்கிற்கு உரிமை பெற்றவனாக இருந்தாலும் அந்த மூன்று தலாக்கையும் ஒரே தடவையில் பிரயோகிப்பது வெறுப்பிற்கும் குற்றத்திற்கும் உரியதாகும். இப்படி ஒரேடியாக மூன்றையும் பிரயோகித்தாலும் தலாக் நிகழ்ந்து விடும்….
அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைப்படி குர்ஆன், ஸுன்னா, இஜ்மாஃ, கியாஸ் ஆகியவைகளே ஷரீஆ சட்டங்களின் அஸ்திவாரம். முத்தலாக் என்பது ஸஹாபாக்களின் இஸ்மாஃ எனும் அஸ்திவாரத்தின் ஒரு பகுதியாகும். எனவே, மும்முறை ஒருவர் ஒரேடியாக தலாக் கூறினாலும் அது நிகழ்ந்து விடும்…

ஒரே நேரத்தில் ‘தலாக், தலாக், தலாக்’ என மும்முறை கூறி மணவிலக்குச் செய்வது அறியாமையினால் அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் பிரிவுகளின் புரோகிதர்களால் கற்பிக்கப்பட்டவை இதற்கும் குர்ஆனுக்கும் எங்களது கண்ணுமணி முஹம்மதிற்கு எவ்விதமான தொடர்புமில்லை என்பதே வஹாபிய முல்லாக்களின் வாதம். மணவிலக்குச் செய்வதற்கு ’தலாக்’ என்றோ மணவிலக்குச் செய்கிறேன் அல்லது அத்தகைய பொருள்படும் ஏதேனும் பதத்தை கூறவேண்டுமென்பது முஹம்மதிய ஐதீகம்.  குறிப்பிட்ட அந்தப் பதத்தை எத்தனை முறை உச்சரிக்க வேண்டுமென்பதுதான் முல்லாக்களுக்கிடையே நிகழும் போராட்டம்.  ஒருதரப்பு தலாக் கூறிட ஆண்கள், மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்றும்  அதை மறுக்கும் வஹாபியத் தரப்பு அவைகள் வார்த்தைகள் அல்ல மூன்று வாய்ப்புகள் என்றுகூறி இருவரும் சேர்ந்து கொண்டு குர்ஆனின் தாடியைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கின்றனர்.

புகாரி ஹதீஸின் பாடம் 9-ல் இவ்வாறு கூறப்படுகிறது:
ஆதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
…நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவி வீட்டை விட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா)த் தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். (இது குறித்து நான் வினவியபோது) இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘ அவ்வாறு அவள் (வீட்டைவிட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்தத் தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறாவிட்டால் ஒன்றும் நிகழாது’ என்று கூறினார்கள்…
… ‘ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ என் மனைவி அல்லள்’ என்று சொன்னால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மணவிலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப்படியே மணவிலக்கு நிகழ்ந்துவிடும்’ என ஸூஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்…

அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் தங்களது தரப்பை வலுப்படுத்த மேலும் சில ஹதீஸ்களை முன் வைக்கின்றனர்.

திர்மிதீ 1097
அறிவிப்பவர்:  ருகானா
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என்னுடைய மனைவியை நான் ஒரேயடியாக தலாக் விட்டு விட்டேன்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "நீ அதைக் கொண்டு என்ன நாடினாய்?'' என்று கேட்டார்கள். நான் அதற்கு, "ஒரேயொரு தலாக்கைத் தான்'' என்று பதிலளித்தேன். "அல்லாஹ்வின் மீதாணையாகவா?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக'' என்றேன். "அப்படியானால் நீ என்ன நாடினாயோ அது தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முத்தலாக் என்பதோ அல்லது ஒட்டு மொத்த தலாக் என்பதோ முஹம்மதியத்திற்கு அந்நியமான சொல்லோ அல்லது செயலோ அல்ல. ஆனால் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் வாதங்களை வஹாபியர்கள் ஏற்க வேண்டுமே?

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி   
தலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்துவிடும். அதன் பின் அவர்கள் மீண்டும் சேரவே முடியாது என்ற தப்பான எண்ணம் முஸ்லிம்களில் பலரிடம் உள்ளது. இது தவறான நம்பிக்கையாகும்.

அபூஅப்துல்லாஹ்
குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக மத்ஹபுகளையும், தரீக்காக்களையும் கடைபிடிக்கும் தங்களை அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை முஸ்லிம்களும், அவர்களை வழிநடத்திச் செல்லும் ஜமாஅத்துல் உலமா சபையினரும் அவர்கள் நடத்தும் வார, மாத இதழ்களிலும் தலாக் சட்டம் இறவனின் தீர்ப்பாகும். இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்று ஏகோபித்து எழுதுகிறார்கள். ஆனால் “நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3 தலாக் ஒரே தலாக்காகவே கணக்கிடப்பட்டது” என்ற உண்மையான சட்டத்தை மாற்றி ‘ஒரே சமயத்தில் சொல்லப்பட்ட 3’தலாக்’ மூன்று தடவையாக கணக்கிடப்பட்டு விவாக முறிவு ஏற்படும்’ என்ற சட்டத்தை அல்லாஹ்வின் சட்டம் என்று சொல்கிறார்கள்.

அண்ணன் பீஜே
இந்திய முஸ்லிம்களில் மத்ஹப் எனும் கோட்பாட்டை (அறிஞர்களின் சொந்தக் கருத்தை) பின்பற்றுவோரும் உள்ளனர். இவர்கள் தான் மூன்று தலாக் எனக் கூறினால் அது மூன்று தலாக் நிகழ்ந்து விடும் என்ற கருத்தில் உள்ளவர்கள்.

மத்ஹபுக் கோட்பாட்டை எதிர்க்கும் அஹ்லே ஹதீஸ், நத்வதுல் முஜாஹிதீன், தவ்ஹீத் ஜமாஅத் போன்ற ஜமாஅத்துகளைச் சேர்ந்தவர்கள் மூன்று தலாக் என்று சொன்னாலும் ஒரு தலாக் தான் என்ற கொள்கையில் உள்ளவர்கள் ஆவர். சவூதி அரேபியாவிலும் இதுதான் சட்டம்.

சரி…! வாதத்திற்காக வஹாபிய முல்லாக்கள் கூறுவதைப் போல கண்ணுமணி முஹம்மது கற்பிக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம், வஹாபிய முல்லாக்கள் மறுக்கும் ஒரே நேரத்தில் கூறப்படும் முத்தலாக் என்ற வழக்கம் எப்படி முஹம்மதியர்களிடையே நிலைபெற்றது?

முஸ்லீம் 2932
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. பின்னர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "நிதானமாகச் செயல்பட்டு (மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்று)வந்த ஒரு விஷயத்தில் மக்கள் (இப்போது) அவசரம் காட்டுகிறார்கள். எனவே, அதை (முத்தலாக்கை) அவர்களுக்கெதிராக (மீட்டுக்கொள்ள இயலாதவாறு) நாம் செயல்படுத்தினால் என்ன?'' என்று கூறி, அவ்வாறே அதைச் செயல்படுத்தினார்கள்.

இந்த ஹதீஸைப்பற்றி வஹாபிய முல்லாக்களின் விமர்சனங்கள்:
ஏகத்துவம் மாத இதழில் வெளியான கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக தேங்கை முனீப், பஹ்ரைன் என்பவர் தொகுத்து எழுதிய கட்டுரையிலிருந்து…

…முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் தெரிந்தே உமர் (ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக சட்டம் இயற்றியுள்ளனர்.
- ஏகத்துவம் மாத இதழ் - செப்டம்பர் 2005 வெளியீடு
…முத்தலாக் சம்மந்தமான உமர் (ரழி) அவர்களின் முடிவு பற்றி, அவர்களிடத்திலேயே கேட்கப்பட்டது. மக்கள் தலாக்கை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக ஒரு தண்டனையாகவே இதனை அமுல்படுத்தியதாக அவர்கள் விளக்கமளித்தனர். அன்று அவர்களிடம் செல்வம் அதிகமாக இருந்தது. வசதி வாய்ப்புகளை அதிகமாகப் பெற்றிருந்தனர். விவாகம் ஒரு சர்வசாதாரணமான காரியமாக மாறி விவாகரத்துகள் அதிகமாயின. இதனால் உமர் (ரழி) அவர்கள் இவ்வாறு எடுத்த எடுப்பிலேயே மூன்று தலாக்குகள் விடுபவர்களுக்கு ஒரு தண்டனையாக இதனை அமுல் படுத்தினார்கள்…

அபூஅப்துல்லாஹ்
இந்த ஹதீஸ் தெள்ளத்தெளிவாக அல்லாஹ்வின் சட்டத்தை அதன் அடிப்படியில் நபி(ஸல்) நடைமுறையை உமர்(ரழி) மாற்றினார்கள் என்பதை தெளிவாக கூறுகிறது. இந்த நிலையில் தலாக் சட்டம் இறைவனின் தீர்ப்பு; இதில் மாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன? உமர்(ரழி) அவர்கள் மாற்றியமைத்தது தான் அல்லாஹ்வின் சட்டமா? நபி(ஸல்) அவர்களுக்கே இல்லாத, இறைவனின் சட்டத்தை மாற்றும் அதிகாரம் உமர்(ரழி) அவர்களுக்கு இருந்ததாக இவர்கள் நம்புகிறார்களா? ஏனிந்த முரண்பாடு?

அன்றைய மக்களை தலாக் விஷயத்தில் நிதானமாகச் செயல்படாமல் அவசரப்பட்டு, விளையாடிக் கொண்டிருந்ததாக இந்த ஹதீஸின் மூலம் குற்றம் சாட்டுகின்றனர். அதாவது அன்றைய முஹம்மதியர்கள் எடுத்த எடுப்பிலேயே மூன்று தலாக் கூறி மணவிலக்குச் செய்திருக்கின்றனர். ஆனால் அவர்களைக் தண்டிக்கும் விதமாக இரண்டாம் கலீபா உமர் செயல்படுத்திய தலாக் முறை அதைவிட அவசரத் தன்மை கொண்டதாக இருக்கிறதே? அவர்களது செயலை, முத்தலாக் முறையை அங்கீகரிக்கும் விதமாக சட்டமியற்றிய உமரின் செயல் எப்படி தண்டனையாகும்?

உண்மையில், தலாக் விஷயத்தில் அவசரப்பட்ட அன்றைய முஹம்மதியர்களைத் தண்டிப்பதாற்காக சட்டம் இயற்றியதாகக் கூறிக்கொள்ளும் கலீபா உமர் என்ன செய்திருக்க வேண்டும்? தலாக்கை மிக நிதானமாக அதாவது இன்றைய வஹாபிய முல்லாக்கள் சொல்வதைப்போல,

முதலில் மனைவிக்குச் சிறந்த முறையில் அறிவுரை கூறித் திருத்த முற்பட வேண்டும். அது பயன் தரவில்லை என்றால் தற்காலிகமாகப் படுக்கையிலிருந்து அவர்களை விலக்க வேண்டும். அதுவும் பயன் தராதபோது இலேசாக அடித்துத் திருத்த வேண்டும். விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது.
இதன் பிறகும் இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படவில்லையானால் இருவரது குடும்பத்தைச் சேர்ந்த நடுவர்கள் மூலம் பேசித் தீர்க்குமாறு 4:35 வசனம் வழிகாட்டுகிறது.
இந்த நான்கு நடவடிக்கைகள் மூலமும் இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை. இந்நிலையில் வேறு வழியின்றி விவாகரத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.

என்று விளக்கி, அதற்கேற்ப ஒரு சட்டத்தையல்லவா அவர் செயல்படுத்திருக்க வேண்டும்? ஆனால் அவரோ தெரிந்தே முஹம்மதின் போதனைகளுக்கு மாற்றமாகச் செயல்பட்டிருப்பதாக இந்த ஹதீஸ் ஆதரமாகக் கொண்டு விமர்சிக்கின்றனர்.

இரண்டாம் கலீபா உமரைப் பற்றிக் கூறும்  ஒரு ஹதீஸை பார்போம்.
முஸ்லீம் 2435
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு விட்டு, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்த மிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்'' என்றார்கள்.

தனது மருமகன் செய்த செயலை பின்பற்றியே தீர வேண்டுமென்ற கொள்கைவெறியின் காரணமாக, தனக்கு விருப்பமில்லை எனினும் ’ஹஜருல் அஸ்வத்’ கல்லை முத்தமிட்டவர், தலாக் விஷயத்தில் எப்படி குர்ஆனுக்கும், முஹம்மதின் போதனைகளுக்கும் எதிராக சட்டமியற்றியிருக்க முடியும்? இன்றைய வஹாபிய முல்லாக்களுக்கு இருக்கும் அறிவும் பொறுமையும் கூட இல்லாதவரா இரண்டாம் கலீபா உமர்?  தனது மாமனாரை வஹாபிய முல்லாக்களெல்லாம் விமர்சிக்குமளவிற்கு முஹம்மது விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை நினைக்கையில் எனது மனம் வேதனையில் விம்மி வெடித்துவிடும் போலிருக்கிறது.

முஹம்மதியம் கற்பிக்கும் தலாக் முறையையை இரத்து செய்ய வேண்டுமா? என விவாதங்கள் எழுந்ததற்கே இன்று தினம்தினம் புதுப் புது போராட்ட அறிவிப்புகள் முஹம்மதியர்கள் தரப்பிலிருந்து வெளியாகிறது. ஆனால் குர்ஆனுக்கும், முஹம்மதின் வழிகாட்டுதலுக்கும் எதிராக சட்டமியற்றி அதை வெற்றிகரமாக செயல்படுத்திய இரண்டாம் கலீபா உமர், குர்ஆனின் வசனங்களுடன் போர்புரிந்துவிட்டதாகக் கூறி வழக்கம் போல கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது மிக வன்மையாக கண்டிக்கப்படிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சமாக ஒரு உண்ணாவிரதம் அல்லது அறிக்கை..?... எதுவுமில்லை.

அக்கால கட்டத்தில் கலீபா உமரைச் சுற்றிலும் முஹம்மதிய அறிஞர்களாகவும் சட்ட ஆலோசகர்களாகவும் முஹம்மதிய நம்பிக்கைப்படி தீர்ப்பு வழங்கக் கூடியவர்களாக பலர் இருந்தனர். அவர்களில் எவருமே உமரின்  இந்த முடிவை எதிர்க்கவில்லை. அத்தகைய செய்திகள் முஹம்மதிய வரலாற்றில் எங்குமே காணப்படவில்லையே ஏன்?

காரணம் உமர், குர்ஆனுக்கு எதிராகச் செயல்படவில்லை என்பதுதான்.

அடுத்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டு தலாக்கை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர் அதனால் உமர் தண்டனையாகச் செயல்படுத்தினார் என்கின்றனர். அன்றைய முஹம்மதியர்கள் தலாக் விஷயத்தில் எவ்வாறு விளையாடினர்?

Malik's Muwatta
Chapter No. 29, Divorce
Yahya related to me from Malik that he had heard that a man said to Abdullah ibn Abbas, "I have divorced my wife by saying I divorce you a hundred times. What do you think my situation is?" Ibn Abbas said to him, "She was divorced from you by three pronouncements, and by the ninety-seven, you have mocked the ayat of Allah."
 “நான் என் மனைவியை நூறு தலாக் கூறிவிட்டேன். தாங்கள் என் மனைவி விஷயத்தில் என்ன கருதுகின்றீர்? என்று ஒருவர் என்னிடம் வினவினார். அதற்கு நான் ”மூன்று தலாக் உம்மிடமிருந்து நிகழ்ந்து விட்டது 97 தலாக்குகளால் நீர் இறை வசனத்தைப் பரிகாசம் செய்து விட்டீர்” என்று கூறினேன் என்பதாக இப்னு அப்பாஸ் கூறுகின்றார்கள்.

குர்ஆன் 2:231
பெண்களை நீங்கள் விவாக ரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்!...
மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
…மனைவியைப் பழிவாங்க நினைக்கும் வக்கிர புத்தி கொண்ட ஆண்களில் சிலர் இதை வைத்து அவளை வஞ்சித்து வந்தனர், மனைவியைத் தலாக் சொல்வர். இத்தலாக் காலம் முடியும் தருவாயில் அவளை மீட்டிக் கொள்வர். பின்னர் மீண்டும் தலாக் சொல்வர். இப்படி மனைவியை வாழாவெட்டியாக வாட்டி வதைத்தனர். ஒரு நபித்தோழர் மனைவியிடம், ‘உன்னை நான் தலாக் விட்டுப் பிரிந்து வாழவும் விடமாட்டேன் சேர்த்து உன்னுடன் சேர்ந்து வாழவும் மாட்டேன். உன்னை தலாக் சொல்வேன் பின்னர் மீட்டிக் கொள்வேன். பின்னர் தலாக் சொல்வேன்... இப்படி காலம் பூராக உன்னை இல்லறத்தை விட்டும் ஒதுக்கி வைப்பேன் என்று கூறிய போது அப்பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது குறித்து முறையிட்டாள். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது. மீட்டிக்கொள்ளும் தலாக் என்பது இரண்டு முறைதான் என்று இந்த வசனம் கூறி இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டியது….

குர்ஆன் 2:229
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்…
தலாக்-முத்தலாக் விவாதங்களில், இந்த ஹதீஸ் பலமானது அந்த ஹதீஸ் பலகீனமானது, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்று வழக்கம்போல முல்லாக்களுக்கிடையே ஹதீஸ் சண்டைகளுக்குப் பஞ்சமில்லை. குறிப்பாக இப்ன் அப்பாஸ் மற்றும் ருகானா பெயர்களில் அறிவிக்கப்படும் தலாக் தொடர்பான ஹதீஸ்களில், முல்லாக்கள் ஒருவரது தாடியை மற்றொருவர் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கின்றனர். எனவே நான் அந்த விவாதங்களுக்குள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. ஒன்று அனைத்து ஹதீஸ்களும் பாகுபாடின்றி ஏற்கப்படவேண்டும் அல்லது அனைத்தும் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டுமென்பதே நமது நிலை; நாம் விவாதத்தைத் தொடர்வோம்.

ஏகத்துவம் ஆகஸ்ட் 2005
அழுகின்ற இம்ரானாக்களும் எழுகின்ற கேள்விகளும்
 …எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக தலாக் என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடு முடிவடையாத வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது. ஒருவர் தன் மனைவியை நோக்கி ஒரே சமயததில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் முன்னூறு முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் பொருள்…
தடவை என்பதன் பொருளை விளங்கிக் கொள்ள சில உதாரணங்களைக் கூறலாம்.
ஒருவர் ஒரு மணி நேரம் குளித்துக் கொண்டேயிருக்கின்றார். அதன் பிறகு அவர் தலையைத் துவட்டிக் கொள்கிறார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் நாம் ஒரு தடவை என்று தான் கூறுவோம்.
இன்னொருவர் பத்து நிமிடம் குளிக்கின்றார். பிறகு வெளியே வந்து தலையைத் துவட்டிக் கொள்கிறார். மீண்டும் போய்க் குளிக்கின்றார். இப்படியே ஒரு மணி நேரத்தில் 5 தடவை இது போன்று செய்கின்றார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் 5 தடவை என்று கூறுவோம்.
ஒருவர் சாப்பிடுவதற்கு அமர்ந்து 10 இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். இவர் ஒரு தடவை சாப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அமர்ந்து இரண்டு இட்லி சாப்பிடுகின்றார். இவர் முன்னவரை விடக் குறைவாகச் சாப்பிட்டிருந்தாலும் இரண்டு தடவை சாப்பிட்டார் என்று தான் கூறுவோம்.
இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்.
இது போலத் தான் தலாக்கின் தடவை என்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தலாக் விட்டால் மூன்று மாத விடாய்க்குள்ளாக மீட்டி விட்டால் ஒரு தடவை தலாக் நிறைவேறி விட்டதாகப் பொருள். ஒரு தலாக் கூறி விட்டு, உரிய காலக் கெடுவுக்குள் மீட்டாமல் ஒருவர் ஆயிரம் முறை தலாக் என்று கூறினாலும் அது ஒரு தலாக் தான். ஏனென்றால் ஒரு தடவை என்பது இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதை எத்தனை முறை கூறினாலும் ஒரு தடவை தான்.

தலாக் சொல்லப்பட்ட பெண்ணை திரும்பவும் மீட்டுக் கொள்வதற்கான குறைந்தபட்ச காலவரைமுறைபற்றி கூறப்படும் இடங்களை சற்று கூர்ந்து கவனியுங்கள். இதில் எங்கே குறைந்தபட்ச காலவரைமுறை குறிப்பிடப்பட்டுள்ளது? என்று விழிக்கவேண்டாம். குர்ஆனிலும் இல்லை  ஹதீஸ்களிலும் இல்லை முல்லாக்களின் விளக்கங்களிலும் இல்லை. அதை சமாளிக்கவே ’முறை’ ’தடவை’ என்று ஏதேதோ விளக்கங்களை அள்ளிவிடுகின்றனர்.

தலாக் அறிவிக்கக் கூடாத காலத்தைப்பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் கூறப்பட்டிருக்கிறது.

குர்ஆன் 65:1
நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்!

முஸ்லீம் 2929
அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (என் தந்தையிடம்), "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு (மாத விடாயிலிருந்து) அவள் தூய்மையடைந்ததும் மணவிலக்குச் செய்யட்டும்!'' என்று கூறினார்கள்.
ஆனால் குறைந்தபட்ச கால அளவு எவ்வளவு என்பதைப்பற்றி எந்தவிதமான வரைமுறையும் கிடையாது என்பதைப்பற்றி முன்னமே கூறினேன். இதனால் எழுகின்ற குழப்பங்களைப்பற்றி த.த.ஜவினருக்குத்  தெரியும் அதனால்தான் தர்க்கரீதியாக வாதிடுவதாக நினைத்துக் கொண்டு எல்லோரையும் குளிக்க வைத்து இட்லி ஊட்டி விடுகின்றனர். ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும் என்று விளக்கமளிப்பவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? குர்ஆன் கூறும் தலாக் விஷயத்தில் குறிப்பிட்ட அவரது விளக்கத்தைப் பொருத்திக் காண்பித்திருக்க வேண்டும்.

செய்தார்களா…? செய்தார்களா…? செய்தார்களா…?

இல்லை…!

கவலைப்படவேண்டாம் அவர்கள் செய்யத் தவறியதை நாம் செய்வோம். அதற்குத்தானே இந்தக் கடையை நடத்திக் கொண்டிருக்கிறோம்! அதற்கு முன் அப்படியானால் தலாக் கூறப்பட்ட பெண்ணை மீட்டுக் கொள்வதற்கான காலவரம்பு பற்றி கவனித்து விடுவோம்.

அவ்வாறு மீட்டுக் கொள்வதற்கான காலவரம்பு, தலாக் சொல்லப்பட்ட மறுகணத்திலிருந்து மூன்றாம் மாதவிடாய் ஏற்படுவதற்கு முந்தின வினாடிகள் வரையிலும், அப்பெண் கருவுற்றிருந்தால் குழந்தைப்பேறு வரையிலும் இருக்கிறது என்பதுதான். ஒருவேளை மாதவிடாய் நின்றுபோன பெண்ணாக இருந்தால் மூன்று மாதங்களைக் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும் என்கின்றனர். அதாவது குறிப்பிட்ட இந்தக் காலஇடைவெளியின் ஒவ்வொரு மைக்ரோ, நானோ வினாடியிலும் தலாக்கிலிருந்து திரும்ப அழைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குர்ஆன் 2:231
பெண்களை நீங்கள் விவாக ரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவை நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்!...
குர்ஆன் 65:4
….கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்…
சரி..!

வஹாபிய முல்லாக்கள் சொல்வதை போல மூன்று இட்லி… மன்னிக்கவும்..! மூன்று வாய்ப்புக்கள் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கென்று கூறப்படும் பிரத்தியேகமான பதங்கள் அல்லது அத்தகைய பொருள்படும் பதங்களைப் பயன்படுத்தியே மணவிலக்கு செய்யவேண்டும் என்ற கண்மணி முஹம்மதின் போதனையை மறக்கக்கூடாது.

மூன்று விஷயங்கள்: அவற்றைப் பொறுப்புடன் கையாண்டாலும் அவற்றால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஏற்பட்டே தீரும். அவற்றை விளையாட்டாக கையாண்டாலும் அவற்றால் ஏற்படும் விளைவுகள் ஏற்பட்டே தீரும். அவையாவன: 1) திருமணம் 2) தலாக் 3) தலாக்கை திருபப்ப பெறுதல் என நபியவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா)

அவ்வாறு மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்ணை திரும்பவும் மீட்டுக் கொள்வதற்கு ஏதேனும் மந்திரங்களை உச்சரிக்கவோ அல்லது குனிந்து நிமிர்ந்து சடங்குகளை நிறைவேற்றவோ வேண்டுமா?

நிச்சயமாக இல்லை! அதற்கென்று எந்தவிதமான செயல் முறைகளையும் முஹ்ம்மது கற்பிக்கவில்லை.

தலாக்கிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட பின்னர் அந்தக் கணவனும் மனைவியும் அடுத்த தலாக் சொல்வதற்கு குறைந்த அளவாக எத்தனைக் காலம் மறுபடியும் இணைந்து வாழ வேண்டும்? அப்படி ஏதேனும் வரைமுறை அல்லது வழிகாட்டுதல்கள் இருக்கிறதா?

நிச்சயமாக அத்தகைய எந்த வரைமுறையும் கிடையாது!

அப்படியானால், ஒரு தலாக்கிற்கும் இரண்டாவது தலாக்கிற்கும் போதிய இடைவெளி என்று எதுவுமே இல்லை!

இப்பொழுது த.த.ஜவினர் கொடுத்துள்ள குளியல் மற்றும் இட்லி உதாரணத்தை கவனிப்போம்.

அந்த முஹம்மதியர் தனது மனைவியை தலாக் கூற முடிவெடுத்து, தகுந்த நேரத்தையும் தேர்ந்தெடுத்து சாட்சிகளையும் வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். பஞ்சாத்து ஆரம்பிப்பதற்கு முன் குளித்து உணவருந்திவிட  முடிவெடுக்கிறார். குளியல் அறைக்குள் செல்கிறார்; குளித்து புத்துணர்வுடன் வெளியில் வந்து மனைவியை நோக்கி, ”தலாக்” என்று கூறிவிட்டு, உணவு இருக்கும் மேசையை நோக்கிச் செல்கிறார். (நான் நேரத்தைக் கணக்கிட விரும்புகிறேன். விரும்பினால் நீங்கள் இப்பொழுது உங்கள் கடிகாரத்தில் நேரத்தைக் கணக்கிட துவங்கலாம்) குர்ஆன், ஹதீஸ் மற்றும் முல்லாகளின் விளக்கங்களைன்படி அவர் தலாக் என்ற சொல்லை முழுமைப்படுத்தியதிலிருந்து அவரது மனைவியில் இத்தா காலம் துவங்கிவிடுகிறது.

மேசையில் தயாராக இருக்கும் இட்லிகளில் இரண்டை சுவைத்து நிதானமாக உண்கிறார். (எனக்கென்னவோ இந்த நபர் த.த.ஜாவினரின் குளியல் மற்றும் இட்லி உதாரணத்தை அவரும் வாசித்திருப்பதாகத் தோன்றுகிறது) அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை தனது மனைவியைத் தலாக்கிலிருந்து மீட்டுக் கொள்வதாக அறிவிக்கிறார். இப்பொழுது அவர் மனைவியின் காத்திருப்பு காலமும் முடிவடைகிறது. (எனது கடிகாரத்தில் சரியாக 10 நிமிடம் ஆகியிருக்கிறது). பஞ்சாயத்திற்கு வந்தவர்கள் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த முஹம்மதியரின் வயிற்றில் ஏதோ கட..முட என்று சத்தம் கேட்க குளியலறையை நோக்கி ஓடுகிறார், அங்கு என்ன நிகழ்ந்ததென்று தெரியவில்லை. திரும்பவும் குளித்து சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தவர் மீண்டும் தனது மனைவியை நோக்கி ”தலாக்” என்று கூறிவிட்டு, இட்லி  இருக்கும் மேசையை நோக்கிச் செல்கிறார். அவரது மனைவியும் வேறுவழி தெரியாமல் ’இத்தா’ காலத்தை கணக்கிடத் துவங்கினார். மீண்டும் இரண்டு இட்லிகளை நிதானமாக உண்டு முடித்தவுடன், தனது மனைவியைத் தலாக்கிலிருந்து மீட்டுக் கொள்வதாக அறிவிக்கிறார். (இப்பொது சரியாக 20 நிமிடம் ஆகியிருக்கிறது).

அவருக்கு அகோரப் பசி என்று நினைக்கிறேன் மேலும் இரண்டு இட்லிகளை வயிற்றுனுள் தள்ளுகிறார். மீண்டும் கை மற்றும் வாய் சுத்தப்படுத்திக் கொண்டு, தனது மனைவியை நோக்கி ”தலாக்” என்று கூறுகிறார் (இப்பொது சரியாக 25 நிமிடம் ஆகியிருக்கிறது). இப்பொழுது அவர் தலாக்கை மூன்று தடவை அதாவது வேவ்வேறு சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார். (மீண்டும் அவர் குளிப்பாரா…? தெரியவில்லை..!) அதுமட்டுமல்ல ஒரு ஆரம்பம் ஒரு ஒரு முடிவு என த.த.ஜ போன்ற வஹாபிய முல்லாக்களின் அறிவுறுத்தலையும் முழுமையாக  நிறைவேற்றியிருக்கிறார். போதாக்குறையாக இரண்டு முறை குளித்திருக்கிறார்; ஆறு இட்லிகளையும் சாப்பிட்டிருக்கிறார் இதற்குமேல் அவர் என்ன செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

இது ’போங்காட்டம்’ என்று வஹாபியர்கள் என் மீது பாயலாம். அவர்களிடம் நான் கேட்க விரும்புவதெல்லாம், ஒரு தலாக்கிற்கும் அடுத்த தலாக்கிற்கும் முறைந்தபட்ச இடைவெளி அல்லது கால அளவு என ஏதேனும் இருந்தால் அதை எனக்குத் தெளிவு படுத்துங்கள்! நான் என்னைத் திருத்திக் கொள்கிறேன்.

நிச்சயமாக அப்படி எந்தவிதமான வரைமுறையும் குர்ஆனிலும் கிடையாது ஹதீஸ்களிலும் கிடையாது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆக எப்படி நிதானமாகச் செயல்பட்டாலும்கூட தலாக் விஷயத்தில் 25 நிமிடத்திற்குள் வஹாபிய முல்லாக்கள் வலிந்து கற்பிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியும்! விரைந்து செயல்பட விரும்பியவர்கள் அடுத்தடுத்து மூன்று தலாக்குகளை அடுத்தடுத்து அறிவித்தனர் என்று கூறுவதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை! இரண்டாம் கலீபா உமர் செயல்படுத்தியதும் இந்த முறையைத்தான். அதனால்தான் அவரது செயல் அன்றைய முஹம்மதியர்களால் எதிர்க்கப்படவில்லை!
தொடரும்…




தஜ்ஜால்

Thursday, 27 October 2016

’தலாக்’ எனும் மணவிலக்கு!

அண்மையில் நான் சென்ற அனைத்து முஹம்மதியர்களின் இல்லங்களிலும் கண்டது இந்தப் படிவத்தையும், கூடவே,




”ஃபார்ம்ல கையெழுத்து போட்டுக் கொடுத்தாச்சா?” என்ற விசாரிப்புகளைத்தான்!

”எங்கள் வீட்டிலிருக்கும் எந்த பெண்ணுக்கும் இப்படிவத்தில் ஒப்புதலளிக்க விருப்பமில்லை!” என்றேன்.

“கையெழுத்துப் போடவில்லையா?” என்று அதிர்ந்தனர்

“ஆமாம்! அது மட்டுமில்லை படிவத்திற்கு எதிராக குரல்கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர்” என்றேன்.

உண்மை நிலை இதுதான்!

முஹம்மதிய மதநம்பிக்கைகளில் ஊறித் திளைக்கும் எனது இணையருக்கூட ” All India Muslim Personal Law Board” தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் இப்படிவத்தில் கையெழுத்திட விருப்பமில்லை என்பது மட்டுமல்ல; முடியாது என உறுதியாக மறுத்துவிட்டார். அவர் முஹம்மதியக் கல்வியில் ஆலீமா பட்டம் பெற்றவர் என்பதை முன்னமே உங்களிடம் கூறியிருப்பதாக நினைவு!

இப்பொழுது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தலாக் விவகாரத்தைப்பற்றி முஹம்மதிய ஆண்களிடம் பேசும்பொழுதெல்லாம், போர்பிரகடணம் அறிவிக்கப்பட்டதைப் போன்ற பதட்டம் தொற்றிக் கொள்வதையும் காண முடிந்தது. விரல் அசைக்காதவர், அசைக்கின்றவர், ஹதீஸை ஏற்றவர்கள், ஏற்காதவர்கள் என ஏறக்குறைய அனைத்துப் பிரிவுகளும் சிறப்புச் சொற்பொழிவுகள், ஆலோசனைக்கூட்டம் என முஹம்மதிய அமைப்புகள் அலைபாய்கின்றன. (எனக்கும் அழைப்பு வந்ததென்பது வேறு விஷயம்!)

காரணம், மத்தியில் இருப்பது ப.ஜ.க அரசு!

"தலாக்' விவாகரத்து முறையால் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கை பாழாவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், அவர்களது உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது முஃமின்களிடைய இன்னும் பதட்டத்தை அதிகரித்துவிட்டது.

ஆளும் மத்திய அரசும், ஊடகங்களும், இந்த “தலாக்” என்ற மணவிலக்கு முறைமட்டுமே முஹம்மதியப் பெண்களைப் பெரும்பாதிபிற்குள்ளாக்குவதைப் போன்று சித்தரிக்கின்றனர். சிலர் ’தலாக்’ முறையை இரத்து செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகளை வைக்கின்றனர். ‘தலாக்’ என்றால் ‘மணவிலக்கு’ ஆர்வக் கோளாறில் மணவிலக்குமுறையையே நிறுத்திவிடுவார்கள் போலிருக்கிறது. இவர்களது அறியாமையைக் கண்டு அழுவதா அல்லது சிரிப்பதா எனப் புரியவில்லை. அவ்வப்பொழுது மதவெறியர்கள் ஒருவருக்கொருவர் மாற்று நம்பிக்கைகளைச் சீண்டுவது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுவதும், பின்னர் ஒன்றுமேயில்லாததைப் போல மறைந்து போவது நமக்கு வாடிக்கையான ஒன்றுதான். அவ்வப்பொழுது ஏதாவது பரபரப்பு இருந்தால்தானே ஒரு திரைக்கதைகூட சுவையுள்ளதாக இருக்கும்? மதவெறிமட்டுமே பின்னணியாக் கொண்ட அரசாங்கத்திற்கு…?

”UCC”எனப்படும் பொது சிவில் சட்டம் தேவையா எனில், எனது பதில், ”ஆம்..! மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் தேவையே…!”

“இப்படியென்று இந்தியாவில் சாத்தியமா?” என்றால்

“கேடுகெட்ட இன்றைய அரசியலமைப்பில் அது சாத்தியமில்லை!”

இத்துடன் இவ்விவகாரத்தை நாம் முடித்துக் கொள்ள முடியும். ஆனால், பெண்களை அடிமைகளாக்கும் குர்ஆனின் சட்டதிட்டங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் முஹம்மதின் முட்டாள்தனங்களையும், மதவாதிகளின் கோரமுகங்களை வெளிப்படுத்துவது இன்று அவசியமாகிறது.
 
இவ்விவகாரத்தைப்பற்றி அனைத்து ஊடகங்களிலும் இன்னும் விவாதிக்கப்படுவதால் பின்னணியைப்பற்றி விரிவாகச் சொல்லத் தேவையில்லையென நினைக்கிறேன். முஹம்மதிய இல்லங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களுக்கான அப்படிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முதல் இரண்டு உறுதிமொழி,
1.   நாம் இஸ்லாமிய ஷரீயத்தின் அனைத்து சட்ட திட்டங்களை குறிப்பாக நிக்காஹ், தலாக், குலா, பஸ்க், மற்றும் வாரிசுரிமை போன்ற அனைத்து சட்டங்களையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம், இதில் எவ்வித மாற்றத்தையும் அல்லது விட்டுக்கொடுப்பதையும் முழுமையாக எதிர்க்கிறோம்
2.   நம் இந்திய நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் தம் மதத்தின் பிரகாரம் செயல்படுத்த முழுமையான சுதந்திரம் இந்திய சாசனத்தில் இடம் இருக்கிறது, ஆகையால் நாம் எந்த விதத்திலும் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
இதற்குள், நிக்காஹ் மற்றும் வாரிசுரிமையை எதற்காக நுழைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை; வரும்முன் காப்போம் திட்டமா? அல்லது முஹம்மதியப் பெண்மணிகளின் ஏமாற்றுவதற்காகவா?



மணவிலக்கு பற்றி முஹம்மதியம் என்ன கூறுகிறது?
தலாக் பொதுவிவாதத்தில் இருக்கிறது! அதைக் கவனிப்பதற்கு முன்னால்,  
முஹம்மதியர்களிடையே இருக்கும் குலா, ஃபஸ்க் மற்றும்  ஈலாஉ, ளிஹார் என்று  வேறு சில வழக்குகளைப்பற்றி சுருக்கமாக கவிப்போம்.

குலா என்றால் என்ன?
’குலா’ அல்லது ’குல்உ’ என்பது கணவன் மனைவியைத் தலாக் சொல்வதற்குப் பதிலாக மனைவி தன்னுடைய கணவனை விட்டு பிரிவது பயன்படுத்தக்கூடிய வார்த்தையாகும். இதற்கு தமிழில் கழற்றிவிடுதல் என்று பொருளாகும். குலா செய்யும் போது கணவனை விட்டு பிரிவதற்கு காரணத்தை மனைவி  சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஃபஸ்க் என்றால் என்ன?
ஃபஸ்க் என்பது ஏறக்குறைய குலா’வைப் போன்றதுதான். சுன்னத் ஜமாஅத் காரர்களின் இணையதள விளக்கம்.
பருவமெய்திய அறிவுள்ள மனைவி, கணவன் உடலுறவு கொள்ளும் முன் தவணை வைக்கப்படாத தன்னுடைய மஹ்ரைக் கேட்கும்போது அவன் அதனைக் கொடுக்க இயலாதவனாக இருந்தால் அல்லது குடியிருக்க வீடு அல்லது உடையில் தாழ்ந்ததையாவது அல்லது உணவு கொடுக்க இயலாதவனாக இருந்தால் அவனுடைய நிகாஹை ஃபஸ்கு செய்வது கூடும். (தடித்த எழுத்துக்களில் அடிக்கோடிட்ட வார்த்தைகளை கவனத்தில் கொள்ளவும்!)

ளிஹார் என்றால் என்ன?
ளிஹார் என்பது மனைவியை தாய்க்கு ஒப்பிடுவது. இதற்கான விளக்கம் குர்ஆனிலிருந்து,
குர்ஆன் 58:3
'எனவே எவரேனும் தங்கள் மனைவிகளைத் (தம்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், (தம் மனைவியர் அந்தத் தாயைப்போல் மஹ்ரம் ஆகிவிடுவார். பின்னர்) அக்கூற்றிலிருந்து திரும்பி (மீண்டும் மனைவியருடன் சேர்ந்து கொள்ள விரும்பி) னால் அவ்விருவரும் ஒருவரையொருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்துக்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (என்று) இதன்மூலம் நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாக இருக்கிறான்.
என்ன இது..? என்று விழிக்க வேண்டாம். மனைவியை, தாயாருக்கு இணையாக ஒப்பிட்டு விலக்கி வைப்பது இந்தியக் கலாச்சாரத்தில் கிடையாது; புதிதாக இருக்கிறது! அன்றைய அறியாமைக் காலத்து அரேபியர் வழக்கு என்பது முல்லாக்களின் விளக்கம்.

ஈலாஉ  என்றால் என்ன?
ஈலாஉ என்றால் ’சத்தியம் செய்வது’ அதாவது ஒரு குறிப்பிட்ட தவணைவரை உடலுறவு கொள்ளமாட்டேன் என மனைவிடம் சத்தியம் செய்வது.

குர்ஆன் 2:226
தமது மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது. அவர்கள் (சத்தியத்தை) திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.




இம்முறைகளெல்லாம் எதற்காக?
மனைவிகளை மிரட்டி அடக்கிவைப்பதற்காக கணவர்களுக்கு குர்ஆன் அனுமதிக்கும் வழிமுறைகள். தலாக்கைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என நீங்கள் நினைப்பது புரிகிறது. எனவே அதைப்பற்றி எனது கருத்துக்களைச் சொல்லுவதற்குமுன் முஹம்மதிய அறிஞர்கள் தரும் விளக்கங்களை கவனிப்போம்!

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி  (இஸ்லாம்கல்வி.காம்)
தலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்துவிடும். அதன் பின் அவர்கள் மீண்டும் சேரவே முடியாது என்ற தப்பான எண்ணம் முஸ்லிம்களில் பலரிடம் உள்ளது. இது தவறான நம்பிக்கையாகும்.

அபூ முஹை (இஸ்லாம்கல்வி.காம்)
இஸ்லாமிய வழக்கில் கணவன் மனைவியை விவாகரத்து செய்வதையே ”தலாக்” என்ற வார்த்தை குறிக்கும். தலாக் என்றால் ‘விடுவித்தல்’ ‘கட்டவிழ்த்து விடுதல்’ என்பது பொருளாகும். தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று சந்தர்ப்பங்கள் – வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தலாக் கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டம்.
…. முதல் இரண்டு தடவைகள் கூறும் தலாக் பற்றி 2:228, 229 ஆகிய வசனங்களில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருபவன் ”உன்னை தலாக் – விவாகரத்து செய்து விட்டேன்” என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும். இதனால் திருமண பந்தம் – ஒப்பந்தம் முற்றாக முறிந்து விடாது. அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.

ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்)
…ஒருவன் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறான். குடும்ப வாழ்வில் பிரச்சனை வந்து இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்போது தன் மனைவியை விவாகரத்து செய்வதற்காக உறுதி எடுத்து விவாகரத்து செய்கிறான். - உன்னை தலாக் விட்டுவிட்டேன் - உன்னை விவாகரத்து செய்து விட்டேன் - என்று எந்த மொழியில் கூறினாலும் உடன் அது விவாகரத்தாகி விடும்.
இப்படி தலாக் விட்டவுடன் திருமண ஒப்பந்தம் முழுவதுமாக முறிந்து விடாது. தலாக் விடப்பட்டப் பெண் இவனுடைய மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை தன் கணவனுக்காக - அவன் தன்னை மீண்டும் அழைத்துக் கொள்வான் - என்ற நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும்..

பீ. ஜைனுல் ஆபிதீன்
…'உன்னை விவாகரத்துச் செய்கிறேன்' என்று மனைவியிடம் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டுவிடும். இதற்கென எவ்விதச்சடங்குகளும் இல்லை. ஆனால் இவ்வாறு விவாகரத்துச் செய்திட மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன…

குர்ஆன் என்ன சொல்கிறது?
குர்ஆன் 2:227
விவாக ரத்துச் செய்வதில் அவர்கள் உறுதியாக இருந்தால் அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
குர்ஆன் 2:228
விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்.

இந்த காத்திருப்பு காலம் எதற்காக?
அபூ முஹை (இஸ்லாம்கல்வி.காம்)
…முதல் இரண்டு தலாக்கின் நோக்கங்கள்:- 1. கணவன் சமாதானம் ஆகிவிடுவான் எனக் காத்திருப்பது. 2. கர்ப்பம் உண்டாகியிருக்கிறாளா என்பதை உறுதி செய்வது…

ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்)
 இத்தாவின் நோக்கங்கள் இரண்டு.
ஒன்று - கணவன் மீண்டும் அழைப்பான் என்று எதிர்பார்த்திருப்பது. இரண்டு - அவள் கர்ப்பம் தரித்திருக்கிறாளா.. என்று நோக்குவது.

குர்ஆன் 2:228
… அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை…
குர்ஆன் 65:1
நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்!..
இந்த விஷயத்தில் குர்ஆனுக்கு கூச்சமெல்லாம் கிடையாது. நெற்றியடிதான்! கர்பப்பைக்கு  சான்றிதழ் தேவை; அதை உறுதி செய்வதற்கேற்ப மணவிலாக்கு செய்யவேண்டும்  அவ்வளவுதான். குர்ஆன் சொல்வதையெல்லாம் அப்படியே திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்க முல்லாக்கள் எதற்கு? ஆங்காங்கே மானே, தேனே, பொன்மானெ என்று போட்டு ’ஜிகினா’ வேலை காண்பிப்பதற்குத்தானே முல்லாக்கள் இருக்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் சிந்தப்பதே இல்லை!

இவ்வாறு முஹம்மதிய கணவர்கள், தங்களது மனைவியர்களை அறிவுரைகூறி(வேறென்ன…? ஏசிப்பேசி)யும், அடித்தும்,  படுக்கையிலிருந்து விலக்கி வைத்தும் (Q 4:34)   இறுதியாக, செத்து செத்து விளையாடலாம் என்பது போல மணவிலக்கு செய்து விளையாடிக் கொண்டிருக்கலாம். இந்த மூன்று தவணைகளிலும் மனைவி-பெண் என்ற உணர்வற்ற உயிரினம், அனைத்தையும் சகித்துக் கொண்டு கண்ணாளன் வருவான் திரும்ப அழைத்துச் செல்வான் எனக் காத்திருக்க வேண்டும். இத்தகைய மணவிலக்குகளுக்கு மூன்று வாய்ப்புகளை குர்ஆன் அனுமதிக்கிறது. இவ்வாறு திரும்ப அழைத்துக் கொள்ளும் மணவிலக்கு முறையை “ரஜயீ தலாக்” என அழைக்கிறார்கள். அவ்வாறு ரஜயீ தலாக்கிலிருந்து கணவனால் திரும்ப அழைக்கப்படும் பொழுது…

ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்)
…மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை தன் கணவனுக்காக - அவன் தன்னை மீண்டும் அழைத்துக் கொள்வான் - என்ற நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். இந்த காலக் கட்டங்களில் கணவன் மனம் திருந்தி மனைவி தனக்கு வேண்டும் என்பதை உணர்ந்து அவளை அழைத்துக் கொள்ள விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம் அதை மறுக்கும் உரிமை மனைவிக்கு இல்லை. இதை நாம் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவது வசனம் சொல்கிறது.
இந்த விளக்கத்தில் நான், தடித்த எழுத்துக்களில் அடிக்கோடிட்ட இடங்களை கவனியுங்கள். இது அப்பட்டமான பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் வாக்கியங்கள். இது முல்லாக்களின் விளக்கம்தானே குர்ஆன் அப்படிச் சொல்கிறதா? என்று மறுதலிக்க முடியும்! எனவே நாம் குர்ஆனைக் கவனிப்போம். அண்ணன் பீஜே அவர்களின் மொழிபெயர்ப்பிலிருந்து,
குர்ஆன் 2:228
…இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அதாவது பெண்களுக்கு கடமைகளும் உரிமைகளும் இருக்கின்றன, இருப்பினும் ஆண், பெண்களைவிட உயர்வான். எனவே அவன் ’தலாக்’ கூறி தள்ளிவைத்தாலும், திரும்ப அழைத்தாலும் அவனுக்கு அடிபணிந்து இருக்க வேண்டும். இதைத்தான் ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்) வழிமொழிகிறார்.

குர்ஆன் அவ்வாறெல்லாம் சொல்லவில்லை: பெண்கள் விரும்பினால் ’குலா’ முறையில் மணவிலக்கு பெறலாம்; இதற்குக் காரணம்கூட சொல்ல வேண்டிய அவசியமில்லையென என் மீது பாயலாம். ’குலா’பற்றி பிறகு சொல்கிறேன்.

இதில், ”இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால்...” என்றுதானே வருகிறது அதாவது கணவன் - மனைவி என்ற இருவர் நல்லிணக்கத்தை விரும்பினால் என்றுதானே பொருள் விளங்க முடியும் இதில் என்ன தவறிருக்கிறது என்று தோன்றலாம். அடுத்துவரும் ”…கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்…”  வாக்கியத்துடன் இணைத்து, சற்று கருத்தூண்றிக் கவனித்தால் மொழிபெயர்ப்பிலுள்ள குழப்பம் புரியும். இதை எளிமையாக்க குர்ஆன் 2:228ற்கு வேறு சில  மொழிபெயர்ப்புகளைப் பார்க்கலாம்.

இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம்
அவர்களின் கணவர்கள் (முன்னிருந்த) உறவைச் சரிப்படுத்திக்கொள்ள விரும்பினால், இத்தவணைக்குள் அவர்களை மீண்டும் மனைவியாக்கிக் கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன; பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல! ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒரு படி உயர்வு உண்டு. இன்னும் அல்லாஹ் (அனைவர்மீதும்) பேராற்றலுடையோனும், நுண்ணறிவுடையோனுமாய் இருக்கின்றான்.

அப்துல் ஹமீது பாகவி
தவிர ("ரஜயி"யான தலாக்குக் கூறப்பட்ட) பெண்களின் கணவர்கள் பின்னும் (சேர்ந்து வாழக்கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள கணவர்கள் மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும் உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர்பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவனும், நுண்ணறிவு உடையவனுமாக இருக்கின்றான்.

டாக்டர் முஹம்மது ஜான்
…ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
அதாவது ”பெண்களின் கணவர்கள்” என்று மொழிபெயர்க்க வேண்டிய இடத்தில், அண்ணன் பீஜே அவர்கள் ”இருவரும்” என்று மொழியாக்கம் செய்திருக்கிறார். உண்மையில் இவ்விடத்தில் குர்ஆன் ”arādū –  விரும்பினால்” எனக் குறிப்பிடுகிறது. யார் விரும்பினால்? இந்த குர் ஆன் வசனம் முழுவதுமே ஆணின் அதிகார வரம்பைப்பற்றிப் பேசுகிறது. மேலும் இவ்வாக்கியத்தின் துவக்கத்தில் குறிப்பிடப்படும் ”wabuʿūlatuhunna- அவர்களின் கணவர்கள்” என்ற பதத்துடன் இணைத்துப் பொருளாக்கம் செய்ய வேண்டும். இதைத்தான் அண்ணன் பிஜே அல்லாத மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்திருக்கின்றனர். ஆனால் அண்ணனுக்கும் மற்றவர்களுக்குமுள்ள வேறுபாட்டை கவனிக்க மறுப்பது சரியல்ல! அவர் குர்ஆனின் ஆசிரியருக்கே அரபி கற்றுக் கொடுப்பவர் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட அவ்வசனத்தில் தொடர்ந்து வருபவை முழுக்க முழுக்க பெண்ணடிமைத்தனத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் வாக்கியங்களாகும். இதைத்தான் நமது ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்) அவர்கள் “…கணவன் மனம் திருந்தி மனைவி தனக்கு வேண்டும் என்பதை உணர்ந்து அவளை அழைத்துக் கொள்ள விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம் அதை மறுக்கும் உரிமை மனைவிக்கு இல்லை…” என விளக்கமளிக்கிறார்.

இதை நமது அண்ணன் பீஜே அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? குர்ஆன்  பெண்ணடிமைத்தைப் போதிக்கிறது எனக் கூறிக் எப்படி வியாபாரம் செய்ய முடியும்? இதைப்பற்றி நீங்கள் மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும். குர்ஆனை முழுவதுமாகத் திருத்தம் செய்ய முடியாது; முரட்டுத்தனமாக கூச்சலிடும் வசனங்களில் ஆங்காங்கே அதன் வீரியத்தை குறைத்து மொழியாக்கம் செய்து வியாபாரத்தை விரைவுபடுத்திட நினைக்கிறார். ஒரு மதவியாபாரி என்ற நிலையிலிருந்து சிந்தித்தால் அவர்களது வருத்தமும், வேதனையும் உங்களுக்குப் புரியும். (உங்களது விசும்பல் சப்தத்தை என்னால் உணர முடிகிறது. உணர்ச்சி வசப்பட வேண்டாம். கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள். என்ன… செய்வது…?) அவரது பிரச்சனை அவருக்கு!

 நாம் 'தலாக்' விவாதத்தைத் தொடர்வோம்.
தொடரும்…




தஜ்ஜால்