Wednesday, 28 August 2013

டார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(!)

எதிர்க்குரலுக்கு எதிர்க்குரல் 3


எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் ஆஷிக்கின் பதிவு: ஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் சொல்லப்படாத இரகசியங்கள்.

முதலில் நாம் சில அடிப்படை புரிதல்களை விளங்கிக் கொள்ள வேண்டும். மதநம்பிக்கை என்பது எந்த பரிசீலனைக்கும் உட்படாமல் அதுவே சரி என்றும், எக்காலத்திலும், எந்த விதத்திலும், அதில் எவ்வித மாறுதலுக்கும் இடமில்லை என்று உறுதியாக நம்புவது. ஆனால் அறிவியல் இவ்வாறல்ல, அதற்கு சான்றுகள் மட்டுமே முக்கியம். முதலில் செய்யப்பட்ட முடிவுக்கு மாற்றமாக நிகழ்காலத்தில் சான்றுகள் கிடைத்தால் தயக்கமே இல்லாமல் முந்திய முடிவிலிருந்து புதிய முடிவுக்கு அறிவியல் மாறிக் கொள்ளும். இது முரண்பாடல்ல, அறிவியலின் வளர்ச்சி. இயங்கியல் அடிப்படையில் சொன்னால் முரண்பாடு இல்லாமல் வளர்ச்சி இல்லை. தொடக்க அறிவியல் பூமி தட்டை என்று சொன்னது, பின்னர் பூமி உருண்டை என்றும், அதன் பின்னர் துருவங்களில் சற்றே தட்டையான உருண்டை என்றும் அந்த முடிவுகள் மாற்றப்பட்டது. இதை முரண்பாடு என்று கொள்வதும், அறிவியல் தவறு என்று கொள்வதும் பிழையானவைகள், புரிதலற்றவைகள். ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் மதத்தை அதன் வேதங்களை எப்படி நம்புகிறார்களோ, அந்தப்படியே நாமும் அறிவியலை நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். அறிவியல் முடிவுகள் மாறும் இயல்புடையவை. ஆனால் அந்த மாறுதல்களுக்கும் சான்றுகள், ஆதாரங்கள் வேண்டும்.

இந்த அடிப்படையில் பரிணாமவியலைப் பார்த்தால், டார்வின் பரிணாமவியலுக்கு பருண்மையான தொடக்கத்தைக் கொடுத்தார். அதிலிருந்து பலரின் பங்களிப்புகளோடு அது தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. பரிணாமவியல் டார்வினிலிருந்து தொடங்கவும் இல்லை, டார்வினோடு முற்றுப் பெறவும் இல்லை. பருண்மையான தொடக்கம் என்பதன் பொருள் அவருக்கு முனே சிலர் பரிணாமவியலில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளைச் செய்திருந்தாலும், டார்வின் ஒரு கோட்பாடாக முன்வைக்கும் அளவுக்கு ஆய்வுகளைச் செய்ததும் முடிவுகளைக் கண்டடைந்ததும் ஆகும். மட்டுமல்லாது, அவரின் ஒவ்வொரு முடிவுகளும் எந்த மாறுதல்களுக்கும் இடமில்லாத அறுதிகளும் அல்ல. ஆனால் நம்முடைய மத நம்பிக்கையாளர்களோ அவர்கள் தங்களின் தூதர்களை எப்படி நம்புகிறார்களோ, அந்தப்படியே நாமும் நம்ப வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். டார்வின் கடவுளோ தூதரோ அல்லர். அவர் ஓர் அறிவியலாளர் மட்டுமே. அவரின் அறிவியல் முடிவுகள் கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். தேறுபவைகள் நிற்கும் அல்லாதவைகள் தள்ளப்படும்.

இந்த அடிப்படையை விலக்கி விட்டு, அறிவியலுக்கு முரணான பார்வையில் அறிவியலை அணுகினால் அது நேர்மையற்றதாக இருக்கும் அல்லது மதவாதமாக இருக்கும். எதிர்க்குரல் எழுப்பும் நண்பர் ஆஷிக்கின் குரலும் மதவாதக் குரல் தான். ஆனால் சற்றே அறிவியல் முலாம் பூசப்பட்டிருக்கிறது.

தான் வாழ்ந்த காலத்திலும் அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் வரையிலும் மாபெரும் அறிஞராக அறிவியலாளராக மதிக்கப்பட்டவர் அரிஸ்டாட்டில். ஏன் இப்போதும் கூட அவருக்கு அந்த மரியாதை உண்டு. அவர் தன்னுடைய ஆய்வின் விளைவாக புவியை மையமாகக் கொண்டே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்ற கண்டுபிடிப்பை வெளியிட்டார். இந்தக் கண்டுபிடிப்பு 15ம் நூற்றாண்டின் கோபர்நிகஸ் காலம் வரை செல்வாக்குடன் இருந்தது.

சில பத்தாண்டுகளுக்கு முன் தன் சொந்த குடும்பத்தினர் 16 பேரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்றான் ஜெயப்பிரகாஷ் என்பவன். அவன் பிடிபட்டபோது அதற்கு அவன் கூறிய காரணம் நூறாவது நாள் படம் பார்த்தது தான் என்பது.

இந்த இரண்டையும் நீங்கள் எப்படி புரிந்து கொள்வீர்கள்? எனக்கு தெரியாது. ஆனால், இந்த இரண்டையும் ஒன்றிணைத்தால் அது நண்பர் எதிர்க்குரல் ஆஷிக்கின் பதிவை ஒத்திருக்கும் என்பது மட்டும் உறுதி. இனி கட்டுரைக்குத் திரும்புவோம்.

அவர் கட்டுரையின் தொடக்கமே அதிரடியாய் இருக்கிறது. டார்வினின் பரிணாமக் கொள்கை தான் இனவெறிக்கு வித்திட்டது என்கிறார். இனவெறிக்கும் பரிணாமக் கொள்கைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் பரிணாமக் கொள்கையைக் கூறி ஹிட்லர் தன்னை நியாய்ப்படுத்திக் கொள்ள முயன்றார். 16 பேரைக் கொன்ற ஜெயப்பிரகாஷ் போல. ஒரு மனித இனத்தை விட இன்னொரு மனித இனம் மேம்பட்டது என்பதை பரிணாமத்தை ஏற்பவர்கள் நம்ப(!) வேண்டும் என்று கட்டளையிடுகிறார். அறிவியலை நம்புபவர்கள், அரிஸ்டாட்டிலை மதிப்பவர்கள் இன்றும் புவி தான் மையம் என்று தான் கூற வேண்டும் என்று பாடம் எடுக்கிறார்.

முதலாளித்துவம் வளர்ந்த பிறகு தான் தேசிய இனம் எனும் கொள்கையும், அதனடிப்படையில் இனவெறியும் தோன்றின. நிலப்பிரபுத்துவ காலங்களிலெல்லாம் இனப்பாகுபாடு பெரிய அளவில் இல்லை. அந்த காலகட்டங்களில் உலகமெங்கும் இருந்த அரசுகளை மக்கள் இனம் எனும் அடிப்படையில் எந்த மன்னனையும் எதிர்க்கவோ ஆதரிக்கவோ செய்ததாக வரலாறு இல்லை. அரேபிய முகம்மதின் தோன்றல்கள் துருக்கியை ஆண்டபோது இன அடிப்படையில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஐரோப்பிய இனம், ஆப்பிரிக்க இனம், மங்கோலிய இனம் என்பதெல்லாம் தோற்றவேறுபாடுகளைக் கொண்டு அறிதலுக்காக பிரிக்கப்பட்ட அறிவியல் பகுப்புகள். இது நண்பர் ஆஷிக் கூறும் இனத்தில் சேராது. ஆனால் இன மேம்பாடு குறித்து விதந்தோத நண்பர் எடுத்துக் கொண்ட ஹிட்லர் கொன்றழித்த கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஹிட்லரின் இனமான அதே ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது நண்பருக்கு ஏன் மறந்து போனது? பரிணாமக் கொள்கையால் உந்தப்பட்டு ஹிட்லர் இனவெறி கொண்டிருந்தால் ஆப்பிரிக்க கருப்பர்களை அல்லவா அவர் கொன்றழித்திருக்க வேண்டும். தன் சொந்த ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களான ஜெர்மன் கம்யூனிஸ்டுகளையும், ஜெர்மன் யூதர்களையும் ஏன் ஹிட்லர் கொன்றழித்தார்? ஹிட்லர் கூறிய தூய ஆரியவாதம் என்பது ஜெர்மானிய உயர்வெண்ணத்திலிருந்து தோன்றியது. கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் ஜெர்மானியர்கள் அல்லர், ஜெர்மனின் உயர்வுக்கு எதிரானவர்கள் என்று காரணம் காட்டியே அழிக்கப்பட்டனர். இது தேசியவாதமா? பரிணாமவாதமா? நண்பர் ஆஷிக் பதில் கூறுவாரா? ஆக ஹிட்லரின் இனவெறிக்கும் பரிணாமத்துக்கும் எந்தவித ஒட்டும் இல்லை. ஜெயப்பிரகாஷ் சொல்லிவிட்டான் என்பதற்காக கதை எழுதிய மணிவண்ணனை குற்றம் சொல்வது எந்த விதத்தில் சரி நண்பரே?

ஹிட்லரையும் டார்வினையும் பசை போட்டு ஒட்டுவதற்கு நண்பர் ஆஷிக் பயன்படுத்தியவை என்ன? The Preservation of Favoured Races in the Struggle for Life எனும் டார்வின் நூலின் தலைப்பு. Struggle for Survival அல்லது survival of fitness. இவைகளைத் தவிர ஏனையவை எல்லாம் நண்பர் ஆஷிக்கின் சொந்த கற்பனைகள் அல்லது மண்டபத்தில் யாரோ ஏற்கனவே எழுதியிருந்ததன் மொழிபெயர்ப்பு திரித்தல்கள். இவைகளைக் கொண்டு அவர் கூறுவது என்ன? “வாழ்க்கைப் போராட்டத்தில் முன்னேறிய இனங்களின் பாதுகாப்பு” இந்த சொற்றொடரில் இனவெறியைப் பிழிந்தெடுக்க முடியுமா? அல்லது, தகுதியுடயவை நீடிக்கும் என்பதில் இனவெறி கருக் கொண்டிருக்கிறதா?

முதலில் டார்வின் பயன்படுத்திய இனம் எனும் சொல்லின் பொருளும், நண்பர் ஆஷிக் பயன்படுத்தியிருக்கும் இனம் எனும் சொல்லின் பொருளும் வேறு வேறானது. டார்வின் பயன்படுத்தியது காக்கோசிய இனம், நீக்ராய்டு இனம், மங்கலாய்டு இனம் எனும் அறிவியல் சார்ந்த அதாவது தோற்றப்பாகுபாட்டில் மனிதனைப் பிரிக்கும் இனங்கள். அந்த அடிப்படையில் காக்கோசிய (ஐரோப்பிய) இனம் நீக்ராய்டு (ஆப்பிரிக்க) இனத்தைவிட காலத்தால் பிற்பட்டது, புதிய பரிணமிப்பு. அதாவது நீக்ரய்டுகளை விட துருவப்பனியின் தாக்கத்தால் தோற்றத்தில் மாற்றம் பெற்று புதிய தகவமைப்புகளுடன் கூடியவன் காக்கோசிய மனிதன். ஆனால் நீக்ராய்டைவிட முன்னேறியவனா என்றால் கண்டிப்பாக இல்லை என்பதே பதில். ஏனென்றால் அறிவியல் கூறும் இனம் என்பது, டார்வின் கூறும் இனம் என்பது தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. அறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல. இந்த வேறுபாடு நண்பருக்கு தற்செயலாக தெரியாமல் போனதா? அல்லது தான் எழுத நினைப்பதை எழுதுவதற்கு தெரியாததாய் காட்டிக் கொள்வதுதான் வசதி என்று கருதினாரா?

தகுதியுடையவை நீடிக்கும் என்பதின் பொருள் என்ன? இந்த சொற்றொடர் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. மதவாதிகளின் திரித்தலுக்கும் ஏதுவாக இருக்கிறது. பரிணாமத்தை மறுப்பதற்கு தமிழகத்தின் மெகாஸ்டார் மதவாத அறிஞர் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பினார். பலமானவை வாழும் என்பது தானே டார்வின் கோட்பாடு, புலியை விட ஆடு பலவீனமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அரசு தேசிய விலங்காக அறிவித்து பாதுகாப்பை வழங்கிக் கொண்டிருந்தும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. ஆனால் மனிதன் சகட்டுமேனிக்கு ஆடுகளை கொன்று தின்று கொண்டிருக்கிறான். ஆனால் ஆடுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. டார்வின் கொள்கை பொய் என்பதற்கு இது கண்முன்னே இருக்கும் ஆதாரம், என்று புளகமடைய வைக்கிறார் அந்த அறிஞர்(!). இது சரியா? வாழ்க்கைப் போராட்டத்தில் நீடித்து உலகில் நிற்பதற்கு தகுதி வேண்டும். பூமியில் தோன்றி தொன்னூறு விழுக்காடு உயிரினங்கள் அழிந்து போயிருக்கின்றன. அவற்றுள் மிகப்பலமானதாக கருதப்படும் டினோசர்களும் அடக்கம். தோராயமாக மூன்றுகோடி ஆண்டுகள் பூமியை ஆக்கிரமித்திருந்த டினோசர்களுக்கு இல்லாத தகுதி தற்போது ஆடுகளுக்கு இருக்கிறதா? ஆம். நீடிக்கும் தகுதி என்பது தன் சொந்த வலிமையினாலோ புற வலிமைகளினாலோ தன்னை காத்துக் கொண்டு இனப்பெருக்கம் மூலம் தன் இனத்தையும் காத்துக் கொள்வது. ஆடுகளை மனிதன் உணவாகக் கொள்வதால் மனிதர்களால் ஆடு பாதுகாக்கப்படுகிறது. அதுபோல புலிகளை வேட்டையாடுவது கௌரவம் என்று கருதப்பட்டதால் நிலப்பிரபுத்துவ கால குறு மன்னர்களால் அதிகமதிகம் கொன்று தீர்க்கப்பட்டன. இன்று இந்தியப் புலிகள் அரசின் பாதுகாப்பில் தங்களின் தகுதியை பெற்றுக் கொண்டிருக்கின்றன. பலவீனமான ஆடுகள் பெருகுகின்றன என்பதோடு வரையாடுகளையும் ஒப்பு நோக்க வேண்டும். வெள்ளாடும் செம்மரியும் மட்டும் தான் ஆடுகளா? இந்த ஆடுகள் மட்டும் தான் எண்ணிக்கையில் பெருகுகின்றன. ஆனால் வரையாடுகள். அதை மனிதன் உணவாக கொள்வதில்லை. தமிழக அரசின் பாதுகாப்பில் இருந்தாலும் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. வரையாடுகளும் பலவீனமானவை தானே அவை ஏன் எண்ணிக்கையில் கூடவில்லை?

மதவாதிகளுக்கு எப்போதுமே உண்மை தேவையில்லை. தங்களின் மூட நம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்க உண்மை போன்ற திரித்தல்களே தேவை. இவைகளை ஏன் கூறிகிறேன் என்றால், நண்பர் ஆஷிக் கூறும் டார்வின் குறைந்த இனம் எனக் கூறிய ஆப்பிரிக்க மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள். அப்படி என்றால் பரிணாமம் தவறு தானே. எனும் கருத்தும் அந்த வகைப்பட்டதே என்பதற்காகத்தான். தாழ்ந்த இனம் என்றதும் அறிவில் குறைபாடானவர்கள், கற்றுக் கொள்ளும் பண்பில் குறைபாடானவர்கள் என்று கற்பிதம் செய்து கொண்டு டார்வின் நபி பொருத்தமில்லாதவற்றை கூறிவிட்டார். எனவே, அவர் ஏக இறைவனான அல்லாவின் தூதர் அல்ல என்று கூறினால் சிரிக்க மட்டும் தான் முடியும். கவனிக்கவும், பரிணாமம் எப்போதோ டார்வினைக் கடந்து விட்டது.

இன்றைக்கு இருக்கும் மனித இனமான க்ரோமாக்னன், அதற்கு முந்திய நியாண்டர்தால் உட்பட 20க்கும் மேற்பட்ட மனித இனங்கள் பூமியில் வாழ்ந்திருக்கின்றன. அந்த இனங்களெல்லாம் எப்படி அழிந்தன? க்ரோமாக்னன் இனத்திலேயே ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பழங்குடிகள் முற்றாக எப்படி துடைக்கப்பட்டார்கள் என்பது நாம் வாழும் காலத்தில் இருக்கும் இரத்த வரலாறு. அமெரிக்க செவ்விந்தியர்கள், லத்தின் அமெரிக்க மயன்கள் எப்படி கொன்றழிக்கப்பட்டார்கள். ஏன் இன்றும் தமிழகத்தின் கோண்டுகள் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. இவைகளுக்கெல்லாம் என்ன காரணம்? முதலாளித்துவ இனவெறியா? டார்வினின் இனம் குறித்த ஆய்வுகளா? நண்பர் ஆஷிக் தேடல் கொண்டவராக இருந்தால் வரலாறுகளில் பார்வையை பதிக்கட்டும் சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. தங்களைப் போன்ற தொழில்நுட்ப அறிவை இன்னும் பெற்றிருக்கவில்லை எனும் ஒற்றை காரணத்தின் மேல் நின்று ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் எவ்வளவு மக்களை எவ்வளவு இனங்களை சூரையாடியிருக்கின்றன என்பது புரியவரும்.

ஒரு ஹிட்லரோடு ஏன் நண்பர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்று அமெரிக்கா ஒருபக்கம் இஸ்லாமிய மதவெறிக்கு தூபம் போட்டும் மறுபக்கம் முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி பலனடைவது கூட டார்வின் கூற்றிலிருந்து கிளைத்தது தான் என்று கூட நண்பர் கட்டுரை தீட்டிக் கொள்ளலாம். ஆனால் அவைகளில் உண்மை இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லையா?

நண்பர் ஆஷிக்கின் இந்த கட்டுரை முழுவதுக்குமான அடிப்படை சர் ஆர்தர் கீத் என்பவரின் ஒரு மேற்கோளிலிருந்து தான் கிளைத்திருக்கிறது. அதாவது ஹிட்லர் பரிணாமக் கொள்கையை ஆதரித்ததால் தான் யூத இனப்படுகொலைகளைச் செய்தார் என்று ஹிட்லரின் செயல்பாடு குறித்து கீத் கூறுவதாக இருக்கிறது அந்த மேற்கோள். பரிணாமவியலின் தன்மைகள் குறித்து ஆராயும் போது தனிப்பட்ட சிலரின் கருத்துகளோ செயல்களோ எந்த அளவுக்கு முக்கியப்படும்? ஹிட்லரின் கொலைக்களத்துக்கும் பரிணாமவியலுக்கும் தொடர்பில்லை என்று மேலே விளக்கப்பட்டிருக்கிறது. நண்பர் ஆஷிக் ஆழமாக இதை விளக்க முன்வரும்போது மேலும் ஆழமாக நாம் மறுக்கலாம். இப்போதைக்கு அதே ஆர்தர் கீத் என்பவரின் அதே “evolution and ethics” நூலிலிருந்து ஒரு மேற்கோள் மட்டும் போதும் எனக் கருதுகிறேன். ஹிட்லர் ஒருபோதும் பரிணாமக் கொள்கையை நிரூபிப்பதற்காக தான் யூதக் கொலைகளை செய்வதாக கூறிக் கொண்டதில்லை. மாறாக, கடவுள் தனக்கு இட்ட பனியை தான் செய்வதாகத் தான் கூறியிருக்கிறார். அந்த நூலின் மூன்றாவது அத்தியாயமான The Behavior of Germany Considered from an Evolutionary Point of View in 1942 என்பதில் இப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது, “to discuss the question of why Providence created different races, but rather to recognize that it punishes those who disregard its work of creation” அதாவது, “படைப்பு, தன்னை அவமதிப்பவர்களை தண்டிப்பது, கடவுள் ஏன் வெவ்வேறு இனங்களைப் படைக்க வேண்டுமென்ற கேள்வியை விவாதிக்கும் பொழுது ஓரளவிற்கு புரிந்து கொள்ளலாம்” இதற்கு நண்பர் ஆஷிக் என்ன பதில் கூற முற்படுவார் என்பதைக் காண ஆவலாக உள்ளேன்.

இதுபோன்ற பரிணாமத்திற்கு எதிரான தொடர் கட்டுரைகளை நண்பர் எழுதுவதன் நோக்கம் பரிணாமக் கொள்கை தவறு படைப்புக் கொள்கையே சரி என்பது தான். இதை அக்கட்டுரைகளை முடிக்கும் முத்தாய்ப்புகளில் காணலாம். ஆனாலும் எப்படி சரி என்பதை மட்டும் நண்பர் ஆஷிக் உட்பட எந்த மதவாதியும் கூறுவதே இல்லை. எனவே இந்தக் கட்டுரைக்கும் இனி வரப்போகும் கட்டுரைக்குமான ஆதாரக் கேள்வி இது தான். பரிணாமத்தை நுணுகுங்கள் தப்பில்லை. அதில் தவறுகளும் உண்டு, எந்த அறிவியலாளரும் இதை மறுக்கப் போவதில்லை. ஆனால் அப்படி நுணுகி அறிவியலாளர்களால் தவறு என ஒப்புக் கொண்டு ஒதுக்கப்பட்டவைகளுக்கு அலங்காரம் செய்து உங்கள் மூட நம்பிக்கைகளுக்கு மணம் முடிக்க எண்ணாதீர்கள். பரிணாமக் கொள்கை தவறு என்பதற்கு சிறு சான்று கிடைத்தாலும் அவைகளை பரிசீலிப்பதற்கு அதை ஏற்கும் அனைவரும் ஆயத்தமாக இருக்கிறார்கள். எனவே, படைப்புக் கொள்கை தான் சரி என்பதற்கான ஆதாரங்களை தாருங்கள். எவ்வளவு அற்ப சான்றாக இருந்தாலும் அவற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சரியா தவறா என ஆராய்ந்து பார்க்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். இந்த ஆதாரக் கேள்வி இத்தொடரில் இனி வரவிருக்கும் அத்தனை கட்டுரைகளிலும் தொடரும். பதில் வருமா?


செங்கொடி

Thursday, 15 August 2013

குர்ஆன் கூறும் அறிவியல் . . . . .?


1.பழம் தின்னும் தேனீக்கள் . . . . . ?



            அல்குர்ஆனில் அறிவியல் சான்றுகள் ஏராளமாய் உள்ளன என்று தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் புட்டு புட்டு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் அவர்களின் குர்ஆன் கூறும் அறிவியல் கட்டுரைகளைப் படித்தால், தாம் எடுத்துக்கொண்ட முன்முடிவுகளுக்கு எப்படியாவது போய்விடவேண்டும் என்ற ஆவல் மட்டுமே தெரிகிறதே ஒழிய உண்மையான அறிவியல் நோக்கமோ, நடுநிலைச் சிந்தனையோ அதில் வெளிப்படுவதே இல்லை. சொற்களை வலிந்து பொருள்கொண்டும், அடைப்புக்குறிக்குள் முன்னொட்டு - பினொட்டுச் சேர்த்தும்  தமது முன்முடிவுகளுக்கு அவர்கள் செல்லும் போது, வெறும் சாலையோர சர்க்கஸ்காரர்களைப் போன்று தம்மை வேடிக்கைப் பொருளாக்கிக் கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, மாரிஸ்புகைலின் விஞ்ஞான ஒளியில் பைபிளும் குர்ஆனும், டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களின் குர்ஆனும் நவீன விஞ்ஞானமும், டாக்டர் ஹாருன் யஹ்யா அவர்களின் அல்லாஹ்வின் அற்புதப் படைப்புகள், திருச்சி குலாம் ரசூல் அவர்களின் குர்ஆன் ஒளியில் விஞ்ஞானம், ஏ.கே. அப்துல் ரஹ்மானின் திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள், அ.முகம்மது கான் பாகவி அவர்களின் அருள்மறை குர்ஆனும் அறிவியல் கண்டுபிடிப்புகளும், ரஹ்மத் ராஜகுமாரன் அவர்களின் அல்குர்ஆனில் அறிவியல் அத்தாட்சிகள் என்று பல பல படைப்புகளும் தமிழில் வந்து நம்மைத் திக்குமுக்காடச் செய்துகொண்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் அனைவருமே குர்ஆனில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ள, அறிவியலுக்குமுரண்பட்ட பல செய்திகளை மூடிமறைத்துவிட்டு அல்லது அவைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, பெரிதும் வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கு விவாதிக்கலாம். முதலாவதாக தேனீக்களின் உணவு எதுவென குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம்.
           
குர்ஆனில் 16வது அத்தியாயம் தேனீ (அந் நஹல்) ஆகும். இது இறுதி மூன்று வசனங்களை(ஆயாத்தை)த் தவிர்த்து மற்ற 125 வசனங்களும் (ஆயாத்களும்) மக்காவில் அருளப்பட்டதாக (மக்கீ என்று) குறிக்கப்படுகிறது. அந்த இறுதி மூன்று வசனங்கள் மதினாவில் அருளப்பட்டவை (மதனீ) என்றும் கூறப்படுகிறது. அருளப்பட்ட வரிசையில் (தர்தீபே நுஜுலி) இது 70 ஆக உள்ளது.

இந்தத் தேனீ அத்தியாயத்தில் 69வது வசனத்திற்கு விளக்கமாக, தேன் உண்டாவது எப்படி என்பது பற்றிய விளக்கத்தை அண்ணன் பீ.ஜை. அவர்கள். டாக்டர். ழிலன் மற்றும் சிற்பி.இராஜன் குழுவினருக்கு பெரியாரிஸ்ட்களுக்கு - விலாவாரியாக வகுப்பு எடுத்ததை, நாம் குறுந்தகடுகளில் கண்டு சிரிக்க முடிந்தது. ஆனால் அதே வசனத்தில்தான் தேனீக்கள் கனிகளை உண்ணுகின்றன என்பதும் இருக்கிறது. கனிகளை உண்ணும் தேனீக்கள் பற்றிய அறிவியல் விளக்கத்தை அண்ணன் பீ.ஜை. மறைத்துவிட்டார், அல்லது வசதியாக மறந்துவிட்டார். அங்கு அண்ணன் பீ.ஜை. அது பற்றி மூச்சுவிடவில்லை.(அவர் மட்டுமல்ல, குர்ஆனில் அறிவியலைத் தேடும் முன் சொன்ன மாரிஸ்புகைல், டாக்டர் ஜாகீர் நாயக், டாக்டர் ஹாருன்யஹ்யா, திருச்சி குலாம்ரசூல், ஏ.கே.அப்துல் ரஹ்மான், அ.முகம்மது கான் பாகவி, ரஹ்மத் ராஜகுமாரன் முதலியவர்கள் கூட பழம் தின்னும் தேனீக்கள் பற்றி மூச்சு விடுவதில்லை.)

ஆனால் ஜெர்ரி அண்ணாச்சியுடன் நடைபெற்ற விவாதத்தில் மாட்டிக்கொண்ட பீ.ஜை. அவர்கள், ஒரு தேனீ, பழத்தின் மீது அமர்ந்திருப்பது போல, ஒரு படத்தை விட்டலாச்சாரியா வேலை (கிராஃபிக்ஸ்) செய்துகாட்டி ஏமாற்றினார். இப்படத்தை கனிகள் உண்ணும் தேனீக்களுக்கு ஒரு நிரூபணமாகவே அவர் பெருமிதத்தோடு எடுத்துக் காட்டினார்.  இதைப் போலவே, இட்லி உண்ணும் தேனீ, ஜிலேபி உண்ணும் தேனீ, முறுக்கு உண்ணும் தேனீ, கரும்பு உண்ணும் தேனீ, பாகற்காய் உண்ணும் தேனீ, வாழைப்பழம் உண்ணும் தேனீ, பலாப்பழம் உண்ணும் தேனீ, பிரியாணி உண்ணும் தேனீ, கேக் உண்ணும் தேனீ, அப்பளம் உண்ணும் தேனீ, டீ குடிக்கும் தேனீ, ஷர்பத் குடிக்கும் தேனீ, சாராயம் குடிக்கும் தேனீ, கள்ளு குடிக்கும் தேனீ எக்சட்ரா எக்சட்ராவாக விதம் விதமாக படம் போட்டுக் காட்டிவிட முடியும் என்பதை ஏனோ அவர் மறந்துவிட்டார்.

அடுத்து, தேன்! வியந்தேன்! என்ற நூலில் அதன் ஆசிரியர் நமக்கெல்லாம் அல்வா கொடுக்கும் வேலையை மிக அருமையாகச் செய்திருக்கிறார். அதாவது, இனிப்புள்ள பொருள்கள் அனைத்தையும் தேனீக்கள் உண்ணும் என்றும், எல்லாவிதமான இனிப்புப் பொருட்கள் என்று குறிப்பதற்காகவே எல்லாவிதமான கனிகளிலிருந்தும் என்று குர்ஆன் கூறியுள்ளது என்று அந்நூலில் அவர் விளக்கம் அளிக்கிறார். பழங்கள் என்பதற்கும், இனிப்புப் பொருட்கள் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவராகவா அல்லாஹ் இருக்கிறார்?  இந்த விளக்கம் சரி என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொள்வோம். நிலக்கரியிலிருந்து தயாரிக்கப்படும் சாக்கரீன், கிளிசரின், மற்றும் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் சுகர்ப்ரீ, சித்த மருந்துச் சரக்கு அதிமதுரம் ஆகிய இனிக்கும் பொருட்களையும் தேனீக்கள் உண்ணுமா என்பதே நமது கேள்வி. அதற்கான விளக்கத்தை, தேன்! வியந்தேன்! நூலின் ஆசிரியர்தான்  நமக்கு அளிக்க வேண்டும்.

இங்கு குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் அந்த வசனத்தை (16:69) எப்படி தமிழாக்கம் செய்துள்ளனர் என்பதைக் காணலாம்.

1.திருக்குர்ஆன்-தமிழாக்கம் (பி.ஜைனுல்ஆபிதீன்) 2002, 2003, 2005, 2008,   
   2013ஆம் ஆண்டு பதிப்புகள்.   
................பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உமதிறைவனின்............

2. அன்வாறுல் குர்ஆன்(இ.எம். அப்துர் ரஹ்மான்)-பாகம்10,1982ஆம் ஆண்டு பதிப்பு
பின்னர் கனிகள் அனைத்திலிருந்தும் புசித்து அப்பால் எளிதாக்கப்பட்ட ...................
           
3. தப்ஸீருல் ஹமீத் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் மஜீத்
   (எஸ்.எஸ்.அப்துல் காதிர் பாக்கவி) பாகம் 7 2010 ஆம் ஆண்டு பதிப்பு
பின்னர் எல்லாக் கனிகளிலிருந்தும் புசிப்பாயாக.........................

            4. தர்ஜுமத்துல் குர்ஆன் பிதன்வீரில் பயான் (பி.அப்துல் கரீம் ஹளரத்)
               பாகம் 3 ஜனவரி 2009ஆம் ஆண்டு பதிப்பு
பிறகு, ஒவ்வொரு கனிகளிலிருந்தும் உணவருந்தி...........................

            5. குர்ஆன் பேசுகிறது (கே. முஹம்மது முஸ்தபா அஸ்-ஸிராஜி)
                ஜூன் 2010ஆம் ஆண்டு பதிப்பு
பிறகு, கனிகள் யாவிலும் உண்டு, உன் இரட்சகரின்......................

            6. திருக்குர்ஆன் அரபி மூலத்துடன் தமிழாக்கம்
   (இஸ்லாம் இன்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் லிட், அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்)
              1989ஆம் ஆண்டு பதிப்பு (16:அந் நஹ்ல்:70)
பின்னர் எல்லாவகையான பழங்களிலிருந்தும் தின்று.......................

7. திருக்குர்ஆன் தமிழாக்கம் (டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்)
   ஹெல்த் டைம் பப்ளிகேஷன்ஸ், மே 2007 ஆம் ஆண்டு பதிப்பு
பின், எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உணவருந்தி....................

8. குர்ஆன் இறுதி வேதம் (ரஷாத் காலீஃபாவின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்)
    ஏப்ரல் 2009ஆம் ஆண்டு பதிப்பு                          
பின்னர்,மிகத் துல்லியமாக, உன் இரட்சகரின் திட்டத்தைப் பின்பற்றி அனைத்து கனிகளிலிருந்தும் உண்டுகொள்....................

9. குர்ஆன் இறுதி ஏற்பாடு (ரஷாத் காலீஃபாவின் ஆங்கில மூலத்தின் தமிழாக்கம்)   
    ஏப்ரல் 2008ஆம் ஆண்டு பதிப்பு
பின்னர்,மிகத் துல்லியமாக, உன் இரட்சகரின் திட்டத்தைப் பின்பற்றி அனைத்து கனிகளிலிருந்தும் உண்டுகொள்....................

            10. திருக்குர்ஆன்,(சையித் அபுல் அஃலா மௌதூதியின் உர்து மூலத்தின் தமிழாக்கம்)
     இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், (அக்டோபர் 1989, ஆகஸ்ட் 2005, செப்டம்பர்     
     2008, ஜனவரி 2009ஆம் ஆண்டு பதிப்புகள்.
மேலும் பலதரப்பட்ட பழகளிலிருந்து சாற்றை உறிஞ்சிக்கொள்........................

இங்கு எடுத்துக்காட்டிய பத்து (வரிசை எண்:1முதல் 10வரை) தமிழாக்கங்களில் பழங்களிலிருந்து, அல்லது பழங்களை, அல்லது பழச்சாற்றை தேனீக்களின் உணவாக-தேனீக்கள் உண்பதாக- எந்தவொரு திரித்தலும் இல்லாமல் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ளதை கவனத்தில் கொள்வோம். குர்ஆன் அரபு மூலத்திற்கு ஓரளவு பொருந்திய தமிழாக்கம் இது எனலாம்.

ஆனால் இயற்கை அறிவியலுக்கு இது முரணானது என்பது அனைவரும் அறிந்ததே! நடைமுறைக்கு பொருந்துவதாக இல்லாத இந்த வசனத்தை எப்படி உண்மை என்று நிரூபணம் செய்வது என்று சிந்தித்த குர்ஆனிய அறிஞர்கள் இருக்கவே இருக்கிறது அடைப்புக்குறி (பிராக்கெட்) என்று பூந்துவிளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

மலர்களிலுள்ள நெக்டார் எனப்படும் பூந்தேனை உறிஞ்சி தனது வயிற்றில் சுரக்கும் சில சுரப்புகளைக் கலந்து தேனாக மாற்றி, தேனீக்கள் தனது கூடுகளில் (தேனடைகளில்) சேகரித்து வைக்கின்றன. தேனின் முக்கிய மூலப்பொருள் நெக்டார் எனப்படும் பூந்தேனே யாகும். இதுவே இயற்கை அறிவியல். மக்கள் அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்த இந்த அறிவியல் உண்மை குர்ஆனை அருளிய அல்லாஹ்வுக்குத் தெரியாமல் போய்விட்டதுதான் உச்சகட்ட காமெடி!

இனி, கீழ்வரும் தமிழாக்கங்களைப் பாருங்கள்.

11. தர்ஜுமதுல் குர்ஆன் -பி- அல்தபில் பயான் (அ.கா.அப்துல் ஹமீது பாகவி)
      1961 ஆம் ஆண்டு பதிப்பு
அன்றி நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களிலிருந்தும் அருந்தி உமதிறைவனின்............
           
            12. குர்ஆன் மஜீத் (பா.தாவூத் ஷா ஸாஹிப், என்.பி.அப்துல் ஜப்பார் ஸாஹிப்)
                 1966 ஆம் ஆண்டு பதிப்பு.
பிறகு சகலவகைக் கனிகளி(ன் பூக்களி)லிருந்தும் அருந்தி................

13. சங்கைமிக்க குர்ஆன் மற்றும் தமிழ்மொழியில் அதன் கருத்துக்களின் மொழி   
   பெயர்ப்பு (முஹம்மது இக்பால் மதனீ சௌதி அரேபியப் பதிப்பு)
பின்னர், நீ எல்லா விதமான கனி(யின் மலர்)களிலிருந்தும் உணவருந்தி...............

14. தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் (வேலூர், ஜாமியா அல்பாகியாத்துஸ்   
      ஸாலிஹாத் - அரபிக்கல்லூரி) பாகம் 8, ஜூலை 2010ஆம் ஆண்டுபதிப்பு.
அதன் பிறகு, எல்லா வகையான கனிகளி(ன் பூக்களி)லிருந்தும் நீ அருந்தி.................

15. குர்ஆன் மஜீத் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 1/1983 ஆண்டு பதிப்பு
பின் நீ எல்லாவிதமான கனிக(ளின் மலர்க)ளிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன்..........

            மேலே எடுத்துக்காட்டிய வரிசை எண் 11 முதல் 15 வரையில் உள்ள மொழிபெயர்ப்பு செய்த அறிஞர்கள், அடைப்புக் குறி (பிராக்கெட்) போட்டு அதனுள், மலர்கள் என்றும், பூக்கள் என்றும் இட்டு நிரப்பி ஓரளவு அல்லாஹ்வை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயினும் பிராக்கெட் குறியை எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்பது புரியாமல் குழம்பிப்போன வேறு சில அறிஞர்கள் தொடங்கிய அடைப்புக்குறியை முடிக்காமலும், அல்லது எங்கோ தொடங்கி எங்கோ முடித்தும் தங்களின் மேதாவிலாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டார்கள். இதனை வரிசை எண் 16, 17 களில் காணலாம்.

16. குர்ஆன் மஜீத் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 1990,1993ஆம் ஆண்டு
      பதிப்புகள்
பின் நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன்..........
            (அடைப்புக்குறி முடிவு பெறவில்லை)

17. குர்ஆன் மஜீத் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு, 2010ஆம் ஆண்டு பதிப்பு
பின் நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் காட்டித்தரும்) எளிதான வழிகளில்..........................
(நீண்டுவிட்ட அடைப்புக்குறியும் தொடர்பற்ற வாக்கிய அமைப்பும் கொண்டுள்ளது)

இதில் வேடிக்கை என்னவென்றால், முதல் பதிப்பில் (வரிசை எண் 15 -1983) அல்லாஹ்வைக காப்பாற்ற, சரியாக பிராக்கெட் போட்ட ஹாஜி ஜான் டிரஸ்ட் குர்ஆன் பதிப்புக் குழுவினரே பின்னர் வெளியிட்ட பதிப்புகளில் (வரிசை எண் 16, 17 1990, 1993, 2010) இவ்வாறு குழம்பிப்போனதை நாம் காணமுடிகிறது. இப்படி குழம்பிப்போனவர்கள் தானா, குர்ஆனை உள்ளது உள்ளபடி நமக்கு விளங்கவைக்கப் போகிறார்கள்?

18. தர்ஜமா அல்குர்ஆனில் கரீம் (ஏ. முஹம்மது சிராஜுத்தீன் நூரி)
                 1/2002, 2/2002, 8/2006 ஆம் ஆண்டின் பதிப்புகள்
பின்னர் நீ, எல்லாக் கனி (மலர்) வகைகளிலிருந்தும் உணவருந்தி...............    

19. குர்ஆன் தர்ஜமா (எம்.அப்துல் வஹ்ஹாப், கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி,         
      ஆர்.கே.அப்துல் காதிர் பாகவி)
     ஜனவரி2000, மே2002, செப்டம்பர்2002, செப்டம்பர்2004, ஜூன்2007,   
                ஜூலை2011 ஆம் ஆண்டின் பதிப்புகள்
பிறகு எல்லாக் கனி (மலர்) வகைகளிலிருந்தும் நீ உணவருந்தி..................

20. திருமறையின் தேன்மலர்கள் (திருக்குர்ஆன் வெண்பா) வே.ப.பாபுல்
     2007ஆம் ஆண்டு பதிப்பு
வண்ணக் கனி மலரில் வாய்வைத்துறிஞ்சித் தேன்
உண்டு களித்திறைவன்...............

            21. திருக்குர்ஆன் மூலம் தமிழுரை (எம்.எம்.அப்துல் காதிர் உமரி) டிசம்பர்2011
பின்னர், ஒவ்வொரு கனிகளிலிருந்தும் (மலர்களிலிருந்தும்) உணவருந்தி.................  

அடுத்து வரும் மொழிபெயர்ப்புகள் இன்னும் வித்தியாசமாக அமைந்துள்ளதைக் காண்கிறோம். வரிசை எண் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று பதிப்புகளிலும் ........எல்லாக்கனி (மலர்) வகைகளிலிருந்து...........என்றும், கனிமலரில் என்றும் கூறப் பட்டுள்ளது. கனி (மலர்) என்ற சொற்றொடருக்கு, கனியைத் தரும் மலர் அல்லது கனியின் மலர் என்றும், கனி மற்றும் மலர் என்றும் இரண்டு விதமாகப் பொருள்கொள்ள முடியும். உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகக் கருதி, கனியின் மலர் - கனியைத் தரும் மலர் என்று பொருள் கொண்டால், இது முன்னர் குறிப்பிட்ட வரிசை எண் 11முதல் 17வரையில் உள்ள பதிப்புகளுடன் இணைந்து கொள்ளும். இது முதல் பத்து வரிசை எண்களில் கொடுக்கப்பட்ட குர்ஆன் வசனத்துக்கு கனிகளிலிருந்துதான் தேன் சேகரிக்கப்படுகிறது என்பதற்கு எதிரடியான உண்மையை, அதாவது, மலரிலிருந்துதான் தேன் சேகரிக்கப்படுகிறது என்ற உண்மையை - பிராக்கெட் போட்டதன் மூலம், குர்ஆனிய அறிஞர்கள் ஒத்துக் கொண்டவர்கள் ஆகிறார்கள். அதே சமயத்தில், கனியைத் தரும் மலர் -  கனியின் மலர் - என்று கூறுவதன் மூலம், மல்லிகை, முல்லை, ரோஜா முதலிய கனி கொடுக்காத  மலர்களிலிருந்தும், தேனீக்கள் தேனை சேகரிக்கின்றன என்ற அறிவியல் உண்மையை அவர்கள் நிராகரித்தவர்கள் ஆகிறார்கள். இதனால், இயற்கை அறிவியலுக்கு எதிரானவர்களாக, இவர்கள் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு விடுகிறார்கள்.        

 இல்லை,  கனி மற்றும் மலர் என்று எண்ணிக்கை யாகக் கருதி பொருள் கொண்டால். இந்த மொழிபெயர்ப்பு வரிசை எண் 21-ஐ ஒத்ததாக ஆகிவிடும். அதாவது, கனிகளிலிருந்தும் மலர்களிலிருந்தும் (இரண்டு வெவ்வேறு மூலத்திலிருந்து) தேன் சேகரிக்கப்படுவதாக கூறி இயற்கை அறிவியலிலிருந்து (மலரிலிருந்துதான் தேன் சேகரிக்கப்படுகிறது என்ற கோட்பாட்டிலிருந்து) முரண்பட்டு விடுகிறார்கள்.

இது, இயற்கை அறிவியலுக்கும் ஜால்ரா அடிக்க வேண்டும்; அதே சமயத்தில் குர்ஆனுக்கும் எதிரியாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு மிகுந்து சர்க்கஸ் காட்டுவதாக அமைகிறது. பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீனை ஒத்த இரட்டை நிலையாகும் இது. இதிலிருந்தே குர்ஆனின் குழப்ப நிலை தெளிவுபட்டு விடுகிறது.

            மேலும், இந்த வசனங்களில், கனிகளை (பழங்களை)  மட்டும் குர்ஆன் குறிப்பிடுவது ஏன் என்ற வினா நமது மனதில் எழாமல் இல்லை. பழங்கள் இனிப்பானவை; தேனும் இனிப்புள்ளது; ஆகவே, பழச்சாற்றிலிருந்துதான் தேனீக்கள் தேனை சேகரிப்பதாக அக்காலத்திய அரபுமக்கள் கருதியிருக்கலாம். மேலும் அரபுநாட்டில் அதிகம் விளைவதும், அம்மக்களின் முக்கிய உணவுப்பொருட்களில் ஒன்றாக அமைந்துள்ளதுமான பேரீச்சம்பழத்தின் நிறமும் தேனின் நிறமும் பெரும்பாலும் ஒத்திருப்பதாலும், பழங்களிலிருந்தே தேனீக்கள் தேனை சேகரிக்கின்றன என்ற கருத்து அக்காலத்திய மக்களுக்கு பொருத்தமானதாகப்பட்டிருக்கலாம். அக்கருத்தையே குர்ஆனில் அல்லாஹ்வும் வஹி மூலம் நபிக்கு அறிவித்துவிட்டார். பாவம் அல்லாஹ்! பின்வரும் காலத்தில், தேன் சேகரிப்பைப் பற்றிய அறிவியல் அறிவு இந்தளவுக்கு வளரும் என்றோ, குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்களும், விரிவுரையாளர்களும் நம்மிடம் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கத் திண்டாடுவார்கள் என்றோ, அவர் - அல்லாஹ் - முன்கூட்டியே அறிந்திருக்க வில்லை என்பதையே இது காட்டுகிறது.

            இன்னும் சில அறிவாளிகள் (?) இவர்களுக்கு துளியும் அறிவு நாணயம் இல்லை என்பது, இவர்தம் தமிழாக்கங்களிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம். இவர்கள் இந்த 16:69 வசனத்திற்கு நேரடியாகவே பூக்கள், புஷ்பங்கள் எனறெல்லாம் மொழிபெயர்த்து தங்களின் அரபு மொழியறிவை வெளிச்சம்போட்டுக்காட்டிக்கொள்கிறார்கள். வரிசை எண்:22 மற்றும் 23 ஆகியவற்றைப் பாருங்கள். அரபு மூலத்தில் இல்லாத சொற்களை இட்டுநிரப்புவது என்பது, அல்லாஹ்வுக்கே அரபு மொழி கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதுதானே உண்மை!

22. தர்ஜுமதுல் குர்ஆன் பி அல்தபில் பயான் (அ.கா.அப்துல் ஹமீது பாகவி)
                  செப்டம்பர் 2004, ஆகஸ்ட் 2007 ஆம் ஆண்டு பதிப்புகள்
அன்றி நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து உமதிறைவன் உனக்கு அறிவித்த............

23. திருக்குர்ஆன் தமிழுரை முதல் பாகம் (வி.எம்.ஏ. பாட்சாஜான்) 1955ஆம்
                 ஆண்டு பதிப்பு
பின்னர் நீ சகல பூக்களிலிருந்தும் புசித்து.....................

            இதில் இன்னுமொரு வேடிக்கையும் உண்டு. முதன்முதலாக குர்ஆன் முழுவதற்குமான தமிழாக்கத்தை வெளியிட்டவர் திருவாளர்.அ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களாவார். 1926இல் தொடங்கப்பட்ட இம்மொழிபெயர்ப்பு பணி 1949இல் முழுமைபெற்று தர்ஜுமதுல் குர்ஆன் -பி- அல்தபில் பயான் என்ற பெயரில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. பின்னர் ஒன்றிரண்டு மறுபதிப்புகளும் வெளிவந்தன. 1955இல் திருவாளர்.அ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மறைவெய்தினார்கள். அதற்கு பின்னர் அவரின் வாரிசுகளால் வெளியிடப்பட்ட பதிப்புகள் சிறிதுசிறிதாக திருத்தப்பட்டு திருவாளர்.அ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் பெயரிலேயே வெளிவருகின்றன. இவ்வாறு திருத்தியவர்கள், அத்திருத்தங்களுக்கான காரணங்கள் பற்றிய அடிக்குறிப்புகளைக்கூட வெளியிடுவதில்லை. இதனால் அ.கா.அ. பாகவியின் மறைவுக்குப் பின்னர் வெளிவந்த பதிப்புகளில் உள்ள திருத்தங்கள் யாவும் அவரே செய்தது போன்ற ஒரு மாயையை படிப்பவர்களின் உள்ளத்தில் ஏற்படுத்திவிடுகிறது என்பதே உண்மை. இது ஒரு அறிவு மோசடியல்லாமல் வேறென்ன?

            1962இல் லால்பேட்டை மார்க்கத் தீர்ப்பு மையத்திலிருந்து மௌலானா அமானி ஹளரத் அவர்கள், திருக்குர்ஆன் மூலமில்லா மொழிபெயர்ப்பு கூடுமா? என்ற மார்க்கத் தீர்ப்பில், அ.கா.அ. பாகவியின் முன்பதிப்பிலுள்ள பல வரிகள், பின்னர் வெளிவந்த பதிப்புகளில் திருத்தப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டி கண்டித்துள்ளார் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். கீழே எடுத்துக்காட்டியுள்ள வசனம் அ.கா.அ. பாகவியின் இரு வெவ்வேறு பதிப்புகளில் உள்ளதாகும்.

1961 ஆம் ஆண்டு பதிப்பில் (வரிசை எண்:11),
அன்றி நீ எல்லாவிதமான கனி(களின் மலர்)களிலிருந்தும் அருந்தி உமதிறைவனின்............
என்று உள்ள சொற்றொடரை,

2004 மற்றும் 2007ஆம் ஆண்டு பதிப்புகளில் (வரிசை எண்:22)
அன்றி நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து உமதிறைவன் உனக்கு அறிவித்த............
என்று உள்ள சொற்றொடருடன் ஒப்பிட்டுப் பாருங்கள். உங்களுக்கே இந்த தில்லுமுல்லு தெளிவாக விளங்கிவிடும்.

            தொடக்கத்தில் எடுத்துக்காட்டியுள்ள மொழிபெயர்ப்புகளில் ஒரேயொருவர் மட்டும் இன்னும் ஒருபடி மேலே சென்றார். அவர் கம்பம், பி.எம்.பீர்முஹம்மது பாகவி அவர்கள். இவர் இவ்வசனத்தை, பழங்களிலுள்ள பூச்சிகளிலிருந்தே தேனீக்கள் தேனை உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றன என்ற கருத்தமைய தமிழாக்கம் செய்துள்ளதையும் உங்கள் முன் சமர்பிக்கிறோம்.    

24. திருக்குர்ஆன் தெளிவுரை, பாகம் 1 (கம்பம், பி.எம்.பீர்முஹம்மது பாகவி)
     1/ஜூலை 2010.
பின்னர் அனைத்து வகையான பழங்களின் (பல்வகையான பூச்சிகளி)லிருந்து உனக்குரிய உணவை உறிஞ்சி எடுத்து உண்டு (தேக்கி வைத்துக்)கொள்.......................

இம்மொழியாக்கத்தில், தேனை சேகரிப்பது, இயற்கை அறிவியலான பூக்களிலிருந்து என்பதும் இல்லை; குர்ஆன் அறிவியலான கனிகளிலிருந்து என்பதும் இல்லை; இரண்டுமற்ற ஒரு புதிய தகவல், கனிகளிலுள்ள பூச்சிகளிலிருந்து எனற தகவல் இங்கு தரப்படுகிறது. இதுதான் குர்ஆனின் அறிவியல்? குர்ஆனிய அறிஞர்களின் பொது அறிவு?

            இவ்வாறெல்லாம் இவர்கள் குழப்ப அல்லது குழம்பக் காரணம் என்ன? தேன் பெரும்பாலும் மலர்களிலிருந்தே சேகரிக்கப்படுகிறது என்பது, இவர்கள் அனைவருக்குமே தெரியும். இதனை இங்கு நிரூபிக்க ஒரேயொரு எடுத்துக்காட்டை மட்டும் பார்த்தாலே போதும்.

மவ்லானா. கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி (1941-2012) அவர்கள் ஷைகுத் தப்ஸீர் என்று பாராட்டப்பட்டவர். தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று தமது இறுதிகாலம் வரையில் பணியாற்றியவர். திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். (மற்ற மொழிபெயர்ப்பாளர்கள்: எம்.அப்துல் வஹ்ஹாப், ஆர்.கே.அப்துல் காதிர் பாகவி; பார்க்க:வரிசை எண் 19, குர்ஆன் தர்ஜமா) முன்னர் பல பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இவர்களின் இந்த மொழிபெயர்ப்பு, பின்னர் கோயம்புத்தூர் திருக்குர்ஆன் அறக்கட்டளை வெளியீடாக 12 பதிப்புகளுக்கும்மேல் வெளியிடப்பட்டு, விரும்பும் மக்களுக்கு இலவசமாவே அனுப்பப்பட்டு வருகிறது. மவ்லானா. கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி அவர்கள் தமது வாழ்நாளில் செய்த மார்க்கச் சொறபொழிவின் காலஅளவு ஏறத்தாழ10,000 மணிநேரம் என்று திரு.பி.எம்.கலிலுர் ரஹ்மான் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சிறந்த மார்க்க அறிஞர், மவ்லானா. ஷைகுத் தப்ஸீர் அவர்களின் ஒரு தயாரிப்பு, புரசைவாக்கம் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றுவரும் திருக்குர்ஆன் விரிவுரை 500வது வாரவிழா பல்சுவை மலராகும். அம்மலரில் பக்கம் 35இல் வெளியிடப்பட்ட தேனும் தேனீயும்  என்ற கட்டுரையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். அக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி வருமாறு: (பக்கம் : 38)

ஒரு தேனீ 500கிராம்(½ கிலோ) தேனைத் தயாரிப்பதற்கு சுமார் 75,000 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து செல்கிறது. ஒரு கிலோ தேன் சுமார் 50,000 மலர்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. சில சமயங்களில் ஒரு தேக்கரண்டி தேனை 2,000 மலர்களிலிருந்து எடுத்துவர வேண்டிய கடின உழைப்பும் தேனீக்களுக்கு ஏற்படுகிறது.

இந்த வரிகளின் மூலம் நாம் அறிவது என்ன? குர்ஆனில் கூறப்பட்டதை ஒப்பி, பழங்களிலிருந்தே தேனீக்கள் தேனை சேகரிக்கின்றன என்று திருவாளர் கே.ஏ.நிஜாமுத்தீன் மன்பயி அவர்கள் மறந்தும் கூறிவிடவில்லையே என்ன காரணம்? குர்ஆன் விரிவுரையாளராக இருந்தும் இயற்கை அறிவியலுக்கு மாற்றமாக இவர்களால்  எந்த செய்தியும் கூறமுடியவில்லை என்பதே உண்மை. அதனால்தான் குர்ஆனின் இந்த ஆயத்தின் மொழிபெயர்ப்புகள், எப்படியெப்படியெல்லாம் உருட்டி புரட்டி செதுக்கி சேர்த்து அல்லாஹ்வைக் காப்பாற்ற இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

அடுத்ததாக, பழக்கடைகளில், குறிப்பாக திராட்சைப்பழக்குலைகளில், ஒன்றிரண்டு தேனீக்கள் மொய்ப்பதை, நாம் பல சமயங்களில் பார்த்திருக்கலாம். அதேபோல கரும்புச்சாறு கடைகளிலும் சிலதேனீக்களை நாம் பார்க்கலாம். அவ்வளவு ஏன்? கள்ளிறக்கும் கலயங்களில் கூட, கள்ளுண்ண முயற்சித்த தேனீக்கள் சில, அதிலேயே வீழ்ந்து இறந்து கிடப்பதையும் நாம் பார்க்கமுடியும். இதனாலெல்லாம், திராட்சை பழச்சாறு, கரும்புச்சாறு, கள் ஆகியவையே தேனீக்களால் உறிஞ்சப்பட்டு தேனாகின்றன என்று முடிவுசெய்துவிட முடியாது. இவைகளெல்லாம் சில விதிவிலக்குகள்; அவ்வளவே!

தென்னிந்திய மக்கள் அரிசி சோறு உண்பவர்கள் என்பது பொதுவான உண்மை. சிலர் கோதுமை உண்ணலாம்; சிலர் கம்பு கேழ்வரகு முதலிய புன்செய் தானியங்களை உண்ணலாம்; எனினும் பெருவாரியான மக்களின் உணவே இங்கு பேசப்படும் உண்மையாகும். அதுபோலத்தான் தேனும் மலர்களிலிருந்து எடுக்கப்படுவது என்ற பெருவாரியான உண்மை இங்கு பேசப்படுகிறது. அதனை மாற்றி, விதிவிலக்குகளை யெல்லாம் பொதுவான உண்மைகளாக ஏற்க இயலாது. அது திருமறைகளில் இறைவன் பெயரால் சொல்லப்பட்டு இருந்தாலும் கூட!

இங்கு மற்றுமொரு கற்பனை விளக்கத்தையும் காண்போம். தன்னை இறைதூதர் என்று அறிவித்துக்கொண்ட ஒருவர், கீழ்கண்ட ஒரு வசனத்தை வேதவாக்கியமாக அறிவிப்பதாகக் கொள்வோம்.

இறைவன் மலைகளைப் படைத்தான். மலைகளிலிருந்து பாறைகளையும், பாறைகளிலிருந்து கற்களையும், கற்களிலிருந்து மண்ணையும் உண்டாக்கினான். மண் சுவையுள்ளதாகவும், மனிதன் முதற்கொண்டு உயிரினங்கள் அனைத்தும் உண்ணும் உணவாகவும் ஆயிற்று. இதில் சிந்திக்கும் மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சி உள்ளது.

இந்த வாக்கியத்தில், மண் சுவையுள்ளதாக இருக்கிறது; மனிதர்களும் மற்ற உயிர்களும் மண்ணையே உண்கிறார்கள்; என்ற பொருள் தெளிவாக விளங்குகிறது. ஆனால் இது அறிவுக்குப் பொருத்தமாக இல்லையாதலால், இதனை விளக்கவந்த அந்தக் கற்பனை மதத்தைச் சேர்ந்தவர்கள், இப்படி பிராக்கெட் போட்டு விளக்குவதாகக் கொள்வோம்.

இறைவன் மலைகளைப் படைத்தான். மலைகளிலிருந்து பாறைகளையும், பாறைகளிலிருந்து கற்களையும், கற்களிலிருந்து மண்ணையும் உண்டாக்கினான். மண் (ணிலிருந்து விளையும் தானியங்கள் மற்றும் காய்கனிகள் முதலியன) சுவையுள்ளதாகவும், மனிதன் முதற்கொண்டு உயிரினங்கள் அனைத்தும் உண்ணும் உணவாகவும் ஆயிற்று. இதில் சிந்திக்கும் மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சி உள்ளது.

            முன் சொன்ன வாக்கியத்தின், அறிவுக்குப் பொருந்தாத நேரடிப் பொருள், பிராக்கெட் போட்டதன் மூலம் மாற்றப்பட்டு, இப்பொழுது அறிவுக்குப் பொருந்தும்படியாகச் செய்யப்பட்டுவிட்டது.

            மற்றுமொரு கற்பனை எடுத்துக்காட்டையும் பார்க்கலாம்.

தன்னை இறைதூதர் என்று அறிவித்துக்கொண்ட ஒருவர், கீழ்கண்ட ஒரு வசனத்தை வேதவாக்கியமாக அறிவிப்பதாகக் கொள்வோம்.

இறைவன் பூமியைப் படைத்தான். பூமியின் மீது வாழ்வதற்காக மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் உண்டாக்கினான். அவ்வுயிரினங்களில், கடுமையான விஷம் கொண்ட பாம்புகளும் அடங்கும். அந்த விஷம் மனிதர்களுக்கு மரணத்தை உணடாக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. இதில் சிந்திக்கும் மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சி உள்ளது.

இந்த வாக்கியத்தில், விஷப்பாம்புகள் பற்றிய உண்மை கூறப்பட்டிருக்கிறது; ஆனால் இதை அறிவுக்குப் பொருத்தமாகவும்,  அதேசமயத்தில் பாம்பின் விஷம், மனிதனை மரணத்திலிருந்து காப்பாற்றும் தன்மை கொண்டவை எனவும் மாற்றிவிட முடியும். இதனை இப்படி பிராக்கெட் போட்டால் மாறிவிடுகிறது.

இறைவன் பூமியைப் படைத்தான். பூமியின் மீது வாழ்வதற்காக மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் உண்டாக்கினான். அவ்வுயிரினங்களில், கடுமையான விஷம் கொண்ட பாம்புகளும் அடங்கும். அந்த விஷம்(கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள்)    மனிதர்களுக்கு மரணத்தை உணடாக்கக் கூடிய (பல கொடிய நோய்களுக்கு உயிர்காக்கும் மருந்)தாகவும் இருக்கின்றது. இதில் சிந்திக்கும் மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சி உள்ளது.

            முன் சொன்ன வாக்கியத்தின் நேரடிப் பொருள், பிராக்கெட் போட்டதன் மூலம் மாற்றப்பட்டு, மனிதனுக்கு மரணத்தை தரும் பாம்பு விஷம் என்ற கருத்து, மரணத்திலிருந்து மனிதனைக் காப்பாற்றும் மருந்தாகி விட்டதை எதிர்மறை கருத்தாகி விட்டதைக் காண்கிறோம்.

இப்படியெல்லாம் பிராக்கெட்போட்டு விளக்குவதை ஏற்றுக்கொண்டால், அறிவுக்குப் பொருந்தாத - அறிவியலுக்குப்புறம்பான,  எந்தவொருகருத்தையும்கூட, பிராக்கெட் போட்டு அறிவுக்குப் பொருத்தமானதாக, அறிவியலோடு பொருந்தக்கூடியதாக நாம் மாற்றிவிட முடியும். இதைத்தான் குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்களும், விரிவுரையாளர்களும் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

            இந்தக் கட்டுரையிலிருந்து நாம் அறிந்து கொள்ளும்உண்மைகள் வருமாறு:
1. குர்ஆனில் உள்ள இந்த வசனம் (16. அந் நஹ்ல், 69வது வசனம்) அல்லாஹ்வுக்கு 
   இயற்கை அறிவியல் பற்றிய அறிவு கொஞ்சமும் இல்லை என்பதையேக் காட்டுகிறது.

2. அதனை மறைக்க இந்த மொழிபெயர்ப்பாளர்கள் எப்படியெப்படி யெல்லாமோ
    முயற்சிக்கிறார்கள்.

3. இப்படி முயற்சிப்பதால் தங்களை அல்லாஹ்வைவிடச் சிறந்த அறிவாளியாகக்
    காட்டிக்கொள்கிறார்கள்.

4. இவ்வாறு அல்லாஹ்வுக்கு நிகராகத் தங்களை உயர்த்திக் கொள்வதன் மூலம்
    இணைவைத்தல் (ஷிர்க்) என்ற மிகப்பெரிய பாவத்தைச் செய்தவர்கள் ஆகிறார்கள்.

5. எல்லாவற்றையும்விட குர்ஆனில் அறிவியலும் இல்லை வெங்காயமும் இல்லை என்பதை
    வெட்ட வெளிச்சம் ஆக்கிவிடுகிறார்கள்.

            இதற்குப் பிறகும் இந்த 16வது சூராவில் 69வது ஆயத்தில் இப்படி தில்லுமுல்லு செய்து தங்களைக் கடவுளை மிகைத்த அறிவாளிகளாகக் காட்டிக்கொண்டு, குர்ஆன் இறைவனின் வேதம் என்று கதைப்பார்களேயானால், அவர்கள் மோசடிப் பேர்வழிகளாக இருக்க வேண்டும்; அல்லது முட்டாள்களாக இருக்கவேண்டும். அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் நம்மால் செய்ய இயலாது.



-        லூஸிஃபர்