Saturday, 26 April 2014

அல்லாஹ்வின் மகன்!(?) -1

இந்த ஆண்டும் நமது பாவங்களுக்காக உயிரைவிட்ட கடவுள் (தவறாக சொல்லிவிட்டேனோ?) கடவுளின் மகன் (தவறு...! கடவுளின் தன்மைகளில் இல்லை... ஆற்றல்களில்...  சரி... ஏதோ... ஒன்று...) கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து சென்ற நிகழ்ச்சி நினைவு கூறப்பட்டது (சரியாக சொல்லியிருக்கிறேனா..?!) எப்படியோ ஓசியில் கிடைத்த வாத்து பிரியாணியுடன் ஈஸ்டர் முடிந்து விட்டது. நல்ல வாய்ப்பாக கோபால் கடை வாத்து பிரியாணிக்கு இருப்பதாகக் கூறப்படும் ’பின்’ விளைவுகள் இல்லை!
அல்ஹம்துலில்லாஹ்...!

பொதுவாக நான் இந்து மற்றும் கிறிஸ்துவ நம்பிக்கைகளின் மீது பெரிதாக கவனம் செலுத்துவது கிடையாது. காரணம் அது மிக பலத்த விமர்சனத்திற்கு ஆளானவைகள் என்பதால்தான். இதில் நான் வேறு தனியாக விமர்சிக்க வேண்டுமா?  என்ற எண்ணம்தான் காரணம்.

கடந்த புனித வெள்ளியில், பிரசங்கிகள் சிலரின் உரைகளைக் கேட்ட பொழுது, நம்பிக்கைகள் என்ற பெயரில் மக்களை மடையர்களாக்குவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்ற எண்ணமே மேலிட்டது. எனவே இப்பதிவில் சிலுவை மரணத்தை சற்று கவனித்துவிட்டு அல்லாஹ்வின் வழக்கை கவனிப்போம்! அதுவரை அல்லாஹ் நமக்காக காத்திருப்பான். இன்ஷா அல்லாஹ்!

கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார். வேதவாக்கியங்கள் கூறியபடியே கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டார்
1கொரிந்தியர் 15:3-4
இயேசுவின் மீது பிலாத்துவுக்கு எந்தக் குற்றத்தையும் காணமுடியவில்லை. மட்டுமல்லாமல் அவன் அதிகாரத்திலிருந்தும் இயேசுவைக் காப்பாற்ற முயற்சிக்காமல் பொறுப்பற்று இருந்துவிட்டான். கைது செய்யப்படுவதற்கு முன்புவரை, இயேசு தோற்றத்தில் சராசரி மனிதனைப் போன்றிருந்தாலும் அவரது செயல்கள் அவ்வாறிருக்கவில்லை என்கிறது பைபிள். தண்ணீரின் மீது நடப்பது, இறந்தவனை உயிர்பிப்பது, களிமண் பறவைகளை உயிர்பிப்பது என்று இன்னும்பல பலவிதமான அற்புதங்களை செய்து கொண்டிருந்தாராம். கைது படலம் துவங்கியதும் மிக மிக சராசரி மனிதனைப் போன்று நடந்து கொள்கிறார். யூதகுருமார்கள் விதித்த தண்டனையை பெரிதாக எதிர்ப்பு காண்பிக்காமல் தண்டனைக்கு உடன்படுகிறார்.
ஏன்?

கிறிஸ்தவ நம்பிக்கைகளின்படி, நிச்சயமாக இயேசு சராசரி மனிதரில்லை! மூன்றில் ஒன்றான கடவுள்!

அவர்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டனர். என் அங்கியின் மேல் சீட்டுப் போட்டனர்.
சங்கீதம் 22:18

”யூதர்கள் அல்லாத வேற்று மனிதர்களிடம் மனித குமாரனை ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரை கேலி செய்து சவுக்கால் அடித்து சிலுவையில் அறைந்து கொல்வார்கள். ஆனால், மூன்றாவது நாள் மரணத்திலிருந்து மனித குமாரன் உயிர்த்தெழுவார்” என்று கூறினார்.
மத்தேயு 20:19
என்று வேதவாக்கியங்களாக தான் கூறிய முன்னறிவிப்புகள் பொருளற்று போவதை கர்த்தராகிய இயேசு எவ்வாறு அனுமதிப்பார்? அதனால் ஒரு சராசரி மனிதனைப் போன்று தன்னைக் காண்பித்துக் கொண்டு, தன்னைத் தானே, தனக்கு பலி கொடுத்துக் கொள்கிறார். நம்மை, நமது பாவங்களிலிருந்து இரட்சிக்க இந்த பலி அவருக்குத் தேவைப்பட்டது. அதனால் அவர் தன்னை சிலுவையில் ஒப்படைத்தாராம்.

இன்று நாம் அனைவரும் பாவமின்றி இருப்பதற்குக் காரணம் கர்த்தரைக் கொன்ற யூதர்களாவார்கள். அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லவில்லையென்றால் நமது பாவங்கள் நம்மைவிட்டு விலகியிருக்காது.  நமது பாவங்களை நீக்கும் மகத்தான பணியின் கருவிகளாக யூதர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். ஒருவேளை யூதர்கள், கர்த்தராகிய இயேசுவின் சித்தத்தையும் மீறி இரக்கப்பட்டு கர்த்தராகிய இயேசுவைக் கொல்லாமல் விட்டிருந்தால் நமது நிலை என்னாவது? இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்! கர்த்தரின் சித்தத்தை அழகிய முறையில் நிறைவேற்ற இயேசுவைத் தற்காலிகமாகக் கொன்ற யூதர்களையும் நாம் இந்நாட்களில் நன்றியுடன் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம்! குறிப்பாக வாத்து பிரியாணி வழங்கிய நண்பரையும் தேவன் ஆசீர்வதிபாராக! ஆமென்!!!

கர்த்தர் இயேசுவின் இந்த தற்காலிக சிலுவை மரணத்தை மாபெரும் தியாகமாகவும், மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெந்ததை மிகப் பெரும் அற்புதமாகவும் கிறிஸ்தவர்கள் காண்கின்றனர்.

அநீதியை எதிர்த்துப் புரட்சி செய்து போராடி உயிரைத் தியாகம் செய்யும் திரைக்கதை நாயகர்களை நாம் தினமும் காண்கிறோம். உண்மையில் அவர்களில் பெரும்பாலானாவர்களுக்கு ஏழை எளியவரின் வாழ்க்கை போராட்டம் என்னவென்றே தெரியாது; அல்லது அதைத் தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு எந்த விதமான ஆர்வமுமில்லை. இவர்களை தியாகி என்றோ அற்புதங்கள் புரிபவர்கள் என்றோ அறிவுடையோர் கருதுவதில்லை. இவ்வாறு தனது இயல்பில் இல்லாத  ஒன்றை கற்பித்து வெளிப்படுத்தும் தோற்றம் அல்லது செயலை நடிப்பு என்பார்கள்.

உண்மையில் கர்த்தராகிய இயேசு, கடவுள் என்ற தனது இயல்பை மறைத்து மனிதனைப் போன்று நடித்துக் கொண்டிருந்தவர். அதாவது தனது இயல்பில் இல்லாத மரணத்தை மனிதர்களுக்கு செய்து காண்பித்திருக்கிறார். தனது மனிதக் கதாபாத்திரத்தை யாரால், எங்கு, எப்பொழுது, எப்படி முடிவிற்குக் கொண்டு வரவேண்டுமென்பதையும் எப்பொழுது மீண்டும் கடவுள் கதாபாத்திரத்திற்கு மாறவேண்டுமென்பதையும் முன்பே அறிவார். இந்நிகழ்வில் திட்டமிடுதல் இல்லை அதன் போக்கிலேயே நடைபெற்றதென்று வாதிடவும் முடியாது! இயேசு என்ற தனது கதாபாத்திரம் எப்படி முடிவிற்கு வருமென்ற அவரது முன்னறிவிப்புகள் அதற்கான வாய்ப்பை மறுக்கிறது. எனவே சிலுவை மரணமென்பது கத்தர் இயேசு நிகழ்த்திய ஒரு நாடகம்.  

பிறர் நலனுக்காக தன்னலம் இழக்கும் தன்மையை தியாகம் என்கிறோம்.  உண்மையில் கர்த்தரான இயேசு எதையுமே இழந்தாக எனக்குத் தெரியவில்லை. அப்படி எதையும் அவரால் இழக்கவும் முடியாது. சிலுவை மரணத்தில் ஒருவேளை அவர் எதையேனும் இழந்ததாக நீங்கள் கருதினால், அதை தெரிந்து கொள்ளும் ஆவலில் நான் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். இழக்கவே முடியாத அவரது உயிரை இழந்ததாகக் காண்பித்துக் கொண்டார்.  ஒரு நாடகத்தை எப்படி தியாகமென்று அழைப்பது?


இன்று நம்பிக்கைகள் என்ற பெயரில் எண்ணற்ற கிறிஸ்தவர்கள் சிலுவைப் பலி காட்சியை நம் முன்னே ஒவ்வொரு ஆண்டும் அரங்கேற்றுகின்றனர். இதனால் மனிதகுலம் அடைந்த பயன் என்னவென்று தெரியவில்லை. இதைப் போன்ற மடமையை தியாகம் என்று அழைத்தீர்கள் என்றால், கர்த்தர் இயேசு செய்ததை தியாகம் என்று ஒப்புக் கொள்கிறேன்.

நம்பிக்கைகளின்படி, கடவுளால் இறக்கவே முடியாது என்றிருக்கும் பொழுது இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று கூறுவதில் என்ன  அற்புதம் இருக்க முடியும்? இயேசு அற்புதம் செய்தார் என்று வாதிட்டால் அவர் மாபெரும் தியாகம் செய்தார் என்ற வாதம் என்பது பொய்யாகிறது!

 


வாதத்திற்காக, மனிதகுமாரன் கொடுமையான வேதனையுடன் பலியானார் என்று வைத்துக் கொள்வோம். பைபிளின் கூற்றுப்படி, இயேசு சிலுவையில் இருந்தது மூன்றிலிருந்து ஆறு மணிநேரம் என்கின்றனர்.  அதாவது, அதிகபட்சமாக அவர் ஆறு மணிநேரம் வேதனையில் இருந்திருக்கிறார். இதற்காகத்தான் புனிதவெள்ளியன்று கிறிஸ்தவர்கள் கண்ணீர்விட்டு கதறியழுகின்றனர். வருடக் கணக்கில் புற்றுநோய் போன்ற கொடிய நோயின் வேதனையில் ஒரு பாவமும் அறியாத சின்னஞ்சிறு குழந்தைகள் துடிப்பதை என்னவென்று சொல்வது?

பாவமே செய்யாத ஒன்று பலியாவாதால் மற்றவர்களின் பாவம் எப்படிப் போகும்? உதாரணத்திற்கு, ஒரு பாவமும் அறியாத எனது குழந்தையை, நீங்கள் அடித்துத் துன்புறுத்தி, சித்திரவதை செய்து கொன்றால் மட்டுமே உங்களை என்னால் மன்னிக்க முடியுமென்று நான் கூறினால், என்னைப் பற்றி என்னவென்று நினைப்பீர்கள்?

ஆதிபாவம் மனிதர்கள் மீது தொடர்வதாக கூறியது யார்? கடவுள்தான்!  பலி கொடுத்தால் மட்டுமே ஆதிபாவத்தை மன்னிக்க முடிமென்ற விதியை கடவுளுக்கு எழுதியது யாரோ? அதுவும் கடவுள்தான்! ஆக அவர் தனக்குத்தானே ஒரு விதியை எழுதிக் கொண்டு, அதை மீற முடியாமல் சிலுவையில் பலியானதாக தனக்குத் தானே காண்பித்துக் கொண்டார். கடவுளுக்கே விதி இருந்திருக்கிறது என்றால் மனிதர்களுக்கு தேர்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுவது பொருளற்றது.

கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையான சிலுவை மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் அதைத் தொடரும் இரட்சிப்பையும் மறுப்பது போலவே,  இயேசு கடவுளின் மகன் என்ற வாதத்தையும் குர்ஆன் முற்றிலும் நிராகரிக்கிறது. அன்றைய பாகன் அரபிகள் லாத், மனாத், உஸ்ஸா-வை அல்லாஹ்வின் பிள்ளைகள் என்று கூறியதைக் கேட்டு எப்படி எரிச்சலடைந்தானோ அதே போல, இயேசு கடவுளின் மகன் என்ற கிருஸ்தவர்களின் கோரிக்கையையும் கண்டு அல்லாஹ்விற்கு மண்டை காய்ந்து விட்டது. தன்னையும் கடவுளாக கூறிக்கொள்ளும் அல்லாஹ்வினால் இதை ஏற்க முடியவில்லை. இக்குற்றச்சாட்டை எதிர்த்து குர்ஆன் 6:101 ஒரு கேள்வியையும் எழுப்புகிறான். முஹம்மது வாழ்ந்த காலத்தில் DNA பரிசோதனை முறைகள் இல்லை. இல்லையெனில் அல்லாஹ், அதற்கும் தயாராகியிருப்பான் என்று நினைக்கிறேன்.

தொடரும்...



தஜ்ஜால்