Tuesday, 23 August 2011

ஃபிர்அவ்னும் குர் ஆனின் கட்டுக் கதைகளும்



குர் ஆனின் பெருமைகளை கூறும் சொற்பொழிவுகளில் பாதுகாக்கப்பட்ட பிர்அவ்னின் உடலுக்குதனி இடம் எப்பொழுதும் உண்டு.

10:92 எனவே, இன்று உன்னை - உன்னுடைய உடலோடு உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ ஒரு படிப்பினையாய் இருப்பதற்காக நாம் பாதுகாப்போம்...

என்ற குர் ஆன் வசனத்தையும் மனிதர்களால் பாதுகாக்கப்பட்ட இரண்டாம் ரமேசஸ்-ன் உடலையும் பக்குவமாக இணைத்துக் கூறி அப்பாவி வெகுமக்களை வியப்பினால் புல்லரிக்கச் செய்துவிடுகின்றனர். 

இதில் வியப்பதற்கு எதுவுமில்லை. பிர்அவ்ன்-ஃபேரா (Pharaoh) என்பது, அரசர், மன்னர், பிரதமர், முதலமைச்சர் என்று ஆட்சியாளர்களைக் குறிப்பிடுகின்றதைப் போன்ற பொதுப்படையான பெயர்ச் சொல். குறிப்பாக கூறுவதென்றால், பிர்அவ்ன்-ஃபேரா (Pharaoh) என்பது பண்டய எகிப்திய அரசர்களின் பட்டப்பெயர்கள். பிர்அவ்ன் என்ற இறந்த அரசர்களின் உடல்கள் பிரமிடுகளில் வைத்து பாதுக்காக்கப்படுவது, முஹம்மது அவர்களின் காலத்து மக்கள் மட்டுமல்ல இறந்த உடல்களை மம்மிகளாக பாதுகாக்க துவங்கிய காலத்திலிருந்தே அனைவரும் அறிந்திருந்த ஒரு மிகச் சாதாரணமான செய்திதான் என்று மறுப்புக்களை கூறினாலும் இஸ்லாமியர்கள், பாதுகாக்கப்பட்ட பிர்அவ்னின் உடலை விடுவதாக இல்லை. அப்பாவி முஸ்லீம்களின் கைப்பேசிகளிலும் இன்றும் காணப்படும் இரண்டாம் ரமேசஸ்-ன் உடலை காண்பிக்கும் வீடியோ காட்சிகளே இதற்கு உதாரணமாகும்.

காலம் சென்ற சவுதி அரசர் ஃபைஸல் அவர்களின் குடும்ப மருத்துவர் மாரீஸ் புகைல் என்பவர் 1976-ல் இதற்கு திரைக்கதை அமைத்தார். அவர் எழுதிய “The Bible, The Quran and Science” என்ற புத்தகம், இஸ்லாமிய உலகின் பட்டிதொட்டிகளில் எல்லாம்  டாலர்களைக் குவித்தது. ஏறக்குறைய எல்லா முஸ்லீம் நாடுகளும் இப்புத்தகத்தை தங்களது தாய்மொழியில் மொழிபெயர்த்து புண்ணியம் தேடிக் கொண்டன. இன்று மதரஸாக்களிலிருந்து வெளியேரும் ஒவ்வொரு முல்லாவும் தவறாமல் படிக்கின்ற வேதபுத்தகமாகவும் இது ஆகிவிட்டது. 

நாம் குர் ஆன் கூறும் பிர்அவ்னின் கதையைத் தொடர்வோம்.

எகிப்திலிருந்த யூதர்களை  பிர்அவ்ன், அவர்களது பச்சிளம் ஆண்மக்களைக் கொன்றும், பெண்மக்களை அடிமைகளாக வாழவிட்டும் கொடுமை செய்தான். இக்கொடுமையிலிருந்து யூதர்களைக் காப்பாற்ற, அல்லஹ், மூஸாவையும், அவரது சகோதரர் ஆரூனையும் தனது தூதராக பிர்அவ்னிடம் அனுப்புகிறான். அங்கு நிகழும் மாயாஜாலப் போட்டியில் மூஸாவின் வெற்றி, பிர்அவ்னைக் கோபப்படுத்துகிறது. இருப்பினும் யூதர்களை மூஸாவுடன் அனுப்ப ஒப்புக்கொள்கிறான். மூஸாவின் தலைமையில் செல்லும் யூதர்களை அழிக்க பின்தொடந்த பிர்அவ்னையும் அவனது படைகளையும் செங்கடலில் மூழ்கடித்து அழித்ததாக அல்லாஹ் கூறுகிறான். 

தண்ணீரில் அமிழ்த்திக் கொன்றதாக அல்லாஹ் உரிமைகோரும் பிர்அவ்னின் பெயரையோ, அவனது உடல் பாதுகாக்கப்பட்ட முறையையோ, இடத்தையோ குர்ஆன் குறிப்பிடவில்லை. 

Onlinepj.com-ன் வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற நூலில் 33 பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் எனும் தலைப்பிலிருந்து...


கிபி 1800 களில் ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் உட்பட அரசகுடும்பத்தினரின் பெரும்பாலான பாதுகாக்கப்பட்ட உடல்கள் நைல் நதிக் கரையில் கட்டப்பட்டிருந்த பிரமிடுகளிருந்துதான் கண்டெடுக்கப்பட்டன. ஃபிர்அவ்ன் ரமேசஸ் உடல், வரலாற்று ஆய்வாளர்களால்  KV7 என்று குறிப்பிடப்படும் பிரமிடுவில்தான் வைக்கப்பட்டிருந்தது. கொள்ளையர்களை அஞ்சிய அன்றைய மதகுருமார்கள், ஃபிர்அவ்ன் ரமேசஸ்-ன் உடலைப் பாதுகாப்பான வெவ்வேறு இடங்களுக்கு இடம்மாற்றினர். இத்தகவல்கள் அனைத்தையும் ரகசியக் குறியிடுகளாக ஃபிர்அவ்ன் ரமேசஸ்ன் உடலைச் சுற்றியுள்ள துணியில் பதிந்துள்ளனர்.

உண்மை இவ்வாறிருக்க பனிப்பாறைகளுக்கிடையே ஃபிர்அவ்ன் ரமேசஸ்-ன் உடல் இருந்ததாக கதையளக்கிறார் பீஜே. ஃபிர்அவ்ன் ரமேசஸ்-ன் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பள்ளத்தாக்கு இதுதான். பனிப்பாறை தென்பட வாய்ப்பிருக்கிறதா? என்பதை நீங்களே பாருங்கள்


பீஜே இப்படி கதையளந்தற்கு காரணம் உள்ளது. பின்வரும் படத்தைப் பாருங்கள்
       
Mummy of Ramses II

இந்த உடல் மனிதர்களால் பாதுகாக்கப்பட்டதுதான் என்பது பார்த்தவுடன் எளிதாக சொல்ல முடியும். அல்லாஹ்வின் வித்தை இதில் ஏதுமில்லை என்பது பீஜேவும் உணர்ந்திருக்கிறார். எனவேதான் பனிப்பாறை கதையை நுழைக்க முயற்சிக்கிறார்.

1974-ல் ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் உடல் பூஞ்சை தாக்குதல் காரணமாக விரைவாக பாதிப்படையத் துவங்கியது. அப்பொழுதும் அல்லாஹ் எந்த தடுப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஆய்வாளர்களின் முயற்சியால் கடவுச்சீட்டு சகிதமாக ரமேசஸ்-ன் உடல் பாரீஸூக்கு அனுப்பி அரசரின் பூஞ்சை நோய்க்கு மருத்துவம் செய்து அவரது உடல்நிலை சரிசெய்யப்பட்டது. இந்த ஆய்வின் பொழுது அரசரின் உடல் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், போர்க் காயங்கள், மூட்டுவலி போன்றவைகளால் இயற்கையாக மரணமடைந்திருக்க வேண்டுமென்றும் கண்டறியப்பட்டது. 

வாதத்திற்காக குறிப்பிட்ட அந்த உடல் குர் ஆன் குறிப்பிடும் பிர்அவ்னின் உடல்தான் எனக் கொண்டாலும்,  செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்ன் ரமேசஸ், பாதுகாக்கப்பட்ட மம்மியாக மாறியது எப்படி? நைல் நதிக்கரைக்கு வந்தது எப்படி? என்ற எளிமையான கேள்விகளுக்கு விடையில்லை. 

இந்த இரண்டாம் ரமேசஸ்-ற்கும் ஆயிரம் ஆண்டுகள் முன்பு ஆட்சி செய்த பல்வேறு ஃபிர்அவ்ன்களின் உடல்களையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவைகளைப் பாதுகாத்த மனிதனின் திறமை, அல்லாஹ்வையும் விஞ்சி நிற்கிறதே?

இக்கதையை இட்டுக்கட்டி கதையை உருவாக்கியவர்கள், குர் ஆனின் மற்ற வசனங்களை கவனிக்கத் தவறி விட்டனர்.

7:137 ... இன்னும் உம்முடைய ரப்பின் வாக்கு பனீ இஸ்ராயீலின் மீது-அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால் நிறப்பமாய் விட்டது; பிர் அவ்னும் அவனுடைய சமூகத்தினரும் உண்டாக்கியிருந்தவற்றையும், அவர்கள் உயரமாகக் கட்டியிருந்தவற்றையும் நாம் அழித்து விட்டோம்.

அதாவது, ஃபிர்அவ்னையும் அவனது படைகளையும் செங்கடலில் மூழ்கி அழியுமாறு செய்ததுடன் அல்லாஹ்வின் கோபம் அடங்கவில்லை. மேலும்  தண்டிப்பதற்காக, ஃபிர்அவ்னால் கட்டப்பட்ட அனைத்தையும் தரைமட்டமாக்கி அழித்து விட்டதாக அல்லாஹ் கூறுகிறான். அழிக்கப்பட்ட கட்டிடங்கள் எவை?

எகிப்து, உலகின் பெரும் நாகரீகங்கள் தோன்றிய இடங்களில் ஒன்று. அதனை ஃபரோஹ் (பிர்அவ்ன்) என்றழைக்கப்பட்ட அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். பெரும் எண்ணிக்கையிலான அரண்மனைகளும், நினைவுச் சின்னங்களும், வழிபாட்டுத்தளங்களும் கிமு 2686 முதல் கிமு 2134 வரை கட்டப்பட்டன. ஃபிர்அவ்ன்கள் இறந்த பிறகு அவர்களது உடல்களை வைப்பதற்காக பிரமிடுகளும் கட்டப்பட்டன.

அவர்கள் உயரமாகக் கட்டியிருந்தவற்றையும் நாம் அழித்து விட்டோம்என்பது பிரமிடுகளையும் இதர கட்டிடங்களையும் குறிப்பிடுகிறது என்பதில் சந்தேகமில்லை. 

இன்றும் கம்பீரமாக, உலக அதிசயங்களில் ஒன்றாக, வானுயர்ந்து நிற்கும் பிரமிடுகளையும், பண்டைய வழிபாட்டுத்தலங்களையும், சிங்க உடலும் மனிதத்தலையும் கொண்ட பிரம்மாண்ட  சிற்பங்களும் குர்ஆனின் வார்த்தைகளிலுள்ள ஓட்டையை விளக்குகிறது.

பிரமிடுகளிகள் மட்டுமல்ல, ஃபிர்அவ்ன் ரமேசஸ் தன்னைத்தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்டவன். தனக்காக வழிபாட்டு தலங்களையும், தனது சிலைகளையும் நிறுவிக் கொண்டவன்.

இன்றும் அபூசிம்பலில் கம்பீரமாக நிற்கும் ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் கோவில்

          
         

ஃபிர் அவ்ன் ரமேசஸ்-ன் சிலை
இவைகள், அவர்கள் உயரமாகக் கட்டியிருந்தவற்றையும் நாம் அழித்து விட்டோம்”  என்ற அல்லாஹ்வின் கொக்கரிப்பை அர்த்தமற்றது என்று நிரூபித்துவிட்டது. அல்லாஹ், பொய்யான செய்திகளைக் கூறி ஏழாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களை முட்டாள்களாக்கி விட்டான். ஒரு பொய்யன் இறைவனாக இருக்க முடியாது. முழுக் குர்ஆனும், தற்குறி முஹம்மதின் கற்பனைகளே என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

Friday, 12 August 2011

யாருக்கு யார் காஃபிர் – சிறுகதை


இது உண்மை நிகழ்வல்ல, அதே நேரம் கற்பனையுமல்ல. 

வேடதாரிகள் நிரம்பிய இவ்வுலகில் என்னைப்பற்றி கொஞ்சமாவது சொன்னாத்தான் எனக்கும் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும். தற்பெருமை அடிக்கிறேன்னு நினைக்காம கொஞ்சம் கேளுங்கள். என் பெயர் மாணிக்கம். அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா? ஆமாம் அதில் என்ன இருக்கிறது? மாணிக்கம் என்றதும் நான் என்ன விலைமதிக்க முடியாத, இவ்வுலக சீமான்களின் அழகுப்பொருளா? நானும் ஒரு தொழிலாளிதான். பத்தாம் வகுப்புவரை படித்த நான் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்கிறேன்.

இதோ என்னருகில் நிற்கிறானே அப்துல் ரஹ்மான், அவன் என்னுடைய பள்ளித் தோழன். ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்த தோழன். அவனும் சுமாராத்தான் படிப்பான். ஆனாலும் கல்லூரிவரை போய் உப்புபெறாத ஒரு பட்டப்படிப்பை முடித்துவிட்டான். பேருக்கு பக்கத்தில போட்டுக்கலாம். அவனுக்கு தொழில் மளிகை கடைதான். வெளியூர் வெளிநாடு போய் சம்பாதிக்கனும் என்றுதான் அவன் ஆசைப்பட்டான். அவனுடை அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம போனதாலே அவங்களுடைய மளிகைக் கடையை கவனித்துக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. காசு பணம், நில புலன்கள் என்று கொஞ்சம் தாராளமாக அவர்களிடம் உள்ளதால் வெளிநாட்டுப் பொருள்களை பயன்படுத்துவதில் அவனுக்கு குறையில்லை.

      சாயங்காலம் ஆனா பள்ளிக்கூடத் திடலில் தினமும் பூப்பந்தாட்டம் ஆடுவோம். அப்புறம் கொஞ்சநேரம் டீ கடையில் அரட்டை. 35 வயதாகிவிட்டாலும் இது தொடர்ந்து வருகிறது. ரஹ்மான் ரொம்ப நல்லவன். அவங்கவீட்டுக்குப் போனா அவனுடைய அப்பா அம்மா தன் பிள்ளையைப்போல் அன்பா உபசரிப்பாங்க. உண்ணத் தருவார்கள். குறைந்தப் பட்டசம் டீயாவது குடிக்காம வெளியே வரமுடியாது. எங்கள் ஊர் இசுலாமியர்கள் அதிகம் வாழும் சிறு நகரம் என்பதால் எனக்கு அதிக நண்பர்களும் பழக்கவழக்கங்களும் இசுலாமியர்கள் மத்தியில் தான். மாற்று மதத்தவர்களை சகோதரர்கள் என்று அவர்கள் சொல்லுவதை பொதுவாக அணைவரும் அறிந்திருந்தாலும், ரஹ்மான் gifஎன்னிடம் எந்த வேறுபாடும் காட்டியதில்லை எனபதால் எனக்கு அவர்கள் அப்படி கூறியதில் நம்பிக்கை அதிகமாகவே இருந்தது.

இசுலாமியர்களின் திருமண விருந்துகளில் 5 அல்லது 6 பேர் ஒன்றாக வட்டமாக அமர்ந்து gஒரே (பெரிய) தட்டில் உண்பது வழக்கமாக இருந்தது. அந்த தட்டுக்கு சஹன் என்பர். இன்று, இசுலாமியர்களும் அப்படி உண்பதை அருவெருப்புப்பட்டு அதனை ஒழித்துவிட்டது தனிக்கதை. அப்படி அந்த தட்டில் ரஹ்மான் மற்றும் பிற நண்பர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து வாலிபர்களாக இருக்கும்போது உணவு உண்போம். அது அந்தக் காலம்.

இன்று  எங்களிர்வருக்கும் இடையில் ஒரு சிக்கல். எனக்கு ஏற்பட்ட விபரீதமான ஆசை இந்த சிக்கலை உருவாக்கிவிட்டது. அது என்ன என்று சொல்கிறேன்.

நான்        : ரஹ்மான், எனக்கு ஒரு சின்ன ஆசை.

ரஹ்மான்    : என்னடா?

நான்        : என்னை இன்னிக்கு உன்னோடு பள்ளிவாசல்ல தொழுக
  கூட்டிக்கொண்டு போயேன்.

ரஹ்மான்    : என்னடா சொல்ற! தொழுக வர்ரீயா?

நான்        : ஆமாம்!

ரஹ்மான்    : ம்ம்... அதெல்லாம் முடியாதுடா. உனக்கேன்டா இந்த ஆசை?

நான்        : அது என்னவோ. கூட்டிப்போவியா மாட்டியா?

ரஹ்மான்    : அங்கெல்லாம் தொழ உன்னை விடமாட்டாங்கடா?

நான்        : ஏன்?

ரஹ்மான்    :டேய்! லூசு. முஸ்லிமா இல்லாதவங்க உள்ள வந்து
 தொழக்கூடாதுடா.

நான்        : அதுதான் ஏன்னு கேட்கிறேன்?

ரஹ்மான்    : ஏன்னா நீ முஸ்லீம் இல்ல.

நான்        ; நான் முஸ்லீம் இல்லேன்னா அல்லாவை தொழக்கூடாதா?

ரஹ்மான்    : எனக்கு சரியா பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நீ பள்ளிவாசல் உள்ள வந்து தொழக்கூடாது.

நான்        : என்னை சகோதரன் என்று அழைக்கிறீர்கள். அப்படியிருக்க நான் தொழவரக்கூடாதா?

ரஹ்மான்    : டேய்! அதுக்கெல்லாம் சில வழிமுறை இருக்குதுடா. சுத்தமா இருக்கனும்....

நான்        : சுத்தமா கொழும்பு சோப்பு போட்டு இப்பத்தான் குளிச்சிட்டு வர்ரேன். சென்ட் எல்லாம் அடிச்சிகிட்டு சும்மா கம.. கமன்னு இருக்கேன் மாப்பிளே.
ரஹ்மான்    : அது மட்டுமில்டா..... ஒன்ணுக்கு போனா கழுவனும், ஒழுச்செய்யத் தெரியனும்....

நான்        : நான்தான் குளிச்சிட்டேன்ல. இதுக்கப்புறம் ஒண்ணுக்கு போனா கழுவிக்கிறேன். ஒழுச்செய்ய சொல்லித்தா அதன்படி செய்றேன்

ரஹ்மான்    : முஸ்லீம்மா இல்லாதவங்க உள்ள வந்து தொழக் கூடாதுடா.

நான்        : அதுதான் ஏன் என்கிறேன்? யாரை முசுலீம் என்கிறாய்? பெயரை மட்டும் வைத்துக்கொண்டிருப்பவன் முசுலீம் இல்லை; குர்ஆன், முகம்மதுநபி சொல்வதை கடைபிடிப்பவன்தான் முசுலீம் என்கிறாய். ஆனால் தண்ணியடிப்பவன், விபச்சாரியிடம் போறவன், சூன் காளி சுதி காளி என்று பொண்ணுகளை துரத்துரவன், வட்டி வாங்குகிறவன், சாராயம் விற்கிறவன், கடத்தல் தொழில் செய்கிறவன், கள்ள வியாபாரம் செய்றவன் இப்படி எல்லோரும் பள்ளிவாசல் உள்ள வந்து தொழத்தானே செய்கிறார்கள். அவர்களை இப்படி எல்லாம் செய்யாத சுத்தமானவர்கள் சோதனை செய்தா தொழுவதற்கு உள்ளே விடுறீங்க? அத விடு மாப்ளே1 இன்னிக்கு பாரு. உங்களை எல்லாம் முஸ்லீம் இல்லேங்கிறார் பி.ஜே அண்ணன். நீங்கலெல்லாம் அவர் கூட்டத்தை நஜாத் என்று சொல்லி முஸ்லீம் இல்லீங்கிறீங்க. அப்படி உங்களுக்குள்ளேயே ஒருத்தர ஒருத்தர் முஸ்லீம் இல்லேன்னு சொல்லிக்கிறீங்க. ஆனால் தொழுக உள்ளே விடுறீங்க. அப்படியிருக்க சகோதரனுன்னு என்னை சொல்லிக்கிட்டு உள்ள வந்து தொழக்கூடாதுன்னு சொல்றியே. இது நியாயமா?

ரஹ்மான்    : அது புனிதமான இடம்டா !

நான்        : டேய்!  இந்த பள்ளிவாசல கட்டினது நாங்க. இன்னவரைக்கும் மராமத்து வேளைகளை உள்ள வந்து செய்றதும் நாங்க. ஆனால் தொழ மட்டும் நாங்க உள்ள வரக்கூடாதா? நாங்க சிலையை வணங்குகிறோம். அதனை கல்லா இருந்தாலும் தெய்வத்தின் உருவம் என்பதால் புனிதமானது என்கிறோம். நீங்க என்ன சொல்லுறீங்க. அது வெறும் கல்லு. தெய்வமாக முடியாது, வெறும் கல்லு புனிதமாக முடியாது என்றும் சொல்லுறீங்க. அப்படின்னா இது வெறும் கட்டிடம்தானே. இது புனிதமான இடம், வேறு மதத்தவங்க உள்ள வந்து  அல்லாவை தொழக்கூடாது என்று ஏன் கூறுகிறாய்? ஒருவேளை உள்ள வந்து மராமத்து வேலை செய்துட்டு நாங்க வெளிய வந்தப்புறம், பாப்பான் தீட்டு கழிப்பதுபோல் தீட்டுக்கழித்து புனிதமாக்குவீங்களோ?

ரஹ்மான்    : அப்படியில்லேடா....

நான்        : என்ன அப்படியில்ல... இன்னும் கொஞ்சம் நான் சொல்ரதை கேட்டுட்டு பதில் சொல்லு. கோவில், சர்ச்சுகளில் பாரு. யாராவது நீ எந்த மதத்தை சேர்ந்தவன்னு பார்த்தா உள்ள விடுறாங்க. சில கோவில் விதிவிலக்கா இருக்கலாம். அங்குகூட நீ சொல்லுற மாதிரி அதற்கான ஒழுக்கத்துடன் போனா அதாவது வேட்டி கட்டிக்கிட்டு சட்டைபோடாம போனா உள்ள விட்டுடுவாங்க. மாற்று மத சகோதர்கள் என்று மூச்சுக்கு முன்னூறு தடவ சொல்ற நீ கூட்டிக்கிட்டு போகமாட்டேங்கிற. தர்காவில மட்டும் உள்ள விடுறீங்களே அது ஏன்டா? காசு வருதுன்னா?

ரஹ்மான்    : தர்கா வழிபாடு ஹராம் மச்சான். அல்லாவைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாதுங்கறது எங்க கொள்கை. தர்காவுக்கு போறவங்க முஸ்லீம் இல்லேடா.

நான்        : அப்படி போடு ! தங்களை இசுலாமியர்கள் என்று சொல்லிக் கொண்டு தர்காவுக்கும் போற கோடான கோடிமக்களை இசுலாமியர்கள் இல்லை என்று சொல்ற. நாத்திகர்கள் அல்லாவே இல்லை என்று சொல்லும்போது கோடிக்கனக்கானவர்கள் நம்புவது பொய்யாகுமா? அவங்களெல்லாம் என்ன முட்டாள்களா என்று சொல்லுறீங்க. கோடான கோடிபேர்களாக தர்கா வழிபாடுள்ளவர்கள், இந்துக்கள், கிறித்தவர்களா உள்ளபோது அவர்களின் கடவுளை பொய் என்று நாக்கை புரட்டி பேசுறீங்க. அதவிடு மச்சான். தர்கா வழிபாடு உள்ளவர்களை பள்ளிவாசல் உள்ள விடுவீங்களா மாட்டீங்களா? தர்கா வழிபாடு உள்ளவர்கள் என்று எப்படி கண்டுபிடிப்பீங்க?

வின் டிவில, ஒருநாள் ஒரு பொம்பளை கேட்ட கேள்விக்கு பி.ஜே. அண்ணன் பதில் சொல்லாராரு

அந்தப் பெண் : தர்கா வழிபாடு உள்ளவங்களோடு திருமண உறவுகள் வைத்துக் கொள்ளலாமா ? (சாராம்சத்தில் சுருக்கப்பட்டுள்ளது)

பி.ஜே. அண்ணன் : (அவர் ஸ்டைல) அந்த அம்மா என்ன கேட்குறாங்கன்னா...தர்காவழிபாடு கூடாதுன்னு சொல்றீங்களே. அப்படின்னா அவங்க வீடுகளில் பொண்ண குடுக்கலாமா கூடாதான்னு கேட்குறாங்க. நீங்க ஒண்ண புரிஞ்சிக்கனும். தர்கா வழிபாடு பன்றவங்க முஸ்லீம்களே இல்லேன்னுப்புறம் அவங்க வீட்டுக்கு பொண்ண குடுக்கலாமா கூடாதான்னு கேட்குற கேள்விக்கே இடமில்ல.

----இப்படி சொல்லாரு. நான் என்ன கேட்கிறன்னா.. பி.ஜே அண்ணன், அவங்க ஆட்களை பள்ளி வாசலுக்கு உள்ளே விடலைன்னு ஊருக்கு ஊரு தனி பள்ளிவாசல் கட்டிக்கிட்டு வர்ராரு. அது உள்ளே தர்கா வழிபாடுகாரர்களை (குல தெய்வத்தை வழிபடுறவங்கன்னு சொல்லறாங்க) உள்ளே விடுவாரா? மாட்டாரா? எப்படி அடையாளம் தெரிஞ்சு தடுப்பாரு?

ரஹ்மான்    : ஊருக்கு ஊரு யாரு தர்காவுக்கு போறாங்கன்னு தெரியும்லே..

நான்        : அது சரிப்பா. தொண்டிக்காரன் அதிராம்பட்டினத்துக்கு போறான்னு வச்சுக்க. அப்ப என்ன செய்றது?

ரஹ்மான்    : டேய் ! ஏண்டா என்ன போட்டு உசிர வாங்குற...

நான்        : மச்சான் ! தர்கா வழிபாட்டுகாரங்களை காபிர் என்று சொன்னாலும் தலையில் தொப்பியும், அப்துல்காதர்னு பேரும் இருந்தா உள்ள விடுவாங்கள்ள. அது போல சகோதர்கள் என்று எங்களைச் சொல்லும் நீங்கள் தலையில் தொப்பி போட்டுக்கிட்டு வந்தா உள்ள விடுவீங்களா? மாட்டீங்களா? நாங்க இரண்டுபேரும் காபிர்கள்தானே !

ரஹ்மான்    : டேய் ! ஆளை விடுடா. நாளைக்கு அஸரத்து (இமாம்) கிட்ட கேட்டுக்கொண்டு வந்து சொல்லறேன்.

நான்        : அப்போ உனக்கும் உங்க மதத்தைப் பத்தி தெளிவா தெரியாதுன்னு சொல்லு. சரி பரவாயில்ல. கேட்டுக்கிட்டு வந்து சொல்லு.

எங்கள் இருவருக்கும் இடையில் சிக்கல் ஏன் ஏற்பட்டது என்று புரிந்து விட்டதா? ஆனாலும் அவன் அஸரத்திடம் இதுவரை கேட்காததால் நாங்களிருவரும் இன்றும் நண்பர்களாகத்தான் உள்ளோம்.

Wednesday, 10 August 2011

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் 1


ஒரு தீவிர இஸ்லாமிய பற்றாளனாக இருந்து, தன்னுள் எழுந்த சந்தேகத்திற்கு விடை தேடும் பொருட்டு வேதத்தை, ஹதீஸ்களை ஆழ்ந்து படிக்கப் படிக்க அது தன்னை நாத்திகனாக மாற்றிய சுவடுகளை நமக்கு இந்தத் தொடர் மூலம் காட்டவிருக்கிறார் நண்பர் தஜ்ஜால். இதில் எழுதப்படும் அம்சங்களை கருத்துன்றிப் படிக்கும் எவரும் இஸ்லாத்திலிருந்து வெளியேறாமல் இருக்க முடியாது சவால் விடுக்கிறார். என்ன நண்பர்களே! நண்பர் தஜ்ஜால் அவர்களின் சவாலை ஏற்க நீங்கள் தயாரா?

இஸ்லாத்தை கடந்த சுவடுகள் பகுதி 1 -

72 கூட்டத்தினர் யார்?

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு நபித்தோழர்களுக்குள் ஏற்பட்ட குழப்பத்தை மிக விரிவாக கூறும் ஒரு சொற்பொழிவு. WIN TV ல் கடந்த 2006 ஆம் ஆண்டு புனித ரமளானின் சஹர் (அதிகாலை) நேரத்தில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அந்த சொற்பொழிவின் ஆரம்பப் பகுதிகள் நபித்தோழர்களின் உயர்வான குணங்களையும், நபி (ஸல்) அவர்களின் மீது நபித்தோழர்கள் வைத்திருந்த அன்பையும் விளக்கமாக கூறியது. வரலாறைத் தெரிந்து கொள்ள நான் ஆவலானேன்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு யார் வழி நடத்துவது? என்ற கேள்வி எழ ஆரம்பமானது குழப்பம். நபி, மரணப் படுக்கையில் இருக்கும் பொழுதே வாரிசுரிமை விவாதம் துவங்கிவிட்டதாக புகாரி ஹதீஸ் கூறுகிறது. அபூபக்கர் சித்தீக் அவர்களின் காலத்தில் பதுங்கியிருந்த ரத்தவெறி உமர் அவர்களின் ஆட்சி காலத்தில் அடக்கி வைக்கப்பட்டு இருந்தது. இறுதியில் விஷம் தோய்த்த ஈட்டியாக உமர் அவர்களின் உயிரைப் பறித்து ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற வெளிப்பட்டது ஒரே கொள்கையின் கீழ் சகோதரர்களாக, ஒழுக்கசீலர்களாக, மனிதநேயமிக்கவர்களாக, பெருந்தன்மை கொண்ட பண்பாளர்களாக முஹம்மது நபி (ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட நபித்தோழர்கள், ஒருவருக்கொருவர் நயவஞ்சகமாக, கொலை வெறி பிடித்தவர்களாக நடந்து கொண்டர்கள்.

புஹாரி ஹதீஸ் : 4024
சயீத் பின் முஸய்யப் (ரலி) அவர்கள் கூறியதாவது.
முதல் குழப்பமான உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை நடைபெற்றது. அது பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு இரண்டாம் குழப்பமான ஹர்ரா போர் நடைபெற்றது. அது ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பங்கு கொண்ட ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. பிறகு மூன்றாவது (குழப்பம்) நடைபெற்றது. மக்களுக்கு ஆற்றல் இருந்தும் (அந்தக் குழப்பம்) விலகவே இல்லை.

(ஸல் – “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” என்று கூறி முஹம்மது நபிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. தனது பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூறவேண்டும் என்று முஹம்மது நபி முஸ்லீம்களுக்கு கட்டளையிட்டுள்ளார் .

அலை – “அலைஸலாம்” இதர நபிகள் (இறைத்தூதர்களின்) பெயர் உச்சரிக்கப்படும் பொழுதெல்லாம் இந்தப் பிரார்த்தனையைக் கூற நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல்.
ரலி – “ரலியல்லாஹுஅன்ஹு” குறிப்பிட்ட அந்த நபித் தோழருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய நினைவூட்டுவதற்காக பயன்படுத்தப்படும் சொல். “ஸல்லல்லாஹூ அலைவஸல்லம்” போன்று “அலைஸலாம்” “ரலியல்லாஹுஅன்ஹு” போன்ற பிரார்த்தனைகளைக் கூறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.)

என்பத்தி இரண்டு வயதான முதியவர் உஸ்மான் அவர்களின் உயிரைப் பறித்தது எது? இதில் மிகப் பெரும் கேவலம் என்னவென்றால், அந்த கேவலமான நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் பல முக்கியமான தோழர்களும் அவர்களுடைய புதல்வர்களின் பங்களிப்புதான். இவர்களில் பலர் சொர்கவாசிகளென்று நபியால் அறிவிப்புச் செய்யப்பட்டவர்கள். எத்தனை நபித்தோழர்கள் இயற்கையான மரணத்தை சந்தித்தனர்? இன்னும் சிலர், அலீ அவர்கள் உட்பட தவறுகளைக் கண்டு நியாயத்தை வெளிப்படுத்தாமல் வாய் மூடி மவுன சாமியார்களாக இருந்தனர். அலீ அவர்கள் பதவி ஏற்றவுடன், உஸ்மான் அவர்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவேன் என்று முழங்கினார். நாற்காலி மோகம் யாரையும் விடவில்லை.
குழப்பங்கள் தோன்றும் வேளைகளில் அதை எதிர்த்து எழுந்து நிற்பவனை விட அமைதியாக அமர்ந்திருப்பது மேலானது என்ற ஹதீஸை அவர்கள் நிலைநிறுத்தினர். விளைவு ரத்த வெறி இன்று வரை தொடர்கிறது.

புஹாரி ஹதீஸ் : 7082
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். விரைவில் சில குழப்பங்கள் தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாக) அமர்ந்திருப்பவன் (அவற்றை நோக்கி) எழுந்து நிற்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடப்பவனைவிடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே நடப்பவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான், அதில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அவை அழிக்க முற்படும். அப்போது ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ யார் பெறுகின்றாரோ அவர் அதன் வாயிலாகத் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.

இதில் மாற்றான் மனைவியை அபகரிக்கும் செயல் வேறு. அந்த நிகழ்வுகளை நினைத்தால் மலக்கழிவுகளுக்குள் விழுந்ததைப் போன்ற உணர்வு. இது யாருடைய தவறு? சஹாபாக்களுக்குள் சுயநலம், அதிகாரவெறி, நயவஞ்சகம், உச்சகட்டமாக கொலைவெறி.

உதாரணத்திற்கு, உஸ்மான் அவர்களின் கொலைக்கு பழிவாங்குவதாக கூறி, நான்காவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலீபா அலீ அவர்களை எதிர்த்து, முஹம்மது நபி அவர்களின் அன்புக்குரிய மனைவி ஆயிஷா அவர்கள் தலைமையில் பஷராவிற்கு அருகில் குரைபா என்ற இடத்தில் போர் நிகழ்ந்தது.
போர்களத்தில், ஆயிஷாவின் ஒட்டகத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நிகழ்ந்ததால் இந்தப் போர் Battle of the Camel (ஒட்டகப் போர்) என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. ஆயிஷா அவர்கள் தோற்கடிக்கப்பட்ட அந்த போரில், முஸ்லீம்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகம். வேறு சில வரலாற்றுக் குறிப்புகள் இருபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்கிறது. இருதரப்பிலும் இறந்தவர்களில் பலர் முஹம்மது நபி மற்றும் கலீபாக்களான அபூபக்கர், உமர் உஸ்மான் ஆகியோர் தலைமையிலும் ஒன்றாக காஃபிர்களை (மாற்று மதத்தினர்- முஹம்மது நபியை இறைத்தூதர் என்று ஏற்க மறுப்பவர்கள்) எதிர்த்து போரிட்ட மிக முக்கியமானவர்கள், அலீ அவர்களுக்கும் நன்கு தெரிந்த சஹாபாக்கள்.

இவ்வுலகிலேயே, முஹம்மது நபி (ஸல்) அவர்களால் அறிவிப்புச் செய்யப்பட பத்து சொர்க்கவாசிகளுள் அலீ அவர்களும் ஒருவர். போற்றுதலுக்குரிய நான்கு கலீபாக்களுள் ஒருவர். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அன்புக்குரிய மகளின் கணவர் என்று பல சிறப்புக்களை உடையவர். ஆயிஷா முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு மிகவிருப்பமான மனைவி மேலும் உலக முஸ்லீம்கள் அனைவருக்கும் தாய் என்ற தகுதியுடையவர்.

போர் என்பது ஒரு உச்சகட்ட நடவடிக்கை. இந்தப் போர் ஏற்பட இவர்களில் காரணம் யார்?
இந்த ஒட்டகப் போரில் கொல்லப்பட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லீம்களின் மரணத்திற்கு பொறுப்பு யார்?

அலீ அவர்களின் ஆதரவாளர்களில் சிலர், உயிருடன் இருக்கின்ற தோல்வியடைந்த ஆயிஷாவின் ஆதரவாளர்களை அடிமைகளாக்கி பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றனர். அலீ அந்த கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். உடனே அவர்கள் பஷரா நகரத்து மக்களின் உடைமைகளை சூறையாட அனுமதி கேட்கின்றனர். அதையும் அலீ மிகக் கடுமையாக மறுத்து, போர்களத்தில் கிடைத்த பொருட்களை பகிந்தளித்தார்.

போரில் தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டு பெரும் செல்வம் ஈட்டலாம் என்று அலீ அவர்களுடன் இணைந்து போரிட்ட பலர், தோல்வியடைந்தவர்களின் உடைமைகளை கொள்ளையிட அனுமதி மறுக்கப்பட்டதால் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இந்த அதிருப்தி முவஆவியா அவர்களுக்கு எதிரான போருக்கு படை திரட்டுவதில் அலீ அவர்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியது என்கிறது வரலாறு. இந்த போருக்கு அடிப்படைக் காரணமான உஸ்மான் அவர்களின் கொலைக்காக யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை.

புஹாரி ஹதீஸ் :7070
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.

புஹாரி ஹதீஸ் : 7072
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில் உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விடக்கூடும்.
இவர்களில் நம்மை (முஸ்லீம்களை)ச் சேராதவர்களும் நரகத்தில் வீழ்பவர்களும் யார்? இன்று நான் காணும் ஒரு சராசரி மனிதனிடம் இருக்கும் பெருந்தன்மையும், மனிதநேயமும் நபி (ஸல்) அவர்களின் நேரடிப் பார்வையில் வளர்ந்த நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியிலும்கூட இல்லாமல் போனது ஏன்?

பதவி அதிகாரங்களுக்காக நெருங்கிய உறவினர்கள் தங்களுக்குள், உறவுமுறைகளின் முக்கியத்துவம் அறியாமல், மனிதாபிமானமின்றி சண்டையிட்டுக் கொள்வது போற்றுதலுக்குரியதா?
பெண்கள், தங்களது அன்றாடத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் கூறும் இஸ்லாமில், மருமகனை எதிர்த்து போர்க்களத்திற்குச் சென்ற ஆயிஷா அவர்களின் செயல் விநோதமாகத் தோன்றியது.
நிலையற்ற இவ்வுலக வாழ்க்கையின் அதிகாரங்களுக்காக ஒருவரையொருவர் கொல்லத் துணிந்த அலீ-ஆயிஷா ஆகிய இருவரிடமும், முஹம்மது நபியின் நற்போதனைகள் பயனளிக்காமல் போனது ஏன்?
மிக நெருங்கிய உறவினர்களிடமே பெருந்தன்மையாக நடந்து கொள்ளத் தெரியாதவர்கள் மாற்று மதத்தினரை என்ன செய்திருப்பார்கள் என்ற கேள்விகள் என் மனதைக் குத்திக் கிழித்தது. இத்தகையவர்களால் அறிவிக்கப்படும் செய்திகளின் நம்பகத் தன்மை என்ன? என்ற கேள்விகள் என்னுள் ஆரம்பமானது. இந்தக் கேள்விகள் என்னை உறங்க விடவில்லை.
இரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாற்றை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. வருத்தம் தாங்க முடியாமல் 72 கூட்டத்தினர் யார்? என்ற உரையின் இறுதிப் பகுதிகளைக் கேட்க விரும்பவில்லை. என்னால் சிறிதும் நம்ப முடியவில்லை தொடர்ந்து சில நாட்கள் உறங்கவும் முடியவில்லை. நான் அந்த மிகப்பெரிய தவறுகளைச் செய்ததைப் போல என்னுள் இனம் புரியாத வலி. ஒருவேளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் வரலாற்று செய்திகள் என்ற பெயரில் தவறான தகவலைத் தெரிவித்திருக்கலாம் என நினைத்து வேறு சில மார்க்க அறிஞர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்ட பொழுது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் அவர்கள் கூறிய செய்திகளனைத்தும் உண்மை என்று ஆதாரங்களையும் குறிப்பிட்டனர்.
நான் என்னுடைய வேதனையை தெரிவித்தேன். அதற்கு அவர்கள், இப்பொழுது உங்கள் மனதில் தோன்றும் சஹாபக்களின் (நபித்தோழர்கள்) மீதான தாழ்வான எண்ணம் தவறானது. அந்த துயரமான நிகழ்வு அல்லாஹ்வின் விதி. சஹாபாக்களுக்குள் நிகழ்ந்த அத்தகைய குழப்பம் அவர்களின் மீது தாழ்வான எண்ணத்தை உருவாக்கி விடும். எனவேதான் இதைப் போன்ற செய்திகள் வெளிப்படையாக விவாதிக்கப்படாமல் மறைக்கப்பட்டது என்றனர். சிலர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரை குறை கூறினர்.

என்னால் சிறிதும் ஏற்க முடியவில்லை. இறைவனின் விதி(!?) அனைத்து பழியையும் தன் தலையில் ஏற்க இறைவன் இருக்கிறான்!. இவர்கள் எந்த பாவமும் அறியாதவர்கள்(?). மார்க்கவாதிகள், வரலாறு முழுமையாக தெரியாத பாமர மக்களிடம் மழுப்பலான பதிலைக் கூறியே சுமார் 1400 வருடங்களை கடத்தியிருக்கின்றனர். எல்லோரும் கேள்வியை ஆரம்பித்தால் எதில் முடியும் என்ற அச்சமும் பதில் கைவசமில்லை என்பதுவும் காரணமாக இருந்திருக்கலாம்.

என் சிந்தனை வேறு திசையில் நகரத் தொடங்கியது. விரும்பத்தகாத நிகழ்வாயினும் மறுக்க முடியாத உண்மையல்லவா, இதை ஆராய்ந்தால் நிச்சயமாக சில உண்மைகள் வெளிவரும் என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது. மார்க்க அறிவை பெருக்கவும், மறைக்கப்பட்ட செய்திகளை அறியவும் ஹதீஸ்களில் தேடுதல் துவங்கினேன்.

சவால் தொடரும்......

 

 

 

Saturday, 6 August 2011

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே....

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே......  

இது இணையப்பரப்பில் பரவலான வாசிப்பைப் பெற்றிருக்கும் தோழர் செங்கொடியின் தொடர்.  குர் ஆனின் மீதும் இஸ்லாத்தின் மீதும் விமர்சன வெளிச்சத்தை பாய்ச்சிக்கொண்டிருக்கும் இந்தத் தொடரை அவரின் தனிப்பட்ட அனுமதியின் பேரில் இங்கு வெளியிடவிருக்கிறோம். தொடர்ந்து படியுங்கள் நிச்சயம் இத்தொடர் உங்கள் நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும்.

நுழைவாயில்
பொதுவாக மதம் என்பது மக்களிடையே சக்திவாய்ந்த நம்பிக்கையாக இருக்கிறது. மக்கள் தங்களின் உயிர்ப்பிற்கும், மரணத்திற்கும்; சுக துக்கங்களுக்கும்; இன்னும் அனைத்திற்கும் அதுதான் காரணமாக இருக்கிறது என நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையே உலகை சீர்பட நடத்திவருவதாக ஏற்கிறார்கள், தற்போதைய சீர்கேடுகளுக்கு அந்த நம்பிக்கை குறைந்ததே காரணம் என கருதுகிறார்கள். வேறு எந்த நம்பிக்கையை காட்டிலும் மத நம்பிக்கையே, கடவுள் நம்பிக்கையே வீரியம் மிக்கதாய் இருக்கிறது. சிலபோதுகளில் அந்த நம்பிக்கையில் கீரல் விழுந்தாலும் மறு கணமே மனதிலிருந்து ஒரு உந்துதல் கிளம்பி அந்த கீரல் சரிசெய்யப்பட்டுவிடுகிறது. இது மனதில் நம்பிக்கை என்ற அளவில், ஆனால் நடப்பிலோ அவர்களின் வாழ்க்கையும் அதன் வலிகளும் அவர்களை கோபம் கொள்ளச்செய்கிறது. தங்களின் பிரச்சனைகளுக்கு காரணமாகத் தெரிபவர்களை பழிவாங்க முயல்கிறார்கள். மீண்டும் அதேபோல் நேராவண்ணம் தற்காத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு இருக்க முயல்கிறார்கள். ஆனாலும் கடவுள் தங்களுக்கு விதித்ததை தவிர வேறெதுவும் நேராது என உறுதியாக நம்புகிறார்கள். மேலும் பிரச்சனைகள், மேலும் மேலும் பிரச்சனைகள் அவர்களை அழுத்த அழுத்த நாட்கள் கடந்து கடந்து ……ஒரு நாள் மரணித்தும் விடுகிறார்கள். தங்களின் பிரச்சனைகள் இந்த உலகிலிருந்தே எழுந்து வருபவைகள். சிலர் கொழுக்க நினைப்பதாலேயே தமக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும், தம்முடைய உழைப்பு முழுவதும் தமக்கு கிடைப்பதில்லை என்பதும் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அப்படி தெரியவிடாமல் செய்வதில் கடவுள் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கிறது என்பதையும் அவர்கள் உணர்வதில்லை. இப்படி கடவுள் நம்பிக்கை என்பது இவ்வளவு வீரியமாக இருப்பதற்குக்கு காரணம் என்ன?

மனிதன் பிறந்தது முதலே ஏதாவது ஒரு மத நம்பிக்கையின் நிழலிலேயே வாழ நேரிடுகிறது. வளர்ந்த பிறகு அந்த நம்பிக்கையின் சடங்குகளுக்குள் சிக்கிக்கொள்கிறான். அவனுக்கு போதிக்கப்படும் அத்தனையும் ஏதாவது ஒரு ரீதியில் கடவுளின் இருப்பை பத்திரப்படுத்துகின்றன. அவன் சிந்திக்கும் பருவத்தை அடையும் போது வேதங்களும் அதன் விளக்கங்களும், விரிவுரைகளும் பொழிப்புரைகளும் அவனுள் நுழைந்து அவனின் சிந்தனைக்கான வழியை கைப்பற்றிக்கொள்கின்றன. எதைப்பற்றி சிந்தித்தாலும் இந்த வழியை மீறிவிடாதவாறு சொந்தங்களும் சமூகமும் பார்த்துக்கொள்கின்றன. கூடவே இன்றைய வாழ்முறைகளும் பொழுதுபோக்கு கட்டமைப்புகளும் ஒரு செக்கு மாட்டுத்தனத்தை ஏற்படுத்திவிட, பொருப்புகள் அதை சுமந்தே ஆகவேண்டிய கடமைகள் அவைகளுக்காக பொருளீட்டும் தேவை, அந்த தேவைகளுக்காக வரித்துக்கொண்டேயாகவேண்டிய தகுதிகள்……. மூச்சுவிடத்திணரும் அவதியில் ஏன் எனும் அந்தக்கேள்வி எழும்பும் வலுவற்றே போய்விடுகிறது.

இவைகள் போதாதென்று தற்போது தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் மத பரப்புரைகள் விஞ்ஞான விளக்கங்களோடு, அறிவியல் ஆதாரங்களோடு நிஜம் போலவே வலம் வருகின்றன. அதெப்படி பொய்களுக்கு அறிவியல் விளக்கங்கள் தரமுடியும்? தருகிறார்கள். மதம் பேசுபவர்கள் இப்போது அறிவியலையும் குழைத்தே பேசுகிறார்கள்.

பேரண்டம் என்றாலும் அணுப்பிளவு என்றாலும் வேத வசனங்களை பொருள் பிரித்து அடுக்குகிறார்கள். நீட்டி முழக்குகிறார்கள், அறைகூவல் விடுகிறார்கள். வாழ்க்கையின் பற்சக்கரங்களிடையே திமிறிக்கொண்டு வரும் வெகுசில நேரங்களில் மக்களுக்கு ஏற்படும் கேள்விகளை இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வியக்கவைத்தே பலங்குன்றச் செய்துவிடுகின்றன. மதப்பிரச்சாரக்கூட்டங்களுக்கு மக்கள் தேடிப்போய் கேட்பது குறைவு, மதவிளக்க நூல்களை படிப்பது அதனிலும் குறைவு ஆனால் திரைப்பட நிகழ்ச்சியின் அல்லது விளையாட்டின் விளம்பர இடைவேளையில் தெரியாமல் இதுபோன்ற நிகழச்சிகள் பார்வைக்கு வந்துவிட்டால் கூட இதன் தாக்கம் மக்களின் மனதில் இருக்கை போட்டு அமர்ந்துவிடுகிறது. இந்து மதத்தில் அதன் ஆன்மீக சாரங்களை யாரும் வாழ்க்கை நெறியாக கொள்வதில்லை. கிருஸ்துவத்திலும் கூட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் பிரித்துப்பார்க்கும் போக்கு வெளிப்படுகிறது, ஆனால் இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. ஏனையோர்களைவிட இஸ்லாமியர்களிடம் மதப்பிடிப்பும், இது தான் சரியான மதம் எனும் உறுதியும், அதை நடைமுறைப்படுத்தும் ஆர்வமும் அதிகம்.
இந்தியாவில் இந்துப்பாசிச வெறிக்கு அதிகம் பலியாவது இஸ்லாமியர்கள் தாம். அரசு பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படும்போதும் அவர்களின் மத அடையாளமே முன்னிருத்தப்படுகிறது. இதனாலும் அவர்கள் மதத்தின் தழுவலில் கட்டுண்டு கிடக்க ஏதுவாகிறது. இதனடிப்படையில் அரசியல் விழிப்புணர்வு என்ற பெயரில் மதரீதியில் ஆன்மீக இயக்கங்களின் பின்னால் அணிதிரள்வது அதிகரிக்கிறது. ஒரு வகையில் இது இந்துபாசிசங்களுக்கும் தேவையாகவும் உதவியாகவும் இருக்கிறது. அந்த வகையில் இந்துபாசிசங்களுக்கு உதவும் இஸ்லாமிய ஒருங்கிணைவை தடுத்து வர்க்க அடிப்படையில் சமூக போராட்டங்களில் அவர்களையும் இணைத்து முன்செல்லவேண்டிய அவசியமிருக்கிறது. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது.

இந்தத்தொடர் இஸ்லாமியர்களின் மதச்சடங்குகளை, சட்டங்களை, வேத வசனங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அவர்கள் தரும் விஞ்ஞான விளக்கங்கள் எப்படி போலியாக இருக்கின்றன என்பனவற்றை யும், இஸ்லாம் தோன்றிய அன்றைய அராபியாவின் அரசியல், சமூக, பொருளாதார, இறையியல் சூழல்களையும் பேசுவதன் மூலம் இஸ்லாம் என்ற மதத்தின் புனித சட்டகங்களை நீக்கி அதன் மெய்யான இருப்பை, உள்ளடக்கத்தை அடையாளப்படுத்தும் ஒரு முயற்சிதானேயன்றி வேறில்லை. அதோடு இன்றைய சூழலில், எந்தஒரு மதத்திலும் அதில் பிடிப்பும் பற்றார்வமும் கொண்டிருப்பவர்கள் தவிர்க்கவே முடியாமல் ஏகாதிபத்தியங்களுக்கு துணைபோவதையே வழியாக கொண்டிருக்கிறார்கள்.

அரபு தேசியவாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்களெல்லாம் இன்றைய நிதிமூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள். புரட்சிகர மார்க்ஸியமே இன்றைய சமூகத்தேவையாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கும் இத்தொடர் பயன்படுமென நம்புகிறேன்.

ஒரு வேண்டுகோள்: இஸ்லாமும் அதன் சட்டதிட்டங்களும் மட்டுமே சரியானது ஏனைய அனைத்தும் ஏதோ ஒருவகையில் தவறானவை என்பனபோன்ற முன்முடிவுகளை தவிர்த்துவிட்டு ஆக்கபூர்வமான வகையில் வினையாற்ற வாருங்கள் என அனைவரையும் அழைக்கிறேன்.

தோழமையுடன்
செங்கொடி