அண்மையில் நான் சென்ற அனைத்து முஹம்மதியர்களின் இல்லங்களிலும்
கண்டது இந்தப் படிவத்தையும், கூடவே,
”ஃபார்ம்ல கையெழுத்து போட்டுக் கொடுத்தாச்சா?” என்ற விசாரிப்புகளைத்தான்!
”எங்கள் வீட்டிலிருக்கும் எந்த பெண்ணுக்கும் இப்படிவத்தில்
ஒப்புதலளிக்க விருப்பமில்லை!” என்றேன்.
“கையெழுத்துப் போடவில்லையா?” என்று அதிர்ந்தனர்
“ஆமாம்! அது மட்டுமில்லை படிவத்திற்கு எதிராக குரல்கொடுக்கவும்
தயாராக இருக்கின்றனர்” என்றேன்.
உண்மை நிலை இதுதான்!
முஹம்மதிய மதநம்பிக்கைகளில் ஊறித் திளைக்கும் எனது இணையருக்கூட
” All India Muslim Personal Law Board” தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும்
இப்படிவத்தில் கையெழுத்திட விருப்பமில்லை என்பது மட்டுமல்ல; முடியாது என உறுதியாக மறுத்துவிட்டார்.
அவர் முஹம்மதியக் கல்வியில் ஆலீமா பட்டம் பெற்றவர் என்பதை முன்னமே உங்களிடம் கூறியிருப்பதாக
நினைவு!
இப்பொழுது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தலாக் விவகாரத்தைப்பற்றி
முஹம்மதிய ஆண்களிடம் பேசும்பொழுதெல்லாம், போர்பிரகடணம் அறிவிக்கப்பட்டதைப் போன்ற பதட்டம்
தொற்றிக் கொள்வதையும் காண முடிந்தது. விரல் அசைக்காதவர், அசைக்கின்றவர், ஹதீஸை ஏற்றவர்கள்,
ஏற்காதவர்கள் என ஏறக்குறைய அனைத்துப் பிரிவுகளும் சிறப்புச் சொற்பொழிவுகள், ஆலோசனைக்கூட்டம்
என முஹம்மதிய அமைப்புகள் அலைபாய்கின்றன. (எனக்கும் அழைப்பு வந்ததென்பது வேறு விஷயம்!)
காரணம், மத்தியில் இருப்பது ப.ஜ.க அரசு!
"தலாக்'
விவாகரத்து முறையால் முஸ்லீம் பெண்களின் வாழ்க்கை பாழாவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது
என்றும், அவர்களது உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது
முஃமின்களிடைய இன்னும் பதட்டத்தை அதிகரித்துவிட்டது.
ஆளும்
மத்திய அரசும், ஊடகங்களும், இந்த “தலாக்” என்ற மணவிலக்கு முறைமட்டுமே
முஹம்மதியப் பெண்களைப் பெரும்பாதிபிற்குள்ளாக்குவதைப் போன்று சித்தரிக்கின்றனர். சிலர்
’தலாக்’ முறையை இரத்து செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைகளை வைக்கின்றனர். ‘தலாக்’ என்றால்
‘மணவிலக்கு’ ஆர்வக் கோளாறில் மணவிலக்குமுறையையே நிறுத்திவிடுவார்கள் போலிருக்கிறது.
இவர்களது அறியாமையைக் கண்டு அழுவதா அல்லது சிரிப்பதா எனப் புரியவில்லை. அவ்வப்பொழுது
மதவெறியர்கள் ஒருவருக்கொருவர் மாற்று நம்பிக்கைகளைச் சீண்டுவது போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுவதும்,
பின்னர் ஒன்றுமேயில்லாததைப் போல மறைந்து போவது நமக்கு வாடிக்கையான ஒன்றுதான். அவ்வப்பொழுது
ஏதாவது பரபரப்பு இருந்தால்தானே ஒரு திரைக்கதைகூட சுவையுள்ளதாக இருக்கும்? மதவெறிமட்டுமே
பின்னணியாக் கொண்ட அரசாங்கத்திற்கு…?
”UCC”எனப்படும்
பொது சிவில் சட்டம் தேவையா எனில், எனது பதில், ”ஆம்..! மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம்
தேவையே…!”
“இப்படியென்று
இந்தியாவில் சாத்தியமா?” என்றால்
“கேடுகெட்ட
இன்றைய அரசியலமைப்பில் அது சாத்தியமில்லை!”
இத்துடன் இவ்விவகாரத்தை நாம் முடித்துக் கொள்ள முடியும்.
ஆனால், பெண்களை அடிமைகளாக்கும் குர்ஆனின் சட்டதிட்டங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும்
முஹம்மதின் முட்டாள்தனங்களையும், மதவாதிகளின் கோரமுகங்களை வெளிப்படுத்துவது இன்று அவசியமாகிறது.
இவ்விவகாரத்தைப்பற்றி
அனைத்து ஊடகங்களிலும் இன்னும் விவாதிக்கப்படுவதால் பின்னணியைப்பற்றி விரிவாகச் சொல்லத்
தேவையில்லையென நினைக்கிறேன். முஹம்மதிய இல்லங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களுக்கான
அப்படிவத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் முதல் இரண்டு உறுதிமொழி,
1.
நாம் இஸ்லாமிய ஷரீயத்தின்
அனைத்து சட்ட திட்டங்களை குறிப்பாக நிக்காஹ், தலாக், குலா, பஸ்க், மற்றும் வாரிசுரிமை
போன்ற அனைத்து சட்டங்களையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம், இதில் எவ்வித
மாற்றத்தையும் அல்லது விட்டுக்கொடுப்பதையும் முழுமையாக எதிர்க்கிறோம்
2.
நம் இந்திய நாட்டில் அனைத்து
மதத்தினருக்கும் தம் மதத்தின் பிரகாரம் செயல்படுத்த முழுமையான சுதந்திரம் இந்திய சாசனத்தில்
இடம் இருக்கிறது, ஆகையால் நாம் எந்த விதத்திலும் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
இதற்குள்,
நிக்காஹ் மற்றும் வாரிசுரிமையை எதற்காக நுழைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை; வரும்முன்
காப்போம் திட்டமா? அல்லது முஹம்மதியப் பெண்மணிகளின் ஏமாற்றுவதற்காகவா?
மணவிலக்கு பற்றி முஹம்மதியம் என்ன
கூறுகிறது?
தலாக்
பொதுவிவாதத்தில் இருக்கிறது! அதைக் கவனிப்பதற்கு முன்னால்,
முஹம்மதியர்களிடையே
இருக்கும் குலா, ஃபஸ்க் மற்றும் ஈலாஉ, ளிஹார்
என்று வேறு சில வழக்குகளைப்பற்றி சுருக்கமாக
கவிப்போம்.
குலா என்றால் என்ன?
’குலா’
அல்லது ’குல்உ’ என்பது கணவன் மனைவியைத் தலாக் சொல்வதற்குப் பதிலாக மனைவி தன்னுடைய கணவனை
விட்டு பிரிவது பயன்படுத்தக்கூடிய வார்த்தையாகும். இதற்கு தமிழில் கழற்றிவிடுதல் என்று
பொருளாகும். குலா செய்யும் போது கணவனை விட்டு பிரிவதற்கு
காரணத்தை மனைவி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஃபஸ்க் என்றால் என்ன?
ஃபஸ்க்
என்பது ஏறக்குறைய குலா’வைப் போன்றதுதான். சுன்னத் ஜமாஅத் காரர்களின் இணையதள விளக்கம்.
பருவமெய்திய
அறிவுள்ள மனைவி, கணவன் உடலுறவு
கொள்ளும் முன் தவணை வைக்கப்படாத தன்னுடைய மஹ்ரைக் கேட்கும்போது அவன் அதனைக் கொடுக்க
இயலாதவனாக இருந்தால் அல்லது குடியிருக்க வீடு அல்லது உடையில் தாழ்ந்ததையாவது அல்லது
உணவு கொடுக்க இயலாதவனாக இருந்தால் அவனுடைய நிகாஹை ஃபஸ்கு செய்வது கூடும்.
(தடித்த எழுத்துக்களில்
அடிக்கோடிட்ட வார்த்தைகளை கவனத்தில் கொள்ளவும்!)
ளிஹார் என்றால் என்ன?
ளிஹார்
என்பது மனைவியை தாய்க்கு ஒப்பிடுவது. இதற்கான விளக்கம் குர்ஆனிலிருந்து,
குர்ஆன் 58:3
'எனவே எவரேனும் தங்கள் மனைவிகளைத் (தம்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய
பின்னர், (தம் மனைவியர் அந்தத் தாயைப்போல் மஹ்ரம் ஆகிவிடுவார். பின்னர்) அக்கூற்றிலிருந்து
திரும்பி (மீண்டும் மனைவியருடன் சேர்ந்து கொள்ள விரும்பி) னால் அவ்விருவரும் ஒருவரையொருவர்
தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்துக்குப் பரிகாரமாக) ஓர்
அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (என்று) இதன்மூலம் நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள்.
அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாக இருக்கிறான்.
என்ன
இது..?
என்று
விழிக்க வேண்டாம். மனைவியை, தாயாருக்கு இணையாக ஒப்பிட்டு விலக்கி வைப்பது இந்தியக்
கலாச்சாரத்தில் கிடையாது; புதிதாக இருக்கிறது! அன்றைய அறியாமைக் காலத்து அரேபியர் வழக்கு என்பது முல்லாக்களின்
விளக்கம்.
ஈலாஉ என்றால் என்ன?
ஈலாஉ
என்றால் ’சத்தியம் செய்வது’ அதாவது ஒரு குறிப்பிட்ட தவணைவரை உடலுறவு கொள்ளமாட்டேன்
என மனைவிடம் சத்தியம் செய்வது.
குர்ஆன் 2:226
தமது மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத
அவகாசம் உள்ளது. அவர்கள் (சத்தியத்தை) திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற
அன்புடையோன்.
மனைவிகளை
மிரட்டி அடக்கிவைப்பதற்காக கணவர்களுக்கு குர்ஆன் அனுமதிக்கும் வழிமுறைகள். தலாக்கைப்பற்றி
ஒன்றுமே சொல்லவில்லையே என நீங்கள் நினைப்பது புரிகிறது. எனவே அதைப்பற்றி எனது கருத்துக்களைச்
சொல்லுவதற்குமுன் முஹம்மதிய அறிஞர்கள் தரும் விளக்கங்களை கவனிப்போம்!
மௌலவி S.H.M. இஸ்மாயில்
ஸலஃபி (இஸ்லாம்கல்வி.காம்)
தலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’
என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்துவிடும். அதன் பின்
அவர்கள் மீண்டும் சேரவே முடியாது என்ற தப்பான எண்ணம் முஸ்லிம்களில் பலரிடம் உள்ளது.
இது தவறான நம்பிக்கையாகும்.
அபூ முஹை (இஸ்லாம்கல்வி.காம்)
இஸ்லாமிய வழக்கில் கணவன் மனைவியை விவாகரத்து செய்வதையே ”தலாக்” என்ற வார்த்தை குறிக்கும். தலாக் என்றால் ‘விடுவித்தல்’ ‘கட்டவிழ்த்து விடுதல்’ என்பது பொருளாகும்.
தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று சந்தர்ப்பங்கள் – வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தலாக்
கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து
வாழலாம். மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது.
இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டம்.
…. முதல்
இரண்டு தடவைகள் கூறும் தலாக் பற்றி 2:228, 229 ஆகிய வசனங்களில் தெளிவாகச் சொல்லப்படுகிறது.
குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு
வருபவன் ”உன்னை தலாக் – விவாகரத்து செய்து விட்டேன்” என்று
கூறினால் விவாகரத்து ஆகிவிடும். இதனால் திருமண பந்தம் – ஒப்பந்தம் முற்றாக முறிந்து
விடாது. அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக்
காத்திருக்க வேண்டும்.
ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்)
…ஒருவன் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறான். குடும்ப வாழ்வில் பிரச்சனை
வந்து இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. இப்போது தன் மனைவியை விவாகரத்து செய்வதற்காக
உறுதி எடுத்து விவாகரத்து செய்கிறான். - உன்னை தலாக் விட்டுவிட்டேன் - உன்னை விவாகரத்து
செய்து விட்டேன் - என்று எந்த மொழியில் கூறினாலும் உடன் அது விவாகரத்தாகி விடும்.
இப்படி தலாக் விட்டவுடன் திருமண ஒப்பந்தம் முழுவதுமாக முறிந்து விடாது.
தலாக் விடப்பட்டப் பெண் இவனுடைய மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும்
வரை தன் கணவனுக்காக - அவன் தன்னை மீண்டும் அழைத்துக் கொள்வான் - என்ற நம்பிக்கையோடு
காத்திருக்க வேண்டும்..
பீ. ஜைனுல் ஆபிதீன்
…'உன்னை விவாகரத்துச் செய்கிறேன்' என்று மனைவியிடம்
இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கணவன் கூறுவதன் மூலம் விவாகரத்து ஏற்பட்டுவிடும். இதற்கென
எவ்விதச்சடங்குகளும் இல்லை. ஆனால் இவ்வாறு விவாகரத்துச் செய்திட மூன்று வாய்ப்புகள்
வழங்கப்பட்டுள்ளன…
குர்ஆன் என்ன சொல்கிறது?
குர்ஆன் 2:227
விவாக ரத்துச் செய்வதில் அவர்கள் உறுதியாக
இருந்தால் அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
குர்ஆன் 2:228
விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று
மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்.
இந்த காத்திருப்பு காலம் எதற்காக?
அபூ முஹை (இஸ்லாம்கல்வி.காம்)
…முதல் இரண்டு தலாக்கின் நோக்கங்கள்:- 1.
கணவன் சமாதானம் ஆகிவிடுவான் எனக் காத்திருப்பது. 2. கர்ப்பம் உண்டாகியிருக்கிறாளா என்பதை
உறுதி செய்வது…
ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்)
இத்தாவின் நோக்கங்கள்
இரண்டு.
ஒன்று - கணவன் மீண்டும் அழைப்பான் என்று எதிர்பார்த்திருப்பது.
இரண்டு - அவள் கர்ப்பம் தரித்திருக்கிறாளா.. என்று நோக்குவது.
குர்ஆன் 2:228
… அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி
இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி
இல்லை…
குர்ஆன் 65:1
நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால்
அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்!..
இந்த விஷயத்தில் குர்ஆனுக்கு கூச்சமெல்லாம் கிடையாது. நெற்றியடிதான்!
கர்பப்பைக்கு சான்றிதழ் தேவை; அதை உறுதி செய்வதற்கேற்ப
மணவிலாக்கு செய்யவேண்டும் அவ்வளவுதான். குர்ஆன்
சொல்வதையெல்லாம் அப்படியே திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்க முல்லாக்கள் எதற்கு? ஆங்காங்கே
மானே, தேனே, பொன்மானெ என்று போட்டு ’ஜிகினா’ வேலை காண்பிப்பதற்குத்தானே முல்லாக்கள்
இருக்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் சிந்தப்பதே இல்லை!
இவ்வாறு முஹம்மதிய கணவர்கள், தங்களது மனைவியர்களை அறிவுரைகூறி(வேறென்ன…? ஏசிப்பேசி)யும்,
அடித்தும், படுக்கையிலிருந்து விலக்கி வைத்தும்
(Q 4:34) இறுதியாக, செத்து செத்து விளையாடலாம் என்பது போல
மணவிலக்கு செய்து விளையாடிக் கொண்டிருக்கலாம். இந்த மூன்று தவணைகளிலும் மனைவி-பெண்
என்ற உணர்வற்ற உயிரினம், அனைத்தையும் சகித்துக் கொண்டு கண்ணாளன் வருவான் திரும்ப அழைத்துச்
செல்வான் எனக் காத்திருக்க வேண்டும். இத்தகைய மணவிலக்குகளுக்கு மூன்று வாய்ப்புகளை
குர்ஆன் அனுமதிக்கிறது. இவ்வாறு திரும்ப அழைத்துக் கொள்ளும் மணவிலக்கு முறையை “ரஜயீ
தலாக்” என அழைக்கிறார்கள். அவ்வாறு ரஜயீ தலாக்கிலிருந்து கணவனால் திரும்ப அழைக்கப்படும்
பொழுது…
ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்)
…மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை
தன் கணவனுக்காக - அவன் தன்னை மீண்டும் அழைத்துக் கொள்வான் - என்ற நம்பிக்கையோடு காத்திருக்க
வேண்டும். இந்த காலக் கட்டங்களில் கணவன் மனம் திருந்தி மனைவி தனக்கு வேண்டும் என்பதை
உணர்ந்து அவளை அழைத்துக் கொள்ள விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம் அதை மறுக்கும்
உரிமை மனைவிக்கு இல்லை. இதை நாம் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவது வசனம்
சொல்கிறது.
இந்த விளக்கத்தில் நான், தடித்த எழுத்துக்களில் அடிக்கோடிட்ட
இடங்களை கவனியுங்கள். இது அப்பட்டமான பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் வாக்கியங்கள்.
இது முல்லாக்களின் விளக்கம்தானே குர்ஆன் அப்படிச் சொல்கிறதா? என்று மறுதலிக்க முடியும்!
எனவே நாம் குர்ஆனைக் கவனிப்போம். அண்ணன் பீஜே அவர்களின் மொழிபெயர்ப்பிலிருந்து,
குர்ஆன் 2:228
…இருவரும்
நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும்
உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த
முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
அதாவது பெண்களுக்கு கடமைகளும் உரிமைகளும் இருக்கின்றன, இருப்பினும்
ஆண், பெண்களைவிட உயர்வான். எனவே அவன் ’தலாக்’ கூறி தள்ளிவைத்தாலும், திரும்ப அழைத்தாலும்
அவனுக்கு அடிபணிந்து இருக்க வேண்டும். இதைத்தான் ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்) வழிமொழிகிறார்.
குர்ஆன் அவ்வாறெல்லாம் சொல்லவில்லை: பெண்கள் விரும்பினால்
’குலா’ முறையில் மணவிலக்கு பெறலாம்; இதற்குக் காரணம்கூட சொல்ல வேண்டிய அவசியமில்லையென
என் மீது பாயலாம். ’குலா’பற்றி பிறகு சொல்கிறேன்.
இதில், ”இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால்...” என்றுதானே
வருகிறது அதாவது கணவன் - மனைவி என்ற இருவர் நல்லிணக்கத்தை விரும்பினால் என்றுதானே பொருள்
விளங்க முடியும் இதில் என்ன தவறிருக்கிறது என்று தோன்றலாம். அடுத்துவரும் ”…கணவர்கள் அவர்களைத்
திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்…” வாக்கியத்துடன் இணைத்து, சற்று கருத்தூண்றிக் கவனித்தால்
மொழிபெயர்ப்பிலுள்ள குழப்பம் புரியும். இதை எளிமையாக்க குர்ஆன் 2:228ற்கு வேறு சில மொழிபெயர்ப்புகளைப்
பார்க்கலாம்.
இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம்
அவர்களின் கணவர்கள் (முன்னிருந்த) உறவைச் சரிப்படுத்திக்கொள்ள
விரும்பினால், இத்தவணைக்குள் அவர்களை மீண்டும் மனைவியாக்கிக் கொள்ள அவர்களுக்கு முழு
உரிமை இருக்கிறது. பொதுவான நியதிப்படி ஆண்கள் மீது பெண்களுக்குச் சில உரிமைகள் உள்ளன;
பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள சில உரிமைகளைப் போல! ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட
ஒரு படி உயர்வு உண்டு. இன்னும் அல்லாஹ் (அனைவர்மீதும்) பேராற்றலுடையோனும், நுண்ணறிவுடையோனுமாய்
இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர ("ரஜயி"யான தலாக்குக் கூறப்பட்ட)
பெண்களின் கணவர்கள் பின்னும் (சேர்ந்து
வாழக்கருதி, தவணைக்குள்) சமாதானத்தை விரும்பினால் அவர்களை (மனைவிகளாக)த் திருப்பிக்கொள்ள
கணவர்கள் மிகவும் உரிமையுடையவர்கள். (ஆகவே, மறுவிவாகமின்றியே மனைவியாக்கிக் கொள்ளலாம்.
ஆண்களுக்கு) முறைப்படி பெண்களின் மீதுள்ள உரிமைகள் போன்றதே (ஆண்கள் மீது) பெண்களுக்கும்
உண்டு. ஆயினும், ஆண்களுக்குப் பெண்கள் மீது (ஓர்) உயர்பதவி உண்டு. அல்லாஹ் மிகைத்தவனும்,
நுண்ணறிவு உடையவனுமாக இருக்கின்றான்.
டாக்டர் முஹம்மது ஜான்
…ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை
நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக
உரிமையுண்டு, கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது
பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு; மேலும்
அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.
அதாவது ”பெண்களின் கணவர்கள்” என்று மொழிபெயர்க்க
வேண்டிய இடத்தில், அண்ணன் பீஜே அவர்கள் ”இருவரும்”
என்று மொழியாக்கம் செய்திருக்கிறார். உண்மையில் இவ்விடத்தில் குர்ஆன் ”arādū – விரும்பினால்” எனக் குறிப்பிடுகிறது.
யார் விரும்பினால்? இந்த குர் ஆன் வசனம் முழுவதுமே ஆணின் அதிகார வரம்பைப்பற்றிப் பேசுகிறது.
மேலும் இவ்வாக்கியத்தின் துவக்கத்தில் குறிப்பிடப்படும் ”wabuʿūlatuhunna- அவர்களின் கணவர்கள்”
என்ற பதத்துடன் இணைத்துப் பொருளாக்கம் செய்ய வேண்டும். இதைத்தான் அண்ணன் பிஜே அல்லாத
மற்ற மொழிபெயர்ப்பாளர்கள் செய்திருக்கின்றனர். ஆனால் அண்ணனுக்கும் மற்றவர்களுக்குமுள்ள
வேறுபாட்டை கவனிக்க மறுப்பது சரியல்ல! அவர் குர்ஆனின் ஆசிரியருக்கே அரபி கற்றுக் கொடுப்பவர்
என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட அவ்வசனத்தில்
தொடர்ந்து வருபவை முழுக்க முழுக்க பெண்ணடிமைத்தனத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும்
வாக்கியங்களாகும். இதைத்தான் நமது ஜி.என் (சத்தியமார்க்கம்.காம்) அவர்கள் “…கணவன் மனம் திருந்தி
மனைவி தனக்கு வேண்டும் என்பதை உணர்ந்து அவளை அழைத்துக் கொள்ள விரும்பினால் அழைத்துக்
கொள்ளலாம் அதை மறுக்கும் உரிமை மனைவிக்கு இல்லை…” என விளக்கமளிக்கிறார்.
இதை நமது அண்ணன் பீஜே அவர்களால்
எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? குர்ஆன் பெண்ணடிமைத்தைப்
போதிக்கிறது எனக் கூறிக் எப்படி வியாபாரம் செய்ய முடியும்? இதைப்பற்றி நீங்கள் மனசாட்சியுடன்
சிந்திக்க வேண்டும். குர்ஆனை முழுவதுமாகத் திருத்தம் செய்ய முடியாது; முரட்டுத்தனமாக
கூச்சலிடும் வசனங்களில் ஆங்காங்கே அதன் வீரியத்தை குறைத்து மொழியாக்கம் செய்து வியாபாரத்தை
விரைவுபடுத்திட நினைக்கிறார். ஒரு மதவியாபாரி என்ற நிலையிலிருந்து சிந்தித்தால் அவர்களது
வருத்தமும், வேதனையும் உங்களுக்குப் புரியும். (உங்களது விசும்பல் சப்தத்தை என்னால் உணர முடிகிறது.
உணர்ச்சி வசப்பட வேண்டாம். கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள். என்ன… செய்வது…?)
அவரது பிரச்சனை அவருக்கு!
நாம் 'தலாக்' விவாதத்தைத் தொடர்வோம்.
தொடரும்…
தஜ்ஜால்