Monday, 29 July 2013

புரிதலை மறுக்கும் புதிர்கள்


எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 2



எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக் கின் பதிவு: புரியாதப் புதிர்கள்..

பரிணாமக் கோட்பாடு. மனிதன் எப்படி தோன்றினான் வளர்ந்தான் எனும் சிந்தனை எப்போதும் மனிதனுக்கு இருந்துகொண்டே வந்திருக்கிறது. இதற்கு அறிவியல் அடிப்படையில் முதலில் விளக்கமளிக்க முயன்றவர் டார்வின். இந்த ஆய்வுகளை டார்வின் தான் முதலில் தொடங்கினார் என்று கூறமுடியாவிட்டாலும்டார்வினின் சம காலத்தில் லாவொஷியர் போன்ற பலர் இந்த ஆய்வை செய்து வந்தனர்டார்வினே இந்தக் கோட்பாட்டை பருண்மையாக உருவாக்கியவர். மட்டுமல்லாது தொடர்ந்து வந்த பலராலும் இக் கோட்பாடு செழுமைப்படுத்தப்பட்டு வந்தது, வருகிறது. மனித வாழ்வை புரட்டிப் போட்ட வெகுசில அறிவியல் கோட்பாடுகளில் பரிணாமக் கோட்பாட்டுக்கு சிறப்பான இடம் உண்டு. அதே நேரம் முன்வைக்கப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை எதிர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருசில அறிவியல் கோட்பாடுகளிலும் பரிணாமக் கோட்பாட்டுக்கு சிறப்பிடம் உண்டு.

பரிணாமக் கோட்ப்பாட்டை எதிர்ப்பவர்களில் முதன்மையானவர்கள் மதவாதிகள். ஏனென்றால் கடவுளே மனிதனைப் படைத்தான் எனும் சிந்தனையின் அடி வேரிலேயே பரிணாமம் வெடி வைத்து விட்டது. ஆனாலும் ஆபிரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் பரிணாமக் கொள்கையை எதிர்ப்பதைப் போல் இந்தியாவின் பார்ப்பனிய (இந்து)மதம் அத்தனை மூர்க்கமாக எதிர்ப்பதில்லை. காரணம் அதன் அவதாரப் புரட்டுகளுக்கு ஓர் அறிவியல் பொருளை தந்திருப்பதாக அவர்கள் நம்புவது தான். மற்றொரு வகையில் பரிணாமக் கோட்பாட்டை மறுப்பவர்கள் யாருமில்லை என்று கூறிவிடலாம். எளிதாக இப்படிக் கூற பலரும் ஒப்புவதில்லை என்பதால் அதை இரண்டாகப் பிரிக்கலாம். 1. பயன்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் 2. கோட்ப்பாட்டு ரீதியாக ஏற்பவர்கள். கோட்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் என்றால் கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள், பயன்பாட்டு ரீதியில் ஏற்பவர்கள் என்றால் குறிப்பாக மருத்துவர்கள் பொதுவாக மக்கள் அனைவரும். ஏனென்றால் அல்லோபதி மருத்துவம் முழுமையாக பரிணாமக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஆய்கிறது, தீர்க்கிறது, மருத்துவம் செய்கிறது. மற்றப்படி பரிணாமக் கோட்பாட்டை எதிர்ப்பவர்கள் என்றால் அதன் பொருள் பயன்பாட்டு ரீதியாக ஏற்று கோட்பாட்டு ரீதியில் மறுக்கிறார்கள் என்பதே.

இது ஒருபுறமிருக்கட்டும் கடவுளை மறுப்பது என்பதற்கு பரிணாமக் கோட்பாடு மட்டுமே அடிப்படையா என்றால் இல்லை என்பதே பதில். இயங்கியல் பொருள்முதல் வாதத்தின் அடிப்படையிலேயே கடவுள் மறுப்பு இயங்கி வருகிறது, பரிணாமம் அதற்கு உற்ற துணைவன். இன்றைய நிலையில் கடவுள் நம்பிக்கையாளர்கள் அனைவரும் பரிணாமக் கோட்ப்பாட்டை எதிர்க்கிறார்கள் என்றால் அதன் கருப்பொருள் கடவுள் நம்பிக்கையை ஆதாரப்படுத்த விரும்புகிறார்கள் என்பதே. கடவுளை ஆதாரப்படுத்த விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டியது இயங்கியல் பொருள்முதல் வாதத்தை மறுப்பதுதான். யாரும் அதைச் செய்வதில்லை என்பதோடு மட்டுமில்லாமல் அதை புரிந்து கொள்வதற்கும் முயல்வதில்லை. எனவே தான் பரிணாமக் கோட்பாடு எளிய இலக்காகி விட்டது. இதற்குஎதிர்க்குரல்ஆஷிக் பாய் மட்டும் விலக்காகி விட முடியுமா என்ன?

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? இதைத் தீர்ப்பதற்கு பரிணாமக் கோட்பாட்டை துணைக்கழைப்பது தேவையில்லாதது. ஏனென்றால் பரிணாமக் கோட்பாட்டின் பணி பூமியில் உயிரினம் தோன்றி வளர்ந்த வரலாற்றை விவரிப்பது மட்டுமே. அறிவியலின் அடிப்படையில் கடவுள் இருக்கக் கூடுமா என்று கேட்டால் அது எளிமையான பதில் தான். எப்போதும் நிலைத்து நின்று இயங்கக் கூடிய ஆற்றல் ஒன்று உண்டா என்றால் அறிவியலின் பதில் இல்லை என்பதே. எனவே கடவுள் என்று ஒன்று இல்லை.

பரிணாமக் கோட்பாடு கடவுளை மறுக்கிறதா? இது தான் நண்பர் ஆஷிக் முன்வைத்திருக்கும் கேள்விகளுள் முதன்மையானது. இதை விரிவாகப் பார்க்கலாம். முதலில் பரிணாமக் கோட்பாடு கடவுளை மறுக்கும் நோக்கத்திற்காக ஏற்பட்டதா? இல்லை. கடவுளை மறுக்கும் நோக்கத்திற்காக ஏற்படாத ஒரு கோட்பாட்டை, அது கடவுளை மறுக்கவில்லை எனவே கடவுளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுவது அபத்தமாக மட்டுமே இருக்க முடியும். அதேநேரம் அந்தக் கோட்பாட்டை அலசினால் கடவுள் இல்லை எனும் முடிவுக்கு நம்மால் வரமுடியும். உலகில் தற்போது நிலவும் அனைத்து மத, கடவுட் கோட்பாடுகளையும் எடுத்துக் கொண்டால்; உலகில் மனிதர்களின் தோற்றம் குறித்து அவை கூறுவது கடவுள் எந்த முன்மாதிரியும் இல்லாமல் மனிதனைப் படைத்தார் என்பது தான். ஒவ்வொரு மதமும் தனித்தனியே இதன் விகிதங்களில் மாறுபட்டாலும் சாராம்சத்தில் கடவுள் படைத்தார் என்பதில் அனைத்து மதங்களும், கடவுள் நம்பிக்கைகளும் ஒன்றுகின்றன. ஆக, உலகிலிருக்கும் எல்லா மதங்களும் அதாவது எல்லா கடவுள் நம்பிக்கைகளும் ஏற்கும் ஒன்றை பரிணாமக் கோட்பாடு மறுக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது, கடவுளை பரிணாமக் கோட்பாடு மறுக்கவில்லை என்றா? தம் விருப்பங்களுக்கு ஏற்ப முடிவுகளைத் திரிப்பது என்பது இதுதான்.

நண்பர் ஆஷிக் தன்னுடைய விருப்பங்களுக்காக ரிச்சர்ட் டாக்கின்சையோ, டாக் ஆர்ஜின்ஸ் தளத்தையோ துணைக்கழைப்பது உள்நோக்கம் கொண்டது. தன்னுடைய நிலையை விளக்கி அதன் தெளிதலுக்கான எடுத்துக்காட்டாய் டாக்கின்சின் கூற்றையோ, இணையதளக் கட்டுரைகளையோ காட்டினால் அது தவறல்ல, ஆனால் தன்னுடையை நோக்கம் குறித்த எந்த விளக்கங்களும் இல்லாமல் பரிணாமம் குறித்து அதன் ஆதரவாளர் ஒருவர் கூறிய கூற்றை எடுத்துக் கொண்டு அலசி ஒட்டுமொத்தமாக பரிணாமக் கோட்பாடே தவறு என்பது போலும் படைப்புவாதமே சரி என்பது போலும் தோற்றத்தை ஏற்படுத்துவது எந்த விதத்தில் சரியாகும்? அதாவது பரிணாமமா படைப்புவாதமா என்று கட்டுரையை நகர்த்துவதும்; பரிணாமக் கோட்பாட்டிலிருக்கும் நுண்ணிய பேதங்களை நிறம் பிரித்துக் காட்டி, படைப்புவாதம் குறித்து மூச்சே விடாமல் படைப்புவாதமே சரி என தோற்றம் காட்டுவதும் முரண்பாடானவை. இந்த முரண்பாட்டை தன்னுடைய விருப்ப நோக்கம் (கடவுள் நம்பிக்கை) கொண்டு பூசி மெழுகியிருக்கிறார் நண்பர் ஆஷிக்.

இந்த இடத்தில் இக்கட்டுரையை முடித்துவிட முடியும், ஆனால் மேலும் சில விளக்கங்கள் அளிப்பது சரியானதாகவும், எதிர்காலப் பயன்களுக்கு உகந்ததாகவும் இருக்கும். எல்லாவற்றையும் கடவுள் பின்னாலிருந்து இயக்குகிறார் என்பது நம்பிக்கையாளர்கள் நிலைப்பாடு, எல்லாம் தானாகவே வந்தது என்பது மறுப்பாளர்களின் நிலைப்பாடாக நம்பிக்கையாளர்கள் முன்வைப்பது. ஏன் இப்படி கூறுகிறேன் என்றால், எல்லாம் தானே வந்தது என்று கூறுபவர்கள் அல்ல மறுப்பாளர்கள். காரணகாரியங்களுக்கு ஆட்பட்டு ஒன்றன் தொடர்ச்சியாக இன்னொன்று இருக்கிறது, குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அந்த தொடர்ச்சியை இன்னும் மனிதன் அறியவில்லை, அறிவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் மறுப்பாளர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கையாளர்களோ எதுவுமே இல்லாமலிருந்து கடவுள் நினைத்ததும் எல்லாம் வந்துவிட்டது என்கிறார்கள். ஆக தானாகவே எல்லாம் வந்தது என்று கூறுபவர்கள் நம்பிக்கையாளர்கள் தானேயன்றி மறுப்பாளர்கள் அல்ல.

டாக் ஆர்கின் தளத்தை மறுப்பாளர்களின் ஆதர்ச தளமாக, அடையாளமாக கருதிக் கொண்டே நண்பர் ஆஷிக் தன் அனைத்து ஆக்கங்களையும் முன்வைக்கிறார். அவ்வாறல்ல, அந்தத்தளம் மறுப்பாளர்களால் நடத்தப்படுகிறதா இல்லை நம்பிக்கையாளர்களால் நடத்தப்படுகிறதா எனும் கேள்விகளுக்குள் புக விரும்பவில்லை. ஆனால் அதன் கட்டுரைகளுக்குள் புகுந்து செய்யப்படும் வார்த்தை விளையாடுகளுக்கு பொறுப்பேற்கச் சொல்வதைவிட அவருடைய கேள்விகளாக வெளிப்படையாக முன்வைக்கலாம்.

பரிணாமம் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருகிறார் நண்பர் ஆஷிக், அதேநேரம் பரிணாமக் கோட்பாடு கடவுளின் இருப்பையோ இல்லாமையையோ தீர்க்காது என்றும் கூறிவருகிறார். என்றால் பரிணாமத்தின் மீது அவர் திணிக்கும் சுமைகளை நீக்கிவிட்டு அதாவது கடவுளை நீக்கிவிட்டு அந்தக் கோட்பாடு குறித்து ஆஷிக் என்ன கருதுகிறார் என்பதை நண்பர் வெளிப்படுத்த முன்வர வேண்டும். ஏனென்றால் பரிணாமத்தை ஏற்கலாம் அதை கடவுள் பின்னிருந்து இயக்குகிறார் எனும் திருத்தலுடன் என்பது போன்று அவருடைய சில கட்டுரைகள் பொருள் தருகின்றன.

இனி நண்பர் ஆஷிக் எழுப்பும் கேள்விகளுக்கு வருவோம், \\\ஆக, அறிவியல் ரீதியாக உங்களால் கடவுளை மறுக்கமுடியாது/// அல்ல. நிச்சயமாக முடியும். ஆதியும் அந்தமும் இல்லாத பொருள் என்று எதையாவது அறிவியல் ஏற்குமா? பதில் கூறிப் பார்க்கலாம். மாறாக மனிதன் அத்தனை உயரமில்லை, அறிவியலுக்குள் அடங்காது, இத்யாதி .. இத்யாதி .. .. என நழுவாமல் பரீட்சார்த்த ரீதியாக இதற்கான பதிலை தேடிப் பார்க்கலாம்.

கடவுள் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்பது வெறுமனே உளவியல் ரீதியான கேள்வி மட்டுமல்ல. சமூக ரீதியாக கடவுளை மறுக்கும் கேள்வி. சமூகம் ஏன் இப்படி இருக்கிறது? ஏன் அனைவரும் அனைத்து வளங்களும் வசதிகளும் வாய்ப்புகளும் பெற்று இருக்க முடியாது எனும் கேள்வி சரியான பாதையை தேர்ந்தெடுக்க உதவும் என்றால்; கடவுள் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா எனும் கேள்வி ஒரு தவறான பாதையை விலக்க உதவும்.