இத்தகைய ஜின்களில் சிலவற்றையும் லாத், மனாத், உஸ்ஸா போன்ற வேறு சிலவற்றையும் சிலைகளாக
வைத்து, கடவுள்களாக, கடவுள்களின் இடைத்தரகர்களாக வழிபடும் வழக்கம் அன்றைய அரேபியர்களிடையே
இருந்தது. ஒரு ஓரத்தில் அல்லாஹ்விற்கும் இடம் கொடுத்தனர்; அத்துடன் ஜின்களுக்கும் அல்லாஹ்விற்குமிடையில்
வம்சாவளி உறவை (குர்ஆன் 37:158) ஏற்படுத்திவிட்டனர்.
தேவைகளை கோரி சிலைகளுக்கும், ஜின்களுக்கும் வழிபாடு செய்தனர். அவைகள் தங்களது தேவைகளை
நிறைவேற்றுவதாக நம்பினர். அல்லாஹ்வால் மட்டுமே
நிறைவேற்ற முடியுமென்பதாக முஹம்மது நம்பினார்.
ஷிர்க் – இணைவைத்தல் என்றால் என்ன?
அல்லாஹ் இணையாக எந்த ஒன்றையும்
இணையாகக் கருதுவது. குறிப்பிட்ட அல்லது ஒட்டுமொத்த ஆற்றல், பண்பு, மணம், குணம், நிறம்,
திடம், வலிமை இப்படி இன்னும் எதையாவதை அல்லாஹ்விற்கு இணையாக இன்னொன்றிலும் இருப்பதாகக் காண்பது அல்லது நம்புவது.
தூதர் முஹம்மதின் பாட்டனார் அப்துல் முத்தலிப்பிற்கு ஹாரித் என்ற ஒரு மகனைத் தவிர,
நீண்டகாலமாக வேறு குழந்தைகள் இல்லாமல் இருந்ததாகவும், தனக்கு பத்து மகன்கள் பிறந்து,
அவர்கள் வாலிப வயதை அடைந்தால், அவர்களில் ஒருவரை தங்களது கடவுளான ஹபலுக்கு பலியிடுவதாக
வேண்டிக்கொண்டதாகவும், அதே போல பத்து மகன்கள் பிறந்து வாலிப வயதையும் அடைந்ததாகவும்,
அவர்களில் அப்துல்லாவைப் பலியிட வேண்டிய சூழலில் ஹபலிடம் பேரம் பேசிக் காப்பாற்றியதாக இஸ்லாமிய வரலாறு கூறுகின்றது. அல்லாஹ்வின் பார்வையில்
இது தெளிவானதொரு ஷிர்க்!
ஸிஹ்ர்-பில்லி சூனியம் என்றால் என்ன?
அனைத்து நம்பிக்கைகளிலும் கடவுளுக்கு எதிராக ஒரு ’வில்லன்’ கதாபாத்திரம் இருக்கும்;
இதற்கு இஸ்லாமும் விதிவிலக்கு அல்ல! என்று கடந்த பதிவில் கூறியது நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
இத்தகைய வில்லன் காதபாத்திரங்களின் உதவியுடன் பிறகுக்கு தீமை செய்யும் முறை ஸிஹ்ர்.
நமது ஊர்வழக்கில் சொல்வதென்றால் துர்தேவதைகளுக்கும், தீய சக்திகளுக்கும்வழிபாடு செய்து
தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல் என்று சொல்லலாம். எண்ணிலடங்கா உண்மைச்(!) சம்பவங்களும்,
கதைகளும், திரைக் கதைகளும் இதைப்பற்றி சொல்கின்றன. உலகின் அரதப் பழசான ஒரு நம்பிக்கைகளில்
ஒன்றான சூனியத்திற்கு உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இதுதான் விளக்கம். இந்நம்பிக்கை
உலகின் பெரும்பால பகுதிகளில் இன்றும் இருக்கிறது. பாகன் அரேபியர்களுக்குத் தெரிந்த
தீய சக்தி ஜின்கள்; அவர்கள் அவற்றை வணங்கி தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.
நல்லதோ கெட்டதோ தங்களது கோரிக்கைகளை தங்களது கடவுள்களும் ஜின்களும் நிறைவேற்றுவதாக
உறுதியாக நம்பினர்; அதில் தொடர்ந்து நிலைக்கவும் செய்தனர். சுமார் 360ற்கும் மேற்பட்ட
கடவுளர் சிலைகள் கஅபாவில் இருந்தாக ஹதீஸ்கள் கூறுகின்றன. இவ்வாறு செய்வதை அல்லாஹ்வினால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை. தனக்கு இணையாக ஹுபலைக் கொண்டுவருவதும் மலக்குகள், ஜின்களைக்
கொண்டுவருவதும் அவைகளுக்கு ஆற்றல் இருப்பதாகக் கூறி வழிபடுதலையும் ’ஷிர்க்-இணைவைத்தல்’
என்கிறான்.
குர்ஆன் 6:100
ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும்
போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும்
அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர்…
குர்ஆனில் மிக அதிகமாக விவாதிக்கப்படும்
விஷயம் வணக்குத்திற்கு தகுதியான கடவுள் யார் என்பதுதான். பிற நம்பிக்கைகளில் கடவுளாகக்
கருத்தப்பட்ட இயேசு, லாத், மனாத், உஸ்ஸா, ஜின்கள், மலக்குகள் போன்றவற்றை அது மறுக்கவில்லை. அவைகள் அல்லாஹ்வின்
அடிமைகள் என்பதாக கூறிக் கொள்கிறது. எனவே ஏகத்துவம் என்பது குர்ஆனின் அடிப்படை வாதமல்ல!
வணக்கத்திற்குரியவன் யாரென்பதுதான் அதன் மிகப்பெரும் கவலை! “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்
தவிரவேறுயாருமில்லை” என்று துவங்கும் கலீமாவே இதற்கு சாட்சி!
வணக்கத்திற்குத் தகுதியுடைய கடவுளான தன்னைப்பற்றி அல்லாஹ் கூறுவது:
அத்தியாயம் 112
"அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
அவனுக்கு நிகராக யாருமில்லை.
அல்லாஹ்வை ஒன்று இரண்டு என்று எண்ணிக்கையால் காணமுடியுமென்றால், அவன், நீளம் அகலம்,
உயரம், எடை போன்ற எல்லைகளுக்குள் அடங்கக் கூடிய உருவமாகவோ அல்லது பொருளாகவோ ஆகிவிடுகிறான்.
நபர் அல்லது மிருகம் அல்லது பொருள் இவற்றைத்தான் ஒன்று இரண்டு என எண்ண முடியும். அதாவது
திட்டமான உருவ அமைப்பைக் கொண்டவற்றை எண்ணிக்கையில் அடக்கலாம்! அவன் எல்லைகளுக்குள்
அடங்கிவிடுகிறான் என்றால், அவன் தற்பொழுது இருக்கும் இடத்திற்குள் எப்படி வந்தான் என்ற
கேள்விவரும். இதைப்பற்றி முஃமின்கள் சிந்திக்கட்டும்!
இந்த 112-ம் அத்தியாயத்தை ’இஃக்லாஸ்- உளத்தூய்மை’ என்பார்கள். குர்ஆனில் மிகச்
சிறப்பு வாய்ந்த அத்தியாயம் என்பது முஸ்லீம்களின் ஐதீகம். முல்லாக்கள் இந்த அத்தியாயத்திற்கு
கொடுக்கும் ‘பில்ட்அப்’கள் இருக்கிறதே நினைத்தாலே தலை சுற்றுகிறது. இதை தினமும் குறைந்தபட்சம்
ஒருமுறைகூட ஓதாமல் ஒரு முஃமினால் இருக்க முடியாது.
உண்மை என்னவெனில், இது கிறிஸ்தர்களுக்குக் கூறப்பட்ட பதில். கடவுள் மூன்றல்ல ஒன்று!
அவனுக்கு மகன் வேண்டுமென்ற தேவையில்லை. அவன் யாரையும் பெற்றெடுக்கவில்லை. இயேசுவைப்
போல யாருக்கும் பிறக்கவில்லை இவ்வளவுதான் இந்த அத்தியாத்தின் பொருள்!
இப்படித் தன்னைப் பற்றி சுயபிரகடனம்
செய்து கொள்வதால், அதற்கு மாற்றமாகத் தனக்கு இணைவைப்பவர்களைக் கண்டால் அல்லாஹ் அடையும்
ஆத்திரமும், கோபமும் அளவிட முடியாதது; அவர்கள் ஒருபொழுது மன்னிக்கப்பட மாட்டார்கள்;
அவர்கள் என்றென்றும், காலாகாலத்திற்கும் நரக நெருப்பில் சுட்டுப் பொசுக்கப்படுவார்கள்;
கரிந்து போன பாகங்கள் மாற்றப்பட்டு மீண்டும் மீண்டும் நரக நெருப்பில் வறுத்து வறுத்துக்
கரிக்கப்படுவார்கள். ஒரு நாளும் அதிலிருந்து அவர்கள் மீளமுடியாதென்பது அல்லாஹ்வின்
ஆணை!.
அதே வேளையில், ஒருவர் அல்லாஹ்விற்கு
இணைகற்பிக்காமல், போதை, கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, விபச்சாரம், நயவஞ்சகம்,
நம்பிக்கைத் துரோகம், அநியாயம், அக்கிரமம் என வெறிபிடித்த மிருகமாகத் திரிந்தாலும்
அவன் மன்னித்துவிடுவான். ஆனால் அவனுக்கு இணைவைத்துவிட்டால் ஒருவர் என்னதான் நல்லவனாக,
ஒழுக்கக்கமானவனாக, மனிதாபிமானமிக்கவனாக புனித ஆத்மாவாக(!) பூமியில் இருந்தும் பயனில்லை,
அவருக்கு என்றென்றும் மீளமுடியாத நரகதண்டனை அல்லாஹ்விடம் தயாராக இருக்கிறது.
இவ்வாறு வேறு கடவுள்களை வணங்கியும்,
அல்லாஹ்விற்கு இணைவைத்தும், மனிதர்களில் பெரும்பாண்மையினர் வழிதவறிப் போனதற்குக் காரணம்
யார்?
வேறு யாருமல்ல இப்லீஸ்தான்! ஆதமிலிருந்து தொடங்கியது என்பதைக் கடந்த பதிவில் கவனித்தோம்.
முஸ்லீம்
5418
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இப்லீஸின் சிம்மாசனம் கடலின் மீது அமைந்துள்ளது. அவன் (அங்கிருந்தே) தன் படைகளை
அனுப்பி, மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறான். மக்களிடையே பெருங் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற
(ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் மரியாதைக்குரியவன் ஆவான்.
அல்லாஹ்வின் சிம்மாசனமும் தண்ணீரின்
மீதுதான் இருந்ததாக ஹதீஸ்கள் கூறுகிறது. சரி…
இப்லீஸ் தனது படைகளை அனுப்பி, குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன் அல்லாஹ் அதைத்தடுத்து
மக்களைக் காப்பற்றியிருக்கலாமே? என்று உங்களுக்குத் தோன்றலாம். உண்மை என்னவெனில் இப்லீஸை
முடுக்கிவிடுவதே அல்லாஹ்தான்!
குர்ஆன் 17:64
உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழி கெடுத்துக் கொள்! உனது குதிரைப்
படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும்
அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும்
இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
அடப்பாவிகளா…. இப்லீஸிற்கு
காலட்படைகளும், குதிரைப்படைகளும் வேறு இருக்கிறதா?
எனக்குத் தெரிந்தவரையில் குதிரைப்படையை
வைத்துக் கொண்டு இன்று எந்த ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது. ஜின் இனத்தில் குதிரைகள்
இருப்பதாக நான் படித்ததில்லை. அல்லாஹ் கூறும் இப்லீஸின் குதிரைப்படை எப்படி இருக்கும்?
ஒருவேளை இறந்து போன குதிரைகளின் ஆவிகளை(!) அல்லாஹ்,
இப்லீஸிற்கு வழங்கியிப்பானோ? முஹம்மதின் காலத்தில் குதிரைப்படை என்பது தவறில்லை. இது
செயற்கைக் கோள் யுகம்! இவர்களுக்கு குதிரைகளையும்
கழுதைகளையும் விட்டு வெளியில் வரும் சிந்தனையே இல்லை போலிருக்கிறது! குர்ஆனில் அதிநவீன அறிவியல் இருக்கிறது, ஆட்டுக்குட்டி
இருக்கிறது, எக்காலத்திற்கு பொருந்தக்கூடியதே என்று இவர்கள் வீதிக்கு வீதி தெருவிற்குத்
தெரு வந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பதால் சொல்கிறேன்.
அதற்காக அல்லாஹ்வின் பணி, இப்லீஸை முடுக்கிவிடுவதோடு
முடிந்துவிடுவதில்லை; அவனுக்குத் தேவையான உதவிகளையும் அதாவது ஜின் – ஷைத்தான்கள்
நம்மை வழிகெடுப்பதற்காக அவர்களை நமக்கு நண்பர்களாக இணைத்து விடுகிறான்.
குர்ஆன் 7:27
…நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக்
கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி
விட்டோம்.
அல்லாஹ், இப்லீஸிடம், உனது
குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் ஏவிக் கொள் என அனுமதி கொடுத்து, ஷைத்தான்களை நமக்கு நண்பர்களாக்கி நம்மீது
முடுக்கிவிடுவது, ரேஷன் கடைகளில் நமக்கு பச்சரிசியையும், பாம்ஆயிலும் வாங்கித் தருவதற்கோ
அல்லது அம்மா வழங்கும் விலையில்ல பெருட்களை முந்தின இரவே வரிசையில் நின்று பெற்றுத்
தருவதற்காகவோ அல்ல! நம்மை வழிகெடுப்பதற்காகத்தான்!
வழிகெடுப்பது என்றால் என்ன?
அல்லாஹ்வை ஐந்து வேளையும் வணங்காமல்,
கண்மணி முஹம்மதுவை புகழாமல் இருப்பது. அரபி
படிக்காமல், குர்ஆன் ஹதீஸ்களை ஓதாமல், அறிவியல், ஆங்கிலப் புத்தங்களைப் படிப்பது, பகுத்தறிவை
வளர்த்துக் கொண்டு கேள்வி கேட்பது, தாடி வளர்க்காமல் இருப்பது, மீசையை கத்தரிக்காமல்
இருப்பது, இசையில் மூழ்கி இருப்பது, ஓவியம், சிற்பம் செய்வது, திரைப்படம், தொலைக்காட்சியைக்
கண்டு கொண்டிருப்பது, கால்சட்டையை கணுக்காலுக்குக் கீழே அணிவது, பைஜாமா ஜுப்பா அணியாமல்
நாகரீகமாக ஆடை அணிவது, முஹம்மது கற்றுக் கொடுத்துள்ள செயல்முறைகளைப் பின்பற்றாமலிருப்பது,
மது அருந்துவது, விபச்சாரம் செய்வது இப்படி நிறைய இருக்கிறது.
குர்ஆன் 4:120
அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு
ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.
இப்லீஸையும் அவனது வாரிசுகளையும்
அல்லாஹ் படைத்திருப்பதே காஃபிர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாறுவதற்காகத்தான்.
அதென்ன பொய்யான வாக்குறுதிகள்?
நம்மை வழிகெடுப்பது, சொர்க்கம்
வாங்கித் தருவதற்குப் பதிலாக நரகம் பெற்றுத் தருவது. அதுதான் அல்லாஹ் இப்லீஸிற்குக்
கொடுத்திருக்கும் கட்டளை! அவனால் அதுதானே முடியும்? பிறகு அதைச் செய்யாமல் வேறெதனை
இப்லீஸ் செய்வான்?
குர்ஆன் 41:25
இவர்களுக்குத் தோழர்களை(quranāa) நியமித்துள்ளோம். இவர்களுக்கு முன்னேயும், பின்னேயும்
உள்ளதை அவர்கள் அழகாக்கிக் காட்டுகின்றனர். எனவே இவர்களுக்கு முன் சென்று விட்ட ஜின்கள்
மற்றும் மனிதர்களில் உள்ள (தீய) கூட்டங்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் கட்டளை
உறுதியாகிவிட்டது. இவர்கள் இழப்பை அடைந்தோராகி விட்டனர்.
அல்லாஹ் அனுமதி கொடுத்திருந்தாலும்,
ஒருவர் இணைவைப்பாளாராக வழிதவறிப் போவதற்கு இப்லீஸும் ஒரு காரணம்தானே?
நீங்கள் அப்படி நினைத்தால்
அதுவும் இணைவைப்பாகிவிடும்; இப்லீஸுக்கு ஆற்றல் உள்ளது என்று பொருள்படும். இதை எப்படி
அல்லாஹ்வால் பொறுத்துக் கொள்ள முடியும்? (முன்னேயும்
போக முடியாது பின்னேயும் முடியாது! கழுதை மாதிரி!)
குர்ஆன் 6:107
அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை கற்பித்திருக்க மாட்டார்கள். ..
சரி… அல்லாஹ்வின் நாட்டமில்லை
அதனால்தான் ஒருவர் இணைகற்பிக்கக் கூடியவராக ஆகிவிட்டார். நாளை மறுமைவிசாரணையில் இதைக் கூறி சமாளித்துக் கொள்ளலாம்
என்று நினைக்கிறீர்களா? அதுதான் இங்கு நடக்காது! உங்கள் சமாளிப்புகளை வேறெங்காவது வைத்துக்
கொள்ளுங்கள்!
குர்ஆன் 6:148
"அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்கள் முன்னோர்களும் இணை கற்பித்திருக்க
மாட்டோம். எதையும் தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்'' என்று இணை கற்பிப்போர்
கூறுகின்றனர். இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். முடிவில் நமது
வேதனையை அனுபவித்தார்கள். "உங்களிடம் (இது பற்றிய) விபரம் உண்டா? (இருந்தால்)
அதை எங்களுக்குக் காட்டுங்கள்! ஊகத்தையே பின்பற்றுகிறீர்கள்! நீங்கள் அனுமானம் செய்வோர்
தவிர வேறில்லை'' என்று கேட்பீராக!
என்ன … ஙே… வென்று விழிக்கிறீர்கள்?
எங்கேயும் போகமுடியாது! குர்ஆன் தெளிவான புத்தகமாக்கும் உங்கள் ஏமாற்றுவேலை இங்கு பலிக்காது!
(யாருகிட்ட…!)
குர்ஆனின் கருத்துக்கள் எப்படி
இருந்தாலும், ஷைத்தானில் தூண்டுதல்களிலிருந்து தப்பிப் பிழைத்து, நல்லதைத் தேர்ந்தெடுக்கும்
உரிமை மனிதனுக்கு வழங்கப்பட்டிருப்பதாக முல்லாக்கள் ஒப்பாரி வைப்பார்கள்! அதே வேளையில் அல்லாஹ்வின் விதிப்படிதான் ஒவ்வொன்றும்
நிகழ்கிறதென்றும் முணுமுணுத்துக் கொள்வார்கள்!
அல்லாஹ்வின் திட்டத்தை ஷைத்தானால்
தடுக்க முடியுமா? நிச்சயமாக முடியாது! அல்லாஹ்வின் விருப்பதிற்கு மாற்றமாக ஷைத்தானால்
செயல் பட முடியுமா? மனிதர்களை நரகில் தள்ளுவதற்குப் பதிலாக எல்லோரையும் நல்வழிப்படுத்தி
சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்க முடியுமா? முடியாது! இத்தனை தூதர்களையும் வேதங்களையும்
அனுப்புவதற்குப் பதிலாக ஒரேஒரு ஷைத்தானின் மனதை மாற்றியிருந்தால் போதுமே? எதற்காக கொக்கு
தலையில் வெண்ணெயை வைக்க வேண்டும்? அல்லாஹ்வால் முடியாதா? அல்லது செய்வதற்கு விருப்பமில்லையா?
அவ்வாறல்ல எல்லாம் அல்லாஹ்வின்
திட்டம்! மனிதர்கள் பூமியில் பலுகிப் பெருகவேண்டும், அவர்களிடையே தூதர்களையும் வேதங்களையும்
தொடந்து அனுப்ப வேண்டுமென்பதும் இறுதியில் தூதர் முஹம்மதுவின் மூலமாக குர்ஆன் வெளிடப்படவேண்டுமென்பது
அல்லாஹ்வின் திட்டம்!
எப்படி?
இஸ்லாமிய நம்பிக்கைப்படி, பாகன்
அரேபியர்களில் ஒருவராக மாற்று நம்பிக்கையில் இருந்த முஹம்மது அல்லாஹ்வின் தூதரானது
எவ்வாறு? அவரது திறமைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமா? அல்லது முஹம்மதின் தேர்வா? நிச்சயமாக இரண்டுமே இல்லை!
முஹம்மது தூதராக, மனிதரில்
புனிதராக சிறந்த முன்மாதிரியாக தேர்ந்தெடுப்படுவதை அல்லாஹ் முன்பே அறிவான்! அது அவனது
தீர்மானம்! தற்செயலான நிகழ்வல்ல! சரி அல்லாஹ்வின் தேர்வை முஹம்மதால் நிராகரிக்க முடியுமா?
அதாவது எனக்கு அல்லாஹ்வின் தூதராக இருக்க விருப்பமில்லையென்று அவரால் நிராகரிக்க முடியுமா? அல்லது தனது தூதுப் பணியை சரிவர நிறைவேற்றாமல் அமைதியாகத்தான்
அமர்ந்திருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது! அல்லது ஷைத்தானால், முஹம்மதை வழிகெடுக்கப்பட்டு அல்லாஹ்வின்
திட்டத்தை சிதைக்க முடியுமா? ஒருக்காலும் முடியாது! அல்லாஹ் நாடியது நடந்தே தீரும்!
முஹம்மது, வழிப்பறி கொள்ளைகள்
செய்தார்; பனுகுறைளாவில் யூதர்களை கொன்று குவித்தார்; இன்னும் பலரது மரணத்திற்குக்
காரணமாக இருந்தார். அது அல்லாஹ்வின் திட்டம் அதை முஹம்மது மறுக்க முடியாது! ஏனெனில்
அவன் திட்டமிட்டபடி ஒவ்வொன்றும் நிறைவேறியே ஆகவேண்டும்! திட்டமிட்டதை சரிவர முடிக்கவில்லையெனில்
அவன் கடவுள் இல்லை என்று பொருள்படும்.
அதே போல ஹிட்லர் சர்வாதிகாரியானது
அவரது தேர்வா? அல்லது ஷைத்தானின் தூண்டுதலா? நிச்சயமாக இரண்டுமே இல்லை! ஹிட்லரது செயல்பாடுகள் அனைத்தும் முன்பே அல்லாஹ்வால்
தீர்மானிக்கப்பட்டது! சுமார் 60 லட்சம் யூதர்கள் ஹிட்லர் தலைமையில் கொல்லப்பட வேண்டும் பெரும்
போர்கள் நிகழ வேண்டுமென்பது அல்லாஹ்வின் முடிவு! அதை மறுக்க ஹிட்லரால் முடியாது. உயிர்களைக்
கொல்வது பாவமென்று அவரால் ஜீவகாருண்யம் பேசிக் கொண்டிருக்க முடியாது! அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றுவதைத் தவிர வேறு எதையும் ஹிட்லரால் செய்ய முடியாது!
சரி… மனிதர்களை வழிகெடுப்பதற்காக
இருக்கும் ஷைத்தான் இன்னும் அதிகமாக ஹிட்லரைத் தூண்டிவிட்டு மேலும் மேலும் இனப்படுகொலைகள்
செய்ய வைக்க முடியுமா என்றால் அதுவும் முடியாது!
அல்லாஹ் நிர்ணயித்த எண்ணிக்கைக்கு அதிகமாகவும் கொல்ல முடியாது குறைவாகவும் கொல்ல
முடியாது! அல்லாஹ்வின் திட்டத்தை மீறி ஒரு
துளி இரத்தத்தைக்கூட அவனால் சிந்த வைக்க முடியாது! ஏனெனில் அல்லாஹ் துள்ளியமாகக் கணக்கிடக்
கூடியவன்! சாதாரண மொழியில் கூறினால் ஷைத்தான் என்பது ”டம்மிபீஸ்”
சரி..! முஹம்மதுவின் தலைமையில் எங்களுக்கு இறக்க விருப்பமில்லை நாங்கள் ஹிட்லரின் தலைமையில் இறந்து கொள்கிறோம் என்று அந்த அப்பாவி யூதர்களாவது தங்களது மரணத்தைத் தேர்தெடுத்துக் கொள்ள முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது! காரணம் எந்த யூதனின் உயிர், எப்பொது, யாரால் எப்படிப் போக்கப்பட வேண்டுன்பதும் அல்லாஹ்வின் விருப்பத்தின்படியே அமைகிறது! வாளால் தலை துண்டிக்கப்பட்டு இறக்க வேண்டி யூதன், துப்பாக்கி குண்டுகளுக்கோ, விஷவாயுவினாலோ அல்லது உணவின்றி பட்டினியால் உயிரைவிட முடியாது! இங்கு முஹம்மதுவும் ஹிட்லரும் வெறும் கருவிகளே!
சொர்க்கவாசியாவதும் நரகவாசியாவதும்
அல்லாஹ்வின் தீர்மானத்தைப் பொறுத்தே அமைகிறது.
எத்தனை காலத்திற்கு முன்பு இத்தீர்மானங்களை
நிறைவேற்றினான்?
நீங்கள் எந்த காலத்தைக் கூறினாலும்,
அதற்கு முன்பு அவனுக்கு இந்தத் தீர்மானத்தை எடுக்கவில்லையா அல்லது தெரியாதா? என்ற கேள்வி வரும்! இதிலிருந்து தப்பிக்க
வேண்டுமெனில் படைப்பின் துவத்திற்கும் அல்லது அதற்கு முன்பு என்று சென்றுகொண்டே இருக்க
வேண்டும்!
முஸ்லீம்கள் மட்டுமல்ல பொதுவாகவே நம்பிக்கையாளர்கள் தரப்பிலிருந்து எங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.
முஸ்லீம்கள் மட்டுமல்ல பொதுவாகவே நம்பிக்கையாளர்கள் தரப்பிலிருந்து எங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.
அதென்ன குற்றச்சாட்டு?
குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும்
குதர்க்கமான வியாக்கியானங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் அது!
மேற்கூறிய குர்ஆன் வசனங்களில்
காணப்படும் முரண்பாடுகளுக்கு இதுவல்ல பொருள் என்று நீங்கள் நினைக்கலாம். நான் கூறினால்
நம்பமாட்டீர்கள் எனவே த.த.ஜ தரப்பிலிருந்து வைக்கப்பட்ட விளக்கத்தை இங்கு தருகிறேன்.
குர்ஆன் 38:41, 42
நமது அடியார் அய்யூபை நினைவூட்டுவீராக! "ஷைத்தான் வேதனையாலும், துன்புறுத்தலாலும்
என்னைத் தீண்டி விட்டான்'' என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது, "உமது
காலால் மிதிப்பீராக! இதோ குளிர்ந்த குளிக்குமிடம்! பானம்!'' (எனக் கூறினோம்).
அய்யூப் என்றொரு நபி இருந்தார்,
அவர் உடல் முழுவதுமே நோயால் பாதிக்கப்பட்டு புழுக்கள் நெளிந்து கொண்டிருக்குமாம். அந்நிலையிலும் போது அவர் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தாராம்.
அல்லாஹ்வின் மீது அவர் கொண்டிருந்த பயபக்திக்கு இதை உதாரணமாகக் கூறுவது இஸ்லாமிய மரபு.
அவர் தன்னை ஷைத்தான் தீண்டி துன்புறுத்தியதாகக் கூறினார் என்று குர்ஆன் சொல்கிறது.
அல்லாஹ்வின் தூதரையே ஷைத்தான்
துன்புறுத்தி, வேதனை செய்துவிட்டான். இது ஷைத்தான் மனிதர்ளைத் தீண்ட முடியும் என்பதற்கு
ஆதாரமாக உள்ளது என்ற எதிர்தரப்பின் வாதத்திற்கு,
“ஜின்களும்
ஷைத்தான்களும்” என்ற புத்தகத்திலிருந்து…
அய்யூப் நபியவர்களுக்கு நோயும் துன்பமும்
ஏற்பட்ட போது இவ்வாறு செய்துவிட்டானே எனக் கூறினார்கள். (திருக்குர்ஆன் 38:11) இதனால்
நோயையும் துன்பத்தையும் ஏற்படுத்தும் அதிகாரம் ஷைத்தானுக்கு உள்ளது என்று கருதக் கூடாது.
நோயை ஏற்படுத்துவது அல்லாஹ்விற்கு
மட்டும் உரிய ஆற்றலாக இருந்தாலும் வெறுக்கத்தக்க விஷயங்களை அல்லாஹ்வுடன் சேர்க்கக்கூடாது
என்ற மரியாதை நிமித்தமாகவே நோயை ஷைத்தான் ஏற்படுத்தியதாக அய்யூப்(அலை) அவர்கள் கூறினார்கள்.
இன்றைய நவீன காலத்து,
Hi-tech முல்லாக்களே இவ்வளவு தெளிவாக உளறும் பொழுது, வளர்ச்சியுறாத, நாகரீகமற்ற காலத்தைச்
சேர்ந்த முஹம்மது எவ்வளவு உளறியிருப்பார் என்பதை நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க
வேண்டும்.
என்னதான் நாகரீகமற்ற(!) சமுதாயமாக
இருப்பினும் இப்படி முன்னுக்குபின் முரணாகப் பேசிக் கொண்டிருப்பதை எத்தனை காலத்திற்குத்தான்
சகித்துக் கொண்டிருக்க முடியும்? இதப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்!
நான் ஓரிரு வசனங்களை முன்வைத்ததற்கே விழிபிதுங்கி நிற்கிறீர்கள். ஆண்டாண்டுகளாக தினமும்
ஒருவர் இப்படி உளறிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து
போன அம்மக்கள் முஹம்மதைப் பைத்தியம், சூனியம் செய்யப்பட்டவர் என்றனர்.
குர்ஆன் 15:06
"அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
குர்ஆன் 26:153
"நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்'' என்று அவர்கள் கூறினர்.
என்று மறுமொழி கூற ஆரம்பித்தனர்.
இதற்கு அண்ணன் பீஜே தரும் விளக்கம்
...நபிமார்கள் மறுமை உள்ளிட்ட பல
போதனைகளைச் செய்த போது அதை நம்ப மறுத்தவர்கள் மனநோயே இவ்வாறு உளறுவதற்குக் காரணம் என்ற
முடிவுக்கு வந்தனர். மனநோய்க்குக் காரணம் சூனியம் வைக்கப்ப்பட்டது தான் என்றும் கருதினார்கள்.
எனவே நபிமார்களின் போதனையை நம்பாத போது நபிமார்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு அதனால்
பைத்தியம் பிடித்து உளறுகிறார்கள் என்று சொன்னார்கள்…
சூனியம் என்பது தங்களது நோக்கங்களை
நிறைவேற்றுவதற்காக ஜின்–ஷைத்தான்கள் அல்லது தீய சக்திகளுக்கு வழிபாடு செய்துவது. இதுவும்
ஒருவகை பிரார்த்தனைதான் என்பதை முன்பே கவனித்தோம்.
பெரும் பாவங்களின் பட்டியலில் ஸிஹ்ர் இணைந்ததற்க்கான காரணமும் அதுதான்! இதற்கு அண்ணன் பீஜே தரும் மரண அடி பதில்,
ஸிஹ்ர் பற்றி அண்ணன் பீஜேவின் கருத்து:
…சூனியக்காரன் தானாக இதைச் செய்வதில்லை. அவன் ஜின்களை வசப்படுத்தி வைத்துக் கொண்டு
செய்கிறான். எந்த சாதனத்தையும் அவன் பயன்படுத்தாவிட்டாலும் ஜின்களை ஏவிவிட்டு சூனியம்
செய்கிறான். ஜின்கள் போய் பாதிப்பை ஏற்படுத்துவது நம் கண்களுக்குத் தெரியாததால் அல்லாஹ்வைப்
போல் சூனியக்காரன் செயல்படுவதாக மக்களுக்குத் தெரிகிறது என்று புது விளக்கம் கொடுக்கிறார்கள்…
மனிதர்களை வழிகெடுப்பதற்கு ஜின்–ஷைத்தான்களுக்கு அல்லாஹ் அதிகாரம் வழங்கியிருப்பதையும்,
ஸிஹ்ர்-பில்லி சூனியம் என்பது தீய சக்திகளின் உதவியுடன் செய்யப்படும் ஒரு வழிபாடு என்பதையும் கவனித்தோம். அண்ணன் பீஜே சொல்வதைப்போல புது விளக்கமல்ல
!
ஜின்களால் மனிதர்களுக்கு பதிப்பை ஏற்படுத்த
முடியுமா?
முடியும்!
மனநிலை பாதிப்பிற்கு ஜின்-ஷைத்தான்களயும் காரணமாகக் கருதினர். அதற்குக் குர் ஆனும்
சாட்சியாக இருக்கிறது.
குர்ஆன் 2:275
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான்
தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83 "வியாபாரம் வட்டியைப் போன்றதே''
என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத்
தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு
முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர்
நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
ஷைத்தானின் தீண்டுதல் ஒருவனைப் பைத்தியமாக ஆக்கிவிடுமா? ஏகத்துவத்துவ கொள்கையின்
ஏகபோக உரிமையாளர், ஒட்டுமொத்த குத்தகைதாரர் அண்ணன் பீஜேவும் அவரது ’அல்லக் கைகளும்’ இருக்கையில் அல்லாஹ் எவ்வாறு இப்படியொரு கருத்தை
தெரிவிக்கலாம்?
83. பைத்தியத்திற்கு ஷைத்தான் காரணமா?
… இறந்தவர்களின் ஆவி, உயிருடன் இருப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதுதான் பைத்தியம்
என்று பாமரமக்கள் கருதுகின்றனர்.
…இறந்தவரிடம் குடிகொண்டிருந்த ஷைத்தான்கள், மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதால்தான்
பைத்தியம்பிடிக்கிறது என்று மற்றும் சிலர் நம்புகின்றனர்.
…மனிதர்களைத் தீயவழியில் செல்ல வைத்து, பாவிகளாக்கி நரகில் தள்ளுவதுதான் ஷைத்தானின்
வேலை. (திருக்குர்ஆன் 4:119,120, 7:16,17) ஒருவன் பைத்தியமாகிவிட்டால் அதன் பின்னர்
அவன் செய்யும் எந்தத் தீமைக்காகவும் அவன் பாவியாகமாட்டான். அதற்காக அவனுக்குத் தண்டனையும்
கிடையாது. நரகவாசிகளின் எண்ணிக்கையை அதிகமாக்குவதை முழுநேரப்பணியாகக் கொண்ட ஷைத்தான்,
நரகவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் பைத்தியம் பிடிக்கச் செய்யமாட்டான்.
எனவே இவ்வசனத்தில், ஷைத்தானால் தீண்டப்பட்டவன் பைத்தியமாக எழுவது போல்' என்று கூறப்பட்டதை
மேற்கண்ட ஆதாரங்களுக்கு முரண் இல்லாத வகையில்தான் புரிந்து கொள்ள வேண்டும்….
சிலர் மட்டுமல்ல அன்றைய அரேபியர்களும், மனநிலை பாதிப்பிற்கு பில்லி-சூனியம்
மற்றும் ஜின்களின் பாதிப்பு காரணம் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்தது. மனநிலை
பாதிக்கப்பட்டவனை “மஜ்னுன்” என்பார்கள் மூளையில் ஏற்படும் பாதிப்புகளே ஒருவரது மனநிலை
பாதிப்பிற்கு காரணமென்பதை அன்றைய மக்களோ அல்லது முஹம்மதுவோ அறிந்திருக்கவில்லை. இதற்கு
நாம் அவர்களை குறை காண்பதில் பொருளுமில்லை.
இந்த மூடநம்பிக்கையைத்தான் அல்லாஹ்வும் குர்ஆனின் 2:275-ம் வசனத்தில் பயன்படுத்துகிறான்.
மனநிலை பாதிப்பிற்கு ஜின் ஷைத்தான்கள் காரணமில்லை என்பதை அல்லாஹ் அறிந்திருந்தால் என்ன
செய்திருக்க வேண்டும்? (இந்த அல்லாஹ் ஒரு அறிவில்லாத
ஆசாமி. வசனத்தை வெளியிடுவதற்கு முன் அண்ணன் பீஜேயிடம் ஆலோசனை கேட்டிருந்தால்... இத்தனை
பிரச்சினை வருமா..? அடுத்தவங்களை சிந்திக்க சொல்கிறானே ஒழிய அவன் சிந்திப்பதில்லை!)
”.. ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே
எழுவார்கள்.” என்று சொல்ல வேண்டுமா? அல்லது ”…பைத்தியமாகவே எழுவார்கள்.” என்பதோடு நிறுத்தியிருக்க வேண்டுமா? என்ன செய்வது…
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள உவமை அன்றைய அறியாமை மக்களின் நம்பிக்கையை அப்படியே அல்லாஹ்வும்
அங்கீகரிப்பதாகவே உள்ளது.
அண்ணன் பீஜே கூறியுள்ளதைப் போலவே நாமும் ’சிங்க’ உவமையைக் காண்போம். (அண்ணன் பீஜே, இஸ்மாயில் ஸலஃபியை வெறுப்பேற்றுவதற்கு
’மண்ணடி சிங்கம்’ உதாரணத்தை தனது மறுப்பில் பயன்படுத்தியுள்ளார். மண்ணடி சிங்கம் யாருன்னு
கேட்கிறீங்களா? அது வேறுயாருமில்ல அண்ணன்தான். அவரோட ஆசையை நானும் கெடுக்கவிரும்பலை.)
”நான்
மண்ணடியில் ஒருவர் சிங்கம் போல கர்ஜனை செய்வதை பார்த்தேன்” என்று ஒருவர் கூறினால்
எப்படி பொருள் கொள்வோம்?
குறிப்பிடும் அந்நபரின் உரையாடல் கம்பீரமாக இருந்தது என்பது பொருளாக இருப்பினும்,
சிங்கம் கர்ஜனை செய்யக் கூடியது என்ற பொருளும் இதனுள் அடங்கியுள்ளது. எனவே மேற்கண்ட
(2:275)வசனத்தின் பொருள் ”ஷைத்தானால் தீண்டப்பட்டவன்
பைத்தியமாவன்” என்பதுதான்.
ஷைத்தான் அதாவது ஜின்கள் தீண்டுதல் என்றால் என்ன?
ஜின்கள், மனிதர்களின் உடலிற்குள் நுழைந்து அவர்களை தன்னிலை இழக்கச் செய்வது. இத்தகையவர்களின்
செயல் வழக்கமான அவர்களது குணம், செயல், இன்னும் இதர நடவடிக்கைகளையும் மாற்றிவிடும்
என்பது இஸ்லாமியர்களின் ஐதீகம். இறந்தவர்களிம் ஆவி மனித உடலுக்குள் புகுந்து பேயாட்டம்
போடுவதாகக் கூறும் நம்பிக்கையைப் போன்றது. நமது ஊரில், துர்தேவதை, கெட்ட சக்தி, கெட்ட
ஆத்மா, பூதம், பிரேதம் என்றெல்லாம் சொல்வார்கள்; அரேபிய நம்பிக்கை ஜின்கள் என்கிறது.
இப்பதிவின் துவக்கத்தில் எனது நம்பிக்கைகளில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டதையும்
நான் எதிர்கொண்ட உடனடி விளைவுகளையும் குறிப்பிட்டிருந்தேன். நான் என்னுடைய இயல்பிலிருந்து
மாறியிருப்பதாக நினைத்தனர்; இஸ்லாமிற்கு எதிராகப் பேசுவது என்னுடைய இயல்பல்ல என்றும்
நினைத்தனர். இதற்குக் காரணம் ஜின் தீண்டியிருப்பதாகவும், ’ஜின்’ எனக்குள் இருந்து கொண்டு
இஸ்லாமிற்கு எதிராக என்னைத் தூண்டிவிடுகிறது, அதற்குத் தேவையான மாற்றங்களை என்னுள்
செய்திருப்பதாகவும் எனது குடும்பத்தினர் உறுதியாக நம்பினர். அதற்கான மருத்துவத்திற்கு,
அதாவது ’ஜின் ஓட்டுதல்’ சிகிச்சைக்கு உட்படுமாறு என்னை வற்புறுத்தினர். இது மிக எதார்த்தமான
இஸ்லாமிய நம்பிக்கை.
ஜின் ஓட்டும் ஆற்றல் இஸ்லாமிய அறிஞர்களுக்கும், இறந்து போன மகான்களுக்கு இருப்பதாகவும்
கூறுவது இஸ்லாமிய ஐதீகம். ஏர்வாடி, நாகூர், அம்பராம்பாளையம் போன்ற தர்ஹாக்களில் நாம்
காண்பது இந்த நம்பிக்கையைத்தான்.
ஜின் ஓட்டுதல் பற்றி வட இந்திய நபி ஜாகிர் நாயக் (ஸல்) அவர்கள் கூறும் பதில்.
ஜின் பற்றி அண்ணன் பீஜேவின் விளக்கம்
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் "ஜின் என்ற படைப்பினம் உள்ளது; அது மனிதர்களைப்
போன்றே பகுத்தறிவு வழங்கப்பட்டது; மனிதர்களை விட சக்தி வாய்ந்தது'' என்றெல்லாம் ஒரு
முஸ்லிம் நம்ப வேண்டும். ஆனால் அந்த ஜின்கள் மனிதர்கள் மேல் வந்து உட்கார்ந்து கொண்டு,
மனிதனை ஆட்டுவிக்கும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை…
உண்மையில் அண்ணன் பீஜே, மார்க்கம் என்று எதைக் குறிப்பிடுகிறார் என்று புரியவில்லை.
பின்வரும் ஹதீஸைக் கவனியுங்கள்!
இப்ன் மாஜா 3538
உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரலி) கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப்
நகரத்திற்கு என்னை ஆளுநராக நியமித்தார்கள். நான் தொழுகும் பொழுது வேறு விஷயங்களில் என் கவனம் சென்று கொண்டிருந்தது. இதனால் எத்தனை
ரக் அத்துக்கள் தொழுதேன் என்பதைக்கூட மறக்கலானேன். இதை நான் கண்ட பொழுது, அல்லாஹ்வின்
தூதர்(ஸல்) அவர்களிடத்தில் சென்றேன். நீ அபுல் ஆஸுடைய மகனா என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)
அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் ஆம் அல்லாஹ்வின் தூதரே என்றேன். நீங்கள் வந்ததற்கு
என்ன காரணம்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே நான் தொழுகும் போது வேறு விஷயங்களில்
என் கவனம் சென்று கொண்டிருக்கிறது இதனால் நான் எத்தனை ரக்அத்துக்கள் தொழுதேன் என்பதைக்கூட
மறந்து விடுகிறேன் என்று கூறினேன். இது ஷைத்தானால் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறிவிட்டு
அருகில் வா என்றார்கள். நான் நபியவர்களுக்கு அருகில் எனது குதிங்கால்களை ஊன்றி அமர்ந்து
கொண்டேன். அவர்கள் கரத்தால் என் நெஞ்சில் அடித்து எனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின்
எதிரியே வெளியேறிவிடு என்று கூறினார்கள். இவ்வாறு அவர்கள் மூன்று முறை செய்துவிட்டு
உன் பணியைத் துவங்கு என்று கூறினார்கள்.
”அல்லாஹ்வின் எதிரியே வெளியேறிவிடு”
என்று முஹம்மது யாரிடம் சொன்னார்? உஸ்மான் பின் அபில் ஆஸிடமா அல்லது அவருக்குள் இருந்த
ஜின் – ஷைத்தானிடமா?
இஸ்லாமிய வரலாற்றில் முதன்முதலில் ஜின் ஓட்டிய பெருமை தூதர் முஹம்மதுவையே சாரும்.
இல்லாத கட்டுக்கதைகளைக் கூறி ஜின் ஓட்டுவதாக மக்களை ஏமாற்றுவதாக, ஜின் ஓட்டும் முல்லாக்களை
சாடுவதில் பொருளில்லை. ஜின்-பேய்-பிசாசு ஓட்டிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் முதலில்
தண்டிக்கப்பட வேண்டியவர் தூதர் முஹம்மதுதான். எனக்குத் தெரிந்த வரையில் முல்லக்கள்,
தங்களிடம் ஜின் சிகிச்சைக்காக வருபவர்களின் வாயில் துப்புவதில்லை. அதென்னவோ தெரியவில்லை
தனது எச்சிலை மற்றவர்கள் மீது தேய்ப்பதில் முஹம்மதிற்கு அப்படியொரு அலாதி இன்பம்.
’கெட்டியான சாணத்தை’ (விட்டை) உணவாக
உட்கொள்ளும் ஷைத்தானே, முஹம்மதின் எச்சிலைக் கண்டு தலைதெறிக்க ஓடிவிட்டான் எனில் அந்த
எச்சிலின் தன்மை எப்படியிருக்குமென்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு மனிதனுக்குள் புகுந்ததற்காக
இத்தனை கொடுமையான தண்டனை அவசியமா என்பதைப்பற்றி நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மனிதர்களில் நலனுக்காக மனித உரிமை ஆணையம் இருப்பதைப்போல ஜின் உரிமை ஆணையம் இருந்திருந்தால்
இந்நிலை ஏற்பட்டிருக்காது!
அந்த பரிதாபத்திற்குரிய ஷைத்தானுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
அடுத்த பதிவில் தொடருவோம்…
தொடரும்…
தஜ்ஜால்