Wednesday, 6 April 2016

இஸ்லாமும் பெண்கள் கல்வியும்!-2

கல்வியை இஸ்லாம் ஆதரிக்கிறதென்பது உண்மையெனில் எனில், தாலிபான்கள் மலாலவை எதற்காக கொலை செய்ய முயற்சிக்க வேண்டும்?
இன்று நமது நாட்டைப்  பொறுத்தவரையில் பெண் கல்வி என்பது மிகச் சாதரணமான விஷயம். நமது முன்னோர்கள், பெண்விடுதலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மேற்கொண்ட தொடர் பிரச்சாரங்களும், செயல்திட்டங்களுமே அதற்குக் காரணம். ஆனால் ஒரு முஹம்மதிய  ஆட்சி நிகழுமிடத்தில் பெண்கள், தனது தேவைகளுக்காக சுதந்திரமாக வீட்டைவிட்டு வெளியில் வருவதே பெரும் புரட்சியாகும். பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியவர்கள் என்பதுதான் முஹம்மதியக் கொள்கைகளின் அடிப்படைக் கோட்பாடு. உதாரணத்திற்கு முஹம்மதிய பெண்களுக்கெல்லாம் முன்மாதிரி எனக் கூறப்படும் முஹம்மதின் மனைவியர்களைப்பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

குர்ஆன் 33:33
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்!...

முஹம்மதியம் முழுமையாக ஆதிக்கம் செலுத்துமிடங்களில் பெண்கள் சுதந்திரமாக வெளியில் வரவே முடியாது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்யில் நிகழ்ந்தவைகளை நீங்கள் அறிவீர்கள். நைஜீரியாவில் போகோ ஹராம் செய்கொண்டிப்பது இதைத்தான். பெண் என்பவள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டுமென்பதே முஹம்மதியத்தின்  நிலைப்பாடு. சமையலறையும், படுக்கையறையும் மட்டுமே அவளது  எல்லைகள் என்பதே குர்ஆனின் நிலை.



பாகிஸ்தானில் எப்பொழுதுமே முஹம்மதிய அடிப்படைவாதிகளின் கை ஓங்கியிருப்பது உலகறிந்த செய்தி. அதிலும் குறிப்பாக அதன் சில பகுதிகள் முழுமையாக முஹம்மதிய தீவிரவாதிகளான தாலிபான்களின் கைகளில் இருக்கிறது. மலாலா, பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள ஸ்வாட் பகுதியின் மிங்கோரா என்னும் ஊரில் பிறந்தவர். அவரது தந்தை  கவிஞர் ஜியாவுதீன் யூசுப்சாய் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.  அவர், தாலிபான்களின் பிற்போக்குத்தனமான கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துக் கொண்டவர். இந்தப் பின்னணியில் வளர்ந்த மலாலாவிற்குத் தாலிபான்களின் ஆதிக்கத்தால் தனது கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது என்ற உண்மை புரிந்தபொழுது, அதை எதிர்த்துக் கேட்கும் துணிச்சல் அவளுக்குப் பிறந்தது. அதை அவரது தந்தை யூசுப் தடுக்கவில்லை.

மலாலா, தனது 12ஆவது வயதில் பி.பி.சி.யில் ஒரு பள்ளி மாணவியின் டைரிக் குறிப்பு என்ற தலைப்பில் தன்னை யாரென்று அடையாளம் காட்டாமல் எழுதத் தொடங்கினார்.  அவர் கொடுத்த செய்திகளும், அங்கு நடக்கும் கொடுமைகளும் அனைவரது கவனத்தை ஈர்த்தது.  தைரியமாகப் பொது இடங்களில் தன் கருத்தைத் தெரிவிக்கத் தொடங்கினார். பெண் கல்வியின் அவசியத்தையும், கல்வி என்பது அனைவரின் அடிப்படை உரிமை என்பதையும் குர்ஆன் வசனங்களை மேற்கோள்காண்பித்துப் பேசினார். இதற்காக பாகிஸ்தானின் இளம் அமைதிப்பரிசு 2011 மலாலாவுக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவர் தாலிபான்களின் பிற்போக்குத்தனத்தை எதிர்த்து கல்விக்காக வெளிப்படையாகவே குரல் கொடுக்கத் துவங்கினார். ஆனால் குர்ஆன், கல்வியை ஆதரிப்பதாக மலாலா தவறாக நினைத்திருக்கிறார் என்பதை நாம் கவனத்தி;ல் கொள்ளவேண்டும். மலாலாவுக்கு ஆதரவுக் குரல்கள் பெருகிய நேரத்தில்தான் தாலிபான்கள் அவளது உயிருக்கும் குறிவைத்தனர். மலாலா சுடப்பட்டாள்.



 இவர்கள் மதப்பிரசங்கம் செய்வதை போலவே மலாலாவும், அல்லாஹ்வையும், முஹம்மதை புகழ்ந்துரைத்து, துணைக்கு அழைத்து, குர்ஆன் வசனங்களைப் மேற்கோள் காண்பித்துதான் கல்வி பற்றிய தனது பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார். இஸ்லாமிய ஊடகங்கள் மலாலவை மறுப்பது ஏன்?

நேரடியாகச் சொல்ல வேன்றுமென்றால், முஃமின்களால் மலாலாவை ஆதரிக்கவே முடியாது! அவ்வாறு ஆதரித்தால் அது முஹம்மதின் போதனைகளை முறையாக பின்பற்றும் தாலிபான்களை மறுப்பதாக பொருள் வந்துவிடும். இதை எப்படி முஃமின்களால் ஏற்க முடியும்?

என்ன செய்வது?

எதையாவது கூறி தலீபான்களின் செயல்களுக்கு நியாயம் கற்பிப்பதோடு, இஸ்லாம் கல்வியை ஆதரிப்பதாகக் கூறி இரட்டை நிலையை மேற்கொள்வதே உண்மை முஃமின்களுக்கு அழகு! அவ்வாறு முஃமின்களால் மேற்கொள்ளப்பட்ட தாலிபான்களின் செயல்களைளுக்கு நியாயம் கற்பிக்கப்பட்ட முறையைச் சுருக்கமாகக் காண்போம்.

DR. MOHAMMAD NAUMAN SHAD MD என்ற பாகிஸ்தானிய மருத்துவர், மலாலா சுடப்பட்ட பொழுதும்,  சிகிச்சையளிக்கப்படும் பொழுதும் எடுக்கப்பட்ட புகைப்படங்களையெல்லாம்  ஆய்வு செய்து மலாலா சுடப்படவேயில்லை என்று வாதிடுகிறார். இந்த விவாதம் பதிவின் மையக் கருவிற்கு தொடர்பில்லையெனினும், சில விஷயங்களை இங்கு தெளிவுபடுத்த வேண்டிருப்பதால் Dr. Mohammad nauman shad முன்வைத்த ஒரு சில புகைப்படங்களை மட்டும் பார்க்கலாம்.

மலாலா சுடப்பட்டது இடம்-வலம் மாறியிருக்கிறது. எனவே அவர் சுடப்படவேயில்லை.



மலாலாவின் மூக்கிற்குள் குழாய் செல்லவேயில்லை. எனவே அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஒரு நாடகம்.


மலாலா ஒரு CIA உளவாளி, அவரைச் கொலை செய்ய முயன்றது இன்னொரு CIA உளவாளியான பத்திரிக்கையாளர் ADAM.B.ELLIC என்றெல்லாம் இவர்களின் கதை போகிறது.


மலாலா சுடப்பட்டு, இரத்தவெள்ளத்தில் கிடந்த காட்சிகளைவிவரிக்கும் சில புகைப்படங்கள்.






என்னதான் கற்றறிந்தவராக இருந்தாலும் மதம் மனிதனை மடையனாக்கும் என்பதற்கு Dr. Mohammad nauman shad-ம் ஒரு சிறந்த உதாரணம்.

அஷ்ரப் என்ற இன்னொரு முஃமின் மலாலாவை முஸ்லீம் பெண்மணியே அல்ல என்றும் சுட்டவன் தாலிபான் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவனே அல்ல என்றும்  கதை அளக்கிறார்.
…மலாலாவின் உண்மையான பெயர் ஜேனி. அவள் ஹங்கேரியில் 1997 யில் பிறந்தவள்.
அவளுடைய உண்மையான பெற்றோர்கள் கிருஸ்த்துவ பிரச்சார குழுவை சார்ந்தவர்கள்.
மலாலாவை துப்பாகியால் சுட்டவன் பாகிஸ்தான் சுவத் பகுதியை சேர்ந்தவன் இல்லை. இத்தாலியை சேந்தவன் என்ற உண்மைகளை சொன்னார்….

சுவனப்பிரியன் போன்ற இன்னொரு வகை தாலிபான்களின் விளக்கத்தைக் காண்போம்.

..இஸ்லாமிய வட்டத்துக்கு உட்பட்டு ஆணும் பெண்ணும் தனியாக கல்வி பயில்வதை இஸ்லாம் அங்கீகரிக்கிறது. தாலிபான்கள் தாங்கள் செய்த தவறை உணர வேண்டும். மலாலா யூசுஃபை சுதந்திரமாக தனது படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும். தாலிபான்கள் இதில் முரண்டு பிடித்தால் பொது மக்களின் ஆதரவை இழக்க நேரிடும். அது அமெரிக்காவுக்கு மேலும் தைரியத்தைக் கொடுக்கும்.

இது மலாலாவிற்கும் தாலிபான்களுக்கும் இடையே நிகழும் தனிப்பட்ட பிரச்சினையைப் போல, அதாவது தாலிபான்கள் மலாலா என்ற தனிப்பட்ட நபர் கல்விகற்க விரும்புவதை தடுப்பதைப் போன்று சித்தரிக்கிறார். சுவனப்பிரியன் மட்டுமல்ல தாலிபான்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதாகக் காண்பித்துக் கொண்ட எந்த ஒரு முஃமினும், அவர்களுக்கெதிராக தகுந்த விளக்கங்களுடன் கூறவில்லையென்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். சுவனப்பிரியன் இன்னொரு பதிலில் ”தாலிபான்கள் செய்யும் அனைத்து செயல்களையும் நான் ஆதரிக்கவில்லை. அதே நேரம் அவர்கள் பெயரால் வெளி வரும் செய்திகள் யாவும் வெளியிடுவது அமெரிக்க படைகளே என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று தனது கொண்டையை மீண்டும் வெளிப்படுத்துகிறார்.

தாலிபான்களின் செயல்பாடுகளை விமர்சித்து எடுக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படத்திற்கு சுவனப்பிரியன் உட்பட நமது முஃமின்கள் வெளிப்படுத்திய எதிர்வினைகள், தாலிபான்கள் பற்றி அவர்களது நிலைக்கு சிறந்த உதாரணம்.  அதனால்தான் இஸ்லாமிய வட்டம், சதுரம் என்றெல்லாம் வரைந்து தங்களது அன்பிற்குரிய தாலிபான்கள் வெகுமக்களின் ஆதரவை இழந்துவிடுவார்களோ என சுவனப்பிரியன் வருத்தப்படுகிறார்.

சில மாதங்களாக அமெரிக்க படைகளுக்கு மிகுந்த பின்னடைவைக் கொடுத்துள்ளது. அது தொடர வேண்டும் என்றால் இஸ்லாம் என்ன கட்டளையிடுகிறதோ அதன் வழிக்கு தாலிபான்கள் வர வேண்டும். தாலிபான்கள் வழிக்கு இஸ்லாத்தை வளைக்க எந்த முஸ்லிமும் விரும்ப மாட்டான். மிக உயர்ந்த எண்ணத்தில் உதித்த தாலிபான் அதன் இலக்கை அடை;ய வேண்டும் என்றால் பெண்களுக்கு இஸ்லாம் கொடுத்த உரிமைகளை தாராளமாக கொடுத்து சமூகத்தில் தாலிபான்கள் இரண்டற கலக்க வேண்டும்…

என்று தாலிபான் ஆதரவு புராணம் பாடிவிட்டு  அறிவுரை என்ற பெயரில் பெண்களுக்கு செல்லமாக மிரட்டலும் விடுகிறார்.

…மலாலா யூசுஃப் போன்ற இளம் பெண்களுக்கு எனது சிறிய அறிவுரை. இந்த உலகம் போலியானது. பெண் உரிமை என்ற பெயரில் பெண்களை போகப் பொருளாக பார்க்கவே ஆண் வர்க்கம் விரும்புகிறது. பெண்கள் வெளியில் ஆபாசமாக உடை அணிந்து வருவதும் ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்பே கூடிக் குலாவுவதும் தான் பெண் உரிமை என்று உலகம் முழுக்க பொது நியதியாக பார்க்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பெண்களே என்ற உண்மையை அறியாமல் தங்களுக்கு தாங்களே சில பெண்கள் குழி பறித்துக் கொள்கின்றனர்…

மலாலா என்ற சிறுமி பெண் கல்விக்காக குரல் கொடுத்தால், அதை  ஆபாச உடை, திருமணத்திற்குமுன் கூடிக்குலாவுவது என்று திரித்திருக்கிறார். இவரது ”எழுத்து ஜிஹாதி”ற்காகவே கூடுதலாக இரண்டு ஹூரிகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.

மலாலாவுக்காக மட்டுமல்ல யாருக்காகவும் முஹம்மதியர்கள், தாலிபான்களை ஒரு பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். காரணம் தாலிபான்களது கொள்கைகள், செயல்பாடுகள் அனைத்துமே முஹம்மதின் போதனைகளை மட்டுமே அடிப்படையாக் கொண்டது.

முஹம்மதியம், பெண்கல்வியை ஆதரிக்கிறதா என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் முஹம்மதியத்தில் பெண்களின் நிலை என்னவென்பதை கவனிப்போம். முஃமின்கள் அனைவருக்கும் தாய்களான முஹம்மதின் மனைவியர்களுக்கான வழிகாட்டுதல்கள்.

குர்ஆன் 33:53
நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்படமாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒரு போதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.
இந்த வசனமும் அதன் பின்னணிபற்றியும் உங்களுத் தெரியும் நாம் அதை விவாதிக்கத் துவங்கினால் நாம் தலைப்பிலிருந்து விலகிவிடுவோம். எனவே “(நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! என்பதை மட்டும் கவனத்தில் கொள்வோம். முஹம்மதியப் பெண்கள் வீட்டிற்குள் திரைகளுக்கு பின்னால் முடங்கிக் கிடக்க வேண்டுமென்பதற்கு குர்ஆனின் 33:33, 52-ம் வசனங்கள் போதுமான ஆதாரங்களாக இருக்கிறது. அப்படியானால் முஹம்மதியப் பெண்கள் வெளியில் செல்லவே கூடாதா?

புகாரி  4795
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள். என்று சொன்னார்கள். சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது ச்வதா (ரலி) அவர்கள் வீட்டினுள் வந்து, அல்லாஹ்வின் தூதரே நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம சொன்னார்கள், என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேதவெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களது கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள்.

பெண்கள் கழிப்பிடத்திற்கு செல்லுமிடத்தில் இந்த உமருக்கு என்ன வேலை? சில ஆண்டுகளுக்குமுன் கோவையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள கிரமங்களைச் சேர்ந்த பெண்கள், திறந்தவெளிக் கழிப்பிடங்களுக்குச் சென்ற பொழுது மறைந்திருந்து பார்த்ததாகவும், புகைப்படம் எடுத்ததாகவும் கூறி சில வட இந்திய வாலிபர்கள் தாக்கப்பட்டனர். இவர்களுக்கெல்லாம் முன்னோடி இரண்டாம் கலீஃபா உமர்தான் போலிருக்கிறது.

முஹம்மதிய புரோகிதர்கள், ”உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம்” என்ற இந்த அனுமதியைக் காண்பித்து பெண்கள் தங்களது தேவைகளுக்காக வெளியில் செல்வது அனுமதிக்கப்பட்டது என்கின்றனர். சுவனப்பிரியன் குறிப்பிடும் வட்டமும் இதுதான்.  உண்மையில் முஹம்மது வரைந்த இந்த வட்டம்  இயற்கைத் தேவைகளுக்காக மட்டுமே!

புகாரி147
(நபி வீட்டுப்) பெண்களே! நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்ல (இப்போதும்) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"வெளியே செல்ல' என்பதற்கு 'கழிப்பிடம் நாடி' என்பதே நபி(ஸல்) அவர்களின் கருத்தாகும்" என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் குறிப்பிடுகிறார்.

முஹம்மதியப் பெண்கள் தகுந்த துணையின்றி அதாவது ”மஹ்ரம்” எனப்படும் துணையின்றி வெளியில் செல்லக் கூடாது.  ”மஹ்ரம்” அதாவது ”ஹராம்-தடுக்கப்பட்டது” என்ற பதத்தின் இன்னொரு வடிவம் ”மஹ்ரம்” எனப்படுகிறது. பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், பாட்டனார், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள். எனவே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள குர்ஆன் தடைசெய்துள்ள ஆண்ளைத் தவிர மற்ற ஆண்களுடன்  ஒருபொழுதும் அவள் இருக்கவேகூடாது. இதன் அடிப்படையில், தாலிபான்கள்கள், பெண்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில…

எட்டு வயது முதல் பெண்கள், தந்தை, சகோதரர்கள் போன்ற நெருங்கிய ரத்த உறவுகள், கணவன் ஆகியோர் தவிர வேறு யாருடனும் நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்
இரத்த உறவினர் யாரேனும் ஒருவர் உடன் இல்லாமல் அல்லது புர்கா அணியாமல் பெண்கள் தெருக்களில் வருவது கூடாது.
தன்னுடைய மஹரம்கள் உடன் இருந்தால் கூட, பெண்கள் பைசைக்கிள்கள் ஓட்டுவதற்கு தடை.
ஒரு மஹரம் உடன் இல்லாமல், டாக்ஸியில் செல்வதற்கு தடை.
ஆண்களும் பெண்களும் ஒரே பேருந்தில் பயணம் செய்வதைத் தடுக்க, வெவ்வேறு பேருந்து சேவைகள்.
இது தாலிபான்கள் தான் தோன்றித்தனமாக விதித்தவைகள் அல்ல. முழுக்க முழுக்க குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் செயல்படுத்தியவைகள். வேறுவழியின்றி அவர்களது தீவிரவாதச் செயல்கள்,  முஃமின்களால் விமர்சிப்படலாம் ஆனால் ஒருபொழுது அவர்களது கொள்கைகளை விமர்சிக்கப்படமாட்டாது. அதனால்தான் தாலிபான்களை எதிர்க்க கற்றறிந்த ஆலீம்கள் துணிவதில்லை.

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டவர் ஒரு மஹ்ரம் இல்லாத நிலையில் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்களுடன் மூன்றாமவனாக ஷைத்தான் இருப்பான்.”

என்கிறது முஹம்மதின் போதனை. அவருக்கு அந்நியப் பெண்களைக் கண்டாலே சிந்தனைகள் தடம்மாறி வேறு திசைகளில் சென்றுவிடுகிறது.  பெண்களை எப்பொழுதுமே ஒரு பாலியல் பண்டமாகக் காண்பதைத் தவிர முஹம்மதிற்கு வேறெதுவும் தெரியாது.

அவரது இந்த வியாதி நமது முஃமின்களையும் விடவில்லை. இவர்களுக்கு எப்பொழுதுமே பெண்களைக் காண்டால் பாலியல் உறவுபற்றிய சிந்தனை மட்டும்தான் மேலோங்கும் போலிருக்கிறது.  விவாதங்களில் நாம் புர்க்காவை விமர்சித்தால், முஃமின்கள் நிர்வாணத்தையும், நீச்சலுடையையும் தூக்கிக் கொண்டு வருவதையும், தரம்தாழ்ந்து விவாதிப்பதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். இது முஹம்மதிய பயிற்சி மையங்களின் அரும்பெரும் சாதனை என்றே சொல்லலாம். இதெற்கெல்லாம் தலைவர் முஹம்மது மட்டுமே அடிப்படை. கொச்சையான நாகரீகமற்ற சொற்களைப் பயன்படுத்துவது அவருக்கு கைவந்த கலை!

இந்திய சமூக அமைப்பில் காணப்படும் வரதட்சனைக் கொடுமைகளைப் பற்றி பேசும்பொழுது, இவர்கள் “மஹ்ர்” என்ற முஹம்மதிய வழக்கத்தைச் சுட்டிக் காண்பித்து, இஸ்லாம் வரதட்சனையை எதிர்ப்பது மட்டுமல்லால், மணப் பெண்ணுக்கு ’மஹ்ர்’ எனப்படும் மணக் கொடை பொருள் வழங்கி திருமணம் செய்யவேண்டுமென்று உத்தரவிடுகிறது என்றெல்லாம் கூறி தங்களைத் தாங்களே சொறிந்து கொள்வார்கள். ஆனால் ’மஹ்ர்’ என்பதற்கு, முஹம்மது கொடுத்த விளக்கத்தைப்பற்றி மூச்சுவிடமாட்டார்கள். ஏனென்றால் முஹம்மதின் வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்த்துச் சொல்வதற்கு நமது உள்ளூர் முல்லாக்களுக்கு உடலெல்லாம் கூசுகிறது. ஆனால் தூதர் முஹம்மதுவிற்கு இந்த ஜிகினா வேலைகள் தெரியாது.

முஸ்லீம் 2989
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். (இனி) அவள்மீது (கணவராகிய) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று சொன்னார்கள். உடனே அவர், "அல்லாஹ்வின் தூதரே! (நான் இவளுக்கு மணக்கொடையாக அளித்த) எனது பொருள் (என்ன ஆவது? அதைத் திரும்பப்பெற்றுக் கொள்ளலாமா)?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்கு (அந்தப்) பொருள் கிடைக்காது. நீர் அவள் விஷயத்தில் உண்மையாளராய் இருந்தால், அவளது கற்பை நீர் பயன்படுத்திக்கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். அவள்மீது நீர் பொய் சொல்லியிருந்தால் அப்பொருள் உம்மைவிட்டு வெகுதூரத்தில் உள்ளது" என்று சொன்னார்கள்.

அவளது கற்பை நீர் பயன்படுத்திக்கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும்”. (sadaqt ealayha fahw bima astahlalt min farjiha wa'iin kunt kadhabt ealayha fadhak 'abead lak minha). இங்கு “farjiha” என்பதை கற்பு என்று மொழிபெயர்த்திருக்கின்றனர்.  ”farjiha” என்ற வார்த்தையைப்பற்றி முன்பு ஒருமுறை விளக்கியிருப்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (என்னது … மறந்துவிட்டதா…?)  
தூதர் ஈஸாவின் தாயார் மரியம் கர்பம்தரித்த நிகழ்ச்சியை குர்ஆன் இவ்வாறு விவரிக்கிறது.
குர்ஆன் 21:91
 தன் கற்பைக் (فَرْجَهَا-farjahā) காத்துக் கொண்ட(மர்யம் என்ப)வரையும்(நீர் நினைவுகூர்வீராக) நம் ஆன்மாவிலிருந்து அவரில் நாம் ஊதினோம்....
இக்பால் மதனி மொழிபெயர்ப்பு

”farj” என்றால் யோனி! கற்பைப் பாதுகாப்பது என்றால் யோனியைப் பாதுகாப்பதுதானா?

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் அந்த நபர், தனது மனைவிக்கு மஹராகக் கொடுத்த பொருளை திருப்பிக் கேட்ககிறார். அதற்கு முஹம்மது, ”நீ அவளது யோனியைப் பயன்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட அனுமதிக்கு, அந்த மஹ்ர் பொருள் பகரமாகிவிட்டது” என்று கூறு மறுக்கிறார்.  இதன் பொருள் ‘மஹ்ர்’ என்பது, ஒரு ஆண் குறிப்பிட்ட பெண்ணின் யோனியை பயன்படுத்திக் கொள்வதற்காகக் கொடுக்கப்படும் நிரந்தரக் கட்டணம்.  இதைவிட பெண்களை எப்படி அவமதிக்க முடியும்?

அவ்வாறு ‘மஹ்ர்’ என்ற பொருளின் அடைப்படையில் நிகழும்  ‘யோனி” விற்பனை ஒப்பந்த நிகழ்ச்சியை, அதாவது திருமண விழாக்களைக் குறிப்பிடும் பொழுது நிக்காஹ்-(نِكَاحَ) என்பார்கள். சிலர் நிக்காஹ் எனும் திருமண அழைப்பு என்பார்கள். இன்னும் ஒருபடி மேலேறி நிக்காஹ் என்பது திருமண ஒப்பந்தம் என்றெல்லாம் சிலேகிப்பார்கள்.  பொதுவாக, ”நிக்காஹ்-(نِكَاحَ) என்ற பதம் கொச்சையாக, உடலுறவைக் குறிப்பிடவே பயன்படுகிறது. ”Translator”கள் தரும் மொழிபெயர்ப்புகளைப் பாருங்கள்.





”Translator”கொடுக்கும் மொழிபெயர்ப்புகளையெல்லாம் ஏற்க முடியாது! இது யூத கிருஸ்தவர்களின் சதி என முஃமின்கள் வழக்கமான பதிலைக் கூறுவார்கள். எனவே அவர்களுக்காக ஹதீஸ்களில் இந்தப் பதம் பயன்பட்டிருக்கும் விதத்தை பார்க்கலாம்.

முஸ்லீம் 507
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர் களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்றபோது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்... என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்…

“தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள்” என்ற வாக்கியத்தின் அரபு மூலத்தையும் அதன் ஒலிபெயர்ப்பையும் கவனியுங்கள். اصْنَعُوا كُلَّ شَىْءٍ إِلاَّ النِّكَاح" ‏"இதன் ஒலிபெயர்ப்பு "asnaeuu kull shaa' 'iila alnnikah” 1400ஆண்டுகளுக்கு அரேபியப் பாலைவனத்தில் இனக்குழு சமுதாயத்தில் ஆடுமேத்துக் கொண்டிருந்த நாகரீகமற்ற மனிதரிடம் இதற்குமேல் எதிர்பார்ப்பதில் பொருளில்லை!

பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்கியது முஹம்மதுவின் அரும்பெரும் செயல் என்பதைப் போல இட்டுக்கட்டி சொல்வார்கள். அதைப்பற்றிக் கூறும் பொழுது, “இஸ்லாத்திற்கு முன்பு பண்டைய அரேபியர்களிடத்தில் பெண்கள் இழிப்பொருளாகவும், சொத்துரிமைப் பெற தகுதியற்றவர்களாகவும், பெண்களும் அவர்களின் சொத்துக்களாகவும் இருந்த நிலையில், இஸ்லாம் இக்கொடிய நிலையை தரைமட்டமாக்கி பெண்களுக்கு உரிமைகளையும், சலுகைகளையும் வாரி வழங்கியது.” என்று கேட்பவர்கள் காதில் இரத்தம் வழிந்தோடுமளவிற்கு… சொறிந்து.. மன்னிக்கவும் சொல்வார்கள். பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமையை இஸ்லாம் மட்டுமே வழங்கியது என்பார்கள். இதுபோன்ற பரப்புரைகளில் ஈடுபடும் பொழுது, பொய் சொல்கிறோமே என்ற வெட்கமோ, கூச்சமோ சிறிதுகூட முல்லாக்களுக்கும் முஃமின்களுக்கும் இருப்பதில்லை.

முஹம்மதியத்திற்கு முந்தைய அரேபியாவில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை எனில், முஹம்மதின் முதல் மனைவியான கதீஜா எவ்வாறு பெரும் வியாபரத்திற்கு அதிபதியாக இருந்திருக்க முடியும்? உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் வீட்டோடு கணவனாக இருந்து, எந்தத் தொழிலுக்கும் செல்லாமல், கதீஜாவின் வியாபாரத்தை அடியோடு அழித்து, கதீஜாவைத் தரித்திர நிலைக்குத் தள்ளியதைத்  தவிர முஹம்மது வேறெந்த வேலையையும் செய்யவில்லை (அவர் தனது வம்சவிருத்தி தொழிலில் ஈடுபட்டிருந்ததை இங்கு நான் மறைத்திருக்கிறேன்). விதவைத் திருமணமோ அல்லது மறுமணமோ அன்றைய அரேபியாவில் நடைமுறையில் இருந்ததில்லை எனில் முஹம்மது எப்படி கதீஜாவிற்கு மூன்றாவது கணவராக இருந்திருக்க முடியும்? அதுமட்டுமல்ல, கதீஜாவின் சுயவிருப்பத்தின் பெயரிலேயே முஹம்மதுவுடனான திருமணம் நிகழ்ந்திருக்கிறது. அங்கு பெண் சுதந்திரம் இருந்ததேயில்லையெனில், கதிஜா முஹம்மதை எவ்வாறு தேர்ந்தெடுத்திருக்க முடியும்? பெண்கள் தங்களது வாழ்க்கைத் துணையினை தேர்வு செய்வதும், மறுமணம் செய்வது பண்டைய அரேபியர்களிடம் இயல்பான விஷயமாக இருந்திருக்கிறது. முஹம்மதியம் நிலைபெற்ற பிறகுதான், அங்கு  பெண்களின் மீதான அனைத்துவிதமான அடக்குமுறைகளும் அங்கு உருவானது!

இன்னும் நிறைய சொல்வதற்கு இருக்கிறது. பெண்களின் அறிவுத் திறம்பற்றிய ஒரே ஒரு ஹதீஸைக் கவனித்துவிட்டு நாம் மீண்டும் கல்விபற்றித் தொடர்வோம்.

புகாரி  304
…'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது;..

முஹம்மதியம் கல்வியை ஆதரிக்கிறதா?

…ஓரிரு நூற்றாண்டுகளாக இஸ்லாத்தை நோக்கி திட்டமிட்டு எறியப்படும் அம்புகளை எதிர்கொள்ளும் விவேகத்தையும் இஸ்லாமியர்கள் இழந்து வருவதும் கசப்பான உண்மை. காரணம்…  இஸ்லாமியர்கள், கல்வி ஞானத்தைப் புறக்கணித்தது.
எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானம் இல்லாமல் தன்மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்.  (அல் குர்ஆன்: 30 -29 )
இறைவனால் அருளப்பெற்ற திருமறை இந்த உலகிற்கு அறிவைத் தந்தது, அறிவியலை தந்தது. ஒழுக்கத்தையும் உண்மையையும் கற்றுக் கொடுத்தது. சட்டத்தையும், நீதியையும் போதித்தது. திருமறை வழியில் இந்த உலகத்தை ஆளக்கூடிய தகுதிபடைத்த இஸ்லாமிய சமுதாயம். திருக்குர்ஆன் அழுத்திச் சொன்ன ஆக்கப்பூர்வமான கல்வியை அலட்சியப்படுத்திய காரணத்தினால் வீறுகொண்டு நிற்கவேண்டிய நாம் வீரியம் இழந்து நிற்கிறோம்..
என்று வருத்தப்படுகிறார் Dr.  Captain.   S.ABIDEEN. கல்விபற்றிய குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் மேற்கோள்களாகக் காண்பித்து கல்வித்துறையில் முஹம்மதியர்களின் பங்கை பத்தி பத்தியாக விவரித்து, அவர்கள் கல்வி முன்னேற வேண்டுமென்ற தனது ஆர்வத்தை முன்வைக்கிறார். முஹம்மதியர்கள் கல்வி பயிலவேண்டும்ன்ற அவரது ஆதங்கம் நியாயமானதுதான். முஹம்மதியர்கள் கல்வியில் பின் தங்கிப் போனதற்குக் மதவாத இயக்கங்களும் ஒரு காரணமென்று சாடுகிறார்.

பெரும்பாலான ஊர்களில் நடைபெறும் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரு இஸ்லாமிய அமைப்பு நடத்தும்பொழுது அந்த ஊரில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகள் அதை வரவேற்காவிட்டாலும் அங்கு மாணவர்களின் வருகையை தவிர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் நடத்தப்படும் பெரும்பாலான நிகழ்சிகள் வீரியம் இழந்த நிகழ்ச்சியாக முடிந்து விடுகிறது. காரணம் கல்வி விழிப்புணர்வு என்ற பெயரில் அமைப்புகளின் தனித்துவத்தையும் அந்தந்த இயக்கங்களின் விளம்பரத்தையும்  பிரதிபலிக்கவே  முயற்சிக்கின்றனர். அத்துடன், கல்விஉதவி செய்யும் ஒவ்வொரு அமைப்புகளும் அந்தந்த மாணவர்களிடம் தங்களின் இயக்கம் சார்ந்த கொள்கைகளை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் மற்ற அமைப்புகளோடு இருக்கும் ஆர்வத்தை பிரித்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்ற சூழலும் ஆங்காங்கே நடக்கிறது.

முஹம்மதிய இயக்கங்கள் மட்டுமல்ல சமூக இயக்கங்களும், ஊடகத்துறையில் இருப்பவர்களும் கல்வி வழிகாட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் ஒவ்வொரு சிறுசிறு நகரங்களிலும் கூட ஏற்பாடு செய்கின்றனர்; அதில் தங்களையும் விளம்பரப்படுத்திக் கொள்வதையும் செய்கின்றனர். இதை மறுப்பதற்கில்லை! ஆனால் போட்டி இயக்கங்களால் மாணவர் வருகை பாதித்துவிட்டதாக, இன்றுவரை முஹம்மதியர்களைத் தவிர எந்த ஒரு சமுதாயமக்கள் எவருமே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகத் தெரியவில்லை. இவர்களுக்கு மட்டுமே இப்படியெல்லாம் புதிதுபுதிதாகப் பிரச்சினைகள் வருகிறது. இதற்குக் காரணம் அடிப்படையில் இருக்கும் முரண்பாட்டிற்குத் தீர்வுகாணமல் இவர்கள் எடுக்கும் எந்த முயற்சியும் இலக்கை அடையாது.

நாம் அடிப்படை முரண்பாட்டைக் கவனிப்பதற்கு முன், முஹம்மதியர்கள்  கல்வியில் பின்தங்கிப் போனதற்கு Dr.  Captain.   S.ABIDEEN கூறுவதைப் போன்று இயக்க வெறி மட்டுமல்லாது வேறு சில காரணங்களும் இருக்கிறது.

ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக்காதது ஏன்?
 கேள்வி: நவீன ஆங்கிலக் கல்வி பயில்வதை ஊக்குவிக் காத நீங்கள், உங்கள் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி மதர ஸாக்களுக்கு அனுப்புவது ஏன்? என்று பெங்களூரிலிருந்து வெளிவரும் தலித் வாய்ஸ் என்ற இதழில் ஒரு வாசகர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு எவ்வாறு விடையளிப்பது.
சாஜிதா ஹுஸைன், சென்னை.
பதில்: என்ன தான் படித்தாலும் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதை அனுபவப் பூர்வமாக முஸ்லிம்கள் விளங்கியுள்ளனர்.
இதன் காரணமாகவே படிப்புக்கு ஆர்வம் ஊட்டுவதில்லை. உயர் கல்வி கற்பதற்கு இட ஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கு இல்லாததால் பணம் கொடுத்துத் தான் இடம் பிடிக்கும் நிலை உள்ளது. இது போன்ற காரணங்களால் தான் முஸ்லிம்கள் நவீன கல்வியில் ஆர்வம் காட்டுவதில்லை.
அந்த நிலையும் சமீபகாலமாக மாறி வருவதைக் காண்கிறோம்.
வெள்ளையர்களை வெறுக்கிறோம் என்ற பெயரில் தேச பக்தி முற்றிப் போய் ஆங்கிலக் கல்வி படிக்கக் கூடாது என்று அன்றைய முஸ்லிம் அறிஞர்கள் அன்று அறிவுரை கூறினார்கள். அதை ஏற்று முஸ்லிம்கள் படிப்பை நிறுத்தினார்கள். காயிதே மில்லத் போன்றவர்களே படிப்பை பாதியில் விட்டனர்.
வெள்ளையர் காலத்தில் இட ஒதுக்கீடு இருந்தும் தேசப் பற்றின் காரணமாக முஸ்லிம்கள் கல்வியைப் புறக்கணித்தனர். ஆனால் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு வெள்ளை யர்கள் அளித்து வந்த இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது.
முன்னோர்கள் தேசப்பற்றின் காரணமாக கல்வியைக் கற்காததால் அதன் முக்கியத்துவம் தெரியாத சமுதாயமாக இன்றைய முஸ்லிம்கள் உள்ளனர்.
onlinepj.com
இரண்டு காரணங்களை முன் வைக்கிறார்கள். இது அண்ணன் பீஜேவின் தனிப்பட்ட கருத்து அல்ல! ஆடத் தெரியாதவன் தெரு கோணலா இருக்கிறது என்று சொல்லிக் கொண்டதைப் போல பொதுவாகவே முஹம்மதியர்களின் நிலையும் இதுதான்!

  1) என்ன தான் படித்தாலும் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதை அனுபவப் பூர்வமாக முஸ்லிம்கள் விளங்கியுள்ளனர்.

   2) தேசப்பற்றின் காரணமாக கல்வியைக் கற்காததால் அதன் முக்கியத்துவம் தெரியாத சமுதாயமாக இன்றைய முஸ்லிம்கள் உள்ளனர்.

சில தனியார் நிறுவனங்கள் முஹம்மதியர்களைத், தங்களது நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துவதற்கு முன்னுரிமை வழங்குவதில்லை. உண்மைதான் மறுக்கவில்லை. ஜாதி, மத வெறியர்களால் நிர்வகிக்கப்படும் எந்த ஒரு நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல. பணிதேடும் காலத்தில், முஹம்மதியப் பெயராக இருப்பதினால், இந்த அனுபவத்தை நானும் சந்தித்திருக்கிறேன். அதேவேளையில் ஒரு சிலரின் செயல்களுக்காக அனைத்து நிறுவனங்களையும் இப்படியொரு பொதுவரையறைக்குள் கொண்டுவருது அர்த்தமற்றது. அதுமட்டுமல்ல இவர்கள் அரசாங்கத்தையும் இதே வரையறைக்குள் கொண்டுவந்திருப்பது கவனத்தில் கொள்ளவேண்டும். கல்வியென்பது பொருளீட்டும் கருவி என்ற எண்ணத்தை அடியோடு அகற்றி, அது அறிவுவளர்ச்சிக்கான செயல்முறை என்பதை இவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டுமென்பது  என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

வெள்ளையர்கள் மீது கொண்ட வெறுப்பு மற்றும் தேசப்பற்றின் காரணமாக கல்வியைக் கற்கவில்லை என்ற வாதம் உண்மையில்லை.  விடுதலைக்கு முந்தைய இந்தியாவைப் பொறுத்தவரையில் பொதுவாக அனைத்து மக்களுமே கல்வியில் பின்தங்கியிருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் மெக்காலே (Macaulay) பிரபுவின் காலத்தில்(1834–1838) இந்தியர்களின் கல்விவளர்சிக்காக திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக கிபி 1835-ல் கல்விபற்றிய ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இதில் நிறைய வாதப் பிரதிவாதங்களும் நடைபெற்றது. நமது மதப் புரோகிதர்கள், மதக் கல்விக்குப் பயன் தரும் வகையில் ஆலோசனைகளைக் கூறினர். முக்கியத்துவம் தரவேண்டுமென்றனர். அதாவது ஹிந்துக்களுக்கு  சமஸ்கிருததையும் முஹம்மதியர்களுக்கு அரபு/பார்ஸி மொழியைப் பயிற்றுவிக்க வேண்டுமென்ற தங்களது அரும்பெரும் திட்டத்தை முன் வைத்தனர்.  இதை பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்கவில்லை.

ஒரு சிறிய புத்த அலமாரியில் அடங்கும் மதப் புத்தகங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை. அதற்கு மாறாக ஆங்கிலம் கற்பிக்க வேண்டுமென்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. மதவாதிகளின் குறுக்கு புத்தி வேறுவிதமாக வேலை செய்தது. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு குமாஸ்தாக்களை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்வதற்கு ஏற்படும் செலவையும் சிரமங்களையும் கருத்தில் கொண்டு ஆங்கிலம் கற்க வற்புறுத்துகிறார்கள் என்று மறுத்தனர். முஹம்மதியர்களோ ஆங்கிலத்தை ஷைத்தானியக் கல்வி என்று ஒரேஅடியாக மறுத்தனர். குமாஸ்தாக்களை உருவக்கும் திட்டம் என்ற வாதம் ஒரு வகையில் உண்மையாக இருப்பினும், ஆங்கிலம் கற்பதும் அரசாங்கப் பணியின் மூலம் ஒரு நிரந்தர வருவாய் கிடைத்ததை மறுக்க முடியாது.

இவர்களது நிலையை தேசப்பற்று என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்ப்பதென்றால் அவர்களிடமிருந்து எந்தவித உதவியையும் எதிர்பார்த்திருக்கக் கூடாது. ஒருவேளை ஆங்கிலேயர்கள், முஃமின்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருந்தால் இவர்களது தேசபக்தி எப்படி இருந்திருக்கும்? இது தேசபக்தி அல்ல, இவர்களிடையே இருக்கும் பழைய பங்காளிச் சண்டை!

வாதத்திற்காக, முஹம்மதியர்கள் கூறும் தேசபக்தி வாதத்தை சரியென்றே வைத்துக் கொள்வோம்.  1947 இந்தியா விடுதலை பெற்றபோது 12% ஆக இருந்த இந்தியப் படிப்பறிவு வீதம் 2011ஆம் ஆண்டில் 74%ஆக வளர்ச்சியடைந்துள்ளது. 

முஹம்மதியர்களின் கல்விநிலை…?

முஃமின்கள் உலகக் கல்விபற்றி இஸ்லாமியப் பெண்மணி வளைத்தளம் தரும் தகவல்!
முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே.

இது சச்சார் அறிக்கையின் அடிப்படையில் அமைந்த, முஹம்மதியர்களின் கல்விபற்றிய பொதுவான புள்ளிவிபரம். இதில் முஹம்மதியப் பெண்களின் நிலை எப்படி இருக்குமென்பதை நீங்களே யூகித்துபாருங்கள். 2006 தாக்கல் செய்யப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கை முஹம்மதியர்களின் கல்வி, பொருளாதார  நிலை, சமுதாயத்திலிருக்கும் அடித்தட்டு மக்களைவிட கீழிருக்கிறது என்று அப்பட்டமாகப் பறை சாற்றியது. நாடு விடுதலையடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் முஃமின்கள் கல்வியில் மிக மிக பின்தங்கியிருப்பதற்கு காரணம் என்ன?

நமது முஃமின்கள், சுமார் 70ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை வெளியேறிய ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு இன்றும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனரோ... என்னவோ…?

உண்மையிலேயே முஹம்மதியம் கல்வியை ஆதரிக்கிறதா?

ஆமாம்..! முஹம்மதியத்தின் மூல ஆதரமான குர்ஆன் கல்வியின் மாண்பைப்பற்றி பேசுகிறது என்று கூறி, முஃமின்கள் ஆதாரங்களை முன்வைக்கின்றனர். அவற்றில் சில,

”96:1 ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! 96:2 (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! 96:3 மேலும், உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், 96:4 அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்; 96:5 மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.”
இதுதான் இவ்வுலகின் இறுதித்தூதரான முஹம்மத் நபியவர்களுக்கு இறைவன் இறக்கி வைத்த முதன் முதல் வசனம். இதை விடப் பெரிய சான்று வேறென்ன இருக்கக்கூடும், இஸ்லாத்தில் கல்விக்கு தரப்படும் முக்கியத்துவத்தைப் பற்றி விளக்குவதற்கு?

அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்கிக்கொள்ளலாம்……

இக்ரஃ என்றால் ஓது, வாசி, படி என்று பொருள் கொள்ளலாம். இஸ்லாமியப் பெண்மணி வளைத்தளம் ’இக்ரஃ’ என்பதற்கு “கற்பீராக” என்றொரு கூடுதல் பொருளைக் கொடுத்திருப்பது தவறானது.

குர்ஆனின் 96 ஆம் அத்தியாத்தின் முதல் ஐந்து வசனங்கள் கல்வியைப்பற்றி போதிக்கிறதா? இங்கு ’இக்ரஃ-வாசி’ என்ற கட்டளை ஆண்களை நோக்கியே கூறப்படுகிறது! ஏனெனில் இந்தக்கட்டளை முஹம்மது என்ற ஆணைப் நோக்கிக் கூறப்படுகிறது. பெண்களுக்காகக் கூறப்படவேண்டுமெனில் ‘இக்ரயீ’ என்று கட்டளையிடப்பட்டிருக்க வேண்டும். உதாரணத்திற்கு “வாசியுங்கள்” என்று கூறப்பட்டால் தமிழைப் பொருத்தவரையில் ஆண்-பெண் என்ற இருபாலருக்கும் பொருந்தும். அரபு மொழியைப் பொருத்தவரையில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனியே கட்டளையிடப்படவேண்டும்!

சரி..! ‘இக்ரஃ- வாசி’ எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்த அல்லாஹ்வின் பெயரால் வாசி என்று என்று அல்லாஹ் முஹம்மதிடம் எதை ஓதுமாறு கூறுகிறான்?

அறிவியலையா?

புவியிலையா?

கணிதத்தையா?

இலக்கியங்களையா?

அல்லது

சரோஜா தேவி புத்தகங்களையா?

முஹம்மதிடம், வாசிக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுவது குர்ஆனைத்தான். வாசி என்றவுடன் கையில் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாசிப்பதல்ல.  முஹம்மதிய நம்பிக்கைப்படி, அல்லாஹ் குர்ஆனை இறக்கியதன் நோக்கமே தன்னைப்பற்றி அதாவது அல்லாஹ்வைப்பற்றி அறிவு மனித இனத்திற்கு ஏற்பட்டு, தன்னை வணங்கித் தொழவேண்டும் என்பதற்காகத்தான். உதாரணத்திற்கு ஒரு குர்ஆன் வசனத்தைக் காண்போம்.

குர்ஆன் 58:11
… அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம்(ʿil'ma-الْعِلْمَ) அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

‘இல்ம்’ என்ற பதம் பெயர்ச்சொல்லாக குர்ஆனில் 105 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

’இல்ம்’ என்றால் என்ன?

இல்ம் என்றால் ஞானம்-கல்வி-அறிவு என்று பொருள் கொள்ளலாம். ஆனால் குர் ஆன் குறிப்பிடும் ’இல்ம்’ எது என்பதுதான் கேள்வி?

அல்லாஹ்வை, முஹம்மதை, குர்ஆனை, ஹதீஸ்களை அறிதலையே இங்கு ’இல்ம்’ எனக் குர்ஆன் குறிப்பிடப்படுகிறது. குர்ஆனும் ஹதீஸும் கூறும் ’இல்ம்’ வஹீயை அடிப்படையாகக் கொண்டது. இதுதான் அறிவு இந்த அறிவையே முஹம்மது கூறினார். இதனுடன் வழிபாடும் இணையும் பொழுது மறுமைக்கு பலன் தரும் அறிவாக மாறுகிறது. மனிதர்களையும் ஜின்களையும் அல்லாஹ் படைத்திருப்பதன் ஒரேஒரு நோக்கம் தன்னை, தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்பதுதான். அதற்கான கல்வியை கற்குமாறு மனிதர்களை ஏவுகிறான்.

ஈமான் என்ற நம்பிக்கை கொண்டு, ‘இல்ம்’ என்ற குர்ஆன் ஹதீஸ்கள் பற்றிய அறிவு பெற்றவர்கள், அதாவது அல்லாஹ்வைப்பற்றி அறிவது, நபியைப்பற்றி அறிவது,  தீனுல் இஸ்லாமைப்பற்றி அறிவது, மேலும் அந்த ’இல்ம்’, ‘இபாதத்’ என்ற வணக்க வழிபாடுகளாக செயலில் காண்பிக்கும் பொழுது அவர்களது பதவிகளை அல்லாஹ் உயர்த்துவான் என்பதே மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் பொருள். மாறாக, கல்லூரிகளில்  முனைவர் பட்டங்களை பெற்றவர்களை பதவிகளில் உயர்த்துவான் என்பதல்ல! அதனால்தான் முஹம்மதியத்தில் கல்வி, மறுமைக்கு பயன் தரும் மார்க்கக் கல்வி, மறுமைக்குப் பயன் தராத உலகக்கல்வி இரண்டுவகையாக பிரிக்கப்படுகிறது.

சில முஃமின்கள் எப்பொழுது அதற்கும் மேலே சிந்திப்பவர்கள்  அவர்கள் கல்வியை மூன்றாகப் பிரித்துவிட்டனர்.

…கல்வியில் மூன்று வகை உண்டு;
*மார்க்க கல்வி
*மார்க்கம் அனுமதித்த உலக கல்வி
*மார்க்கம் தடை செய்த உதவாக்கல்வி

மார்க்க கல்வியை பொறுத்தவரையில் அது இம்மைக்கும்-மறுமைக்கும் பயனளிப்பவையாகும். ஆனால் இஸ்லாமிய சமூகம் மார்க்க கல்விக்கு இரண்டாம் இடத்தை வழங்கிவிட்டு, உலக கல்விக்கு முதலிடத்தை வழங்கி முக்கியத்துவம் அளிக்கிறது. காரணம் மார்க்க கல்வியை கற்பதால் பொருளாதார ரீதியில் என்ன பலன் என்ற கணக்கு போடுவதுதான். தன்னுடைய பிள்ளையை எல்.கே.ஜி.யில் சேர்க்க இரவு பகலாக முயற்ச்சிக்கும் பெற்றோர், மதரசாவில் சேர்ப்பதற்கு பெரிய அளவில் 'ரிஸ்க்' எடுப்பதில்லை…
மறுமைக்குப் பயனளிக்கும் மார்க்க கல்வியே முஹம்மதியத்தில் முதன்மையானது. குர்ஆன் ’இல்ம்’ எனக்குறிப்பிடுவது மறுமைக்குப் பயனளிக்கும் கல்வியே தவிர இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணிதவியல் போன்ற உலகக் கல்விகள் அல்ல! இதனால் எவ்விதப் பயனுமில்லையென்ற, குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த முல்லாக்களின் போதனைகளே முஹம்மதியர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிப் போனதற்கு காரணமாக இருக்கிறது. பாட்டு நடனம், இசை, ஒவியம் போன்ற கலை சார்ந்தவைகள் முஹம்மதிய மார்ககம் தடை செய்த மூன்றாம் வகை உதவாக்கல்வி.

 முஹம்மதிய வலைப்பதிவர்கள் முழம்போடுவதைப் போல குர்ஆனும் ஹதீஸ்களும் கல்வியை (கவனிக்கவும்) உலக்கல்வியை ஆதரிப்பதாக உண்மையாக இருந்தால், முஹம்மதியர்கள் கல்வியில் இந்த அளவிற்குப் பின்தங்கியிருக்க வாய்ப்பிருக்காது. முஹம்மதியர்கள் கல்வியில் பின் தங்கிப் போனதற்கு காரணம், மார்க்கக் கல்வி எனப்படும் வழிபாடுகளுக்கும், முஹம்மதின் வழிமுறைகளுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் சிறு பங்கைக்கூட நவீன கல்விக்கு கொடுப்பதில்லை என்பதுதான்.

இந்த உலக வாழ்க்கை நிலையானதல்ல அழிந்து போகக் கூடியது; மறுமை வாழ்வே நிரந்தரமானது; அதற்காக மட்டுமே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம், அதற்காக வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள் என்று கூறாமல் எந்த ஒரு முல்லாவும் தனது பரப்புரையை முடிப்பதில்லை. அறிவியல் வளர்ச்சியால் உருவான, அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு, அறிவியல் வளர்ச்சியால் மனித குலம் அழிந்துவிட்டதாக ஓலமிடும் முல்லாக்களும், முஃமின்களும் ஏராளம். இதைப் போன்ற பரப்புரைகளால் கவர்ந்திழுக்கப்படும் குருட்டு முஃமின்கள், நவீன அறிவியல் கல்வி கற்பதில் பயனில்லை என்ற முடிவை அடைகின்றனர்.

எனது தப்லீக் நண்பரும் இத்தகைய குருட்டு முஃமின்களில் ஒருவர்தான். அவர், நவீன அறிவியல் கல்வியைக் கற்றவர்; அதன் பயனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்; முஹம்மதின் மீது கொண்டிருக்கும் குருட்டு பக்தி, அவரை அறிவிழக்க வைத்துவிட்டது.  இதைப் போன்று அழிந்து கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் முஹம்மதியக் குடும்பங்களை உதாரணமாக என்னால் காண்பிக்க முடியும்.


அறிவார்ந்த முஹம்மதியப் பெண்களில் மிகப் பெரும்பான்மையினருக்கு உலகக் கல்விகற்ற அனுமதி வழங்கப்படுவதில்லை; அவர்களது ஆர்வங்கள் தொடர்ந்து கொடுக்கப்படும் அழுத்தங்களால் முளையிலேயே கிள்ளியெறியப்படுகிறது. அதையும் மீறி கிளத்தெழும் பெண்கள், முஹம்மதியம், தங்கள் மீது செலுத்தும், அடக்குமுறைகளையும், அடிமைத்தனங்களையும் மீறி கொடுமைகளை பொறுத்துக் கொண்டு கற்கும் உலக்கல்வியை, சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாமல் மீண்டும், சமையலறைக்குள்ளும், படுக்கையறைக்குள்ளும் முடங்கிப் போகின்றனர். இந்நிலை இன்னும் தொடர்ந்தால் முஹம்மதியர்கள் சமூகத்தில் தனிமைப்பட்டுப் போவது நிச்சயம்.

நவீன அறிவியல் கல்வியை முல்லாக்கள் ஏன் ஊக்குவிப்பதில்லை?

அறிவியலின் வளர்ச்சி மதங்களையும், கடவுள்களையும் பலவீனப்படுத்திவிட்டது. நவீன அறிவியல் கல்வியை நாடினால், கேள்வி கேட்க கற்றுத் தருகிறது, சோதனைகளை செய்ய அறிவுறுத்துகிறது. மதங்களையும், அது கற்பிக்கும் மூடத்தனங்களையும், குருட்டு நம்பிக்கைகளை மறுக்கச் சொல்கிறது. இதை எப்படி முல்லாக்களால், குருட்டு நம்பிக்கைகளில் திளைத்துக் கொண்டிருக்கும் முஃமின்களால் ஏற்க முடியும்?


தஜ்ஜால்

***