பொதுவாக மிக நெருங்கிய
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தவிர மற்றவர்கள் முன்பு எனது முகமூடியை நான் கழற்றுவதில்லை.
இந்த இரட்டைவேடம், என்னை சிலவேளைகளில் தர்மசங்கடமான இடங்களில் நிறுத்திவிடுகிறது. எங்களது
பகுதியிலுல் புதிதாகக் துவங்க இருக்கும் பள்ள்ளிவாசல் நிர்வாகக் குழுவில் பங்கெடுக்க
அழைக்கப்பட்டது என்னைப்பற்றி முழுமையாக அறிந்தவர்களை பெரும் நகைப்பில் ஆழ்த்தியது அதிலொன்று.
அதேபோல சிலவேளைகளில் தவிர்க்க முடியாமல் வழிபாட்டிற்குச் செல்வதும் இருக்கிறது. அப்படியொன்று
கடந்த 25.07.2014-ல் நிகழ்ந்தது. ’லைலத்துல்கத்ர்’ ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவு
என்பது முஹம்மதியர்களின் நம்பிக்கை. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலால்,
அன்று இரவு சுமார் 10 அளவில் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்தேன். குறிப்பிட்ட அந்த
இரவில் வழிபாடு செய்வதால் எனக்கு 1000 மாதங்கள் (சுமார் 83 ஆண்டுகள்) வழிபாடு செய்த
நன்மைகள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை.
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால்
அன்று, அந்தப் பள்ளிவாசலின் மூன்றுதளங்களும் நிரம்பி வழிந்து வெளியே பிதுங்கிக் கொண்டிருந்தது.
அல்லாஹ்(!)வைச் சந்திக்க என்னை அனுப்பி வைத்தவர்களுக்கு வந்த சோதனையோ என்று வேதனை(!)யில்
நின்று கொண்டிருந்தேன். வந்தது வந்துவிட்டோம், விடுவதாக இல்லை; என்னை அனுப்பி வைத்தவர்களின்
ஆவலைப் நிறைவேற்றியே தீருவதென்று பிதுங்கல்களின் இடைவெளியில் உள்ளே நுழைந்து; வளைந்து,
நெளிந்து சென்று, மூன்றாவது தளத்தில் ஒரு இடத்தைப் பிடித்த பொழுது, ’இமாம்’ என்ற மதகுருவைப்
பின்பற்றி கடமையான ’இஷா’ என்ற இரவுநேரத் தொழுகை, கூட்டுத் தொழுகையாக நிறைவடைந்து கொண்டிருந்தது.
வேஷமிடுவதென்று முடிவெடுத்தபின்
கதாபாத்திரத்தை சரிவர செயல்படுத்துவதுதானே சிறப்பு. தனியாக, இமாம்-மின் வழிகாட்டுதலின்றி
குனிந்து நிமிர்தேன். அதாவது குனிந்து நிமிர்ந்து தொழுவதைப் போல பாவனை செய்து முடித்தேன்.
இதைப் போன்ற புறச்செய்கைகளுக்கு அல்லாஹ்விடம் எப்பொழுதுமே கூடுதல் மதிப்பு கிடைக்கும்.கைகளை
எப்படி உயர்த்தி, எங்கு, எப்படி, கட்டவேண்டும். எப்படி குனிந்து நிமிர வேண்டுமென்பதைக்யெல்லாம்
அல்லாஹ் கவனித்து மதிப்பெண் அளிக்கிறானாம்; செய்கைகளை சரிவர நிறைவேற்றவில்லையெனில்
உங்களது வழிபாட்டை அல்லாஹ், கந்தலை எறிவது போன்று உங்ககளது முகத்திலேயே எறிந்துவிடுவான்
என்பதும் அவர்களது நம்பிக்கை. எனவே வழிபாட்டின் பொழுது செய்கைகள் மிக முக்கியமானது
என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இதைப்போன்ற புறச்செய்கைளின்
பொழுது, புரிகிறதோ இல்லையோ அதைப்பற்றிய கவலையெல்லாம் இல்லை ஆனால் கட்டாயமாக உச்சரிப்பு
சுத்தமாக குர்ஆனின் பகுதிகளை முணுமுணுத்துக் கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் மொழி
புரியாமல் தவறாக உச்சரிப்பதால் விளையும் தவறான பொருளை அல்லாஹ் அப்படியே அங்கீகரித்து
விடுவானாம். இஸ்லாமியர்கள் அரபியைப் பிடித்து இப்படித் தொங்கிக் கொண்டிருக்க இதுவே
காரணம்.
உதாரணத்திற்கு ’ஹ(خ)லக்க ஸமாவாத்தி’
என்றால் ’வானத்தைப் படைத்தான்’ என்பது பொருள். ’ஹ(خ)லக்க...’ என்பதிலுள்ள’ஹ’ வை அழுத்தமில்லாமல்
அதாவது ’ஹ’(ح)
என்று உச்சரித்தால், ‘வானத்தை அழித்தான்’ என்று பொருள்வந்துவிடும்.
அல்லாஹ் எரிச்சலடைந்து உங்களது வழிபாட்டை உங்களது முகத்திலேயே அறிந்துவிடுவானாம்.(அல்லாஹ்விற்கு அரபியைத்
தவிர வேறு மொழி தெரியாது?; நாளை(!) சொர்க்கத்தில் பேசப்படும் மொழியாக அரபு மட்டுமே
இரும்ருக்கும் என்பதையும் நீங்கள் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். 72 உருப்படிகளை
அடைய விரும்புபவர்கள் ‘ஸ்போக்கன் அரபி’ வகுப்பிற்குச் செல்வது நலம்! ’இதற்கெல்லாம்’
மொழி ஒரு பொருட்டல்ல என்கிறீர்களா?). இதனால் ஒரு இஸ்லாமியர் அல்லாஹ்விற்காக மனதார
குனிந்து நிமிர்ந்ததற்குப் எந்தப் பலனுமில்லாமல் போய்விடும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
பொருள் புரியவில்லையென்பது இங்கு ஒரு பொருட்டே அல்ல! அரபு... அது..அதுதான் முக்கியம்.
நான் அடுத்த காட்சிக்கு
தயாராகிக் கொண்டிருந்தேன். தொழுகையை முடித்த சிலர் வெளியேற, நெரிசல் குறைந்தது. சிலர்
வெளியே செல்வதும் கை,கால்களை கழுவி ‘உளு’ என்ற சடங்கை நிறைவேற்றியவர்களாக திரும்பவும்
வந்துகொண்டிருந்தனர். அங்குமிங்கும் போவதும் வருவதுமாக இருந்தனர்.அவர்களுக்கு வாயு
பகவானின் கடாட்சம் அதிகமாக இருந்ததுதான் காரணம்.
’உளு’ என்ற சடங்கைப்பற்றி
அறியாதவர்களுக்காக இரண்டு இணைப்புகளைத் கொடுத்திருக்கிறேன்.
முன் பின் துவாரங்களிலிருந்து
ஏதொன்று வெளியானாலும் உங்களது தூய்மை அகன்றுவிடும். மீண்டும் நீங்கள் கை, கால்களைக்
கழுவி தூய்மை செய்து கொள்ள வேண்டுமென்பது முஹம்மதின் போதனைகளில் ஒன்று.
உடலைத் தூய்மையாக வைத்திருக்கச்
சொல்வதில் என்ன தவறு?என்று கேட்கலாம். நியாயம்தான் நான் அதை மறுக்கவில்லை. ஒருவர் என்னதான்
தேய்த்துக் குளித்திருந்தாலும் முஹம்மது போதித்த
‘உளு’ என்ற கை, கால்களைக் கழுவும் சடங்கை நிறைவேற்றாமல் தொழுகைக்குச் செல்ல
முடியாது எனும் பொழுது தூய்மை எனற வாதம் செயலிழந்து, சடங்கு முன்னிலை பெற்று, குளிப்பது
இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படுகிறது.
உதாரணத்திற்கு ஒருவர்,
தேய்த்துக் கழுவவேண்டிய இடங்கள் உட்பட அனைத்தையும் நன்றாக தேய்த்துக் குளித்து, புத்தாடை,
வாசனை திரவியங்கள் என்ற மணக்க மணக்க அல்லாஹ்வை வணங்கச் செல்கிறார். அவரது வயிற்றில்
ஏற்பட்ட உயர் காற்றழுத்த நிலை, வழுவிழந்து, பின்புறத்தில் ’தென்றாலாக’ வெளியேறுகிறதென்று
வைத்துக் கொள்வோம். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி அந்த நபர் அல்லாஹ்வை வணங்குவதற்குத்
தேவையான தூய்மையை இழந்து ’உளு’ என்ற சடங்கை நிறைவேற்ற வேண்டியவராகிறார். இப்பொழுது
சந்தர்ப்பவசமாக ‘உளு’ச் செய்வதற்குரிய தண்ணீர் கிடைக்கவில்லையெனில் ‘தயம்மும்’
எனப்படும் மண் அல்லது புழுதியில் செய்யப்படும் சடங்கை நிறைவேற்ற வேண்டும். அதாவது,
அவர் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டதற்கு மாறாக புழுதியை உடலில் தேய்த்துக் கொள்ளவேண்டும்.
இதை சடங்குகளின் மீது கொண்டிருக்கும் வெறித்தனமான பற்றீடு என்று சொல்லலாம். இஸ்லாமில்
சடங்குகள் சம்பிரதாயங்கள் எதுவுமில்லை என்பார்கள்; அதையும் நீங்கள் எதிர்க் கேள்வியின்றி
நம்பவேண்டும்.
சரி..!
இஸ்லாமியர்களின் தர்க்கப்படி
நோக்கினால், காற்றைப் பிரித்தால் கைகால்களை எதற்காக கழுவ வேண்டும்? நியாயமாக... கழுவியிருக்க
வேண்டிய இடம் வேறல்லவா?
இவ்வாறு தர்க்க ரீதியான
கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தால் உங்களது தலை ‘கத்னா’ செய்யப்படும் என்பதை நினைவில்
கொள்க. அல்லாஹ்வைப் பொறுத்தவரையில் ஏன் எதற்கு என்று கேள்விகள் கேட்காமல் இஸ்லாமிலேயே
இருக்க வேண்டும்; வெளியேறிடலாம் என்ற எண்ணமே கூட இருக்கக் கூடாது.
நாம் நோன்பிற்குத்
திரும்புவோம்,
நோன்பு என்றால் சாப்பிடாமல்
தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினியாக இருந்து சாவது என்ற எண்ணமிருந்தால் மாற்றிக் கொள்ள
வேண்டுகிறேன். ரமளான் நோன்பு துவங்குகிறது என்றாலே இஸ்லாமிய குடும்பத் தலைவர்களின்பாடு
திண்டாட்டம்தான். வழக்கமாக ஆகும் குடும்பச் செலவுகளைவிட இருமடங்கு ரமளான் மாதத்தில்
ஆகிறது என்பது மாற்று நம்பிக்கையிலிருப்பவர்கள் அறியாதது. நோன்பு இருக்கிறோம் பேர்வழியென்று,
ஊர்வன, பறப்பன, நடப்பன, நீந்துவனவற்றுடன், கிழங்கு, பருப்பு வகைகளை, வறுத்தும் பொரித்தும்,
வேகவைத்துமாக வயிற்றிற்குள் திணிக்கின்றனர்.
விளைவு?
ஒவ்வொருவரும் மனித
’வெடிகுண்டு’களாக மாறிவிடுகின்றனர். சிலவேளைகளில் ஏப்பம் விடுகிறார்களா... அல்லது
‘பாம்’ போடுகிறார்களா... என்பதே புரிவதில்லை! அதுவும் குனிந்து நிமிர்ந்து வழிபாடு
செய்யும் பொழுது ’வெடிகுண்டு’த் தாக்குதல் தாரளாமயமாகிவிடுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள்
’ஸைலண்ட் பாம்’ உற்பத்தி செய்வதுதான் கொடுமை. ‘நிசப்த பிராண சங்கட’மாம். எவர் இந்த
வேலையைச் செய்தது என்பதை கண்டுபிடிக்க அல்லாஹ்வால்கூட முடியாது. அத்தனை திறமையாக தங்களது
வேடத்தை கையாள்கின்றனர். மாசுக்கட்டுப்பாடு அதிகாரிகள் பள்ளிவாசல்களையும் சற்று கவனிக்க
ஆவன செய்யவேண்டும்!
என்னவோ... முஸ்லீம்கள்
மட்டும்தான் ‘பாம்’ போடுவதைப் போன்று எழுதியிருக்கிறீர்களே, மற்றவர்களிடமிருந்து ஜவ்வாதும்
கஸ்தூரியுமா வெளியாகிறது? என்று இஸ்லாமியர்கள் என்னை நோக்கி இப்படிக் கேட்பார்கள்.
நான் இல்லையென்று மறுக்கப்போவதில்லை. எனக்குத் தெரிந்தவரையில், அல்லாஹ் என்ற கடவுளைத்
தவிர மற்ற கடவுளர்கள் மனிதனது தனிப்பட்ட செயல்பாடுகளில் மூக்கை நுழைப்பதாகத் தெரியவில்லை.
உடலின் எந்தெந்த இடத்தில் எத்தனை நீளத்திற்கு முடிகளை வளர்க்கவேண்டும், எதை எப்படி,
எத்தனைமுறைக் கழுவவேண்டுமென்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பது அல்லாஹ் மட்டுமே.
ஒருவழியாக தராவீஹ்
என்ற நீண்ட நேரவழிபாடு துங்கியது. சிறிது நேரத்தில் நெரிசல் வெகுவாகக் குறையத் துவங்கியது.
வழிபாடு என்பது அவ்வளவுதானா?
அவர்களது செய்கைகள்,
வேடதாரியான என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. இந்தக் குட்டையில்தானே இத்தனை வருடங்களாக
ஊறிக் கொண்டிருக்கிறேன் இவர்களின் செய்கைகளை நான் அறியாததில்லை. வழிபாடு, மூன்றில்
ஒரு பகுதி நிறைவேறியிருந்த பொழுது அதுவரை இருந்த பொறுமை என்னைவிட்டு விலக, வசதியாக
ஒரு இடத்தை தேர்வு செய்து சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில்,
யாரோ என்னைத் தூக்குவது
போலத் தோன்றியது; விழிக்க முயன்றேன். இமைகள் ஒட்டிக் கொண்டது. மிதப்பதைப் போன்றதொரு
உணர்வு……
தொடரும்...
தஜ்ஜால்











