”கடவுள்னு தன்னை அறிமுகப்படுத்திக்
கொண்ட ஒரு பெரியவரைப் பார்த்தேன்னு, மனுஷன மாதிரித் தோற்றம் இருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமா...
சினிமாவில வர்றமாதிரி லைட்செட்டிங்ஸ்கெல்லாம் வைத்திருந்தார்னு சொல்லவேன்!” என்றேன்.
பெரியவர் என்னை ஒருமாதிரியாகப்
பார்த்து,
“நீ அடங்கவே மாட்டியா?”
”உண்மையைச் சொல்லனும்னா...
நீங்கதான் அல்லது நீங்க மட்டும்தான் கடவுளான்னு இந்த நிமிஷம்வரை எனக்குத் தெரியாது.
நீங்கள் உங்களை கடவுள்-அல்லாஹ்னு அறிமுகம் செய்துகிட்டீங்க அவ்வளவுதான். இந்த மாதிரி
சொல்லிக்கிறவங்களை தினமும் ரெண்டுபேரையாவது பார்க்கறேன்! இந்த சந்திப்பைப்பத்தி சொன்னால்
முஸ்லீம்களே நம்பமாட்டாங்க, இதுல மத்தவங்களைபற்றி கேட்கவா வேணும்? உங்களோட மதிப்பு
அந்தளவுக்குத்தான் இருக்கு நினைக்கிறேன்!”
“என்னைத் தவிர வேறு
கடவுளில்லை!”
”உலகத்தில் எத்தனைவிதமான
கடவுள் நம்பிக்கை இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?
“நம்பிக்கைகள் எத்தனை
வேணுமானாலும் இருக்கலாம்... ஆனால், என்னைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை!” என்றார்.
“இப்படித்தான் ஒவ்வொருத்தரும்
சொல்லிக்கிட்டு இருக்காங்க! பாவம் மனுஷங்க இந்தக் கடவுளர்களால் குழம்பிப் போய் பைத்தியமாகி
மண்டைய பிச்சிக்கிட்டு திரியறாங்க!” என்றேன்.
“தஜ்ஜால்... திரும்பவும்
கடவுள்கள்னு சொல்லாதே! நான் மட்டுமே வணங்குவதற்குத் தகுதியானவன். நான் மட்டுதான் கடவுள்!”என்றார்.
“எந்தவிதமான தேடுதல்களோ,
ஆதாரங்களோ இல்லாம வெத்து வார்த்தைகளை மட்டும் வச்சிகிட்டு ஒரு கருத்தை எப்படி ஏத்துக்க
முடியும்?”
”என்னோட வார்த்தைகளில்
உனக்கு நம்பிக்கையில்லையா?” என்றார்.
“... ...!”
நான் ஒன்றுமே கூறாமல்
அமைதியாக இருந்தேன். பெரியவர் மறுபடியும்,
“பதில் சொல்லு...!”
என்று எனது முகத்தை ஆர்வமாகப் பார்த்தார்.
பெரியவரைப் பார்க்க
பாவமாக இருந்தது. நான் எப்படியெல்லாமோ அவரிடம் உரையாடியபோதும் ஒரே ஒரு முறைமட்டும்தான்
பொறுமையிழந்தார். நம்பிக்கையில்லை என்பதை இதைவிட நாசுக்காக எப்படிச் சொல்லமுடியும்.
இப்படி நச்சரிக்கிறார். ’வாயால வடை சுடறது’ன்னு சொல்லுவாங்களே அது எப்பவுமே குர்ஆனுக்குப்
பொருந்தும், அது இந்தப் பெரியவருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.
”உங்களை மட்டும்தான்
வணங்க வேண்டும்னு சொன்னீங்களே, அது எதுவுக்கு? அதனால உங்களுக்கு என்ன கிடைக்குது?”
என்று உரையாடலை வேறு திசைக்கு மாற்றினேன்.
”தொழுகை மானக்கேடானவற்றைத்
தடுக்கிறது” என்றார்
“மானக்கேடானவற்றைனு
எதையெல்லாம் எப்படி வரைமுறை செய்யறீங்க?” என்றேன்.
“மானக்கேடானவைகள் என்றால்
மானக்கேடான அனைத்தும்தான்!”
“அய்யா...! மானம்...
அதாவது தனிமனித அல்லது சமுதாய ஒழுக்கங்கள் மீறுதலைத்தான் மானக்கேடுன்னு சொல்லறீங்கனு
நினைக்கிறேன்!”
“ஆமாம்... அதேதான்!”
”ஒருசிலதைத் தவிர,
தனிமனித அல்லது சமுதாய ஒழுக்கங்கள் சமுதாயத்துக்கு சமுதாயம், காலத்துக்கு காலம் மாறக்கூடியது.
அதனால் உங்க கருத்துப்படி மானக்கேடானவைகள் என்றால் என்னான்னு தெரிஞ்சுக்க விரும்பறேன்”
என்றேன்.
“அதத்தான் குர்ஆன்ல
வரைமுறை செய்திருக்கிறேனே?” என்றார்.
”அல்லாஹ் மானக்கேடாக
நினைக்கிற சிலவற்றை குர்ஆனில இருக்கிறது தெரியும்; அதுவும்கூட அன்றைய சூழலுக்கும்,
அங்கு நிலவிய நாகரீகத்தையும் கருத்தில வைத்து சொல்லப்பட்டவைகளாகத்தான் தெரியுது”
“குர்ஆனில் சொல்லப்பட்டவை
எல்லாமே எந்தக் காலத்திற்கும் பொருந்தக் கூடியதுதான்!”
“திருமணமே செய்யாம,
அடிமைப்பெண்களோட கும்மாளம் போடலாம் கூத்தடிக்கலாம்னு சொல்லியிருக்கீங்களே அதுவா?”
“நீ இப்படி அநாகரீகமாக
பேசக்கூடாது!”
”சரி... அடிமைப்பெண்கள்னா யாரு ஹூரிலீன்கள் மாதிரி ‘அது’க்காகவே
படைச்சிருக்கீங்களா என்ன? அவங்களும் எல்லோரையும் போல சாதரண மனுஷங்க தானே?”
“அவங்க சாதரண மனுஷங்கதான்
நான் இல்லைனு சொல்லல ஆனா, அவங்க முஹம்மதுக்கு எதிரியாக இருந்தவங்க! அன்றைய காலகட்டத்தில,
போர்களில் எதிரி நாட்டுப் பெண்களையும் உடைமைகளையும் கைப்பற்றுவது பரவலான வழமையாக இருந்தது.
அதை திருத்தி வரைமுறை செய்தேன்!”
“என்னென்ன திருத்தம்
செய்தீங்க...?”
”அடிமைகளைக் கண்ணியமாக
நடத்தனும். விரும்பினால் அடிமைப்பெண்களை திருமணம் செய்து கொள்ளாலம்னு சொல்லியிருக்கேன்”
“அவர்கள் எப்படி திடீரென்று
எல்லாவற்றையும் மறந்து சம்பந்தமே இல்லாத அந்நியர்கள்கூட கூடுவாங்கனு சொல்லறீங்க?”
”... ...!?”
“இன்னைக்கு ஒரு எதிரி
நாட்டுக்காரன் கைப்பற்றுவான், நாளைக்கு ஒரு எதிரிநாட்டுக்காரன் கைப்பற்றுவான், இன்னொருநாள்
இன்னொருத்தன்... இப்படியே தொடர்ந்தால்... அவள் எத்தனையேருக்கு அடிமையாகறது? இல்லை எத்தனை
பேர்களுடன் அவள் படுக்க வேண்டும்? பெண்களுக்கென்று
தனிப்பட்ட எந்த உணர்வும் இருக்கக் கூடாதா? இப்படி ஆண்களுக்கு பாலியல் ஊழியம் செய்யறது
மட்டும்தான் பெண்களை படைச்சிருக்கீங்களா?”
“... ...!?”
”இதுதான் நீங்க கற்பித்த
ஒழுக்கமா?”
“இது நான் அனுதித்ததால
விபச்சாரமாகது. இந்த அனுமதியைக் கடந்து தேடினால்தான் அது விபச்சாரம்”
“ISIS ஜிஹாதிகள், யஜீதி,
கிறிஸ்தவ பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாக விற்னபனை செய்யும் செய்திகள் வெளியாகும்
பொழுது, எங்க ஊர்ல இருக்கிற முல்லாக்கள் அதை மழுப்பி மறைக்கிறாங்க, சிலர் அதை இஸ்லாத்திற்கு
எதிரானதாக சொல்லறாங்க. இன்றைக்கு அந்த அனுமதிகளை செயல்படுத்தக் கூடாதுன்னு சொல்லறாங்களே?”
”குர்ஆனில் நான் சொன்னவைகள்
உலகம் அழியற வரைக்கும் செயல்படுத்தக் கூடியவைகள் அத ரத்து செய்யற உரிமை மனிதர்களுக்கு
இல்லை. அந்த உரிமைகளை இன்றைக்கும் செயல்படுத்தலாம்!” என்றார்.
“ISIS ஜிஹாதிகள், யஜீதி,
கிறிஸ்தவப் பெண்களையும் குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிச்சது, விற்பனை செய்தது சரிதான்
சொல்லறீங்களா?”
“ஆமாம் அவங்க குர்ஆனின்
கட்டளைப்படிதான் செய்ததாகத்தான் கருத முடியும்!” என்று கூறியவாறு அருகிலிருந்த படிக்கட்டில் இறங்கினார்.
“அய்யா இது என்ன இடம்?”
என்றேன்
பாழடைந்த படிக்கட்டு
எந்த நிமிடமும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. முதியவர், எனது தோளைப்பற்றிக் கொண்டார்.
படிக்கட்டுகள் நீண்டு கொண்டே இருந்தது.
“என்ன இது இத்தனைப்
படிக்கட்டுகள்” என்றேன்.
“பிரபஞ்சத்தைப் படைக்கறதுக்கு
முன்னமே செய்தது.!” என்றார்.
“மனிதனை உருவாக்க களிமண்ணைப்
பயன்படுத்தினதாக குர்ஆன்ல சொல்லியிருக்கு! இதையெல்லாம் எப்படி செய்தீங்க? உங்களுக்கு
குயவன் வேலையுடன் கொத்தனார் வேலையும் தெரியுமா?”
என்னை முறைத்து பார்த்தவாறு,
“கிண்டல் செய்யறியா?”
என்றார்
“மனிதன் இதையெல்லாம்
கற்றுக் கொள்ள நிறைய வருஷம் ஆச்சு, உங்க கதை எப்படினு தெரிஞ்சுக்கத்தான்!”
“மனிதனுக்கு அதையெல்லாம்
கற்றுக் கொடுத்ததே நான்தான்!”
படிக்கட்டு நீ...நீ...ஈ...ண்டு
கொண்டே இருந்தது. இன்னும் எத்தனை தூரம் போகுமோ தெரியவில்லை. உரையாடலும் தொடர்ந்து கொண்டிருந்ததால்
அவ்வளவாக எனக்கு சிரமம் தெரியவில்லை.
“ஓ... அப்படியா எல்லாமே
நீங்க கற்றுக் கொடுத்ததுதானா? இத்தனை நாளா எனக்கு இது தெரியவே இல்லை!”
“மனிதனோட ஒவ்வொரு அறிவும்
நான் கொடுத்ததுதான்” என்றார் உற்சாகமாக.
“இரக்கமில்லாமை, நயவஞ்சகம், ஏமாற்று, வெறுப்பு, சுயநலம்,
பேராசை, காமம்- இச்சை, கோபம் இதோட விளைவுகளான திருட்டு, கொலை, கற்பழிப்பு, ... இதெல்லாம்
நீங்க கற்றுக் கொடுத்ததுதானா?”
”அதெல்லாம் ஷைத்தானோட
வேலை!” என்றார்.
“ஷைத்தான் எங்கிருந்து
இந்தக் கெட்ட குணங்களை கற்றுக் கொண்டான்? அவன் எதுக்காக இதையெல்லாம் மனுஷங்களுக்குச்
சொல்லிக் கொடுக்கனும்?”
“ஷைத்தான், எனக்கும்
மனிதனுக்கும் இடையில விரோதத்தை உண்டாக்க நினைக்கிறான். சிந்திக்கத் தெரியாதவன் ஷைத்தானோட
வலையில விழுந்திடறாங்க!” என்றார்.
“சரி... இதனால ஷைத்தானுக்கு
என்ன லாபம்?”
“ எல்லாம்... அவனோட
தற்பெருமை, கர்வத்தினால வந்தது. என்மேல இருக்கிற கோபத்தை நான் படைச்ச மனுஷன் மேல காண்பிக்கிறான்!”
என்று கூறியவாறு நின்று கொண்டார். அவர் மீதிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஒளியின்
அளவு குறைந்திருந்தது.
“அய்யா என்ன ஆச்சு?”
என்றேன்.
“படிக்கட்டுல் இறங்க
முடியல, கொஞ்சம் பொறு..!” என்று பெருமூச்சு வாங்கியவாறு, முழங்கால்களைப் பிடித்து அங்கேயே
உட்கார்ந்து கொண்டார்.
எனக்குப் பார்க்க பரிதாபமாக
இருந்தது. நானும் அருகிலேயே அமர்ந்து கொண்டேன்.
“அய்யா... நான் பிடிச்சு
விடட்டுமா?” என்றவாறு, கால்களைப் பிடிக்கப் போனேன்.
“இல்லை... வேண்டாம்...!”
என்று என்னைத் தடுத்து, தனது கைகால்களை நீட்டி, உடலைத் தடவியவாறு ஏதோ முணுமுணுத்துக்
கொண்டிருந்தார். நான் அவர் முகத்தையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தேன். முகமெல்லாம்
பார்க்க அமைதியாக, நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் குர்ஆனில் எதற்காக இத்தனை வில்லத்தனம்
காண்பிக்க வேண்டுமென்று தோன்றியது. இதையும் எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்ற சிந்தனை
என்னுள்.
சிறிது நேரத்தில் அவர்
பழைய நிலைமைக்குத் திரும்பினார். மெல்ல எழுந்து நின்றவர்,
“ம்ம்... வா போகலாம்!”
என்றார்.
”ஷைத்தானுக்கும் உங்களுக்கும்
நடக்கிற போட்டியில மனுஷனை எதுக்கு பலிகடாவாக்கினீங்க?” என்று மீண்டும் உரையாடலைத் துவங்கினேன்.
“இத்தனையுமே எல்லாமே
நான் மனுஷனைப் படைக்கப் போய் உண்டான பிரச்சினைதான்!” என்றார்.
“சரி ஷைத்தானைப் படைக்கும்
போது, அவன் உங்கள் கைகளை மீறிவிடுவான்னு உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியும்! அவனுக்கு
நான் அவகாசம் குடுத்திருக்கேன்(Q7:15)!”
“எதுக்கு அவன் திருந்தறதுக்காகவா,
இல்லை மனிதர்களை வழிகெடுக்கறதுக்காகவா?”
“இரண்டிற்காகவும்தான்!”
“இத்தனை தூதர்களையும்
வேதங்களையும் அனுப்பி மனிதர்களைப் திருத்த முற்சிக்கிறதவிட ஒரே ஒரு ஷைத்தானைத் திருத்திருந்தாலே
போதும்! அவனை உங்களால் ஜெயிக்க முடியாது!”
“இல்லை...! அவன் வெற்றிபெறமாட்டான்!”
“ஷைத்தானின் வலையில்
விழுந்தவங்களை என்ன செய்வீங்க?”
“இதில என்ன சந்தேகம்!
நரகத்துக்குத்தான்”
“இன்னைக்கு இருக்கிற
மக்கள் தொகையில் முஸ்லீம்கள் சுமாரா 21 சதவீதம் இருப்பாங்க. மீதி இருக்கிறவங்க எல்லோருமே
ஷைத்தானின் வலையில விழுந்தவங்க, அப்படித்தானே?”
“ஆமாம்!”
”நீங்களே சிந்திச்சுப்
பார்த்து சொல்லுங்க. வெற்றி யாருக்கு?”
“இல்லை என்னால் இதை
ஏற்றுக் கொள்ள முடியாது!”
“அய்யா... கொஞ்சம்
கூட சந்தேகத்துக்கு இடமில்லாம ஷைத்தானுக்குத்தான் வெற்றி!”
“இது வெற்றியில்ல...
மனிதனுடைய தோல்வி!!!”
“நீங்க எப்படி வேணுமானாலும்
சொல்லலாம். ஆனால் ஷைத்தான் உங்களை ஜெயிச்சுட்டான்!”
”ஷைத்தானிய குணங்கள்
அழிவையே தரும்!”
”சரி... நீங்க சொல்லும்
ஷைத்தானிய குணங்கள் அவனுக்குள் எப்படி வந்தது? அவனாகவே தனக்குள்ள உருவாக்கினானா?”
“... ...!?”
“அப்படி அவனால் உருக்கிக்
கொள்ள முடியும்னா அவனையும் படைப்பாளன்னு சொல்லலாமே?”
“அவனையே நான்தான் படைச்சேன்;
அவனை என்னால் அழிக்கவும் முடியும்! அவன் எப்படிப் படைப்பளன் ஆக முடியும்?”
“உங்களால மிகவும் வெறுக்கப்படுற
அதாவது ஷைத்தானால் மனிதனுக்குள் ஏற்றப்பட்ட இந்த கெட்ட தன்மைகள் எங்கிருந்து உருவானது
அப்படீங்கிறதான் என்னோட கேள்வி!”
“... ...!?”
“நீங்க மட்டும்தான்
படைப்பளர்னு சொன்னால் சந்தேகமே இல்லாம சொல்லறேன் இரக்கமில்லாமை, நயவஞ்சகம், ஏமாற்று,
வெறுப்பு, சுயநலம், பேராசை, காமம்-இச்சை,... இதெல்லாமே உங்க தன்மைகளில் இருக்கிறதுதான்!”
“சுத்தி... சுத்தி...
நீ என்னையே குற்றவாளி ஆக்கற!” என்றார்.
“அய்யா... நீங்க தப்பாக
புரிஞ்சிக்கிறீங்க! நானாக எதையும் சொல்லல... நீங்களும், உங்க அடியார்களும் சொல்லறதிலிருந்துதான்
இந்த முடிவுக்கு வர்றேன்!”
ஒருவழியாக நீண்ட நேரத்திற்குப்பிறகு
படிக்கட்டு பயணம் ஒரு முடிவிற்கு வந்தது. பெரியவர் முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு
நின்றுவிட்டார்.
“அய்யா இன்னும் எவ்வளவு
தூரம் போகனும்?” என்றேன்.
மேலும்கீழும் மூச்சு
வாங்கியபடி,
“அதோ... அங்கே தெரியுது
பார்” என்று சுட்டிக்காட்டினார்.
சற்று தொலைவில் நிறைய
கட்டிடங்கள் தெரிந்தது. இருவரும் அவற்றை நோக்கி நடக்கத் துவங்கினோம். அருகில் செல்லச்
செல்ல கட்டிடங்களின் பிரம்மாண்டம் புரிந்தது. ஒவ்வொரு கட்டிடத்திற்கும் இடையே மிக நீண்ட
இடைவெளி இருந்தது. எங்களுக்கு அருகிலிருந்த ஒரு கட்டிடத்தை நெருங்கினோம்.
திகில் சினிமாவில்
வரும் ‘பேய் மாளிகையை’ நினைவூட்டியது. பிரபஞ்சத்தை படைப்பதற்கு(!) முன்னமே கட்டியிருப்பார்
என்று நினைத்துக் கொண்டேன்.
சொர்க்கத்திற்கு அருகில்
செல்லச் செல்ல.. கூச்சலும் குழப்பமுமாக களேபரமாக குழாயடிச் சண்டையே பரவாயில்லை எனத்
தோன்றுமளவிற்கு சத்தமாக இருந்தது. நான் பெரியவரின் முகத்தைப் பார்த்தேன்.
“நீ என்ன கேட்கப் போறேன்னு
தெரியும் நானே சொல்லறேன்”
“ம்..ம்ம் சொல்லுங்க...!”
என்றேன்.
“... அது... சொர்க்கவாசி
ஆண்கள் வரிசையில நிற்கறாங்க அவங்களுக்குள்ள சலசலப்பு!” என்றார்
நான் மறுபடியும் அவரைப்
பார்த்தேன்.
“பிரச்சினை ஒன்னுமில்லை.
ஹூரிலீன்கள் கொஞ்சம் பற்றாக்குறை!”
“என்னது...? ஹூரிலீன்..கள்...
பற்றாக்குறையா... ...?”
”எதுக்கு... இப்படி...
சத்தம்போட்டு கத்தறே?” என்றார்.
“சரி... சரி... எத்தனை
முக்கியமான விஷயம் இவ்வளவு சாதரணமா சொல்லறீங்க! ஏன் அன்ன ஆச்சு?” என்றேன்.
”ஜிஹாதிகள் எண்ணிக்கை
இப்படிப் பெருகும்னு நான் கனவா கண்டேன்! கொல்லப்பட்டவனும்
தன்னை ஜிஹாதின்னு சொல்லறான், கொல்லறவனும் தன்னை ஜிஹாதின்னு சொல்லறான். இங்க இவனுக பஞ்சாயத்தை
தீர்க்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிறுது. என்னை என்னதான் பண்ணச் சொல்லறே?”
“... ...!?”
“பொடிப் பசங்கள்ல இருந்து
வயதான கிழவிகள்வரைக்கும் தங்கள் ஜிஹாதின்னு சொல்லி வாதம் செய்தால் ஒரு கடவுளால என்னதான்
செய்யமுடியும்?”
“அவர்கள் விரும்பியது
கிடைக்கும், ஒவ்வொருத்தருக்கும் 72 ஐட்டங்களக் கொடுக்கறத வாக்கு கொடுத்தீங்க?”
“இல்லைனு சொல்லவில்லை.
அவர்கள் விரும்பியது கிடைக்கும் ஆனால் வரிசையில் நிற்க வேண்டும்! 1500 வருஷத்திற்கு
முன்ன இருந்த நிலைமை வேறு. இன்னைக்கு நிலைமை அப்படியா இருக்கு?”
“அதனால..?”
“வேறென்ன... ரேஷன்...
ஷிஃப்ட்... முறைய செயல்படுத்திவிடேன்!”
”என்னது ஹூரிலீன்களுக்கு
ஷிஃப்ட் முறையா...?
“ஆமாம் ’அது’க்குதான்
வரிசையில நிக்கிறாங்க...!”
“கூடிய சீக்கிரத்தில் 8 மணிநேர
வேலை, Over time, PF, ESIனு எல்லாத்தையும் கொண்டுவந்திடுவீங்கனு நினைக்கிறேன்!”
“வா.. உள்ள போய் பார்க்கலாம்!”
என்று கையைப் பிடித்து இழுத்தார்.
“இல்லை... வேண்டாம்...
அந்தக் கேவலத்தை பார்க்க விரும்பல! நரகம் எங்க
இருக்கு?”என்றேன்
“அது பக்கத்து காம்பவுண்ட்தான்!”
என்றார்.
“என்னை அங்க கூட்டிகிட்டு
போங்க!” என்றேன்
“வா போகலாம்..!” என்றவாறு
நடக்கத் துவங்கினார்.
தூரத்தில் நெருப்பு
எரிவது தெரிந்தது. இவரும் அதன் அருகில் நெருங்கினோம். மிக பிரம்மாண்டமான நெருப்பு ஆனால்
என்னால் வெப்பத்தை உணரமுடியவில்லை.
“என்ன இங்கே இத்தனை
அமைதியாக இருக்கு?” என்றேன்.
“மனுஷங்க எல்லோரும்
கீழ்தளத்துக்கு போயிருப்பாங்க... அதனால அமைதியா இருக்கு நினைக்கிறேன்! உன்னால நரகத்தோட
வெப்பத்தை உணர முடியுதா?” என்றார்.
”இல்லை...!”
“இல்லையா..?” என்று
அதிர்ந்தார்.
“ஆமாம்..! நான் நம்பிக்கைகளில்
இருந்த காலத்தில்கூட உங்க சொர்கத்தை நினைத்து என்றைக்குமே நான் ஆசைப்பட்டதுமில்லை.
நரகத்தைக் நினைத்து கொஞ்சமும் பயந்ததில்லை!”
“என்ன..?”
“கேடுகெட்ட உங்க சொர்க்கத்தைவிட
இந்த நரகமே மேலானது..!” என்றவாறு நரகத்திற்குள் பாய்ந்தேன்.
“அவர்... ஏய்.. என்ன
காரியம் செய்திட்டே...?” என்று கத்தியவாறு, என்னைப் பிடிக்க கைகளை நீட்டினார்.
முடியவில்லை!
நான் கீழே சென்று கொண்டிருந்தேன் முதியவரின் உருவம் கண்களிலிருந்து மறையத் துவங்கியது.
மிதப்பது போலிந்தது.
முஹம்மதை சந்திக்க
வேண்டுமென்று நினைத்தது நினைவிற்கு வந்தது. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேனோ?
நரகம் இத்தனை மென்மையாக,
குளிராக இருக்குமா?
“ஏசியை ஆஃப் பண்ணு..!” என்று ஒரு பெண்குரல் கேட்டது.
”என்னது நரகத்திலேயும்
ஏசியா?” என்றேன். ஆமாம் இந்தக் குரலை இதற்கு முன்பே கேட்டிருக்கிறேன். எனக்கு
நன்கு அறிமுகமான குரல்!
அட எனது துணையாரின் குரல்!
“அவரும் நரகத்திற்கு
வந்துவிட்டாரா? என்ன கொடுமையாக இருக்கிறது அவர் பெரிய ஈமான்தாரியாயிற்றே? என்ற சிந்தனை
என்னுள்.
என்னை யாரோ பிடித்து
உலுக்குவது போல் இருந்தது.
“எழுந்திரிங்க...!”
என்று மீண்டும் துணைவியாரின் குரல்.
நரகம் கண்களிருந்து
சட்டென மறைந்து! நான் மருத்துவமனையில் இருப்பதை உணர முடிந்தது.
“என்னைக்காவது ஒரு
நாள்தான் பள்ளிவாசலுக்கு போகறது. போனாலும் ஒழுங்காகத் தொழுகாமல் போய்த் தூங்கவேண்டியது!”
என்று புலம்பிக் கொண்டே நான் படுத்திருந்த படுக்கையை சரி செய்து கொண்டிருந்தார்.
“நான்... தூங்கினேனா?”
என்றேன்
“தூங்காம...?”
“அடிப்பாவி..! இவனுக
போட்ட ‘பாம்’ல செத்துப் பொழைச்சி வந்திருக்கேன். செத்த எலி, பெருச்சாலிகளை திங்கறனுகளோ
என்னவோ?” என்றேன்.
”உங்களுக்கு, அவங்கள
கரிச்சுக் கொட்டலைனா தூக்கமே வராது!” என்று தொடர்ந்து கொண்டிருந்தார். அவர் அப்படித்தான்!
நான் கண் விழித்ததும்
என்னை பார்த்து, “இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!” என்று கண்ணாடியைக் கழட்டியவாறு சொல்லும்
மருத்துவர் இல்லாதது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது.
நான் கண்களை மீண்டும்
மூடினேன். பெரியவர் வரவில்லை!
தஜ்ஜால்