“அஸ்ஸலாமு அலைக்கும்... “
“சகோதர சகோதரிகளே கேள்வி-பதில் நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில்
துவங்க இருக்கிறது. யார் யாருக்கெல்லாம் டோக்கன் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் மட்டும்தான் கேள்வி
கேட்க முடியும். ஒருத்தர் ஒரு கேள்விமட்டும் கேட்கலாம். துணைக் கேள்விகளுக்கு அனுமதி
கிடையாது” என்று உதவியாளர் ஒருவர் விதிமுறைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.
“மைக்க... கொஞ்சம் ஆஃப் பண்ணச் சொல்லு...” என்றேன்.
‘கிளிக்’ என்று மைக் ஆஃப் செய்யப்பட்டது
”ஏம்ப்பா... இந்துக்களுக்கும், கிறிஸ்டியன்களுக்கும் எத்தனை டோக்கன்
கொடுத்திருக்கீங்க, எல்லாம் கரெக்டாதானே செஞ்சிருக்கீங்க?” இது நான்.
“மொத்தம் 10 டொக்கன்தான்
குடுத்திருக்கோம், மஃரிப் தொழுகை இருக்க்றதால சீக்கிரமாக முடிச்சிறலாம். எல்லாம் நம்ப ஆளுகதான்ணே... விவகாரமா ஒன்னும் இருக்காது...!”
“சரி... மைக்க ஆன்
பண்ணு ஆரம்பிக்கலாம்!”
“அஸ்ஸலாமு அலைக்கும்!
சகோதர சகோதரிகளே. இந்த பயான் சம்பந்தமான உங்க
கேள்விகள கேட்கலாம்!”
கூட்டம் சிறிது சலசலத்து
பின் அமைதியானது.
“எல்லோருக்கும் வணக்கம்! என் பேர் பிச்சாண்டி. குர்ஆன்ல நிறைய
அறிவியல் முன்னறிவிப்புகள் இருக்குன்னு சொலறாங்க. அதையெல்லாம் எங்கள மாதிரி மாற்று
மதத்த சேர்ந்தவங்க எப்படி தெரிஞ்சிக்கிறது?”
“சகோதரர் ஒரு அருமையான கேள்வியைக் கேட்டிருக்கிறார். அவர் என்ன
கேட்கிறார்னா... குர்ஆன்ல நிறைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருக்குது
அத மாற்று மதத்தைச் சேர்ந்தவங்க எப்படி தெரிஞ்சிக்கிறதுனு கேட்கிறாரு... அது ரொம்ப
சிம்பிளானது... நீங்க எங்க இணையதளத்தில இலவசமாகவே படிச்சி தெரிஞ்சிக்கலாம் அல்லது நாங்க
வெளியிட்டிருக்கிற (டுபாக்)குர்ஆனும் அறிவியலும்கிற புடிச்சு தெரிஞ்சிக்கலாம். சகோதரர்
பிச்சாண்டிக்கு அந்த புத்தகத்தோட பிரதி ஒன்னு
கொடுத்திருங்க..."
“அஸ்ஸலாமு அலைக்கும்! என் பேர் ராபியா. உங்க பயான் ரொம்ப சிறப்பா
இருந்திச்சு...அல்லாஹ் உங்களுக்கு எல்லா நலனையும் கொடுக்க துஆ செய்யறேன்...”
“மைக்க சரியா வைச்சு பேசுங்க...!”
“வேற கிரகத்தில உயிரினங்கள் இருக்கும்னு சொன்னீங்களே... அங்கே
இருக்கிறவங்களும் அல்லாஹ்வைத்தான் வணங்குவாங்களா? அவங்களுக்கும் இதே குர்ஆன் தானா?”
“வேற்று கிரகத்திலிருக்கிறவங்களுக்கும் அல்லாஹ்வை வணங்குவாங்களா,
ஆவங்களுக்கும் இதே குர்ஆன்தானான்னு சகோதரி ராபியாகேட்கறாங்க... அகில உலகத்திற்கும் ரஹ்மத்தாக குர்ஆனை அருளியிருப்பதாக
அல்லாஹ் சொல்கிறான். ’கவனத்தில் கொள்க! வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அல்லாஹ்வுக்கே
உரியவர்கள்...’ என்று குர் ஆன் 10:66 சொல்கிறது. எனவே வேறகிரகங்களில் உயிரினங்கள் இருந்தால்
அவர்களுக்கும் இதுதான் வழிகாட்டி. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதரை அனுப்பியிருப்பதாக
அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான். இதன் அடிப்படையில பார்த்தோம்னா அவர்களுக்கும் அல்லாஹ்
மட்டுமே இறைவனாக இருக்க முடியும்!”
”அஸ்ஸலாமு அலைக்கும், என் பேர் அல்லாஹ் பிச்சை, நான் குஞ்சாண்டியூர்ல
இருந்து வர்றேன். குர்ஆன்ல நவீன அறியலைப்பற்றி சொல்லியிருக்குனு நீங்க கொடுத்த விளக்கம்
ரொம்ப ஸூப்பரா இருந்துச்சு...”
“ரொம்ப சந்தோஷம் நீங்க கேட்க விரும்பறதசீக்கிறமாக கேளுங்க நிறைய
பேர் கேள்விகேட்க காத்துக்கிட்டிருக்காங்க...”
”சரி... வானத்தில உயிர்னங்கள் இருக்கிறத குர்ஆன் குறிப்பிடுறதா
சொன்னீங்க, நம்ம ரஸூல்ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவங்க மிஹ்ராஜ் பயணம் போனப்ப பார்த்த வானமும்
நீங்க குறிப்பிடுற வானமும் ஒன்னுதானா?”
”க்ளிக்” மைக் நிறுத்தப்பட்டது. அருகிலிருக்கும் உதவியாளரிடம்,
“டேய்... தம்பி... இங்கே
வா... டொக்களை சரியான ஆட்களுக்குத்தான் குடுத்தியா?” என்றேன்
“ஆமாண்ணே... கரெக்ட்டாதான் கொடுத்தோம். எப்படி சொதப்பினாங்கன்னு
தெரியலை நான் போய் பார்க்கறேன்!” என்றான்
“போ சிக்கிரம் போய்ப் பாரு நான் எதையாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்!”
“க்ளிக்” மீண்டும் மைக் ’ஆன்’ செய்யப்பட்டது.
“சகோதரர் என்ன கேட்கிறார்னா... ரஸூல் ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவங்க
மிஹ்ராஜ் போன போது பார்த்ததாகக் கூறப்படும் வானத்தைப்பத்தி கேட்கிறார்”
“நான் அப்படிக் கேட்கல..” என்று சொல்லும் அல்லாஹ் பிச்சையின் குரலை
யாரும் பொருட்படுத்துவதாக இல்லை.
“ரஸூல் ஸல்லல்லாஹு அலைவஸல்லம் அவங்க சென்ற மிஹ்ராஜ் பயணம் ஆத்மரீதியான
பயணம்தான்கிறத விஷயத்தை நீங்க மொதல்ல ஒரு விளங்கிக்கறனும். அழைச்சிக்கிட்டு போகற மாதிரியும்,
அங்கே வானங்கள் இருக்கிற மாதிரியும், அதற்குக் கதவுகளும் காவலாளிகளும் இருக்கிற மாதிரியும்
காட்சிகள் காண்பிக்கப்பட்டது. அந்த வானமும், குர்ஆன் நேரடியாகக் குறிப்பிடுற வானமும்
ஒன்னு கிடையாது. நாம அடுத்த கேள்விக்குப் போகலாம்!”
”எல்லோருக்கும் வணக்கம். என்பேர் பிச்சாண்டி. குர்ஆன் 71:15 அல்லாஹ்
ஏழு வானங்களை அடுக்கடுக்காக படைத்திருப்பதைப்பற்றி சொல்லறதை, நிறைய இஸ்லாமிய அறிஞர்கள்,
வளி மண்டல அடுக்குகளைக் குறிப்பிடுறதாக சொல்லி, படம் வரைஞ்சு பாகங்களைக் கூட குறிச்சிருந்தாங்க.
ஆனால் நீங்க சொல்லற வானம் இப்போ வேறுமாதிரியாக இருக்கே?”
நான் சிரித்துக் கொண்டே சுற்றும்முற்றும் பார்த்தேன் உதவியாளர்கள்,
ஒன்றுமே நடக்காததைப் போன்று கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதைப் போன்று பாவனை செய்து கொண்டிருந்தனர்.
அதில் ஒருவனை அருகில் வருமாறு கண்களால் சைகை செய்தவாறு,
”சகோதரர் பிச்சாண்டி, குர்ஆன் குறிப்பிடும் ஏழு வானத்தைப்பற்றி
கேட்கிறார். அவரது கேள்விக்குப் போவதற்கு முன்னால். வானத்தைப்பற்றி குர்ஆன் என்ன சொல்துங்கிற
நாம பார்க்கனும்.
அல்லாஹ் வானத்தைப்பற்றி சொல்லும் போது, ஏழு வானம் என்று மட்டும்
சொல்லவில்ல. அதன் பணிகளை, திருப்பித்தரும் வானம், பாதுகாக்கப்பட்ட முகடு என்று கூறுகிறான்.
அதன் கட்டமைப்பற்றிச் சொல்லும் போது, வானத்தைப் படைப்பது பெரிய பணி என்பதாகவும், தூண்களின்றி
நிறுவியிருப்பதாகவும், பூமியின் மேல் விழாதவாறு தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் சொல்கிறான்”
உதவியாளர் அருகில் வந்தான். மைக்கை கைகளால் மூடியவாறு அவனிடம்,
“கேள்விகள் ஏண்டா இப்படி ஏடாகூடமா வருது? டோக்கன்களை ஒழுங்காத்தான்
குடுத்திருக்கீங்களா?” என்று கிசுகிசுத்தேன்.
தெரியலைண்ணே ஏதோ தப்பு நடந்திருக்கும்னு தோணுது. டோக்கன்கள் கைமாறியிருக்கலாம்.
புரோகிராம சீக்கிரம் முடிச்சிறலாம்” என்றான்.
”சரி போய் ஏதாவது செய்” என்றவாறு நிகழ்ச்சியை மீண்டும் தொடர தயாரானேன்.
”இதை நாம் எப்படி விளங்கிக்கிறது என்பதுதான் முக்கியமானது. சூரியனிலிருந்து வரும் கடும் வெப்பத்தையும், புறஊதாக்
கதிர்களையும் தடுப்பது வானம்தான். இதைத்தான் அல்லாஹ், பாதுகாக்கும் முகடாக வானம் இருப்பதாகச்
சொல்கிறான். பூமியிலிருந்து மேலே ஆவியாகி செல்லும் தண்ணீர் திரும்பவும் மழையாக பொழிகிறது;
அதேபோல ஒலி-ஒளி அலைகளும் வானில் பட்டு திரும்பவும் பூமிக்கே திரும்புகிறது இதை திருப்பித்தரும்
வானம் என்று குறிப்பிடுகிறான். இப்படி ஒவ்வொரு இடத்திலும் வானத்தைப்பற்றி விதவிதமாகக்
குறிப்பிடுகிறான்.
பன்மையில அதாவது, நிறைய என்று சொல்வதற்கு அரேபிய வழக்கில் 7, 70, 70000 என்று சொல்வாங்க.
குர்ஆன் இங்கு ஏழு வானம்னு சொல்லறது எண்ணற கேலக்ஸிகளைத்தான்னு நம்ம புரிஞ்சுக்கனும்!”
பிச்சாண்டியின் முகத்தில் தெறித்த எரிச்சலை என்னால் உணற முடிந்தது.
அவர் எழுந்து திரும்பவும் ஏதோ கேட்க முயற்சிப்பதை நல்லவேளையாக உதவியாளர் ஒருவர் ’அன்பாக’
அடக்கிவிட்டார். துணைக் கேள்விகளுக்கு அனுமதியில்லைன்னு முன்னமே அறிவிக்கிறது எத்தனை
உதவியாக இருக்கிறது!
மாஷா அல்லாஹ்!
நாலு காசு பார்க்கறதுக்கு எத்தனை கப்ஸா விடவேண்டியிருக்கு? இன்னைக்கு அல்லாஹ்விற்கு இரண்டு ரக்ஆத் சுக்ரியாநஃபில்
தொழுது அல்லாஹ்விற்கு நன்றி சொல்லயாகணும் என்று எண்ணிக் கொண்டேன்.
“அஸ்ஸலாமு அலைக்கும்! ஐயா என் பேர் முருகானந்தம். நான் சேலத்தில
இருந்து வர்றேன். வானத்தில உயினங்களை படைத்திருப்பதாக குர்ஆன் குறிப்பிடறதாகச் சொன்னீங்க.
வாதத்திற்கு அது உண்மையின்னு வைத்துக் கொண்டாலும், வேற்று கிரகங்களில் உயினங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும்
கூட, வானத்தில் உயிரினங்கள் இருப்பதாகக் குர்ஆன் கூறுவது தவறுதானே?”
ஷைத்தான் சடைபின்ன ஆரம்பிச்சிட்டான் போலிருக்கு! நான் அல்லாஹ்கிட்ட
பாதுகாப்பு கேட்கிறதா இல்லை ஷைத்தான் கிட்ட பாதுகாவல் தேடறதா? இவனுக்கு என்ன பதிலச்
சொல்லறது?
“சகோதரர் முருகானந்தம் முதலில் நாம ஒன்றை விளங்கிக் கொள்ளனும்.
குர்ஆன் கடவுளோட வார்த்தைகள் அதில் முரண்பாடு இருக்காதுன்னுங்கிற விஷயத்தில நாம தெளிவா
இருக்கனும் இங்கே வானம்கிறது கேலக்ஸிகளைக் குறிப்பிடுறதாக நான் முதலிலேயே சொன்னேன்.
அந்த கேலக்ஸிகளுக்குளேதான் சூரியன்களும் கிரகங்களும் இருக்குது.
நீங்க உங்களை அறிமுகப்படுத்தும் போது சேலத்தில் இருந்து வருவதாகச்
சொன்னீங்க. உதாரணத்திற்கு சொல்கிறேன், நான் சேலம் அம்மாபேட்டை ஆறாவது வீதியில் ஒன்பதாம்
நம்பர் வீட்டிலிருந்து வருகிறேன்னு சொல்லலை. யாரும் அப்படி தங்களை அறிமுகப்படுத்தவும்
மாட்டாங்க. அதைப்போலதான் இதுவும். சில விஷயங்களை கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும் நாம்தான்
அதைப் சரியாகப் புரிஞ்சிக்கனும்!”
”என் பேர் ANTony. அல்லாஹ்
உயிரினங்களை எங்கே பரவச் செய்திருக்கிறான் வானங்களிலா அல்லது பூமியைப் போன்ற கோள்களிலா
என்பதை தெளிவாகச் சொல்லனும். வானங்களில் உயிரினங்களைப் பரவச் செய்திருக்கிறான் என்றால்
நீங்க கொடுக்கும் விளக்கத்தின்படி, கேலக்ஸி முழுவதும் உயிரினங்கள் பரவியிருக்குனு பொருள்வரும்.
கேலக்ஸிகளுக்குள் சூரியனைவிட மிகப் பெரிய red giant superகளும் இருக்கலாம். அதற்குள்ளும்
உயினங்கள் இருப்பதாக பொருள் கொள்ள வேண்டிவரும். கேலக்ஸிகளை உள்ளடக்கிய, எண்ணற்ற பேரண்டங்கள் இருக்கலாம்
என்ற கருத்தும் இருக்கிறது. இவைகள் அல்லாமல் அல்லாஹ்வும் அவனது உதவியாளர்களும், இறந்த
நபிமார்கள் வசிக்கும் வானங்களும், சொர்க்கம் நரகம் இருப்பதாகக் கூறப்படும் வானமும்
இருக்கிறது. அதனால் வானம் என்று குர்ஆன் எதைக் குறிப்பிடுகிறது என்பதற்கு தெளிவான விளக்கம்
தரவேண்டும்”
இது கேள்வியில்ல... Rivet!
இப்ப எப்படித் தப்பிக்கிறது… கலங்காதே... நோ அழக்கூடாது… தைரியமாக இருக்கனும்
முகத்தை துடைச்சுக்க… சும்மா சிரிச்சு வை… ஐய்யோ நான் என்ன பதிலச் சொல்லுவேன்…
”சகோதரர் ANTony இஸ்லாமிய எதிர்ப்பு ஊடகங்களை வாசிப்பவர் என்று
நினைக்கிறேன்…”
திடீரென்று உதவியாளர்
என்னை நோக்கி ஓடிவந்து காதில் “அண்ணே மேல தொடரவேண்டாம் நம்ம மானம் போயிரும் ஏதவது சொல்லி
தப்பிச்சிருங்க…” என்று கிசுகிசுத்தான்.
“சீக்கிரமா… மஃரிப் பாங்க சொல்லு... அதுவரை ஏதாவது சொல்லிவைக்கிறேன்”
என்று கிசுகிசுத்தவாறு கூட்டத்தை நோக்கி,
”சகோதரர் ANTony-யைப் பாருங்க குர்ஆனை ஆய்வு நோக்கோடு வாசித்திருக்கிறார்
என்பது அவரது கேள்வியிலிருந்து புரிகிறது. முஸ்லீகளான நாம் ஒரு நாளும் அதைப் பொருளணர்ந்து வாசிப்பதில்லை. இதுபோன்ற
விஷயங்களை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும்.
ANTony நீங்க குர்ஆனை ஆய்வு செய்திருக்கலாம், ஆனால் தவறாகப் புரிஞ்சிருக்கீங்க!
குற்றம் சொல்லனும்கிற நோக்கத்தோட அணுகினால் அதிலிருக்கும் உயர்ந்த தத்துவங்கள் உங்களுக்குப்
புலப்படாது… உங்க கேள்வியைப் பார்ப்பதற்கு முன்னால் வேறு சில விஷயங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
குர்ஆன் கருவின் வளர்ச்சியைப்பற்றி மிகத் தெளிவாகச் சொல்கிறது. அலக் என்ற சொல் மிகத்துள்ளியமாக
ஆரம்ப நிலைக் கருவின் அமைப்பை விவரிக்கிறது. அது மட்டுமல்ல தொடர்ந்து கருவின் வெவ்வேறு
நிலைகளையும் கூறுகிறது.”
நான் எனது கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இல்லாத அறிவியலை
அள்ளிவிட்டுக் கொண்டிருந்தேன். இதோ மஃரிப் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
”குர்ஆன் 2:259-ல் ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியைக்
கூறிவிட்டு உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம் என்று கூறுகிறது. மனிதர்களுக்கு
அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களிலெல்லாம் ஒரு முன்னறிவிப்போ, அறிவியல்
உண்மைகளோ, அதுபற்றிய குறிப்புகளோ புதைந்து கிடப்பதைத் திருக்குர்ஆனில் பரவலாகக் காணலாம்.
இந்நிகழ்ச்சியில் இருப்பதாக இறைவன் கூறும் அந்த அத்தாட்சி எது?
உணவும், தண்ணீரும் இருந்த இடத்திற்கு அருகில்தான் கழுதையின் உடலும்
கிடந்தது. அப்படியிருந்தும் கழுதைமக்கிப் போகின்றது. அதேசமயம் உணவும் நீரும் கெட்டுப்
போகாமல் இருக்கின்றது. குளிர்பதனப் பெட்டியைப் போன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும்பாதுகாப்புக்
கவசத்தை ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கின்றது.”
கூட்டம் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தது.
”இப்படி நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி குர்ஆன் முன்னறிவிப்புச்
செய்கிறது. இவ்வாறு குர்ஆன் கூறும் ஒவ்வொரு சான்றுகளையும் இன்றுவரை எந்த அறிவியல் அறிஞர்களாலும்
மறுக்க முடியவில்லை. எனவே வானத்தைப்பற்றி குர்ஆன் கூறுவதில் தவறு இருக்காது இருக்கமுடியாது
என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இப்பிரபஞ்சத்தையே படைத்தவன் கூற்றி எப்படித் தவறு இருக்க
முடியும்.
நாம் சகோதரர் ANTony-யின் கேள்விக்கு வருவோம்...
கேலக்ஸி என்பது கோள்கள், நட்சத்திரங்கள் ரெட் ஜெயண்ட் சூப்பர்
எனப்படும் செம்பூதங்கள் என்று பலவற்றையும் உள்ளடக்கியது. உதாரணத்திற்கு சூரியனில் உயிரினங்கள் வாழமுடியாது
காரணம் அதன் வெப்பம். இந்த செம்பூதங்கள் சூரியன் கோள்களென்று அனைத்தையும் விழுங்கக்
கூடியவைகள். எனவே உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பில்லை என்பது நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கே தெரியும் போது இத்தனையும்
படைத்த இறைவனுக்குத் தெரியாதா? அப்படியானால் அவனது வார்த்தைகளான குர்ஆன் எப்படி தவறான
பொருளைத் தரும்? இப்படித்தான் நீங்கள் சிந்திக்க வேண்டும்!
அப்படியானல் இதை எப்படி விளங்குவது?
உயிரினங்கள் எங்கெல்லாம் இருப்பதாகக் கண்டறிப்படுகிறதோ அந்த இடங்களையே
இவ்வசனம் குறிப்பிடுகிறது என்று விளங்கிக் கொள்ளவேண்டும்…”
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது
“அல்லாஹ் அக்பர்.. ” என்று பாங்கு ஒலிக்கத் துவங்கியது
”தொழுகைக்கு நேரமாகிவிட்டது நிகழ்ச்சியை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.
சகோதரர் ANTony, உங்கள் கேள்விக்கான அதிகப்படியான விளக்கங்களை எங்கள் இணையதளத்தில்
பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்!”
கூட்டம் கலையத் துவங்கியதால் ஏற்பட்ட சலசலப்பில் ANTonyயின் குரல்
எடுபடவேயில்லை.
இனிமேல் ஒத்திகை பார்க்காம
கேள்வி-பதில் நிகழ்ச்சிக்கு வரவேகூடாது. கேள்வி கேட்கறவங்களை இண்டர்வியூ பண்ணாம அனுமதிக்கவும்
கூடாது. கேள்வி கேட்கறது சுலபம். பதில் சொல்லிப்பாருங்க அப்பத் தெரியும் அதோட கஷ்டம்
என்னாங்கிறது!
என்ன... நான் சொல்லறது சரிதானே.?
தஜ்ஜால்(ஸல், அலை, ரலி, ரஹ்)